நாம் கைப்பற்றும் அதிகாரமே நம்மை விடுவிக்கும்

இலஞ்சி.அ.கண்ணன்

டந்த மாதம் 09.08.2023 அன்று இரவு பத்து மணியளவில் சாதிவெறியூட்டப்பட்ட மாணவர்களால் சகமாணவனாகிய சின்னத்துரை மீதும் அவரது தங்கை மீதும் அரங்கேற்றப்பட்ட கொலைவெறி தாக்குதல் நிகழ்ந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைப் பொறுத்தவரைக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் சாதியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே அப்பகுதியில் உள்ள சிறுவர்களும் சாதி வெறியூட்டப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாங்குநேரி பகுதிகளில் உள்ள சாதியவாதிகளுக்கு இது ஒன்றும் புதிதான நிகழ்வு அல்ல. இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகளை அப்பகுதிகளில் அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்னரே இதைவிட மோசமான வன்முறை தலித் பெண்கள் மீது அரங்கேற்றப்பட்டிருக்கிறது. எனவே, இது தொடர்கதையாகவே நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், எதற்கும் இன்றுவரை நீதி மட்டும் கிடைக்கவில்லை. அதனால்தான் சாதியவாதிகள் இதுபோன்ற சம்பவங்களை எந்தவோர் அச்சமும் இன்றிச் செய்துவருகின்றனர். வேங்கைவயல் குற்றவாளிகளை இன்றுவரை தேடிக்கொண்டிருப்பவர்கள், சின்னத்துரை வழக்கில் கைது செய்தவர்களுக்குத் தூக்குத்தண்டனையா வாங்கிக் கொடுக்கப் போகிறார்கள்? அதிகபட்சம் போனால் மூன்று நான்கு வருடத்தில் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்வார்கள். இல்லையென்றால் போதிய ஆதாரங்களோடு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று வழக்கை முடித்துவிடுவார்கள். சங்கனாங்குளம் சம்பவத்தில் அதுதானே நடந்தது.

தாக்குதலுக்கான காரணம்

நாங்குநேரி பெருந்தெரு சம்பவத்தைப் பொறுத்தவரையில், ‘நான் அந்தப் பள்ளிக்குச் சென்று படிக்கவே மாட்டேன்’ என்று பத்து நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் அளவிற்கு சின்னத்துரையை உளவியல் ரீதியாகத் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இதுபற்றி தலைமையாசிரியரிடம் எழுதிக்கொடுத்த புகார் கடிதமே தாக்குதலுக்கான மூலகாரணம். அக்கடிதத்தில், “பள்ளிக்கூடம் போகும்போதெல்லாம் பத்து ரூபாய் கேட்கிறான், கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறான்; நாளைக்கு வரும்போது இருபது ரூபாய் கொண்டு வா எனச் சொல்லுகிறான்; வெளியே கடைக்குப் போகச் சொல்லுகிறான்; ஆசிரியர் இருக்காங்கள்ல எனச் சொன்னால் அம்மா பற்றி ஏசுகிறான்; தேர்வு எழுதினால் காட்டச் சொல்கிறான் சுப்பையா; காட்டவில்லை என்றால் அடிக்கிறான். பேனா வைத்துக் குத்துகிறான்; தமிழ் ஆசிரியர் வந்தால் ஊளைவிடச் சொல்லுகிறான்; தமிழ் exam sleep test எழுதாதனு சொல்லுகிறான்; மீறி எழுதினால் அடிக்கிறான்; சாப்பாடு வெளியே SAC Hotel போய் வாங்கிவரச் சொல்லுகிறான்; பேண்ட் டைட்டா இருக்கு சுவர்மேல ஏற முடியாதுன்னு சொன்னா அடிக்கிறான்; Exam time exam எழுத பேப்பர் வாங்கினால் எனக்குத் தான்னு சொல்லுகிறான்” எனத் தனக்கு நேர்ந்த கொடுமைகளை எழுதிக்கொடுத்திருக்கிறான்.

