பாறைவனம்

முத்துராசா குமார்

கிட்டத்தட்ட ஒருமாத காலம் வானத்தில் வாழ்ந்தது போலவும், மேகங்கள் மண்டையில் உரசுவதாகவும் உணர்ந்த சீலக்காரிக்கு இப்போதுதான் உயிர்வந்த மாதிரி இருக்கிறது. கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தவுடன் அவளின் வயிற்றுக்குள் வளைவுகளாகச் சுழன்ற குமட்டல் அடங்கியது. மஃப்லரையும், சொட்டரையும் அவசரமாக அவிழ்த்து சவ்காயித பைக்குள் திணித்தாள். ஐஸ்கட்டிக்குள்ளிலிருந்து உடைத்து வந்தவளாக முன்மதிய வெயிலில் கைகளை நீட்டி நின்றவளின் செம்பட்டை முடிகள் வெயிலுக்கு மின்னின. கட்டட வேலைக்கு வட்டாரத்தைத் தாண்டி எங்கேயும் போயிராத சீலக்காரிக்குக் கொடைக்கானல் உயரமும், குளிர்மணமும் சுத்தமாய்ச் சேரவில்லை. தனது மகளைத் திட்டிக்கொண்டும், ஒத்தப் பேரனை நினைத்துக்கொண்டும் சாந்துத்தட்டை, சரளைகளைச் சுமந்தாள்.

ஆட்களை இறக்கிவிட்டவுடன் முதலாளியின் வண்டி மறுபடியும் மலையேறியது. வேலையாட்கள் பேருந்து நிலையத்தில் டீயைக் குடித்துவிட்டு அவரவர் சொந்த ஊருக்குக் கிளம்பினர். பேக்கரியில் பேரனுக்குத் தின்பண்டங்கள் வாங்கியவள் ஓடிப்போய்ப் பேருந்தில் இடம் பிடிப்பதற்குள் இருக்கைகள் நிரம்பின. கடைசி முகூர்த்தநாள் என்பதால் எங்கும் நெரிசலாய் இருந்தது. அடுத்த வண்டியில் மல்லுக்கட்டியாவது இடம் பிடித்துவிடத் தயாராய் இருந்தாள். கட்டணக் கழிப்பறைக்கு அய்யறவுப் பட்டுக்கொண்டு ஊரில் மூத்திரம் போய் கொள்ளலாமென முடிவெடுத்தவளுக்கு ரொம்ப நேரமானதால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காசு வாங்குபவரிடம் சில்லரையைத் தந்துவிட்டுப் பையைப் பத்திரமாகப் பார்க்கச் சொன்னாள். அந்தாளுக்குப் பின்னால் ஒட்டியிருந்த போஸ்டரின் முகம் அவளைச் சற்றுச் சுதாரிக்க வைத்தது. அதைப் பெரிதாய் கண்டுகொள்ளாமல் மூச்சை இழுத்துப்பிடித்து உள்ளே நுழைந்தவள், எல்லாம் முடித்துவிட்டு வெளியில் வந்துதான் மூச்சு விட்டாள். நடைமேடை இரும்புச்சேரில் உட்கார்ந்தவள், ஏதேச்சையாக அவளுக்கு இடதுபுறத்தில் பார்த்தாள். மூலம், பௌத்திரம் போஸ்டர்களுக்கு நடுவிலிருந்த அதே போஸ்டரின் முகம் அவளை லேசாய் கவனம் குவியச் செய்தது. கிழிந்திருந்த போஸ்டரில் எதுவும் முழுதாய்த் தெரியவில்லை. பக்கத்துத் தூணொன்றில் அந்த போஸ்டர் மட்டும் தனியே இருந்தது. கீழே கிடந்த காகிதத்தை எடுத்து போஸ்டரிலிருந்த எச்சில் கறையினை நொட்டாங்கையால் துடைத்தாள். துலக்கமாகிய அந்த முகத்தைப் பார்த்தவுடன் சீலக்காரியின் உடலுக்குள் பதற்றம் பிரட்டியது.

அக்கம் பக்கத்திலிருந்தவர்களை நோட்டமிட்டுக் கல்லூரி மாணவி ஒருத்தியிடம் அவசரமாய் போனாள். ‘ஏத்தா… அந்த நோட்டிசுல என்ன போட்டுருக்குன்னு செத்த படிச்சு சொல்றியாத்தா…’ நாவு பின்ன கேட்டாள். ‘அடையாளம் தெரியாத பிணம். நிறம் – மாநிறம் / வயது – தோராயமாக 40 / உயரம் – 5 1/2 அடி / ஒல்லியான உடல், ஏறு நெத்தி சுருட்டை முடி, தாடி / கருப்பு முழுக்கைச் சட்டை, நீலநிற கைலி / நெஞ்சில் பஞ்சு என்ற பெயர் பச்சைக்குத்தி இருக்கிறது’. இவற்றையெல்லாம் அந்த மாணவி வாசித்து முடிக்கவும் சீலக்காரிக்கு உள்ளங்கையெல்லாம் வியர்க்கவும் சரியாக இருந்தது. மாணவிக்கான பேருந்து வந்து நின்றது.

‘போன மாசம் இங்க பஸ் ஸ்டாண்டுக்குள்ளதான் இவரு செத்து கிடந்தாராம். எதாவது தகவல் வேணும்னா நோட்டிசுல இருக்குற போலீஸ் ஸ்டேஷன் நம்பருக்கு போன் பண்ணி கேளுங்க’ கடகடவெனச் சொல்லிவிட்டுப் பேருந்தில் இடம்பிடிக்க ஓடினாள்.

சீலக்காரிக்குத் தலை கிறக்கமாகி அப்படியே குத்த வைத்தாள். போஸ்டரிலிருந்த முகமும், அங்க அடையாளங்களும் சீலக்காரியின் உடன்பிறந்த தம்பி ராசாங்கத்தினுடையது. தனது ஒரே மகளான பஞ்சவர்ணத்தை ராசாங்கத்திற்குத்தான் கட்டி வைத்தாள்.

m

பழந்தொன்மையான பாறைவனம். அதன் அடிவாரத்திலிருக்கும் அரிட்டாபட்டியில் வாக்கப்பட்டிருந்த சீலக்காரி, மலையின் பின்புற அடிவாரத்திலுள்ள மாங்குளத்தில் பிறந்தவள். பஞ்சவர்ணம் கொஞ்சம் வளர்ந்த பிறகு இரவு எவ்வளவு நேரம் முழித்திருந்தாலும், அதிகாலையில் சீக்கிரமே எந்திரிக்க வேண்டும். அது புயல் காலமானாலும். அப்போதுதான் மலையடிவாரங்களில் ஆண்களில் நடமாட்டம் இருக்காது. சற்று நிம்மதியாகக் காலைக்கடன் போகமுடியும். ஆண்களின் சத்தத்துக்கு எந்திரிக்கையில், பூச்சிவட்டைகளுக்குப் பயந்து உட்கார்ந்தபடியே அடிக்கடி பின்னால் பார்க்கையில், போய்விட்டு வீட்டுக்குக் கழுவ நடந்து வருகையில் ‘என்ன பொழப்பு ச்சை…’ என பஞ்சவர்ணத்துக்குக் கடும் எரிச்சலாக இருக்கும். அரசு மானியத்தில் வீட்டோரத்தில் கட்டிய கழிப்பறை பீங்கான் மீது, போதையில் உடைகல்லைப் போட்டுடைத்தான் ராசாங்கம்.

