மாட்டுக்கொம்பை ரத்தத்தில் தோய்த்து
ஊர் எல்லையில்
நட்டு வைத்துப் போயிருந்தார்கள்.
எங்களை அச்சுறுத்தும் குறிப்பு அது.
அந்தக் கொம்புகள்
அடுத்ததாக
எங்கள் குடல்களைச் சரியச் செய்யும் என்ற
சூளுரைப்பு அது.
காய்ந்து கறுத்திருந்த குருதியை
வளைத்து வளைத்து மோந்துகொண்டிருந்தது
எங்கள் வேட்டை நாய்.
செம்மண்ணில் பதிந்திருந்த காலடித் தடங்கள்
வடக்குத் திசை நோக்கிப் போயிருந்தன.
அந்தத் தடங்களைத் துரத்திக்கொண்டு
ஓர் ஓட்டம் ஓடிவிட்டுத்
திரும்பி வந்த
வேட்டை நாயின் தலையைத்
தடவிக் கொடுத்தார் எங்கள் மூப்பன்.
அவரது முரட்டுக் கைகள் பிடித்திருந்த
வேட்டைத்தடியின் எலும்பு
நொறுங்குவதுபோல் ஒலி கேட்டது.
தன் மீசையை முறுக்கி மேலேற்றிவிட்டு
நட்டிருந்த கொம்புகளை
எட்டி உதைத்தார் அவர்.
மண்ணைக் கிழித்துக்கொண்டு
கரகரவென்று சுற்றிப் பறந்தன கொம்புகள்.
”எல்லையைத் தாண்ட தைரியமற்ற கோழைகள்,
நம்மைக் கண்ட மாத்திரத்தில்
உருமா நனைந்துவிடும் தொடை நடுங்கிகள்,
நமக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள்
செத்த மாட்டின் கொம்புக்கு
ரத்தம் பூசி வைத்துவிட்டால்
மண்டியிட்டு அமர்ந்துவிடுவோம் என்று
நினைப்பு போலும்,
“ங்கொப்பன் மவனுங்க…
கெடைச்சானுங்க, கொடல உருவிடுவேன்” என்றார்.
அவரது மீசை முடிகள் விரைத்துத் துடித்தன.
நாங்கள் எமது ஐந்து விரல்களை
அழுத்தி மடக்கிக் கொக்கரித்தோம்.
எதிரிகள் விட்டுச்சென்ற கால்தடங்கள்
அச்சத்தில் நடுங்கின.
↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔
கரிசல் பூமியில் வேர்விடும் செடிகளுக்கு
வேர்கள் முரட்டுத்தனமாக இருக்கும் என்று
எதிரிகளுக்குத் தெரியவில்லை;
நம் நிலத்தில்
அவர்கள் நட்ட கொம்பு
ஒரு கட்டை விரல் அளவுக்குக் கூட
நுழைந்திருக்கவில்லை;
நம் வெப்பக் காட்டில்
ஒரு குழியைப் போடவே ஒவ்வொருத்தனுக்கும்
முட்டித் தேய்ந்திருக்கும்;
இதில், நமது குடலை உருவ
வஞ்சினக் குறிப்பு வேறு;
ஈரக்குலையில் நடுக்கம் கொண்டவனால்
ஒரு பூனையின் மீசையைக் கூட
தொட முடியாது;
அவன், புலியை வேட்டையாடலாம் என்று நினைக்கிறானெனில்
அது எத்தனை பெரிய கோமாளித்தனம்!
“சகோதரா…!
கொம்பேறி மூக்கனைப்போல்
கண்ணைப் பார்த்துக் கொத்தும்
நம் பங்காளிகளின்
குதிகால் பலம் தெரியாதவர்கள் அவர்கள்
கரிசல் காட்டில்
குதிரைகளை விட
வேட்டை நாய்கள் வேகமாக ஓடும் என்பதை அறியாதவர்கள்
நம்மைக் குறைத்து மதிப்பிடுவது இயல்புதான்
பொறு;
அந்தச் சிறு முயல்களை
விரைவில் வேட்டையாடுவோம்”
“அங்கே காண்
ஆயிரம் பனைகளின் கள்ளை
ஒரே மடக்கில் குடித்ததைப்போல்
கானலில் தெரியும் விலங்குகளை
நம் வேட்டை நாய் துரத்துகிறதே,
எதிரிகளின் திசையைப் பார்த்து
அது குலைத்தால்
அவர்களின் மந்தையிலிருக்கும் ஆடுகள்
மூத்திரம் பெய்துவிடும்;
மூர்க்கம் நம் நிலத்தின் குணம்;
நம் இனத்தின் பண்பு;
எலே பங்காளி
முட்டியில் பசையில்லாதவர்களை
நம் எல்லைக் கருப்புக்கு முன் மண்டியிட வைத்து
எலும்புகளை உடைப்போம்;
இந்தக் கரிசலில் விளையும் சோளத்தைத்
துப்பாக்கியில் ரவைகளாக நிரப்பிச் சுடலாம் என்பது
எதிரிகளுக்குத் தெரியாது பங்காளி
தோப்பில் இருக்கும் தென்னையைவிட
காட்டிலிருக்கும் பனைக்குத்
தெம்பு அதிகம் என்பதை
அந்தக் கோழைகளுக்குக் கற்பிப்போம்;”
கூர்மா நதியின் மணலில்
மல்லுக்குப் பதிந்த நம் கால்கள்
ஒரே உதையில்
விலா எலும்புகளை உடைக்கும் என்பது
எதிரிகளின் வரலாற்றில் எழுதப்படும்.
புறப்படு சகோதரா….
இந்த உச்சி வெய்யிலுக்குப்
பனை நிழல் நன்று;
களிப்பில்தான் வீரம் வளரும்;
அதோ…
நமது கூத்துக்காடு
மொந்தைகள் வழிய வழிய
நம்மை வரவேற்கிறது…
(தொடரும்….)