நிழல் நாடகம்
ஆயிரம் பாழ் வருடங்களாய்
ஈரத்தை உணராத மலை விளிம்பில்
கரு முகில்களால் சூழப்பட்டிருந்தேன்
வளைந்து வீசும் சுடுகாற்றில்
இலை நரம்பு மின்னல்களால்
அச்சமூட்டப்பட்டவளாக
எல்லையற்ற கருமையினுள்
வார்த்தைகள்
வறண்ட சூறாவளிக் காற்றாக
வானத்தில் மறைந்து போனேன்
நினைவில் யாரும் இறப்பதில்லை
விழுந்து நொறுங்கிய
பறவை முட்டைகளின் நெடி வீச
பாறை முகட்டில்
நட்சத்திரங்கள் உதிர்ந்து பொசுங்குகின்றன
பாறைகளுக்கு நரம்புகளில்லை
பாறைச் சதைகளுண்டு
இரத்தப்பெருக்கு நின்றபாடில்லை
மீந்திருந்த பச்சை இறைச்சி
அழுகத் தொடங்கிவிட்டது
பேய்களை வரவழைப்பதான
நாய்களின் ஊளை
உயிரோட்டமுள்ள பெருமாயக் கண்களை
எதிர்கொள்ள நேர்ந்தால்
திக்கற்றுப் போய்விடுகிறேன்
புலன்கள் மழுங்கி
வெளிர்ந்த கனவொன்றினுள் மிதந்தேன்
காலத்தின் நிறம் பின்னிப்பிணைந்து
முகிலற்ற
மலைத் தொடர்கள்
துயர் சூல் வளர்ந்து
பளிங்கென உறைந்தது.
l
ஆற்றாமைகளால்
சில்லிட்ட அதிகாலையில்
பனித்துளியாக இருந்தாய்
களங்கமற்றச் சிரிப்பும் அழுகையுமான கரைகளுக்குள்
தனித்து மிதந்த படகு நீ
பேருணர்ச்சிகளால் முதிர்ந்தது
உன் உயிர் நிறம்
வானில் திரள்திரளான வெள்ளை பலூன்கள்
நமக்காக மேலெழுகின்றன
அந்த வீடே பாழ்பட
திகைப்பூட்டும் தொலைவுக்குத்
திரும்ப முடியா அமைதிக்குள்
நீ உறைந்தாய்
இன்மை புகை மண்டிய மண்ணறைக்குள்
காற்றில் கிளர்ந்துவரும் கஸ்தூரி நறுமணத்தை
உன் நாசி நுகர்ந்திருக்கும்
சிவப்பு மாதுளங்கனிகள்
நிறைந்த நிழலில்
வனராணிப் பூச்சூடிய உன்சுருள் கூந்தல்..
நெகிழ்ந்து கலைந்திருக்கும்..
வலமிருந்து இடமாக
மறைந்த பிறகு மறுபடி தோன்றும்
அருவப்புதிர் சுடர்கிறது
(ஜெஸ்லிக்கு)