கவிதையுலகில் ஒரு சவரக்காரனின் கலகம்

தமிழ்மணி

துதான் கவிதைக்கான மொழி என்கிற விதிகளின்றி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சொல்லப்படும் கற்பிதங்களை உடைத்து சிலர் தங்களுக்கான உலகினைக் கவிதையில் கொண்டுவருகிறார்கள். அந்த வகையில் இ.எம்.எஸ்.கலைவாணனின் ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ தொகுப்பைக் குறிப்பிடத்தகுந்த இடத்தில் நாம் கொள்ளலாம். நமது புழங்கு மொழியில் மயிர் என்பதை அவச் சொல்லாகவும், துச்சமெனக் கருதும் விடயங்களுக்கு ஒப்பாகவும் நாம் உருவகித்துக்கொள்கிறோம்.

‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’ – குறள் 969.

நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரையென்று பேசும்படிக்கு, மயிர் இழந்தால் மானம் இழந்ததாக அர்த்தப்பாடு என்று வள்ளுவம் இட்ட வழியை வேறுமாதியாகப் புரிந்துகொண்டு தங்களின் சாதியப் பெருமிதங்களைத் தோள்பட்டையில் தூக்கி அலைகிறார்கள் சாதியவாதிகள். சமூகத்தில் இப்படி ஓரிடம் இருக்க, மறுபுறத்தில் மயிரை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்கிற சூழ்நிலைக் காரணியால் ஏற்றத்தாழ்விற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் நாவிதக் குடிகள். அவர்களின் அசல் வெக்கையைக் கலைவாணனின் இத்தொகுப்பு கடத்துகிறது.

படிமம், குறியீடு, தத்துவார்த்தம், ஆன்மீகம் என்கிற எவ்வித கவிதைச் சடங்குகளும் இல்லாமல், எடுத்துக்கொண்ட களத்தினை நேரடியான தன்மையில் சொல்லியிருக்கிறார் கலைவாணன். எடுத்துக்கொண்ட பாடுபொருளில் கழிவிறக்கம் கோராமல், தான் சொல்ல நினைத்ததைச் சரியான கூறல் முறையில் வாசகர்களுக்குக் கடத்தியிருக்கிறார். இக்கவிதைகளில் சுயசாதிக்குள் நடக்கும் முரண், இடைநிலைச் சாதிகளின் நாவிதர்கள் குறித்தான பார்வை, இடைநிலைச் சாதிகள் மீதான விமர்சனமென்று கலவையான அவதானிப்புகள் இத்தொகுப்பில் நிறைந்திருக்கின்றன. தொடக்கத்திலேயே நாவிதனென்றால் யாரெனும் பிம்பத்தை முன்மொழிகிறார் கலை.

பண்டிதன்
முண்டிதன்
இங்கிதன்
சங்கிதன்
நால்விதன் தெரிந்தவனே
நாவிதன்
வேறு எவனுக்கும்
இல்லை இவை.

பிரசவத்தில் தொடங்கி, கல்யாணம் கருமாதி வரையிலும் நாவிதர்களின் தேவையானது இன்றியமையாததாக இருக்கிறது. இப்படிப் பல தொழில்களைக் கைவசம் வைத்திருக்கும் நாவிதர்கள், சமூகத்தில் அனைவரோடும் சமநிலையில்தானே இருந்திருக்க வேண்டும்! மாறாய், பணிவிடைகளைச் செய்யும் வேலையாளாகவே இச்சமூகம் வைத்திருக்கிறது என்பதுதான் சாதியத்தின் உட்கூறு.

முன்சொன்னதுபோல், இக்கவிதைகளில் இடைநிலைச் சாதிகளை விமர்சனம் செய்யும் இடத்தினையும் சுயசாதிக்குள் இருக்கும் சிக்கலினையும் சரிவரக் கையாண்டிருக்கிறார்.

தொட்டிலில் கிடக்கும் என்னை
சலூனில்
வேலை முடிந்து வந்த அப்பா
முத்தமிட்ட
கன்னப்பரப்பில்
இரண்டு மூன்று
வெள்ளை முடிகள்
ஒட்டியிருக்கின்றன
எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ.

