ஜனவரி முதல் நாள் பாடலாசிரியர் வைரமுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘மகா கவிதை’ என்கிற தனது புதிய நூலை வெளியிட்டார். நிகழ்வில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கமல்ஹாசன், தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றார்கள். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் ‘கலைஞர் கருணாநிதியின் வரலாற்றைக் கவிதையாக வைரமுத்து எழுத வேண்டும்’ என்று அன்புக் கட்டளையும் இட்டிருக்கிறார்.
இன்னொரு சம்பவம் எழுத்தாளர் கோணங்கி தனது புதிய நாவலை அடையாளம் பதிப்பக வெளியீடாக, 2024 சென்னைப் புத்தகக் காட்சியில் கொணர்ந்திருக்கிறார்.
இந்த இரண்டு நூல் வெளியீடுகளிலும் இருக்கும் பொதுத்தன்மை, வைரமுத்து, கோணங்கி இருவர்மீதும் இரட்டை இலக்கங்களில் ‘மீ டூ’ பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குத் தார்மீகமான பதில்களைச் சொல்லாமல் இருவருமே இக்குற்றச்சாட்டுகளைச் சதி என்பதாகவே வருணித்தார்கள். ஒருவர் காலம் பதில் சொல்லும் என்றார்; இன்னொருவர் அரசியல் சதி என்றார். சினிமாத் துறையில் வைரமுத்துவின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன; ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் இக்குற்றச்சாட்டுகள்தான் எனக் கூறப்பட்டாலும் படக்குழுவினரோ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானோ அதுதான் காரணமென்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. படக்குழுவின் நழுவல் போக்காகவும் அதைப் புரிந்துகொள்ள முடியும்.
17க்கும் மேற்பட்ட பெண்களால் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான வைரமுத்துவின் நூல் வெளியீட்டு நிகழ்வை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் தார்மீகரீதியில் புறக்கணித்திருக்க வேண்டும். மாறாக, நூலை வெளியிட்டு அவருக்குப் புகழுரையும் வழங்கியிருக்கிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டை எழுப்பியவர்கள் பற்றிய அலட்சியப் போக்கையே காட்டுகிறது. கூடவே, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் இதுகுறித்து எந்தத் தாழ்வெண்ணமும் அடையாதவராகவும் அதிகாரத் தரப்புகளோடு நட்பைப் பேணுபவராகவும் இருக்கும் நிலையில், தன்னுடைய பிம்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இதுபோன்ற நிகழ்வுகள் அவருக்கு உதவிசெய்கின்றன. பாதிக்கப்பட்ட தரப்பினரை மௌனிக்கச் செய்தல் என்கிற வியூகமும் இதற்குள் உண்டு எனக் கணிக்க முடிகிறது.
2005களில் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டார் என வெளிப்படையாகப் பேசி தொடர்ந்து நீதிமன்றம், தேசிய பெண்கள் ஆணையம் போன்றவற்றில் பாடகர் சின்மயி புகாரளித்தும் இன்றுவரை வைரமுத்துமீது எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தற்போது 17க்கும் மேற்பட்ட பெண்கள் அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்திருந்தும் வைரமுத்து, “இவற்றுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்” எனக் கூறிவிட்டுத் தன் போக்கில் சினிமா விழாக்கள், திரைப்படப் பாடல்கள், நூல் வெளியீடு போன்றவற்றில் பேசித் திரிகிறார். அவர்மீது எந்த அழுத்தமும் இதுவரைக்கும் அவர் சார்ந்திருக்கிற கட்சியாலோ அல்லது திரைத்துறையிலிருந்தோ கொடுக்கப்படவில்லை. ஆனால், புகாரளித்த சின்மயி சில காலமாக ஒதுக்கப்பட்டிருந்தார் எனில் எங்கு கோளாறு உள்ளது என்பதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.
தமிழிலக்கியச் சூழலில் சிற்றிதழ் மரபின் ‘கண்ணி’ எனப்படும் எழுத்தாளர் கோணங்கி மீதான பாலியல் புகார்கள் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ந்து இதுகுறித்துப் பல்வேறு வடிவங்களில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தபடியே இருக்கிறார்கள். நெஞ்சுரம் கொண்ட சில தமிழ் எழுத்தாளர்கள் இந்தப் பிரச்சினையின் ஆரம்பத்திலேயே கோணங்கி பதில் கூற வேண்டியதன் அவசியத்தைப் பொதுவெளியில் கவனப்படுத்தினார்கள். இலக்கியக் குழுமங்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோர் இந்த அத்துமீறல் குறித்துத் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் கோணங்கியின் செயல்பாடுகளின் தீவிரம், அதன் விளைவுகள் பற்றியெல்லாம் தமக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால், அதைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு அவர்களிடம் இருக்கும் தயக்கமும் தன்னலமும்தான் கூச்சமின்றித் தமிழுக்குப் பங்களிக்கும் தைரியத்தை கோணங்கிக்கு அளித்தது எனச் சொல்லத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் அவருடன் உறவு கொண்டாடும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்குக்கூட பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது கோணங்கி அளித்த விளக்கம் நம்பும்படியாக இருந்திருக்காது. குறைந்தபட்சம் இதற்காக வருத்தம்கூடத் தெரிவிக்காதது அவரது ஆணவத்தையே வெளிக்காட்டுகிறது. கூடவே பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து அவரது பார்வைதான் என்னவென்றாவது அவர் பொதுவெளியில் விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
Illustration : Tanushree Roy Paul
எழுத்து வேறு, எழுத்தாளர் வேறா?
இந்தப் பிரச்சினையில் எழுத்து வேறு, எழுத்தாளர் வேறு என்கிற குரலைத் தொடர்ந்து கேட்க முடிகிறது. இந்தக் கேள்விக்கான பதில்: எழுத்துக்கும் வாழ்வுக்குமான இடைவெளியைக் குறைப்பதுதான் ஓர் எழுத்தாளரின் அந்தரங்கமான செயல்முறையாக இருக்க முடியும். இதிலும் வெவ்வேறு முடிவுகள் பெறப்படலாம். ஆனால், கோணங்கி முழுநேர எழுத்தாளர். 24 மணிநேரமும் கலைஞராகவே வாழ்ந்துகொண்டிருப்பவர். ஒரு பேருந்துப் பயணத்தில்கூட அவர் கலைஞர்தான்; பயணி அல்ல. சாதிக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும்போதும் கலைஞர்தான்; சாதியவாதி அல்ல. உன்மத்தம் கொண்டவராகத் தன்னைத் தானே விம்பச் சமாதிக்குள் அடைத்துக்கொண்டவர். அவ்வாறான ஒருவர் தார்மீகமான பதிலை அளிப்பது அவசியமானது.
அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வருத்தமும் வேதனையும் உள்ளது. ஆனால், இதைப் எப்படிப் பேசுவது என மூக்குறிஞ்சுபவர்களிடம் அவர் வேறு அவர் எழுத்து வேறா என்பதைக் கேட்டு வைக்க வேண்டியிருக்கிறது. இது மொழிப்பரப்பில் விழுந்த பெருஞ்சுமை என்பதை எப்படி இவர்களுக்கு விளக்குவது?
கோணங்கிக்குப் பொதுவெளியில் எழுத்தாளர், கலைஞர் என்ற அடையாளம் தவிர்க்க முடியாதது. தார்மீகமாக அவருக்குப் பதில் சொல்வதற்கான கடமை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவரை இழுத்து மல்லுக்கு நிற்கவில்லை என்பதையும் கவனப்படுத்த வேண்டியிருக்கிறது. தேவைக்கு ஏற்றாற்போல உரையாடலை மட்டுப்படுத்த முனையும் குரல்களிடம் இன்னுமொரு தீவிரமான கேள்வியும் உள்ளது:
“எழுத்தாளர் என்கிற அதிகார அட்டையைக் கொண்டே பாலியல் அத்துமீறலை அவர் செய்தார் எனும்போது அவரிடம் பொதுவெளியில் விளக்கத்தை அளியுங்கள்” எனக் கேட்பதில் தவறென்ன இருக்க முடியும்?
இந்த விவகாரம் மொழி எனும் பண்பாட்டுச் சூழலில் நிகழ்ந்துள்ளது எனும்போது, இந்தப் பிரச்சினையை விழுங்கிச் செரிக்க முயல்வது சூழலின்மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நூல் வெளியிடும் உரிமை
ஒருவருக்குத் தனது கருத்துகளை வெளியிடுவதற்கு உரிமை இல்லையா? ஒருவரது கருத்துரிமை, வெளிப்பாட்டு உரிமை போன்ற விஷயங்களில் தண்டல்காரன் மனநிலையுடன் செயல்பட வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. இருவரும் நூல்களை வெளியிடலாம்; பொது வெளிகளில் தமது கருத்துகளைப் பரப்பலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், அவர்களது நூலை வெளியிடுபவர்கள், அவர்களது படைப்புத் திறன், படைப்பாளுமை குறித்து விதந்தோதுபவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும் என அழுத்தம் தர வேண்டியதும் கடமையாகிறது. அல்லது பதிப்பகங்கள், இதர பிரமுகர்கள் மீதான நம்பிக்கைக் குலைவே ஏற்படும். இந்த மௌனம் மிக ஆபத்தானது; கலைக்கப்பட வேண்டியது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.
கோணங்கியின் புதிய நூலை வெளியிட்டிருக்கும் ‘அடையாளம் பதிப்பகம்’ தமிழின் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்று. நாவல்கள், சிறுகதைகள், தலித்தியம், பெண்ணியம், கீழைத்தேயவியல், புலம்பெயர் எழுத்துகள், இந்துத்துவ எதிர்ப்புப் பிரதிகள், எதிர்க்கதையாடல் பிரதிகள் எனப் பல்வேறு வகைமைகளில் தேர்ந்தெடுத்துப் படைப்புகளை வெளியிடும் பதிப்பகம் எனப் பெயரெடுத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாடுதான் என்னவென்றாவது பொதுவெளியில் பகிர்ந்திருக்க வேண்டாமா? இந்தப் புரட்சிகர, முற்போக்கு அடையாளங்களெல்லாம் ஒருவித பாவனைதானா?
நீதி கோரும் தரப்புமீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவரது எழுத்தை நிராகரிக்க வேண்டும், அவரின் இருப்பை நிராகரிக்க வேண்டும் என்பதாகத் திரும்பத் திரும்பவும் தனிப்பட்ட முறையிலும் எழுவதை கவனிக்க முடிகிறது. ஆனால், நீதி கோரும் தரப்பினரின் அறிக்கைகள், வாக்குமூலங்கள் அவரது எழுத்தைக் குறித்தோ அல்லது அவரை நிராகரிக்க வேண்டும் என்ற முறையிலோ எங்கும் இல்லை; குறைந்தபட்சம் அவர் வாய் திறந்து அனைவருடனும் ஒன்றாகப் பேச வேண்டும் என்பதாகவே இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது. தவறான பிரச்சாரம் கோணங்கிக்குத்தான் எதிராய் முடியும் என்பதையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாய் ஒன்று, பாதிப்பை உண்டாக்கிய வைரமுத்துவோடு மேடையைப் பகிர்ந்துகொள்ளவும் புகழுரைகள் வழங்கவும் தயாராக உள்ளார்கள்; அடையாளம் பதிப்பகம் எந்த விளக்கமும் இன்றி மெத்தனமாக நூலை வெளியிட்டு விளம்பரமும் கொடுக்கிறது. இங்கு பிரச்சினையே இல்லை, அல்லது இது பிரச்சினையே அல்ல என்றே இந்தத் தரப்புகள் சொல்லவருவதாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மௌனம் எல்லாவற்றையுமே தீக்கிரையாக்கிவிடும் என்பதைத்தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.