மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

6

ந்தனார் பிராமணராக மாறினார் என்பதைப் படிக்கும்போது தொ.பரமசிவன் திருவாரூர் கோயில் நடைமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது. நந்தனார் கதையின் இறுதியில் வரும் உருவமாற்றம் திருவாரூர் கோயிலில் தலைகீழாக இருந்திருக்கிறது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவாரூர் கோயிலிலுள்ள பிராமணர்கள் நாள்தோறும் நண்பகலில் ஒரு நாழிகை நேரம் பறையராக மாறும் வழக்கம் இருந்தது. அப்போது மட்டும் பிராமணர்களுக்கு “மத்தியான பறையர்கள்” என்று பெயருண்டு என்று தொ.ப. எழுதியிருக்கிறார். ஒருமுறை திருவாரூர் கோயிலில் பிராமணர்கள் யாகம் செய்துகொண்டிருந்தபோது வேள்வியின் பயனாக சிவபெருமான் பறையர் வேடத்தில் செத்த கன்றுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு குறுக்கே வந்துவிட்டார். வந்தவரை சிவபெருமான் என்று உணராது பறையராகக் கருதி பிராமணர்கள் விரட்டிவிட்டனர். கோபம் கொண்ட சிவபெருமான் பிராமணர்களை நோக்கி நீங்கள் பறையராக வேண்டும் என்று சபித்துவிட்டார். சாபத்திலிருந்து விமோசனம் தருமாறு வேண்டியதால் ஒருநாளின் நாழிகை நேரம் மட்டும் பறையராக மாற வேண்டுமென்று சொன்னதால் அண்மைக்காலம் வரை இவ்வழக்கம் இருந்து மறைந்தது என்று தொ.பரமசிவன் கூறுகிறார். உருமாற்றம் அடைந்தாலும் இவ்விரண்டு வழக்கத்திற்கும் இருக்கும் அடிப்படையான வேறுபாடு திருவாரூரில் பறையர் தகுதி சாபமாக இருக்கிறது. நந்தனார் கதையில் பிராமணர் தகுதி புனிதமாக இருக்கிறது. தகுதி மாறினாலும் பறையர், பிராமணர் என்பவற்றின் அடையாளம் மாறிவிடவில்லை.

சாதியமைப்பில் நெகிழ்வா?

சாதியமைப்பு இறுக்கமானது; மாறாதது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியச் சமூக அமைப்பு அதனை மாறவிடாமல் தக்கவைத்திருக்கிறது. ஆனால், நந்தனார் பறையராக இருந்து பூணூல் தவழும் பிராமணராக மாறுவதாக ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ கூறுகிறது. இது சாத்தியமா? கதை முழுக்க சாதியமைப்பின் விதிகளையும் இழிவுகளையும் இறுக்கமாக வரையறுக்கும் பிரதி, இறுதியில் இப்படியொரு சாத்தியத்தை அளிப்பதால் அதுவரையிலான சித்திரிப்புகளை மறக்கடித்துவிடுகிறதா என்றால் இல்லைதான். அதேவேளையில் இந்த அளவிற்குப் பிரதி முன்வந்திருக்கிறது என்பதை மட்டும் கணக்கெடுத்து இங்கு பேசலாம். இந்த உருமாற்றம் மூலம் சாதியமைப்பில் ஒரு நெகிழ்வு காட்டப்படுகிறது.

சாதி பற்றி சமூகம் சொல்வதற்கு நேர்மாறாக இது அமைந்திருக்கிறது.

சாதியமைப்பு இறுக்கமானதே என்றாலும் அவற்றில் ஒரு நெகிழ்வையும் நம் மரபு அனுமதித்திருக்கிறது. ஓர் அடையாளம் மற்றோர் அடையாளமாக மாறுவதற்கு நிபந்தனைக்குட்பட்ட அளவில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. உருமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. ஒன்று, தெய்வம் ஒரு தேவையையொட்டி மனித உருவெடுத்துப் பூமிக்கு வருதல்; இரண்டு, முற்பிறப்பின் வினையால் மறுபிறப்பு அடைவது; மூன்று, இந்தப் பிறப்பில் ஒரு மனிதன் குறிப்பிட்ட நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல். உருவம் மாறுதல், தகுதி மாறுதல், சாதி மாறுதல் போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் கூறலாம். இதில் மூன்றாவது நிலையையே இவ்விடத்தில் காணப் போகிறோம்.

பௌத்தத்தில் உருவ மாற்றம்

இந்தப் பிறப்பில் ‘மாற்றம்‘ என்ற அம்சத்தைப் பேசும்போது பௌத்தத்திற்கிருந்த புரிதல்களையே முதலில் சந்திக்கிறோம். பௌத்தத்தில் போதிசத்துவ நிலை உண்டு. அது புத்த நிலையை அடைவதற்கு முந்தைய நிலை. இதனை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல் என்று கூறலாம். பௌத்த அரசர்கள் ஏதோவொரு விஷயத்திற்காகத் தங்களை மாய்த்துக்கொண்டு வேறொன்றாக மாறிக்கொள்வதாகப் படிக்கிறோம். இது மறுபிறப்புக்கு இணையானது என்றாலும் வைதீக மரபில் உள்ள முக்தி போன்றதல்ல. மாறாக, இதற்கு தியாகம் என்று பொருள். இதன்படி அவர்களும் போதிசத்துவ நிலைக்குச் செல்கிறார்கள். மொத்தத்தில் உடலில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையிடம் சில மந்திரங்களைச் சொல்லித் தருகிறது. அவற்றுள் ஒருவர் எந்த நேரத்திலும் எந்த உருவமும் எடுக்கலாம் என்பது முதல் மந்திரம். இதன்படி மணிமேகலை பின்னர் காயசண்டிகை உருவத்திற்கு மாறுகிறார். இதுவரையில் சாதித் தகுதி மாறும் கதைகளைக் காண முடியவில்லை.

சாதி மாற்றம்

மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் பல மாறுதல்கள் நடந்திருக்கின்றன. பௌத்தத்தின் நித்தியம், அநித்தியம் என்கிற விவாதங்களை அத்வைதத்தில் சந்திக்கிறோம். இவை ஒருவகை மாறுதல்தான். அத்வைதத்தில் கேட்கப்படும் “நீ யார்?” என்கிற கேள்வி உடலைக் குறிக்கிறதா, ஆன்மாவைக் குறிக்கிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டது. தன்னை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பிய பஞ்சமரை ஆதிசங்கரர் குருவாக வணங்குகிறார். “பிராமணன் யார்?” என்ற கேள்வியும் இதனோடு தொடர்புடையதே. பிராமணன் என்பது ‘உடல்’ (பிறப்பு) சார்ந்த நிலை என்றால் பறையன் என்ற ‘தாழ்ந்த சாதி’ உடல் சார்ந்ததாக இருக்க முடியாது என்கிறது. வச்சிரசூசி என்னும் பிரதியும் இதனையே விவாதிக்கிறது.

காரைக்காலம்மை பற்றிய கதையில் அவர் மனித உருவத்திலிருந்து பேய் உருவம் எடுக்கிறார். உருவ மாற்றம் என்பது ஏற்கெனவே இருந்த நிலையிலிருந்து அல்லது தகுதியிலிருந்து மாறுவது என்பதேயாகும்.

நீங்கள் சந்தித்திராத தாம்பத்திய வாழ்க்கையை எப்படி உங்கள் தத்துவ உலகத்திற்குள் அடக்கிப் பேச முடியும் என்று சவாலுக்கு அழைக்கும் பெண்ணிற்காக ஓர் இரவு மட்டும் இறந்துபோன அரசனின் உடலுக்குள் இருந்துவிட்டு வந்து வாதிடுவதாக ஆதிசங்கரர் பற்றிய ஒரு கதை இருக்கிறது.

தகுதி மாற்றத்தில் நாம் சாதியைக் காண்பது இராமானுஜர் தலித்துகளைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோதுதான். அவர் கதையில், பஞ்சமர்களுக்குப் பூணூல் அணிவிக்கிறார்; திருக்குலத்தார் என்று பெயரிடுகிறார். இங்கு பஞ்சமர்களைப் பிராமண நிலைக்கு மாற்ற முடியும் என்ற அர்த்தம் கிடைக்கிறது. ரேணுகாம்பாள் கதையில் உடல் பிராமணருடையதாகவும் தலை பறையருடையதாகவும் அல்லது உடல் பறையருடையதாகவும் தலை பிராமணருடையதாகவும் மாறுகிறது. இதனால் இரண்டு சாதித் தகுதிகளும் ஒரே உடலில் ஊடாடுகின்றன. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் கூட பண்ணை அந்தணரும், தில்லைவாழ் அந்தணர்களும் ஒருகட்டத்தில் நந்தனாரை ஏற்றுக்கொள்வதாகவே காட்டப்படுகிறது. பறையர் வணங்கக்கூடாது எனக் கூறப்படும் பாப்பார சாமிகளை வணங்க சிதம்பரத்திற்கு வழிவிடுகிறார் பண்ணையார். ஆரிய மரபினதாகக் கூறப்படும் ‘தீ’ மூட்டி புனிதப்படுத்தி நந்தனாரை அடுத்த நிலைக்கு உயர்த்துகின்றனர் தில்லைவாழ் அந்தணர்கள்.

