மீளும் வரலாறு : ஆதிதிராவிடர் பள்ளிகளின் நூற்றாண்டு வரலாறு

பொய்யாமொழி முருகன்

தலித்துகளின் போராட்டம் என்பது வெறும் சலுகைக்கானவையோ, உரிமைகளுக்கானவையோ மட்டுமல்ல, முழுமையான பண்பாட்டையும் வரலாற்றையும் உருவாக்குவதற்குமானவை.

– கவிஞர் சுகுமாரன்

லித் மக்களுக்கென்று தனித்துவமான அறிவு மரபு, வேளாண் மரபு, வணிக மரபு மருத்துவ மரபு எனக் கொண்டு சிறந்து விளங்கியுள்ளனர். நிலத்தைப் பண்படுத்தி பருவமறிந்து பயிர் செய்துள்ளனர். தவிரவும் இம்மண்ணின் பூர்வகுடிகள் உலகெங்கும் சென்று பொருளீட்டி வந்துள்ளனர். பொதுவாக, தலித்துகள் பற்றி இன்றைக்குப் பொதுச் சமூகம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளானவை கடந்த 50, 60 ஆண்டுகளாகச் சாதி இந்துக்களாலும், சாதி இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள திராவிடக் கட்சிகளாலும் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்டவையே. இவர்களால் கட்டமைக்கப்பட்ட வரலாறுகளானது தலித்துகள் காலனிய ஆட்சியாளர்களால் இலங்கை, பர்மா, மலேசியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குத் தேயிலைத் தோட்டத்திற்கும் கரும்புத் தோட்டத்திற்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கங்காணிகளின் அடக்குமுறைகளாலும் வெள்ளைக்காரர்களின் ஒடுக்குமுறைகளாலும் நசிவுக்குள்ளானதை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கின்றன. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்றைக்குத் தங்களை ஆதிக்கச் சாதிகளாகவும் ஆண்ட பரம்பரைகளாகவும் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்கிறவர்களின் வரலாறும் இத்தன்மையிலானதே. அவர்களும் பல்வேறு இடங்களுக்குப் பண்ணை அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அவற்றை அவர்கள் முதன்மைப்படுத்துவதில்லை. ஆனால், தலித்துகளுக்கு மட்டும் இழிவான வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்ற முறையில் ஒற்றைத்தன்மையான வரலாற்றையே கட்டமைக்கின்றனர். இதனை இன்னும் வலுப்படுத்துவதாக 90களில் மெல்ல உருவாகிவந்த தலித் இலக்கியமும் தலித் இலக்கியத்திற்கென வைக்கப்பட்ட வரையறைகளும் அமைந்தன. தலித் மக்களுடைய வரலாறு இத்தகைய கட்டமைக்கப்பட்ட வரலாறுகளுக்கு நேரெதிரானதாகவும் இருந்திருக்கிருக்கிறது. அதை ஆதிக்கச் சாதியினர் திட்டமிட்டுச் சொல்லாமல் மறைத்தது இன்றைக்குச் சமூக வலைதளங்களில் மட்டும் புழங்கிக்கொண்டிருப்போருக்குத் தெரியாதது. அவ்வாறு மறைக்கப்பட்டதுதான் தலித்துகளின் புலப்பெயர்வும் அதனால் அவர்கள் அடைந்த சுயமரியாதை மிக்க வாழ்க்கையும் சுயாதீனமான முன்னெடுப்புகளும் வணிகச் செயல்பாடுகளும்.

ஆதிதிராவிடர்களின் வணிகச் செயல்பாடுகளும் சுயாதீன நிறுவனங்களும்:

