மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்தவர் எல்.இளையபெருமாள்

- பால சிங்கம்

எல்.இளையபெருமாள், 1924-ஜூன்- 26ஆம் தேதி அன்றைய தென்னாற்காடு மாவட்டமும் இன்றைய கடலூர் மாவட்டமுமான காட்டுமன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தெம்மூர் எனும் கிராமத்தில் லட்சுமணன் – சிவகாமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தெம்மூர் கிராமமானது இளையபெருமாளின் தாயாரின் சொந்த கிராமமாகும். தனது தொடக்கப் பள்ளியைத் தெம்மூர் கிராமத்திலேயே பயின்றார். பின்பு தனது தந்தை இருப்பிடமான காட்டுமன்னார்குடி நகரத்தில் உள்ள கோலியத் தெருவில் குடியேறி தனது 6-ஆம் வகுப்புக் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது இளம்வயதிலேயே சாதியின் கொடூரத்தன்மையை உணரும் சூழலைப் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் இளையபெருமாளின் தந்தை ஒரு ஜோசியர் என்பதால் அவரிடம் ஜோசியம் பார்க்க வரும் பிராமணர்களும் சாதி இந்துக்களும் வீட்டின் உள்ளே வராமல் வீட்டின் வெளியே நின்றே ஜோசியத்தினைக் கேட்பர். இதைக் கண்டவர், அவர்கள் ஏன் நம்முடைய வீட்டின் உள்ளே வரமறுத்து வெளியே நின்று ஜோசியம் கேட்கிறார்கள் என்று வினவினார். பின் இதற்குச் சாதிபாகுபாடே காரணம் என்பதை அறிகிறார்.

காட்டுமன்னார்குடி பள்ளியில் இளையபெருமாள் பயின்ற காலத்தில் பறையர் சமூகத்தவருக்கும் மற்ற சாதிய இந்து சமூகத்தவருக்கும் இருந்த சாதியப் பாகுபாட்டின் காரணமாகத் தனித்தனியே குடிநீர்ப் பானை இருந்தது. இந்தப் பாகுபாட்டைப் பார்த்துக் கோபங்கொண்டவர் பள்ளி முடிந்து போகும்பொழுது யாருக்கும் தெரியாமல் பறையர்களுக்கான தனிப்பானையை உடைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். பள்ளியின் தலைமையாசிரியர் யார் இப்படிப் பானையை உடைக்கிறார்கள் என்று கண்காணித்து இதற்கு இளையபெருமாள் என்ற மாணவனே காரணம் என்பதைக் கண்டறிகிறார்.

பள்ளித் தலைமையாசிரியர் பானை உடைப்பிற்கான காரணம் அறிய இளையபெருமாளை அழைத்து ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டபொழுது பறையர்களுக்கெனத் தனிப்பானையும் மற்ற சமூகத்திற்குப் பொதுப்பானை இருக்கும் பாகுபாட்டைக் கூறி இதன்காரணமாகவே நான் பானையை உடைத்தேன் என்று பதில் கூறினார். இதனைக் கேட்ட தலைமையாசிரியர் இக்கருத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு இனிப் பறையர்களுக்கெனத் தனிப்பானை வைக்கக் கூடாது என்று முடிவு எடுத்துச் செயல்படுத்தினார். தனது செயலின் காரணமாகப் பறையர்களுக்கெனத் தனிப்பானை வைக்கக் கூடாது என்ற தலைமையாசிரியரின் நடவடிக்கை மூலம் இளையபெருமாள் ஒரு விஷயத்தை முழுவதுமாகப் புரிந்துகொண்டார். நாம் நமது உரிமைக்காகப் போராடினால் மட்டுமே எதையும் வென்றெடுக்க முடியும் என்பதைத் தனது பள்ளிக்காலத்திலேயே நெஞ்சில் நிலைநிறுத்திக்கொண்டார்.

1930 காலகட்டத்தில் சிதம்பரம் வட்டாரத்தில் 9-ஆம் வகுப்புப் பயில வேண்டுமென்றால் சிதம்பரத்தில் உள்ள பச்சையப்பன் பள்ளி, செட்டியார் பள்ளி என இரு பள்ளிகளில் மட்டும்தான் அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இவ்விரு பள்ளிகளிலும் பறையர்கள் பயில அனுமதியில்லை. இதன்காரணமாக இளையபெருமாள் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் பரங்கிப்பேட்டையில் சாதிய இந்துக்களால் பறையர்கள் பொதுத்தெருவில் செருப்பணிந்து நடப்பதற்கு அனுமதி மறுப்பு உட்பட பல பொது உரிமைகள் மறுக்கப்பட்டன. இதற்கு எதிராக இளையபெருமாள் இஸ்லாமியப் பெரியவர்களிடம் எடுத்துக்கூறி முறையிட்டார். அவர்கள் இளையபெருமாளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாகப் பறையர்கள் பொதுப்பாதையில் நடக்க அனுமதி கிடைத்தது.

1944-ஆம் ஆண்டில் இளையபெருமாள் தனது பெற்றோரை இழந்த காரணத்தினால் வாழ்க்கைத் துணையை அமைத்துக்கொள்ளும் தேவை ஏற்பட்டு தையமுத்து அம்மையாரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். பின்பு குடும்ப வறுமையின் காரணமாக 1944-இல் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்திலும் அட்டவணைச் சமூகத்தவர்களுக்கெனத் தனிப்பாத்திரம் கையாளும் சாதியப் பாகுபாட்டை எதிர்த்து ஆங்கிலேய உயரதிகாரியிடம் எடுத்துச்சென்று தீர்வு கண்டார். 1945-ஆம் ஆண்டிலயே இராணுவப்பணியில் இருந்து காட்டுமன்னார்குடி திரும்பினார். தனது இளம் வயது முதல் பல்வேறு படிப்பினைகளால் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தவர் சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து முழுவதுமாகப் போராட்டக் களத்தில் ஈடுபட முடிவு செய்தார்.

இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பே சமூக விடுதலை

1946-களில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் வட்டாரத்தில் நடைபெற்ற இரண்டு போராட்ட நிகழ்வுகள் இளையபெருமாளைத் தலித் மக்களிடம் கொண்டு சேர்த்தன. ஒன்று காட்டுமன்னார்குடி அருகில் உடையூர் எனும் கிராமத்தில் பறையர் இனத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் கட்டி வைத்து அடிக்கப்பட்டார். இதனைக் கேள்விப்பட்ட இளையபெருமாள் உடனடியாக உடையூர் கிராமத்திற்குச் சென்று அச்சமூகத்தவர்கள் படும் சாதியக் கொடுமைகளின் தீவிரத்தை உணருகிறார்.

உடையூர் கிராமத்தில் தலித் கூலி விவசாயிகள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். ஒருநாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் கட்டி வைத்து அடிப்பதும் கூடவே குடியிருக்கும் வீடுகளைப் பறிப்பது போன்ற செயல்களை நிலவுடைமைச் சாதியாளர்களான பிள்ளை சமூகத்தினர் உட்பட சாதிஇந்துக்கள் செய்து வந்தனர். மேலும் நிலவுடைமையாளர்களின் நிலங்களில் வேலை செய்யும் தலித் பெண்களுக்கு அறவே கூலி கிடையாது என்பது போன்ற எண்ணற்ற சமூகக் கொடுமைகள் உடையூர் கிராமத்தில் நிலவியதைப் பார்த்த இளையபெருமாள் ஆதங்கப்பட்டார்.

இச்சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் விதமாக உடையூர் கிராமத்திற்கு நடந்தே சென்றார். சிதம்பரம், காட்டுமன்னார்குடி சுற்றுவட்டாரப் பறையர் மக்கள் இக்கொடுமைக்கு எதிராக இளையபெருமாள் என்ற இளைஞன் உடையூர் கிராமத்தை நோக்கிச் செல்கிறார் என்பதை அறிந்து சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகளுக்கு இளையபெருமாள் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுடன் உடையூர் கிராமத்திற்குச் சென்று பெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததை அறிந்தனர். இதனையடுத்து தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர். மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் இளையபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையில் இளையபெருமாள் எங்கள் மக்கள் மீது சுமத்தப்படும் சாதியக்கொடுமைகளை எடுத்துரைத்து இதற்குத் தீர்வு காணாதவரை எங்களது போராட்டம் ஓயாது என்றார்.

இதனையடுத்து நிலவுடைமையாளர்களாக உடையூரில் இருந்த பிள்ளை சமூகத்தவர்களிடம் தென்னாற்காடு மாவட்ட கலெக்டர் பால் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இனிப் பறையர் சமூகத்தவர் மீதான சாதிக்கொடுமைகளையும் நிலவுடைமை ஆதிக்கத்தையும் கைவிடவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனை தொடர்ந்து பிள்ளை சமூகத்தினருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டு இனி நாங்கள் பறையர்களுக்குச் சாதியின் அடிப்படையில் கொடுமை செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்.

இதோடு நிற்காமல் பெண்களுக்கான கூலியை நிலவுடைமையாளர்களான பிள்ளை சமூகத்தவர்கள் கொடுப்பதில்லை. ஆகையால் முறையான கூலி உயர்வைப் பெறும்வரை எங்களது போராட்டம் ஓயாது என்று தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் உறுதிப்படக் கூறினார். மக்களும் உறுதியாக இளையபெருமாளின் பின் நின்றனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அனைவரும் பிள்ளை சமூகத்தவர்கள் பறையர்களுக்கான கூலி உயர்வை முறையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

1946-இல் தலித் மக்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் இளையபெருமாள் மற்றும் பிள்ளை சமூகத்தவர்களிடையே நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் மாவட்ட கலெக்டர் பால் மற்றும் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூலி ஒப்பந்தமானது அன்றைய காட்டுமன்னார்குடி வட்டார கிராமம் முழுவதுக்குமாக நடைபெற்றதாகும். இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பே 1946-இல் பறையர் சமூகத்தவர்கள் மீது இருந்த தீண்டாமைக் கொடுமை ஒழித்துக் கூலி உயர்வையும் பெற்றுக் கொடுத்தார். இது போன்ற சமூகப் பணியால் கிராமங்கள் தோறும் இளையபெருமாளின் பெயரும் புகழும் வேகமாகப் பரவியது.

1946-இல் காட்டுமன்னார்குடி வட்டத்திற்கு உட்பட புளியங்குடியில் மாரிமுத்து மகன் வடமலை என்ற பறையர் இன இளைஞர் இராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் நாகரிகமாக உடை அணிந்த காரணத்தினால் கட்டிவைக்கப்பட்டு வன்னியர் சமூகத்தவரால் சித்ரவதைக்கு உள்ளானார். இக்கொடுமைக்கு எதிராகப் புளியங்குடிக்குச் சென்று அங்கு நிலவிய மோசமான சாதிக்கொடுமைகளை அறிகிறார். பொதுப் பாதையில் நடக்கக் கூடாது, வேட்டியை முழங்கால் வரைதான் கட்டணும், நாகரிகமாக உடை உடுத்தவும் சிகை அலங்காரம் செய்யவும் கூடாது, பெண்கள் காப்பு அணியக் கூடாது போன்ற பல சாதிக்கொடுமைகள் நிலவின. இக்கொடுமைக்குத் தீர்வாகப் பறையர் இன மக்களைப் புளியங்குடியில் இருந்து வெளியேற்றி வேறு இடத்தில் குடியமர்த்தும் பணியை மேற்கொண்டார். இதன்மூலம் சாதி இந்துக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திய இளையபெருமாளின் போராட்டத்தின் காரணமாக சாதி இந்துக்கள் தாங்கள் இனிப் பறையர் இனத்துடன் ஒற்றுமையாக வாழ்வோம் என்று உறுதியளித்தனர். பின்பு குற்றத்தில் ஈடுபட்ட வன்னியர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். சிறுபான்மையாக வாழும் பறையர் இன மக்கள் படும் துன்பத்திற்காக அத்தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க அவர்களை மறுகுடியேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கிராமத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால், பின்பு சாதி இந்துக்கள் நாங்கள் இனி இதுபோன்று செய்யமாட்டோம் என்று வாக்குறுதி அளித்ததால் மக்களை மறுபடியும் அதே இடத்தில் குடியமர்த்தினார். இதுபோன்ற பல மீள்குடியேற்றங்களைத் தீண்டாமை ஒழிப்புக்காக மேற்கொண்டவர். இக்காரணங்களாலயே காட்டுமன்னார்குடியில் நடைபெற்ற பல கூட்டங்களில் இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பே நான் இப்பகுதிகளுக்கு சமூக விடுதலையை வாங்கிக் கொடுத்தேன் என்று உரையாற்றும் வழக்கம் உடையவர் இளையபெருமாள்.