‘அந்த பாத்ரூம கட்டச் சொல்லி நான் அனத்தலைனா எங்காத்தா அதையும் கட்டியிருக்க மாட்டா. அதுல ஒருதடவ கூட நான் போகலடி. சிமிண்ட்டு பூச்சு காயிறதுக்குள்ள சில்லு சில்லா நொறுக்கிப்புட்டியான் எங்க மாமன். அவன மாமான்னு சொல்றப்பா எனக்கு அரச்சு அப்புனாப்ள இருக்கு. கக்கூசு ஒடஞ்சத பார்த்தப்ப அவன் மூஞ்சிய தரையில வச்சு தேய்க்கணும் போல இருந்துச்சு. அந்தக் குடிகாரக் கெடமாடு எங்குட்டனாலும் பேளும்… இனி எங்காத்தா புது பீங்கான் என்னிக்கு வாங்க… ஹூம்…’ வகுப்பில் பிள்ளைகளிடம் பேசி நொந்துகொண்டாள் பஞ்சவர்ணம்.

ஓரளவு நல்ல துணிமணி, என்றைக்காவது ஆசையாய்க் கறி கேட்டால் கூட தன்மீது எரிந்துவிழும் அம்மாவின் சிடுசிடுப்பை கொஞ்சநேரத்தில் கடந்துபோகப் பழக்கப்பட்டிருந்தாள்

பஞ்சவர்ணம். ஆனால், பதினோராம் வகுப்பின் பாதியிலேயே படிப்பு நிறுத்தப்பட்டு ராசாங்கத்தோடு திருமண பேச்சு முடிவான அன்று அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ‘வேணாம்மா…’ என பஞ்சவர்ணம் மன்றாடியும் சீலக்காரி கேட்கவில்லை. மலையுச்சியிலிருக்கும் பாறைக்குழிக்குச் சென்று நீண்ட நேரமாக அழுதாள். உடன் படிக்கும் பிள்ளைகள் எவ்வளவோ தேற்றிப் பார்த்தும் அவளின் பயத்தையும், அழுகையையும் போக்க இயலவில்லை. அவர்கள் வீட்டுக்குப் போனபிறகு பாறைக்குழியையே பார்த்துக்கொண்டிருந்தாள். கண்ணீர் நின்றது. குழியின் தண்ணீரையள்ளி கன்னங்களில் படிந்திருந்த உப்பு பக்கினைக் கழுவினாள்.

m

சுடர்விடும் மாவிளக்கின் உச்சிப்பள்ளம் போலிருக்கும் இந்தப் பாறைக்குழிதான் சிறுவயதில் பஞ்சவர்ணத்துக்கு விளையாட்டுச் சாமான். தாம்பால அளவில், ஆழமற்றிருக்கும் அந்தக் குழியை மீன்கள் வளர்க்கும் பாறைத் தொட்டியாகத்தான் பார்ப்பாள். அக்குழியும் அதில் வாழும் மீன்களும், தவளைகளும் அவளுக்கு எப்போதுமே அதிசயம்தான். மழையும், பஞ்சவர்ணமும் பாறைக்குழியை வறளவிட மாட்டார்கள். மழைக்காலத்தில் நிரம்பியிருக்கும் பச்சைநீர் வெம்மையில் படிப்படியாக வற்றுகையில் ஊருணித் தண்ணீரை குடத்தில் சுமந்துவந்து ஊற்றுவாள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்து அம்மா அடித்தால் குழியருகே வந்து படுத்துக்கொள்வாள். குழியின் பாசி வாடையை நுகர்ந்தபடி வீட்டுப்பாடம் செய்துவிட்டு, நிலவு வந்தபிறகுதான் கீழே இறங்குவாள். வாலை நிமிர்த்தக்கூட சத்தில்லாத அனாதை நாய்கள் குழியில் தண்ணீர் நக்குவதை, பறவைகள் குளிப்பதை குகையிலிருந்து ஒளிந்து பார்த்து சந்தோசமாவாள். சோத்துத்தட்டுடன் மலையேறி குழிக்குள்ளிருக்கும் உயிரிகளுடன் பேசியும், அவைகளுக்கு இரையிட்டும் சாப்பிடுவாள். நீரில் அவள் துப்பும் காறியினை காலிவயிறு மீன்களும், தவளைகளும் கொறிக்கும் நுணுக்கங்களை விலங்குபோல மண்டியிட்டு வேடிக்கை பார்ப்பதில் அவளுக்குப் பெருஞ்சந்தோசம்.

வண்டி, வாகனங்கள் அதிகரித்தவுடன் மலைப்பாதையில் ஆட்களின் புழக்கம் குறைந்தது. நடந்து நடந்து பாதங்கள் உருவாக்கிய பாதைகள் மறைந்தன.

m

அகன்ற நெத்தியுடன் பஞ்சவர்ணத்திற்கு மகன் பிறந்தான். சிலசமயம் மகனைத் தொட்டிலில் போட்டுவிட்டுக் குழிக்கு வருபவள் தவளைகளின் சவ்வுக்கால்களையும், நீர்ப்பரப்பில் பிளந்து மூடும் மீன்களின் வாயினையும் ஏதோவொரு யோசனையில் நோக்கியபடி இருப்பாள். மகன் கொஞ்சம் காலூன்றி நடக்கத் தொடங்கியவுடன் பாறைக்குழிக்குக் கூட்டி வந்து விளையாட விட்டாள். மலைக்காத்துக்குச் சிறுசெடிபோல அசைவானவன். மகனின் பிஞ்சுக்கால்களைத் குழி தண்ணீருக்குள் முக்குகையில் மீன்குஞ்சுகள் அவனின் பாதங்களைத் தேடிக் கும்பலாக வரும். மீன்கடிகளுக்குக் கைகள் அசைத்து அவன் சிரிப்பதை அவைகளுடன் பேசுகிறானென நினைப்பாள். தினமும் ராசாங்கம் தந்த புண்களுக்கு இந்தச் சித்திரம் அவளுக்கு ஒத்தடமாய் இருந்தது.

