கல்லில் எழுதப்பட்டவை
அவள் தன் காதலனிடம் அடிக்கடி சொன்னவை
எப்படி இவ்வளவு கல்நெஞ்சக்காரனாய் இருக்க?
ஏன் கல்லு மாதிரி வாயைத் திறக்காமல் இருக்க?
அம்மா அவளிடம் சொன்னவை
என்ன சொன்னான்? ஏதாவது சொன்னானா?
கட்டிக்கொள்ள ஒப்புக்கொண்டானா?
எப்போதும் போல நழுவினானா?
கிணற்றின் அடியில் போட்ட கல்லைப் போல் இருந்தானா?
அப்பா அவளிடம் சொன்னவை
கஷ்டங்கள் தரும் மகளே, எனக்கு உன்னைப் பிடிக்கும்.
நீங்கள் இருவரும் காதலிப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது.
வயதானவன், என் பேச்சைக் கேள்:
உலகம் என்ன சொல்லும்?
அவர்கள் எறியும் கற்களை
உன்னால் எதிர்கொள்ள முடியுமா?
தன் காதலனிடம் சொன்னவை – பல ஆண்டுகள் கழித்து
இன்று உன்னை நிராகரிப்போர்
நாளை உன்னைச் சிலையாக வழிபடுவார்கள்
ஒவ்வொரு கிராமத்திலும் உன் சிலை இருக்கும்
பிள்ளைகளுக்கு உன் பெயரைச் சூட்டுவார்கள்.
அவர்கள் கதை தொடங்கும் முன்,
முன்னொரு காலத்தில் அவன் சொன்னவை
துளி நீரும் இல்லாமல்
வெயிலில் காயும் பாறையில்
ஒரு துணிச்சலான விதை தனிமையாக வளரும்
தன் குட்டி இலைகளை நீட்டும்
வேர்விடும். அசையாமல் இருப்பதும்
வழிவிடாமல் மறுப்பதும் பாறையின் இயல்பு.
ஆனால்,
இத்தனை மென்மை
இத்தனை நம்பிக்கையின் முன்
பாறை வழிவிடுகிறது.
அவள் தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் எழுதியது
31 ஆகஸ்ட் 2010
காதலிக்கக் கற்றுக் கொடுத்தவன்
நெஞ்சைக் கல்லாக மாற்றிக்கொள்ள
கற்றுக் கொடுக்கவில்லையே
இதுதான் காதலின் இயல்பு
இதுதான் காதல்.
m
நியோலிபரலிசத்தின் ஈர்ப்பு
உண்மையிலே தலைகீழாகிப் போன உலகில் உண்மையென்பது ஒரு கணப் பொய்.
– கய் தெபோர்ட்.
கவியென்று சொல்லிக்கொள்கிறோம்; நம் சொற்கள் ஆயுதம் என்கிறோம்; ஒடுக்குவோருக்கு எதிராக என்கிறோம்; உண்மையைக் கடத்தும் கடத்தல்காரர்கள் என நெஞ்சு நிமிர்த்தி நடக்கிறோம்.
நியோலிபரலிசம் ஒரு கவிதையில் உட்காரும் சொல்லல்ல என்று நகங்களுக்குச் சிவப்பும் கண்ணுக்கு மையும் பூசியபடிச் சொல்கிறேன். முதல் முத்தத்தை இமைகளில் இடும் என் காதலனுக்குக் காத்திருக்கிறேன்.
காதல் கோடி கவிதைகளை உண்டாக்குகிறது. அலைபாயும் கவிதையில், என் காதலன் அடிக்கடி நுழைந்துவிடுகிறான், முதலில் கவிதையில், பின் என் கைகளுக்குள், என்னடி செல்லம் என்கிறான்.
நியோலிபரலிசத்துக்கு நன்றாய் கதை சுற்றத் தெரியும். நான் சொன்னேன்: தொழிலாளர்கள் அடிக்கூலிப் பட்டறைகளுக்குப் போகையில்: தொழிற்சாலை சூழல்கள் முன்னேறியிருக்கின்றன. தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாய் வெளியேறும்போது: சமூகம் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறது.
கதை சொல்லியிடமே கதை சுற்றுவது எப்படி என்று கேட்க விரும்பினேன், கேட்கவில்லை. எல்லாச் சொற்களும் அழிந்ததுபோல எனை முத்தமிட்டான் – காதல் செய்து, இருக்கும் மொழிக்கு இன்னொரு பிறப்பளிக்க வைத்தான்.
பல நாட்கள் கழித்து, விட்ட இடத்தில் தொடர்ந்தோம் அவர்கள் மொழியை அழுகும் பிணமாக்கிவிட்டனர் என்றான். அந்தச் சொற்களின் கூரிய பற்கள் கண்டு முகஞ்சுளித்தேன். நியோலிபரலிசம் ஒரு கவிதையில் உட்கார்ந்துவிட்டது.
m
Illustration : Mahalaxmi
ஒரு கவி கவிச்செயலின் எல்லைகளை உணர்கிறாள்
ஒரு நாட்டை இழந்தபின் மட்டுமே பிறக்குமொரு பாடலைப் பாடுகிறேன்.