தலித் மக்கள் வேளாண்மை செய்து அனைவருக்குமான உணவினை உற்பத்தி செய்துள்ளதைப் போல நெசவுத்தொழிலையும் பாரம்பரியமாகச் செய்து வந்திருக்கின்றனர். திருவள்ளுவர் கூட இத்தகைய நெசவுத் தொழில் செய்யக்கூடிய சமூகப் பின்புலத்தைச் சேர்ந்தவர் என்ற வழக்கு மக்களிடையே உள்ளது. தலித் மக்களுள் பறையர் சமூகப் பிரிவினுள் நெசவுப் பறையர் என்ற பிரிவினர் உண்டு. சில குடும்பங்களில் தறி நெய்யக் கூடிய கருவிகளைப் பார்க்க முடியும். அவ்வாறு நெசவு செய்தவற்றை எவ்வாறு வியாபாரம் செய்தனர் என்பது குறித்துப் போதிய அளவு கவனமோ ஆய்வுகளோ செய்யப்படவில்லை. பனையேறிகள் பனையிலிருந்து பதனி எடுத்துக் காய்ச்சி வியாபாரம் செய்துள்ளனர். அதற்காக அவர்கள் ஊர் ஊராகச் சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு ஒவ்வொரு கிராமங்களிலும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அவர்கள் வணிகத்தில் கோலோச்சுகிறார்கள் என்று சொல்லப்படுகின்ற வேளையில், ஆதிதிராவிடர்கள் வியாபாரத்தில் செய்தது என்ன என்று கேட்டால் பதில் இல்லை. ஆனால், இவர்களும் வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கின்றனர். அதற்கான ஆதாரங்களைச் சமீபத்திய தலித்திய ஆய்வுகள் வெளியிட்டுவருகின்றன. ஏற்கெனவே பெ.மா.மதுரைப்பிள்ளை போன்றோர் கப்பல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு சுயாதீனமாகக் கப்பலோட்டிய ஆதித்தமிழரைப் பலருக்கும் தெரிவதில்லை. மதுரைப்பிள்ளை அவர்கள் கப்பல் வணிகத்தில் ஈட்டிய பெருஞ்செல்வத்தைப் பல்வேறு நற்காரியங்களுக்குச் செலவு செய்துள்ளார். அவர் தமிழகம், கோலார் தங்கவயல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கல்வி நிலையங்கள், கோயில்கள், பொதுக்காரியங்களுக்கு நிதியுதவி செய்யும் வள்ளலாகவும் பல்வேறு இதழ்கள் வெளிவருவதற்கு உதவி செய்யக்கூடிய புரவலராகவும் இருந்துள்ளார் (மதுரை பிரபந்த திரட்டு). மேலும் மதுரைப் பிள்ளையின் மகள் வழி வாரிசுதான் அரசியலிலும் சமூகச் செயற்பாடுகளிலும் தீவிரமாக இயங்கிய அன்னை மீனாம்பாள் சிவராஜ்.

அதுபோல சென்னையிலிருந்து உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக அறியப் பெற்று வணிகத்தில் முத்திரை பதித்த பி.வெங்கடாசலம் என்னும் தலித் தொடங்கிய ‘வெங்கடாசலம் மெட்ராஸ் கறி மசாலா தூள்’ (Vengatachellum madras curry powder) என்ற நிறுவனம் பற்றியும் அது இன்றுவரை செயல்பட்டுவருவது குறித்தும் வழக்கறிஞர் ஏ.பி.ராஜசேகரன் ‘உணவிற்குச் சுவை சேர்த்த ஆதிதிராவிடர் ஸ்தாபனம்’ என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார் (நீலம் இதழ், ஆகஸ்ட் 2023). அதுபோல தென்கரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள பேரா. ஜெ.பாலசுப்பிரமணியத்தின் ‘கற்பி: ஒரு ஆதிதிராவிடப் பள்ளியின் நூற்றாண்டு வரலாறு’ என்னும் நூல் தரக்கூடிய தரவுகள் என்பது தலித்துகளின் இருண்ட பக்கங்களின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் இடம்பெயர்தல், வணிகம், சுயமரியாதை, சுயாதீன நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொடர்ச்சி என்று விரிவாகவும் பேசுகிறது. அதுகுறித்து இனி பார்க்கலாம்.

ஜெ.பாலசுப்பிரமணியத்தின் எழுத்துகள் தலித்துகளின் வரலாறுகளை ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டுவருபவை. அவரது ‘சூர்யோதயம் முதல் உதயசூரியன் வரை தலித் இதழ்கள் 1869 – 1943’ என்ற ஆய்வு நூல் தலித்துகளின் புலமை மரபின் வரலாற்றை, குறிப்பாக தலித் இதழியல் வரலாற்றைக் கூறுவதில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது. இதனைத் தொடர்ந்து ‘பூலோகவியாசன்’, ‘வழிகாட்டுவோன்’ என்ற பெயர்களில் இம்மக்கள் நடத்திய இதழ்களைத் தொகுத்து ஆவணமாக்கியுள்ளார். அந்த வகையில் ‘கற்பி’ என்ற இந்நூலானது, ‘புதைந்த பாதை: ஒரு கிராமத்தின் நினைவும் வரலாறும்’ என்ற அவரது முதல் நூலின் தொடர்ச்சி அல்லது இரண்டாம் பாகம் என்று சொல்லத்தக்கதாக அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிக் கரிசல்குளம் கிராமத்தின் 300 ஆண்டுக்கால நினைவையும் வரலாற்றையும் இந்நூல் தரவுகளாகக் கொண்டுள்ளது. ஒரு கிராமத்தில் தலித்துகள் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீனத்தைக் கைக் கொண்ட அவர்கள் எவ்வாறு கல்வி, பொருளாதாரம், சமூக அரசியல் தளங்களில் முன்னேறினர் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, கன்னடம், துளு, மராத்தி ஆகிய ஐந்து மொழிகளில் மொழிபெயர்ப்பாகி ஒரே நூலாக வெளிவரவிருக்கிறது. அக்கிராமத்தில் செயல்பட்ட ஆளுமைமிக்கவர்கள் பற்றியும், அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பற்றியும், அங்குள்ள ஆதிதிராவிடர்களின் அமைப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எழுதியிருக்கிறார். இதன் தொடர்ச்சியில் திருப்பணிக் கரிசல்குளத்தில் 1885களில் ஆதிதிராவிட மக்கள் கல்வியின் மேன்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து சுயாதீனமாகத் தங்களுடைய முதலீட்டைக் கொண்டு உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் தொடக்கப்பள்ளி பற்றியதுதான் ‘கற்பி’ நூல்.

