மக்களின் அதீத நம்பிக்கைகளுள் ஒன்று மதம். மதம் குறித்து விவாதமோ, கருத்துக்கேட்போ நடத்தினோமானால் வருகின்ற பதில்கள் அபத்தமாக இருக்கும். மக்களில் பெரும்பாலோருக்கு மதம் குறித்த தெளிவு இல்லாததால்தான் பதில்கள் அபத்தமாக இருக்கின்றன என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும் தெளிவான சுய புரிதலற்ற ஒன்றின் மீது மக்கள் ஏன் இவ்வளவு பிடிமானத்தோடு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. மதம் முன்வைக்கும் கடவுள் மீது பயம், அன்பு, பக்தி என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டாலும் அன்றாட இயக்கத்தில் கடவுளைவிட தேவையை நிறைவு செய்கின்ற ஆதாயமே முக்கியம்.
‘ஆதாயம்’ என்பது அறிதல், அறிதலின் வழியாகக் கிடைக்கும் அறிவு ஆகியவற்றை விட முதன்மைக்குரியதாக மாறிவிட்டதால் ஆதாயம் தரும் எதையும் மக்கள் இழக்கத் தயாராக இல்லை. அதாவது, ‘அறிவு’ என்பது ஆதாயத்திற்குப் பிறகுதான். மதமும் கடவுளும் அப்படித்தான். மதத்தினால் ஆதாயம் கிடைக்கும் வரை அதைப் பின்பற்றுவார்கள். ஆதாயம் இல்லையென்றால் கை கழுவி விடுவார்கள். அதைவிட நாத்திகத்தில் அதிக ஆதாயம் இருக்குமென்றால் அதன் பக்கம் சார்ந்துவிடுவார்கள். சமூகத்தில் கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்பதெல்லாம் ஆதாயம் என்று வருகிறபோது அற்ப விஷயங்கள் ஆகிவிடும்.
மக்கள் தமக்கு ஆதாயம் வரும் வழிகளுக்குத் தத்துவ விசாரத்தில் கடவுள், சாதி, சமயம், கொள்கை என்று பல பெயர்களை வைத்திருக்கிறார்கள். மற்ற உயிரினங்கள் அப்படிப் பெயர் வைக்கவில்லையே தவிர ஆதாயத்தைத் தவிர்த்து வாழ்வதில்லை. மக்களுக்கு அனைத்து ஆதாயங்களின் மீதும் ஆசை இருக்கிறது. மற்றவைகளுக்கு உணவு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. உலகின் மிகப்பழைய தொழிற்பாடாகவும் இன்று வரை உயிர்ப்போடு இருப்பதும் உயிர்களின் ஆதாயத்தை நோக்கிய நகர்வுதான். மக்களின் ஆதாயத்தை நோக்கிய நகர்வுகளைப் கலாபூர்வமாகப் பதிவு செய்யும் வடிவங்களுள் ஒன்றாக இலக்கியங்கள் இருந்திருக்கின்றன. அப்படிப் பதிவு செய்த புகழேந்திப் புலவரின் சில கதைப்பாடல்களை, அவை பேசும் மதமாற்றம் குறித்த விஷயத்திற்காக அணுகலாம்.
