மாமன்னன் நந்தன்

ஸ்டாலின் ராஜாங்கம்

8

ந்தனார் கதை இலங்கையிலும் பரவியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த சைவ மறு உருவாக்கத்தில் ஈழத்துச் சைவர்களுக்கு முக்கியமான இடமிருந்தது. சைவ ஏடுகள் அச்சாக்கம் பெற்று நவீன காலத்திற்கேற்ப முறைப்படுத்துதல், உரை எழுதுதல், வரலாறு எழுதுதல், அவற்றைச் சார்ந்து தம் குழுவினர்களுக்குள்ளும் – பிறரோடும் நடத்திய விவாதங்கள் போன்ற செயல்பாடுகளில் தமிழகத்தவர்களோடு யாழ்ப்பாணத்தவர்களும் ஈடுபட்டனர். அவர்கள் இயல்பாக வந்து செல்லும் இடமாகத் தமிழகம் இருந்தது. இதன்படிப் பார்த்தால் இக்காலகட்டத்தில் சைவர்களிடையே பரவிவந்த ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ இலங்கையிலும் அறியப்பட்டிருக்க வேண்டும்.

ஆறுமுக நாவலரும் பெரியபுராண உரையும்

ஆறுமுக நாவலர் உயிரோடு இருந்தபோது எழுதப்பட்டு, அவர் இறந்த பின் பதிப்பிக்கப்பட்ட ‘பெரியபுராண சூசனம்’ (1884) நூலில் திருநாளைப் போவார் புராணம் பகுதிக்கும் உரை இடம்பெற்றிருந்தது. சதாசிவம் பிள்ளை இந்நூலைப் பதிப்பித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழகத்திலும் புகழ்பெற்றிருந்த சபாபதி நாவலர், 1886ஆம் ஆண்டு 24 விருத்தங்களில் ‘சிதம்பர சபாநாத புராணம்’ என்ற நூலை வெளியிட்டார். இவ்வாறு யாழ்ப்பாணப் புலமை மரபினரிடையே நந்தனார் கதை பெரியபுராணம் வழியாக அறியப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ‘சிதம்பர சபாநாத புராணம்’ பற்றி க.கைலாசபதி கூறும்போது “நந்தனென்று ஓர் நீசன் கதையாகப் பாடிய அவர், சிதம்பர தீர்த்த விசேடத்தைப் பாடுகையில் இடைப்பிறவலாகவே இச்சரிதத்தைப் பாடினார்; எனினும் சேக்கிழாரினின்றும் கடுகளவும் வேறுபட்டார் அல்லர்…” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. பெரியபுராணம் வழி நந்தனார் கதை அறியப்பட்டிருந்தாலும், அப்பிரதி செல்வாக்கு பெறுவதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார் பிரதியின் கதை ஏதோவொரு வகையில் காரணமாக அமைந்திருக்கும் எனலாம். எனினும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கதை வடிவம் இலங்கையில் வெகுஜனப்பட்டதைப் பற்றி நேரடித் தகவல்கள் கிடைக்கவில்லை.

இ.முருகையனின் ‘கோபுரவாசல்

இந்நிலையில்தான் ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராக விளங்கிய இ.முருகையன் (1935 – 2009) 1969ஆம் ஆண்டு ‘கோபுரவாசல்’ என்னும் கவிதை நாடகத்தை எழுதி வெளியிட்டார். இது நந்தனார் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கோபுர வாசல் என்கிற தலைப்பே நடராசர் கோபுர வாயிலில் நந்தனார் நுழைவதைக் குறித்தது. நந்தனார் பற்றிய முந்தைய நூல்களில் காணப்படாத சில புதிய பாத்திரங்களை முருகையன் படைத்திருந்தார். எனினும், ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யின் போக்கையே பெரிதும் பின்பற்றியிருந்தார். மேலும் இந்நூல், மேடை நாடகத்திற்கென எழுதப்பட்டிருந்தது. இவ்வகையில் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கதை இலங்கையில் அறியப்பட்டிருந்ததையும், அது வெகுமக்கள் மேடைக்கான வடிவமாக மாறியிருந்ததையும் அறிந்துகொள்கிறோம். நூலின் முன்னுரையில், கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை புத்தக வடிவிலும் கிடைக்கும் என்று இ.முருகையன் குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கிறோம்.

இடதுசாரி தன்மையிலான சமூகக் கண்ணோட்டம்

இ.முருகையனை நேரடியாக இடதுசாரி படைப்பாளி என்று சொல்ல முடியாது. அதேவேளையில் சமுதாயக் கண்ணோட்டத்தோடு கூடிய படைப்பில் அவருக்கு அக்கறை இருந்தது. இதற்குக் காரணம், அன்றைய இலங்கை இலக்கிய – அரசியல் சூழலில் அழுத்தம் பெற்றிருந்த இடதுசாரி போக்குதான். கவிதை நூல்கள், கவிதை நாடக நூல்கள், மேடை நாடகங்கள், திறனாய்வு நூல்கள் என்று பலவற்றை எழுதிய இ.முருகையன், இடதுசாரி திறனாய்வாளரான க.கைலாசபதியோடு சேர்ந்து ‘கவிதை நயம்’ என்னும் நூலையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோபுரவாசல்’ நாடகத்தை எழுதியதற்கான காரணத்தைக் கூறும்போது “இந்நாடகம் எழுதி முடித்த பின்னர் ஈழத்துச் சமுதாய வாழ்வின் சூழலிலே ஒரு சில மாற்றங்கள் முனைப்பாகத் தோன்ற ஆரம்பித்தன. இந்த மாற்றங்களுடனும் இயக்கங்களுடனும் நாடகத்தை இசைவுப்படுத்துவது மிக மிக அவசியம் என நான் கருதினேன். ஆகவே, முதலில் எழுதப்பட்ட பிரதியிலே சிறு சிறு மாற்றங்கள் செய்வது அவசியமாயிற்று” என்றார் முருகையன்.

அந்தச் சிறுசிறு மாற்றங்கள் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை, இந்நாடகம் பற்றி க.கைலாசபதி தரும் சித்திரத்தின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. “சாதிப் பிரச்சினையை நெகிழ்வாக்கிப் பாத்திரங்களின் உளவியலை பேசுவது போல ஆன்ம சொரூப விகசிப்பை பெரிதுபடுத்தியிருக்கிறார்” என்று கூறும் அதேவேளையில் பிற்சேர்க்கையாக மூன்றாம் அங்கத்தின் இறுதிக் காட்சியில் “ஈழத்துச் சிற்றூர் கோயில்” ஒன்றைக் காட்டும் முகமாக ஆலயப்பிரவேசப் பிரச்சினையை அறிமுகம் செய்திருக்கிறார். “கதையிலிருந்து இது ஓரளவு விலகியிருப்பது மட்டுமன்றிப் பிரச்சாரப் பண்பு தெரியும் வகையிலும் அமைந்துவிட்டது” என்கிறார். இதன்படி முருகையன் செய்த சிறு சிறு மாற்றங்களென்பது ஆலயப்பிரவேசம் சம்பந்தப்பட்டதாகவே இருந்திருக்கும் என்று தெரிகிறது. இலங்கையில் இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட ‘வெகுஜன இயக்கம்’ உள்ளிட்டவற்றால் மேற்கொள்ளப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் பணிகளில் ஆலயப்பிரவேசமும் உள்ளடங்கியிருந்தது. எனவே, ஈழத்துச் சமுதாய வாழ்வின் சூழலில் தோன்றிய மாற்றங்கள் என்று இ.முருகையன் கூறியிருப்பது இந்தப் போராட்டங்களையே என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதன்படி இந்நாடகப் பிரதி மீது இடதுசாரி அரசியலின் தாக்கம் இருந்ததைப் புரிந்துகொள்கிறோம். இவ்விடத்தில் ‘கோபுரவாசல்’ என்ற தலைப்பு நந்தனார் நுழையும் தில்லை கோயிலுக்கானதாக மட்டுமல்லாமல் ஈழத்து ஆலயப்பிரவேசத்தோடும் இணைகிறது என்பதைப் பார்க்கிறோம்.

