எனது மொழிபெயர்ப்பு அனுபவங்களில் சமீபத்தையது ‘The Past is Never Dead’ என்னும் பஞ்சாபி தலித் வாழ்வைச் சித்திரிக்கும் நாவல். ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எழுதியவர் உஜ்ஜல் தோஸன்ஜ். இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கும் அங்கிருந்து கனடாவுக்கும் புலம்பெயர்ந்து சென்றவர். கனடாவில் லிபரல் கட்சி எம்.பியாகவும் (2004 – 2011) சுகாதாரத்துறை அமைச்சராகவும் (2004 – 2006) விளங்கியவர். சுயசரிதம் சார்ந்த புனைவு என்று இந்த நாவலை அடையாளப்படுத்தலாம்.
மராத்தியிலும் கன்னடத்திலும் தமிழிலும் அழுத்தந்திருத்தமான தலித் குரல்கள் வெளிப்பட்டுள்ளன, பெரிதும் சுயசரிதம் விரிந்து. இந்நாவலோ சுயசரிதம் சார்ந்த புனைவாக வெளியாகியுள்ளது. சாதிப் பிரச்சினை, புலம்பெயர்தல், இனவெறி சார்ந்த தாக்கத்துடன் ஒரு போராட்ட வாழ்வைக் கொண்டுள்ளது. சாதியிலிருந்து தப்பிக்கத்தான் முடியும், வெல்ல முடியாதா, இந்தியாவின் சாதிவெறி இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியரிடமும் நீடிப்பது ஏன், வசதிவாய்ப்புகளுடன் கண்ணியத்துடன் வாழும்போதும் சாதி இழுக்கு துடைத்தழிக்க முடியாத கறையாகப் படிந்திருப்பது ஏன் என்ற கேள்விகளை முன்வைக்கும் தனித்துவத்தைப் பெற்றுள்ளது.
இவற்றைக் கோடிட்டுக் காட்டும் வகையில் ஃபாக்னரின் ஒரு மேற்கோள் நாவலின் தலைப்பில் பாதியாகவும் அடிப்படைவாதமாக முழுமையாகவும் இடம்பெறுகிறது: ‘கடந்தகாலம் மடிவதே இல்லை, அது கடந்தகாலமாயும் இல்லை.’ Requiem for a Nun என்னும் புனைவில் ஃபாக்னரின் இவ்வாசகம் வருகிறது. இறந்தகாலம் மறைக்க முடிவதாக, மன்னிக்க முடிவதாக இருந்தால்தான் கடந்துபோகும். இல்லாவிடில் தொடர்ந்து அழுத்தும், வதைக்கும். அப்போது அது நிகழ்காலமாகிவிடும். நீட்டிக்கும்போது எதிர்காலமாகிவிடும் என்ற பொருளை உணர்த்துவது.
அத்துடன் ஒரு தலைமுறையில் சாதிக்கொடுமை உள்ளிட்ட எந்த அநீதியையும் எதிர்க்கத் தவறினால், அது அடுத்த தலைமுறைகளைத் தொடர்ந்து பாதிக்கும், அவர்களும் அதற்கான விடையைத் தர வேண்டியிருக்கும் என்ற கருத்திழையும் ஊடுபாவாகப் பின்னப்படுகிறது இப்பஞ்சாபி நாவலில்.
இந்து மதத்தின் சாதிய படிவரிசையிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் வரையுள்ள ஒடுக்குமுறைகளுக்கு மாற்றாகச் சீக்கியம் பிறந்தாலும், சீக்கியர் சாதிக் கொடுமையை விட்டபாடில்லை. இதனால் ஜாத் சமூகம் ஒரு குருத்வாரா கட்டினால், சாமர்கள் தமக்கென ஒரு குருத்வாரா எழுப்புகின்றனர். சாமர்களுடன் சகவாழ்வு நடத்த முடியாத, அவர்களுக்கு அடுத்த படிவரிசையிலுள்ள சுஹ்ராக்கள் தனியொரு குருத்வாராவை நிர்மாணிக்கின்றனர். இப்பேதங்கள் வழிபாட்டில் / மதத்தில் மட்டுமல்ல, திருமணத்திலிருந்து நட்பு வரையிலான சமூக உறவுகளிலும் வலுவாக நிலவுகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல, இவர்கள் பஞ்சாபியராக / இந்தியராக இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து சென்றாலும் இந்தப் படிநிலை வரிசைகள், வழிபாடு சார்ந்த நிலைகள், கொள்வினை – கொடுப்பினைகள் அப்படியே ஒட்டிக்கொண்டு, கோரத்தை விளைவிக்கின்றன.
II
பஞ்சாபில் பஞ்ஹன் கிராமம் ஒன்றில் தாழ்த்தப்பட்ட சாமர் வகுப்பைச் சேர்ந்த உதோ, தலைமுறை தலைமுறையாக சாதிய இழிவு சார்ந்த வாழ்க்கையில் உழல்கிறான். ஒருகட்டத்தில் இதனைச் சகித்துக்கொள்ள முடியாதபோது, குடும்பத்துடன் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து போகிறான். ஆலையொன்றில் வேலை பார்த்து, மகனைப் படிக்க வைத்து, கல்லூரிப் பேராசிரியராக ஆக்குகிறான். மகன் ஜாத் சமூகத்து சிம்ரனைக் காதலித்து மணமுடிப்பதால், சாதி சார்ந்த விபரீதங்கள் நிகழ்கின்றன. மகன் காலுவின் மாமனார் – மாமியார் இருவரும் மருத்துவர்கள். தனிப்பட்ட முறையில் இக்கலப்பு மணத்தினைச் சகித்துக்கொண்டாலும் சாதிவெறியுள்ள ஜாத் சமூகத்தினர் தரும் அழுத்தத்தால், கலப்பு மணம் செய்துகொண்ட மகளைத் தீர்த்துக்கட்டிவிடுகிறார் மாமனார். சாமர் சாதியைச் சேர்ந்தவன் எப்படி இதற்குத் துணியலாம் என உதோவையும் மகனையும் இழிவுபடுத்துகின்றனர், அவமானப்படுத்துகின்றனர், காலுவை கடத்திச் செல்கின்றனர்.
இந்த முரண்கள் மோதல்கள் போதாதென்று, பிரிட்டனில் நிறவெறியர்கள், தம் பங்கிற்கு வெள்ளையர் அல்லாதவர் என்ற காரணத்திற்காகவே, இப்படிப் புலம்பெயர்ந்து வந்தவர்களைத் தாக்குகின்றனர், இழிவுபடுத்துகின்றனர். அடுத்து, காலு பாராளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளராக பரிசீலிக்கப்படுகையில், அவனது சாமர் சாதி குறுக்கிடுகிறது.
இவற்றிற்கெல்லாம் உதோ (அ) காலு காட்டும் எதிர்வினையை விட, காலுவின் மனைவியாக வரும் ஜாத் சமூகத்து சிம்ரன் கடுமையான எதிர்ப்பின் அடையாளமாகப் பச்சைக் குத்திக்கொள்கிறாள். தன் காதலனின் பெயரை (Kahlu) அல்குலில் பச்சைக் குத்திக்கொண்டிருந்தது, அவள் கொலை செய்யப்பட்டுப் பிணவறையில் துண்டுகளாக வைக்கப்பட்டிருக்கையில் தெரியவரும்.
“தங்கள் திருமணத்திற்கு முன், தன் பிறப்புறுப்பின் மேல் Kahlu வைப் பதிந்திடும் பொருட்டு, ஜேனிஸுடன் சிம்ரன் பச்சை குத்துபவரிடம் சென்றிருந்தாள். அது வேண்டாம் என காலு வாதிட்டான். அமெரிக்காவின் கறுப்பின அடிமைகள், கால்நடைகள் போல் முத்திரையிடப்படுவதை அது அவனுக்கு நினைவூட்டிற்று. அவள் அதனைத் தன் தந்தையின் அதிகாரத்திற்கெதிரான பதிலடியாக, தன் பாலியல்தன்மை அகற்றி, யாருடன் அவள் படுக்க வேண்டும் (அ) யாரை மணம் புரிய வேண்டும் எனக் கட்டளையிடும் ஆண் பண்பாட்டிற்கு எதிராக உயர்த்திய கலகக் கொடியாக பாவித்தாள். அவளைப் பொறுத்தவரை அவளது பிறப்புறுப்பு அடையாளப்படுத்துவது, பெண்களின் பாலியல் ஒடுக்குமுறையை; பெண் விடுதலைக்கான ஆற்றல்மிகு கருவியையும் கூட. அதனால்தான் அங்கே Kahlu பொறிக்கப்பட வேண்டும் என விரும்பினாள்.”
தாழ்த்தப்பட்ட சாதியாயிருக்கும் சாமர் சமூகத்தினர் தமக்குக் கீழ்நிலையிலுள்ள சுஹ்ராக்களை மதிப்பதில்லை, இழிவுபடுத்துகின்றனர். இதனால் புலம்பெயர்ந்த நிலையில், சாமர்கள் ஜாத்களிடமிருந்து பிரிந்து தனியொரு குருத்வாராவைக் கட்டினால், சாமர்களிடமிருந்து பிரியும் சுஹ்ராக்கள் பிறிதொரு குருத்வாராவை எழுப்புகின்றனர். சுஹ்ராக்களிடமிருந்து பிரியும் டர்கான்ஸ் தச்சர்களுக்கு வேறொரு குருத்வாரா தேவைப்படுகிறது. இது ஏன்?
இந்தியாவில் இந்துசாதி அமைப்பின் அறுதி இலக்கு அதுவே. மீற முடியாத பெட்டிகளின் படிவரிசையாக மக்களைப் பிரித்துவிட்டால், எந்தவொரு சமூகமும் இன்னொன்றின் வேதனையை உணராது, ஏனெனில், அவை தொடர்ந்து மோதிக்கொள்கின்றன.
“இது தானே இயங்கிடும், சிக்கலான நிர்வகிக்கும் / கண்காணிக்கும் இயந்திரமாகச் செயல்படுகிறது; அதில் சமூகம் தன்னை நிர்வகித்து / கண்காணித்துக்கொள்கிறது, அந்நிகழ்வுப்போக்கில் ஒடுக்குமுறை மீது எழுந்துள்ள கட்டமைப்புகள் அப்படிவரிசை நிலவுவதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. இப்படிமுறையின் மேலேயும் கீழேயும் உள்ளவரைத் தவிர ஒவ்வொருவரும் – இவ்வகைமைகளும் நுட்பமாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன – யாரோ ஒருவரால் ஒடுக்கப்படுகிறார், யாரோ ஒருவரை ஒடுக்குகிறார்” என்கிறார் அருந்ததி ராய்.
அப்பாவின் தலைமுறையினர் அநீதியை எதிர்க்காது போனதால், மகனும் பேரனும் என அடுத்தடுத்த தலைமுறையினர் எதிர்ப்பவராக, போராடுபவராக இருந்தாலும் வெல்ல முடியாது தவிக்கிறார்கள்.
“தனது இல்லத்தின் கல்லூரியின் சிறிய உலகையும் இலண்டன் – பிரிட்டனின் பெரிய உலகையும் இணைக்க விரும்பினான். பெரிய உலகை நோக்கி அவன் அடியெடுத்து வைக்கும்போதெல்லாம், சிறிய உலகம் நிழலைவீசி தன் மடிக்குள் இழுத்துக்கொள்ளும். ஒவ்வோர் அடியிலும் பல்வேறான குறுங்குழுவாதங்கள் அவனை விழுங்கிவிடுவதாக மிரட்டும். தலைப்பாகையும் தாடியும் அவனைத் தோற்றத்தில் சீக்கியன் ஆக்கின. ஆனால், அவன் சிக்கிக்கொண்டிருந்த சாதித் தடையை நீக்குவதில் உதவாது போயின. தொழிற்கட்சி கூட பழைய உலகின் அருவருப்பான பிளவுத் தன்மைக்கு அலட்சியம் காட்டியது.”
ஜாத் சமூகத்துப் பெண் ஒருத்தியை இழிவுபடுத்திவிட்டான் என்ற போலியான குற்றஞ் சுமத்தி, காலுவைக் கடத்திச் செல்கின்றனர். அப்போது அவன் தலையை மழிக்கின்றனர்; தாடி, புருவங்களையும் அகற்றுகின்றனர்; அக்குள்களும் குதமும்தான் விட்டுவைக்கப்படுகின்றன. காரணம், தீட்டுப்பட்ட உடலின் அக்குள்களும் குதமும் தீண்டத் தகுதியற்றவை.
ஆத்திரம் கொண்டு எதிர்வினையாற்றுவதால், பிரச்சினை தீர்ந்துவிடாது என்ற புரிதலுக்கு காலு வந்துள்ள கட்டத்தில், இப்படியான வன்முறைகள், கடத்தல் சம்பவத்தில் கண்ணியம் இழத்தல், அவமானமடைதல் என உள்ளிருந்து கொந்தளிக்கும் காலுவிடம் ஒரு கற்பனையான சம்பவம் நிகழ்கிறது – ஒரு பிரமையாக எழுகிறது.
சிந்திக்க வேண்டிய நேரங்களில் வழமையாக அவன் நிற்கின்ற அவுஸ் பாலத்தில், தனது கடத்தலையடுத்து காலு நின்றுகொண்டிருக்கிறான். பஞ்சாபிலிருந்து இலண்டனுக்குக் கிளம்பி வரும்வகையில் தனது தற்காப்புக் கருவியான லத்தியை ஸட்லெஜில் தூக்கி எறிந்தது நினைவில் மீண்டு வருகிறது. “அவுஸிலிருந்து அந்த லத்தி எழுந்து தன் கைகளுக்கு வந்துசேர்வதாகக் கற்பிதம் செய்தான். அக்கற்பிதத்தில், தன்னைக் கடத்தியவர்களைத் தேடிப்பிடித்து, அவர்தம் மண்டைகளை நொறுக்கிவிட்டு, இரத்தக்கறைப் படிந்த லத்தியை அவுஸில் போட்டான்.”
இக்கற்பிதத்தை எழுதுகையில், உஜ்ஜலின் சுயசரிதம் சார்ந்த ஓரிழை பின்னப்பட்டுவிடுகிறது. கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் உஜ்ஜல் இருந்தபோது, அவர் ஆளும் அமைப்பின் அங்கமாக இருந்த காரணத்தினால், பஞ்சாபியாக இருந்தும், அங்குள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளால் இருமுறை தாக்கப்பட்டார். கை முறிந்து, தலையில் 80 தையல்கள் போட வேண்டியிருந்தது.
இன்னொன்று, நாவலின் பாத்திரம் காலு. அதன் சரியான வடிவம் காற்று கருப்பன் என்று பொருள்படும். உஜ்ஜல் தேவ் தோஸன்ஜ் என்ற பெயரில் நாவலாசியர் அறியப்பட்டாலும், இயற்பெயர் தோஸன்ஜ் காலான். 17 வயதில் காலு இந்தியாவிலிருந்து வெளியேறியது போல, உஜ்ஜலும் வெளியேறியவர். தாய்மொழி பஞ்சாபி அளவுக்கு ஆங்கிலம் கைவந்துவிட்டதாலும், பெரும்பகுதி வாழ்வை இங்கிலாந்திலும் கனடாவிலும் வாழ்ந்திருப்பதாலும் நாவலை ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். தலித் மக்களின் உணவுமுறை, பஞ்சாபிகளின் கலாச்சாரம், புலம்பெயர்ந்தோரின் அரசியல் உணர்வு என்றெல்லாம் வருகையில் தாய்மொழிச் சொற்களையே குறிப்பாகப் பயன்படுத்திவிடுகிறார் – பொதுமொழியைத் தவிர்த்துவிடுகிறார். பஞ்சாபின் அடித்தட்டு மக்களது கண்ணியம் காக்கப் போராடிய ரவிதாஸை முதன்மைத் தலைவராகவும் ஒட்டுமொத்த இந்திய அளவிலான தலைவராக அம்பேத்கரையும் இடம்பெறச் செய்கிறார்.
ஆதாரங்கள்
- The Past is Never Dead – A Novel / ujjal dosanjh / speaking Tiger, 2023
- Approaching Gridlock : Arundhati Roy on Free Speech and Failing Democracy / lithub.com
குறிப்பு :
‘கடந்தகாலம் மடிவதே இல்லை’ என்னும் தலைப்பில் இந்நாவல் ‘பன்முகமேடை’யால் விரைவில் தமிழில் கொண்டுவரப்பட்ட இருக்கிறது.