சமீபத்தில் அக்கதைப்பாடல்களை வாசிக்க நேர்ந்தது. மொழிநடை, அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவை நளவெண்பாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. ஆகவே, அக்கதைப்பாடல்களை இயற்றியவரையும் நளவெண்பாவை இயற்றியவரையும் ஒருவராகக் கொள்ள முடியுமாவெனத் தெரியவில்லை. கதைப்பாட்டு புகழேந்தியைப் பற்றி அறிந்துகொள்ள நூலில் அகச்சான்றுகள் இல்லை. கோவலன் கதையில் (கோவிலன் கதை?) அதன் ஆசிரியரான புகழேந்தி சைவசமயி என்பதற்குச் சான்று இருக்கிறது. ஆனால், அவர் பாடியதாகச் சொல்லப்படும் ‘சித்திரபுத்திர நாயனார்’, ‘அமராவதி கதை’ ஆகியவற்றில் அதன் ஆசிரியரைப் பற்றி அறிந்துகொள்ள தகவல் இல்லை. அவர் குறம், மாலை, அம்மானை என்ற சிற்றிலக்கிய வகைகளில் பல நூல்களைப் பாடியிருந்தாலும் அவற்றிலும் அவரைப் பற்றி விவரமாக அறிய முடியவில்லை. அவருடைய நூல்களையெல்லாம் ஒருசேரப் பார்க்கும்போது, அவரை வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றை அதிலும் குறிப்பாக இன்றைக்கு அதிகமான இடையீடுகளைக் கொண்டிருக்கும் பிரதிகளாக இருப்பவற்றை இயற்றியிருப்பவராக அவதானிக்கலாம்.
‘சித்திரபுத்திர நாயனார்’, ‘அமராவதி கதை’ ஆகியவற்றை 1966இல் சென்னையில் ஆர்.ஜி.பதி கம்பெனி வெளியிட்டிருக்கிறது. நூலாக வருவதற்கு முன் அவை நிகழ்த்துப் பிரதியாகவும் வாய்மொழிப் பாடலாகவும் இருந்திருப்பதை அக்கதைகளின் வடிவம் உணர்த்துகிறது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட மதமொன்றைத் தழுவியவர்கள் வேறொரு மதத்திற்கு மாறியதைப் பதிவு செய்த பிரதியாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் வேறொரு மதத்திற்குப் பெயர்வதற்கான காரணம் ஆதாயமாக இருந்தாலும் அதற்கான புறச்சூழல்களை அறிந்துகொள்வது வரலாற்றை அறிந்துகொள்ளவும் துணையாக இருக்கும்.
காலந்தோறும் மதமாற்றங்கள் நடந்திருந்தாலும் அதைப் பதிவு செய்த இலக்கியப் பிரதிகள் மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களிடம் வழங்கும் கதைகளாகவும், பாட்டுகளாகவும் கிடைத்துள்ளவை விரல் விட்டு எண்ணிவிடக்கூடியனவே என்றாலும் கவனத்தைக் கோருபவையாக இருக்கின்றன. ‘சித்திரபுத்திரன்’, ‘அமராவதி கதை’ப் பிரதிகள் அப்படிப்பட்டவைதாம்.
சித்திரபுத்திர நாயனார் கதை
சிவனுக்கு ஒரே வருத்தம். உலகம் தோன்றிய காலந்தொட்டு, தானே உலகத்தின் கணக்கை எழுதிவருவதை நினைத்து அலுத்துக்கொள்கிறான். பார்வதியை அழைத்தான். ஜனத்தொகை பெருகிவிட்டதால் உலக ஜீவராசிகளின் கணக்கைத் தன்னால் எழுதிவர முடியவில்லை என்றும் அதற்கு ஓர் உதவியாளர் வைத்துக்கொண்டால் உத்தமமாக இருக்கும் என்றும் தன் எண்ணத்தை பார்வதியிடம் வெளிப்படுத்தினான். அவளும் சம்மதித்தாள். சிவனுக்கு ஒரே மகிழ்ச்சி. எழுத்தாணியும் எழுது பலகையும் எடுத்துவருமாறு பார்வதிக்குக் கட்டளையிட, காத்திருந்தவள் போல பார்வதியும் பாய்ந்தோடிச் சென்று அவற்றை எடுத்துவந்து நீட்டினாள். வாங்கிய சிவன் ஓர் ஆண் குழந்தையைச் சித்திரமாக வரைந்தான். அதைப் பார்த்து மகிழ்ச்சியால் மனத்துள்ளலோடு கை நீட்டி பார்வதி அழைத்தாள். சித்திரத்தில் பிறந்த சித்திரபுத்திரன் பார்வதியின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டான்.