நாங்குநேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரான தேவர் சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதின் காரணமாகவே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வள்ளியூரில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளி ஒன்றில் சின்னத்துரையும் அவரது தங்கையும் படித்துவந்தனர். சாதி ரீதியான தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளானதன் காரணமாகவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் “எங்கள் மீதே நீ புகார் கொடுக்கிறாயா, உன்னை என்ன செய்கிறோம் பார்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், குற்றவாளிகளில் ஒருவரது பாட்டியும் அண்ணனும் சின்னத்துரையின் வீட்டிற்கு வந்து புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அன்று இரவே வீடு புகுந்து வெட்டியிருக்கிறார்கள். “அண்ணா எங்க அண்ணனை வெட்டாதீங்க” எனத் தடுத்த அவனது தங்கையையும் வெட்டியிருக்கிறார்கள். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சின்னத்துரையின் தாத்தா (அம்மாவின் சிற்றப்பா, கிருஷ்ணன் – 55) அதிர்ச்சியில் அவ்விடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். தந்தையை இழந்த அவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது?

ஊர்ப் பின்னணி

நாங்குநேரி வட்டாரப் பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோராகிய தேவர் சாதியினர் தங்களை ஆறுபங்கு நாட்டார் என்றே அழைத்துக்கொள்கின்றனர். காரணம், சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஊர்கள் அனைத்திலும் இவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக, தென்னிமலை, மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், பட்டப்பிள்ளைபுதூர், நெடுங்குளம், நாங்குநேரி இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் ஆறுபங்கு நாட்டார். இதில் வடபங்காளி, கண்ணியாத்த பங்காளி எனும் இருபிரிவுகள் உள்ளன.

இப்பகுதியில் வனமாலை பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. யாதவர், ரெட்டியார், பிள்ளைமார் போன்ற இடைநிலைச் சாதியினருக்கு மத்தியில் இக்கோயிலில் தேவர் சாதியினரே ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். கோயில் திருவிழாவின்போதும் தேரோட்டத்தின்போதும் தலித் மக்களுக்கு அனுமதி கிடையாது. மற்ற இடைநிலைச் சாதியினரும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் தேரை இழுத்துச் செல்ல முடியும். மற்றபடி முழுக்கட்டுப்பாடும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர்களிடமே இருக்கும். இதனாலேயே சாதிய இந்துக்கள் சிலரும் இப்பகுதியைவிட்டுக் குடும்பத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் வெறும் 100, 150 குடும்பங்களே இருக்கக்கூடிய தலித் மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களுடைய நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தலித்துகளும் முன்பு சுமார் 250 குடும்பங்கள் வசித்துவந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களின் கொடுமைகள் தாங்காமல் சுமார் 100 குடும்பங்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் குடியமர்ந்திருக்கின்றனர்.

மற்ற பகுதியில் உள்ளதுபோலவே இப்பகுதிகளிலும் சாதி இந்துக்களின் குடியிருப்புகளுக்கு அருகில்தான் நியாயவிலைக் கடை, குடிநீர்த் தேக்கத் தொட்டி அமைந்துள்ளன. நியாயவிலைக் கடைக்குச் செல்கின்ற தலித் பெண்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய உடைமைக்கும் உயிருக்கும் ஆபத்து நேர்ந்துவிடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து வெளியே சொல்வதில்லை. மேலும், குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து சாதி இந்துக்களின் பகுதிகளுக்கு மட்டும் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. தலித் குடியிருப்புகளுக்கு அதில் பாதி அளவுகூட வராது. ஏனெனில், குடிநீரைத் திறந்துவிடக்கூடியவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் சமூகத்தவர்தான். தலித் மக்கள் வசிக்கிற பகுதியில் பேருந்து நிலையம் இல்லாததால் சாதி இந்துக்களின் பகுதிகளுக்குச் சென்று ஏறுகின்ற சூழலும் இன்றுவரையிலும் தொடர்கிறது.

முன்னர் நடந்த சம்பவங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கையில் கட்டியிருந்த சாதிக் கயிற்றை அவிழ்க்கச் சொல்லியதற்காக 12ஆம் வகுப்பு மாணவர் சகமாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவத்தில் இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பாஞ்சாகுளத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்ட நிகழ்வு; கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கலைச்செல்வி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவரிடம், “நம் பள்ளிக்குப் பட்டியலினத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் இருவர் வருகிறார்கள். அவர்கள் நம் பகுதியில் பணி செய்வது நமக்கு இழுக்கு என்பதால் நாம் அவர்களைப் பணியாற்ற விடக்கூடாது. ஆதலால் உன் பெற்றோரிடம் அதைத் தெரிவித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சொல்” எனச் சாதிய ரீதியில் பேசியது. இச்சம்பவங்களில் அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதை ஒரளவிற்காவது தடுத்திருக்கலாம்.

தலித்துகள் அதிகமாக வாழக்கூடிய இடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் சமூகத்தவர் மீது தாக்குதல் நடக்கும் நிலையில், அதற்கு எதிர்வினையாக இப்பகுதியிலுள்ள தலித்துகளின் வீடுகள் சூறையாடப்படும். பதினைந்து வருடத்திற்கு முன் வட மாவட்டங்களில் நடந்த சாதியப் பிரச்சினை காரணமாக நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள வீடுகள் சூறையாடப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்குச் சாதியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. தென்பகுதியில் வசிக்கும் தலித் மக்களின் யதார்த்த நிலை மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது பாழடைந்த சுவர்களுக்கிடையிலான அடர்ந்த இருளுக்குள் இருக்கும் சிறைக்கைதிகளின் வாழ்வை விடவும் மோசமாகவே உள்ளது. சுதந்திர தினத்தையும் குடியரசுத் தினத்தையும் பெருமையாகக் கொண்டாடுகின்ற ஜனநாயக சக்திகள், இப்பகுதி தலித் மக்கள் மீது இடைநிலைச் சாதியினர் செலுத்துகின்ற சாதி ஆதிக்கத்தையும் அதனால் பாதிப்படைந்து நிற்கதியாய் நிற்கின்ற மக்களின் இன்னல்கள் பற்றியும் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

அப்போதுதான் நாங்குநேரிக்கு அருகில் உள்ள வாகைகுளம் என்கிற ஊரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் சமூகத்தவரால் இன்றைக்கும் தலித்துகள் மீது நடைமுறைப்படுத்தப்படும் எழுதப்படாத சட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும். அப்பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் சமூகத்தினரை எதிர்த்துப் பேசக்கூடிய தலித் மக்களைத் தாக்குகின்றவர்களுக்கு இரண்டு இலட்ச ரூபாய் பணம் கொடுத்து ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கான வழக்குச் செலவையும் ஏற்றுக்கொள்வார்களாம். இத்தகைய சூழலில்தான் அப்பகுதியில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மாவட்டக் காவல்துறையும் இதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் திருநெல்வேலி மாவட்டக் காவல்துறையினரும் சுயசாதிப் புத்தியோடு இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சில பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் சுயசாதிப் புத்தியோடு தங்களுக்குள்ளேயும் மாணவர்களிடையேயும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பது தொடர்ந்த வண்ணமாக இருக்கிறது.

1980களில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சங்கனாங்குளத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தேவர் சாதியினரால் தலித் பெண்கள் மீது அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சுமார் 17 இளம் தலித் பெண்கள் பாதிக்கப்பட்டனர். அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்திற்கு இச்சம்பவம் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

பின்னர் அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் நேரடியாகச் சங்கனாங்குளத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்களின் துயரைக் கேட்டு அழுதிருக்கிறார். அதோடு மட்டுமல்லாது சட்டசபையைக் கூட்டி எல்லாக் குற்றத்திற்கும் கிராம அதிகாரிகள் துணை போனதால், ‘தமிழகத்திற்குக் கிராம அதிகாரிகளே வேண்டாம்’ என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழகம் முழுவதும் கிராம அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக அன்றைய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதனை இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியைவிட்டே நீக்கியுள்ளார். இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி இராமமூர்த்தி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. வழக்கம்போல அவ்வாணையம் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி குற்றவாளிகளை விடுவித்தது; பாதிக்கப்பட்ட பெண்களை நிற்கதியாய் ஆக்கியது. பொதுவாகவே, தலித்துகள் பாதிக்கப்படும் தருணத்தில் மட்டும் நீதிதேவதையின் கண்களில் இருக்கும் கட்டு அவிழ்க்கப்படுகிறது. அதனாலேயே அவர்களுக்கான நீதியும் மறுதலிக்கப்படுகிறது. இன்று நடந்த சம்பவத்தை விட அன்று நடந்த சம்பவங்கள் மிகவும் பயங்கரமானவை. இன்று பேசுவது போல் அன்றும் அச்சம்பவம் பற்றி தொடர்ந்து விவாதிக்கப்பட்டன. பல தலைவர்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. இன்று அம்மக்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறையும் இல்லை. நாளை இச்சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு வேறொரு சம்பவம் அரங்கேற்றப்படும்போது அதைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொண்டுதான் இருக்கப் போகிறோம்.

சாதிவெறியூட்டப்படும் சிறார்கள்

இப்பகுதிகளில் குற்றச் செயல்களை அரங்கேற்றத் தற்போது சாதிவெறியூட்டப்பட்ட சிறார்களைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு பூலம் என்கிற ஊரில் பள்ளி செல்லும் தலித் சிறுவர் அரிவாளால் முதுகில் வெட்டப்பட்டார். வெட்டியவன் எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாமல் நேராகப் பள்ளிக்குச் சென்றுவிடுகிறான். பின்னர் காவல்துறை வகுப்பறையிலேயே அவனைக் கைது செய்தது. அதற்குப் பிறகு பாதிக்கப்பட்ட சிறுவனின் நிலை என்ன, குற்றவாளிக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை.

இம்மாதிரியான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம், “எதுவானாலும் நீ செய்துவிட்டு வா, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று பெற்றோர்களும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த சில சமூக விரோதிகளும் தைரியம் ஊட்டுவதுதான். நாங்குநேரி தாக்குதலும் இதைத்தான் சுட்டுகிறது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து சாட்சி சொல்லக்கூட அஞ்சுகிறார்கள் என்றால், சாதியின் ஆதிக்கம் எந்த அளவிற்கு அங்கே வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவையல்லாது இன்னும் எத்தனையோ வன்முறைகள் சாதிவெறியர்களால் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்படுகின்றன. பாதிக்கப்படும் தலித் மக்கள் தங்களது உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி வெளியில் சொல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றனர்.

பிரச்சினையின் ஆழமறியாத அமைச்சர்கள்

கல்வித் துறை அமைச்சர் இன்னும் எத்தனை ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருப்பார். ஆனால், “சின்னத்துரையின் கல்விச் செலவு முழுவதையும் ஓர் அண்ணணாக நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று அறிக்கை விடுகிறார். இது யாரை ஏமாற்றுவதற்கு? கல்வித்துறை அமைச்சர் தன் துறையில் தொடர்ந்து நிலவுகின்ற சாதிய ஏற்றத்தாழ்வுகளைத் தடுப்பதற்கு இதுவரையிலும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. கல்வி நிலையங்கள் எல்லாம் சாதிப்பித்தர்களினுடைய கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிற சூழலில் இன்றுவரையிலும் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை. இந்தச் சம்பவம் மட்டுமல்ல, இதுபோன்று நிகழும் எந்தச் சம்பவத்திலும் கல்வித்துறை அமைச்சரோ ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரோ நேரில் சென்று களஆய்வு செய்வதில்லை. அவ்வாறு செய்தால்தானே ஓரளவிற்காவது தீர்வு காண முடியும். வெறும் அறிக்கை விடுவதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது.

இதுநாள்வரைக்கும் பல சாதிய வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. ஆனால், அவை குறித்துப் பெயரளவுக்கேனும் பேசியதில்லை. “சாதி என்ற கோரமான உருவம் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் உங்கள் வழியில் குறுக்கிடும். அந்தக் கோர உருவத்தைக் கொல்லவில்லை என்றால் உங்களால் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதாரச் சீர்திருத்தத்தையோ மேற்கொள்ளவே முடியாது” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டின் மூலம் பதவியில் அமர்ந்தவர்களுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும். இம்மாதிரியான சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் குறைந்தபட்ச எதிர்வினையாவது ஆற்றியிருக்க வேண்டும். ஆனால், வாயே திறக்காமல் கள்ள மௌனம் காப்பது யாரைக் காப்பாற்றுவதற்காக? இவர்களைப் போன்றவர்கள்தாம் இச்சமூகத்தின் முதல் சாபக்கேடு. தமிழ்நாட்டில் செயல்படாத துறையாகவே ஆதிதிராவிட நலத்துறை இருந்துவருகிறது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது வரவேற்கத்தக்கது. இந்த ஆணையம் ஒட்டுமொத்தமாகத் தென்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இதற்கு முன்னர் நிகழ்ந்த சாதியப் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். அப்பகுதிகளில் தலித் மக்களின் கல்வியையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். சாதியப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலித் ஆசிரியர்களை அதிக அளவில் பணியமர்த்த அரசிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். அரசும் அதைக் கூடிய விரைவில் செயல்படுத்த முன்வர வேண்டும்.

