தற்போதைய விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் கிராமத்தில் ப.கோபால் – தயிலம்மாள் தம்பதியருக்கு 8.11.1905 அன்று ஏழாவது குழந்தையாகப் பத்மா பிறந்தார். தன் சொந்த ஊரில் உள்ள ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் சுவாமி சகஜானந்தாவால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உயர்வுக்காக சிதம்பரத்தில் தொடங்கப்பட்டிருந்த நந்தனார் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கல்வியைத் தொடர முடியாமல் பெற்றோரோடு சேர்ந்து சிறு சிறு விவசாய வேலைகளைத் தொடர்ந்தார். இவருடைய இளைய அண்ணன் ஏழுமலை என்கிற மலையான் இளநிலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது முந்தைய வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கந்திலி கிராமத்தில் பிறந்த அரசுமணி என்பவரோடு நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக விடுதியில் தங்கியிருந்தபோது அண்ணல் அம்பேத்கருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். 1975ஆம் ஆண்டு சமுதாய முன்னோடிகளான ‘சொல்லின் செல்வர்’ சக்திதாசன், பி.வி.கரியமால், சேலத்தைச் சார்ந்த அஞ்சல்துறை அதிகாரி அ.முத்துசாமி, பி.அல்லிமுத்து, எம்.கே.நடராஜன் ஆகியோர் முன்னிலையில் அரசுமணிக்கும் பத்மாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்பு சென்னையில் குடியேறினர். அரசுமணி தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகத்தில் கீழ்நிலை எழுத்தாளராகப் பணிபுரிந்துவந்தார். இருவருக்கும் மலர்விழி, கார்குழலி, பீம்ராவ் மிலிந்தன் என்று மூன்று குழந்தைகள். பத்மா பள்ளிப் பருவத்திலேயே இருதயம் பாதிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருந்தார். சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் இரண்டு அறுவைச் சிகிச்சை செய்து உயிர் பிழைத்தார். இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நோயாளிக்குச் சென்னை பெருநகர் சூழ்நிலை ஏற்காது என்ற அறிவுறுத்தலின்படி கணவருக்கு மாற்றல் பெற்று 1979ஆம் ஆண்டு மார்ச் திங்கள் ஐந்தாம் நாளிலிருந்து வேலூரில் குடியமர்ந்தனர்.
வேலூருக்கு வந்த சில நாட்களிலேயே சமுதாயத் தொடர்புடைய நண்பர்கள் மூலம் அம்பேத்கர் பிறந்தநாள் விழாக்களில் கணவரேடு சேர்ந்து பத்மாவும் கலந்துகொண்டார். 23.3.1980இல் வேலூர் மாவட்ட ஆதிதிராவிட மக்கள் கல்விச் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு பௌர்ணமி குப்புசாமி, கொ.அரசுமணி, பி. அல்லிமுத்து மூவரும் இணைந்து வேலூர் நகர அரங்கத்தில் பௌத்தம் தழுவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தபோது, சென்னை மகாபோதி சொசைட்டி இயக்குநர் டாக்டர் நந்தீஸ்வர தேரோ தலைமையில் குடும்பத்தினருடன் பௌத்தத்தைத் தழுவினார்.
தொடர்ந்து குடியரசுக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இவரது ஈடுபாட்டால் 1982ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட குடியரசுக் கட்சியின் மகளிரணி தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும்போது சிதம்பரம் நந்தனார் பள்ளியிலேயே அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தைத் திறந்து வைத்த மாணவ முன்னோடியாக இருந்தவர் பத்மா. அதன் பின்னர் ஒத்த கருத்துடையவரே கணவராக அமைந்த காரணத்தால் சமுதாயப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். கட்சியில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். 1986 ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரை ஒரு மாவட்டத்திற்குச் சூட்ட வேண்டும் என்று கோரி தொடர் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை வரை சென்றார். பெயர் சூட்டும் கோரிக்கைகாகச் சென்னையில் எழிலகம் முன்பு கூடி அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-க்குக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனக் குடியரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவராக இருந்த டாக்டர் சேப்பன், சி.கோபால், வி.இ.சோழன், வி.கே.தாமோதரன் ஆகியோரோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். முன்னதாகப் பல தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பின் பத்மா அரசுமணி, சோழன் வி. கே. தாமோதரம் ஆகியோர் மறைந்திருந்து முதலமைச்சர் காரின் முன்பு சென்று கறுப்புக்கொடி காட்டி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது காவல்துறையினர் 3 பேர் மீதும் தடியடி நடத்திச் சென்னை எழும்பூர் மாநகர ஆணையர் அலுவலகத்தில் சிறை வைத்தனர். பிறகு தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களில் பத்மா மற்றவர்களோடு இணைந்து கலந்து கொண்டார். ஏன் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்பதை விளக்கும் விதமாக அம்பேத்கர் பற்றி 4 பக்க அளவிலான துண்டு வெளியீட்டைச் சொந்தச் செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.
1987ஆம் ஆண்டு தர்மபுரியில் மேளம் அடிப்பதற்குப் பரிசு கொடுப்பதாகப் பிற்காலத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை அடிப்பதை இழிவு என்று கருதிவந்த அந்தக் காலகட்டத்தில் அந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தில் டாக்டர் அ.சேப்பன், வி.கே.தாமோதரன், பத்மா அரசுமணி மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
1986ஆம் ஆண்டு பள்ளிகொண்டாவில் முற்கொடி எனும் கிராமத்தில் பறையை அடிக்கக் கூடாது என்று நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்காக வந்த காவல்துறை ஆய்வாளர் குணாளன் (தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்), வி.கே.தாமோதரன் அவர்களைக் கன்னத்தில் அறைந்துவிட்டார். மாநிலச் செயலாளராக இருந்த திரு வி.கே.தாமோதரம் அவர்களை அடித்து அவமானப்படுத்தியதைக் கண்டித்துக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக அரசைக் கண்டித்து உரையாற்றினார் பத்மா. அக்கூட்டம் கவனத்தை ஈர்த்திருந்தது. தொடர்ந்து திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தருமபுரி, சேலம், சென்னை மாவட்டங்களில் நடந்த இந்தியக் குடியரசுக் கட்சிக் கூட்டங்களில் சளைக்காமல் கலந்துகொண்டார். தன்னுடைய மூன்று பிள்ளைகளின் கல்விக்காகக் கூட நேரம் செலவிட முடியாமல் சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். குறிப்பாக விருத்தாசலத்தில் நடந்த மாநாடு, சென்னைப் பெரியார் திடலில் நடந்த மாநாடு, தர்மபுரியில் நடந்த மாநாடு, கோலார் தங்க வயலில் ‘தங்கவயல் சிங்கம்’ சி.எம். ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்த குடியரசுக் கட்சியின் தென்னக மாநாடு போன்றவற்றைக் கூற வேண்டும். தங்கவயல் மாநாட்டில், இருதய நோயாளியாக இருந்தும், ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாதங்களை எடுத்து வைத்தார். தமிழகத்தில் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களுக்கு அடுத்தபடியாகச் ‘சமுதாய வீரமங்கை’ என்று பலராலும் பாராட்டப் பெற்றார்.
பின்னாளில் வி.கே.தாமோதரனைத் தலைவராகவும் திருமதி.பத்மா அரசுமணியைப் பொதுச் செயலாளராகவும் கொண்டு குடியரசுக் கட்சி இயங்கியது. மூன்றுமுறை மாரடைப்பு வந்த பிறகு 2002இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேச்சை இழந்தார். தொடர் சிகிச்சை பெற்றும் 2003ஆம் ஆண்டு சனவரியில் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.