அதேவேளையில் இவை மதம் என்னும் சட்டகத்திற்குள் நடத்தப்படும் கதையாடல்களாகத்தான் இருக்கின்றன. அதனால்தான் தேசிய இயக்கத்தில் காந்தியால் நடத்தப்பட்ட அரிஜன நிர்மாணப் பணிகளை அவர் மதக் கடமையோடு இணைத்து விளக்கினார். அரிஜனங்கள் படித்தல், சுகாதாரமாக இருத்தல், கடவுளைப் பணிதல் போன்ற ‘தூய்மையாக்கல்’ மூலம் கடவுளின் குழந்தைகள் ஆகலாம் என்று கருதினார். பாரதியார் பூணூல் அணிவிப்பது மூலம் கனகலிங்கத்தைப் பறையர் தகுதியிலிருந்து பாப்பார தகுதிக்கு உயர்த்த முடியும் என்று கருதியிருக்கிறார். இந்த வகையில்தான் பாரதிக்கும் காந்திக்கும் நந்தனார் ஒரு பாத்திரமாக மட்டுமல்லாமல் ஒரு நிலைப்பாட்டிற்கான குறியீடாகக் கருதப்பட்டார் என்கிறோம்.

அதேவேளையில் இந்த தகுதி மாற்றங்கள் எப்போது நடக்கின்றன, ஏன் நடக்கின்றன என்பதும் முக்கியமாகிறது. நிலவிவரும் ஒழுங்கு கேள்விக்குட்படுத்தப்படும்போது – குற்றவுணர்வின்போது – அச்சத்தின்போது என்று ஏதோவொரு காரணம் இவற்றிலிருக்கிறது. ஆனால், ஏதோ ஒருவகையில் மேலிருப்போர் விரும்பும்போது சாதியமைப்பில் ஒரு நெகிழ்வு விரும்பி அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் தகுதி மாற்றத்தை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில்தான் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதை 19ஆம் நூற்றாண்டிலிருந்து 20ஆம் நூற்றாண்டுக்குள் நுழைந்தது. 20ஆம் நூற்றாண்டு அரசியல் கருத்துகளின் – அடையாளங்களின் நூற்றாண்டு என்ற முறையில் நந்தனார் கதைக்கு வேறு பரிணாமம் கிடைத்தது. சாதி முரண்பாடு பற்றிய கதையாடல் என்பதால் இருபதாம் நூற்றாண்டில் மேலுக்கு வந்த சமூக அரசியல் சீர்திருத்தக் கருத்துகளின் பின்புலத்தில் இக்கதைக்கான பரிணாமம் அமைந்தது. 20ஆம் நூற்றாண்டு முழுவதும் பல்வேறு சீர்திருத்தக் கருத்துகளின் பிரதிகளாக மறு ஆக்கங்களும் பதிப்புகளும் வெளியாயின. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யைத் தொடக்க கால சீர்திருத்த நோக்குடையோர், தேசிய இயக்கத்தார், இடதுசாரிகள், தலித் இயக்கத்தினர் என்று பல்வேறு தரப்பினரும் எடுத்தாண்டிருக்கின்றனர். இது நடந்தவற்றைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பகுப்பு மட்டுமே. பல மட்டங்களிலும் பலவாறு நந்தனார் கதை எடுத்தாளப்பட்டுள்ளன. சேலை.சகதேவ முதலியார் உள்ளிட்டோரின் பிரதிகளே கோபாலகிருஷ்ண பாரதியார் முன்வைத்த கதை வடிவத்திலிருந்து சற்றே மாற்றங்கள் செய்துதான் வெளியாயின என்றாலும் இருபதாம் நூற்றாண்டு சீர்திருத்தவாதத்தின் அடையாளமாக நந்தனாரைக் கொண்டதில் அ.மாதவையாவும் சுப்பிரமணிய பாரதியும் முன்னோடிகள்.

.மாதவையா

‘Nanda: The Pariah who overcame Caste’ என்ற தலைப்பில் தானெழுதிய நூலில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கதையாடலை அப்படியே பிரதிபலித்தாலும் இறுதியைக் கீழ்கண்டவாறு முடித்திருந்தார் அ.மாதவையா: தீட்சிதர்கள் தங்களின் ஆலயத்திற்குள் நந்தனாரை அழைத்துச் சென்றார்கள். உள்ளே, சிலைகளையும் புனித இடங்களையும் காட்டியபடி சென்றனர். ஆனால், அதை எதையும் காதில் வாங்காமல் அனைத்திற்கும் மேலான நடராஜரைக் காணும் ஆவலுடன் அவர்களைவிட வேகவேகமாக கடந்துசெல்கிறார் நந்தனார். கோயிலின் கர்ப்பகிரகத்திற்குச் சென்று தன் வாழ்நாள் கனவான நடராஜரை நேருக்கு நேராகப் பார்க்கிறார். கற்பூரத்தை அந்தணர் ஒருவர் ஏந்தி காட்ட, அவ்வொளியில் எழில்மிகு நடனக்கோலத்தில் நடராஜர் காட்சி அளிக்கவும், அக்கணம் நந்தனாரைச் சுற்றி நூறு கோயில் மணிகள் ஆர்ப்பரித்தன. என்ன அற்புதம்! தன் உயிரும் ஆன்மாவும் அந்த அன்பின் ஊற்று மறையும்வரை நந்தனார் அவ்வுருவை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

ஆதனூர் பறையரான நந்தனார் இன்று அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவன் கோயில்களில் அவர் கடவுளாகக் கூட வழிபடப்படுகிறார். ஆனால் என்ன கொடுமை! அவரின் சகோதரர்களான பஞ்சமர்கள் அன்றிருந்த நிலையிலிருந்து துளியும் மாறவில்லை. அன்று போலவே இந்நாட்களிலும் கடின வேலைகளில் உழன்றும், பட்டினியில் உழன்றும், அதேபோல கள் குடித்தும், ரத்த பலி கேட்கும் சாத்தான்களை வழிபட்டும் வருகிறார்கள். நந்தனாரால் ஒரு அங்குலம் கூட அவர்கள் வாழ்க்கையை முன்னகர்த்த முடியவில்லை. ஆரியர்களைப் “போலச்செய்து” அவர்களும் இன்று நான்கு சாதிகளாகி, நந்தனாரின் சாதியான சாம்பவர்கள் என்போர் இன்று மேலானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதற்காகவா நந்தனார் பறையராகப் பிறந்து, சாதியைக் கடந்து, இன்றும் அவரது சகோதரர்களால் உள்ளே நுழைய முடியாத கோயில்களில் கடவுளாக வீற்றிருக்கிறார்? அவர் ‘உயர்சாதி’ இந்துக்களுக்கு இதனைத்தான் கற்பித்தாரா?

சாதி முறையை ஆரியர்களோடு தொடர்புறுத்தி, அம்முறை மாற வேண்டும் என்ற அக்கறை கொண்டிருந்த அ.மாதவையா, நந்தனார் கதையை உண்மை என்றே கருதியிருந்தார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அவர் சொல்லுகிற சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக நந்தனார் கதையை எடுத்துக்கொண்டார். அதிலும் குறிப்பாக பறையர் வகுப்பாரிடையே நிலவிய வேறுபாடுகளைக் களைவதற்கான அறைகூவலாக நந்தனார் கதையைக் கூறி முடிக்கிறார். அவர் காலத்தில் பறையர் பிரிவில் அடங்கியிருந்த சில சாதிகள் தங்களைப் பறையர்களோடு சேர்க்கக் கூடாது என்று கூறியிருந்த பின்னணியில் இந்த இறுதிப் பகுதியை அ.மாதவையா எழுதியிருப்பார் என்று யூகிக்கலாம். வள்ளுவர்கள் இதேபோன்று பறையர் சட்டகத்தில் சேர மறுப்பு எழுப்பியதைக் கண்டித்து அயோத்திதாசர் எழுதியிருப்பதும் இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.

குதிரைக்காரன் குப்பன்

அ.மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர் மட்டுமல்ல, முன்னோடி சிறுகதையாசிரியரும் கூட. குசிகர் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள் வெளியிட்டார். நாவல்கள் போலவே சிறுகதைகளிலும் அவரின் சீர்திருத்த நோக்கு பளிச்சிட்டது. இந்து சமூகம் தன்னைச் சீர்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் அவரின் சாடல்களும் பரிந்துரைகளும் அமைந்திருந்தன. மேற்கின் சனநாயகம் நீதி குறித்த கருத்துகள், அறிவியல் வாதங்கள், கிறித்தவ ஒழுங்கு ஆகியவை அவரின் சமூகப் பார்வை மீது தாக்கம் செலுத்தியிருந்தன. இவரின் ‘குசிகர் குட்டிக்கதைகள்’ (முதல் எட்டு) என்ற நூல் (The Authors’ Press & Publishing – House, Mylapore, Madras) 1924ஆம் ஆண்டு வெளியானது. அ.மாதவையா கதைகள் முதலில் ஆங்கில ஏடான இந்துவில் அவர் பெயரின்றி வெளியாயின. பிறகு தொகுக்கப்பட்டு ஆங்கிலத்திலேயே இரண்டு பாகங்களாக வெளியாயின. அவை இரண்டாம் பதிப்பாக வெளியான நேரத்தில் அவரே தமிழில் மொழிபெயர்த்து சுதேசமித்திரன் ஏட்டில் வெளியிட்டார். பிறகுதான் 1924ஆம் ஆண்டு இரண்டு பாக நூல்களாக அக்கதைகள் வெளியாயின. முதல் நூலில் எட்டுக் கதைகள் இருந்தன. அவற்றில் முதல் கதையின் தலைப்பு ‘குதிரைக்காரன் குப்பன்’.

இக்கதையில் குப்பன் என்ற பறையர் வகுப்பைச் சேர்ந்தவர் ஆங்கிலேய உதவி கலெக்டர் ஒருவரின் குதிரை பராமரிப்பாளராக இருக்கிறார். அவருடைய மனைவி குதிரைக்குப் புல் பறிக்கிறவர். ரங்கூனுக்கு இடம்பெயர்ந்த காலத்தில் குப்பனுக்கு இத்தொடர்பு ஏற்பட்டது. ஒருநாள் ஊரில் உதவி கலெக்டர் அக்கிரகாரம் வழியே செல்லும்போது அங்கிருக்கும் பிராமணர்கள் அவருக்குக் கும்பிடு போடுகிறார்கள். ஆனால், அவரின் முரண்டுபிடிக்கும் குதிரையை அடக்கக் குப்பன் அக்கிரகாரத்திற்குள் நுழைய வேண்டியிருந்தபோது, ஆச்சாரம் கெட்டதாகப் புகார் அளிக்கிறார்கள். இதையொட்டி குப்பன் கிறித்தவராகி விடுபடுவதாகக் கதையை முடித்திருக்கிறார் மாதவையா.

குப்பனும் அவர் மனைவியும் கிறித்தவராதல், ஆங்கிலேயர்களிடம் பணி புரிதல் போன்றவற்றால் உள்ளூர் சாதிய நிர்பந்தங்களை மீறுபவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த மீறல்களுக்குக் காரணமான மாற்றங்கள் பக்கமே படைப்பாளி நிற்கிறார். இந்தக் கதையில் சித்திரிக்கப்பட்டுள்ள பிராமணர் ஙீ பறையர் எதிர்மறை, சமூகத்தில் நிலவிவந்த வழக்கம்தான். இந்த எதிர்மறை ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யிலும் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிரதிகளுக்கும் இடையே சில பொதுத்தன்மைகள் இருக்கின்றன. அதன்படி இந்தக் கதையை நந்தனார் கீர்த்தனையோடு ஒப்பிட முடியும். கீர்த்தனையில் நந்தனார், பாப்பார சாமியை வணங்குகிறான் என்கிறபோதும், சிதம்பரத்திற்குள் நுழையும்போதும் தில்லை அந்தணர்கள் பதற்றம் கொள்கிறார்கள். அதேபோல இக்கதையில் குப்பன் அக்கிரகாரத்திற்குள் வரும்போது பிராமணர்கள் பதற்றம் கொள்கிறார்கள். தில்லை மூவாயிரவர் போல் தங்களுக்குள் கூடி விவாதிக்கிறார்கள். நந்தனார் கதையில் அந்தணர்களின் தயவால் மீட்சி பெறுகிறான். ஆனால், அ.மாதவையா கதையில் நவீன மாற்றங்களின் காரணமாகப் பிராமணர்களின் தயவுக்கு வெளியே போய்விடுகிறார்கள் பறையர்கள். இத்தகைய ‘தய’வின் அரசியலைப் புரிந்து மாற்றத்தைச் செய்திருப்பதனாலேயே அ.மாதவையா முக்கியமானவர் ஆகிறார். இந்தப் பொதுத்தன்மை இயல்பானது.

அதேவேளையில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் தாக்கம் இல்லாமல் ஆரம்பகால புனைவுகள் இல்லை. இருபதாம் நூற்றாண்டு நவீனப் புனைவுகள் முழுவதிலும் வரப்போகும் ‘ஒடுக்கப்பட்டவனுக்கான’ முன்மாதிரி உருவாகிவிட்டது என்று கூறலாம். அ.மாதவையா ‘Nanda: The Pariah who overcame Caste’ (1923) நூலை எழுதியபோது இறுதியில் வரும் சீர்திருத்தக் கருத்துகள்தாம் புதிதே தவிர கதை வடிவம் கோபாலகிருஷ்ண பாரதியாருடையதுதான். அதைப் பற்றி அ.மாதவையாவிற்குப் பிரச்சினையில்லை. கதை வடிவம் அவரை ஈர்த்திருந்ததால் அவர் அதனை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பிறகு தலித் பற்றி எழுதுவதற்கும், எழுத முற்படும்போதும் அக்கதை அவர் நினைவுக்கு வராமல் போயிருக்காது. ‘குதிரைக்காரன் குப்பன்’ கதையில் இதற்கான போகிற போக்கிலான அதே நேரத்தில் உறுதியான சான்று கிடைக்கிறது. அதாவது சேரியை வர்ணிக்கும்போது “…….. பயிர் செய்யும் வயல்களின் நடுவே, சிறிய குடிசைகளாலான சேரிகளில் வசித்துவருகிறார்கள். வயிறு நிரம்ப ஊனின்றித் தம்மைப் போலவே மெலிந்து வாடியிருக்கும் ஆடுமாடுகளும் கோழி பன்றிகளுமே அவர்கள் சகவாசிகள். வீட்டுக் ‘கூரைகளின் மேல் சுரைகள் படர்த்திருக்கும், சுற்றிலும் நாய்கள் குரைத்து நிற்கும்’, எங்கே பார்க்கினும் எலும்புகளும் இறகு கொம்புகளும் உரங்களும் குவியல் குவியலாய் காணலாம். பிரபஞ்சத்தில் வேறு எதிரிணை யில்லாததோர் துர்க்கந்தம், சேரியை அணுகும் பொழுதே பலமாய் வீசும். அக்குடிசைகள், மழை வெயில்களுக்கு ஏற்ற வீடுகளில்லை. அவற்றுள் நுழைந்து பார்த்தால், சில சட்டிப்பானைகளையும், சிரட்டை யகப்பைகளையும், உழவு சாமான்களையும் தவிர வேறு சாமான் எதையும் காண முடியாது” என்று நீள்கிறது. இந்த வர்ணனை ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில் வரும் சேரி பற்றிய வர்ணனையை வரிக்கு வரி பிரதி எடுத்ததாக இருக்கிறது.

சேரி பற்றிய வர்ணனைக்கு நந்தனார் கீர்த்தனை எந்த அளவு முன்னுதாரணமாக இருந்தது என்பதற்கு இதுவொரு சான்று. “புலைப்பாடியது கூறை வீடுதனிலே சுரையோ படர்ந்திருக்கும். அதை சுற்றிலும் நாய்கள் குலைத்திருக்கும்“ என்கிறது நந்தனார் கீர்த்தனை. நந்தனார் கதையை கோபாலகிருஷ்ண பாரதியார் சேக்கிழாரின் பெரியபுராணத்திலிருந்து தழுவியிருக்கலாம். ஆனால், அ.மாதவையா போன்றோருக்கான சான்று கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நூல்தான். அ.மாதவையா ஒடுக்கப்பட்டோரைப் புறமெய் அளவில் முற்போக்காகச் சித்திரித்திருந்தாலும், உள்மெய்யாக இழிவு உள்ளிட்ட பொதுபுத்தி படர பார்த்திருப்பதற்கு ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’தான் காரணம்.

ராஜாஜி

அ.மாதவையாவிற்கு அடுத்து ராஜாஜியைப் பார்க்கலாம். ராஜாஜி தேசியவாதி. தலித்துகள் பற்றிய அ.மாதவையா சித்திரிப்புக்கும் தேசியவாதிகளின் சித்திரிப்புக்கும் ஒற்றுமை உண்டெனினும் அ.மாதவையா தேசியவாதி அல்ல. சீர்திருத்த நோக்கு கொண்டவர். சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞராக அறியப்பட்ட ராஜாஜி என்கிற சி.ராஜகோபாலச்சாரியார் 1919 முதல் சென்னையை மையமிட்டார். ஏற்கெனவே தேசியவாதக் கருத்து கொண்டிருந்த அவர், சென்னையில் தேசியவாத அரசியலின் தளகர்த்தர் ஆனார். ராஜாஜி எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் விளங்கினார்.

அவர் ‘முகுந்தன் பறையனான கதை’ என்ற கதையை எழுதி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சார்பாக 1927ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்கதையை மட்டும் இதே தலைப்பில் தனி நூலாக வெளியிட்டார். தலித்துகளை மையப்படுத்தி பின்னுங்கூட ‘ஜகதீச சாஸ்திரியின் கனவு’, ‘அர்த்த நாரி’ என்கிற இரண்டு கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நாம் இங்கு பொருண்மை கருதி ‘முகுந்தன் பறையனான கதை’யை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். அ.மாதவையாவின் ‘குதிரைக்காரன் குப்பன்’ கதைக்கும், ராஜாஜியின் கதைக்கும் இரண்டாண்டுகள் (1925, 1927) மட்டுமே இடைவெளி.