க.கைலாசபதியின் திறனாய்வு

கவிதை நாடகம் பற்றி க.கைலாசபதி ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற தலைப்பில் மதிப்புரை எழுதினார். அக்கட்டுரை 1970ஆம் ஆண்டு வெளியான அவரின் ‘அடியும் முடியும்’ நூலில் இடம்பெற்று இன்றைக்கும் தமிழ்த் திறனாய்வியலின் கொடுமுடி கட்டுரைகளில் ஒன்றாக விளங்குகிறது. ‘கோபுரவாசல்’ நாடகத்தை முன்வைத்து, தமிழில் புழங்கிவரும் நந்தனார் கதைகளைப் பற்றி இடதுசாரி கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அபாரமான கட்டுரையாக இதைக் கூற முடியும்.

நந்தனார் பற்றி முதல் குறிப்பு இடம்பெற்ற சுந்தரர் பிரதி தொடங்கி, இ.முருகையனின் பிரதி வரை நந்தனார் கதை பெற்றுவந்த வளர்ச்சிகளைத் தொகுத்துக் காட்டி அவற்றில் நடந்துள்ள மாற்றங்களையும், அதற்கான காரணங்களையும் தமக்கான வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து விளக்கியிருக்கிறார் க.கைலாசபதி.

அதன்படி சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், கோபாலகிருஷ்ண பாரதியார், இ.முருகையன் ஆகியோரின் பிரதிகளை எடுத்தாண்டுள்ளார். இவற்றில் இ.முருகையன் பிரதி மட்டுமே நவீன காலத்தவை. சமூக  – அரசியல் – பொருளியல் வளர்ச்சிக்கேற்ப சீரான போக்கில் அந்தக் கதை வளர்ந்திருக்கிறது என்று கருதுகிறார். அதாவது, ஒன்றின் தொடர்ச்சியில் மற்றொன்று வளர்ந்தது என்பது அவர் கருத்து. சுந்தரர் ஒரு வரியில் குறிப்பிடும் தகவல், நம்பியாண்டார் நம்பியால் நான்கு வரிப் பாடலாக விவரிக்கப்படுகிறது. பிறகு, சேக்கிழார் பெரியபுராணத்தில் 37 விருத்தங்களாக விவரித்திருக்கிறார். நாம் இன்றறியும் நந்தனார் கதை இம்மூன்று பிரதிகளிலும் பூர்த்தியாகவில்லை. சுந்தரரிடம் ஒரு சிறப்புப் பெயராக மட்டுமே குறிக்கப்படுபவர், நம்பியாண்டார் நம்பியால் ஊர் – சாதி – தில்லை சென்றமை – மூவாயிரவர் தொழுதமை ஆகிய தகவல்களோடு சேர்க்கப்படுகிறார்.

சேக்கிழாரோ அவற்றோடு ஊர் வர்ணனை – நந்தனார் என்கிற பெயர் – திருப்புன்கூர் தரிசனம் – திருப்புன்கூர் மீண்ட பிறகு தில்லை போக விருப்பம் – தில்லை சென்று தீயில் மூழ்கி இறைவனை அடைந்தமை ஆகியவற்றைச் சேர்த்தார். இவை யாவும் நந்தனார் பற்றிய தகவல்கள் மட்டுமே. சிறிய அளவிலான கதைத்தன்மை அவற்றில் இருந்தது. மற்றபடி இன்றைக்கு நாமறியும் கதை வடிவமோ, கதைக்கான முரண்பாடுகளோ அவற்றில் இல்லை. குறிப்பாகப் பிராமண ஆண்டையோ, அவரோடு முரண்பாடோ இல்லை. ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யில்தான் ஆண்டை என்ற பாத்திரமும் அதையொட்டிய முரண்பாடும் இடம்பெறுகிறது. கதையின் ‘உச்சம்‘ எட்டப்படுகிறது. இந்தப் பிரதிகளின் கதை வளர்ச்சியை கைலாசபதி, கதைகள் பிறந்த காலகட்டத்தின் சமூக – அரசியல் – பொருளியல் வளர்ச்சியின் பின்புலத்தில் வைத்து விளக்கியுள்ளார். கருத்தளவில் மார்க்சியர் என்பதால் வர்க்கக் கண்ணோட்டமே அவருக்குப் பிரதானம். இலக்கியத்தைச் சமூகத்தின் பிரதிபலிப்பாக அணுகுவது இப்பார்வையின் அடிப்படை.

