தலித் வரலாற்று மாதம்

 

ஆதிக்க வகுப்பினர்  கடந்தகால வரலாறு என்பதான ஒன்றைக் காட்டியே நிகழ்காலத்திற்கான நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கிறார்கள். தொடர்ந்து அவற்றைத் தக்கவைப்பதன் மூலம், நிலவும் சமூக அமைப்பை மாறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நிகழ்காலத்தில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கேற்ப அதிகாரத் தரப்பை மேலானதாகவும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் தரப்பைக் கீழானதாகவும் காட்டும் வரலாற்றை எழுதி அவ்வாறேதான் எல்லாக் காலங்களிலும் சமூக அமைப்பு இருந்தது என்று நம்பவைக்க முயன்று வருகின்றனர். இதன்படி ஆதிக்கத்தைக் கட்டுவோர் வரலாற்றைத் தங்களுக்கேற்ப எழுதவும் – மறைக்கவும் – திரிக்கவும் முற்படுகின்றனர். இதைத் தெரிந்துகொள்ளாமல் அரசியல் உரிமைகள் சார்ந்து மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகம் போராடுமேயானால் அது முழுமையான விடுதலையாக மாறுவதில்லை. உலகமெங்கும்  ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் இத்தகைய விழிப்புணர்வை உள்வாங்கியே நடந்திருக்கின்றன. போராடும் தரப்பினர், ஆதிக்கத் தரப்பினர் தங்களைப் பற்றி எழுதிவைத்துள்ள வரலாற்றையே முதலில் எதிர்கொள்கிறார்கள். தங்களைப் பற்றி வரலாறு என்ற பெயரில் பரப்பப்பட்டுள்ள பொய்யையும் அவதூறுகளையும் கண்டு அதை மாற்ற முற்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா போன்ற படிநிலை அமைப்பிலான சாதியச் சமூகத்தில் வரலாறு என்பதன் பொருள் என்ன? அதில் இன்றைய சாதிகளின் நிலை எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்றால், ஒடுக்கப்பட்ட சாதிகள் ஏதுமற்றவர்களாகவும் – பிழைக்க வந்தவர்களாகவும் – பிறரைச் சார்ந்து இருப்பவர்களாகவும் – சொந்தமாக யோசிக்கத் தெரியாதவர்களாகவும் மொத்தத்தில் அனுதாபத்திற்குரியவர்களாகவும்  காட்டப்பட்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் பொய் சொல்பவர்களாக – அழகற்றவர்களாக – திருடுபவர்களாக – பெண்டாள்பவர்களாகச் சொல்லப்பட்டிருக்கிறார்கள். நேரடியாக ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகத்தின் மீது தொடுக்கப்படக் கூடிய மற்றுமொரு தாக்குதல் இது.

இங்கு ஒடுக்கப்பட்ட வகுப்பினர் மீது புறநிலையில் மட்டுமல்லாது உளவியல் நிலையிலும் ஆதிக்கம் செய்ய வேண்டுமென்பதற்காக இத்தகைய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். மண்ணோடும் உழைப்போடும் தொடர்புடைய பெருவாரியான மக்கள் குழுக்களுக்கு வரலாற்றில் எந்த இடமுமில்லை அல்லது அளிக்கப்பட்டிருக்கும் சிறுபான்மையான இடமும் இழிவாகவோ பிறரைச் சார்ந்து இருப்பதாகவோ இருக்கிறது.

மரபான வரலாற்றில் மட்டுமல்லாது நவீனக் கால அரசியல் – பண்பாட்டு வரலாற்றிலும்கூடத் தலித் மக்கள் இதே நிலையில்தான் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு பங்களிப்புகளைச் செய்தவர்களாக இருந்தும் கூட தலித்துகளே வந்து எழுதும்வரை அவை சொல்லப்படாதிருந்த நிலையையே பார்க்கிறோம். தலித்துகள் தனித்தும் போராடியிருக்கிறார்கள், பிறரோடு இணைந்தும் போராடியிருக்கிறார்கள். பல வேளைகளில் பல்வேறு விஷயங்களில் இவர்களின் போராட்டமே – எதிர்ப்பே முதலாவதாக இருந்திருக்கிறது. பிறரது அரசியல் பயணங்கள் கூட இவர்களுடைய போராட்டங்களிலிருந்து ஊக்கம் பெற்று ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், இவையாயும் சொல்லப்பட்டிருக்கவில்லை.

