சூ.சிவராமன் கவிதைகள்

- சூ.சிவராமன் | ஓவியம்: சரவணன்

மனித மந்தை தவறி காட்டில் பசு
சுற்றி வளைத்ததோ செந்நாய்க் கூட்டம்
மாட்டின் கழுத்தில் புனிதப் பிம்பப் பலகை
மூத்திரத்தின் மகிமையை அடிக்குறியிட்டிருந்தது
காமதேனு, கோமாதா, தெய்வ கடாட்சம்
எதுவும் அறியா
அவை அறிந்ததோ
சுவையான உணவு
இக்கணத்திற்கான வேட்டை.

↔↔↔↔↔↔↔↔↔↔

தலைச்சனை ஈன்ற பிளவுபட்ட தோலின்
குருதிகாயாத புண்ணில் முத்தமிட்டு
மறைவாய்ப் புகட்டினேன் பிராந்தியை
வலி மறந்து பறந்துகொண்டிருந்தாள் மருத்துவமனைக் கட்டிலில்

↔↔↔↔↔↔↔↔↔↔

கட்டுவிரியன்கள், பன்றிகள் கடந்திருக்கின்றன
குடல்சரிந்து புழுபுழுத்த மாட்டை
நாய்கள் கூடிக் குதறியிருக்கின்றன
கோழிகள் சீய்க்க நாற்றமெழும் அவ்வழியைப்
பயன்படுத்தியிருக்கிறேன் நானும்
நீங்கள் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள்
அப்பீச்சந்தை

↔↔↔↔↔↔↔↔↔↔

மலத்தை உண்ட பன்றிக்கு வயிறு வலித்தது
உழுத நிலம்
அதன் கழிப்பறை என்பதே அதற்குத் தெரியாது
பன்றியின் கழிவைத் தின்ற
புழு பூச்சிப்பறவைகள்
கக்கூஸாகப் பயன்படுத்தின வயலை
மண் மலத்தைப் புசித்துச் செரித்தது
நெல்மணிகள் அரிசியாகி உலைக்கு வந்தன
உணவு மேசையில் வீற்றிருக்கும்
ருசிக்குக் கிறங்கி மேலும் சில கவளங்கள்
அவர் இரைப்பையில்
என்னதான் சொல்லுங்கள்
மலம் ஓர் அருவருப்பு

↔↔↔↔↔↔↔↔↔↔

சோம்பிய இருளின் சாராயப் பையை
மூலை கிள்ளிப் பருகினான்
தோதாக ஊறுகாய் நக்கி
உள்ளங்கைக்குள் ஊதிப்பார்த்தான்
பதற்றத்தில் புகைகிறது சிகரெட்
பாக்கைச் சவைத்தான்
சைக்கிளைத் தள்ளாடித் தள்ள
மகள் நடந்தாள்
மார்பில் புரண்டு
மூக்கோடு மூக்குரசி”
‘முத்தா தா’ என்பாள்
சிதறும் சில்லறைகளுக்கிடையே
சத்தமாக
“……த்தா
ஹால்ஸ் இருக்காடா”
என்றான்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!