அஞ்சலி : ராஜ் கௌதமன் (1950 – 2024)
என் நூல்கள் யாரையும் அனாவசியமாகப் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல. கண்களுக்கு முன் நன்றாகக் காட்சி அளிக்கின்ற சமூக – கலாச்சார வரலாற்றுக்குக் கண்மூடிக்கொள்ளுவது வேதனையும் ஆத்திரமும் உண்டாக்குவதைப் பொறுக்க முடியவில்லை. மற்றப்படி நான் ஒரு ரசிகன். என்னைச் சுற்றி சந்தோசத்தை விளைவிக்க வல்லவன்.
– ராஜ் கௌதமன்
தமிழ் மரபாகப் பேணிக் காக்கப்பட்ட புனிதங்களையெல்லாம் தன்னுடைய விமரிசனச் சட்டகத்திற்குள் நிறுத்தி உடைத்தெறிந்த ராஜ் கௌதமன், பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நவம்பர் 13ஆம் தேதி ஒரு பேழைக்குள் பேரமைதியாகப் படுத்திருந்தார். அவரின் இறுதியமைதி மனதிற்குள் ஒரு பிரளயத்தை உண்டுபண்ணியது. மனிதர்கள் கண்ணியமாகவும் சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக அறிவுச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தவரை அவரது குடும்பத்தினர் மிக அழகாக கோட் சூட் அணிவித்துக் கிடத்தியிருந்தனர். ஓயாமல் பேசியும் எழுதியும் சிந்தித்தும் வந்த ஒருவர் தன்னுடைய செயற்பாட்டைப் பௌதீகமாக நிறுத்திக்கொண்டார். அந்தப் பேழைக்கு அருகில் அவருடைய இணையர் க.பரிமளம் அழுதுகொண்டிருந்தார். ‘‘ஒலகத்துல நடக்காததா நடந்துடுச்சு. ஏன் கண்ணீர் விட்டு மூக்கச் சிந்திக்கிட்டு இருக்குறவ’’ என்றே கரகரத்த குரலில் தன்னுடைய மனைவியைப் பகடி செய்திருப்பார். அதுதான் ராஜ் கௌதமன். அவருடைய தன்வரலாறாக அறியப்படும் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’ ஆகியவற்றில் இழையோடும் எள்ளல் வெறும் எழுத்து மட்டுமன்று, அதுதான் அவருடைய இயல்பு. எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத அவர், மனிதர்களிடமிருந்து பெரிதும் விலகியே இருந்தார். வாசிப்பு, எழுத்து, குடி என்றுதான் அவருடைய வாழ்க்கை இருந்ததாக அவரின் சுயசரிதை வழியே நாம் அறியமுடிகிறது. தமிழ்நாட்டின் வரைபடத்தில் காண இயலாத வ.புதுப்பட்டி கிராமத்தில் பிறந்து, இன்று தமிழின் அறிவுமுகமாக மாறியிருப்பது எதேச்சையாக நடந்ததல்ல. அவரின் கடும்முயற்சியால் விளைந்தது. பள்ளிக் காலங்களில் என்னுடைய தமிழாசிரியர் இரா.கந்தசாமியால் ராஜ் கௌதமனின் எழுத்துகள் அறிமுகமாகியிருந்தாலும் அவரை நேரடியாகச் சந்தித்ததில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் பயின்ற கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு அவரை அழைத்தேன். நேசிக்கும் ஒருவரிடம் காதலைச் சொல்லும் பதற்றத்தோடு முதன்முதலாகப் பேசினேன். அந்நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார் என்றாலும் எங்களுடைய உரையாடல் அவர் இறுதியாகப் பேசிக்கொண்டிருந்தவரை தொடர்ந்தது.