முகுந்தன் பறையனான கதை

முகுந்தன் என்பவர் பிராமணர். இதன்படி இக்கதைக்கு ‘பார்ப்பான் பறையனான கதை’ என்றும் தலைப்பிடலாம். கதையில் சேரி ஙீ அக்கிரகாரம், பார்ப்பான் ஜ் பறையன் என்கிற எதிரிணைகள் வருகின்றன. வேலம்பட்டி என்னும் ஊரில் முகுந்தன் என்னும் சிறுவனைக் குரங்குக்கடியிலிருந்து காப்பாற்றி அக்கிரகார வீட்டில் சேர்க்கிறார்கள் சேரிச் சிறுவர்களான மாரியும் சின்னானும். ஆனால், முகுந்தன் தாயார் தீட்டுக் கருதி அச்சிறுவர்களை அடித்து விரட்டுகிறாள். பிறகு இரண்டு சிறுவர்களும் தாய் தந்தையோடு கண்டிக்குப் பிழைக்கப் போய்விடுகிறார்கள். அங்கு தந்தை காணாமல் போய்விடுகிறார். மாரிக்குத் திருமணமான பின் சொந்த ஊருக்கு வருகிறார்கள். இங்கு பஞ்சம், வறுமை வாட்டுகிறது. சின்னான் கோபித்துக்கொண்டு பினாங்கு சென்று விடுகிறான். ஆதிக்க வகுப்பினர் கிணற்றில் குடிநீர் திருடினாள் என்று மாரியின் மனைவி பூவாயி கடுமையாகத் தாக்கப்படுகிறாள். மருத்துவரை நாடும்போது சிறுவயதில் காப்பாற்றப்பட்ட முகுந்தன், தாயை இழந்த பிறகு படித்து மருத்துவராகியிருக்கிறான் என்பதை மாரியும், மாரி பற்றி முகுந்தனும் தெரிந்துகொள்கிறார்கள். முகுந்தனுக்கு பூவாயி மூலம் தன் தாயின் நினைவு வருகிறது. அவன் கீதை வாசிக்கிறான். அதன் வழியில் தன் தாய்க்காக ஒரு நோன்பு இருக்கிறான். அதன்படி முகுந்தன் சேரிக்குள் பறையனாய் போகிறான். அவன் மனம் சாந்தி அடைந்ததாகக் கதை முடிகிறது.

நந்தனார் கதையாடலை ராஜாஜியின் கதை (பண்பாட்டின் மேல்கீழ் பண்பை மாற்றாவிட்டாலும்) தலைகீழாக்குகிறது. அதாவது அங்கு நந்தனார் என்னும் பறையர் பிராமணர் ஆகிறார். இக்கதையில் பார்ப்பனர் பறையர் ஆகிறார். இதற்கான உதாரணமாக இவர்கள் காலத்தில் இருந்த பிரதி நந்தனார் கீர்த்தனைதான். ராஜாஜி நந்தனார் பற்றி எழுதியவை இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவர் நந்தனாரால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதற்கும் அவரால் நந்தனார் பிறருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. சுப்பிரமணிய பாரதி நந்தனாரைத் தேசியவாத நோக்கில் பொருள்படுத்தினார் என்றாலும், நந்தனாரைத் தேசியவாத சொல்லாடலுக்குள் கொணர்ந்ததில் ராஜாஜிக்கு முக்கிய இடமுண்டு. அதனைப் பார்ப்பதற்கு முன் மேலுமொரு கதையை மட்டும் இங்கு பார்த்துவிடலாம்.

புதிய நந்தன்

நந்தனார் கதை தேசியவாதிகளை மட்டுமல்ல நவீன எழுத்தாளர்களையும் எட்டியிருந்தது. அந்தவகையில் புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’ கதை குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரும் நந்தனாரைத் தங்களின் கதை வடிவத்திலோ, பாத்திர – இடவார்ப்பிலோ – உள்ளடக்கத்திலோ மறைமுகமாக இடம்பெறச் செய்த நிலையில், புதுமைப்பித்தன் நந்தனார் கதையையே எழுதுகிறேன் என்று தம்முடைய கதைக்குள் நந்தனாரைக் கொணர்ந்தார். அவர் காலத்தில் நடந்துவந்த சமூக மாற்றங்களையும், தலித்துகளின் நிலையையும் இருத்தி, தம் காலத்து நந்தனின் கதை இதுவாகத்தான் இருக்க முடியும் என்ற பொருளில் இக்கதையை எழுதியிருக்கிறார். அவரே கதை தலைப்பில் ‘புதிய’ என்பதைச் சேர்த்துவிட்டார்.

60 வயது கருப்பன், தோட்டக் காவலாளி. அவரது மகன் பாவாடை, கிறித்தவ பாதிரியார் ஒருவரோடு சென்று நன்றாகப் படிக்கிறான். சாதி பேதமில்லாதவர் என்று கருதி அவர் மகள் மீது கொண்ட காதலைச் சொல்லும்போது அவரால் விரட்டியடிக்கப்படுகிறான். பிறகு நரசிங்கம் என்ற பெயரோடு பெரியார் இயக்கத்தில் பணிபுரிகிறான். இதற்கிடையில் ஊர் பண்ணையார் மகன் ராமநாதனுக்கு பாவாடை தங்கையோடு காதல் வருகிறது. ராமநாதன் காந்தியால் ஈர்க்கப்பட்டவன். இந்நிலையில் அரிஜன நிதி திரட்ட வரும் காந்தியை ஆதனூருக்கு அழைத்துவர ஏற்பாடு செய்கிறான் ராமநாதன். அவனது சனாதனத் தந்தையும் பெரியாரிய நரசிங்கமும் காந்தியிடம் வாதம் செய்து வெல்லக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், இறுதியில் அவர்கள் இருவரும் பார்வையில்லாத கருப்பனை ரயிலில் அடிபடாமல் காக்க முயன்று மூவருமாய் இரத்தக்களரியில் மடிகிறார்கள். மூவரது இரத்தமும் கலக்கும்போது, கருப்பனும் அதே ஒளியை வேறுவிதமாகக் கண்டடைந்திருப்பான் என்பதை புதுமைப்பித்தன் நேரடியாகக் கூறாமல் விட்டுவிடுகிறார். மூன்று பேர் மூன்று விதமாகக் கண்டது ஒரே ஒளியைத்தான்.

தீண்டாமையைச் சாட பழைய நந்தனார் கதை போதாது என்று கருதி அக்கதையில் தன் காலத்து எதார்த்தங்களை வைத்து எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன். இரண்டு சாதி, மூன்று பேர், ஒரே ரத்தம், புதிய ஒளி என்று முடிக்கும்போது புதிய நந்தனார் கதையாகிறது. ஆனால், ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ கதையாடல் மீது அவருக்கு மறுப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் தலித்துகள் பற்றிய கண்ணோட்டம், சேரி வர்ணனை ஆகியவற்றில் கீர்த்தனை தந்த ‘வரலாற்றிலிருந்து’ மாறிவிடவில்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

இவ்வாறு கதை என்னும் பெயரில் நந்தனார் ‘சரித்திர‘ உருப்பெற்றுவந்த காலத்தில் நந்தனாரை நேரடியாகவே சரித்திர புருஷராகக் கொள்ளும் நிகழ்வு தேசியவாத அரசியலில் நடந்தது.

illustration : Ravi palette 

m

காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பின்னால் சுதந்திர போராட்டத்தின் வடிவம் மாறியது. வெகுமக்கள் ஈர்ப்பிலும் – பங்கேற்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் சமூக நிர்மாணப் பணிகளையும் சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாக்கினார். அவற்றுள் ஒன்று தீண்டாமை ஒழிப்பு. அதற்காக 1932ஆம் ஆண்டின் இறுதியில் அரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். அவரின் தீண்டாமை கருத்து இந்திய மரபு, ஆன்மீக உள்ளீடு சார்ந்து கட்டமைக்கப்பட்டன.

ஒருபுறம் ‘லட்சிய அரிஜன’னை யோசித்தாலும், மறுபுறம் தீண்டாமை பாவத்தைக் கழுவும் நல்ல இந்துவைத் தீண்டப்படாதாரிலிருந்து முன்வைக்க முயன்றார். தீண்டப்படாதார் மனமாற்றம் (மனத்தூய்மை) கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது என்று அவர்களிடையே உரையாடினார். அதுவரை அரிஜனங்கள் இந்தப் பண்பாட்டைத் தங்களுடையதாகக் கருதிக் காத்திருக்க வேண்டியவர்களாகவோ – புரிந்துகொள்ள வேண்டியவர்களாகவோ இருக்க வேண்டுமெனக் கருதினார். அவரின் இந்தப் பார்வை சுதேசி பற்றிய பார்வையோடு தொடர்புடையது.