கண்துடைப்பிற்கான கண்காணிப்புக் குழு

2017இல் திருநெல்வேலி – தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகளில் நிலவுகிற சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் மோதல்களையும் தடுத்து நிறுத்துவதற்காக உடற்கல்வி ஆசிரியர் தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழு தற்போதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இக்குழுவை அமைத்தவர்களும் குழு செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவில்லை. விளைவு, இவ்விரு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றன. மாணவர்களிடையேயான சாதிய மோதல்களும் நடந்த வண்ணமாகவே உள்ளன. இம்மாதிரியான சாதிய மோதல்கள் குறிப்பாக, தலித் மாணவர்கள் மீது மட்டுமே அரங்கேற்றப்படுகின்றன.

தொடரும் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத் (16), கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பள்ளியில் ராஜகுரு, ஹேமந்த் குமார் ஆகியோரும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 17.08.2023 அன்று மாலை பள்ளி முடிந்து வரும்போது ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் பள்ளிக்கு வெளியே சண்டைப் போட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஹரி பிரசாத், அவர்கள் சண்டைப் போடுவதைத் தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்தவர்கள் தங்களது பகுதிக்குச் சென்று சில சமூகவிரோதிகளை அழைத்துவந்து, “பள்ள பயலே உனக்கு இவ்வளவு திமிரா” என்று சொல்லி பலமாகத் தாக்கியிருக்கிறார்கள். ஒரு பிரச்சினை முடிவதற்குள் அடுத்த பிரச்சினை சாதியவாதிகளால் எளிதாக அரங்கேற்றப்படுகிறது. இதனால் கல்வி நிலையங்கள் சாதி வளர்ப்புக் கூடாரங்களாக உருவாகின்றதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

அபித்குமார் (வயது 19) என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே வாசுதேவனூரில் உள்ள மகாபாரதி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். ‘கல்லூரியில் சாதிய ரீதியான தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. எனவே தன்னால் படிப்பைத் தொடர முடியாது’ என்று தன் தந்தையிடம் கூறியிருக்கிறார்.

கடந்த 18.8.2023 அன்று காலை சுமார் 6:30 மணிக்குத் தனது தந்தையிடம் அலைபேசியில் பேசியிருக்கிறார். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அபித்குமாரின் துறைத் தலைவர் (HOD) மாரியப்பன் என்பவர் அபித்குமாரின் தந்தையை அலைபேசியில் அழைத்து உடனே கல்லூரிக்குப் புறப்பட்டு வரும்படிச் சொல்லியிருக்கிறார். பதற்றத்தோடு கல்லூரிக்குச் சென்றவருக்கு மகன் அபித்குமார் உயிரிழந்த செய்தி பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது எனக் கருதி சின்னசேலம் உதவி காவல் ஆய்வாளரிடம் புகார் மனு எழுதிக்கொடுக்கிறார். காவல்துறையின் விசாரணையில் அபித்குமார் மீது சாதி ரீதியான வன்கொடுமை நடந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. துறைத்தலைவர் மாரியப்பன், விடுதிக் காப்பாளர் கதிர் குமார், விரிவுரையாளர் காளிதாஸ் ஆகியோரின் சாதிய வன்கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே அபித்குமார் தன்னை மாய்த்துக்கொண்டுள்ளார். குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அபித்குமார் இறப்புக்குக் காரணமானவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதோடு சாதிய தீண்டாமை குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்த மகாபாரதி பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலங்களில் இம்மாதிரியான குற்றங்களைத் தடுக்க முடியும்.

சட்டங்கள் கடுமையாக இருந்தும் பயமில்லை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 17 சொல்கிறது: ‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அதன் நடைமுறைகள் எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும் தடுக்கப்பட வேண்டியவை. தீண்டாமை மூலம் எந்த இழி செயலும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்’ என்று. ஆனால், சுதந்திர இந்தியாவில் இன்றளவும் தலித் மக்கள் மீதான சாதிய தீண்டாமையும் சாதிய படுகொலையும் தொடர்ந்த வண்ணமாகவே இருந்துவருகிறது. தீண்டாமைக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இருந்தபோதும் அதைச் செயல்படுத்தக்கூடியவர்கள் வலுவற்றவர்களாக இருப்பதினால் சாதியவாதிகளுக்கே சாதகமாகிவிடுகிறது. குறிப்பாக, தீண்டாமை குற்றச்சட்டம் 1955, குடிமையியல் பாதுகாப்புச் சட்டம் 1976, அட்டவணைச் சாதிகள், பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 முதலான கடுமையான சட்டங்கள் இருந்தும் தலித் மக்கள் மீதும் பழங்குடியினர் மீதும் சாதிய ரீதியாக அரங்கேற்றப்படுகிற வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. இதற்கு முக்கிய காரணமே தீண்டாமையைப் போதிக்கும் இந்து மதத்திற்குள் தலித்துகள் இருப்பதுதான்.