தலித்துகளும் கல்வியும்

தலித் மக்கள் நீண்ட நெடிய அறிவு மரபிற்குச் சொந்தக்காரர்கள். இச்சமூகத்தில் ஏராளமான புலவர்களும் பண்டிதர்களும் நாவலர்களும் அஷ்டாவதானிகளும் தசாவதானிகளும் தோன்றியுள்ளனர். அவ்வையார், திருவள்ளுவர், கபிலர், உத்தரநல்லூர் நங்கை என்று ஏராளமான புலமையோர் இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சிதான் அவர்கள் தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது. பொதுவாக, இம்மக்களிடையே இருந்த கல்வி முறைகளையும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களையும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

  • மரபான கல்வி முறை (ஏட்டுக்கல்வி / திண்ணைப் பள்ளிக்கூடம் )
  • இரவுப் பள்ளிகள்
  • கிறிஸ்தவ மிஷனரிகளின் தொடர்பினால் உருவானவை
  • காந்தியத் தொடர்பினால் உருவானவை
  • சுயாதீனமாகத் தலித்துகளால் தலித் மக்களின் முதலீட்டைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

மரபான கல்வி முறையிலான திண்ணைப் பள்ளிகள்

 மரபான கல்வி முறையானது ஏட்டுக்கல்வி அல்லது திண்ணைப் பள்ளி, குருகுலக் கல்வி எனப்படுகிறது. அன்றைக்குத் தலித் மக்களுள் ஏராளமானோர் புகழ்பெற்று விளங்கியுள்ளனர். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் பூஞ்சோலை முத்துவீர நாவலர். இவர் ஏராளமான நூல்களை இயற்றியதோடல்லாமல் புகழ்பெற்ற ‘பூலோகவியாசன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் விளங்கினார். இவருக்கென்று அன்றைக்கு நீண்ட மாணவப் பரம்பரை இருந்தது. பெருந்தலைவர் எம்.சி.ராஜா முத்துவீர நாவலரின் மாணவப் பரம்பரையினர்தான். மேலும் அயோத்திதாசப் பண்டிதர், சுவாமி சகஜாநந்தா, ஏ.பி.பெரியசாமி புலவர் என்று ஏராளமானோர் தங்களுக்கென்று பெரும் மாணவப் பரம்பரையினரைக் கொண்டிருந்தனர். தவிரவும் ஏராளமான ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தவர்களாகவும் பல்வேறு பொருண்மைகளில் நூல்கள் இயற்றியவர்களாகவும் மரபான கல்வி கற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

இரவுப் பாடசாலைகள்

மரபான கல்வி முறைகளைத் தொடர்ந்து இரவுப் பாடசாலைகள் தமிழகம் முழுக்கப் பரவலாக இருந்துள்ளன. பகலெல்லாம் உடல் உழைப்பில் ஈடுபடக்கூடியவர்களுக்கு இரவே ஓய்வு நேரம். எனவே, அந்நேரங்களில் மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்நோக்கத்துடன் சேரிகள்தோறும் இரவுப் பாடசாலைகளை இச்சமூக முன்னோடிகள் ஏற்படுத்தி மக்களுக்குக் கல்வி அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியை இன்றைக்கும் தலித் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் பார்க்க முடியும்.