க.கைலாசபதியின் எல்லா கட்டுரைகளும் இலக்கியத்தின் சமுதாய அடிப்படைகளை விளக்குவதையே உள்ளீடாகக் கொண்டவை. ‘அடியும் முடியும்’ நூலின் முன்னுரையில் கூட “இலக்கியக் கருத்துகள் மட்டுமல்லாது இலக்கிய வடிவங்களும் உத்திகளும் கூட குறிப்பிட்ட சமுதாய நிலைகளினது விளைபொருள்கள் என்பதை இயன்றளவு திட்டமாக எடுத்துக்காட்ட முயன்றிருப்பதாக”வே கூறியிருப்பதைப் பார்க்கலாம்.

இத்தகைய சமுதாய அரசியல் பொருளியல் பின்னணியென்பது நந்தனார் கதையைப் பொறுத்தவரையில் சாதியமைப்பிலிருந்து விலகியதாக இல்லை. சமுதாய அரசியல் பொருளியல் மாற்றங்களோடு சாதியின் வளர்ச்சிப் போக்கும் பிணைந்ததாக இருக்கிறது என்று கைலாசபதியும் கருதினார். சுந்தரர் காலமாகக் கூறப்படும் பல்லவர் காலத்தின் சாதியமைப்பை நந்தனார் கதையிலிருந்து அவர் புரிந்துகொள்கிறார். புறச் சமயத்தினருக்கு எதிராக நில உடைமையாளர்கள் கட்டிய பரந்துபட்ட அணியின்போது தேவைப்பட்ட இணக்கமே நந்தனாரை அடியாராக எழுத வைத்தது என்றும் புரிந்துகொண்டார். அடுத்து சேக்கிழாரின் ஆக்கத்தையும் சோழர் கால சமூகத் தேவையிலிருந்து பாடியதாகப் பார்க்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியாரின் வளர்த்தெடுப்பைத் தஞ்சை மாவட்ட நிலப்பிரபுத்துவ எதார்த்தத்திலிருந்து கண்டார். நந்தனார் கதையின் வளர்ச்சிப் போக்கை விளக்கும் வகையில், மறுபுறமாக வர்க்க முரண்பாடு என்னும் கருத்தியலைச் சமூக வரலாற்று நிலையில் வைத்து விளக்குவதற்கான பிரதியாக இக்கதையைக் கருதினார். அதனால்தான் நந்தனார் கதையில் அழுத்தம் பெற்றிருக்கும் சாதி முரண்பாட்டைப் பற்றிப் பேசும்போது “சாதியைத் தனித்து நோக்காது, நிலமானிய அமைப்போடு சேர்த்து நோக்க வேண்டும். வர்க்கம் – வர்ணம் – சாதி ஆகிய மூன்றின் இணைவில் இதனைக் காண வேண்டும்” என்றார். அதேபோல கதை மாந்தர்களின் உளவியல் சார்ந்தும் கதையைப் பார்க்க முடியாது என்றார். மார்க்சிய அணுகுமுறையை வீழ்த்த முதலாளித்துவ ‘சதி’யாகப் பார்க்கப்பட்ட உளவியல் அணுகுமுறையை எதிர்கொள்ள முற்பட்டிருந்த கைலாசபதியிடம் இக்கருத்துதான் வெளிப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ‘கோபுரவாசல்’ நாடகத்தில் “சாதி பிரச்சினையை விட ஆன்ம சொரூப விகசிப்பை பேசியிருக்கிறார்” என்று இ.முருகையனை விமர்சித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. க.கைலாசபதியைப் பொறுத்தவரையில் வரலாறு தடையறாமல் மேல்நோக்கி வளர்ந்துவந்திருக்கிறது என்ற பார்வை செயல்பட்டிருக்கிறது. இதன்படி, சாதியமைப்பு ஆதிக்கவாதிகளால் சீரான வளர்ச்சிப் போக்கில் வளர்த்தெடுக்கப்பட்டதாகப் பார்க்கிறார். இதனைக் காட்டுவதாகவே நந்தனார் பற்றிய நான்கு பிரதிகளும் இருப்பதாகக் கருதி அவற்றை அடுக்கி விளக்கியிருக்கிறார்.