இந்தச் சிந்தனையை ஒரு கதையாக பாவித்துப் பார்க்கும்போது நந்தனார் கதை பொருத்தமாக இருக்கிறது. பிராமண பண்ணையார் நந்தனாரின் விருப்பத்தை ஏற்க மறுக்கும்போதும், அளவுக்கு மிஞ்சிய பணிகளை ஏவும்போதும், தில்லை அந்தணர்கள் பதற்றம் கொள்ளும்போதும் நந்தனார் அவற்றை விரோதமாக்கிக்கொள்ளவில்லை. தொடர்ந்து இறைஞ்சியும், விருப்பத்தில் உறுதியாக இருந்தும் எதிர்தரப்பு மனமாற்றத்தின் வழியாக உயரிய நிலையை அடைகிறார்.

நந்தனார் பற்றிய கதையை காந்தி கேள்விப்பட்ட தருணத்தில் அது அவருக்குப் பிடித்தமானதாக மாறியிருக்க வேண்டும். அவ்விடத்தில் இரண்டு விசயங்கள்தாம் நடந்திருக்க வேண்டும். ஒன்று, அவருக்கிருந்த ‘அரிஜன்’ பற்றிய யோசனைக்கு உகந்ததாக இருந்திருக்க வேண்டும். இரண்டு, ‘அரிஜன்’ பற்றிய யோசனையை உருவாக்கவோ / வலுப்படுத்தவோ உதவியிருக்கும். வரலாற்று வாதத்தை நிராகரித்துவந்த அவருக்கு நந்தனாரின் ‘வரலாறு’ சமகால தீண்டாமை ஒழிப்புக்கான லட்சிய பிம்பமாக இருந்தது.

காந்தி 1896ஆம் ஆண்டு முதன்முறையாகச் சென்னை வந்தார். அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து முற்றிலும் இந்தியா வந்துவிட்ட பின்னால் 1915, 1916, 1917, 1919 ஆகிய ஆண்டுகளில் அவ்வப்போது சென்னை வந்து சென்றார். நந்தனார் கதையை எப்போது அறிந்தார் என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்ப் பகுதியில் இருந்த தீண்டாமை நடைமுறைகள் பற்றியும், அவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் பற்றியும் 1915 முதலே அறிந்திருந்தார் என்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. காந்தி 1915ஆம் ஆண்டு சென்னை வந்தபோது அன்னிபெசண்டைச் சந்தித்தார். அவரின் அடையாறு பிரம்மஞான சங்கத்தைப் பார்வையிட்டபோது அம்மையார் நடத்திவந்த பஞ்சமர் பள்ளியையும் பார்வையிட்டார். 19ஆம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் ஆல்காட்டால் தொடங்கப்பட்டு நீடித்துவந்த இலவசப் பள்ளிகள் அவை. ஆனால், அம்மையார் வசித்த பிரமாண்ட மண்டபத்தையும் எளிய ஷெட்டில் நடத்தப்பட்ட பஞ்சமர் பள்ளியையும் ஒப்பிட்டு காந்தி வருந்தியதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதேபோல பொறையாறு, தரங்கம்பாடி பகுதிகளுக்குப் பயணம் சென்றபோது பஞ்சமர்கள் அளித்த வரவேற்புரையில் கூறியிருந்த குறைகளைக் கணக்கெடுத்து மாயவரத்தில் உரையாற்றினார். சென்னைக்குத் திரும்பிய காந்திஜி, ஜி.ஏ.நடேசனுடன் தாழ்த்தப்பட்டோர் நிலையை உயர்த்துவது குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேச்சு நடத்தியதாக ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் அ.ராமசாமி குறிப்பிடுகிறார்.

ராஜாஜியும் காந்தியும்

இந்நிலையில் சேலத்திலிருந்து வந்து கஸ்தூரிரங்க அய்யங்கார் வீட்டில் குடியிருந்துகொண்டு வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த ராஜாஜிக்கு, 1919ஆம் ஆண்டு காந்தி சென்னை வந்தபோதிலிருந்து பழக்கம் ஏற்பட்டது (அதற்கு முன்பே 1915ஆம் ஆண்டில் காந்திக்கு ஆதரவாகவும் அன்னி பெசண்ட்டுக்கு எதிராகவும் கடிதம் எழுதியிருந்தார்). மகாதேவ தேசாய் ராஜாஜியுடன் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டுமென்று தன்னிடம் கூறியதாக காந்தி கூறியிருக்கிறார். ராஜாஜி பழக்கம் பற்றி காந்தி கூறும்போது “காலம் சென்ற ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கையெழுத்துடன் சென்னைக்கு வர அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்குக் காரணமாக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போன வழியில் தெரிந்துகொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம்“ என்கிறார். ஏறக்குறைய இதே காலத்தில்தான் சுப்பிரமணிய பாரதியும் காந்தியைக் கண்டு திரும்பினார். பிறகு காந்தியின் சென்னை மாகாண பயணங்களில் அவரைச் சந்தித்தும், அவர் உரையை மொழிபெயர்த்தும் உற்ற நண்பரானார் ராஜாஜி. இதன்படி காந்தியின் அரிஜன் பற்றிய முடிவுகளில் தமிழகத்திற்கும் ராஜாஜிக்கும் பங்கிருந்தது என்று கூறலாம். ராஜாஜிக்கும் காந்திக்கும் பல விஷயங்களில் நிறைய உரையாடல்கள், கருத்தொற்றுமைகள் அமைந்தன என்று கூறலாம். கடிதத் தொடர்புகளும் நீடித்தன. இதுபற்றி “அவர்களுடைய கடிதப் போக்குவரத்தானது, நூல் நூற்பிலிருந்து உயர்ந்த ஆன்மீகத் தத்துவம் வரை எத்தனையோ காரியங்களைப் பற்றி இருந்தது” என்கிறார் அ.ராமசாமி. காந்தி துணையுடன் தேசிய அளவிலும் ராஜாஜி அறியப்பட்டார். காந்தி சிறையில் இருந்தபோது “யங் இந்தியா” ஏட்டின் ஆசிரியராக ராஜாஜி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் 1925ஆம் ஆண்டு காந்தி ஆசிரமம் ஏற்படுத்தினார் ராஜாஜி. காந்தி பெயரில் தொடங்கப்பட்ட முதல் ஆசிரமம் இது. இங்கு பல வேலைகளோடு அரிஜன விடுதியும் ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு ஆல்காட் தொடங்கிய பஞ்சமர் பள்ளிகளும், சகஜானந்தர் சிதம்பரத்தில் நந்தனார் பெயரில் தொடங்கியிருந்த பஞ்சமர் பள்ளி மட்டுமே அவர்களுக்காக இருந்தன. இதே காலக்கட்டத்தில்தான் தலித் பாத்திரங்களைக் கொண்ட ‘முகுந்தன் பறையனான கதை’ உள்ளிட்ட கதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் ராஜாஜி எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவில் நந்தனார் என்னும் நினைவு இக்காலக்கட்டத்தில் ஊடாடியிருக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறலாம். காந்தி கண்ட உண்மையான கடவுளின் குழந்தையாக (அரிஜனன்) நந்தனார் கருதப்பட்டிருக்கலாம். ராஜாஜி போன்றோருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த சகஜானந்தரை காந்தியும் அறிந்தார்.

சகஜானந்தர்நந்தனார் மடம்காந்தி

நந்தனார் பெயரில் சகஜானந்தர் நடத்திய நந்தனார் மடத்திற்கும் – பள்ளிக்கும் இரண்டுமுறை வருகை புரிந்தார் காந்தி. கதர் யாத்திரை பயணமாகத் தமிழகம் வந்தபோது முதன்முறையாக 11.09.1927 அன்று சிதம்பரம் நந்தனார் மடம் வந்தார். அங்கு நந்தனார் ஆலயத்திற்கு அடித்தளக் கல் நாட்டிய பின், சகஜானந்தர் வரவேற்புரையைப் படித்தளித்தார். அதில் நந்தனார் பெயரிலான ஆலயம், பள்ளியின் வரலாறு கூறப்பட்டிருந்தன.

வரவேற்புரையை ஏற்றுக்கொண்டு காந்தி பேசினார்.

“சுவாமி சகஜானந்தா மற்றும் நண்பர்களே” என்று உரையைத் தொடங்கிய அவர், “நீங்கள் சரியாகக் கூறியுள்ளபடி நந்தனார் இந்தியாவின் சத்தியாகிரகிகளில் பிரகாசமானவர் ஆவார். சிதம்பரத்திற்கு வந்தவுடன் முதல் வேலையாகக் கோயில் கதவிற்கு அடிக்கல் நாட்டுதலை எனக்குக் கிடைத்த பேறாகக் கருதுகிறேன். இந்த ஆலயத்தில், நந்தனாரைப் போலவே அனைவருமே கடவுளை நேராகச் சந்திக்க முடியும் என நம்புகிறேன். இங்கு வருகை தரும் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் இடமாக இந்த இடம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தன் உயிரின் உதிரத்தைச் சிந்தி நந்தனார் செல்ல விரும்பியது வெறும் கற்களாலும் சுண்ணாம்பாலுமான கோயிலென்ற கட்டடத்திற்குள் அல்ல. தன் உள்ளத்தின் சுதந்திரத்தை இக்கோயில் நுழைவின் மூலம் அடைய முயன்றார்.

இக்கோயிலின் பக்தர்களாகிய நாம் நம் உள்ளங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். நம் அகத்தைக் குறிக்கும் சின்னங்களே இக்கற்களும் சுண்ணாம்புக் காரைகளும். பிராமணர்கள் எனச் சொல்லப்படும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் பல சைவ, வைணவ கோயில்களை எனக்குத் தெரியும். ஆனால், அவை கடவுள் வாழும் இடங்களே அல்ல. இப்புண்ணிய பூமியைச் சீர்குலைக்கும் அக்கோயில்களின் வரிசையில் இதுவும் சேர்ந்து விடக்கூடாது. அப்படி ஆக விரும்பினால் இக்கோயிலின் காவலர்கள் நம் அனைவரது கோபத்திலிருந்து மீள வேண்டியிருக்கும். நான் பல இடங்களில் பார்ப்பதுபோல இந்து மதத்தையே அழிக்க நீங்கள் நினைக்கவில்லை என்பதை உங்கள் உரையின் மூலம் அறிந்துகொண்டதில் மிகவும் மகிழ்கிறேன். எவ்வளவு மோசமான, அலட்சியமான விஷயங்கள் இருந்தாலும் இந்து மத கலாச்சாரங்களை நீங்கள் காலில் போட்டு மிதிக்காததைப் பாராட்டுகிறேன். நல்லதை அல்லாமல் கெட்டதை மட்டும் அழித்தொழிக்க நினைக்கும் உங்களின் எண்ணத்தையும் தகுதியின் அடிப்படையில் அந்தஸ்தைப் பெற நினைக்கும் உங்களின் உறுதியையும் வாழ்த்துகிறேன்” என்றார். இதன் மூலம் ‘அரிஜனங்களின்’ இடம் எத்தகையதாக இருக்க வேண்டுமென அவர் கருதியிருந்தார் என்பதை அறிகிறோம்.

குடிப்பழக்கத்தையும், மாட்டுக்கறி தின்பதையும் கைவிட வேண்டுமெனவும் உரையில் கேட்டுக்கொண்டார். இவை நீங்கியவராகக் கதையில் நந்தனார் சித்திரிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசுகையில், “உங்கள் உரையில் கதர் அணிவது தீண்டாமையை ஒழிப்பதற்குச் சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இது வெவ்வேறு கருத்துகளைக் குழப்பிக்கொள்வதையே காட்டுகிறது. கதர் அணியும் வழக்கம் வந்த பின்னரே உண்மையான தீண்டாமை இம்மண்ணிலிருந்து ஒழியும்” என்று கூறிவிட்டு இறுதியாக “நீங்கள் இந்த ஆலயத்தைப் பக்தியின் மையமாக ஆக்கப் போகிறீர்கள் என்றால் நம் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான இந்த இரண்டு விஷயங்களைச் செய்யச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறேன்: வாழ்க்கைக்கு உதவக் கூடிய இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுத் தர வேண்டும்“ என்று முடித்தார்.

(தி இந்து, 12.09.1927).

சத்தியாகிரகி நந்தனார்

காந்தியின் முக்கியப் பங்களிப்பு, சத்தியாகிரகம். நந்தனாரை ஒரு சத்தியாகிரகியாக அவர் புரிந்திருந்தார் என்பதை இந்த உரையில் பார்க்கிறோம். இந்தப் போராட்ட முறைக்கும், தமிழகத்திற்கும் இயல்பாகவே தொடர்பிருந்தது. 1919ஆம் ஆண்டு ரெளலட் சட்ட மசோதாக்களை எதிர்த்து தாம் “கண்ட கனவின்” அடிப்படையில் இப்போராட்டத் திட்டங்களை வெளியிட்டதாக காந்தி கூறினார். இதன்படி இந்தியா முழுக்க சத்தியாகிரக சபைகளை அமைக்க அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை காந்தியால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கண்ட கனவைக் காலையில் முதலில் ராஜாஜியிடம் கூறியதாகவும், கனவின்படியான சத்தியாகிரகப் போராட்ட முடிவை அவர் ஏற்றார் என்றும் காந்தி குறிப்பிடுகிறார். ஒத்துழையாமை போராட்ட முடிவைக் கேட்ட ராஜாஜி காந்தியிடம் என்ன கூறியிருப்பார் என்பதை அறிய முடியவில்லை. காந்தியின் போராட்ட வடிவ முடிவை ஏற்றார் என்ற தகவல் மட்டும் கிடைக்கிறது. உண்மையிலேயே விருப்பம் நிறைவேறும் வரை அமைதி வழியில் போராடிய நந்தனார் கதையின் நினைவு கூட ராஜாஜிக்கு வந்திருக்கலாம். ஏற்கெனவே அறிந்த வடிவம் என்ற முறையில் காந்தி கூறியபோது ஏற்றிருக்கலாம். ஆனால், இவையெல்லாம் யூகங்கள் மட்டுமே. காந்தியின் சத்தியாகிரக முறை பற்றிக் கேள்விப்படும் யாருக்கும் நந்தனாரின் போராட்ட முறை நினைவுக்கு வராமல் போகாது. அதனால்தான் சிதம்பரம் வரும்போது காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரையில் நந்தனாரைச் சத்தியாகிரகியாகக் குறிப்பிட்டனர். காந்தியும் தம் உரையில் அதனை ஏற்றார் எனலாம்.

பிறகு சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரிலிருந்த கொற்றவங்குடி (கொத்தங்குடி) தோப்பில் அன்று மாலை நடந்த கூட்டத்தில் காந்தி பேசினார். தன்னுடைய உரையில் நந்தனாரின் ஆன்மிகத் தத்துவத்தை விளக்கினார். முழு உரையும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், “சிதம்பரத்திலிருந்து ஏழு மணிக்குப் புறப்படும் ரெயிலில் செல்ல வேண்டிய அவசரத்திலும் நந்தனாரைப் பற்றிப் பேசத் தொடங்கி மிகவும் ஆழமாக அத்தத்துவத்தை விளக்கிக்கொண்டு போனார்” என்கிறார் அ.ராமசாமி. இந்த உரையில்தான் தனக்கு நந்தனார் கதை அறிமுகமான வரலாற்றைக் கூறினார் காந்தி. அதாவது “யங் இந்தியா”வில் சிதம்பரத்தையும் நந்தனாரையும் பற்றி ராஜாஜி எழுதிய கட்டுரை தம்மை எவ்வாறு கவர்ந்தது என்பதிலிருந்து தொடங்கினார். கட்டுரையைப் படித்ததிலிருந்து நான் செல்ல வேண்டிய யாத்திரை தலங்களில் சிதம்பரம் ஒன்று என்று முடிவு செய்துவிட்டேன். நான்தான் முதல் சத்தியாகிரகி என்று நான் உரிமை கொண்டாடவில்லை. எல்லோரும் சத்தியாகிரகத்தைக் கடைபிடிக்க முடியும் என்றுதான் உரிமை கொண்டாடுகிறேன். நந்தனின் புனித பாதங்கள் பட்ட புண்ணிய பூமிக்கு வந்ததால் உயர்ந்துவிட்டோம் என்ற எண்ணம் இன்று முழுவதும் என் உள்ளத்தைக் கவர்ந்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இவ்விடத்தைவிட்டுப் புறப்படும்போது என் மனம் மிகவும் வேதனை அடையும். சிதம்பரத்தில் உள்ள மக்களாவது பிராமணர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் வேறுபாடு பாராட்டாதவர்களாய் இருக்க வேண்டுமென்று நான் எவ்வளவு விரும்புகிறேன் தெரியுமா? அகந்தை நிறைந்த பிராமணர்களின் அகங்காரத்தை நந்தன் தாங்கிக்கொண்டான். அதன் மூலம் அவனை இழிவாகக் கருதியவர்களைக் காட்டிலும் அவன் எண்ணற்ற மடங்கு உயர்ந்தவன் என்பதை மெய்ப்பித்துவிட்டான். ஆதிதிராவிடர்கள், பஞ்சமர்கள் நந்தனின் உணர்வை மேற்கொண்டு வாழ வேண்டும். (1) நந்தன் தூய்மையான முறையில் சுய பரித்யாகம் செய்து தன் முன்னால் வந்த முட்டுக்கட்டைகளை உடைத்தெறிந்தான். (2) தன்னுடைய உரிமைகளைக் கேட்கும் அளவிற்குக் கூட அவன் தாழவில்லை. (3) தன்னுடைய உயர்ந்த பிரார்த்தனையாலும் தூய்மையான நடத்தையாலும் அவர்கள் வெட்கமடையுமாறு செய்துவிட்டான். உண்மையைச் சொல்லப் போனால் கடவுளே இறங்கி வந்து அவனைத் தண்டித்தவர்களுடைய கண்களைத் திறக்க வைத்தான். அன்று நந்தன் ஒருவன் செய்ததை நாம் ஒவ்வொருவரும் ஏன் செய்யக்கூடாது? அதைச் செய்ய முடியுமானால் நம் நாட்டைப் புனிதமான மக்கள் நிறைந்த நாடாகச் செய்துவிடலாம் என்றார். பிறகு கதர் உணர்வைப் பற்றிப் பேசி தன் உரையை நிறைவு செய்தார். நந்தனார் என்கிற கதை எவ்வாறு தேசியக் கதையாடலின் இலட்சிய பிம்பமாக மாற்றப்பட்டது, ஒரு வழிமுறையாகக் கொள்ளப்பட்டது, முன்மொழியப்பட்டது என்பதை நாம் இந்த இடத்தில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நந்தனார் கதையின் அடுத்த பரிமாணத்தை இங்கே பார்க்கிறோம்.