ராஜ் கௌதமனின் வருகை
பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி எழுந்த மறுமலர்ச்சியின் விளைவாக எழுத வந்தவர் ராஜ் கௌதமன். அவருடைய எழுத்துகளை முதன்முதலாக எதிர்கொள்ளும் ஒருவர் அதிர்ச்சியாவார். இலக்கியம், இலக்கிய ஆளுமைகள் குறித்துச் சமூகம் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் அத்தனையையும் தலைகீழாக்கம் செய்திருப்பார். ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ நூலில் 19ஆம் நூற்றாண்டின் சைவ அரசியல்; தமிழைச் சைவமாக மாற்ற மேற்கொண்ட முயற்சி; சைவத்தை வள்ளலார் உள்வாங்கிக்கொண்ட விதம்; அவரை ஆசாரச் சைவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பன குறித்துத் தனக்கே உரித்தான பகடிமொழியில் விளக்கியிருப்பார்.
பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகள், தலித் பண்பாட்டாய்வுகள், தமிழின் நவீன ஆளுமைகள், தன்வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல களங்களில் செயல்பட்டிருக்கிறார். தலித் பிரச்சினைப்பாடுகளை எழுதவந்த ஒருவர், எதற்காகப் பழந்தமிழ் இலக்கிய ஆய்வில் கவனம் குவிக்க வேண்டும் என்கிற கேள்வி மிக இயல்பாக எழக்கூடியதுதான். 20ஆம் நூற்றாண்டில் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத்தாரும் பின்னாளில் வந்த தமிழ்த்தேசியர்களும் பழந்தமிழ் இலக்கியங்களைக் கொண்டே தமிழரின் வரலாற்றைக் கட்டியெழுப்பத் தலைப்பட்டனர். சங்க காலம் ஒரு தங்க காலம் என்று சொல்லப்பட்டுவரும்போது அதில் தலித்துகளின் இடம் என்னவாக இருந்தது என்கிற கேள்வியிலிருந்தே கௌதமனின் ஆய்வு முகிழ்ந்தெழுகிறது.
தலித் பண்பாடு என்கிற கருத்தமைவு
பிறந்த வ.புதுப்பட்டி, ஆரம்பக் கல்வி பயின்ற திரிங்கால் பள்ளிக்கூடம், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளநிலை விலங்கியல் படித்தது, டியூட்டராக அங்கேயே பணியாற்றியது, முதுகலைத் தமிழ்ப் படித்தது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பேராசிரியாகப் பணிசெய்தது என இங்கெல்லாம் அவர் எதிர்கொண்ட பொதுப் பிரச்சினை சாதிதான். ‘எல்லோருக்கும் வரலாற்றுப் பெருமிதம் இருக்க, தலித்துகளுக்கு மட்டும் ஏனிந்த வரலாற்று இழிவு’ – இந்தப் பின்னணியிலிருந்து அவருடைய பழந்தமிழ் ஆய்வு குறித்து விளங்கிக்கொள்ள வேண்டும். சங்க இலக்கியம் குறித்து அவர் எழுதிய முதல் நூல் ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’. ஒரு தலித் பார்வையில் சங்கப் பிரதி என்பதே அவ்வாய்வின் அணுகுமுறை. இதே அணுகுமுறையைத்தான் தன்னுடைய எல்லா ஆய்வுகளிலும் மேற்கொண்டிருப்பார். மார்க்ஸியராக அறியப்பட்டாலும் இலக்கியங்களில் தலித் பொருள்கோடலையே மேற்கொண்டார். “கோட்பாடுகளைத் தேர்வு செய்யும்போதும் சரி, நவீனத் தமிழ் எழுத்தாளர்களைத் தேடி அலையும்போதும் சரி, ராஜ் கௌதமனிடம் சமூகச் சார்பு நிலையே முன்னிலை வகிக்கிறது’’ என்கிறார் ந.முத்துமோகன். தலித் பண்பாடு குறித்து கௌதமன் முன்மொழிகிற விசயங்கள் சுவாரசியமானவை. “தலித் மக்களிடம் கருத்துவகைப் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள். முதலில் அவற்றைத் தலித்துகள் தங்களுடையதல்ல என்று தூக்கி எறிவதற்கான ஆழமான தைரியத்தை ஏற்படுத்துவதற்கு, கலகலப்பான தலித் பண்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆதிக்கப் பண்பாட்டை, குறியீடுகளைச் சன்னஞ்சன்னமாக உதாசீனப்படுத்துவது, ஏற்க மறுப்பது, தாக்குவது, அவமதிப்பது, நக்கல்செய்வது இவற்றை எல்லாம் உள்ளடக்கிய ஒன்று தலித் கலகப் பண்பாடாகும்’’ என்று தலித்துகளின் பண்பாட்டை வரையறை செய்கிறார். தலித் பண்பாடென்பது சாதியப் பண்பாடன்று, சமத்துவப் பண்பாடு. சாதி, நிலம், பாலினம் உள்ளிட்ட வரையறைக்குள் அடைபட்டுக்கொள்ளாதது; அதிகாரத்தை எதிர்த்து அடங்க மறுத்து அத்துமீறி திருப்பி அடிப்பது; இவையே தலித் பண்பாடு என்கிறார். தலித் அடையாளத்தை மறைத்து வாழ்பவர்களைப் பற்றியும் பேசுகிறார். சாதியிலிருந்து தப்பித்தல் அல்லது சாதியை மறைத்தல் என்கிற வினை தலித்துகளிடம் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. எல்லோருக்கும் சாதி பெருமிதமாக இருக்கும் சூழலில், தலித்துகளுக்கு மட்டும் இழிவாக இருக்கிறது. குறிப்பிட்ட மக்கள் தொகுதி மீது இழிவை ஏற்றிவைத்த காரணத்தால்தான் ஒருவர் தன்னுடைய தலித் அடையாளத்தை மறைக்கிறார் / மறுக்கிறார். இது தலித்துகளின் பிரச்சினையன்று, சமூகப் பிரச்சினையென்கிறார் கௌதமன்.
அதிகாரமாகும் அறம்
மனிதர்களை நல்வழிப்படுத்தவே அற இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதாகக் கல்விப்புலங்கள் கிளிப்பிள்ளைகளைப் போல உளறிவந்த சூழ்நிலையில், பிரெஞ்சு கோட்பாட்டாளர் மிஷேல் ஃபூக்கோவின் சட்டகத்தைக் கொண்டு தமிழ்ச் சூழலை இணைத்துப் பார்க்கிறார் கௌதமன். அறம் என்பது கருத்தியல் வழியான சுரண்டல். பிறப்பின் கர்மவினைக்கேற்ப இந்தியாவில் அறம் சமைக்கப்பட்டிருக்கிறது. பிறவியின் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு அவ்வறங்களைப் பின்பற்ற வேண்டும். அறங்கள் அதிகாரத்தின் நலன்களைப் பச்சையாக வேண்டி நிற்பவை. தலித்துகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறையில் அறத்தின் பங்கு குறித்து ஆராயும் ராஜ் கௌதமன், “தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பினை மழுங்கடிக்கும் விசயங்கள் அறங்களில் உள்ளன. இதனைக் கவனத்தில் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களே பழைய அறங்களைத் தங்களுக்கு உரியனவாகத் தூக்கிப்பிடிப்பது சரியாகுமா’’ என்று கேள்வி எழுப்புகிறார். “அறம், புலனடக்கம், ஈகை, கல்வி, அறிவு, துறவு, சான்றாண்மை ஆகிய சொற்களுக்குள்ளும் அவை உணர்த்தும் பொருண்மைக்குள்ளும் சொல்லப்பட்டுவந்த விளக்கத்திலிருந்து மாறுபட்ட ராஜ் கௌதமன், இச்சொற்களை ‘அதிகாரத்தின் வேலையாட்கள்’ என்கிறார்’’ என்று ஞா.குருசாமி குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
தன்வரலாறும் மொழிபெயர்ப்பும்
‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’ ஆகிய தன்வரலாற்று நூல்களையும் ‘லண்டலில் சிலுவைராஜ்’ எனும் பயண நூலையும் ராஜ் கௌதமன் எழுதியுள்ளது நாம் அறிந்ததுதான். இவை அவரது தன்வரலாறாக மட்டுமல்லாமல் தென்தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு வரலாறாகவும் பரிணமிக்கின்றன. சமூக அக்கறை உள்ள ஒருவருக்குக் கல்வி கிடைத்தால் அவர் இச்சமூகத்திற்குச் செய்யும் பங்களிப்பென்ன என்பதற்கு கௌதமனின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு. கல்வி, அறிவை விட சுயமரியாதையைக் கொடுக்க வேண்டும், அதைத்தான் அவரின் எழுத்துகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. தன்னுடைய சுயத்தை விட்டுக்கொடுக்காமல் சாதியைக் காலம் முழுக்க எதிர்கொள்வது எல்லா தலித்துகளுக்கும் நிகழ்வதுதான். தன் மகளின் பள்ளிச் சான்றிதழில் சாதியைக் குறிப்பிடும் நிகழ்வு பற்றி விவரிக்கும் கௌதமன்…
“அப்பா, என்ன கேஸ்ட்னு சொல்ல?”
மகள் விடாம நச்சரித்தாள்; சொல்லவா வேண்டாமா? ‘நோ கேஸ்ட்’னு எழுதச் சொல்லலாமா? தன்னோடயே அந்தச் சாதி அழிஞ்சு போகட்டும்.. யோசிச்சான். எப்பிடி அழியும்? டி.சி.யில அழிச்சிடலாம். கண்மணி சிலுவைராஜின் மகள்னு சமுதாயத்துக்கு நல்லாவே தெரியுமே! பேப்பர்ல மட்டும் அழிச்சிட்டா சாதிய அழிச்சிடலாமா? இதுவரைக்கும் என்ன சாதிங்கிறது தெரியாம வளத்தாச்சு. அது ஒருவகையில் நல்லதுதான். இல்லன்னா சின்னப் பிள்ளையிலிருந்தே அந்தச் சாதிப் பேர வச்சே மத்த பிள்ளைக, டீச்சர்க பண்ணியிருக்கக்கூடிய அவமரியாதைகளை அனுபவிச்சு மனச்சிக்கலுக்கு ஆளாகியிருப்பா. இனிமெ தெரிஞ்சா என்ன? தெரியட்டும். எப்பிடியிருந்தாலும் உயர்கல்வி, வேலை, கலியாணம்னு வரும்போது தெரியத்தான போகுது! இன்ன சாதின்னு தெரிஞ்சு மனஆரோக்கியத்தோட தலைநிமிர்ந்து நிற்பதுதான் சரி. சொல்லிட வேண்டியதுதான்.
‘பறையர் கேஸ்ட்’
சிலுவை அழுத்தந்திருத்தமாக மகளிடம் உச்சரித்தான். பிள்ளைக்குத் தகப்பன் உபதேசம் பண்ணுகிற மாதிரிதான்! கண்மணியின் கண்கள் அதை நம்பவில்லை. அவள் மனசுக்குள்ள என்ன விசித்திரங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவோ?
“சும்மா சொல்ற. வெளையாடாமச் சொல்லு” சிலுவையின் உதடுகள் வேற சாதிப் பெயரை உச்சரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு!
“சத்தியமா – பறையர் கேஸ்ட்”
மகளின் பெரிய விழிகள் குத்திட்டிருக்க ஊற்றுத் தண்ணியாகக் கண்ணீர் இரண்டு கன்னங்கள் வழியாகச் சாடி ஓடியது. சிலுவை சம்சாரமும் இதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதுக்கு மேல் யாரும் எதுவும் பேசல. சப்தம் வராமல் மகள் ஒருமூச்சு அழுது தீர்த்தாள். அந்த மாதிரி மௌனமாக அவள் அழுததைச் சிலுவை பார்த்ததில்லை. அவள் மனசுக்குள் ஒரு யுகாந்தத்தின் பிரளயம் பேரோசையிட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய மூதாதைகளின் அழுகுரல் அங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கும்.
“சரி. சரி. எதுக்குக்கெடத்து அழுவுற. இப்ப என்னடியாச்சு? நாம் பறையங்கதான். அதுனால என்ன? நாம் படிக்கலியா? வேலைக்கி வரலயா? அம்மா வரலயா? மத்தவங்களைவிட எதிலியும் நாம கொறைஞ்சு போகலியே. நாமதான் பஸ்ட். எல்லாத்திலியும் பஸ்ட்..’’ என்று சிலுவை உன்மத்தம் பிடிச்சவனைப் போலப் பேசினான்.
தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவியின் மகளுக்கே சாதி என்பது மனச் சிக்கலை ஏற்படுத்தும் விசயமாக இருந்திருக்கிறது. இன்று அவருடைய மகள் டாக்டர். நிவேதிதா லண்டனில் மருத்துவராக இருக்கிறார். சாதியின் சிக்கல்களை மிகத் துணிவாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவரின் வாழ்க்கை நமக்குக் கையளிக்கும் படிப்பினை. ‘மனவளமான சமுதாயம்’, ‘அன்பெனும் கலை’, ‘விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்’, ‘பாலற்ற பெண்பால்’, ‘பெண்ணியம் வரலாறும் கோட்பாடும்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சந்தை மதிப்புக் கருதி அவர் மொழிபெயர்ப்பதில்லை, தன்னுடைய அரசியலுக்குத் தோதாக இருக்கும் நூல்களையே மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்புக்கூட அவர் எற்றுக்கொண்ட அரசியல் கொள்கையின் ஒரு பகுதிதான்.
இளையராஜாவும் ராஜ் கௌதமனும்
இசைபுத்தர் இளையராஜாவையும் தமிழறிஞர் ராஜ் கௌதமனையும் இணைத்து ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதாகவும், தற்போது அக்கட்டுரை தம்மிடம் இல்லையென்றும் ஆய்வாளர் வ.கீதா தெரிவித்திருந்தார். அவரளித்த இந்த யோசனை மிக சுவாரசியமானதாக இருந்தது. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த இரு ஆளுமைகள் இணைகிற புள்ளி எதுவாக இருக்கும் என எண்ணிப் பார்த்தபோது சில விசயங்களைத் தொகுத்துக்கொள்ள முடிகிறது. துறைசார் ஆளுமை, கறார்த்தன்மை, பகடி என்று சொல்ல முடிகிறது.
ராஜ் கௌதமனின் விமரிசன முறையியியல் மிகவும் கறார்த்தன்மை கொண்டது. தனக்கு வேண்டப்பட்டவர்கள் எவ்வளவு மோசமாக எழுதினாலும் புகழ்ந்துரைக்கும் பண்பாடு கொண்ட தமிழ்ச் சூழலில், கௌதமனின் விமர்சனம் ஒரு மருத்துவரைப் போல் செயல்பட்டது. ஆ.சிவசுப்பிரமணியன், கி.ராஜநாராயணன், இமையம் ஆகியோரின் எழுத்துகளை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார். உடன்பிறந்த தங்கை பாமாவும் விதிவிலக்கன்று. நவீனத்தைப் புறந்தள்ளி மரபார்ந்த சட்டகத்திற்குள் இயங்குவதாக இமையத்தின் எழுத்துகளை இனங்காண்கிறார். தலித் விடுதலை அரசியலுக்கு இமையத்தின் எழுத்துகள் நேரெதிராகச் செயல்படுகின்றன என்பதை ‘புனித ஆறுமுகம்: கோவேறு கழுதைகளும் மேதைகளும்’ என்கிற கட்டுரையில் விளக்கியுள்ளார். இதேபோல் இசைபுத்தர் இளையராஜாவும் இசைத்துறையில் மிகவும் கறாரானவர். இளையராஜாவுடனான தன்னுடைய அனுபவத்தை எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் “ஆர்க்கெஸ்ட்ராவ கண்டக்ட் பண்ணும்போது ஒரு ராணுவ அதிகாரியப் போல நடந்துக்குவார். ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும். ஒரு சின்ன விசியத்தைத் தவற விட்டிருந்தாலும் அது சரியாக வாசிக்கப்படும்வரை அவர்களை விடவே மாட்டார். தன்னுடைய இசைக்குறிப்பை மீறி எதுவும் வாசிக்கப்படக் கூடாது என்பதைக் கறாராகப் பின்பற்றக்கூடியவர் ராஜா’’ என்கிறார்.
தமிழ் இலக்கிய மரபைத் தன்னுடைய விமரிசனச் சட்டகத்தால் தலைகீழாக்கியவர் கௌதமன். மரபார்ந்த கர்நாடக இசை ராகங்களையெல்லாம் தலைகீழாக்கி மாற்றியமைத்தவர் ராஜா. எதையெல்லாம் ஆதிக்கப் பண்பாடு செய்யக்கூடாது என்கிறதோ அதையெல்லாம் செய்ய வேண்டும் என்றார் கௌதமன். ராஜாவும் தன்னுடைய இசையால் அதை நிகழ்த்திக் காட்டினார். ‘ஜனனி ஜனனி’ பாடல் தொடங்கும்போது மந்திரம் ஓதுவார் ராஜா, அது கௌதமன் சொல்கிற கலகப் பண்பாடுதான். திருவாசகம், திவ்ய பிரபந்தம் ஆகிய புனித பக்திப் பனுவல்களுக்கு இசையமைத்து அதை மக்கள்வயப்படுத்தியவர் ராஜா. யார் வேண்டுமாலும் எதையும் பாடலாம், எதுவும் புனிதமில்லை என்ற இளையராஜாவின் குரல் அவரது இசையில் எதிரொலிக்கிறது. திருவாசகம் இசைக்குறித்து இளையாராஜா குறிப்பிடும்போது,
“திருவாசகத்தை முறையே ‘நமச்சிவாய வாழ்க’ என்றுதான் தொடங்க வேண்டும். இவன் இடையிலேயே ‘பொல்லா வினையேன்’ என்று ஆரம்பிக்கிறானே என்று ஓதுவார்கள் எதிர்க்கலாம்; மடாதிபதிகள் ஆட்சேபிக்கலாம். இதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. காரணம் என்னவென்றால், நான் இதை ஓதுவதற்காக இசையமைக்கவில்லை. உள்ளம் உருக மக்களிடம் சென்று சேர்ப்பிக்க வேண்டும். அவர்கள் தப்பும் தவறுமாகப் பாடினால் கூட உள்ளத்தை உருக வைக்கக்கூடிய பக்தி இலக்கியமான திருவாசகம் (மக்கள்) மனதில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் இதை இசையமைத்தேன்’’ என்கிறார். கௌதமனும் அறிவைப் பொதுமைச் செய்தவர். இதுகுறித்து விரிவாக எழுத வாய்ப்புள்ளது.
புலியின் நிழலில்
எனக்கும் ராஜ் கௌதமனுக்குமான உறவு பழைய மரபார்ந்த ஆசிரியர், மாணவர் உறவாக இருந்ததில்லை. அவர் நம்மோடு பேசும்போது குதூகலம் கொண்ட குழந்தையாகிவிடுவார். எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரோடு பேச முடியும். நுரைத்துச் சுழித்தோடும் ஆற்றின் ஆர்பரிப்பைப் போல மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பார். “என்ன எழுதறுதுனே தெர்ல சார். நீங்க, ஸ்டாலின் (ராஜாங்கம்) எழுதறதெல்லாம் பாக்கும்போது எல்லாத்தையும் நீங்க எழுதன போல இருக்கு’’ என்று கேட்டபோது “ஏய்! என்னப்பா நீ. இதெல்லாம் ஒரு விசியமாப்பா. சின்ன வயசுல லவ் பண்ணியிருக்கல்ல, அந்தப் புள்ளய மொதமொதலா பாத்தபோது மனது குறுகுறுனு இருந்திருக்குமேஞ் அத எழுது. எழுத்துங்கிறது பிராக்டீஸ், அவ்ளோதான். எழுதறதுக்கு நிறைய இருக்கு. காலம் போகப் போக அதுவே நம்மல கண்டுபுடிச்சிடும்’’ என்று உற்சாகமூட்டுவார். “ஸ்டாலின் கெட்டிக்காரப் பெய. நல்லா எழுதுறான். ஆனா, அவன் நம்ம ஏரியாவுல (இலக்கியம்) எழுதறது இல்ல. தமிழ் வாத்தியாரு அவன். அதெல்லாம் எழுதணுமா இல்லயா’’ என்றார். அவர் மனிதர்களோடு ஒட்டுவதே இல்லை. எல்லோரையும் ஓர் எல்லைக்குள்தான் வைப்பார். தமிழின் புகழ்பெற்ற பதிப்பகம் ஒன்றைக் குறித்துப் பேசும்போது. “அவனும் நம்மல சாதி பாக்குறான்னு தோனுதுபா” என்றார். “நீங்க ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸ் உங்க அப்பன் அப்படினுதானே சொல்றீங்க” என்றேன். “நான்தான் என்னைக் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட்னு சொல்லிக்கினு இருக்கேன். அவனுங்க போடா பறப்பெயலேனுதான் சொல்றாங்க” என்றார்.
உடல்நிலை சரியில்லாததால் தாம்பரம் ரெலே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது எழுத்தாளர் அ. ஜெகநாதன், நீலம் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர், வழக்கறிஞர் ஏ.பி.ராஜசேகர், எம்.சி.சி., தமிழ்த்துறை ஆய்வாளர் பாரத் ஸ்ரீமான் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். பின்னர் கடந்த மார்ச் மாதம் தேனாம்பேட்டை அப்பலோ கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் ஏறத்தாழ 15 நாட்கள் இருந்தார். அவரைச் சந்திக்க எம்.சி.சி. தமிழ்ப் பேராசிரியர் சி.முத்துகந்தன், ஒளிப்படக்காரர் கபிலன் சௌந்தரராஜன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை ஆய்வாளர் கா.அஜித்குமார் ஆகியோர் வந்திருந்தனர். நடப்பதற்குக் கூட யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார். பல விசயங்களை மறந்திருந்தார். நினைவு மறதி அவருக்குத் தொந்தரவாக இருந்தது. கௌதமனின் மனைவிக்கும் உடல்நலம் சரியில்லாததால் அவரை இரவு மட்டும் வீட்டிற்குச் செல்லச் சொல்வோம். பல நேரம் நள்ளிரவைக் கடந்து ஃபோனில் அழைப்பார். அவரைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். “நீங்க தூங்குங்க, நாங்க பாத்துக்குறோம்” என்றாலும் பரிமளத்தின் நினைவு கௌதமன் மீதுதான் இருந்தது. “இப்படி அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களே. உங்களுக்கு முன்னாடி அவுங்க (பரிமளம்) செத்துட்டா என்ன பண்ணுவீங்க” என்றேன். “ஏம்பா நான் ஒடனே செத்துடுவேன். அவ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா’’ என்றார். “மேடம் சார் சொன்னத கேட்டீங்களா. மறுபடியும் சொல்லுங்க” என்றேன். “போடா மடப்பெயலே” என்றார் கௌதமன். அவருடைய மகள் பொன்னியும் (நிவேதிதா) லண்டனிலிருந்து விசாரித்துக்கொண்டே