Illustration : Ravi Palette

காலந்தோறும் நந்தன் கதை

க.கைலாசபதியின் ‘புலைப்பாடியும் கோபுரவாசலும்’ கட்டுரை தமிழ்த் திறனாய்வுலகில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1980களில் வெளியான ஆய்வுகள் சிலவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம். சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்த் துறையில் ஆய்வு நிறைஞர் (M.Phil) பட்டத்திற்காக மா.உத்திராபதி என்ற ஆய்வு மாணவர் ‘இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியத்தில் நந்தன் கதை – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தார். அது 1989ஆம் ஆண்டு ‘காலந்தோறும் நந்தன் கதை’ என்ற நூலானது. க.கைலாசபதி 19ஆம் நூற்றாண்டின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’க்கு முன்பிருந்த பிரதிகளை ஆய்வு செய்திருந்தார் என்றால், இந்த ஆய்வு ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’க்குப் பின் இருபதாம் நூற்றாண்டில் எழுந்த பிரதிகளை ஆய்ந்திருந்தது. ஒரு புதினம் (கோபாலசாமி ஐயங்காரும் ஆராவமுத ஐயங்காரும் சேர்ந்து எழுதிய ‘நந்தன்’), ஒரு சிறுகதை (புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’), ஒரு நாடகம் (இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’), ஒரு கதா காலட்சேபம் (என்எஸ்கேயின் ‘கிந்தனார் சரித்திரம்’), ஒரு கவிதை (இ.முருகையனின் ‘கோபுரவாசல்’), ஒரு வில்லுப்பாட்டு (பாலசுப்ரமணியனின் ‘நந்தனார் ஆராய்ச்சி கதை’) போன்றவையே அப்பிரதிகள். இவை அனைத்தும் 1917 – 1982 காலகட்டத்தில் படைக்கப்பட்டவை; நவீன இலக்கியத்தோடு தொடர்புடையவை அல்லது நவீன காலத்தின் தாக்கம் பெற்றவை.

உத்திராபதியின் ஆய்வேடு இந்தப் பிரதிகளின் உள்ளடக்கத்தை விவரிப்பதோடு நிறைவடைகிறது. இடதுசாரி அரசியலை வெளிப்படையாகப் பிரதிபலிக்கவில்லை எனினும் அதன் தாக்கத்துக்குட்பட்டே அமைந்திருக்கிறது. இடதுசாரி கண்ணோட்டம் பரவி ‘மாற்றம்‘ என்ற அரசியல் மேலோங்கியிருந்த காலத்தில் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரம், அடிமையாயிருந்து மீண்டெழ வேண்டியதின் குறியீடாக மாறியிருந்தது. எல்லாவற்றையும் விட, க.கைலாசபதியின் ‘புலைப்பாடியும் கோபுரவாசலும்’ ஆய்வின் தொடர்ச்சியாக இந்நூல் அமைந்தது என்று நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆய்வுப் பொருளைத் தேர்ந்தெடுக்கும்படி யோசனை கூறியவராக நூலாசிரியரால் சொல்லப்பட்டிருக்கும் ச.சீ.கண்ணன் ஒரு மார்க்சியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்டோர் சமூகக் கொடுமைகளுக்கு உள்ளாகிற நிலை நீடித்திருக்கும் வரை, நந்தன் கதை மறுபரிசீலனை செய்யப்பட்டுப் புதிய கருத்துகளுடன் மறுவார்ப்புச் செய்யப்படும் என்பதே அந்நூலின் முடிவு.

