நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல
அந்தச் சின்னக் குடில்களில் அரங்கேறியிருந்தன
துயரின் பதற்றமான நாட்கள்
எந்நேரமும் நழுவி விழக்கூடும் அளவிற்கு
எங்கள் உடலிலேயே நாங்கள்
அப்போது பெற்றெடுத்த உங்களின் ஒளிக்கண்களில்
அடையாளம் கண்டுகொள்கிறோம்
எங்களின் இருண்ட காலத்தை
நாங்கள் டயப்பர் முத்தம் கொடுத்த வரை போதும்
இனி உங்கள் அந்தரங்கத்தை ரேசன் துணிகளே அலசட்டும்
சூரியனை மூட முடியாதபடி
உங்கள் கைகள் பறிக்காதபடி
ஒரு மேலாடையைப் போர்த்திக்கொண்டு வெளிவருகிறோம்
தெளியாத அளவிற்கு
நாங்கள் அடித்த மதுவின் துர்நாற்றம் தாள முடியாதபடி
உங்கள் கைகள் எங்கள் வாந்தியைச் சுமப்பதில்லை
இன்னும் உடன்பிறந்த ஒன்றுக்காயும்
வெளித்தள்ளிய ஒன்றுக்காயும்
ஓடிக்கொண்டே இருப்பதில் தார்ச்சாலையில்
கழித்துவிடுகிறோம் எங்கள் பாத ரேகைகளை
பஞ்சுக் கிடங்கில் வேலை செய்த போதும்
பல்லிளிப்பவர்களின் பார்வைக்குள் முளைவிடுகிறது
எங்கள் முள்காடு
போதும் நான் இங்கு அம்மணமாகத்தான் கிடக்கிறேன்
மறைந்து நின்று தேட வேண்டாம் குருதிப் பிசுபிசுப்போடு
என் உடல் அகராதியை
மண்டியிட்டபடி கால்களைப் பின்னுகின்ற
அரவத்தின் பிடியில் எங்கள் சதை விரிகிறது
உங்கள் கண்களில் இருக்கும்
என் பெரு மார்புகளைப் பிடுங்கி எறிய
நான் கடமைப்படுகிறேன்
நீங்கள் பொரித்துத் தின்னும் அளவிற்கு
நான் ராஜா வீட்டுக் கொழுத்த புறா அல்ல
இப்போதைக்கு எங்கள் மீது ஓங்கும்
உங்கள் பெருங்கைகளில்
அல்னாவும் ரேடியசும் உடைந்து போகும் படியான
ஓர் கனவைக் காண்பதற்குள்
பழுத்து விடுகின்றன என் ஏழைக் கன்னங்கள்
பிறவிக் குழி எலும்புகளின் வலி பொறுக்கவில்லைதான்
இன்னும் பெரிதாகவே திறந்து வைக்கிறேன்
மீண்டும் உள்ளே சென்று நீங்கள்
பிறக்க முடியாதபடி புகுந்துகொள்கிறீர்களா?
↔↔↔↔↔↔↔↔↔↔
போமேரியனின் சாயல்
ஆதாம் தின்ற ஆப்பிளின்
எச்சமாய் அவர்கள் கைகளில் நான்
ஒரு பாம்பின் கண் நோட்டமிடுவதை
அவர்கள் மாயக்கண்ணாடி வைத்து மறைத்துவிடுகிறார்கள்
சுயத்தின் கோடரிகளால்
என் எச்சத்தைக் கிழித்து எறிகிறார்கள்
மறுப்பின் சாந்து தொட்டு
அணிந்துகொள்கிறேன் ஒரு N95
ஒளிப் பெருக்கிக்கொண்டிருக்கும் மின்திரையில்
ஓடிக்கொண்டிருக்கும் காலாதீதத்தின் இருள் பள்ளங்களில்
மீட்டுக்கொண்டிருந்தேன்
தொடுதிரையில் சுட்டிக்காட்டியை வைத்து
செத்துப்போன என் காலத்தை
சுட்டிக்காட்டப்பட்டது
ஆதாம் ஏவாளுக்குக் கொடுத்த முதல் முத்தம் பற்றிய யோசனை
நோட்டிஃபிகேசன்களாய் என் குறுஞ்செய்தி மூட்டையில் கூடிக்கொள்கிறது
எப்போதோ எடுத்துக்கொண்ட
நம் உதடுகள் இணைந்த புகைப்படம் சிக்கிக்கொள்கிறது
வந்துவிட்ட அப்பாவின் கண்ணாடியைத் தாண்டி உடைந்துவிடுகின்றன கண்கள்
ஆதாம் மிச்சம் வைத்த ஆப்பிளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை
அப்பா
ஆசை ஆசையாய்ப் பரிசளிக்க வாங்கிவந்த போமேரியன்குட்டியைக்
கைகளில் இருந்து இறக்கிவிடுகிறார்
அப்பாவின் காலைச் சுற்றிக்கொண்டிருந்தது அக்குட்டி
ஒரேயரு மன்னிப்பானது வழங்கப்படக்கூடாதா என்பது போல்
போமேரியனின் கண்களில் என் சாயல் மரணிக்கப்பட்டுக் கிடந்தது