(ப.20)

எங்க வகையாறாவிலேயே
நல்லா படிச்சு மார்க் எடுத்த
பிள்ளைக்குக் கொடுத்த
சவர சங்கத்து
உதவித் தொகையை
வேண்டாம்னுட்டான்
அவளுக்க அப்பன்
செட்டிக்குளம் சலூன் ரவி
ரூபாயில மயிரு மணக்கும்னு.

 (பக். 43,44)

Illustration : Negizhan

எந்தச் சாதிக்காரனின் அழுக்கு மயிரோ என்று பொதுச்சமூகத்தின் மீதான கோபத்தை அடித்துப் பேசும் இடத்தையும், நாவிதனின் ரூபாயில் மயிரு மணக்கும் என்று சுயசாதியைச் சேர்ந்தவரே ஒவ்வாமை கொள்கிற இடத்தையும் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். சுயசாதியே ஒவ்வாமை கொள்வதானது ஒருவகையான உளவியல் சிக்கலென்றே பார்க்கிறேன். பொருளாதார உயர்வினை நோக்கி நகர்பவர்களிடம் இந்தத் தன்மை இருக்கிறது அல்லது பிறரைப் போல தங்களை வெளிப்படுத்தும் தன்மை அத்தகைய ஒவ்வாமையினை ஏற்படுத்திவிடுகிறது. உதாரணத்திற்கு, தோட்டியின் மகன் நாவலில் முதன்மைப் பாத்திரம் தன் மகன் தோட்டியாக ஆகிவிடாமல், இடைநிலை மற்றும் உயர்வகுப்பினர் போல ஆக வேண்டும் என்றெண்ணி அதற்காகப் பல பிரயத்தனங்களில் ஈடுபடும். அதனால் சுயசாதி மனிதர்களை விலக்கி வைப்பதும், காரியத்திற்குப் பயன்படுத்துவதுமான செயலில் அப்பாத்திரம் இறங்கும். அதன் வழியாக மனித எதார்த்தத்தின் கீழ்மைகளை தகழி காட்சிப்படுத்தியிருப்பார். அதேபோன்ற கீழ்மைகளை கலைவாணனும் காண்பிக்கிறார். அப்படியென்றால் பிறரைப் போல துணிமணிகளும் கேளிக்கைகளும் கூடாதா என்றால் அவற்றில் எவ்விதத் தவறுமில்லை. அதற்கான காலமும் தேவையும் அறிந்து செய்வதே சாலப் பொருத்தம். இரண்டாவதாகக் குறிப்பிட்ட கவிதையின் வழியாக இன்னொரு கவிதை பிறக்கிறது. அது இடைநிலை சாதியினரின் அகச்சிக்கலாக விரிகிறது.

பைசாவுல ஒட்டியிருக்க முடிய
ஊதி தொடைச்சுக் கொடுத்தா தான்
பொரி கடலை தருவான்
இரணியலு இறக்கத்துல
கடை வச்சிருந்த
ஒத்தக் கண்ணு செட்டி.

(ப. 58)

பண்பாடு ரீதியாக மாற்றமடைவதையும் சுயத்தை இழப்பதையும் கவிதைகளில் பிரதானப்படுத்தியிருக்கிறார் கலை. குறிப்பாக, குலசாமி வழிபாடு குறித்தான விழிப்புணர்வு நாவிதர்களிடம் படிப்படியாகக் குறைந்துவிட்டது என்பதை அம்மை கும்பிடுது தாணுமாலையனை கவிதையில் விளக்கியிருப்பார். அம்மா தாணுமாலையான், அக்கா முருகன், தங்கை காமாட்சி, மகளின் புகுந்த வீட்டில் உண்ணி கண்ணன், சித்தப்பன்களெல்லாம் சபரிமலை கோஷ்டி, தனக்குக் கத்தியம்மன் மற்றும் கத்தி மாடன் என்பவர் “சொந்தக்காரனுக எல்லாவனுக்கிட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன் ஒருத்தனுக்கும் தெரியல குலசாமி யாருன்னு” என்று கவிதை முடிகிறது. இதேபோல ஆத்தங்கரை கோயிலு இராத்திரி உச்சகொடை எனத் தொடங்கும் கவிதையானது, கொடைக்குச் சாமி பார்க்கச் சென்ற சிறுவனின் கேள்வியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அக்கவிதை முடியுமிடமானது,

பஸ்மமும் செந்தூரமும்
நெத்தி நிறைய பூசி
வீட்டுக்கு வந்து
அம்மைய எழுப்பி கேட்டேன்
நம்ம சாமி யாரும்மா
என்னைக்குமா கொடை
எனக்கும் ஆடணும்னு
அம்மையும் சொல்லல
நானும் ஆடல.
(ப.62)

இதற்கு அடுத்த பக்கத்திலேயே முத்தாரம்மன் கோயிலு கொடைக்குப் போயிருந்தேன் எனத் தொடங்கும் கவிதையில் நாவிதச் சிறுவன் அருள் வந்து சாமியாடிவிடுவான். ‘காரியக்கமிட்டி சுந்தர் சொல்லிட்டுப் போறான், லே நாசுவப் பயல சாமி பீடத்துக்குக்கிட்ட விட்டுறாத’ என்று அக்கவிதை முடியும். முதல் கவிதையில் அம்மா தடுமாறுகிறாள். அவளுக்குத் தன் மகனிடத்தில் நமக்கான சாமி இல்லை என்பதைச் சொல்ல முடியவில்லை அல்லது தங்களுக்கான சாமிகள் இருந்தாலும் அது பற்றியான எந்தத் தெளிவும் அவளிடமில்லை. இரண்டாவது கவிதையில் சாமி வந்து ஆடும் நாவிதனை பீடத்திற்கு அருகில் விடக்கூடாது என்கிற சாதியக் குரூரம் தெளிவாக விளங்குகிறது. இதேபோலான சாதியத் தன்மையை நாஞ்சில் நாடனின் ‘கோமரம்’ சிறுகதையில் பார்க்கலாம். அக்கதையில் வரும் சாமியாடிக்கு யார் நெற்றியைத் தொட்டு விபூதி அடிக்க வேண்டும், யார் கையைத் தொடாமல் திருநீறு கொடுக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். சாமியாடினாலும் இன்னார் இன்ன சாதி என்கிற சுய உணர்வு கோமரத்தாடிக்கும் இருக்குமென்பதை நாஞ்சில் நாடன் சொல்லியிருப்பார்.

நாவிதக் குடிகளின் அசல் தன்மையை வெளிக்கொணர்வதானது தந்தையின் வழியாக இக்கவிதைகளில் நிகழ்வதை நம்மால் காண் முடியும். சுருங்கச்சொன்னால், இக்கவிதைகள் தந்தைமையின் பிரதியாக இருக்கின்றன. தன் தந்தையின் வாழ்க்கைப்பாடுகளைக் கவிதைகளாக முன்வைக்கிறார் கலை. அவரின் தந்தை நாவிதராக மட்டுமல்லாமல் நாடக இயக்குநராகவும், சிலம்பம், அடிமுறை, வர்மக் கலை தெரிந்தவராகவும் இருக்கிறார். இதனை மற்ற சாதியினருக்குப் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் திகழ்கிறார். இவ்வளவு கற்றறிந்திருந்தாலும், கற்றுக்கொடுக்கும் இடத்திலிருந்தாலும் சாதிய உளச்சிக்கல் மிகுந்து போயிருக்கும் பொதுச் சமூகத்திற்கு எப்போதும் அவர் நாவிதராகவே தெரிகிறார் (இப்படி எல்லாத்தையும் உருவிக் கொடுத்திட்டு அம்மணமா நிக்கிற எங்கப்பன் பேரு வெறும் நாசுவன்… என் பேரு வௌங்காதவன்).

மீறல் உறவுகளின் கதைகளையும் கவிதையின் வழியாக விவரிக்கிறார் கலை. ஒரு கவிதையில் குடும்பச் சண்டையினால் அப்பாவைப் பிரிந்திருக்கும் அம்மாவிற்கு கஸ்தூரியும் அவளது கணவர் செட்டியாரும் ஆறுதலாக இருக்கிறார்கள். ‘செட்டியார் சாயங்காலம் வந்து அதிகாலையில் போனார்… சாதாரண நாளிலும் வீட்டில் இட்லி சாம்பார் இடிசம்மந்தி ’ என்றயிடத்தில் செட்டியாருக்கும் அம்மாவுக்குமான உறவினைக் காட்டிக்கொடுக்கிறார். அதுபோல ‘வெஞ்சார மூட்டு விளக்குத் தலை நாயரு அப்பா எனும் நாசுவன் ஓடிப்போனதும்… இரணியல் பழனியாண்டி பிள்ளையுடன் இருபத்தாறு வருட வாழ்க்கையில் அம்மா பாதி செட்டிச்சியாகிருந்தாள்’ என்கிற கவிதையில் அம்மாவின் மீறல் உறவையும் வெளிக்காட்டுகிறார் கவிஞர். ஆனால், இக்கவிதையில் அப்பா எதற்காக ஓடிப்போனார் என்கிற விளக்கம் இல்லை. ஓடிப்போனவர் என்கிற தன்மை மட்டுமே இருக்கிறது. ஆனால், அம்மா வேறொருவருடன் உறவு வைத்திருப்பது அப்பட்டமாகப் புலப்படுகிறது. மீறல் உறவு சார்ந்த கவிதைகளைனைத்தும் அம்மாவினுடைய உலகிலிருந்து அல்லது பெண்களின் உலகிலிருந்து சொல்லப்படும் ஆணின் குரலாகவே ஒலிக்கின்றன. ஆண்களின் அல்லது அப்பாவின் மீறல் உறவு சார்ந்த உலகம் பெரிதாக இல்லை. மீறல் உறவு சார்ந்த கவிதைகளில் வரக்கூடிய ஆண்கள் இடைநிலைச் சமூகத்தவர்களாகவும் பெண்கள் நாவிதர் சமூகத்தவர்களாகவும் இருக்கிறார்கள். நாவித ஆண்களின் மீறல் உறவைக் குறித்துப் பேசாதது என்னளவில் முரணாகவே கருதுகிறேன்.

சுயத்தைக் கேள்விக்குட்படுத்தும்போது இருக்கின்ற தெளிவான அணுகல், சொந்த மக்களைக் கண்ணுறும் இடத்தில் சறுக்கவே செய்கிறது. அப்படியான பழமைவாதத்தினை கலையிடமும் பார்க்க முடிகிறது.

அக்குளும் அடி முடியும் வழித்த நாவிதக்குடி பெண்கள், தற்போது பியூட்டி பார்லரில் பிறவர்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை எள்ளல் தொனி நிறைந்த கவிதையாக கலைவாணன் படைத்திருக்கிறார். இதை அவருடைய சிக்கலாகவே பார்க்கிறேன். ஏன் நாவிதக் குடியில் பிறந்தவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்குச் செல்லக்கூடாதா என்கிற கேள்வி எழுகிறது. பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் மாறுபடுகையில் நாவிதர்களிடம் ஏற்பட்ட சிக்கலைச் சரியாக அமைத்த கவிஞர், அவர்களின் தனிப்பட்ட விருப்புகளின் மீதான ஒவ்வாமையைப் பறைசாற்றுவதாகவே இவ்விடத்தில் கொள்ள முடிகிறது. அதேபோல, பிச்சையெடுத்தாலும் பார்பர் ஷாப் வேலைக்குப் போகக் கூடாதுன்னு ஆரம்பிக்கும் கவிதையில் லாரி கிளீனராக இருக்கும் நாவிதன், நான் குளிச்ச பொறவு நீ குளில நாசுவ தாயிளின்னு சொல்லும் டிரைவரிடம் சுயமரியாதை இழந்தவனாகக் காட்சிப்படுத்துகிறார். அதன் இறுதி வரிகள், ‘அப்பதான் தோணிச்சு.. கௌரவமா அப்பாக்க வேலைக்கே.. போயிருக்கலாமோன்னு’ என்று முடிகிறது. அவப் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் கவிதைகளினூடே சுயமரியாதைக்காக மீண்டும் சொந்தத் தொழிலுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தம் இக்கவிதையில் தெரிகிறது. இதனை ஊடாட்ட மனநிலை என்றும் விளங்கிக்கொள்ளலாம். பல வேலைகள் தெரிந்தாலும் / செய்தாலும் நாவிதர்களுக்கான இடத்திலேயே வைத்து அணுகும் பொதுச்சமூகத்திடம் தன்னை நிரூபிப்பதைவிட நாவிதத் தொழிலே மேல் என்ற எண்ணத்தை இக்கவிதை கடத்த வருகிறது. கௌரவமான அப்பா வேலை என்று கவிஞர் குறிப்பிடுவதால்தான் இம்முடிவுக்கு வருகிறேன். ஏனென்றால், தொகுப்பு முழுக்கவும் ‘இந்தக் கௌரவமான’ தொழிலில் நாவிதன் படும் வாதைகளைப் பறைசாற்றிவிட்டு, அதிலிருந்து சற்று விலகி மீண்டும் அதே இடத்திற்குச் சென்று சேருவது கவிஞர் இதுவரை முன்வைத்த தரப்பிலிருந்து முரணாக இருக்கிறது.

தொடங்கிய இடத்திலேயே முடிக்கலாம் என்று நினைக்கிறேன். பண்டிதனாகவும், முண்டிதனாகவும், இங்கிதம் மற்றும் சங்கீதம் தெரிந்தவனாகவும் இருந்த நாவிதன் கால சுழற்சியில் நாவிதத் தொழில் மட்டும் புரிபவனாக ஆகிவிட்டான். பெரும்பாலான நாவிதர்கள் இன்றைக்கு சலூன் தொழிலினை மட்டும் செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் பல வேலைகளைக் கையில் வைத்திருந்தவர்களாகவும் அதனை முறைப்படி செய்த ஆசான்களாகவும் விளங்கியிருக்கிறார்கள். தற்போதையவர்கள் அதிலிருந்து முற்றிலும் விலகி அல்லது தங்களைத் தாங்களே சுய விலக்கம் செய்துகொண்டு, இருப்பது மட்டும் போதுமென்ற எண்ணத்தில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர். இதனாலேயே அவர்களை ஆசான், பண்டிதர் என்று அறிந்திருந்த பொதுச்சமூகமும் இன்றைக்கு முடிவெட்டத் தெரிந்த நாவிதன் என்கிற இடத்திலேயே நிறுத்தி வைத்திருக்கிறது.

ராஜ கொட்டாரத்தில்
தாத்தாவுக்க அப்பா
பார்ச்சன் பண்டிதர்
பண்டுவம் முண்டிதம்
இங்கிதம் சங்கீதம் கள்ளு
சுதந்திர தேதிகளில்
தாத்தா கோபாலன் வைத்தியர்
பண்டுவம் இங்கிதம்
முண்டிதம் சாராயம்
கொஞ்ச நாளைக்கு முன்ன
அப்பா சங்கரன் ஆசான்
சங்கீதம் முண்டிதம்
மாம்பட்டை
இப்போது
நான் நாசுவன் மட்டும்.

வாழ்வின் விளிம்புநிலையிலிருந்து புறப்பட்டுவரும் கவிதைகளுக்கென்று ஓர் அசல் காத்திரம் இருக்கிறது. அவர்களால்தான் சமூகப் பிரச்சினைகளைக் கலைக்குள் கொண்டுவந்து அதனை விவாதத்திற்கு எடுத்துச் செல்ல இயலும். இ.எம்.எஸ். கலைவாணனின் இத்தொகுப்பு இனவரைவியலுக்கான அத்தனை கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பொதுச்சமூகத்தின் மீதிருக்கும் விமர்சனங்களோடு, சொந்தச் சமூகத்திடம் இருக்கும் சிக்கலையும் முரணையும் முன்வைப்பதாலேயே ‘ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்’ யாரும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இருக்கிறது. .

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!