இருப்பார். மகள் மருத்துவர் என்பதால் அவருடன் பயின்ற, பழகிய மருத்துவரிடமெல்லாம் பேசி கௌதமனுக்குச் சிறப்பான சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார். பல்வேறு உடல் பிரச்சினைகள் இருந்தாலும் கௌதமனுடைய அறை ஒரு நோயாளியின் அறைபோல இருக்காது. எப்போதும் ஓயாது பேச்சு, பாட்டு என்று கலகலப்பூட்டிக்கொண்டே இருப்பார். பின்னர் வலி தாங்காமல் கத்துவார். ஒரு போர்வீரனைப் போன்று தன்னுடைய உடற்பிரச்சினைகளோடு போரிட்டுக்கொண்டேயிருந்தார். அவருடைய மனைவியும் அவருக்குத் துணையாக இருந்தார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினார்கள். திருநெல்வேலிக்குச் சென்ற பிறகும் அவருக்கு உடல்நலம் குன்றியதால் அங்கும் சிலகாலம் மருத்துவமனையில் இருந்தார். அவரைச் சந்திக்க ஆகஸ்ட் மாதம் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேசிக்கொண்டே இருக்கும் கௌதமன் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அவரால் பேச முடியவில்லை. நான் வருவதாகச் சொன்னதால் படுக்கையிலிருந்து எழுந்துவந்து சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவருடைய உடலில் யாரையும் கைவைக்க விடமாட்டார். கை, கால் நகங்கள் வளர்ந்திருந்தன. நகவெட்டி வாங்கி வெட்டிவிட்டேன். முதன்முதலாக அவருடைய காலில் விழுந்தேன். நான் எழுந்தபோது கட்டியணைத்து முதுகில் தட்டினார். யாரிடமும் காலில் விழாதே என்பதுபோல் இருந்தது அவருடைய பார்வை. வழியனுப்பும்போது ஒரு கவரைச் சட்டைப் பையில் திணித்தார். அதில் 10,000 ரூபாய் இருந்தது. இன்னும் செலவு செய்யப்படாமல் அவரின் நினைவாக என்னிடம் இருக்கிறது. “பாத்துப் போ சந்துரு” என்றார் பரிமளம். கார் ஏறும்வரை அவருடைய கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு குழந்தையைப் போல் கையசைத்தார். அவரின் இளைத்த தேகத்தைப் பார்க்கும்போது மலையில் செழித்திருந்த ஒரு மரத்தை பாலை நிலத்தில் நட்டதுபோல் இருந்தது. அவருடைய இறுதிப் பயணத்தில் ஏறத்தாழ நூறுபேர் மட்டுமே இருந்தனர். உறவினர்கள், சில எழுத்தாளர்கள் சூழ அவருடைய நல்லடக்கம் நடைபெற்றது. பெயரப் பிள்ளைகள், உறவினர்கள் மாலையிட்டு கௌதமனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினர். வீட்டிற்குள் கிடத்திவைக்கப்பட்ட கௌதமனை வெளியில் கொண்டுவருகையில் மனைவி பரிமளம் அவருக்கு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். கௌதமனின் தங்கை பாமாவும் தன்னுடைய கண்ணீரால் வழியனுப்பினார். கௌதமனை ஏற்றிச் சென்ற வண்டியில் நானும் நண்பர் திருச்சி கேசவனும் உதிரிப்பூக்களை வழியெங்கும் வீசிச் சென்றோம். சமத்துவத்தின் குறியீடான வானம் மழை பெய்து தன்னுடைய அன்பை கௌதமனுக்குச் செலுத்தியது. கல்லறைத் தோட்டத்தில் கிடத்தப்பட்டிருந்த கௌதமன் முன் மண்டியிட்டு நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னேன், “போய் வாருங்கள் கௌதமன் சார்.”
பயன்பட்ட நூல்கள், நாளிதழ், இணையதளம்
- ந.முத்துமோகன், மார்க்ஸ் – அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை (2011), விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
- ராஜ் கௌதமன், தலித் பண்பாடு (1993), கௌரி பதிப்பகம், புதுவை.
- ராஜ் கௌதமன், அறம் அதிகாரம் (1997), விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்.
- ஞா.குருசாமி, தமிழ் தலித் எழுத்துலகின் திசைகாட்டி, இந்து தமிழ், நவம்பர் 15.
- ராஜ் கௌதமன், காலச்சுமை (2006), தமிழினி, சென்னை.
- https://youtu.be/wb8s5drLkdc?si=XFEl06n_OadeMCJ4