1980களிலிருந்து தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர் அறிஞர் ராஜ் கௌதமன். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் தலித் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்து தமிழ் உலகம் அறிந்த பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலக்கியத்தில் விமர்சனம், ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களில் பங்களித்துவந்திருக்கிறார்.1990களில் தமிழில் தலித் திறனாய்வு முறையியல் உரு கொண்டபோது அதன் முதன்மை முகமாய் இருந்தார். சுதந்திரச் சிந்தனையாளர், எழுதுவதைத் தாண்டி எந்த நிர்பந்தமும் நோக்கமும் கொண்டிருந்ததில்லை. மார்க்சியம், புறக்கணிக்கப்பட்ட மக்களியம் (Subaltern Studies), பின்நவீனம் உள்ளிட்ட வாசிப்புக் கோட்பாடுகளைக் கையாண்டு தமிழ் வரலாற்றைத் தலித் கண்ணோட்டத்தில் எழுதிப் பார்த்திருக்கிறார். தலித் விடுதலையைப் பெண்ணியத்தோடு இணைத்து எழுதிவந்திருப்பது இவரது தனித்துவம். அதேவேளையில் தலித் என்ற சொல்லாடலை அரசியல் அடையாளமாகவோ பிறப்பு அடையாளமாகவோ சுருக்காமல் அதை ஒரு குணாம்சமாகவே கருதினார். அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே ‘தலித்‘ என்பார்.
ஆய்வு இறுக்கமானது என்ற மரபை உடைத்து அதனைப் புனைவிலக்கியத்தின் அருகில் கொணர்ந்து சேர்த்தவர். அவரது எழுத்து நடை அசாதாரணமான எள்ளல்களாலும் வெடிச் சிரிப்புகளாலும் ஆனது. தனது கேள்விகள், மறுபரிசீலனைகள், ஒப்பீடுகள் மூலம் தமிழுலகம் அதுவரையில் பேசியிராத / பேச விரும்பாத விஷயங்களைப் போட்டுடைத்து இலக்கியச் சூழலைச் சூடாக்கினார். இத்தகைய விரிந்த எல்லையில் எழுதியிருப்பவர் வேறு யாருமில்லை என்று கூறும் அளவிற்குத் தமிழ் இலக்கியத்தின் பெருமளவு பகுதியை மறுவாசிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
பொதுவாக, ஓர் ஆய்வாளன் கலைஞனாக இருப்பதில்லை. ஆனால் ஒரு கலைஞன் ஆய்வாளராகவும் இருக்க முடியும் என்பதற்குச் சமகால உதாரணம் ராஜ் கௌதமன். இலக்கியமும் அரசியலும் வேறுவேறல்ல என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தவர். அதேவேளை படைப்பாற்றலின் நுட்பங்களையும் அறிந்தவர். ராஜ் கௌதமன் போன்றோரின் முயற்சிகள் அடுத்த தலைமுறை மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. புதிய முயற்சிகளுக்கும் கோணங்களுக்கும் வழிகோலியிருக்கின்றன.
இந்த அளவில் செயற்பட்டிருக்கும் முன்னோடி அறிஞரை வாழ்நாள் சாதனையாளர் என்று கருதி நீலம் பண்பாட்டு மையம் நடத்திய ‘வேர்ச்சொல்‘ தலித் இலக்கிய கூடுகையின் முதல் விருதாளர் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
ஒரு லட்சம் ரூபாய் காசோலை, நூல் தொகுப்பு, ஆவணப்படம், மதிப்பீட்டு உரைகளுடன் கூடிய விருது விழா, ஏப்ரல் 30 மாலை நீலம் நடத்திய இலக்கிய மாநாட்டின் இறுதி நிகழ்வாக மதுரையில் நடைபெற்றது.