“தீண்டாமையின் பழைய வடிவங்கள் தணிந்தாலும், உள்ளூர் ஆதிக்கச் சாதியினர் தலித்துகள் மீது வன்கொடுமைகள் செய்கின்றனர். சில நேரங்களில் இவற்றை மிகவும் கொடூரமாக நிகழ்த்துகின்றனர்” (சாதி, சுரிந்தார் எஸ்.ஜோத்கா, தமிழில் பக்தவத்சல பாரதி. பக்-76). தலித்துகள் தன்னெழுச்சியாக மேலெழுகிற ஒவ்வொரு தருணங்களிலும் சாதிப் பித்தர்களின் எதிர்வினைகள் வன்மமாகவே இருக்கின்றன. தமிழகத்தின் தென்பகுதிகளில் எப்போதும் சாதிவெறி மிகவும் கோரமாகவே வெளிப்படும். முதுகுளத்தூர் தொடங்கி மேலவளவு, குறிஞ்சான்குளம் வரைக்கும் தலித்துகளின் உதிரத்தைக் குடித்த சாதிவெறி, இன்றும் குறைந்தபாடில்லை.

முன்னெடுக்க வேண்டிய அரசியல் போராட்டம்

1946இல் சிதம்பரம் தாலுகா புளியங்குடி தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய பிரச்சினைக்குத் தீர்வுகாண அன்றைக்கு 20 வயதான இளையபெருமாள் செய்த மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதிக் கொடுமையால் பாதிப்படைந்த தலித் மக்களை ஒட்டுமொத்தமாக அவ்வூரை விட்டே வெளியேற்றி, பக்கத்தில் உள்ள பிள்ளையார்தாங்கல் ஊரில் குடியமர்த்தியது இன்றைக்குப் பேசப்பட வேண்டிய முக்கியமான நிகழ்வு. பக்கத்து ஊர்களில் உள்ள தலித் மக்கள் அவர்களுக்கு உதவிபுரிந்ததும் கவனிக்கத்தக்கது. இறுதியாக, சாதியவாதிகள் இளையபெருமாளிடம் சரணடைந்தனர். அதனால் அன்றைய கலெக்டர் ஸ்ரீபால் சாதியவாதிகளிடம் ‘இளையபெருமாள் சொல்றத ஒத்துக்கலேன்னா ஊரையே அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளிடுவேன்’ என மிரட்டியதும் நினைவுகூரத்தக்கது. 77 ஆண்டுகளுக்கு முன்னரே இதுமாதிரியான தீர்வு காண முடிந்திருக்கிறதென்றால், இன்றைய தலைமுறையாலும் அதைச் சாத்தியமாக்க முடியும். ஆனால், அன்றைய தலித் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களை இன்றைய தலைவர்கள் முன்னெடுப்பதில்லை. இதைத் தலித் அரசியலின் படுதோல்வி என்றே சொல்ல வேண்டும். இம்மாதிரியான நடவடிக்கையின் மூலம்தான் சாதியவாதிகளின் பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் வாழக்கூடிய தலித்துகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும். ஏனெனில், மீண்டும் அவர்கள் சாதியவாதிகளுக்கு அருகில் வாழ்வது சாதிய கொடுமைகளுக்கே வழிவகுக்கும். சம்பவம் நடந்தவுடனே எல்லோரும் ஆதரவாகப் பேசுவார்கள். பின்னர் ஒருமாதம் கழித்து இப்பிரச்சினை என்னானது, வழக்கின் நிலை என்ன என்பது பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். இத்தகைய சூழலில் பாதிப்புக்குள்ளானவர்கள் மீண்டும் அதே பகுதியில் வாழ்வதென்பது தீண்டாமைக் கொடுமைகளுக்கே வழிவகுக்கும். எனவே, தலித்திய அமைப்புகளும் ஜனநாயகவாதிகளும் இளையபெருமாள் வழியில் தீர்வுகாண முயற்சிக்கலாம்.