‘எப்டிமா இந்தக் குழிக்குள்ள இவ்ளோ மீனுங்க வந்துச்சு. வானத்துலயிருந்து மழையோட மழையா விழுந்திருக்குமோ… இல்ல மலையேறி வந்து யாராவது விட்டுருப்பாங்களோ’ விவரம் வந்த வயதில் ஆச்சரியமாய்க் கேட்ட மகனிடம், ‘கொக்குக, பச்சிக கடவே எரத் தேடிட்டுப் பறந்து வருங்கள்ல. நம்ம மலையத் தாண்டுறப்போ அதுகளுக்குத் தண்ணி தவிச்சா இந்தக் குழிலதான் எறங்கி தண்ணி குடிக்குங்க. அப்போ அதுங்க காலுல ஒட்டியிருக்கிற மீன்முட்டைங்க இந்தத் தண்ணிக்குள்ள முங்கும். கொஞ்ச நாள்ல அதுங்க பூத்து மீனாயிடுங்க’ சிறுவயதில் சாவடி கிழவி தனக்குச் சொன்ன கதையை அப்படியே மகனிடம் சொன்னாள்.

குடித்துக் குடித்துப் பச்சைநிறத்தில் அழுகியிருந்த ராசாங்கத்தின் குடல் பாகங்களைப் பெரிய பேசனில் வைத்து சீலக்காரிக்கும் பஞ்சவர்ணத்துக்கும் காட்டி விளக்கினார் தனியார் மருத்துவர். அந்த மருத்துவமனைக்கும் ஆப்ரேசனுக்கும் கொடுத்த காசுக்காகக் கடைசியாக இருந்த ஒரு குண்டு நிலமும் கையைவிட்டுப் போனது. ஆப்ரேசன் முடிந்து கொஞ்சநாள் அடங்கியிருந்தவனுக்குத் திரும்பவும் குடி கிறுக்கேறியது. ‘ஆஸ்பத்திரில வச்சு பார்க்கச் சொல்லி நானா கேட்டேன்… அப்படியே விட வேண்டியதுதான…’ தள்ளாடும் போதையில் அழும்பாகப் பேசினான் ராசாங்கம். ‘மகன் வந்தும் திருந்தாம இருக்கியேடா…’ ராசாங்கத்தைத் தெருவில் வைத்து வௌக்கமாத்தால் அடித்தாள் சீலக்காரி. மகனை இடுப்பில் வைத்திருந்த பஞ்சவர்ணம் தலையில் சீமெண்ணையை ஊத்திக்கொண்டு கொளுத்திக்கொள்வதாக மிரட்டிப் பார்த்தாள். ‘வேலவெட்டிக்குப் போய்க்கிட்டாவது குடிடா…’ நண்பர்கள் எடுத்துச் சொல்லியும், கோயிலில் கயிறுகள் கட்டியும் பலனில்லை. குடியை விடுவதற்கு எந்தக் கூறுமில்லாமல் அலைந்தான்.

கள்ளழகர் திருவிழா அன்று பஞ்சவர்ணம் வீட்டிலேயே பாட்டில்களை வாங்கி வைத்தாள். சுயநினைவின்றி வாந்தி வருமளவுக்கு ராசாங்கம் குடித்து மயங்கியவுடன்தான் பஞ்சவர்ணம் ஆட்களைக் கூட்டிவந்தாள். அழகர் கோயிலிலுள்ள குடியாஸ்பத்திரி ஊழியர்கள் ராசாங்கத்தை வண்டியில் தூக்கிப்போட்டுப் போகையில் மகனை விளையாட அனுப்பியிருந்தாள். சிலமாதங்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தான். பணம் கட்டப் போகையில் மட்டும் ராசாங்கத்தைத் தூரத்திலிருந்து பார்ப்பாள்.

‘இங்க கெடந்தா நான் அடி வாங்கியே செத்துப் போவேன் பஞ்சு. கெஞ்சிக் கேக்குறேன் என்னயக் கூட்டிட்டுப் போயிரு. மகேன் மேல ஆண. இனி நான் குடிக்கவே மாட்டேன். வெளியூர் பக்கம் வேலைக்குப் போயிறேன்… இப்பவே கூட்டிட்டிப் போயிரு பஞ்சு. வரவா… வரவா…’ பைத்தியம் பிடித்தவன் மாதிரி கத்துபவனிடம் எதுவும் பேசாமல் கிளம்பி விடுவாள்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பித்தவன் ஊருக்கும் வரவில்லை. வீட்டிற்கும் எட்டிப் பார்க்கவில்லை.

‘ஆளு வச்சு எந்தம்பிய கொன்னுப்புட்டாளே. வேணாம் வேணாம்னு சொன்னேன். கேட்டாளா…’ தம்பியிருக்கும் திசையைக் கண்டறியவும், அவன் வீடு திரும்ப வேண்டியும் ஜாதகம், கோடாங்கி குறிப் பார்த்து சாங்கியங்கள் செய்தாள் சீலக்காரி.

‘வெக்கபூள இல்லாம ஊர் ஊரா சோசியம் பார்க்கப் போறா பாரு’ அம்மாவைத் தூற்றினாள் பஞ்சவர்ணம்.

ராசாங்கத்தை மாட்டுத்தாவணியில் பார்த்ததாகவும், பெரியார் பேருந்து நிலையத்தில் கண்டதாகவும், பாண்டி கோயிலில் சுத்துவதாகவும் தெரிந்தவர்கள் சொன்னார்கள். வீட்டிலிருந்த காசு, பண்டபாத்திரங்களைத் திருடியும், கடன் வாங்கியும் குடித்த ராசாங்கம் டாஸ்மாக் வாசலிலும், போவோர் வருவோரிடமும் குடிக்காகப் பிச்சையெடுக்கத் தொடங்கினான்.

தம்பி திருந்தி, வீடு வர மந்திரித்த தகடு ஒன்றை மாங்குளம் வீட்டுக்கு எடுத்துவந்து தாழ்வாரத்தில் கட்டினாள் சீலக்காரி. தகடை அத்தெறிந்த பஞ்சவர்ணம், ‘ஓ வவுத்துல சனுச்சத தாண்டி வாழ்க்கையில நான் எந்தப் பாவமும் பண்ணலடி. குடிகாரப் பயன்னு தெரிஞ்சும் பெத்த மகள எவளாவது இவனுக்குலாம் கட்டி வப்பாளா’ அவமானமும், வாழ்வு சிதைந்த கோபத்திலும் அம்மாவைத் திட்டித் தொளித்தாள்.

‘போடி வாடின்னு ரப்பா பேசுன. எடுத்துக்கிட்டுச் சாத்திருவேன். ஒன்னய காலேசுல படிக்க வச்சு தொண்டூழியம் பார்க்க நா அத்தாத்தென்டி ஆளு இல்லடி. சல்லவாரியா இருக்கியான். கல்யாணமானா ஒழுக்கசலுக்கமா இருப்பியானு கட்டிவச்சேன். இப்புடி அழிமாந்திரமா போவியானு யாரு கண்டா. அவுசாரி மயன்னுகூட அவன வய்ய முடியல. எங்காத்தாள வஞ்சு என்னாகப் போது… எப்படியும் வருவியான்டி…’ சீலக்காரி புலம்ப மட்டுமே செய்தாள்.

Illustration : Mahalaxmi

‘அவன் வர்றதுக்குத்தான நான் இப்ப கெடயா கெடக்கேன். போடி போ… அவன் ஆளாக நாந்தான் கெடச்சேனா… என் வாழ்க்கையையும் மண்ணாக்குரோமேனு அவன் எங்க நெனைச்சுருப்பியான். நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டுல கல்யாணம் பண்ணியான்…’ பஞ்சவர்ணம் பொங்கினாள்.

மகளிடம் ஆறுதலாய் கூட சீலக்காரி நடந்து கொள்ளவில்லை. துளி குற்றவுணர்வு கொள்ளாத, இப்போதும் தன்னை நினைத்து வருத்தப்படாத அம்மாவை வெட்டுக்கட்டையில் வைத்துத் துண்டாக்க வேண்டுமென அவளின் துடிமனம் நினைத்தது. சீலக்காரியிடம் சுத்தமாகப் பேச்சை நிப்பாட்டிய பஞ்சவர்ணம் மகனுடன் மாங்குளத்திலேயே இருக்க ஆரம்பித்தாள். பைக்கிலோ, இலவச பஸ்ஸிலோ, ஷேராட்டோவிலோ ஏறி சீலக்காரியாகத்தான் மாங்குளம் போய் பேரனைப் பார்த்து வந்தாள். அப்போதும் அம்மாவிடம் அவள் எதுவும் பேசவில்லை. பேரனுடன் இருந்துவிட்டு சீலக்காரி கிளம்பிடுவாள்.

‘ஏம்மா.. இப்போலாம் அம்மாச்சி வீட்டுக்குக் கூப்பிட்டுப் போகவே மாட்ற. லீவுக்கு அம்மாச்சிட்ட போயி இருக்கேன்மா’ மகன் கேட்கும் போதெல்லாம் ‘அவட்ட போயி நீயும் தரிசா போனுமா. அமுக்கிட்ட இங்கேய கெட. போக கூடாதுன்னு எத்தன வாட்டி பொறுமையா சொன்னாலும் கேக்க மாட்டியா நீயி’ என அதட்டிவிடுவாள்.

உள்ளூர்ப் பள்ளியில் மகன் ஆறாவது போகையில்தான் காட்டன் கம்பெனிக்கு உட்கார்ந்து பார்க்கும் வேலைக்குப் போகத் தொடங்கினாள் பஞ்சவர்ணம். ஊரின் ஆலமரத்தினடியில் கம்பெனி வேன் வந்து பெண்களை ஏற்றிக்கொண்டு இறக்கிவிட்டுச் செல்லும். தீபாவளி, பொங்கலுக்கு அரிட்டாபட்டிக்கு வந்து சென்ற ராசாங்கத்தைப் பற்றி பஞ்சவர்ணத்திடம் யாராவது சொன்னால் பஞ்சவர்ணம் வெருட்சியாகிடுவாள், ‘அவன் பிச்சயெடுத்துக் குடிச்சிட்டு வருவியான். என்ன பெத்தவ அவனுக்குக் கறியாக்கி போடுவா. அவளலாம் மனுசியா…த்தூ’

‘பெத்தபுள்ளையும், கட்டுனவளையும் கூடவாடி பார்க்க வராம இருக்கியான்’ கம்பெனியில் கூட வேலைப் பார்க்கும் பெண்கள் கேட்கையில்,

‘நீ வேறக்கா நான் சின்னபுள்ளையில இருந்து அவன பார்க்குறேன். குடும்பம், குட்டிலாம் அவனுக்கு ஒத்து வராதுக்கா. தன்னால திரியுற நாயி அவன். இன்னியோட கடைசிஞ் இன்னியோட கடைசின்னு கொற வேசம் போட்டு எத்தன தடவ என்ன ஏச்சி காசு வாங்கிட்டுப் போயிருக்கியான். நெஞ்சுள்ள பச்ச மட்டும் குத்திட்டா குடும்பம் ஓடுமா. மேல வந்து வல்லு வல்லுனு விழுந்து பிள்ளையப் பெத்தயான். பெத்த மகனுக்குக் கோடில ஒரு குண்டித்துணி வாங்கிப் போட்டதில்ல அவன். பிள்ள பெறந்த அன்னிக்குப் பாக்க வந்தவுக அந்தப் பிஞ்சு கையில ரூவா கொடுத்தாக. அத எடுத்துட்டுப் போயி சாண்டு, தூமய குடிச்சியான். அவனுக்கெங்க பாசம் இருக்கப் போது. எங்க நானு வேற சாதி பயலுகள லவ்வு கிவ்வு பண்ணி ஓடிப்போயிருவேன்னு எங்காத்தாளுக்குப் பயம். அதவிட தம்பிய கட்ட எவளும் வரமாட்டான்னு தெரிஞ்சு போச்சு. அதான நக கூட போடல. பெத்த மகளவே பலி கொடுத்துட்டா. நெஞ்ச கல்லாக்கிட்டு, நப்பாசையில கட்டக்கடைசியா அவன ஆஸ்பத்திரில சேத்தேன். அதுவும் போச்சு. எம் மயனுக்காக மட்டுந்தான் இருக்கேன்கா. அவன் கொணம் அண்டாம மயன வளக்கணும் அம்புட்டுத்தான்’ ஈரக்கொலை வலிக்கப் பேசுவாள் பஞ்சவர்ணம்.

m

சீலக்காரியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து உசுப்பினர். கண்விழித்தவளைச் சுற்றி கூட்டம். ‘எந்த ஊருக்குமா போற நீயி. எதும் சாப்பிடுறியா’ ஆண்கள் சிலர் கேட்டனர். ‘இல்லை’ என்பது போல தலையாட்டினாள். ‘ஏம்மாஞ் இந்தம்மாவ செத்த தூக்கிவிடுங்க’ பெண்களைப் பார்த்துச் சொன்னார்கள். யாரும் வராததால் அவர்களே கையைப் பிடித்து தூக்கினர். சற்றுத் தெளிச்சியானவுடன் ஆரப்பாளையம் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமரவைத்துச் சென்றனர். தம்பியின் மரணத்தைப் பற்றி காவல்நிலையம் போய் தகவல் விசாரிக்க அவளுக்கு அவ்வளவு விவரமுமில்லை, தைரியமுமில்லை. பேருந்து நிலையத்தை விட்டு வண்டி வெளியேறுகையில் தம்பியை எரித்த சுடுகாட்டிலிருந்து கிளம்புவது போல சீலக்காரிக்குத் தோன்றியது. முதன்முதலாகப் பார்த்த ராசாங்கத்தின் சிசு முகத்திலிருந்து சிறிதுநேரத்திற்கு முன்பு பார்த்த ராசாங்கத்தின் நோய்முகம் வரைக்குமான நினைவுகள் அவளை என்னவோ படுத்தியது. எதை விடுவது எதை ஞாபகப்படுத்துவதென அயர்ச்சியாகி நெஞ்செலும்புக்குள் ஒப்பாரி வைத்தாள். ‘தம்பி இருக்கிறான், பஞ்சுக்குப் புருஷன் இருக்கிறான். வெறும் ஆளாவாவது மட்டும் இருக்கிறானே’ என்று தனக்குத் தானே வகுத்து வைத்திருந்த குருட்டு எண்ணங்கள் உடைந்து, ராசாங்கத்தின் உடல் இல்லை. உயிர் இல்லை, அவன் இனி இல்லவே இல்லை என்ற யதார்த்தம் அவளை உலுக்கியது.

‘மகளயும், பேரனையும் எப்படிப் பார்க்கப் போறேன். மக என்னைய கொன்றுவாளா. அதை மட்டுந்தான் அவ இன்னும் பண்ணல. உன் தம்பிக்கு மட்டும் கட்டி வைக்காதன்னு சொன்னவங்களப் பார்த்து எவ்ளோ சவடாலடிச்சுருக்கேன். அவுங்க துப்ப மாட்டாங்களா…’ பலவாறான சிந்தனைகள் அரிட்டாபட்டிக்குப் போய்ச்சேரும் வரை அவளுக்குள் ஓடியது. இருக்கையில் உட்கார முடியாமலும், இறங்க முடியாமலும் அலைக்கழிந்தாள். போனமாதம் வரை கூட மகளின் வாழ்வை பொசுக்கி, அசிங்கப்படுத்தினோமே என்ற குற்றவுணர்வு முதன்முதலாய் அவளுக்குள் தோன்றியது.

m

கடந்த மாதம் மதிய பொழுதொன்றில் மாங்குளத்தில் பிடித்த மழைக்காத்து இரவு எட்டு மணிக்கு மேல்தான் ஓய்ந்தது. இருட்டுத் தூறலில் செல்போன் டார்ச்சில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து முறிந்துகிடந்த மரங்களையும், கரண்டு கம்பங்களையும் பாதையிலிருந்து ஒதுக்கினர். கோழிகளும், நாய்களும், ஆடு, மாடுகளும் இயல்புக்கு வந்தவுடன்

பஞ்சவர்ணத்தின் மகன் கையைக் கட்டியபடி ஆலமரத்தின் அடியில் அம்மாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது தலையில் சொத்சொத்தென விழுந்த ஈர ஆலம்பழங்களை எடுத்து டவுசருக்குள் போட்டான். வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கியவுடன் வண்டியும் கிளம்பியது.

‘பெரிம்மா, அம்மாவ காணாம்‘

‘பஞ்சு முன்னாடி வண்டிக்கே வந்துட்டாளேடா. மழைக்கு யார் வீட்லயாவது உட்காந்திருப்பா. இருட்டுக்குள்ள திரியாம வீட்டுக்குப் போடா’ எனச் சொல்லிவிட்டு அந்தப் பெண் கிளம்பினாள்.

வீட்டுக்குப் போனவன் ஆலம்பழங்களைக் கண்ணாடி குடுவைக்குள் போட்டவுடன் அது நிறைந்தது. தேவையானளவு விதைகள் கிடைத்துவிட்டன. இனி பாறைக்குழியருகே ஆலமரத்தை வளர்த்து விடலாமென்று மகிழ்ச்சியானான். இதை பஞ்சவர்ணத்திடம் சொல்ல ஆசையுடன் காத்திருந்தான். இருட்டில் ரொம்ப நேரமாக அவனால் வீட்டுக்குள் தனியாக இருக்க முடியவில்லை. எழுந்து வெளியே நடந்து கல்லுத் திண்ணை வீட்டுக்குப் போனான்.

‘அத்தஞ் அம்மா இன்னும் வீட்டுக்கு வரலயேத்த’

‘என்னடா சொல்ற… எங்கயும் போறதா சொன்னாளா’

‘இல்லையேத்த’

‘ஒங்கம்மாச்சி வீட்டுக்கும் போயிருக்க மாட்டா… எங்க போயிருப்பா’ அவனை திண்ணையில் உட்கார வைத்து டீ கொடுத்தாள்.

பஞ்சவர்ணத்துக்கு போன் போட்டாள். நம்பர் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது. அவள் வந்த ஏழுமணி வண்டியின் டிரைவருக்கு போன் அடித்தாள். டீயைக் குடிக்காமல் என்ன தகவல் வருமென அவள் வாயைப் பார்த்தபடியிருந்தான்.

‘என் வண்டிலதாக்கா வந்துச்சு. மழையோட மழையா எறங்கி வீட்டுக்கு நடந்துச்சேக்கா’ என்றான் டிரைவர். மாங்குளம், பக்கத்து ஊரிலிருந்து கம்பெனிக்குச் செல்பவர்களிடமும் விசாரித்ததில், வேலை முடித்து பஞ்சவர்ணம் ஊருக்கு வந்துவிட்டதாக எல்லோரும் சொன்னார்கள். கடைசியாக சீலக்காரிக்குத் தகவல் சொல்லப்பட்டது.

அரிட்டாபட்டியிலிருந்து ஷேராட்டோவை எடுத்துக்கொண்டு அரக்கபரக்க மாங்குளத்துக்கு வந்தாள். ஆலமரத்தினடியில் ஆட்கள் சேரத்தொடங்கினர். சீலக்காரியும், ஊரும் டார்ச் லைட்டுகளை எடுத்துக்கொண்டு எல்லா இடத்திலும் தேடினார்கள். கம்மாய், சுடுகாடு, வயக்காடுகள் எனக் குழுவாய் பிரிந்து தேடியும் பஞ்சவர்ணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரமாக நேரமாக அவர்களின் எண்ணங்கள் அடுத்தகட்டத்திற்குப் போனது. ஊருணிக்குள் இறங்கி கூட பரம்படித்துவிட்டார்கள். ஆள் இல்லை. மகன் தேம்பியழுதான்.

‘பேசாம… டேசன்ல கம்ளைண்ட் கொடுத்துரலாமா..’ பெரியவர் சொன்னவுடன்தான், கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்கள் அதுவரை தங்களுக்குள்ளேயே வைத்திருந்த விசயத்தைப் பற்றி குசுகுசுத்தனர்.

‘என்னகடி.. மூடி மூடி பேசுறீங்க. என்னன்னு சொல்லித் தொலைங்கடி..’ சீலக்காரி அழுத்திக் கேட்டவுடன்தான், ஆளுக்கொரு கதையாக அவளிடம் சொல்லத் தொடங்கினர். மகனும் கவனமாய்க் கேட்டான்.

‘கம்பெனியில வேல பார்க்குற ஒருத்தன் பஞ்ச பார்க்குறதுமா, சிரிக்கிறதுமா இருந்தியாக்கா’

‘யாரி அவன்’

‘மேலூர்க்கார பய’

‘சரி…’

‘இங்க வாடா தம்பி வயசு ஒன்னா இருந்தாலும் பஞ்சுக்கு கல்யாணமாகி புள்ள இருக்கு. ரோட்டுல திரிஞ்சாலும் புருசன்னு ஒருத்தன் இருக்கியான். இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு அந்தப் பயட்ட பக்குவமா எடுத்துச் சொன்னோம்’

‘என்ன சொன்னியான் அவென்’

‘அவன் கேக்குற மாதிரி இல்ல. ஏலேய் போடா அந்தப் பக்கமுன்னு ஒம்மகளும் மூஞ்சில அடிச்ச மாறி சொல்லணும்ல. அவ எடம் கொடுக்கக்கண்டுதான அவென் திண்ணக்கமா இருக்கியான்’

அவர்கள் சொன்னவுடன் சீலக்காரி ஆங்காரியானாள்.

‘ஒருவேள மகன விட்டுட்டு அவனோட ஏதும் போயிட்டாளோ’ என்றாள் ஒருத்தி.

‘புள்ளயும் புருஷனும் இருக்கையிலயே அவ இன்னொரு புருஷனத் தேடுறாளா முண்ட. அவ பவுடரடிச்சு வண்டியேறி வேலைக்குப் போறப்பயே தெரியும். கோக்குமாக்குத்தனம் பண்ணப் போறான்னு’ தலையை அள்ளி முடிந்தாள் சீலக்காரி.

மேலூர்க்காரனின் நம்பரும் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது.

‘பலவட்ட… எந்தக் காட்டுப் பயலோடையே ஓடிபோயி இப்படித் துப்ப வச்சுப்புட்டாளே. ஏன்டி இவ்ளோ நடந்திருக்கு முன்னாடியே நீங்கலாம் சொல்லியிருந்தா அவ கால ஒடிச்சு வீட்டுல போட்டுருப்பேனே. போற வழில காரு வண்டிலதான் அடிபட்டுச் சாவா’ மகளுக்கு சாபம் விட்டாள் சீலக்காரி.

‘அந்தப்புள்ளயும் ஆண்டு அனுபவச்சிருச்சா என்ன? சின்னப்புள்ளதான. புடிச்சு போனா போட்டும். என்ன… மகனையும் கூட்டிப் போயிருக்கலாம். அழகுவத்த மகள… படிச்ச மகள… வெங்கப்பயலுக்குக் கட்டிக் கெடுத்துப்புட்டு அந்தப் புள்ளய வாயில வச்சு வண்டா கொடையிறா பாரு’ சாவடிக் கிழவி பஞ்சவர்ணத்துக்காகப் பேசினாள். கிழவியின் பேச்சு அந்தச் சலசலப்புக்குள் ஒடுங்கித்தான் கேட்டது.

மேலூர்க்காரனோடு பஞ்சவர்ணம் ஓடிவிட்டாளென ஊரே உறுதியாகச் சொன்னபிறகு, மகன் ஓங்கியழுதான். கூட்டத்துக்குள் அம்மாச்சியின் கையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன் மலையின் உச்சிக்குக் கண்ணீருடன் ஏறத் தொடங்கினான். மழைக்கு முழுதும் நனைந்திருத்த மலை, மகனின் செருப்பில்லாத கால்களை வழுக்கியது. பாறைகளில் ஆங்காங்கே முளைத்திருந்த கோரைகளைக் கைகளில் பிடிமானமாய்ப் பிடித்து தவங்காமல் மேலே ஏறினான். கைகளில் நசுங்கிய பூச்சிகளை, விளுவிளுவெனக் கால்களில் ஊரியவற்றைக் கண்டுகொள்ளாமல் முன்னேறினான். எந்த இடத்திலும் நிற்காமல், குளிர்ந்த காற்றிலும் வியர்த்து விறுவிறுக்க இருதயம் வேகமாகத் துடிக்க எட்டு வைத்தான். எதை நினைத்து மலையுச்சிக்கு வந்தானோ அது நடந்திருந்தது. குழி பக்கத்தில்தான் அம்மா நனைந்து உட்காந்திருந்தாள். பக்கத்தில் சாப்பாடுகூடை கவிழ்ந்துகிடந்தது. அவன்

பஞ்சவர்ணத்தைக் கட்டிக்கொண்ட பிறகுதான் அவளுக்குச் சுயநினைவு வந்தது.

‘ஏமா… வீட்டுக்கு வரல. என்னைய விட்டுட்டு எதுக்குமா இங்க வந்து உட்காந்திருக்க’ அழுதபடி கேட்டான். அவளும் மகனைக் கட்டிக்கொண்டு கலங்கினாள்.

‘சொல்லும்மா…’

அமைதியாக இருந்தாள்.

m

பஞ்சவர்ணதிற்கும் மேலூர்க்காரனை மிகவும் பிடித்திருந்தது. ஊர் என்ன சொல்வார்கள், மகன் என்ன சொல்வான் என்று மாதக்கணக்கில் தத்தளிப்பில் இருந்தவள், தனது ஒழுக்கத்தின் மீது அவ்வப்போது சந்தேகம் கொண்டாள். மகனை நினைக்காமல் சுயநலமாய் இருக்கிறோமோ என அடிக்கடி தன்னையே இகழ்ந்தாள். ஆனால், சீலக்காரியைப் பற்றி அவள் கடுகளவும் நினைக்கவில்லை. அம்மாவை நினைக்கவில்லையே என்று வருந்தவுமில்லை. சந்தேகம், தத்தளிப்புகளைத் தகர்த்துவிட்டு இன்று மாலை மேலூர்க்காரனிடம் போய் பேசினாள்.

‘இன்னிக்கு நீங்க வந்து என்கிட்ட சொல்லலைனாலும், நாளைக்கி நானே வந்து உங்கக்கிட்ட சொல்லியிருப்பேன். எனக்கும் பிடிச்சுருக்கு… எங்க வீட்டப் பத்திலாம் யோசிக்காதீங்க. அவுங்கட்டலாம் விஷயத்த கொண்டுபோனா ஒத்துக்கிறவா போறாங்க. கனவுலயும் நடக்காது… உங்களுக்குக் கல்யாணம் ஆகலைனாலும் அதத்தான் பண்ணுவாய்ங்க. அவுக வேற ஆளுக, நம்ம வேறன்னு ஒரே வார்த்தைல முடிச்சிருப்பாய்ங்க. என்ன… மருந்து வச்சுட்டா, இழுத்துட்டு ஓடிட்டான்னு உங்களத்தான் தூத்துவாய்ங்க. எனக்குத் தெரியுங்க உங்களப் பத்தி. உங்க பையன்ட்ட என்னப் பத்தி பேசணும்னு சொன்னீங்கள்ல… பேசிட்டு நாளைக்கு வந்து நல்ல தகவலா சொல்லுங்க… நம்ம மகனுக்கு என்னைய கண்டிப்பா பிடிக்கும்’ கம்பெனிக்கு வெளியில் வைத்து மேலூர்க்காரன் பஞ்சவர்ணத்திடம் தனது பதிலை மனப்பூர்வமாய்ச் சொன்னான். ‘நம்ம மகன்’ என்ற சொல் அவளுக்குப் பெரு நிம்மதியைக் கொடுத்தது. பாறைக்குழிக்குள் மீன்கள், தவளைகளோடு தானும் சேர்ந்து நீந்துவதாக உணர்வுவயப்பட்டாள்.

குழந்தைத் தொழிலாளியான மேலூர்க்காரன், கிடைத்த எல்லா வேலைகளுக்கும் போய்க்கொண்டே பள்ளிக்கும் போனவன் குடும்பத்தை அவன்தான் பார்த்துக் கொண்டான். ஐ.டி.ஐ முடித்துள்ளான். முழுக்கக் காப்பு காய்த்த அவனது வாழ்வில் எது வேண்டும், எது வேண்டாம் என்ற தெளிவு அவனுக்குத் தெரியும். பாக்கியத்தின் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்துதான் அவன் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தான்.

நடந்த எல்லாவற்றையும் எப்படி மகனிடம் புரியும்படி சொல்வது, எங்கிருந்து ஆரம்பிப்பதெனப் பலவாறாய் யோசித்த பஞ்சவர்ணம் இரவு வேனை விட்டு இறங்கியவுடன் மழையை எதிர்த்து அப்படியே பாறைக்குழிக்கு ஏறினாள். குழியில் தளும்பி வழியும் நீரோடு நீராய் ஒருக்களித்து படுத்திருந்தாள். தோலை மழை துளைத்தாலும் மலையை விட்டு இறங்கவே அவளுக்கு மனம் வரவில்லை. முழுக்க மகனைப் பற்றியே நினைத்தாள். எப்படியும் ஒத்துக்கொள்வான் என்று நம்பினாலும், அவனது பிள்ளை மனதையும், தனது முதிர்ந்த மனதையும் ஒப்பிட்டு அழுதாள்.

m

Illustration : shalini-karn

‘கேட்டுக்கிட்டே இருக்கேன்ல ஏம்மா வீட்டுக்கு வரல’

‘சொல்றேன்’ அவனது முகத்தைத் துடைத்து மடியில் உட்கார வைத்து முத்தமிட்டாள்.

மேலூர்காரனிடம் பேசிய அனைத்தையும் மகனிடம் பகிரப் போகையில்தான் சீலக்காரியும், ஊராரும் பாறைக்குழிக்கு வந்தனர். அவளைப் பேசவே விடவில்லை. பஞ்சவர்ணத்தின் தலைமுடியைப் பற்றி சரிவில் தரதரவென இழுத்தாள் சீலக்காரி. மழையில் துப்புரவாய் நனைந்து, அழுதழுது சக்தியிழந்திருந்த பஞ்சவர்ணத்தால் நிதானிக்க முடியவில்லை.

‘ஏண்டி… கள்ளத் தேவுடியா ஒனக்கு ஒம்போது புருஷன் கேக்குதோ. அவென் எங்கடி… எங்க ஒளிச்சு வச்சுருக்க… மலைக்கு வரச் சொன்னியா அவன… எந்தம்பி ஒன்னும் சாகலடி…’ பஞ்சவர்ணத்தின் தலை முடியை ஆவேசமாய் பிடித்திழுத்தாள். ஈரத்தலைக்கும் அதுக்கும் மண்டையோடு பிய்ந்து வருவது போல பஞ்சவர்ணத்துக்கு வலி உயிர் போனது. மகன் பஞ்சவர்ணத்தின் சேலையைப் பிடித்தபடியே அழுதான். வந்திருந்த ஆண்கள் பாறை மறைவுகளில், குகையில் மேலூர்க்காரனைத் தேடினார்கள்.

‘அடியே கொண்டுபுடாத வீட்டுக்குக் கூட்டிப் போயி விசாரி…’ சீலக்காரியைப் பெண்கள் சிலர் விலக்கினர். அவள் பிடியை விடுவதாயில்லை. பஞ்சவர்ணம் வலியில் முனக மட்டுமே செய்தாள். ஒருவழியாக சீலக்காரியை ஒதுக்கிவிட்டு பஞ்சவர்ணத்தை கைத்தாங்கலாகத் தூக்கி வீட்டுக்கு வந்தனர். வீட்டு வாசலில் எல்லோரும் திரண்டிருந்தனர். மாரில் முந்தானை விழுந்திருக்க, முகம் சிவந்து தலைவிரி கோலமாய் கால்கள் பரப்பி உட்காந்திருந்த பஞ்சவர்ணத்தின் வெறும் முதுகில் உள்ளங்கைகளைப் பரப்பி வௌமெடுத்து அடித்தாள். சப்பென அடி விழுந்தது.

‘பெத்த புள்ளைக்குப் பச்சத் துரோகம் பண்ணிட்டு ஏன்டி உயிரோட இருக்க. இந்தப் பொழப்புக்கு நாண்டுக்கிட்டு தொங்கலாம்டி..’ சொல்லிச் சொல்லி அடித்தாள் சீலக்காரி. அவளின் முதுகெலும்பு முன்தரைக்குப் போய் வந்தது. பஞ்சவர்ணம் வெறியானதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

‘ஆமாடி… நான் அவனத்தாண்டி கட்டுவேன். ஓடிப் போகத்தான் போறேன். எம் புருஷன் அவன்தான். என்னைய கேக்க ஒனக்கு எந்த அருகதையும் இல்ல. துரோகத்தப் பத்தி நீ பேசலாமடி. எம் மகனுக்கு நான் என்னிக்கும் உண்மையாத்தாண்டி இருக்கேன்..’ சீலக்காரியை எத்தி தள்ளினாள் பஞ்சவர்ணம். தொங்குபலகையில் இருந்த பாத்திரப் பண்டங்கள், டிவி கீழே விழுந்தன. ஆட்கள் வீட்டுக்குள் புகுந்தவுடன் இடம் கொள்ளவில்லை. சீலக்காரியைப் பக்கத்து வீட்டுக்குத் தள்ளிச் சென்றனர். வீட்டுக்குள்ளிருந்து பஞ்சவர்ணத்தைப் பச்சைப் பச்சையாக வய்தாள்.

பின்னிரவானது. ஆட்களும் தங்களின் வீடுகளுக்குக் கிளம்பத் தொடங்கினர். உடல் ரணத்தில் பஞ்சவர்ணத்தின் கண்கள் தானாய் மூடின. அவளது மாரோடு அணைந்து கிடந்த மகன் அழுதே தூங்கிப் போனான். அதிகாலை மூன்று மணி போல தனது பாதங்களின் வழியே மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தாள் பஞ்சவர்ணம். ‘ம்ம்மா….’ என அலறியபடி முழித்தவளுக்குச் சட்டென எந்திரிக்கத் தோன்றியது. எவ்வளவு முயன்றும் கால்களை அசைக்க முடியவில்லை. இடுப்புக்குக் கீழே கனநேரத்தில் கால்கள் இல்லாதது போன்று சொரணையற்றுக் கிடந்தவள், காலடியில் பார்த்தாள். கண்ணீர் மறைக்க உருவம் சரியாகத் தெரியவில்லை. கண்ணீர் இறங்கியவுடன் பார்வை நன்றாகத் தெரிந்தது. கங்கு தகிக்கும் இரும்புக் கம்பியோடு நின்றிருந்த சீலக்காரி கால்கள் ஓய அவளை மிதித்தாள். பஞ்சவர்ணத்தின் இரு உள்ளங்காலின் மத்தியில் சதை தெரியுமளவுக்கு ஆழமாய் சூடு பதிக்கப்பட்டிருந்தது.

மறுநாள் கம்பெனிக்குப் போய் சீலக்காரியும், சொந்தக்காரர்களும் பிரச்சனை செய்ததில் மேலூர்க்காரனை வேலையை விட்டுத் தூக்கினர். சீலக்காரியின் சொந்தங்கள் வாசலில் வைத்து அவனை அடித்து விரட்டிய செய்தி சூடு காயத்தில் படுத்திருக்கும் பஞ்சவர்ணத்தைப் பித்துப் பிடிக்க வைத்தது. சாவடிக் கிழவி வந்துதான் பஞ்சவர்ணத்திற்கு மருந்து கட்டி புண் ஆத்தத் தொடங்கியிருந்தாள். படுத்தப் படுக்கையாகி பின்னிடுப்பு வலிக்க கிடந்தவளுக்கு ஒன்னுக்கு, ரெண்டுக்குப் போகச் சிரமப்படுவதும், பாயிலேயே கிடப்பதும் சித்ரவதையாய் இருந்தது.

சிலநாள் கழித்துப் பேரனிடம் மட்டும் சொல்லிவிட்டு சீலக்காரி கொடைக்கானல் கிளம்பினாள். கையோடு பஞ்சவர்ணத்தின் போனையும் எடுத்துக்கொண்டாள். ஒரு வாரமாகக் கூடவே இருந்த மகனை சமாதானப்படுத்தி பள்ளிக்குப் போகச் சொன்னாள். சாயந்தரம் பள்ளி விட்டு வந்த மகன் கோபத்தோடு இருந்தான்.

‘என்னாச்சுடா ஒரு மாறி இருக்க…’

‘ஒண்ணுமில்ல’

‘சொல்லு’

உம்மென இருந்தவன் அவனாக ஆரம்பித்தான்… ‘மலையில ஒங்கம்மா என்ன பண்ணுச்சுனு தெரியுமா… ஒனக்கு ரெண்டப்பா… ஒங்க அம்மாவுக்கு ரெட்ட புருஷன்னு பள்ளிக்கொடத்துல கிண்டல் பண்றாய்ங்கம்மா. கல்யாணம் பண்ணதாம்மா…’ கோபத்துடன் சொன்னான். பள்ளியில் நக்கல் செய்தவர்கள் மேலிருந்த காட்டத்தை அம்மாவிடம் கொட்டினான். அவள் வாய் திறக்கவில்லை.

‘என்ன அமைதியா இருக்க..’ மேலும் கோபமானான்.

‘சொல்லு கல்யாணம் பண்ணப் போறீயா…’

‘செம்புல அம்மா டீ வச்சுருக்கேன் குடி’ அவனை இயல்புக்குக் கொண்டுவரும் தொனியில் பேசினாள்.

‘அதலாம் ஒன்னும் வேணாம். நீ இப்ப சொல்லு…’ அவன் விடாப்பிடியாய்க் கேட்டான்.

‘அம்மா ஒனக்குப் பொறுமையா சொல்றேன் பக்கத்துல வா’ அவள் பாசமாய் கைகளை விரித்தழைத்தாள்.

மேலூர்க்காரனின் பெயரைச் சொல்லி முடிக்கும் முன் சுடுசெம்பை அவள் மீது ஓங்கி எறிந்தான். டீயைத் துடைக்காமல் அவனையே பார்த்தாள்.

‘அப்ப ஓடிப்போகப் போறீயாடி அவங்கூட…’ சோத்துமாரை எடுத்து அவளை அடித்தான். முதன்முறையாக பஞ்சவர்ணத்தை அடித்தான். பஞ்சவர்ணம் அசைவின்றிப் படுத்தபடி அடிகளை வாங்கினாள்.

m

வத்தலகுண்டிலிருந்து சாயந்தரம் அரிட்டாபட்டிக்கு வந்து சேர்ந்தாள் சீலக்காரி. ‘இப்பத்தான் வர்றீயாக்கும்…’ வழியில் பேசிய யாரோடும் அவள் பேசவில்லை. கையில் பையோடு வீடு நோக்கிப் போகாமல் மலையடிவாரம் போனாள். மாங்குளம் போகக்கூடிய எந்த வண்டியையும் அவள் மறிக்கவில்லை. செருப்பைக் கழட்டி கைகளில் எடுத்துக்கொண்டு மெதுவாய் மலையேறினாள். பாறைவனமெங்கும் நாள் முழுக்க அடித்த வெயிலின் வெக்கை முகத்திலடிக்க மிகுந்த அசதியுடன் நடந்தாள். கால் மூட்டுகள் நடுங்க அவள் போய் நின்றயிடம் பாறைக்குழி. நீரையள்ளி முகத்தைக் கழுவிட்டு அமர்ந்தாள். மீன்களும், தவளைகளும் அவளைக் கண்டுகொள்ளாது நீந்தின. மறையும் சூரியன் தண்ணீரில் பட்டுப் பிரதிபலிப்பதை இமைக்காமல் பார்த்தவள், போஸ்டர் பற்றிய விசயங்களையும், ராசாங்கத்தையும் தனக்குள்ளேயே புதைக்க முடிவெடுத்தாள்.

பேரனுக்கு எடுத்துச்சொல்லி அவனையும் கூட்டிக்கொண்டு நாளை மேலூர்க்காரனைப் பார்க்கப் போகலாமென எழுந்தவள், மங்கும் சூரிய வெளிச்சத்தில் மலையின் முதுகிலிறங்கி மாங்குளத்துக்கு நடந்தாள்.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!