கதர் யாத்திரை போலவே தீண்டாமை ஒழிப்புக்காகவும் யாத்திரை வேண்டுமென நந்தனார் கல்விக் கழக வரவேற்புரையில் 1927ஆம் ஆண்டு சொல்லப்பட்டது. ஆனால், பின்னாட்களில் காலம் அத்தகைய நிலையை உருவாக்கியது என்பதுதான் சுவாரஸ்யம். அதாவது 1932ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் ஆரம்பித்த பிறகு தீண்டாமை ஒழிப்புக்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் காந்தி. அதில் இரண்டாவது பயணமாகத் தமிழகம் வந்தபோது 1934 பிப்ரவரி மாதத்தில் மீண்டும் சிதம்பரம் நந்தனார் மடம் வந்தார். தமிழகத்திற்கு காந்தி வரப் போகிறார் என்பதை அறிந்து சிதம்பரத்திற்கு அவசியம் வர வேண்டுமென்றும், அவ்வாறு வரும்போது நந்தனார் மடத்திலே தங்க வேண்டுமென்றும் சகஜானந்தர் காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தார். காந்தியும் அக்கடிதத்தை டி.எஸ்.எஸ்.ராஜனுக்கு அனுப்பி, “நான் இந்தச் சுற்றுப்பயணத்தில் சிதம்பரம் செல்வதாக இருந்தால் அங்கு தங்குவதற்கு நந்தனார் மடத்தைத் தவிர வேறு இடத்தைக் குறிப்பிட வேண்டாம்” என்று எழுதியிருந்தார். நந்தனார் மடத்திற்காகவே சுற்றுப்பயணத்தில் சிதம்பரம் சேர்க்கப்பட்டது என்றும், அச்சுற்றுப் பயணத் திட்டத்தில் எத்தனையோ மாறுதல்கள் செய்யப்பட்டும் சிதம்பரம் மாத்திரம் விடப்படவில்லை என்றும் டி.எஸ்.எஸ்.ராஜன் தன் நூலில் எழுதியிருக்கிறார்.

காந்தி நந்தனாரைப் பேசியது அவரோடு நிற்கவில்லை. அவரின் கருத்துகளைப் பின்பற்றி பாட்டுக் கட்டியவர்களும் நாடகம் போட்டவர்களும் அரிஜன சேவா இயக்கப் பின்னணியில் நந்தனாரை ஒரு பெயராகவோ – பாத்திரமாகவோ – உரையாடலாகவோ இடம்பெறச் செய்தனர். இதுவும் நந்தனார் கதைக்குப் பிரபலத்தைத் தேடித்தந்தது.

கிந்தனார் சரித்திரம்கதாகாலட்சேபம்

நந்தனார் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த படைப்புகளுள் ஒன்று ‘கிந்தனார் சரித்திரம்’. தீண்டாமை மறுப்பை வலியுறுத்தும் நோக்கில் ஏற்கெனவே நிலவிய நந்தனார் கதையைத் தழுவி சமகால கதையாக என்.எஸ்.கிருஷ்ணன் (1908 – 1957) ‘கிந்தன் சரித்திரம்’ என்ற கதாகாலட்சேபத்தை இயற்றி நிகழ்த்தினார். இதனை மறு ஆக்கம் என்று கூறலாம். ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட கதையில் போதாமை இருக்கும்போது அல்லது காலத்துக்கேற்ற மாற்றங்களைச் சேர்க்க வேண்டுமெனக் கருதும்போது படைப்பாளிகள் மறு ஆக்கங்களில் ஈடுபடுவதுண்டு. இதனால் மூலப்பிரதியின் புனிதம் கெடும் என்பதான பிரச்சினைகள் வரும் என்பதால் தலைப்பு தொடங்கி மாற்றங்களைச் செய்துகொள்வர். அதேவேளையில் பழைய கதையும் ஞாபகம் வரும்படி பார்த்துக்கொள்வர். இதன்படி இப்படைப்பில் நந்தனின் பெயர் கிந்தன் என்றாக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் மூலப் பிரதியின் கதையாடலை / அதிகாரத்தை மறுக்கக் கிண்டலாகத் தலைப்புகள் வைப்பதுண்டு. எம்.ஆர்.ராதா ராமாயணத்தை கீமாயாணம் என்று மாற்றி நாடகம் போட்டார். இப்போக்கு இக்காலக்கட்டத்தின் அம்சம். இதனை ஒருவகை தலைகீழாக்கம் எனலாம். ஆனால், ‘கிந்தனார் சரித்திரம்’ முழுமையான தலைகீழாக்கம் அல்ல. பழைய கதையைச் சமகாலத்தின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வது என்ற அளவில் அமைகிறது. இன்னும் சொல்லப்போனால் நந்தனார் கதையை மறுப்பது இப்படைப்பின் நோக்கம் அல்ல. ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் நந்தனார் கதையைத் தன்னுடைய கால தேவைக்கேற்ப மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது. என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாக எழுதி அரங்கேற்றிவந்த கதாகாலட்சேபம் இது. அக்காலத்தில் அவரின் புகழ்பெற்ற படைப்பாக விளங்கியதோடு அவருக்கும் புகழைப் பெற்றுத் தந்தது. என்.எஸ்.கே. இக்கதையைத் தீண்டாமை ஒழிப்பு நோக்கில் படைத்திருந்தார். அவருடைய தீண்டாமை ஒழிப்பு பார்வை காந்திய தாக்கம் கொண்டது. 1947க்குப் பின்னர் இதனை இயற்றி அரங்கேற்றிவந்தார். இதற்கான வரவேற்பு கருதி 1949ஆம் ஆண்டு வெளியான ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் கிந்தன் கதாகாலட்சேபம் முழுமையாக இடம்பெற்றது.

ஆதனூர் சேரியில் கிந்தன் பிறக்கிறார். அவருக்குப் பட்டிணம் சென்று படித்து முன்னேற ஆசை. ஆனால் பள்ளி ஆசிரியரோ இதனை மறுக்கிறார். கிராமத்திலேயே நிலத்தில் வேலைகள் பார்த்தால் போதும் என்கிறார். கிந்தன் தன் தந்தையை நாடும்போது அவரும் மறுக்கிறார். பிறகு அடம்பிடித்துச் சென்னைப் பட்டணம் சென்று, பல இன்னல்களைச் சந்தித்து, கல்லூரி முதல்வர் ஒருவரின் உதவியால் படித்துப் பட்டம் பெறுகிறார். பிறகு பள்ளி ஆய்வாளராக தன் ஊருக்கே திரும்பி வருகிறார். சிறுவயதில் அவரை விரட்டிய பள்ளி ஆசிரியரே இப்போது கிந்தனை கட்டித் தழுவிக்கொள்கிறார்.

கல்வியால் தீண்டாமை ஒழியும் என்ற கருத்தின்படி இது இயற்றப்பட்டுள்ளது என்பதைப் படிக்கும்போதே தெரிந்துகொள்ளலாம். அதற்காக நவீன கால மாற்றங்களை வழிமுறையாகக் காட்டியுள்ளது. ரயில், நகரம், கல்வி போன்ற நவீனங்களை பண்ணை வேலை, கிராமம், சாதிமுறை போன்றவற்றிற்கு எதிர்மறையாக முன்மொழிந்துள்ளது. “மறையவரோடு பள்ளு பறையரை ஏற்றி, மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே” என்று பாடுகிறார்.

நந்தனார் கதையோடு இதற்கிருக்கும் ஒற்றுமையை எளிமையாகச் சொல்லிவிட முடியும். நந்தனார் கதையில் வரும் பண்ணை அந்தணர் போல் இதில் ஆசிரியர் வருகிறார். நந்தனாருக்குத் திருப்புன்கூர் கோயிலுக்குப் போய் வந்த பிறகே சிதம்பரம் ஆசை எழுகிறது. இதிலும் கிந்தனுக்குத் திருப்புன்கூரில் ரயிலைப் பார்த்த பிறகே அதில் சென்னை செல்லும் ஆசை எழுகிறது. அங்கு சிதம்பரம், இங்கு சென்னை. அங்கே நடராஜ தரிசனம், இங்கு கல்வி பெறுதல் என்றமைந்துள்ளது. அங்கு இறுதியில் அந்தணர்கள் நந்தனாரை ஏற்றுக்கொண்டது போல் இங்கு ஆசிரியர் கிந்தனை ஏற்கிறார்.

‘கிந்தன் சரித்திரம்’ நூலாக இல்லை. முன்பு ஒலிநாடாக்களில் இருந்திருக்கிறது. ஒலிநாடா பதிவு மா.உத்திராபதி எழுதிய ‘காலந்தோறும் நந்தன் கதை’ நூலில் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளது. ‘நல்லதம்பி’ படத்தில் நிகழ்த்துதலைப் பார்க்கலாம். இப்படைப்பு சொல்லவருவதை நேரடியாக – சுருக்கமாகச் சொல்லியிருக்கிறது. உரையாடல்களும் பாடல்களும் என்று எளிமையாகவும் விரைவாகவும் அமைந்திருக்கிறது. நகைச்சுவையாகப் படைத்திருந்தாலும் இதிலுள்ள கருத்துகள் இன்றியமையாதவை என்ற முறையில் “கிந்தன் சரித்திரமே – கிண்டல் அல்லவே அல்ல” என்ற அறிவிப்போடுதான் கதை தொடங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டில் நந்தனார் கதை பரவிவந்த நிலையில் என்.எஸ்.கிருஷ்ணனின் இந்தப் படைப்பு சிறந்த சீர்திருத்த நோக்கிலான படைப்பாகும். மக்களிடமும் நன்முறையில் சென்று சேர்ந்தது. அதேவேளையில் இந்தப் படைப்பு ஏற்கெனவே இருந்த நந்தனார் கதைச் சட்டகத்தை மறுக்கவில்லை. மறைமுகமாக ஏற்கவே செய்தது. மாறாக அதே சட்டகத்தில் நவீன காலத்தின் சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டது. ஏதோவொரு வகையில் தான் பரவும் இடங்களில் எல்லாம் கிந்தன் கதை தனக்குள் மறைமுகமாக நந்தனார் கதை என்னும் நினைவையும் எடுத்துச் சென்றது.

இந்திரா பார்த்தசாரதியின்நந்தன் கதை

1964ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதிவருபவர் இந்திரா பார்த்தசாரதி. 15 நாடகங்கள் வரை எழுதியிருக்கும் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ‘சரஸ்வதி சம்மான்’ விருது பெற்றார். சமூகம், வரலாறு, தொன்மம் சார்ந்து பல கதைகளை நாடகமாக எழுதியுள்ளார். அந்த வகையில் 1976ஆம் ஆண்டு ‘நந்தன் கதை’ என்னும் நாடகத்தை எழுதினார். இவருடைய நாடகங்கள் எழுத்துப் பிரதிகளாக மட்டுமல்லாமல் அரங்கேற்றுவதற்கேற்ற வகையில் எழுதப்பட்டன. குறிப்பாக நவீன நாடக வகைமையில் எழுதப்பட்டன. ‘நந்தன் கதை’ நாடகமும் அவ்வாறு எழுதப்பட்ட ஒன்றே. காட்சிகள், ஒளி அமைப்பு, ஒலி, நாடகத்திற்கான உடல் மொழி என்று அமைந்தது இந்நாடகம். “இது படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகம் அல்ல. மேடைக்கென்றே எழுதியது” என்று அவரே முன்னுரையில் கூறியுள்ளார். முதலில் இந்தியில் அரங்கேறிய இந்நாடகம், பிறகு தமிழில் பரவலாக அரங்கேறியது.

திருப்புன்கூரில் அபிராமி என்ற தேவதாசி மரபைச் சார்ந்த பெண்ணின் நடனத்தைப் பார்த்துவிட்டு நந்தன் அதைப் புகழ்வதாக நாடகம் தொடங்குகிறது. அந்த ஆட்டம், ஆடுகிற பெண், அவள் கும்பிடுகிற பாப்பார தெய்வம், அந்தச் சாமியைத் தன் மக்களும் கும்பிட வேண்டும் என்ற விருப்பம் போன்றவற்றை நந்தன் வெளிப்படுத்துகிறான். பறையர்களின் வழமையான தெய்வங்களை விடுத்து – பழைய வாழ்வியலை விடுத்து மாற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறான். நந்தனின் விருப்பம் நிறைவேறினால் தங்களின் சாதிய அதிகாரம் பறிபோய்விடும் என்று ஊரின் வேதியர்கள் பயப்படுகிறார்கள். எனவே அதற்கெதிராகத் திட்டமிடுகிறார்கள். ஊரில் உடையார், முதலியார் போன்ற சாதிகளும் இதில் இணைகின்றனர். இதற்கிடையில் நடனமாடும் அபிராமி உதவியோடு திருப்புன்கூர் கோயிலுக்குப் போகத் திட்டமிடுகிறான் நந்தன். அவளும் சம்மதிக்கிறாள்.

நந்தனைத் தந்திரம் காட்டி வெல்ல திட்டமிடுகிறார்கள். பார்ப்பானாக மாற பார்க்கிற நந்தனுக்குப் பக்தன் என்ற நிலையைத் தந்து மயக்க நினைக்கிறார்கள். நேரடியாக மோதினால் நந்தனைப் போல் பல பேர் கிளம்புவார்கள் என்பதால் இந்த தந்திரம் செய்கிறார்கள். வேதியர் கனவில் வந்து கடவுளே கூறியதாக நந்தனை, அபிராமியை ஏற்க வைக்கிறார்கள். பிறகு நந்தன் சமூகத்தவர்களுக்குள்ளே வேறுபாடு கொண்டோரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதன்படி முதலில் பறையர்களின் ஆட்டத்திற்கும் பரதத்திற்கும் போட்டி நடத்தி பரதத்தை ஜெயிக்க வைத்து, நடந்துவரும் விஷயங்களை நந்தன் நம்பும்படி ஆக்குகிறார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் வேதியர் நந்தனை மெச்சி, “நீ சிதம்பரத்திற்குப் போக வேண்டும்” என்கிறார். ஆனால், நந்தன் செய்ய வேண்டிய அறுவடை அப்படியே நிற்கிறது. அதற்காக நந்தனை அவன் வீட்டில் பஜனை செய்ய வைக்கிறார்கள். எதிர்ப்பாளர்களை வைத்து இரவோடு இரவாக அறுவடை செய்து அதனைக் கடவுளின் செயல் என்று நம்ப வைக்கிறார்கள். பிறகு நந்தனையும் அபிராமியையும் தீயில் இறங்க வைத்துக் கொல்வதோடு கதை முடிகிறது.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’க்குப் பிறகு பலரும் அக்கதையை மாற்றியும் மறுஆக்கம் செய்தும் வந்திருப்பினும் அவர்களுள் மிகத் துணிச்சலான முடிவை முன்வைத்தவர் இ.பா.தான். நந்தன் போன்றோரின் மீறல்களை ஆதிக்க அரசியல் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்ற படைப்பூக்கமிக்க யோசனையோடு இந்நாடகத்தை விமர்சனப்பூர்வமாக – தேர்ந்த நாடக மொழியில் எழுதினார். அதுவரை நந்தனார் கதையைக் கேட்டுவந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்திருக்கும். தமிழில் நந்தனார் கதையைத் தீவிர விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுவதற்கு இந்நாடகமே வழிகாட்டியது. முற்போக்காளர்களின் நந்தனார் பற்றிய படைப்புகள் மீது இதன் தாக்கம் உண்டு. இந்த நாடகம் பரவலாக மேடையேற்றப்பட்டது. இந்த விமர்சனத்தின் மீதான உடன்பாடு காரணமாக 1990களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய மேடைகளிலும் இந்நாடகம் மேடையேறியது. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யைக் கதை என்று புரிந்துகொண்டிருந்ததால் மாற்றுக்கதையாக இந்நாடகத்தை எழுதினார் இ.பா. “பார்ப்பானுடைய கைத்தட்டல் பெறுவதற்காக நெருப்பில் எரிந்து போன சோகக் கதையைச் சொல்லுகிறது இந்த நாடகம்“ என்று அவர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கலாம். மேலும் நாடகத்தில் நந்தனார் என்கிற பெயரைத் தவிர்த்து நந்தன் என்றே கையாளுகிறார். ஆர் என்கிற சிறப்பு விகுதி ஒரு பசப்பு என்று அவர் கருதியிருக்கிறார்.

‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் கதையாடலை மறுத்தாலும், ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ எழுதப்பட்டிராவிட்டால் இந்தக் கதை எழுதப்பட்டிருக்காது. இக்கதையோடு அந்தக் கதையையும் இந்நாடகம் நினைவுக்குக் கொண்டுவருவதைத் தவிர்க்க முடியாது. காரணங்களையும் முடிவையும் மாற்றியிருக்கும் இந்நாடகம் தலித்துகளின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதில் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யையே பிரதிபலித்துள்ளது. நாடகத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைப் பாடல்களையும், சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களையும் பயன்படுத்தியுள்ளார் இ.பா. தலித்துகளின் வாழ்க்கை இழிவு படிந்ததுதான் என்கிற எண்ணமே இ.பா.வுக்கும் இருந்திருக்கிறது. கதையின் அரசியலில் மாறுபட்டாலும் பண்பாட்டுப் புரிதலில் அவர் மாறுபடவில்லை என்பதை இங்கே பார்க்கிறோம்.

(தொடரும்)

l[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger