சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியும் தலித் கல்வியும் – அரவிந்தன் கண்ணையன்

இந்தியக் கிறிஸ்தவம் பற்றி அம்பேத்கர் எழுதிய ‘மதம் மாறியவர்களின் நிலை’ (Condition of the Converted) கட்டுரையில் கிறிஸ்தவ அமைப்புகளின் கல்விப் பங்களிப்பைப் புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டுப் பாராட்டினாலும் அவ்வமைப்புகள் ஜாதி இந்துக்களுக்கே பெரும்பயன் அளித்தன என்கிறார்.

இந்தியக் கிறிஸ்தவர்கள் (இங்கு அம்பேத்கர் தலித்துகளைக் குறிக்கிறார்) மிகுந்த ஏழ்மையான முன்னேறும் உத்வேகம் இல்லாத சூழலில் இருப்பவர்கள். ஆகையால் இந்தப் பள்ளிகளின் மூலம் கல்விப் பயன் அடைய முடியாதவர்கள். இந்தியக் கிறிஸ்தவர்களைப் பொருத்த மட்டில் பள்ளிகள், கல்லூரிகள், ஹாஸ்டல்கள் ஆகியவை தவறான இடத்தில் செலவிட்ட பணம், அதாவது சாதி இந்துக்களுக்கே அந்தச் செலவு பயன்பட்டது.”

கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பல பள்ளிகள் மதம் மாறிய தலித்துகளுக்குக் கல்வியின் கதவுகளைத் திறந்தன என்பது எந்தளவு உண்மையோ அதே அளவு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரபல கிறிஸ்தவக் கல்லூரிகள் தலித்துகளுக்குக் கல்வி அளிப்பதில் ஊக்கம் காட்டாததோடு அதற்கு எதிரான செயல் பாட்டினையும் கொண்டிருந்தன என்பதும் உண்மை என்று சமீபத்திய தலித் வரலாற்றாய்வுகள் சொல்கின்றன. காலப் போக்கில் அவை மாறியிருந்தாலும் முக்கியமான காலகட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் ஜாதி இந்துக்களைக் கவரும் பொருட்டுத் தலித் கல்விக்குத் தடையாக இருந்தன.

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் ஆரம்ப கால வரலாறு தலித்துகள் கல்வி பெறுவதில் ஏற்படுத்திய தடைகளை ஆராய்ந்தால் மேலே சொன்ன கருத்தில் உள்ள வரலாற்று உண்மை புலனாகும். இக்கட்டுரை கிறிஸ்தவக் கல்லூரியை மையமாக வைத்து நவீனக் கல்வி அறிமுகமான 19ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் கல்விக்குப் பல தரப்புகளில் இருந்து எழுந்த தடைகளைப் பற்றிய வரலாறு.

தலித்துகளின் கல்வி பற்றி மிஷனரிகளின் பார்வை

ரூபா விஸ்வநாத்தின் “The Pariah Problem: Caste, Religion and The Social in Modern India” தலித்துகளின் மதமாற்றம், மத மாற்றத்தில் மிஷனரிகளின் பங்கு, தலித்துகள் பற்றி மிஷனரிகளின் கருத்தியல், காலனி அரசின் கருத்தியல், ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாய் விவரிக்கும் ஆழ்ந்த ஆராய்ச்சி நூல். தலித்துகள் ஏமாற்றி மதம் மாற்றப்பட்டார்கள் என்கிற பரவலான அபிப்பிராயத்தை ரூபா தகர்க்கிறார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் தலித்துகளைப் பெருமளவில் மதம் மாற்றவில்லை. மாறாகத், தலித்துகளின் பிரதிநிதிகள் வாயிலாகப் பல்வேறு கிறிஸ்தவத் திருச்சபைகளோடு நடந்த கருத்துப் பரிமாற்றங்கள் ஊடாக நிகழ்ந்த மதம் மாற்றங்களே அநேகம். இத்தகையச் செயல்பாட்டினை ‘மத மாற்றம்(conversion) என்றழைப்பதைத் தவிர்க்கிறார்கள் தலித் ஆய்வாளர்கள். மாறாக, அவற்றை ‘இயக்க நகர்வு(movement) என்கிறார்கள். மதம் மாற விரும்பிய தலித்துகள் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் மீண்டும் மீண்டும் வைக்கும் முக்கியமான கோரிக்கை கல்விக்கான வாய்ப்புதான். மதம் மாறியதும் தங்கள் குடியிருப்புகளில் ஒரு சர்ச்சும், கல்விச் சாலையும் கட்டித் தர வேண்டுமென்றுதான் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். கல்வியை ஒரு வேட்கையாகவே தலித்துகள் மேற்கொண்டனர்.

தலித்துகளின் மதமாற்றத்தில் தலித்துகளே முன்னெடுத்த சில சாமர்த்தியமான காய் நகர்த்தல்களை ரூபா சுட்டிக் காட்டுகிறார். கல்வி வாய்ப்பு அழுத்தமாகக் கோரப்பட்டதுடன் சேரிகளில் சிறு பள்ளிக் கட்டடமாவது கட்டித் தர மிஷனரிகள் கேட்கப்பட்டார்கள். அக்காலத்தில் அத்தகைய கட்டடம் ஜாதி இந்துக்களிடையே எத்தகைய எரிச்சலை உண்டாக்கியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஜாதியக் கட்டுப்பாடுகளால் நல்ல உடை உடுத்த முடியாத சூழலில், பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளுக்கு மிஷனரிகள் உணவும் உடையும் அளித்துப் படிக்க வைத்தது தலித்துகளுக்கு ஏற்புடையதாக இருந்தது. அவர்களைச் ‘சுத்தப்படுத்துகிறோம்’ என்று மிஷனரிகள் நினைத்தார்கள். தலித்துகளோ அதிலும் ஓர் எதிர்ப்புணர்வுக்கு வடிகால் கண்டனர். 1714இல் மிஷனரிகளின் பள்ளிகளில் உணவும் உடையும் அளிக்கும் வழக்கம் இருந்ததைக் குறிப்பிட்டு ஸீகன்பால்கு கடிதமெழுதினார். அக்கடிதத்திலேயே பறையர் குழந்தைகள் தங்களோடு சேர்ந்து படிப்பது எரிச்சல் தருவதாக ஜாதி இந்துக்கள் சொன்னதையும் பதிவு செய்கிறார்.

தலித்துகள் சோம்பேறிகள், ஒழுக்கமற்றவர்கள், கரையேற்றப்பட வேண்டியவர்கள் என்பதாகவே மிஷனரிகளின் பார்வை இருந்தது. தலித்துகளுக்கு அளிக்கப்படும் கல்வி அவர்களைக் கிராம வாழ்க்கையிலிருந்தோ, உடல் உழைப்பிலிருந்தோ விலகும் மனப்பான்மையை வளர்த்துவிடக் கூடாதென்றும் மிஷனரிகள் கருதினர் என்கிறார் ரூபா. இதனாலேயே பல கல்வி நிலையங்களிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர். அப்போதைய சில உயர் கல்வி நிலையங்கள் ஜாதி இந்துக்களுக்கானது என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டன. ரூபாவின் கருத்துகளுக்கு முக்கியமான ஓர் ஆதாரம் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி பற்றி தயானந்தன் எழுதிய ஆய்வுக் கட்டுரை.

 

This content is locked. Only accessible for Registered Users.

If your aren't registered yet, then

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!