தருணம்
வானம் இப்பவோ அப்பவோ எனக் காட்சியளித்தது
எப்படியும் நிச்சயம்
மழைத்துளிகள் என் மீதுதான் வந்து விழும்
அதைத் தாங்குகின்ற மனநிலையில் இல்லை
ஒரு இரையைப் போல கொத்தி
அது என்னைத் தூக்கிச் சென்றால் கூட தேவலையே
மழையைப் பொறுத்தவரை அதற்கு இதுவொரு
வேண்டாத வேலை
அதனால் என்னை மட்டும் விட்டுச் சுற்றிலும்
அன்றைக்குப் பெய்தது
எல்லோரும் இதை நம்பித்தான் ஆக வேண்டும்
முழுக்க நனைந்திருந்தாலும் நான் நம்புகின்றேன்
நான் மழையை நம்புவதற்கு இதுவே சரியான தருணம்
l
Courtesy: Zandile Masuku
முகத் திரை
என் ஒரு காதுக்கு
என் இன்னொரு காதைக் காண்பிக்க வேண்டும்
இரண்டு காதுகளை
முகம் ஒரு கதவு மாதிரி பிரித்து நிற்கிறது
சந்தோசத்தை இரண்டாக உடைக்கிறதா
துக்கத்தையா தெரியவில்லை
இந்த முகத்திரையைப் பிடிக்க விடாமல்
எந்தக் காற்று அசைத்துக் கொண்டிருக்கிறது
ஒரு கல்லுக்காக நீர் அமுங்கிக் கொள்வது போல
இந்த முகம் அமுங்கிக் கொள்ளாதா
ஒரு காது யாருக்காக காத்துக்கொண்டிருக்கிறது
இன்னொரு காதுக்கா
l
காட்சிகள் எண்ணங்கள்
நிலத்தைவிட மரம் பொறுமையோ என்றிருந்தது
வீடுகளின் மொட்டை மாடியில் கொடியில் மனிதர்கள்
தொங்கிக்கொண்டிருந்தார்கள்
பேருந்துப் பயணத்தில் மரங்கள் நகரவில்லை
பலூன்கள் வராததால் மலைகளே பறந்து சென்றன
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காட்சிகள்
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள்
மிகவும் இறுக்கமாக இருந்தது
பக்கத்தில் சிறிய எறும்பு ஊர்ந்து கொண்டிருந்தது
நல்லவேளை உலகம் அசைகிறது.