அபனிந்திரநாத் தாகூர்: கலையில் ‘இந்திய’த்தைச் செதுக்கியவர்

இளவேனில்

(பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 3)

வீன இந்திய ஓவியங்கள் குறித்து எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் அபனிந்திரநாத் எனும் பெயருடனே தொடங்கும். கொல்கொத்தாவில் 1871ஆம் ஆண்டு, வங்கக் கலை உலகின் அடையாளமாக விளங்கிய தாகூர் குடும்பத்தில் அபனிந்திரநாத் பிறந்தார். தொடக்கத்தில் சமஸ்கிருதக் கல்லூரியிலும் பின்பு கொல்கத்தா கலைப் பள்ளியிலும் ஓவியக் கலையைப் பயின்றார். கொல்கத்தா கலைப் பள்ளி, அவருக்கு மேற்கத்திய ஓவிய வகைமைகளை மட்டுமல்லாது, உலக நவீன ஓவியங்களையும் அவற்றின் குறுக்குவெட்டு வடிவங்களையும் அறிமுகம் செய்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் தீர்க்கமாகயிருந்த விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அபனிந்திரநாத் தாகூரின் சிந்தனையிலும் தொடக்ககால கலையிலும் வெளிப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி உருவாக்கிய மேற்கத்திய ஓவிய அலைக்கு எதிரான இந்திய அடையாளங்களைத் தனது ஓவியங்களில் உருவாக்கினார். தான் விரும்பிய இந்தியத்தை, இந்திய புராணங்களை துணைக் கொண்டும், முகலாய – பராரி – ராஜஸ்தானிய வடிவங்களின் தாக்கத்திலும் வெளிப்படுத்தினர்.

இந்தியக் கலைகளின் சுதேசிய முகமாகக் கொல்கத்தா கலைப் பள்ளியையும், இந்தியக் கீழைத்திய கலை அமைப்பையும் நிறுவினார். அவர் உருவாக்கிய இந்திய தேசியமயமாக்கப்பட்ட கலைவெளி, சுதேசிய அடையாளங்களையும், பூர்வகுடி – மேற்கத்திய – ஆசிய களவைகளில் உருவான சமகால வடிவங்களையும் வெளிப்படுத்தும் இடமாக திகழ்ந்தது. அபனிந்திரநாத் தாகூரின் பாதையைத் தொடர்ந்தே இந்தியக் கலை வெளியில் பெரும்பான்மையான நிகழ்வுகள் நடந்தேறின என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அபனிந்திரநாத்தின் தேசிய அடையாளத்தை இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகான காலகட்டத்தில் உலகெங்கும் எழுச்சியடைந்த காலனியத்துக்கு எதிரான விடுதலை வேட்கைகளிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே அவரின் அடையாள ஓவியமாக இன்றுவரை திகழும் ‘பாரத மாதா’விலும் பிரதிபலிக்கிறது.

காவி உடை தரித்த வங்காளி சாயலிலான பாரத தாய், தனது நான்கு கைகளில் நெற்பயிரையும், ருத்திராட்ச மாலையையும், ஓலைச்சுவடியும்,வெள்ளை துணியையும் தாங்கி நிற்கிறார்.

பிறப்பாசி எனும் வங்காளி இதழில் இந்த ஓவியம் வெளியானபோது மத்ரிமூர்தி எனும் பெயரிலே வெளியானது. அபனிந்திரநாத், அந்த ஓவியத்தை வங்கத்தின் தாய் எனும் பார்வையிலே வரைந்தார். ஆனால், அந்த நாட்களின் இந்திய சுதந்திர தாகத்தின் தீவிரம் அந்த ஓவியத்தைப் பரந்துபட்ட இந்திய தேசியத்தின் சின்னமாக மாற்றியது. அதுவே வங்க மாதாவை, பாரத மாதாவாக மாற்றியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நிவேதிதா எனும் ஐயர்லாந்து இந்து துறவியே, இந்திய சுதேசிய அடையாளத்தை முன்னிறுத்தும் விதமாக இந்த ஓவியத்துக்கு பாரத மாதா என்று பெயர் சூட்டினார். ஞிகிநி அருங்காட்சியகங்களின் குறிப்பு, பாரத மாதா ஓவியத்தை சுதேசிய, பரந்துபட்ட ஆசியக் கலை அடையாளத்துடன் ஒப்பீடு செய்கிறது.

பாரத மாதாவுக்கு அடுத்ததாக, பெரும் புகழ்பெற்ற ஓவியமாக, ‘ஷாஜஹானின் இறுதி கண’ங்களைச் சொல்ல முடியும். அது வெளியான காலகட்டத்திலேயே நிறைய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றது. முகலாய நுண்ணோவிய வடிவில் வரையப்பட்ட அந்த ஓவியத்தின் பொருள், மகனிடம் ஆட்சியை இழந்து, செங்கோட்டையில் சிறைவைக்கப்பட்ட, நோயுற்ற ஷாஜஹானின் இறுதி நாட்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஷாஜஹானின் காலடியில் அவரின் மகள் ஜஹானாரா பேகம் அமர்ந்திருக்க, மூப்பும் நோயும் சூழ்ந்த ஷாஜஹான் ஏக்கத்துடன் தாஜ்மஹாலை நோக்கிப் பார்த்தபடி படுத்திருக்கிறார். ஓவியத்தின் அழகியல் அதில் உள்ள மனிதர்களின் உணர்வு வெளிப்பாடுகளில் இல்லாமல் தாஜ்மஹாலின் நுண் வேலைப்பாடுகளிலும், ஷாஜஹான் சயனித்திருக்கும் கல் மண்டபத்தின் நுண்கலையிலும் வெளிப்படுகிறது.

அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, ‘பயணத்தின் முடிவு’ எனும் ஓவியம். வறண்ட பாலையின் தகிக்கும் வெயிலில், அதிகப்படியான சுமையுடன் வீழ்ந்து கிடக்கும் ஒட்டகத்தினைக் குறியீடாகக் கொண்டு ஆங்கிலேய காலனியத்தை விமரிசிக்கும் ஓவியம் அது. மேலும் உறுதியின், ஆற்றலின் அடையாளமாக ஒட்டகம் இருக்கிறது. அந்த எதிர்ப்பாற்றல் இந்திய விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பால் உணர்த்துவதாக இருக்கிறது.

தனது ஓவியங்களில் புதிய வகைமைகளைச் சோதனைக்கு உட்படுத்திய அபனிந்திரநாத், 1896 முதல் 97 வரை, ‘கிருஷ்ண லீலா’ எனும் தலைப்பில் 23 நீர்வர்ண தொடர் ஓவியங்களை வரைந்தார். மேலும், காளிதாசர் கவிதைகளின் தாக்கத்தில் ‘அகற்றப்பட்ட யக்ஷா’ (Banished Yaksha) போன்ற ஓவியங்களை வரைந்தார். இந்த ஓவியங்கள் வாயிலாக மேற்கத்திய ஓவிய வடிவங்கள் நீங்கிய சுதேசிய வடிவங்களை வரைய ஆரம்பித்தார்.

ஒருங்கிணைந்த ஆசிய வடிவங்களை, குறிப்பாக ஜப்பானிய இங்க் வாஷ் முறையை இந்திய ஓவியங்களுக்குள் புகுத்தி, இந்திய ஓவியக் கலைக்குப் புதிய பாய்ச்சலைக் கொடுத்தது மட்டுமல்லாது அடுத்த தலைமுறை நவீன ஓவியர்களின் வருகைக்கும் பெரும் உந்துதலாக இருந்தார். மேலும் இந்த நவீன இந்திய ஆசிய ஓவிய அழகியல், பொருள்முதல்வாத மேற்கத்திய ஓவியங்களுக்கு மாற்றான ஒரு மைய நீரோட்டத்தை உருவாக்கின.

கலையின் அரசியலிலும், அது உருவாக்கிய சமூக, உளவியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து பங்காற்றிய அபனிந்திரநாத், குறிப்பாக கலை சார்ந்த புனித அடையாளங்களை உடைக்க எத்தனித்தார். முறையான கலைப்பள்ளி கல்வி இல்லாமலேயே கலையின் உத்வேகத்தில் எவரும் கலைஞராக முடியும் எனும் நிலை வர வேண்டும் என்ற கனவே அவரின் கலை இயக்கத்தின் ஆதாரமாக இருந்தது.

புதிய கலைப் பள்ளிகளின் வருகை, குறிப்பாக இந்திய விடுதலை காலகட்டத்தில் நிகழ்ந்த கலை எழுச்சி பெங்கால் கலை பள்ளியின் தாக்கத்தைக் குறைக்க ஆரம்பித்தது அதனுடன் பொது வெளியிலிருந்து முற்றிலும் வெளியேறிய அபனிந்திரநாத், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கலையைக் கற்பிக்கும் பேராசிரியராகத் தொடர்ந்தார். பொதுவெளி மட்டுமல்லாது தனது ஓவியங்களில் அதுவரை தீவிரமாக இயங்கிய தேசிய, சுதேசிய அடையாளங்களையும் விட்டு நீங்கி ஓவியங்களை வரையத் தொடங்கினார். அவற்றில் குறிப்பிட்ட தகுந்தவை, புறா தொடர் ஓவியங்கள், அரேபிய இரவுகள் தொடர். இவை மட்டுமல்லாது, தொடர்ந்து புத்தரை வரைந்துகொண்டே இருந்தார். கீழே கொடுக்கப்பட்டிருப்பவை அபனிந்திரநாத் வரைந்த புத்தர் ஓவியங்களில் முக்கியமானவையாகக் கருதலாம்.

புத்தர் எனும் மருத்துவர்
புத்தரின் வெற்றி
இளவரசர் சித்தார்த்தரின் புறப்பாடு
புத்தரும் சுஜாதாவும்

ஓவியர், கலைச் செயற்பாட்டாளர் எனும் அடையாளங்களைத் தாண்டி, அபனிந்திரநாத் அவரின் மாமா இரவீந்தரநாத் தாகூரைப் போன்றே குழந்தைகள் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ஓவியம் மற்றும் எழுத்தின் வாயிலாக அவர் உருவாக்கிய குழந்தை இலக்கியங்கள் இன்றளவும் குறிப்பிடத்தகுந்தவை (‘ராஜ் – கஹினி’, ‘சகுந்தலா’ போன்றவை முக்கியமானவை).

1951இல் அபனிந்திரநாத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது படைப்புகள் அனைத்தையும் அவரது குடும்பம் ரவீந்திர பாரதி அறக்கட்டளைக்குக் கொடுத்துவிட்டனர். வெகு காலத்திற்கு அவை அந்த அறக்கட்டளையின் இரும்புப் பெட்டிகளில் அடைப்பட்டுக் கிடந்தன. அதன் காரணமாக அவரது பெரும்பான்மையான ஆக்கங்கள் பொது வெளியில் கிடைக்கப் பெறாமலே இருந்தன. 2018இல் ஆர்.சிவகுமார் எழுதிய ‘அபனிந்திரநாத் தாகூரின் ஓவியங்கள்’ புத்தகம் அதுவரை இரும்புப் பெட்டிகளில் முடங்கிக் கிடந்த அவரின் ஓவியங்களை உலகிற்கு மறுஅறிமுகம் செய்தன.

நூல் பட்டியல்:          

  1. அபனிந்திரநாத் தாகூர், மாப் அகாடமி, 2022
  2. அபனிந்திரநாத் தாகூரின் ஓவியங்கள், ஆர்.சிவக்குமார், 2008

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!