ஆதிதிராவிட மகாஜன சங்கம்

ஆசிரியர் கண்ணுசாமியால் ஆதிதிராவிட மகாஜன சங்கம் தொடங்கப்பட்டு அதில் சமூகச் சீர்திருத்தப்பணி செயல்படுத்தப் பட்டு வந்தது. 1946-இல் இளைஞரான இளையபெருமாள் தீவிரமாகச் சமூகப் பணியில் செயல்பட்டு வந்ததையடுத்து ஆதிதிராவிட மகாஜன நிறுவனர்களும் மக்களும் சங்கத்தின் தலைவராக இளையபெருமாளை ஒருமனதாகத் தேர்ந்தெடுந்தனர். இதனையடுத்து தன்னுடைய சமூகப் பணியை மேம்படுத்தும் பொருட்டு காட்டுமன்னார்குடி மற்றும் சிதம்பரம் வட்டார கிராமப் பகுதிகளுக்குச் சங்கத்தாருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு. சாதி இந்துக்களுக்குச் செய்த பறை அடிப்பது, வெட்டியான் வேலை உட்படத் தொழில்களைச் செய்யக் கூடாது என்று பிரசாரம் மேற்கொண்டார். இளையபெருமாளின் திண்ணைப் பிரசாரத்தின் விழிப்புணர்வு காரணமாகப் பறையர் இன மக்கள் மேற்கண்ட பணிகளைச் சாதி இந்துக்களுக்குச் செய்ய மறுத்தனர்.

பாபாசாகேப் அம்பேத்கரியப் பாதையில் இளையபெருமாள்

1946 முதல் தன்னுடைய தீவிரக் களப்போராட்டம் காரணமாக தென்னாற்காடு மாவட்டத்தில் பட்டித்தொட்டி எங்கும் அறியப்படும் தலைவராகத் திகழ்ந்தார். முதலில் ஆதிதிராவிட மகாஜன சீர்திருத்தச் சங்கத்தில் இணைத்துக்கொண்டவர். பின்பு அம்பேத்கரிய இயக்கங்களை நோக்கிச் சென்றார். ரெட்டைமலை சீ்னிவாசனை 1945-களில் சந்திக்கச் சென்றார். ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அப்பொழுதுதான் அறிந்துகொள்கிறார். பாபாசாகேப் அம்பேத்கரின் ஆலோசனையில் சிவராஜ் தலைமையில் 1942-இல் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பில் இளையபெருமாள் 1946-களில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகப் பணியாற்றினார். 1950-இல் மீனாம்பாளின் தலைமையிலான ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பில் இளையபெருமாளுக்கு மாநில துணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தந்தை சிவராஜ், சுவாமி சகஜாநந்தா உட்பட பல தலைவர்களைக்கொண்டு சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்குடி பகுதிகளில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளுக்குத் தீர்வு கண்டார்.

1947-இல் ஆண், பெண் உண்டு உறைவிடப் பள்ளி துவக்கம்

சிதம்பரம் வட்டாரத்தில் 1916-ஆம் ஆண்டு முதல் ஆண், பெண் உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பித்துக் கல்வியின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர் சுவாமி சகஜாநந்தா. இவரின் வழியில் இளையபெருமாளும் காட்டுமன்னார்குடியில் ஆண், பெண் உண்டு உறைவிடப் பள்ளியை 1947-இல் தொடங்கியதில் 50 மாணவ மாணவிகள் அதில் தங்கிப்பயிலும் நிலை உருவானது. பின்பு பல ஆயிரம் பேர் பயன்பெறும் நிலையை எட்டியது. இன்று காட்டுமன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியானது இளையபெருமாளின் முயற்சியில் தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தினை இலவசமாகப் பள்ளிக்காக வழங்கியதால் உருவாகியதாகும். இதன்காரணமாக காட்டுமன்னார்குடி வட்டாரப் பகுதி மக்கள் முழுவதும் பரவலான கல்வி பெறவும் அரசு பணிக்குச் செல்லவும் வித்திட்டவர். கடலூர் மாவட்டத்திலயே காட்டுமன்னார்குடி வட்டத்தில்தான் படித்தவர்களின் சதவிகிதம் (86%)அதிகமாகும்.

காங்கிரஸில் இணைதல்

தேசிய அளவில் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் காங்கிரஸக்கு அழுத்தம் கொடுத்தது. இதன்காரணமாகவே காந்தி தீண்டாமைக்கு எதிரான பணியிலும் அரிசன சேவா சங்கம் மூலம் கல்விப் பணியிலும் குறிப்பிட்ட அளவு செயல்பட்டு வந்தார். மேலும் தொடர்ச்சியாக அட்டவணைச் சமூகத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 1951-ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் அடையாளமாக இருந்த காமராஜரும் இந்திய முன்னாள் நிதியமைச்சர் வி.டி.கிருஷ்ணமாச்சாரியும் இணைந்து இளையபெருமாளை நேரில் சந்தித்துக் காங்கிரஸில் இணைந்து அட்டவணைச் சமூக மக்களுக்குப் பணி செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தனர். இளையபெருமாளைக் கடலூர் பாராளுமன்றத்தில் போட்டியிடும் படியும் இரு காங்கிரஸ் தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். அவரும் தன்னை அதிகாரப்படுத்திக்கொள்வதன் மூலம் அட்டவணை மக்களுக்கான சேவையை விரிவுப்படுத்த முடியும் என்கிற நோக்கில் தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

காங்கிரஸ் தலைவராக சமூகப்பணியில் இளையபெருமாள்

1951-இல் இளையபெருமாள் கடலூர் பாராளுமன்ற இரட்டை உறுப்பினர் தொகுதி முறையில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 1957-இல் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியிலும் 1962-இல் திருக்கோவிலூர் பாராளுமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்று 15 ஆண்டுகாலம் மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். இந்தியப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக நுழைந்து அவையில் பேசக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தென்னாற்காடு மாவட்ட தீண்டாமைக் கொடுமை முதல் இந்தியாவில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளின் புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டுப் பேசினார். அனைத்து மக்களுக்குமான கட்சியான காங்கிரசில் இருந்து அட்டவணைச் சமூகம் மீதான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இளையபெருமாள் போன்ற அட்டவணைச் சமூகத் தலைவர்கள் குரல் கொடுக்கும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சியும் அட்டவணைச் சமூக மக்களின் குரல்களை அங்கீகரித்தது. மொழி மற்றும் இனம் பேசிய தமிழகத்தைச் சார்ந்த திராவிடக் கட்சிகளிடம் இந்த அணுகுமுறையை அறவே எதிர்பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருக்கு இளையபெருமாளின் தீண்டாமைக்கு எதிரான பேச்சும் துடிப்பும் வெகுவாக ஈர்த்தது. மேலும் சமூகநலத்துறை மந்திரியாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும் இளையபெருமாளின் உரையாடல் வெகுவாகக் கவர்ந்தது. அதற்கு மதிப்பளிக்கும் விதமாக நேரில் அழைத்திருக்கின்றார். இச்சந்திப்பின்பொழுது நாட்டில் மோசமான சமூகக் கொடுமைகள் நிலவுவது பற்றித் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்திய லால்பகதூர் சாஸ்திரி இளையபெருமாளிடம் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் சொல்லி அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான ஒரு கமிஷன் அமைக்க முயற்சி எடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். லால் பகதூர் சாஸ்திரி தந்த வாக்குறுதிப்படி பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பேசி அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான கமிஷன் அமைக்க ஒப்புதல் வாங்கினார். இக்கமிட்டி இந்தியாவில் அமைய இளையபெருமாளின் நாடாளுமன்றப் பணியும் சமூகப்பணியுமே காரணமாகும்.

தமிழக அட்டவணைச் சமூகமான பறையர் சமூகத்தைச் சேர்ந்த மரகதம் சந்திரசேகர் இந்திய உள்துறை மந்திரி உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஆவார். இளையபெருமாளுக்குப் பிரதமர் ஜவகர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோருடைய நன்மதிப்பும் அம்மையார் மரகதம் சந்திரசேகரின் ஆதரவும் இருந்ததால் அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான கமிஷன் உருவாக்கப்பட்டு அதன் ஒருநபர் சேர்மனாக 1965-இல் இளையபெருமாள் நியமிக்கப்பட்டார். இக்கமிட்டியின் நோக்கம் என்பது இந்தியா முழுவதும் உள்ள அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான Education, Economic, Untouchability ஆகியவை குறித்து ஆராய்ந்து அறிக்கையும் அதற்கான தீர்வையும் அளிப்பதாகும்.

பிரதமர் ஜவகர்லால் நேருவின் காலத்திலேயே கமிஷனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டாலும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னரே 1965-இல் கமிஷன் அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்றன. ஏற்கெனவே தீர்மானித்தபடி இளையபெருமாளே தனிநபர் அதிகாரம் கொண்ட கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கு ஏழு பேர்கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டது. இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் மூத்ததலைவர் கெய்க்வாட் கமிஷனின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அம்மையார் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்காலத்தில்தான் இளையபெருமாள் தலைமையிலான கமிஷன் இந்தியா முழுவதும் தனது பணியை மேற்கொண்டது. 1965-இல் முதல் இளையபெருமாள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தன் குழுவுடன் சுற்றுப்பயணம் செய்தார். இப்படிச் செய்த சுற்றுப்பயணம் 1969 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்து இறுதியில் தனது அறிக்கையை எழுதி முடித்தார். இக்கமிட்டியின் பெயர் இளையபெருமாள் பெயரிலேயே “இளையபெருமாள் கமிட்டி அறிக்கை” என்று அழைக்கப்பட்டது.

1969 ஜனவரி 30-இல் தலைவர் இளையபெருமாள் தன்னுடைய அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தனது அறிக்கையைத் தாக்கல் செய்யும்பொழுது காந்தி பிறந்த மண்ணிலும் இந்திராகாந்தி பிறந்த மண்ணிலும் தீண்டாமைக் கோரத்தாண்டவம் ஆடுகிறது என்று முழங்கினார். காங்கிரஸ் தலைவராக இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த மண்ணைக் கேள்விக்குட்படுத்திய இளையபெருமாளின் நேர்மை எவருக்கும் இல்லாதது. இந்நிகழ்வு இந்தியச் சமூகத்தின் சாதியத் தீண்டாமையின் முகத்தில் அறைந்த புகழ்பெற்ற முழக்கமாக இன்று வரை உள்ளது. அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான தீண்டாமை ஒழிப்பு, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்காக இளையபெருமாள் தன்னுடைய கமிட்டி அறிக்கை மூலம் அளித்த 150 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உடனடியாக நிறைவேற்றவில்லை. ஆனால், இளையபெருமாள் தொடர்ந்து அம்மையார் இந்திராகாந்தியிடம் தன்னுடைய இளையபெருமாள் அறிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தார். இளையபெருமாளின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் சாதிஇந்துக்களும் பிராமணர்களும் பெரியளவில் அதிருப்தியாகக் கூடும் என்று பிரதமர் இந்திராகாந்தி முதலில் தயக்கம் காட்டி வந்தார்.

இதன்பிறகு தீண்டாமைக்குச் சட்டத்தீர்வாக இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைத்ததை இக்கட்டான நிலையிலும் பிரதமர் இந்திராகாந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு 1976-இல் குடியிரிமை பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தது. 1955-இல் சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் பிரதமர் ஜவகர்லால் நேருவால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இளையபெருமாளின் பாராளுமன்ற உரைகள் முக்கியக் காரணமாய் இருந்தன்.

1976-இல் குடியுரிமை பாதுகாப்புச் சட்டம், போன்ற சட்டங்கள் காலமாற்றங்களால் போதுமானதாக இல்லை என்ற சூழல் நிலவியது. இதனால் இளையபெருமாள் தன்னுடைய கமிட்டி பரிந்துரையில் விரிவான சட்டம் கோரியதையடுத்து 1989-இல் பிரதமராக இருந்த இராஜீவ்காந்தி பாராளுமன்றத்தில் வன்கொடுமைச் சட்டமாக நிறைவேற்றினார்.

1989-இல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்த கூட்டத்தின்பொழுது இளையபெருமாள் அளித்த ஒரு பேட்டியில் உங்கள் சமூகப்பணியாக எதனை முதன்மையாகக் குறிப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு, என்னுடைய சமூகப்பணிக்கு அடையாளமாக இருப்பது 1955-இல் நிறைவேற்றப்பட்ட தீண்டாமை ஒழிப்புச்சட்டம், 1976-இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை பாதுகாப்புச்சட்டம் ஆகியவையே ஆகும் என்றார். இதே ஆண்டில் பிரதமர் இராஜீவ்காந்தி 1989-இல் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தினை நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் அட்டவணை மற்றும் பழங்குடி மக்கள் நலனுக்காகத் தீண்டாமை ஒழிப்புச்சட்டம், குடியுரிமை பாதுகாப்புச்சட்டம், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் என இம்மூன்று சட்டங்களும் உருவாக இளையபெருமாளின் சமூகப்பணியும் போற்றுதலுக்குரியதாகும்.

தேசிய காங்கிரஸ் கட்சியானது முதலில் இளையபெருமாளின் பரிந்துரையை நிறைவேற்றத் தயக்கம் காட்டினாலும் பின்னாளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதில் தீண்டாமைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சியானது அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான பொருளாதாரம், கல்வி முன்னேற்றத்துக்காகச் சிறப்பு உட்கூறு நிதித்திட்டத்தைக் கொண்டுவந்தது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் மற்றும் சிறப்பு உட்கூறு நிதித்திட்டம் மட்டுமன்றி இளையபெருமாளின் பல பரிந்துரைகளைக் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. பின்னாளில் தனது கமிட்டி அறிக்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் காங்கிரஸ் கட்சியை விட்டு 1984-இல் விலகினார். அதன்பிறகு 1989-இல் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உட்பட பல திட்டங்களைக் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது. 1998-இல் காங்கிரஸ் கட்சியின் மூத்த அட்டவணை சமூகத்தலைவரும் முன்னாள் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான வள்ளல்பெருமாள் இளையபெருமாளை மறுபடியும் காங்கிரஸில் இணையுமாறு கோரிக்கை வைத்தார். இதற்கு வள்ளல்பெருமாள் கூறிய காரணம் காங்கிரஸ் தொடர்ந்து இளையபெருமாள் கமிட்டி அறிக்கையை நிறைவேற்றுவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் 1945 முதல் 1951 வரை எப்படித் தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இளையபெருமாள் இயங்கினாரோ அதைவிட காங்கிரஸால் கிடைத்த அதிகாரத்தின் மூலம் 1951 முதல் 1984 வரை தமிழக அட்டவணைச் சாதிகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இந்திய அளவிலும் தமிழக அளவிலும் களம் கண்டார். இன்றைய திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தங்களுடைய தனித்தொகுதி உறுப்பினர்களை அட்டவணைச் சமூகம் சார்ந்த உரிமைக்காகவும் அட்டவணைச் சமூகம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்க அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்திலும் சரி ஆட்சியைத் திராவிடக் கட்சிகளிடம் இழந்த காலத்திலும் சரி காங்கிரஸ் தனித்தொகுதி உறுப்பினர் தமிழகத்தில் அட்டவணைச் சமூகம் சார்ந்த உரிமைக்காகவும் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் செயல்பட முடிகிறது. இந்தளவு காங்கிரஸ் கட்சி தன்னளவில் பல மாற்றங்களை ஏற்படுத்த பாபாசாகேப் அம்பேத்கர் இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கமும் முக்கியமானதாகும்.

அட்டவணைச் சமூகம்நலன் சார்ந்து காங்கிரஸில் செயல்பட்ட தனித்தொகுதி உறுப்பினர் பலர் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் சுதந்திரத்துக்கு முன்பு சுவாமி சகஜாநந்தா, முனுசாமி பிள்ளை ஆகியோரும் சுதந்திரத்துக்குப் பின்பு சிவசண்முகம்பிள்ளை, பெரம்பலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் மணி, சிதம்பரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமாள், அம்மையார் மரகதம் சந்திரசேகர் உட்பட பலர் உள்ளனர். அட்டவணை அரசியல்வாதிகளுக்குக் காங்கிரஸில் இருந்த உரிமைபோல் திராவிடக் கட்சிகளிடம் ஒருபோதும் இருந்ததில்லை. உதாரணமாக திமுக-வில் அம்மையார் சத்தியவாணி முத்து இருந்தார். ஆனால், திமுக தனது இரண்டாவது ஆட்சிக்காலத்திலேயே அம்மையார் சத்தியவாணி முத்துவைப் புறந்தள்ளியது நினைவுகூரத்தக்கது.

1984-இல் காங்கிரஸை விட்டு விலகலும் தமிழகத்தில் அட்டவணைச் சமூக எழுச்சியும்

1967-இல் தமிழகத்தில் திமுக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியில் ஏறினாலும் அட்டவணைச் சமூகங்கள் குறிப்பிட்டளவு காங்கிரசைச் சார்ந்தே இயங்கி வந்தன. முக்கியமாக தலித்துகள் கணிசமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாகவும் வாக்காளர்களாகவும் தொடர்ந்து வந்தனர். இதற்குப் பின்புலமாகக் காங்கிரஸைத் தலித்துகள் ஆதரிப்பதற்கு இளையபெருமாளின் ஆதரவும் முக்கியமானதாகும். வன்கொடுமைக்கு எதிரான களப்போராளியாக இளையபெருமாள் திகழ்ந்த காரணத்தில் அவர் பின்னால் இருந்த தலித் மக்களின் வாக்கு வங்கியும் பெரும்பான்மையாகக் பல மாவட்டங்களில் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு, ஒருங்கிணைந்த தஞ்சை உட்பட பல மாவட்டங்களில் இளையபெருமாளுக்கு இருந்த ஆதரவை காங்கிரஸ் பெற்று வந்தது. காங்கிரசை விட்டு இளையபெருமாள் தனிக்கட்சியாக இயங்கிய காலத்தில் காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அது இளையபெருமாள் மறுபடியும் காங்கிரஸில் இணைவதின் மூலமே நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரும் தற்பொழுதைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் முயற்சி எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இளையபெருமாளின் செல்வாக்கு எந்தளவு காங்கிரசுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை அறியலாம்.

1979-இல் இந்திராகாந்தியால் தமிழ்நாடு காங்கிரசின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் இளையபெருமாள். 1980-இல் காங்கிரஸ் கட்சி இளையபெருமாளின் தலைமையில் திமுகவுடன் கூட்டணி வைத்துப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் போட்டியிட்ட 24-இல் பாராளுமன்ற தொகுதியில் வலுவான எம்.ஜீ.ஆர் தலைமையிலான அதிமுக கூட்டணியைத் தோற்கடித்து 21 தொகுதியில் வெற்றி வாகைசூடியது. வெற்றிபெற்ற 21 பேரில் கே.பி.எஸ்.மணி, முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், ராமசாமி படையாட்சி ஆகியோரும் அடங்குவர். தேசிய அளவில் அம்மையார் இந்திராகாந்திக்கு ஏற்பட்ட சரிவை 1980-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் வெற்றியின் மூலம் சரிசெய்தது. தமிழகம் சார்ந்து காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து அபார வெற்றி பெறுவதற்கு இளையபெருமாள் தலைவராகப் பணி செய்தது ஒரு முக்கியக் காரணம்.

1980-இல் இளையபெருமாள் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பின்பு அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் சட்டமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அட்டவணை மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் எதிரொலித்தார்.

1969-இல் தாக்கல் செய்யப்பட்ட தன்னுடைய இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைச் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்று இளையபெருமாளுக்கு வருத்தமும் முரண்பாடும் காங்கிரசில் மேலோங்கியது. தன்னுடைய அறிக்கையை நிறைவேற்றப்பட வேண்டி காங்கிரஸ் உள்ளேயே 15 ஆண்டுகள் 1969 முதல் 1984 வரை போராடினார். காங்கிரஸ் கட்சியிலும் இளையபெருமாள் தொடர்ந்து இயங்கமுடியாதபடி சில முரண்பாடுகள் ஏற்பட்டன. இக்காலகட்டங்களில் தமிழகத்தில் அதிகப்படியான சமூகக் கொடுமைகள் அட்டவணைச் சமூகம் மீது நடைபெற்றுவந்தன. இக்கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்ற முடிவு செய்த இளையபெருமாள் தேசியக் கட்சி காங்கிரஸை விட்டு விலகி 1984-இல் இந்திய மனித உரிமை கட்சியைத் தொடங்கினார்.

1984-இல் இளையபெருமாள் தொடங்கிய இந்திய மனித உரிமைக் கட்சி தமிழகம் முழுவதும் பறையர் உட்பட அட்டவணைச் சமூக மக்களை இணைக்கும் மறுமலர்ச்சி அரசியலாக இருந்தது. இக்காலகட்டத்தில் 15-7-1985-இல் பறை ஒழிப்புக்கு எதிராகப் போராடிய தியாகி ரெட்டீயூர் பாண்டியனை எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழகக் காவல்துறை சுட்டுக்கொன்றது. இளையபெருமாள் காட்டுமன்னார்குடி வட்டாரம் முழுவதும் பறையர்களைப் பறையடிப்பு நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதித்து வைத்திருந்தார். ஆனால் இதனை மீறி வன்னியர்கள் குறுங்குடி எனும் கிராமத்தில் வெளிமாவட்ட ஆட்கள் மூலம் பறையடிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தடுக்கச் சென்ற தியாகி பாண்டியனைக் காவல்துறை சுட்டுப் படுகொலை செய்தது.

1986-இல் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பு தொடங்குதல்

தமிழகத்தில் தொடர்ந்து அட்டவணை சமூகத்தாருக்கு நேரும் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என்று அன்றைய தமிழக அட்டவணைச் சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர். இக்கூட்டம் இளையபெருமாளின் ஒருங்கிணைப்பில் சென்னையில் 1986-இல் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவுப்படி தமிழக அட்டவணைச் சமூக மூத்த தலைவர்களான இளையபெருமாள், வை.பாலசுந்தரம், மு.சுந்தர்ராஜன், சக்திதாசன், சேப்பன் ஆகிய தலைவர்கள் ஒன்றிணைந்து அட்டவணைச் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அட்டவணைச் சமூக மக்களின் உரிமைக்காகவும் இணைந்து ஒரே அமைப்பின் சார்பில் செயல்படுவதென முடிவு செய்தனர். இக்கூட்டமானது தியாகி பாண்டியனின் இறப்பால் ஏற்பட்ட சமூக எழுச்சியைத் தொடர்ந்து அட்டவணைச் சமூகத் தலைவர்கள் ஒன்றுகூடி 1986-இல் ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர்.

இந்த அமைப்பின் தலைவராக வை.பாலசுந்தரமும் ஒருங்கிணைப்பாளராக இளையபெருமாளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஷெட்யூல்டு கேஸ்ட் பெடரேஷன் அமைப்பின் நோக்கங்களில் அட்டவணை மக்கள் உரிமை, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் பணியாற்றல், அட்டவணைச் சமூகத்துக்காக 44 தனித்தொகுதிகளில் களப்பணியாற்றி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது போன்றவை முதன்மையானதாகும். இதற்காக ஐம்பெரும் அட்டவணைச் சமூகத் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர். இப்படி ஒற்றுமையாகச் செயல்பட்டு மக்களின் எழுச்சியை ஏற்படுத்திய ஐம்பெரும் தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் மறுபடியும் சென்றனர். இளையபெருமாளும் சக்திதாசனும் இணைந்து 1988-இல் ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்துத் தொடர்ந்து பணியாற்றினர்.

ராமதாசுடன் சமாதானம்

1987 செப்டம்பர் 17 முதல் 23 வரை வன்னியர்கள் தங்களின் இடஒதுக்கீட்டுக்காகப் போராட்டம் என்ற பெயரில் பறையர் இன மக்களின் குடிசைகளைத் தென்னாற்காடு மாவட்டத்தில் கொளுத்தினர். இதனைத் தொடர்ந்து பறையர்களுக்கும் வன்னியர்களுக்கும் தென்னாற்காடு மாவட்டத்தில் கலவரச் சூழலாக இருந்தது. இதன் காரணமாக தமிழக அரசின் முயற்சியின் படி இளையபெருமாளும் ராமதாசும் தாங்கள் சார்ந்த சமூகங்கள் மோதுவதைத் தவிர்க்க சமாதானம் செய்துகொண்டனர். இந்தச் சமாதானம் என்பது வெறும் மோதலை மட்டும் தவிர்க்க அல்ல. அதுநாள் வரை வன்னியர்களின் பெருன்பான்மை நிலை காரணமாகப் பறையர்களை நிர்பந்தம் செய்து சுமத்திவந்த இழிதொழில்களை வன்னியர்கள் இனிச் செய்யக் கூடாது என்றும் இதனை வன்னியர் சங்கம் உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்ற அடிப்படையிலயே ராமதாசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். சமாதானத்துக்குப் பிறகு பறையர் மற்றும் வன்னியர் இடையேயான மோதல் பெருமளவு முடிவுக்கு வந்தது.

28-8-1988 மார்ச் டூ சென்னை

தமிழகம் முழுவதும் இளையபெருமாள் அட்டவணைப் சமூக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தார். சாதிய ஒடுக்குமுறை, சமூக உரிமை, அரசியல் அதிகாரம் போன்றவற்றுக்காக ஒரு மாபெரும் மாநாடு நடத்தத் திட்டமிட்டார். இதன்காரணமாக அனைத்து அட்டவணைச் சமூகத் தலைவர்களையும் ஒருங்கிணைத்த இளையபெருமாள் சென்னை மாநாட்டுக்கு அட்டவணை மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையொட்டி 21-8-1988 அன்று சென்னையில் மாபெரும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுப் பெரியார் திடலில் இறுதிக்கூட்டம் நடைபெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. 1982-இல் சக்திதாசனின் தலைமையில் மார்ச் டூ சென்னை என்ற ஒரு நிகழ்வும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டிற்கு மார்ச் டூ சென்னை என்று பெயரிடப்பட்டது. இதில் பறையர் சமூக இழிதொழிலுக்கு எதிராக உயிர்நீத்த தியாகி பாண்டியனுக்கும் தேவேந்திர சமூகத்தில் உயிர்நீத்த தியாகி இமானுவேல் சேகரனுக்கும் நினைவேந்தல் எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அன்றைக்குத் தமிழகத்தில் அறிமுகம் இல்லாத மாயவர் கன்ஷீராமை அழைத்துச் சிறப்பித்தார் இளையபெருமாள். மாநாட்டில் பேசிய கன்ஷீராம் பகுஜன் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார். இளையபெருமாள் இறுதி உரையாற்றும்பொழுது வன்னியர்களின் வன்முறைக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுப்பதோடு பறையர்-வன்னியர் மோதலை ஏற்படுத்துபவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றார். அட்டவணைச் சமூக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அரசியல் உரிமைகள் பெறவும் உரையாற்றினார். இம்மாநாட்டில் கூடிய அட்டவணை மக்களின் கூட்டம் என்பது அதற்கு முன்பு எந்தத் தலைவரும் கூட்டியதில்லை என்பது வரலாறு.

1989 ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் கண்ட தேர்தல்

1989-இல் நடந்த தமிழகச் சட்டமன்ற தேர்தலில் ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் களம் கண்டது. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் உட்பட பல தமிழக மாவட்டங்களில் தலித் மக்களிடம் இளையபெருமாளின் பணியின் காரணமாக செல்வாக்கும் புகழும் பரவியிருந்தது. இப்பகுதிகளில் பறையர் மக்கள் பெருவாரியாக இளையபெருமாளின் பின் அணிதிரண்டனர். அட்டவணைச் சமூக மக்களின் அரசியல் அதிகாரத்திற்காக இளையபெருமாளும் சக்திதாசனும் தாங்கள் சார்ந்த ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் சார்பாகத் தேர்தலில் போட்டியிடுவதென முடிவெடுத்தனர். இதன்படி தமிழகத்தில் இளையபெருமாள் 20 தொகுதிகள் வரை தனித்து வேட்பாளர்களை நிறுத்தினார். இப்படிப் போட்டியிட்ட வேட்பாளர்களில் பலர் அந்தந்தத் தொகுதிகளில் மொத்தம் பதிவான வாக்குகளில் 20% வரை பெற்று சாதனை படைத்தனர்.

நிறுத்தப்பட்ட 20 வரையிலான தொகுதிகளில் காட்டுமன்னார்குடி சட்டமன்றத்தில் இளையபெருமாளால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான தங்கராசு 30,788 பெற்று இரு திராவிடக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.

1989-இல் சிதம்பரம் பாராளுமன்றத்தில் இளையபெருமாள் போட்டி

சிதம்பரம் பாராளுமன்றம் என்பது சுவாமி சகஜாநந்தாவினால் கல்வி வழங்கப்பட்ட மண்ணாகும். இளையபெருமாளால் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களை அணிதிரட்டிய மண்ணாகும். தமிழகத்திலேயே சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தலித் மக்கள் தங்களின் சமூகம் சார்ந்து வாக்களிக்கும் சமூக எழுச்சியைத் தன் பணியால் ஏற்படுத்தியவர் இளையபெருமாள். இச்சிறப்பு வாய்ந்த சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இளையபெருமாள் 1989-இல் போட்டியிட்டார். அதில் மொத்தம் பதிவான வாக்குகளில் 20% வாக்குகள் வரை பெற்றார். இதன் தொடர்ச்சியே இன்றைக்கு விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்றத்தில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெறுவதற்கு அடிப்படை காரணமாகும். மொத்தத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி என ஒருங்கிணைந்த தென்னாற்காடு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என இப்பகுதிகளில் மாபெரும் சமூக எழுச்சியை உருவாக்கினார்.

அதிமுகவுடன் கூட்டணி

1991-இல் அதிமுக தலைவர் ஜெயலலிதாவே முன்வந்து இளையபெருமாளின் கூட்டணியை நாடினார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் ராஜேந்திரனும் விழுப்புரம் மாவட்டம் வானூரில் சீதாமூர் ஆறுமுகமும் அதிமுக கூட்டணியில் இளையபெருமாளின் இந்திய மனித உரிமைக் கட்சி சார்பில் வென்றனர். இவ்வெற்றிக்குப் பிறகு தனது கட்சி இரு சட்டமன்ற உறுப்பினர்களையும் அட்டவணை மக்களுக்கான உரிமைகளுக்காக வழிநடத்தினார். ஆனால், இதனை விரும்பாத ஜெயலலிதா இரு இந்திய மனித உரிமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்து வரலாற்றுத் துரோகத்தை இழைத்தார்.

1996-இல் பாமக-வுடன் சமூக நல்லிணக்கக் கூட்டணி

பறையர் இன மக்களும் வன்னியர் இன மக்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று 1996-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் இளையபெருமாளும் ராமதாஸும் கூட்டணி வைத்தனர். இந்திய மனிதக் கட்சி சார்பாக 15 வேட்பாளர்கள் வரை நிறுத்தினார். இருப்பினும் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. 1996-இல் சட்டமன்ற தேர்தலில் இளையபெருமாள் காட்டுமன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இதில் பாமக-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட இந்திய மனிதக் கட்சித்தலைவரும் வேட்பாளருமான இளையபெருமாளுக்குக் காட்டுமன்னார்குடி சட்டமன்றத்தில் வன்னியர் சமூக மக்கள் வாக்களிக்கவில்லை. இரு சமூகக் கூட்டணி தோல்விக்கு வன்னியர்களிடம் நிலவிய சாதியச் சிந்தனையே காரணமாகும். இந்திய மனித உரிமைக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அதன் தலைவர் இளையபெருமாள் 40,000 வாக்குகள் வரை பெற்று இரண்டாம் இடம் பெற்றார். திமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றார். மூன்றாம் இடமே இத்தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்தது. பாமக-வுடன் மேற்கொண்ட சமூக நல்லிணக்கத்துக்கான கூட்டணி பலன் அளிக்கவில்லை என்று இளையபெருமாளே பின்னாளில் கூறியுள்ளார்.

மீண்டும் காங்கிரஸில் இணைதல்

தமிழக அட்டவணைச் சமூக அரசியலில் 2000-த்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. வயது முதிர்வு மற்றும் காலநிலை அரசியல் மாற்றத்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை 2003 ஆண்டு மத்தியமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் முன்னிலையில் இணைத்துக்கொண்டார். பல அட்டவணைச் சமூக உரிமைகளை இளையபெருமாளின் அறிக்கையில் இருந்து காங்கிரஸ் நிறைவேற்றி இருந்தாலும் கூட இளையபெருமாள் மீண்டும் இணையும்பொழுது காங்கிரஸ் தன்னுடைய அறிக்கையை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இளையபெருமாளின் மரணம்

இந்தியாவில் அட்டவணை மற்றும் பழங்குடி மக்கள் பாபாசாகேப் அம்பேத்கரின் பணியால் உரிமைகள் பெற்றனர். இந்த வரிசையில் அடுத்ததாக இந்தியளவில் அட்டவணை மற்றும் பழங்குடி மக்களுக்கான உரிமைகளைத் தன் மாபெரும் பணியின் மூலம் வென்றெடுத்தவர் இளையபெருமாள். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவர் இளையபெருமாள் 8-9-2005 அன்று தனது 81 ஆவது வயதில் சிதம்பரத்தில் உள்ள தனியார் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்.

பயன்பட்ட ஆவணங்கள்

1.1984-இல் சிதம்பரத்தில் நடைபெற்ற இளையபெருமாளின் பொன்விழாவில் வெளியிடப்பட்ட விழாமலர் புத்தகம்.

2.ரவிக்குமாரின் வாழ்வும் பணியும்

3.இக்கட்டுரையில் இடம் பெற்ற பெரும்பாலான தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணங்கள் வழியாகவும் களப்பணி வழியாகவும் எழுதப்பட்டதாகும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!