மிஷனரிகளின் தொடர்பால் உருவானவை

தலித் மக்களும் இச்சமூக முன்னோடிகளும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி கல்வி கற்கும் வாய்ப்புகளையும் கல்வி தொடர்பான நிறுவனங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். ஆட்சியாளர்கள், கிறிஸ்தவ மிஷனரிகளிடம் தொடர்புகொண்டு விண்ணப்பங்கள் செய்தும் உதவித்தொகைகள் பெற்றும் பல பள்ளிகளைத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகப் பண்டிதர் அயோத்திதாசர் தொடங்கி தாதா இரட்டைமலை சீனிவாசனார், சுவாமி சகஜாநந்தர், பெருந்தலைவர் எம்.சி.ராஜா போன்றோர் அரசிடம் கோரிக்கைகள் வைத்துப் பள்ளிகள், மாணவர் விடுதிகள் என்று நடத்தியுள்ளனர்.

காந்தியத் தொடர்பால் உருவானவை

தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று எரவாட சிறையில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதனால் பாபாசாகேப் அம்பேத்கருக்குப் பல்வேறு வகையில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இத்தகைய சூழலில்தான் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே ‘பூனா ஒப்பந்தம்’ உருவானது. பூனா ஒப்பந்தத்திற்குப் பின்பு தலித் மக்கள் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காந்திக்கு ஏற்பட்டது. இதனால் அரிசன சேவா சங்கம் என்னும் அமைப்பினை ஏற்படுத்தினார். தலித்துகள் மத்தியில் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இவ்மைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இதில் தலித் அல்லாத சாதி இந்துக்கள் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவ்வமைப்பில் ஈடுபட்டோர் தலித் மக்களிடையே உள்ள பிரச்சினைகளுக்காக வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் செய்த பணிகளுள் முக்கியமானவை அரிசன சேவா பள்ளிகளும் விடுதிகளும். இன்றைக்கு அவர்கள் மேற்கொண்ட பல சமூகச் சீர்திருத்தப் பணிகள் நின்றுவிட்ட போதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரிசன சேவாலயப் பள்ளிகளும் விடுதிகளும் இயங்கிவருகின்றன. அவை பல தலித் மாணவர்களுக்குக் கல்வி வழங்குகின்றன.

சுயாதீனப் பள்ளிகள்

சுயாதீனப் பள்ளிகள் என்பது பிறருடைய உதவியோ, கருணையோ இன்றித் தங்களுடைய முயற்சியினாலேயே உருவாக்கிக்கொள்வது. தலித்துகளின் புலமை மரபில் மேலே கூறிய பள்ளிகளைப் பற்றிப் பேசப்பட்ட, எழுதப்பட்ட அளவிற்கு தலித்துகள் தங்களுடைய முதலீடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுயாதீனப் பள்ளிகள் பேசப்படவில்லை, எழுதப்படவில்லை. ஊரில் உள்ள சாதியத் தளைகளிலிருந்து விடுதலையடையவும் பொருளாதாரத் தன்னிறைவு அடையவும் பிற தேசங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இலங்கை (கொழும்பு), அந்தமான், பர்மா, மலேசியா, குவைத், தென்ஆப்பிரிக்கா என்று வெளிநாடுகளுக்கும், பெங்களூர் கோலார் தங்கவயல், பம்பாய், கல்கத்தா போன்ற பகுதிகளுக்கும் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இதில் திருநெல்வேலி பகுதியிலிருந்து இலங்கைக்குக் கணிசமான ஆட்கள் பணிக்குச் சென்றுள்ளனர். இன்றைக்கு இருப்பதைப் போல பல்வேறு கட்டுப்பாடுகள் அன்று இல்லை. அடுத்த மாவட்டங்களுக்குச் சென்றுவருவதைப் போல இலங்கைக்குச் சென்றுவந்துள்ளனர். இலங்கை என்றவுடன் மலையகத் தேயிலைத் தோட்டப் பணி என்று நினைத்துவிட வேண்டாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு ஆங்கிலேயர்களின் வீடுகளில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்யக்கூடிய பட்லர்களாகவும் சொந்த கிராமத்தில் நெய்யக்கூடிய துணி வகைகளைக் கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யக்கூடியவர்களாகவும், தையல்காரர்களாகவும் சென்றுவந்துள்ளனர். குறிப்பாக, இவர்கள் கொண்டு செல்லும் துணிவகைகளுக்குப் பெருத்த வரவேற்பும் கிராக்கியும் இருந்துள்ளது. கைலி போன்ற ஆடைகள் நன்கு விற்பனையாகியுள்ளன. இந்தக் கைலி வகைகள் இஸ்லாமியரிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதை வாய்மொழித் தரவுகள் கூறுகின்றன. மேலும், இவர்களடைய விற்பனைப் பொருட்களுக்கு சாதி இந்துக்களான சைவ வெள்ளாளர் அல்லாத பிறரே நுகர்வோராக இருந்துள்ளனர். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இருந்துள்ளனர். இந்த வணிகச் செயல்பாடானது இந்தியாவில் விவசாய வேலைகள் இல்லாத ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. எனவே, இவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை இருந்துள்ளது. மேலும், கொழும்புவில் தலித்துகள் அதிகமானோர் தையல்காரர்களாகவும் தையல் கடைகள் நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். அன்றைக்குச் சிறுவர்கள் வீட்டில் காசுகளைத் திருடிக்கொண்டு ஓடிப்போகக் கூடிய இடமாகக் கொழும்பு இருந்துள்ளது. கொழும்பில் தையல் கடைகள் நடத்திவரக்கூடியவர்கள் பெரும்பாலும் உறவினர்கள் என்பதால் எடுபிடி வேலை, காஜா போட என்று ஏதேனும் வேலை பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை நிலவியுள்ளது. இவ்வாறு ஆங்கிலேயரிடம் பணி, மாதச் சம்பளம், வியாபாரத்தில் ஈட்டக்கூடிய இலாபம் போன்றவற்றைச் சொந்த ஊரில் முதலீடு செய்கின்றனர். அதாவது விவசாய நிலங்கள் வாங்குதல், வீடுகள் கட்டுதல் என்று பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்கின்றனர். இதுதவிர ஊருக்கென்று பொதுச் சொத்துகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஊர்ப் பொதுக்கோயில் (முப்பிடாதி அம்மன்), அதற்குரிய நிலங்கள், வயல்கள் என்று உருவாக்குகின்றனர். சமூகத்திற்கெனக் கட்டடம், வாசகசாலை, பள்ளிக்கூடம் என்று அதன் செயல்பாடுகள் விரிவுகொள்கின்றன. மேலே சொன்னதைப் போல தலித் மக்கள் தொடர்ந்து கல்வியின் பால் பெரும் தாகம் கொண்டு திகழ்ந்துள்ளனர். இதனால் இவர்களுக்கென்று தனிப் பள்ளிகளைத் தொடங்கியும் அரசிடம் கோரிக்கைகள் வைத்துப் பல பள்ளிகளைத் தொடங்கி கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தியுமுள்ளனர். இன்றைக்கு அரசும் ஆள்வோரும் தலித் மக்களின் பெரும் முயற்சியாலும் தொடர் நடவடிக்கைகளாலும் உருவான ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய பின்புலத்தில்தான் தலித் மக்கள் நடத்திவருகின்ற சுயாதீனப் பள்ளிகளைப் பார்க்க வேண்டும்.

 திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிக் கரிசல்குளம் தலித் மக்கள் நவீனத்துவம் தந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களுக்கென்று சுயாதீனமாகப் பள்ளியைத் தொடங்கியுள்ளனர். சுவாமி சகஜாநந்தரைத் தம் ‘குலகுரு’வாகக் கொண்டு அவரது வழியில் சமூகப் பணியாற்றியுள்ளனர். மேலும் அன்றைக்குப் புகழ் பெற்று விளங்கிய அரசியல், சமூக ஆளுமைகளான ஈவெரா பெரியார், அன்னை மீனாம்பாள் சிவராஜ் போன்றவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும், ஆதிதிராவிடர் மகாஜன சபைகளை ஏற்படுத்தித் தீவிரமாக இயங்கியுள்ளனர். எந்த அளவிற்கு என்றால், திருநெல்வேலி ஜில்லா ஆதிதிராவிடர் பதினைந்தாவது மாநாட்டை 13.09.42 அன்று திருப்பணிக் கரிசல்குளத்தில் நடத்தும் அளவிற்குத் தீவிரமாகச் செயல்பட்டுள்ளனர். இம்மாநாடு அன்னை மீனாம்பாள் தலைமையில் நடந்துள்ளது. இம்மாநாட்டை அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஹெஜ்மாடி திறந்து வைத்துள்ளார். ஈவெரா பெரியார், சௌந்திரபாண்டியன் ஆகியோர் உரையாற்றியுள்ளனர். மேலும் திருப்பணிக் கரிசல்குளத்தின் ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினைத் தலைமையாகவும் கொழும்பு, பம்பாய் தாராவி உள்ளிட்ட பல இடங்களில் கிளைக் கழகங்களை ஏற்படுத்தியும் செயல்பட்டுள்ளனர். இச்சங்கம் கீழ்க்காண்பவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது. “திருப்பணி கரிசல் குளத்திலுள்ள ஆதிதிராவிடர்களின் கல்வி அபிவிருத்தி செய்யவும் பொதுவாக இந்தக் கிராமவாசிகளின் நலவுரிமைகளைக் கவனிக்கவும் இதர வகுப்பினரால் இவர்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் வராமல் பாதுகாப்பது” என்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ‘திருப்பணி கரிசல்குளம் வாலிபர் சங்கம்’ என்னும் பெயரில் தொடங்கி பின்னர் ‘திருப்பணி கரிசல்குளம் ஆதிதிராவிட கல்வி அபிவிருத்தி சங்கம்’ என்று 1921ஆம் ஆண்டில் மாற்றியுள்ளனர். இச்சங்கத்திற்கென்று நோக்கம், எவ்வாறு பரிபாலனம் செய்ய வேண்டும், இச்சங்கத்தின் அங்கங்கள் யார், இணைவதற்கான கட்டணம் எவ்வளவு, மாத சந்தா உள்ளிட்டவை விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சங்கத்தின் விதிகளுள் முக்கியமானதாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது திருமணம் மற்றும் இறப்பு பற்றியதாகும். இச்சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் திருமணம் செய்கிறதாயிருந்தால், அவர் ஒழுங்காய் சந்தா செலுத்தியவராயிருந்தால் அப்படிப்பட்டவருக்குச் சங்கத்திலிருந்து தாம்பூலத் தட்டுப் பரிசளிக்கப்பட வேண்டும். அங்கத்தவர் மூன்று மாதங்களுக்கு அதிகமாய் சந்தா பாக்கி வைத்திருந்தால் சங்கத்திலிருந்து எவ்வித நன்கொடையும் கொடுக்கப்பட மாட்டாது.

இச்சங்கத்தில் அங்கத்தவராயிருந்து, ஒருவருஷம் உழைத்து, சந்தா பாக்கியில்லாமல் சங்கத்தை ஆதரித்துவந்த எவராகிலும் மரித்துப் போனால் அவர்களுடைய மரணச் செலவிற்காகச் சங்கத்திலிருந்து ரூபாய் 15 நன்கொடை கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். ஆதிதிராவிடர்கள் கல்வி அபிவிருத்தி சங்கம் உள்ளூரில் ஆரம்பப் பாடசாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. அதற்காகப் பல்வேறு வகைகளில் நிதிகளைத் திரட்டியுள்ளனர். 1924இல் ஆரம்பப் பாடசாலையை ஓராசிரியர் பள்ளியாகத் தொடங்கி, பின்னர் 1944இல் பி.ஜான் தாமஸ் மேலாளராகப் பதவியேற்ற பின் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக வளர்ச்சியடைந்தது. அவ்வாறு வளர்ச்சியடையும்போது கட்டடங்கள் தேவை என்பதால் பல்வேறு வழிகளில் நிதி திரட்டுகின்ற வேலையைச் செய்கின்றனர். அந்தவகையில் ‘கதம்பக் கச்சேரி’ என்ற கலை நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளனர். நாடகம், நாட்டியம், வேடங்கள் கட்டுதல் என்று ஒன்பது கலைகள் இணைந்த கதம்பமாக இருப்பதால் கதம்பக் கச்சேரி எனப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் வசூல் செய்திருக்கின்றனர். இதுபோன்றே பம்பாயிலும் 1951இல் நாடகம் நடத்தியுள்ளனர். கதம்பக் கச்சேரி வரவு செலவு கணக்குகளையும் ஜெ.பாலசுப்பிரமணியன் ஆவணப்படுத்தியுள்ளார். மேலும் இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த நடந்த முயற்சிகள், பள்ளிக்கு நேர்ந்த சிக்கல்கள், அதனை மீட்பதற்கான போராட்டங்கள், பள்ளியை ஆதிதிராவிடர் சங்கத்தோடு இணைத்தல் என்று தனித்தனித் தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.

A Great panchama Preacher and Reformer: ஸ்ரீமஸ்ரீ சுவாமி சகஜாநந்தம்

 திருப்பணிக் கரிசல்குளத்து மக்கள் சுவாமி சகஜாநந்தரைக் தம் குலக்குருவாகக் கொண்டு செயல்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியிலிருந்த தலித்துகள் பலர் இலங்கையிலிருந்து வந்த ஆதிதிராவிடன் பத்திரிகையோடு தொடர்பில் இருந்ததோடு எழுத்துப் பங்களிப்பும் செய்துள்ளனர். அந்தவகையில் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தலித் மக்களின் விடுதலையை முன்னிறுத்தி ‘இலங்கை இந்தியச் சங்கம்‘ என்னும் அமைப்பு இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்களால் 1912இல் உருவாக்கப்பட்டது. இப்பத்திரிகையைத்தான் மார்க்சியப் பெரியாரிய ஆய்வாளர்கள் கற்பனையான இதழ் என்றும் தோரம்காட்டுவதற்கு அடிப்படையில்லாதவை என்றும் எழுதினர். இதற்கு மறுப்பாகத் தலித் ஆய்வாளர்கள் ‘ஆதிதிராவிடன்: கற்பனையாக்கப்பட்ட இதழ் (உண்மையும் திரிபும்)’ என்று எழுதினர் (‘தீண்டப்படாத நூல்கள்’, ஸ்டாலின் ராஜாங்கம், ஆழி வெளியீடு). இலங்கை இந்தியச் சங்கம் எனும் அமைப்பின் சார்பாக 1919 பிப்ரவரியில் ‘தெய்வமிகழேல் சக்கரநெறி நில் ஊக்கமது கைவிடல்’ என்கின்ற முழக்கத்துடன் 16 பக்க அளவில் ‘ஆதிதிராவிடர்’ இதழ் இலங்கையிலிருந்து வெளிவந்தது. அதன் நோக்கத்தினைச் சொல்லும்போது “இச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு மட்டும் முன்னேற்றத்தின் விஷயமாய்ப் போதித்துவருவதினால் யாது பயன் என்றும் இவ்விலங்கையில் உள்ள பல்லாயிரம் ஆதிதிராவிடர்களுக்கும் இந்தியா முதலிய இதர தேசங்களிலுள்ள பலகோடி ஆதிதிராவிடர்களுக்கும் நம் எண்ணத்தை ஊட்டி உழைக்க வேண்டிய வழிவகை யின்னதென்றறியாது அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் சமயம், இனம் இனத்தைக் காக்கும், வேலி பயிரைக் காக்கும் என்ற முதுமொழிக்கிணங்க தெய்வானுக்கிரகத்தால் ஆதிதிராவிட வம்சத்திலேயே வதித்தவரும், நம் குலத்தவர்களின் நன்மைக்காகத் தன்னுயிரையும் உடலையும் தந்து பாடுபட்டுழைத்துவருகின்றவரும் நம் குலகுருவாகிய மாட்சிமை தாங்கிய ஸ்ரீமஸ்ரீ சுவாமி சகஜாநந்தம் (A Great Panchama Preacher and Reformer) அவர்கள் நம் குறையை நீக்க முன்வந்திருப்பதைப் பார்க்க நாம் குலம் ஈடேற இதுவே நல்ல காலமென யூகிக்க வேண்டியிருக்கிறது. அம்மக்களின் தூண்டுதலினால் பலகோடி ஆதிதிராவிடர்களும் நன்மை அடையவும், நல்லவை நாடவும் முன்னேற்றமடையவும் சாதனமாயிருக்கக் கூடியது பத்திரிகையே என்று நம் குலப்பெயரையே பூண்ட ‘ஆதிதிராவிடர்’ என்னும் ஓர் மாதாந்திர சஞ்சிகையைப் பிரசுரித்து வர முயன்றனம்” என்று அறிவித்து வெளிவந்தது. இந்த இதழில் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பலர் பங்காற்றியுள்ளனர். கல்வி, ஒற்றுமை, நல்லொழுக்கம் போன்ற பல தலைப்புகளில் எழுதியவர்களும் இருந்திருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த கிராமங்களில் ஆதிதிராவிடர் பள்ளிகளை உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, திருப்பணிக் கரிசல்குளம் கிராமத்தைப் போலவே திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளங்குளி, பாப்பையாபுரம், கீழப்பாப்பாகுடி, தளவாய்புரம், ராமையன்பட்டி, மேலப்பாளையம், பூவன்குறிச்சி போன்ற கிராமங்களில் இதே வடிவங்களில் ஆதிதிராவிடர்களால் பள்ளிகள் தொடங்கப்பட்டன. “மதுரை மாவட்டம் எம்.மலம்பட்டி என்னும் கிராமத்திலிருந்து கொழும்பு சென்ற ஆதிதிராவிடத் தனவந்தர் சிவனடியார் என்பவர் தனது கிராமத்தில் 1920இல் ஒரு பள்ளிக்கூடத்தைத் தோற்றுவித்தார்” என்று பாலசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். மலம்பட்டியில் தொடங்கிய பள்ளி குறித்து ஏற்கெனவே பாலசுப்பிரமணியம் எழுதியுள்ளார். அதுபோலவே ஏனைய ஊர்களில் தொடங்கப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து எழுதப்படும்போது ஆதிதிராவிடர்களின் சுயாதீனப் பள்ளிகளின் வரலாறு இன்னும் விரிவு பெறும்.

1885ஆம் ஆண்டு திருநெல்வேலி திருப்பணிக் கரிசல் குளத்தில் ஓலைக் குடிசையில் தொடங்கப்பட்ட பள்ளியானது மெல்ல வளர்ச்சியடைந்துள்ளது. இப்பள்ளிக்காகக் கொழும்புவிலுள்ள திருப்பணிக் கரிசல்குளத்துக்காரர்கள் பணம் அனுப்பிவந்துள்ளனர். இதனால் ஊருக்குப் பொதுவான கட்டடம் கட்டியுள்ளனர். பின்னர் 1921ஆம் ஆண்டு அரசு உதவிப்பெறுகின்ற ஓராசிரியர் பள்ளியாக உயர்ந்தது. பள்ளியில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் கடிதங்கள் நோட்டுகள், துண்டுபிரசுரங்கள் போன்றவை ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு வருவது முக்கியமான செயல்பாடாகும். காலமாற்றம், அரசியல் மாற்றம் ஆகியவற்றால் ஆதிதிராவிடர் அபிவிருத்திச் சங்கத்தின் பெயரில் நடத்தப்பட்ட பள்ளியானது அரசு உதவிப்பெறும் பள்ளியாக மாறியபோது அரிசன ஆரம்பப் பாடசாலை என்று பெயர் மாற்றம் பெறுகிறது. கல்வி, அரசியல் விழிப்புணர்வு, பொருளாதாரத் தன்னிறைவு ஆகியவை தலித் மக்களைச் சுயமரியாதையை நோக்கித் தள்ளுகிறது. இந்நிலையில், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முனைவர் வேலு அண்ணாமலை ஜெர்மனியில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றிவந்தார். தொன்னூறுகளின் இறுதியில் அவர் ஊர் நாட்டாமைக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில், “ஹரிஜன் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்துவது அவமானம். ஆகவே, ஹரிஜன் என்ற பெயரை மாற்றி டாக்டர் அம்பேத்கர் ஆரம்பப் பாடசாலை என்ற பெயரை வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இக்கடிதம் ஊரார் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. முனைவர் அண்ணாமலையின் யோசனை ஏற்கப்பட்டது. ஹரிஜன ஆரம்பப் பாடசாலை டாக்டர் அம்பேத்கர் தொடக்கப் பள்ளியாக மாற்றப்பட்டது.” இவ்வாறு பல்வேறு இடர்பாடுகள், மாறுதல்களுக்கு உட்பட்டுவந்த தலித்துகளின் சுயாதீனப் பள்ளியானது 2021இல் கல்விப் பணியில் நூற்றாண்டை நிறைவு செய்தது. ஜெ.பாலசுப்பிரமணியத்தின் ‘கற்பி’ நூல் அத்தகைய வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் இந்நூலினுடைய சிறப்பாகப் பின்னிணைப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களைச் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட எட்டுப் பின்னிணைப்புகள் 27 பக்கங்களில் கொடுத்துள்ளார். சமீப காலங்களில் வெளிவருகின்ற தலித்திய ஆய்வுகள் தலித் மக்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துவருகிறது.

 மேலும், தலித் மக்களால் சொந்த முதலீட்டைக் கொண்டு தொடங்கினாலும் அதனைத் தங்களுக்கு மட்டுமானது என்றும் சாதிஇந்துக்கள் சொல்வது போல் பிற சமூகத்துப் பிள்ளைகள் இங்கு கல்வி கற்கக் கூடாது என்ற எவ்விதத் தீண்டாமையும் இவர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளில் சொல்லவில்லை, பாகுபாடுகள் கட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், இக்கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாகவே இன்றுவரையில் நடத்திவருவது முக்கியமானது. தலித்துகளால் சுயாதீனமாகத் தொடங்கிய பள்ளிகள் நூறாண்டுகள் தாக்குப்பிடித்து நின்றபோதிலும் பெரிய கல்வி நிறுவனமாகப் பல கிளைகளையுடைய நிறுவனங்களாக வளர்ச்சியடையாததன் காரணங்களையும் ஆராய வேண்டும்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!