கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு பட்டியலினச் சமூகங்களுக்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கிட மாநிலங்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று தீர்ப்பளித்தது. இந்திய இடஒதுக்கீட்டு வரலாற்றில் இதுவொரு முக்கியமான தீர்ப்பு. பட்டியலினத்திற்குள் மிகவும் பின்தங்கிய சாதிகள், குழுக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்யும் தீர்ப்பின் பகுதியை நீலம் வரவேற்கிறது. ஆனால், அத்தீர்ப்பில் குறிப்பிடப்படும் க்ரீமி லேயர் முறை என்பது அரசிற்கு நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையாகவே இருப்பினும், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
பட்டியலின பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கேற்ப ஒன்றிய – மாநிலக் கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. அதன் பலன் அப்பிரிவுகளில் இருக்கும் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்குச் செல்வதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் பல்வேறு மாநிலங்களில் எழுந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் பட்டியலினத்திற்குள் மிகவும் பின்தங்கிய சாதிகளை ஒரு குழுவாகக் கண்டறிந்து அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கச் சட்டங்கள் இயற்றின.
பட்டியலினப் பிரிவில் உள்ள சாதிகளைக் குடியரசுத் தலைவர் மட்டுமே அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341இன் கீழ் வெளியிட முடியும், அதில் மாற்றங்கள் செய்யும் உரிமை நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது. இதன் அடிப்படையில் பட்டியலினப் பிரிவில் தனிக்குழுக்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லையென்று பட்டியலினப் பிரிவுகளில் இருக்கும் ஒரு சாரார் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அது மேல்முறையீட்டில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த அமர்வு பட்டியலினத்திற்குள் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாகத் தீர்ப்பளித்தது.
சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக இடஒதுக்கீடு அளித்தது. மைசூர், கோலாப்பூர் போன்ற சமஸ்தானங்களும் அதே காலகட்டத்தில் பிராமணரல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. தேசிய அளவில் பூனா ஒப்பந்தத்தின் விளைவாகப் பட்டியலின மக்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தலித்துகளைத் தவிர பிறருக்கு அளிக்கப்பட்டுவந்த இடஒதுக்கீடுகள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டு, பின்னர் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் பின் ஒவ்வொரு மாநிலமும் பட்டியலின மக்களுக்கும் பிறப்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அளவும் கோரிக்கைக்குத் தகுந்தாற்போல உயர்த்தப்பட்டுவந்தன. மண்டல் கமிஷன் அறிக்கையை ஒட்டி ஒன்றிய அளவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டினை முழுமையாக ஆய்வறிந்து தீர்ப்பளித்தது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பே இன்றுவரை இடஒதுக்கீடு வழக்குகளுக்கும் சட்டங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அளவில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் க்ரீமி லேயரும் கண்டறியப்பட்டு, அவர்கள் இடஒதுக்கீட்டில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டறிந்து குழுக்களை உருவாக்குவது, க்ரீமி லேயரை நடைமுறைப்படுத்துவது என்பன பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிமன்றங்கள் கூறிவந்த நிலையில், இத்தீர்ப்பு பட்டியலினத்திற்குள்ளும் பின்தங்கியவர்களைக் கண்டறிய மாநிலங்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறுகிறது.
பட்டியலினத்திற்குள் ஒருசில பிரிவினரால் வரவேற்கப்படும் இத்தீர்ப்பு மற்ற பிரிவுகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. தீர்ப்பினை விமர்சிப்பவர்கள் இது பட்டியலின மக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றும் பட்டியலினத்திற்குள் மாறுதல்களைச் செய்யும் அதிகாரத்தை பாபாசாகேப் அம்பேத்கர் காரணமாகத்தான் நாடாளுமன்றத்திற்கு அளித்தார், இந்த அதிகாரம் மாநிலங்களுக்குக் கைமாறினால் அதை மாநில அரசுகள் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்பப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது என்றும் வாதிடுகின்றனர்.
பட்டியலினத்திற்குள் இருக்கும் சில சாதிகளுக்கும் குழுக்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன் சேரவில்லை என்பது நிதர்சனம். அதனால் அவர்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருப்பதும் உண்மை. இந்த உள்ஒதுக்கீட்டினைப் பட்டியலினம் ஒரு குழுவாக முன்னேறுவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டுமேயொழிய இதனால் ஒற்றுமை குலையும் என்கிற வாதம் ஏற்கத்தக்கதல்ல. அதேபோல இத்தீர்ப்பில் பட்டியலில் மாறுதல் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, அந்தப் பட்டியலில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சிறப்புப் பங்கீடு ஏற்படுத்த மட்டுமே உரிமை இருப்பதாகக் கூறுகிறது.
உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பிற்குப் பிறகு இந்திய அளவில் பட்டியலினச் சமூகங்களிடையே அவை மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இத்தீர்ப்பு புதியது. இதை எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பம் நிலவுவது எதார்த்தமானது. கலாச்சார ரீதியாக இந்தியா முழுக்க உள்ள தலித்துகள் வேறுபட்டு இருப்பினும் “சாதியற்றத் தன்மை, பௌத்தம்“ ஆகியவற்றை மையப்படுத்தி இந்தியத் தலித்துகள் ஒற்றுமையோடு இயங்க வேண்டும் என்று விரும்பியவர் பாபாசாகேப் அம்பேத்கர். இந்த ஒற்றுமைக்குக் குந்தகம் விளைந்துவிடுமோ என்கிற அச்சத்தினால் இத்தீர்ப்பை விமர்சன நோக்கோடு அணுகுகிற பிற மாநிலத்தவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை பட்டியலினச் சமூகத்திற்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பேசாமல் நிலவும் ஒற்றுமை என்பது சமூகநீதி ஆகாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இக்குழப்பங்களைக் கலந்தாலோசித்துத் தீர்வு காண வழிவகை செய்யும் வகையில் தலித்துகளிடையே ஜனநாயகப்பூர்வமான உரையாடல் நிகழ வேண்டும்.
பட்டியிலனச் சமூகங்களின் மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவினை மத்திய மாநில அரசுகள் உடனடியாக உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனூடாக மத்திய மாநில அளவில் அரசு வேலைகளில் நிலவும் காலியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அவற்றை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உள் ஒதுக்கீட்டினை அமல்படுத்தவதில் நிலவும் சிக்கல்களைக் களைந்து, அரசு வெளிப்படையாகச் செயற்படுமேயானால் மேலே குறிப்பிடப்பட்ட பெருவாரியான குழுப்பங்களுக்குத் தீர்வு காண முடியும்.