– ஜாய் ஹர்ஜோ
[அவசரம்]
இதைக் கவிதையில் இருத்த முடியாது.
இது அரசியல் துண்டுப் பிரசுரம்.
[ஆபாசம்]
இது வெற்றுக் காகிதமாகவே இருந்திருக்க வேண்டும்.
[ரத்தம் உறையவைக்கும்]
இது நம் தெருக்களில் கோஷமாய் ஒலிக்க வேண்டும்.
[அவமானம்]
இது இன அழிப்பு. நம்மை ஒதுக்குவோரை ஒதுக்குவோமா?
[பயம்]
இது ஹெச்.ஆர்.டபிள்யூ அம்னெஸ்டியின் அறிக்கையாக இருக்க வேண்டும்.
[மனமுடைவு]
இது ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆவணப்படமாகியிருக்க வேண்டும்.
[தொந்தரவு]
இது நியூயார்க் டைம்ஸின் நீண்ட கட்டுரைகளில் ஒன்றாகியிருக்க வேண்டும்.
[என்றைக்கும் துன்புறுத்துவது]
நம்மை வரலாறு மன்னிக்காது.
வீடு நோக்கி அவர்கள் மேற்கொண்ட நீண்ட பயணத்தின் கதை நம் வருங்காலச் சந்ததியினருக்குச் சொல்ல வேண்டியது.
[ஒடுக்குமுறை]
நம் அரசியலாளர்கள் எப்போது அமைதியைக் கலைப்பார்கள்?
[மனச்சோர்வு]
இந்துத்துவ ஃபாசிசவாதிகளுக்கு எதிராய் முற்போக்கினர் எப்போது ஒன்றிணைவர்?
[ஆத்திரம்]
பெண்ணுடல்களை அரசால் எந்த எதிர்வினைகளும் இன்றிக் கட்டுப்படுத்த முடிவது எவ்வாறு?
[அழிவு]
என்னவொரு தியாகம்!
புரட்சி எப்போது வரும்?
[எச்சரிக்கை]
இதற்கான விலை எப்போதும் ரத்தம்தான்.
வெறுப்பின் காலத்தின் கவிதையால் என்ன பயன்?
எப்போதும் சொல்பவைதான்: உதவி கேட்டழும் குரல்,
சாட்சி, வெறுமையில் ஒலிக்கும் அலறல்
ரத்த ஆறு ஓடும் காலத்தில் கவியால் என்ன பயன்?
சொல்லுங்கள் ப்ரியமானவர்களே. அவள்தான் ஒப்பாரி வைப்பவளா?
மக்களின் ஆத்திரக் கணங்குகளைப் பாதுகாப்பவளா?
உடைந்த உங்கள் இதயங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியா?
இல்லை, தான் இன்னும் சாகவில்லை என்று காட்டுவதற்காகப் பேசுபவளா?
m
ஏழு நிலைகள்
எனக்கு: அவனை இழக்காதே. உன்னை இழக்காதே. இழக்காதே.
காதலனுக்கு: நினைவில் வை. விரைவில் எதற்கும் பொருளில்லை.
வாசகர்களுக்கு: இந்தக் கனவை வைத்துக்கொள். தலைகீழாக்கு.
ஹப். உன்ஸ். இஷ்க். அகிதாத். இபாதத். ஜுனூன். மௌத்.
இவை வேறொரு மொழியில் காதலின் ஏழு நிலைகள். ஆனால், அரபியின் கவிதை வரைமுறைகள் தமிழ் ஆன்மாக்களை வைத்தெழுதியது போல என் நிலத்தின் சில கறுப்பு ஆண்கள் வாழ்ந்தனர். சட்டென்று சிரிக்கக்கூடிய, நிறுத்தாமல் பேசும் பெண்ணின் கண்களை அசையாமல் பார்க்கும் அமைதியான ஆணிடம்தான் எப்போதும் தொடங்கும். ஈர்ப்பு மோகமாகி விரைவில் காதலாகும். அது சினிமாக்களில், சமூகம் தன் சாதி வரையறைகளுடன் இடையூறு செய்யும்: அவளைத் தனிமைப்படுத்தி அவர்களைப் பிரிக்கும். இரு ஆண்டுகளும் இரண்டு கோடி முத்தங்களும் பறிபோனவர்களின் ஏக்கம் வழிபாடாய், பிடிவாதமாய், பக்தியாய் மாறும். காதலர் போராடுவர். ஓடிப்போவார்கள். திருமணம் செய்வார்கள். முயல்களைப் போல் வாழ்வார்கள்: அழகாய், மென்மையாய், வெளியே வராமல், எப்போதும் காதல் செய்தபடி. சீக்கிரமே கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுவர். எதிர்த்து நிற்க தைரியம் கொண்டவர்கள். ஆனால் சாவார்கள். இந்தக் கனவை வைத்துக்கொள். தலைகீழாக்கு.