இந்த விஷயத்தை உணர்ந்தவர்களாகவே தலித்துகள் இருந்துள்ளனர். குறிப்பாக அயோத்திதாசப் பண்டிதர், பாபாசாகேப் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், பெருந்தலைவர் எம்.சி.ராஜா, அன்பு பொன்னோவியம் ஆகியோர் வரலாற்று ஓர்மையோடு செயல்பட்டதோடு வரலாற்று நூல்களை எழுதினர்; வரலாற்று ஆவணங்களை விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாக அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய ‘இந்திர தேச சரித்திரம்’ நூல் இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் நோக்கில் எழுதப்பட்ட முதல் நவீன வரலாற்றுப் பிரதி என்று கருதப்படுகிறது. தலித்துகள் பற்றி வரலாற்று நூல்கள் கூறும் பதிவுகளுக்கு நேரெதிரில் நின்று அறத்தை உருவாக்கியவர்களாகவும், பரப்பியவர்களாகவும் அம்மக்களை அறுதியிடுகிறது.

இன்றைக்குத் தலித்துகளே எழுத முற்படும்போது இரண்டு அபாயங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.  தலித்துகள் குறித்துச் சாதி இந்துக்கள் பரப்பிய இழிவை அப்படியே ஏற்றுச் சலுகை கோரும் விதத்தில் எழுதுவது ஒன்று. அத்தகைய இழிவை அகற்றுவதாகக் கருதி ஆண்ட பரம்பரைக் கதையாடல்களுக்குள் சிக்கிக்கொள்வது இன்னொன்று. இந்த அபாயங்களுக்குள் செல்லாமல் இவ்விரண்டு போக்கையும் கணக்கெடுத்துக்கொண்டு பௌத்தம் என்னும் அற மரபோடு இவர்களை இணைத்து அயோத்திதாசர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன ஆய்வு முறைகளைப் பின்பற்றி எழுதப்பட்ட அம்பேத்கரின் எழுத்துகள் தலித்துகள் குறித்த வரலாற்றை மாற்றி எழுதுவதில் பெரும்பங்கு செலுத்தியது. வரலாற்றை எழுதியதோடு, அதுவரை வரலாறு எழுதப்பட்டுவந்த விதம் குறித்த பெரும் விசாரணையையும் அவர் மேற்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இவ்விருவர் மட்டுமல்லாமல் வெளிவராமல் போன போராட்டங்கள், ஆளுமைகள், அவர்தம் கருத்துகள், இதழ்கள் என்று சொல்வதற்கு ஏராளம் உண்டு. ‘தங்களுக்கு ஒரு வரலாறு இல்லை’ என்ற மனோபாவமே இதற்குத் தடையாக இருந்தது. முதலில் அவற்றை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தலித் வரலாற்று மாதம் அமைகிறது.

இந்தப் பின்னணியில்தான் ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் முன்னெடுக்கப்படுகிற கறுப்பின வரலாற்று மாதம் இதற்கான முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகிறது. ஆப்ரோ அமெரிக்கர்கள் என்றழைக்கப்படுகிற கறுப்பர்களுக்கான முன்னோடிகள் பெரும்பாலானோர் பிறந்தது பிப்ரவரி மாதம். எனவே, பிப்ரவரி மாதத்தைக் கறுப்பின வரலாற்று மாதமாக அனுசரித்தனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் தலித்  மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கிய பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாக அனுசரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு அதற்குப் பரவலான ஏற்பும் கிடைத்திருக்கிறது.

தமிழில் கடந்த 20 ஆண்டுகளில் தரவுகள் சார்ந்தும், தர்க்கங்கள் சார்ந்தும் மிக முக்கியமான வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவை இதுவரை தலித்துகள் பற்றிப் பரப்பி வைக்கப்பட்டுள்ள பொய்களை – அவதூறுகளை மறுப்பதாக இருக்கின்றன. தமிழ்நாட்டு வரலாற்றில் புரிந்துகொள்ளப்படாத பல்வேறு இடைவெளிகளை நிரப்புவதற்கு உதவுவதாக இருக்கின்றன. ஆனாலும் அவை இன்றளவும் கூடக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாதவையாகவே இருக்கின்றன. அவற்றிலிருந்து எவற்றையும் கற்றுக்கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. மாறாக அந்நூல்களை எப்படியாவது மறுத்துவிட வேண்டும் – கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் – அவதூறு செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஆனால், இதுவும் ஒரு போராட்டம்தான் என்ற முறையில் இவை தவிர்க்க முடியாதவை. இவற்றையும் எதிர்கொண்டு செயல்பட்டாக வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய களப் போராட்டத்திற்கு இணையானது இது. அந்த வகையில் தமிழில் நடந்துவரும் வரலாற்றியல் முயற்சிகள் முக்கியமானவை என்றாலும் எழுத வேண்டிய பரப்பை யோசிக்கும்போது இவற்றைத் தொடக்க நிலையானவை என்று கூறலாம். வரலாறு என்று பேசும்போது அரசியல் வரலாறு மட்டுமல்லாமல் பொருளாதாரம், பண்பாடு சார்ந்து எழுதப்பட வேண்டும். அதேபோல பல்வேறு வட்டாரங்கள் சார்ந்தும் எழுதப்பட வேண்டியிருக்கிறது. அதேபோல தலித்துகளின் வரலாற்றை எழுதுவதற்கான நேரடித் தரவுகள் குறைவாகவே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய நிலையில் – கிடைப்பவற்றை  எவ்வாறு பொருள் கொள்வது என்கிற வரலாற்றியல் சார்ந்த விவாதங்களிலும் தலித் வரலாற்றியல் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தலித் வரலாற்றியல் என்பது சாதிக் குழுக்களான வரலாறாக இல்லாமல் இந்திய வரலாற்றை முழுமைப்படுத்துவதற்கான – ஜனநாயகப்படுத்துவதற்கான முயற்சியாக அமைய வேண்டும்.

தலித் வரலாற்று மாதம் என்பதை அனுசரிப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்திருக்கிறது. 2000ஆம் ஆண்டுகளின் தொடக்க வருடங்களில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்போடு தலித் வரலாற்று மாதம் முன்னெடுக்கப்பட்டது. தற்காலத்தில் அவர்களில் பலர் அதே முனைப்போடு அதனை அனுசரிக்காவிட்டாலும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் – கலைஞர்கள் – எழுத்தாளர்கள் எந்தத் தன்முனைப்பும் பாராட்டாமல் தலித் வரலாற்று மாதத்தைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள்.

கறுப்பின வரலாற்று மாதம் வெகு சிலரால் சிறு முயற்சியாகத் தொடங்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து நடத்தியதன் மூலம் அது பரவலாகக் கவனிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசே அதனை விழாவாக ஏற்று நடத்தும் சூழல் வந்தது. அதேபோன்ற சூழல் இங்கே உருவாக வேண்டும். தலித்துகளின் சுயேச்சையான வரலாற்றை ஏற்கும் நிலை உருவாக வேண்டும். அதற்கான தொடக்கமாக இக்கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். அரசியல் கட்சிகளை, அரசை ஏற்க வைப்பது புறநிலையிலான மாற்றங்கள்தாம். மாறாக, தலித் மக்களின் விழிப்புணர்ச்சிக்காக அகநிலையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இது பரவ வேண்டும் என்பதே முதன்மையானதாகும்.

அந்த வகையில், தமிழக அளவில் திராவிட இயக்கத்தின் வருகைக்கு முன்பே தலித்துகளின் சமூக எழுச்சியையொட்டிய இதழியல் பங்களிப்புகளையும்,  புத்தாயிரத்தில் வெளியான தலித் பனுவல்கள் சமூக – இலக்கியச் சூழலில் உருவாக்கிய தாக்கங்களையும் கவனப்படுத்துகிறது இச்சிறப்பிதழ்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!