1995ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசனம் கூறு 16 (4A) இன்படி மாநில அரசுகள் சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் (SC/ST) அரசுப் பணி பதவி உயர்வில் பங்கீடு (ஒதுக்கீடு) வழங்கலாம். அதன் பிறகு 30 ஆண்டுகள் அதிமுகவும் திமுகவும் தலைக்குப் பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளன. மாநிலத்திற்குச் சுயாட்சி இன்னும் வர வேண்டும் என்று கூர்மையாகவும் சத்தமாகவும் பல்வேறு வடிவங்களில் குரலெடுக்கும் இந்தக் கட்சிகள், ஏனோ மாநிலத்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை மட்டும் செயல்முறைக்குக் கொண்டு வர மருகுகிறது.
ஏனெனில், அடிப்படையான திராவிட அரசியல் அணுகுமுறை என ஒன்றுண்டு. அதைக் கட்டுரையின் இறுதியில் காணலாம். பதவி உயர்வில் பங்கீடு (ஒதுக்கீடு) என்பது 1970களிலிருந்து தமிழ்நாட்டில் ஆறு பதவிகளில் (வருவாய்த்துறை, பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, அறநிலையத்துறை, வணிக வரித்துறை) மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990இல் பதவி உயர்வில் ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் தடை செய்தது (மண்டல் தீர்ப்பு). 1995இல் சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் பதவி உயர்வில் பங்கீடு வழங்கப்படலாம் என 77ஆவது அரசியல் சாசனச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதாவது, எவருக்கும் பதவி உயர்வில் பங்கீடு தரலாம் என்ற நிலை மாறி, சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் மட்டுமே தரப்படலாம் என்ற நிலைப்பாடு வந்தது. எனினும், தமிழக ஆளுங்கட்சிகள் 1995இலிருந்து 2003 வரை பிற்பட்டோருக்குத் தொடர்ந்து பதவி உயர்வில் பங்கீடு வழங்கிவந்தது. 2003இல் உயர் நீதிமன்றம் இது சட்டத்திற்குப் புறம்பானது என ஆணையிட்ட பிறகே தமிழக அரசு இதை நிறுத்தியது. ஆனாலும் 1991 முதல் 2003 வரை பிற்பட்டோருக்குத் தரப்பட்ட, சட்டத்திற்குப் புறம்பான பதவி உயர்வை அரசு மறுதலிக்கவில்லை. முதுநிலை (Seniority) வரிசையை மாற்றவும் இல்லை.
எது யாருக்குத் தரப்படக் கூடாதோ (பிற்பட்டோருக்கு) அதை அவர்களுக்குச் சற்றொப்ப 15 ஆண்டுகள் வழங்குவதற்குச் சட்டத்தைப் பார்க்காத அதே அரசு, எதை யாருக்கு (சான்றோருக்கு) வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறதோ, அதை மட்டும் கடந்த 30 ஆண்டுகளாக மறுத்துவருகிறது. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசு அதன் நிர்வாகத்தில் சான்றோர்க்குப் பதவி உயர்வில் பங்கீட்டைத் தவறாமல் கடைபிடித்துவருகிறது. இப்போது திராவிட நிர்வாக எடுகோளுக்கு வருவோம்.
சமூக நீதியைத் திராவிடம் உயர்த்திப் பேசும். பிற்பட்டோருக்குச் சமநீதியை நாட்ட திராவிட ஆட்சிகள் உக்கிரம் காட்டும். சட்டத்திற்குப் புறம்பானது எனினும் உயிர்மூச்சு உள்ளவரை பிற்பட்டோருக்காகப் போராடும் (எ.கா. 69% பங்கீட்டைச் சட்டப்பூர்வமாக்கியது). சான்றோர் (SC) மீது திராவிட அரசுகள் பகைமை பாராட்டாது. ஆனாலும், பிற்பட்டோருக்கு இல்லாத ஒன்றைச் சான்றோர்க்கு வழங்குவதில் திராவிடம் மருகும். ஆகவே, பிற்பட்டோருக்குத் தரப்பட முடியாத பதவி உயர்வில் பங்கீட்டைத் திராவிட அரசுகள் சான்றோருக்கு வழங்கவே வழங்காது. இருப்பதை எடுக்காமல் இருந்தாலே போதும்.
கட்டுரையாளர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி