எய்யா வண்மகிழ்
அப்போது
உனக்கும் எனக்கும்
ஒரு கனவின் தூரம்.
வீடற்ற என்
சாளரம் நீ
அதோ நிலா பார்
என்று ஆகாயம் காட்டுகையில்
நீ அத்தனை பேரழகு.
நிலவும் ஆகாயமும் கூட.
பொழியும் மழையில் விழுந்து
கருவுறும் குமிழ்முட்டை
தேநீர் மிடறு அருந்த
குவிந்து பின் இயல்பெய்தும்
உன் இதழ்கள்.
பிடித்த மனநிலையில் வாசிக்கும்
பிடித்த நூலில்
பிடித்த வரியொன்றை
என்ன செய்வாய் என்றேன்
அப்படியே விட்டுவிடுவேன் என்கிறாய்
அன்றுமுதல் நீ என் பிடித்த வரி.
நான்
படைக்க நினைத்ததுண்டு
உன் மௌனம் போல்
ஒரு ஆழ்கடல்.
துயருறுந்தோறும்
உள்ளங்கை அழுந்தப்பற்றும்
உன் இறுக்கம்
கருவறைக் கதகதப்பு.
ஏதோ சொல்ல வருவதைப் போல
கவனம் குவிக்கச்செய்து
காதலுரைத்துச் சிரிப்பாய்
பன்னீர் மலர்க்கற்றையை
மேலெறிந்தது போல
சற்றுநின்று
நிதானமாகச் சுழலத் தொடங்கும்
என் பிரபஞ்சம்.
நிறைகூடலுக்குப்பின்
நெற்றி வருடி
நீயிடும்
ஒற்றை முத்தத்தில்தான்
அன்பே சமன்பெறுகிறது
என் வெளியும் நிலமும்.
எலுமிச்சைச் சிறுமி
ஆழ்ந்துறங்கும் குளத்தில்
எலுமிச்சை நிறச் சிறுமி
எறியும் சிறுகல்
பரிவுக்கு ஏங்கும் மூதுடம்பில்
பதியும்
பிள்ளைக் கனி முத்தம் அன்றோ.