சிவன் என்னென்ன கணக்குகளை எப்படி எழுத வேண்டும் என்று சித்திரபுத்திரனுக்குக் கற்றுக்கொடுத்தான். அந்த நேரத்தில் இந்திரனும் அவனது பத்தினி இந்திராணியும் தமக்கொரு பிள்ளை இல்லையே என்று வருந்திக்கொண்டிருந்தனர். சிவன் அவர்களுக்கு ஏதாவதொரு விதத்தில் உதவி செய்ய எண்ணினான். உடனே காமதேனுவை அழைத்து இந்திராணிக்குப் பிள்ளைப் பெற்றுக்கொடுக்குமாறு கட்டளையிட்டான். இந்திர தம்பதியை வந்தடைந்த மாடு பிள்ளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்திராணிக்குத் தம்மைப் போல மாடும் மலடாகிவிட்டதோ என்று பெருங்கவலை. அவளுக்காகக் கவலைப்பட்ட சிவன் தன் மகன் சித்திரபுத்திரனை அழைத்து ‘நீ போய் மகனாகப் பிறக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டான். தந்தையின் விருப்பத்தின்படி சித்திரபுத்திரன் இந்திர தம்பதியருக்கு மகனாகப் பிறந்து அவர்களை வணங்கி மீண்டும் சிவலோகம் வந்து நடந்ததைச் சொன்னான் என்பதாகச் ‘சித்திரபுத்திர நாயனார் கதை’ அமைந்திருக்கிறது.
சிவனை மையமாகக் கொண்ட கதைகளில் சிவன் இந்திரனை வீழ்த்தியவனாக, கட்டுப்படுத்தியவனாக, அடிமைச் சேவகம் செய்விப்பவனாகச் சித்திரிக்கப்பட்டிருப்பான். சித்திரபுத்திரன் கதையில் சற்று மாறுபட்டு இந்திரனுக்குப் பிள்ளை கொடுப்பவனாகவும் அப்பிள்ளைக்குக் கற்றுக்கொடுப்பவனாகவும் காட்டப்பட்டிருக்கிறான். இந்திரன் அவைதிக அடையாளமாகப் பார்க்கப்பட்டுவரும் மரபு தனியாக இருக்கும் நிலையில், இந்திரனை சிவன் கதைகளில் எதிர்நிலையில் சித்திரிப்பது காலத் தொன்மையுடையது என்றாலும், சித்திரபுத்திரன் கதையைப் பொறுத்தமட்டில் சைவம் அதிகாரம் பெற்று, அது தருபவற்றை இந்திர ஏற்பாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்த காலத்தில் மக்களிடம் வாய்மொழியாக உருவாகியிருந்திருக்க வேண்டும். அதிகாரம் இழந்தவர்களாக இந்திர ஏற்பாளர்கள் மாறிவிட்டார்கள் என்பதுதான் சித்திரபுத்திரன் கதை சொல்லவரும் செய்தி. இதன் தொடர்ச்சியாக ‘அமராவதி கதை’யை அணுகும்போது வேறொரு திரட்சியான முடிவைப் பெறலாம்.
அமராவதி கதை
தர்மராஜாவின் மனைவியான செட்டியம்மை (அமராவதி) என்னும் சீமாட்டி முத்தொட்டில் கட்டி செல்வத்துடன் வாழ்ந்துவந்தாள். யாதொரு பாவமும் அறியாதவள். கோபம் கொள்ளாதவள். சித்திரபுத்திரன் என்னும் தேவலோகக் கணக்கரைப் பற்றிக் கனவிலும் காணாதவள். சிவன், விஷ்ணுவை வணங்காதவள். அளவின்றி அனைவருக்கும் அன்னம் படைப்பவள். அத்தாளம் என்னும் இரவுச் சாப்பாடு கேட்டால் அமுதமே கொடுக்கும் குணவதி. கோடை காலத்தில் நீர், மோர், குடை, விசிறி தருவாள். சனிக்கிழமைகளில் தேய்த்துக் குளிக்க எண்ணெய் தருவாள். நந்தவனம் அமைத்து மலர்கள் பறித்துக் கோயில்களுக்குக் கொடுப்பாள். குறிப்பிட்ட தூரங்களுக்கு இடையில் சுமைதாங்கிக் கற்கள் அமைப்பாள். கிணறு அமைத்து உயிர்களின் தாகம் தணிப்பாள். சிறுபிள்ளைகளுக்குத் தின்பண்டங்கள் தருவாள்.
வட்டியில்லாமல் பணவுதவி செய்வாள். அதிகாரத்திற்குப் பயந்து தவித்திருப்போருக்கு அடைக்கலம் கொடுப்பாள். ஏழைக்கும் பரதேசிக்கும் வீடு கொடுப்பாள். புதுத் துணிகள் கொடுப்பாள். அனாதைப் பிணங்களை அடக்கம் செய்வாள். இவ்வளவு தான தருமங்கள் செய்தும் தனக்கான நோன்பு இருக்கவில்லை என்று சித்திரபுத்திரன் ஆள் அனுப்பி அழைத்துவரச் சொல்லியிருந்தான்.. ஆட்கள் வந்தனர். அவர்களுக்கும் உணவு கொடுத்து, தான தருமங்கள் செய்தாள். இப்படிப்பட்ட உத்தமியைச் சித்திரபுத்திரனிடம் கூட்டிச் செல்வதில்லை என்று வந்தவர்கள் முடிவெடுத்தனர். சித்திரபுத்திரனிடம் நடந்ததைச் சொல்ல, மற்றொரு குழுவை அனுப்பினான். அவர்களும் அமராவதியை அழைத்துச் செல்லாமல் வெறுங்கையுடன் சென்றனர். சித்திரபுத்திரன் கோபப்பட்டான். மூன்றாவதாக அனுப்பப்பட்ட குழு இரக்கமின்றி அமராவதியை அழைத்துச் சென்றது.
சித்திரபுத்திரன் அமராவதியைப் பிடரியில் குத்தி, செம்புத் தூணில் கட்டிப்போடுமாறு உத்தரவிட்டான். தாகத்திற்குத் தண்ணீர் கேட்டபோது செம்பை உருக்கிக் குடிக்கக் கொடுத்தனர். பானகம் போல நினைத்துக் குடித்தாள். மழுவைக் காய்ச்சி உள்ளங்கையில் வைக்கச் சொன்னார். அது அவளுக்குக் குளிர்ச்சிமிக்கதாக இருந்தது. இப்படிப் பல்வேறு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். ஒவ்வொரு கொடுமையும் அவளுக்கு இன்பமாக அமைந்தது. என்றாலும் சித்திரபுத்திரனின் ஆட்கள் செய்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.
‘ஏன் என்னிடம் இப்படி நடந்துகொள்கிறீர்கள்’ என்று அமராவதி கேட்டதற்குச் சித்திரபுத்திரன் ‘நீ எனக்குச் செய்ய வேண்டிய பூஜையைச் செய்யவில்லை. பூஜை செய்யாதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை உலகுக்குச் சொல்லவே உன்னைத் தண்டித்தேன்’ என்றான். பிறகு, அமராவதிக்குச் சித்திரபுத்திரன் இரங்கினான்.
சித்திரை பதினெட்டாம் தேதி பௌர்ணமிக்கு நோன்பிருந்து நீராடி, திருநீறணிந்து, சூரியனையும் சிவனையும் வணங்கி, இன்ன பிற அலங்காரங்கள் செய்து, படையலிட்டு வணங்க வேண்டும். அப்படி இருந்தோருக்கு எல்லா நலமும் கிடைக்கும். உனக்கும் இனி அவ்வாறே கிடைக்கும் என்று சொல்லி அமராவதியை சித்திரபுத்திரன் பூமிக்கு அனுப்பினான்.
பூமியில் அமராவதியைச் சிதையில் வைத்து நெருப்பூட்டப்போகும் நேரத்தில் தூங்கி எழுவது போல எழுந்தாள். எல்லோரும் வியந்தனர். மீண்டும் தான தருமங்கள் செய்தாள். நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் சித்திரபுத்திரன் அமராவதியை அழைத்து மீண்டும் நூறு வருடங்கள் வாழ்வதற்கான அனுமதியை வழங்கி பூமிக்கு அனுப்பினான். அப்போது சிவன், பார்வதியின் கையில் பிரம்பையும் புத்தகத்தையும் கொடுத்து அமராவதியைச் சந்தித்து வரும்படி அனுப்பினான். அவள் பூமிக்கு வந்தபோது அமராவதி சோகமாக இருந்தாள். காரணம் கேட்டாள் பார்வதி. சித்திரபுத்திரன் பிறப்பை அறியமுடியவில்லை. அதனால் கவலையாக இருக்கிறேன் என்றாள். பார்வதி தனது புத்தகத்தில் பார்த்து அமராவதிக்கு எடுத்துக் கூறினாள். அமராவதி பார்வதிக்கு ஆடை ஆபரணம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
மூன்றாவது முறையாக, அமராவதியை அழைத்துவர சித்திரபுத்திரன் கட்டளையிட்டான். அழைத்துப்போக வந்தவர்களில் ஒரு பிராமணப் பெண்ணும் இருந்ததால் அவளுக்கு அமராவதி பிராமணப் போஜனம் முதலிய தான, தருமங்கள் செய்தாள். சிவபூஜை செய்தாள். வானில் இருந்து பூந்தேர் வந்தது. அமராவதியும் அவள் கணவன் தர்மராஜாவும் தேர் ஏறி, சித்திரபுத்திரனைச் சேர்ந்தனர். பிரம்மா மீண்டும் அவர்களைத் தலைமக்களாகப் படைத்தார். மீண்டும் நூறு ஆண்டுகள் கழித்து வானுலகம் சென்று மறுபிறப்பின்றிச் சொர்க்கத்திலேயே இருந்துவிட்டனர் என்பதாக அமராவதி கதை அமைந்திருக்கிறது.
இந்த இரு கதைகளிலும் சமூக, மத அசைவியக்கம் குறித்து யோசிப்பதற்கு நிறைய இருக்கின்றன. ஒரு சாதி, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறியது குறித்த முதல் இலக்கியச் சான்று இவையாகத்தான் இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்டுள்ள கடவுளும் சாதிக் கதைகளில் சொல்லப்படும் கடவுளும் சிவனாகவே இருக்கிறான். கடவுள்கள் நிறைந்த தேசத்தில் சாதிக் கதைகளில் சிவன் மட்டுமே முதன்மைப் பாத்திரமாக இருப்பது வியப்பளிக்கிறது. நான்கு வருணங்களைப் பிரம்மன் படைத்ததாகச் சொல்லப்பட்டாலும் அனைத்துச் சாதிகளின் தோற்றமும் சிவனோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள திட்டமிடலை ஆராய வேண்டும். இந்தக் கதையிலேயே இந்திரத் தம்பதிகளைப் படைத்தவன் பிரம்மாவாகவும் சித்திரபுத்திரனைப் படைத்தவன் சிவனாகவும் இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மனிதர்கள் படைக்கப்படுவது பிரம்மாவோடும் அதீத சக்தி பெற்றவர்கள் படைக்கப்படுவது பிரம்மனுக்கு அப்பாற்பட்டதாகவுமான புனைவுவெளிகள் இருந்திருக்கின்றன.
அமராவதியின் தானச் செயல்கள் பலவும் மணிமேகலை காப்பியத்தோடும் புத்த சாதகக் கதைகளோடும் சமணத் தத்துவங்களோடும் ஒத்துப்போகின்றன. தானச் செயல்களைக் குறிப்பாக, உணவு தானத்தைப் பெண்களோடு இணைத்துப் பேசுவது பௌத்த மரபு. புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததாகச் சொல்லப்படும் சித்திரா பௌர்ணமியை சித்திரபுத்திரனின் பூஜைக்குரிய நாளாகச் சித்திரித்திருப்பதும் சித்திரபுத்திரனை சிவன் வரைந்த ஓவியத்திலிருந்து பிறந்தவன் என்பதும் பௌத்தக் கருத்தியலை உள்வாங்கித் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட சைவத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது. எண்ணும் எழுத்தும் பௌத்த மாடங்களில்தான் கற்பித்தலுக்கு உரியவையாக இருந்தன என்பதற்குச் சான்றாகப் பல ஓவியங்களும் சிற்பங்களும் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் எழுதும் கலை குறித்துக் கிடைத்த முதல் சிற்பமாகக் கருதப்படும் நாகார்ஜுன மலைச்சிற்பம் கூட பௌத்தத்தோடு தொடர்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கதையின்படி பௌத்த / சமண விழுமியங்களோடு வாழ்ந்த அமராவதியின் சாதியோர் சைவத்திற்கு மாறியதை இக்கதைப்பாடல்கள் தெரிவிக்கின்றன எனலாம்.
மகேந்திர பல்லவன் காலத்தில் பௌத்தம், காபாலிகம், பாசுபதம் ஆகியவை மக்களுக்கு அந்நியமாகிக்கொண்டிருந்தை ‘மத்தவிலாசப் பிரகசனம்’ குறிப்பிடும். சமணக் கோயிலை இடித்துவிட்டு அங்கிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களைக் கொண்டு திருவதிகையில் கோயிலைக் கட்டுவித்து அதற்கு ‘குணதர ஈசுவரம்’ என்று பெயர் வைத்தவனும் மகேந்திர பல்லவனே. இவன் சுமார் கி.பி.620இல் சமணத்தைவிட்டுச் சைவனாகியிருக்கலாம் என்பார் மா.இராசமாணிக்கனார். அப்பர் சமணத்தில் தருமசேனராக இருந்ததும் இவன் காலத்தில்தான். பின்னர் அவர் சைவராகிறார். அதற்குப் பிறகு பௌத்த / சமணம் அரசாலும் மக்களாலும் தூரமாக்கப்பட்டிருக்க வேண்டும். கி.பி. 642இல் இந்தியா வந்த யுவான்சுவாங் காஞ்சிபுரம் பகுதியைப் பார்த்துவிட்டுப் பௌத்தம் அழியும் நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதே காலத்தில்தான் வைதிகத்திலிருந்து மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட ஆருகத மதத்தை வைதீகத்துடன் இணைப்பதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன. ஒப்பீட்டளவில் பௌத்த / சமணத்திற்கு எதிரான அழிப்பு வேலைகள் யாவும் பல்லவர்களின் அந்திமக்காலத்தில்தான் பெருமளவில் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. பிறகு, பல்லவர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சோழர்கள் வைதீக மதங்களுக்கு ஆதரவளித்துப் பௌத்த / சமண அழிப்பை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆக, சித்திரபுத்திரன், அமராவதி கதைகள் சொல்லும் சம்பவம் பல்லவர்கள் வீழ்ச்சியுற்று சோழர்கள் ஆட்சிக்கு வந்த ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னதாகவும் பல்லவர்கள் வைதிகத்திற்கு ஆதரவு காட்டத் தொடங்கிய ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னதாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தக் காலத்தில்தான் போர்க்குடிகள் நிலவுடைமை குடிகளாயினர் என்பார் நொபொரு கராஷிமா.
ஓர் அரச மரபு வீழ்ந்து இன்னோர் அரச மரபு காலூன்றத் தொடங்கிய நேரத்தில், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள மதமாற்றம் அவசியப்பட்டிருக்க வேண்டும். ஆகவேதான் பௌத்த / சமணத்தைப் பின்பற்றிய ஒரு வணிகச் சாதி சைவத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அரசனே சைவத்தைப் பின்பற்றத் தொடங்கிய பின், குறிப்பிட்ட வணிகச் சாதியினரும் சைவத்திற்கு மாறிக்கொள்வது அரசனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதோடு அச்சாதியினர் அரசனோடு நெருங்கி இருந்து வணிகப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்குத் துணையாகவும் அமைந்திருக்கலாம். அவ்வாறு மாறிய சாதிகளுக்கு அரசனால் வரிச் சலுகைகளும் கூட வழங்கப்பட்டிருக்கின்றன.
அரசன் தனது மதத்தை மாற்றும்போது அதற்கேற்றபடி தமது மதத்தையும் மாற்றிக்கொண்ட சாதிகள், தமது பூர்விக அடையாளங்களை இழப்பது பற்றிக் கவலைப்படவில்லை. அவை வெறும் தத்துவங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல் சூழலின் சந்தர்ப்பவாதத்தைச் சாதகமாக்கிக்கொள்வதற்கும் தயங்கவில்லை. அதுவே அவர்கள் பின்னாளில் அதிகாரமிக்க சாதிகளாக மாறுவதற்கும் துணை செய்திருக்கிறது. ஏற்கெனவே பல்லவர் காலத்தில் அரசனின் மதத்தையே தழுவியிருந்த ஒரு வணிகச் சாதி பொருள்வளம் பெற்றதாகத்தான் இருந்திருக்கும். அரசன் மதம்மாறும்போது அவனைப் பின்பற்றி தாமும் மாறுவதற்கு அதற்குப் பொருள்ரீதியான ஆதாயம் தேவைப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி வேறோர் ஆதாயம் தேவைப்பட்டிருக்கும். அதுதான் மதம் மாறுவதற்கான காரணமாக இருந்திருக்க வேண்டும். ‘வரலாற்றில் சாதிகள் குறிப்பாக வணிக, கைவினைஞர் சாதிகள் தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள வைதீகக் கோயில் வழிபாடு, தானம், பிரசாதம் ஆகியவற்றில் பங்குபெறுவதையே குறியாகக் கொண்டிருந்தன. பொருளாதார அடிப்படையால் மட்டுமே சாதியானது உயர்தகுதி பெறுவதில்லை. வைதீகப் பார்ப்பனியத்தின் அங்கீகாரமே சாதி உயர்வுக்கு அடிப்படையாக உள்ளது’ என்னும் ராஜ் கௌதமனின் கூற்று அமராவதியின் சாதியோர் ஏன் மதம் மாறினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
புகழேந்திப் புலவர் பாடியதாகச் சொல்லப்படும் பிற நூல்களின் நுவல்பொருளும் பௌத்த / சமணத் தத்துவ இலக்கியங்களோடு பொருந்திப்போகின்றன. அந்தவகையில் புகழேந்தியாரின் அனைத்து ஆக்கங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தும்போது இன்னும் பல புதிய முடிவுகளைக் கண்டடையலாம்.
துணை நூல்கள்
- புகழேந்திப் புலவர், சித்திரபுத்திரனார் கதை, ஆர்.சி.பதி கம்பெனி, சென்னை, 1966.
- நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும், என்.சி.பி.எச்., சென்னை, 2017.
- இராசமாணிக்கனார்.மா., பல்லவர் வரலாறு, கழக வெளியீடு, 1944.
- ராஜ் கௌதமன், தலித் பண்பாடு, என்.சி.பி.எச்., சென்னை, 2019.