வர்க்கமும் சாதியும்

இதேபோல சுந்தரராஜ் மாணிக்கம் 1980களில் எழுதிய Nandanar – The martyr என்ற நூலும், ராஜ் கௌதமன் எழுதிய ‘பெரியபுராணத்தில் மேல் – கீழ் வரிசையும், முறை மீறல்களும்’ என்ற கட்டுரையும் (தலித் பண்பாடு, 1993) குறிப்பிட வேண்டிய ஆய்வுகளாகும். இரண்டுமே தலித் கண்ணோட்டத்தின்படி எழுதப்பட்ட ஆய்வுகளாகும். சுந்தரராஜ் மாணிக்கம் திருத்தொண்டத்தொகை, பெரியபுராணம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆகிய பிரதிகளைக் கையாண்டு அவற்றில் நந்தனாருக்கு மறுக்கப்படும் கோயில் வெளி, பண்ணையடிமை முறை, நூலாசிரியர் விவரணை முறை ஆகியவற்றைச் சுட்டி நந்தனார் வாழ்க்கையில் நடந்த மறைப்பு – திரிபு – சூழ்ச்சி ஆகியவற்றை விளக்கியுள்ளார். க.கைலாசபதி நந்தனார் கதையில் நடப்பதைப் படைப்பாளிகளின் சூழ்ச்சிகளாகப் பார்க்காவிட்டாலும், அவரை அடியொற்றிய சுந்தரராஜ் மாணிக்கம் புதிதாகச் சிலவற்றைப் பார்த்தார் எனலாம். மேலும், தான் பயன்படுத்திய நூல் தரவுகளில் ஒன்றாக கைலாசபதி கட்டுரையையும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக நந்தன் பற்றி 1991இல் எழுதப்பட்ட நூலுக்கு ‘காலந்தோறும் நந்தன்’ என்றே பெயரிட்டார் மாணிக்கம். இதன்படி மா.உத்திராபதி 1989இல் ‘காலந்தோறும் நந்தன் கதை’ என்றும், சுந்தரராஜ் மாணிக்கம் 1991இல் ‘காலந்தோறும் நந்தன்’ என்றும் கிட்டதட்ட ஒரே தலைப்பில் நூல் கொணர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் கௌதமனின் வாசிப்பு

க.கைலாசபதி கட்டுரைக்குப் பிறகு நந்தனார் பற்றி முன்வைக்கப்பட்ட மற்றுமோர் அபாரமான பார்வை என்று ராஜ் கௌதமனின் கட்டுரையைக் கூறலாம். ஆனால், ராஜ் கௌதமன் பெரியபுராண நந்தனாரை மட்டுமே எழுதினார். தமிழில் தலித் இலக்கிய எழுச்சியையொட்டி எழுதப்பட்ட இக்கட்டுரை, கைலாசபதி யோசித்திராத சில நுட்பங்களைத் தொட்டிருந்தது.

ராஜ் கௌதமன் தலித் இலக்கியம், தலித் திறனாய்வு போன்றவை எவ்வாறு இருக்க வேண்டும் என்று பல்வேறு பார்வைகளை முன்வைத்தவர். அதன் தொடர்ச்சியில் எழுதப்பட்டதுதான் இக்கட்டுரை. குறிப்பாக, அதுவரையிலான தமிழ் இலக்கியப் போக்கைத் தலித் இலக்கியப் பார்வையில் அணுகிப் பார்ப்பது என்பது அவரின் பிரதான செயல்பாடாக இருந்தது. அதன்படி நந்தனார் கதையை அவர் ஆய்வு செய்தார். சாதியமைப்பைப் புரிந்துகொள்வதில் வர்க்கக் கண்ணோட்டத்திற்கு இருந்த போதாமையால் மார்க்சியத்திற்குப் பிந்தைய வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டு தலித் வாசிப்பு கட்டமைக்கப்பட்டது. இந்தக் கட்டுரையில் மேற்கத்திய வாசிப்புக் கோட்பாடுகளின் பின்னணியில் நந்தனார் கதை மீது வாசிப்பை நிகழ்த்தினார் ராஜ் கௌதமன். எனவே, க.கைலாசபதியின் ஆய்வு அவருக்குத் தேவைப்படவில்லை.

ஒரு பனுவலை வடிவ ரீதியாக, மொழி ரீதியாக வரையறுக்கப்பட்ட ஒழுங்குக்குள்ளிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆய்வு வழமையை ராஜ் கௌதமனின் தலித்தியப் பார்வை கட்டுடைத்திருந்தது. புனிதப் பிரதி மீதான இத்தகைய கட்டுடைப்பை அவர் விமர்சன மொழியாகத்தான் பார்த்தார். சான்றுகளாக குலோத்துங்கன் என்பதை ‘கிலோத்துங்கன்’ என்றும், பெரியபுராணம் என்பதை ‘பெ.பு’ என்றும் குறிப்பிட்டிருப்பதைக் கூறலாம். பக்தி மார்க்கச் சோழர் காலத்தை இந்து பார்ப்பன வேளாளர்களின் பொற்காலம் என்று அவர் சாடுகிறார். தோண்டிப் பிரேத பரிசோதனை செய்தல், குற்றச் செயல்களை அம்பலப்படுத்துதல் என்று அவர் கூறுவதற்கேற்ப இக்கட்டுரை அமைந்துள்ளது. முறைமீறல் (Inversion), மீட்பாக்கம் (Reversion) என்னும் கருத்தாக்கங்களைக் கையாண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவை இரண்டும் பின்நவீனம் உள்ளிட்ட சிந்தனை முறைகளிலிருந்து தருவித்துக்கொண்ட பார்வைகளாகும்.

முறைமீறல் என்பது ஆதிக்கத்தை எதிர்க்கும் மக்களின் கலக உத்தி. மீட்பாக்கம் என்பது அடிமைப்பட்டவர்களுக்கு முறைமீறலை அனுமதிப்பது போல், ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகும். இவ்விரண்டும் பெரியபுராணத்தில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்பதையே அவரின் கட்டுரை சுட்டிக்காட்டியிருக்கிறது. அடியார்களின் வைப்பு முறை – ஊர் – குடியிருப்பு – சுற்றுச்சூழல் வர்ணனை – அவர்கள் பெற்றிருந்த உரிமை – புகழ்ச்சி – பணி – கையாளும் கருவிகள் – பெறும் பயன்கள் ஆகியவற்றில் இயங்கும் மேல் கீழ் வரிசைகளை இக்கட்டுரை கூறியிருக்கிறது. அதன்படி ஒரு பிரதி எவ்வாறு சாதிக்கேற்ற மேல் கீழ் வரிசையை நுட்பமாகக் கையாளுகிறது என்பதை அவர் சொல்லியிருந்தார்.

கைலாசபதி வரலாற்று நிலையில் அணுக, ராஜ் கௌதமன் வரலாற்றைப் பின்னுக்கு வைத்துப் பிரதியை மட்டுமே அணுகியிருந்தார்.

கொலைக்களங்களின் வாக்குமூலம்

இதற்கடுத்து இடதுசாரி தரப்பிலிருந்து வெளியான மற்றுமொரு நூல் அருணன் எழுதிய ‘கொலைக்களங்களின் வாக்குமூலம்’ (2010). நந்தன், காத்தவராயன், மதுரை வீரன், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களாகிப்போன மனிதர்கள் பற்றிய கள ஆய்வு நூல் இது. தான் நேரில் கண்டதை வைத்து “நால்வருக்கும் புறச்சான்றுகள் இருப்பதாக” நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். முதலில் சென்றது நந்தனாரைத் தேடி. இதன் மூலம் நந்தனை உண்மையில் வாழ்ந்த மனிதராக அவர் புரிந்திருந்தார். திருத்தொண்டர் புராணத்தில் அப்பாத்திரம் கற்பனையாக இருந்தாலும், அது வரலாற்றுக் காவியம்தான் என்றார். ஆதனூர் என்ற பெயரில் இன்றிருக்கும் ஊருக்குச் சென்று அதுவே நந்தன் வாழ்ந்த ஊராக இருக்கு வேண்டுமென்று ‘அறுதியிட்டார்’.

திருப்புன்கூர் கோயிலுக்கு வெளியே இருக்கும் நந்தனார் சிலை, விலகிய நிலையில் இருந்த நந்தி, கோயில், குளம் ஆகியவற்றைக் கண்டு நந்தனார் கதையில் சொல்லப்பட்டிருப்பதை ‘உண்மை’ எனக் கண்டார். நந்தனார் கதையில் அற்புதங்களாகச் சொல்லப்பட்டிருப்பவை மீது பகுத்தறிவு விளக்கம் தருகிறார் என்பதைத் தாண்டி அந்நூலை வரலாற்று நூலாகவும் அவர் பார்த்தார். தில்லை சென்று நந்தனார் புகுந்ததால் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் மதிலையும் கண்டெழுதினார். “எதார்த்தப்பூர்வம்”, “அற்புதம்”, “காலத்தை வென்று நிற்கிறது” என்று பலப்பட புகழ்ந்திருக்கிறார். இதுவோர் அவசரமான மேலோட்டமான நூலாகத் தெரிகிறது. நந்தனார் சான்றுகளைத் தேடுவதென்று முடிவெடுத்துவிட்ட நூலாசிரியர் திருபுன்கூர், ஆதனூர், சிதம்பரம் தவிர்த்த பிற இடங்களைப் பார்க்கவில்லை. குறிப்பாக, தாராசுரம் கோயிலிலும், திருப்பனந்தாள் கோயிலிலும் நந்தனார் சிற்பமாகக் கூறப்படுவதைப் பார்த்ததாகத் தெரியவில்லை. மற்றொரு மார்க்சிய ஆய்வாளரான க.கைலாசபதியால் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெறாத 22 நாயன்மார்களில் ஒருவராக நந்தனார் கூறப்படுகிறார் என்ற நிலையில் தன்னுடைய முடிவோடு வைத்து அவற்றை விளக்கியிருக்க வேண்டும். மேலும், திருப்புன்கூர் உள்ளிட்ட இடங்களில் சிலைகள் இருக்கிறது என்றால், கதை எழுதப்பட்ட காலத்திற்கும் அச்சிலைகளின் காலத்திற்குமான தொடர்பை ஆராய்ந்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் வேறெந்த அமைப்பினரை விடவும் ஆய்வுகளாக – படைப்புகளாக – வேறு சொல்லாடல்களாக நந்தனாரை அதிகம் கையாண்டவர்கள் தமிழக இடதுசாரியினரே. இவர்களின் சமூகம் பற்றிய பார்வைக்கும், அவர்களின் இலக்கு மக்கள் குறித்த நோக்கத்திற்கும், நந்தனாரைக் கையாண்டதற்கும் தொடர்பு உண்டு. இடதுசாரிகள் நிலவுடைமை முறைக்கு எதிராகவும், அவர்களின் சுரண்டலுக்காளான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் அரசியலை ஏற்றவர்கள். உழைக்கும் மக்கள் பெரும்பாலும் தலித்துகளாக இருந்தனர்.

இம்மக்கள் ஆண்டைகளின் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள்ளாமல், அவர்களை – அவர்கள் சார்பாகக் கூறப்படும் விதி, கடவுள் போன்ற சமய நம்பிக்கைகளை – ஏற்று ஏமாந்து போகிறார்கள் அல்லது சமரசமாகிறார்கள் என்ற பார்வையையும் இடதுசாரிகள் கொண்டிருந்தனர். அம்மக்களின் அறியாமையை அமைப்பு மூலம் நீக்கி, போராடி சமத்துவம் ஏற்படுத்தவே கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்று கருதிவந்தனர். இதற்கு உகந்த உழைக்கும் வர்க்க பிம்பமாக – குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் இருந்தார். இதனால் தங்கள் அரசியலுக்கான தொன்மமாக, அதிலும் எதிர்மறை தொன்மமாக நந்தனாரை எடுத்துக்கொண்டிருந்தனர். தேசிய இயக்கமும் இந்து இயக்கங்களும் ஆன்மீக உருவங்களையும் மன்னர் மரபினரையும் முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் பண்டைய தமிழ் மன்னர்களைத் தேடினர். இந்த நிலையில்தான் இடதுசாரிகள் உழைக்கும் அடையாளமான நந்தனாரை எடுத்தாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger