எதிரும் புதிருமாக மும்மூன்று வகுப்பறைகளோடும் நடுவில் சிறிய விளையாட்டு மைதானத்துடனும் இருந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் தென்கோடி மூலையில் இருந்தது எட்டாம் வகுப்பு அறை. மைதானத்தின் விளிம்புகளில் நன்கு வளர்ந்திருந்த புன்னை மரங்களில் வசிக்கும் காகங்கள் மாணவர்களுக்குப் போட்டியாய்க் கரைந்துகொண்டிருந்தன. நடுப்பகலில் வழங்கப்படும் சத்துணவில் தங்களுக்கும் சிறிது கிடைத்துவிடும் உறுதியில் நாய்கள் சில, அந்த மரங்களினடியில் படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. பள்ளிக்குச் சற்றுத் தொலைவில், மலையடிவாரத்தில் தெரிந்த ஊர் நிசப்தத்தில் அமிழ்ந்திருந்தது. காலத்தை உயிர்ப்பிக்கும் பாடசாலையின் சப்தத்தைத் தவிர்த்து அங்கு பிறிதொன்றும் இல்லை.
பள்ளியின் முற்பகல் முதல் பாடவேளை முடிந்து மணியடித்ததும் சம்பங்கியும் கதிரேசனும் தமிழாசிரியர் கணேஷ் தண்டபாணியைக் கூப்பிடுவதற்காகத் தலைமையாசிரியர் அறையை நோக்கி ஓடினார்கள். அவரை யார் முதலில் கூப்பிடுவது என்ற போட்டியும் வேகமும் அவர்களுக்குள் நிலவியது.
கௌசல்யாவும் பொன்னம்மாவும் தாங்கள்தான் தமிழாசிரியரைப் போய்க் கூப்பிடுவோம் என்று சண்டையிட்டு, அவர்களிடத்தில் திட்டு வாங்கி, வகுப்பிலேயே சுணங்கினார்கள். அப்போது வகுப்பில் இருந்த கணக்கு ஆசிரியர் சொன்னதை ஒருவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.
‘ஊங் கிளாஸ் முடிஞ்சிட்சா? போ சார் வெளியே!’ என்பதைப் போலிருந்தது மாணவர்களின் மனோநிலை.
“கதிரு, இன்னிக்கி என்னா பாடம் தெரிமா?”
“எல்லாந் தெரியுன்டி! சட்டமேதை அம்பேத்கார். சரி, நீ போன பாடத்து கேள்வி பதில எளுதிட்டியா? நா எளுதிட்டண்டா எப்பா. இல்லனா சாருக்கிட்ட யாரு அடி வாங்கறது?”
“அதெல்லாம் ஒன்னுங் கேக்கமாட்டாரு சாரு, போடி டியேய்!”
உரக்கப் பேசிக்கொண்டு, நடையில் சப்தமெழுப்பியபடி வகுப்பறைகளைத் தாண்டி இருவரும் ஓடுவதை மற்ற வகுப்புப் பிள்ளைகள் என்னவோ ஏதோவென்று பார்த்தார்கள். தலைமையாசிரியர் அறை வாசலில் போய் நின்று கதிரேசனும் சம்பங்கியும் ஒருசேரக் கத்தியதும், கைபேசியில் எதையோ துழாவிக்கொண்டிருந்த தமிழாசிரியர் கணேஷ் தண்டபாணி சடாரென அதைக் கவிழ்த்து வைத்துவிட்டு, அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தார்.
“சார், இப்ப உங்க கிளாஸ் சார்”
“டேய் சுபுரு மகனே, யாரானா ஒர்த்தன் வர்றது?”
“தோ, இவந்தான் சார் எங்கூடவே ஓடிவந்துட்டான்”
“டே, நானு எங்க ஓடிவந்தேன்? நீதான் எங்கூட வந்துட்ட”
“சரி, சரி. நீங்க போங்கடா, நான் வர்றேன்”
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then