அதுவும் இயலாவிட்டால், அன்று சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சமூக மக்கள் மீது 17-18 நூற்றாண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக, சனாதன ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வைகுண்ட சுவாமி முன்னெடுத்த சமூகப் புரட்சியை முன்னெடுக்கலாம். ஏனெனில், சனாதன தருமத்தின்படி சூத்திரர்கள் துண்டைக் கக்கத்தில்தான் வைத்திருக்க வேண்டும், தலைப்பாகையாக அணியக்கூடாது. அதனால்தான் அய்யா வைகுண்டர் சாதியினால் புறக்கணிக்கப்பட்ட எல்லோரையும் தலைப்பாகை அணியச் சொன்னார். இதோடு ஒப்பிட்டுத்தான் சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகையையும் நாம் பார்க்க வேண்டும், அய்யா கே.பி.எஸ்.மணி அணிந்த தலைப்பாகையும் இதன்பொருட்டே.

மேலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள தலித் மக்களிடத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவக்கூடிய வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் தோற்றுவித்த ‘சமூக சமத்துவப் படை’ (சமதா சைனிக் தல்) போன்று சாதிக் கொடுமையால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்குப் பாதுகாப்பரணாகச் செயல்பட வேண்டும். அதோடு கிராமந்தோறும் ஓர் அரசியல் பள்ளியை உருவாக்க வேண்டும். அதன் மூலமே சிதறிக்கிடக்கும் தலித் மக்களை ஒன்றுதிரட்டி அமைப்பாக்க முடியும். இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பதவிகளில் இருப்பவர்களும், பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்தவர்களும் சமூகத்திற்காக முடிந்த அளவு உதவ முன்வர வேண்டும். இதுவும்கூட புரட்சியாளர் அம்பேத்கர் இழுத்துவந்த தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வதற்கு உதவும். தேவைப்பட்டால் மூடநம்பிக்கைகளைக் களையக்கூடிய சமூக விழிப்புணர்வோடு கூடிய நாடகங்களையும் அரங்கேற்றலாம்.

சாதியற்றச் சமூகம் சாத்தியமே

“தீண்டாமையை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கு, நம் தலை மீது விழுந்திருக்கிற இந்தப் பொறுப்பை நாமே செய்து முடிக்க வேண்டியிருக்கும். இதை மற்றவர்கள் செய்வதற்கான சாத்தியங்கள் இல்லை. இந்த ஒற்றைக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குத்தான் நம்முடைய இந்தப் பிறப்பு இருக்கிறதென்றாலும் நம்முடைய வாழ்க்கையின் நிறைவு என்பது இதை நிறைவேற்றுவதிலுள்ள நேர்மையான முயற்சிகளில் உள்ளது. இந்தச் செயல்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்ய நாம் தவறிவிடாமல் இருப்பதற்குரிய நற்பலன்களைச் சேமித்துக்கொள்வோம். நிச்சயமாக இந்தக் குறிக்கோள் என்பது நம்முடைய சொந்த விடுதலைக்கான குறிக்கோளாகும். நம்முடைய முன்னேற்றத்தின் பாதையில் இருக்கின்ற தடைகளை அகற்றுவதற்கு இதை நம்முடைய தலையில் விழுந்த பொறுப்பாக ஏற்க வேண்டும்” என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர் (‘சமூகப் புரட்சியே நமது இலக்கு’, பக்-41, போதி வெளியீடு). எனவே, சாதியற்றவர்களாகிய நம்மால்தான் சாதியற்றச் சமூகத்தை உருவாக்க முடியும்; சாதிக்கோட்டையில் பிளவையும் ஏற்படுத்த முடியும். அதன் மூலமே பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையும் அழித்தொழித்து சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தோடு கூடிய ஒரு ஜனநாயக சமூகத்தைக் கட்டமைக்க முடியும்.

பயன்பட்ட நூல்கள்

  • சாதியை முற்றும் ஒழித்தல், நீலம் வெளியீடு.
  • சாதி, சுரிந்தார் எஸ்.ஜோத்கா, தமிழில் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு வெளியீடு.
  • சமூகப் புரட்சியே நமது இலக்கு’ போதி வெளியீடு.
  • ஜாதியற்றவளின் குரல், ஜெயராணி, எதிர் வெளியீடு.

l ilanjikannan@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger