பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் அவர்களைச் சந்திக்க வேண்டும்; இயன்றால் அவரிடம் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டகாலத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. 2021ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் சென்னையில் இருந்தேன். அன்று காலையில் ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு அவரைப் போய்ப் பார்க்கலாம் என்பது என் திட்டம். எதிர்பாராதவிதமாகச் சந்தித்த நண்பரிடமே நேரம் கழிந்துவிட்டது. அடுத்த முறையாவது அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் திரும்பினேன். மறுநாள் நண்பர் அருள் முத்துக்குமரனை அழைத்து அம்பேத்கர்பிரியனை எப்போது பார்க்கலாம் என்று விசாரித்தேன். அவரை விரைந்து பார்த்துவிடுவது நல்லது என்று கூறி அவருடைய உடல்நிலையைப் பற்றிச் சொன்னார். ஆனால், அவர் காலமாகிவிட்டார் என்கிற செய்தி அன்றிரவே கிடைத்தது. நம்ப முடியாமலிருந்தேன். எப்போதும் நினைவில் இருந்திராத ஒருவர், இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை ஏதோவொரு காரணத்தால் நினைவில் வந்து வந்து போனார் என்பது வியப்பாக இருந்தது.
நான் பார்க்க விரும்பியதற்குக் காரணம் இருந்தது. அவர் நிறைய நூல்களை எழுதியிருந்தார். கவிதைகள் எழுதிவந்த அவருடைய முதல் வரலாற்று நூல் 1888ஆம் ஆண்டு வெளியானது. ‘தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு’ என்பது நூலின் பெயர். இரட்டைமலை சீனிவாசன் பற்றிய முதல் நூல் அதுவாக இருக்கலாம். அப்போது புழக்கத்தில் இருந்திராத இரட்டைமலை சீனிவாசனுடைய ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ என்ற நூலைத் தழுவிய தகவல்கள் அதிலிருந்தன. தகவல்கள் இல்லாது புகழ் மொழிகளால் நிரப்பப்பட்ட நூலாக அது இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இது முக்கியமான பணி. பிற்காலத்தில் மேலும் பல செய்திகளை – ஆவணங்களை இணைத்து அந்நூலை விரிவாக்கி எழுதினார். பிறகு ‘ஆதி திராவிடர்கள் யார்?’ (1989) என்ற நூலை எழுதிய அவர், அம்பேத்கர் நூற்றாண்டை யட்டி ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை எழுதினார். ‘மேயர் தந்தை சிவராஜ்’ (1996), ‘ஸ்ரீ நாராயணகுரு வாழ்க்கை வரலாறு’, ‘பகுத்தறிவுப் பாட்டன் பண்டிதமணி க.அயோத்திதாஸ் வாழ்க்கை வரலாறு’ (1997) உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதினார். அயோத்திதாசர் நூல் தொகுதிகள் வெளியாகும் (1999) முன்னரே அவர் எழுதிய நூல் வெளியாகிவிட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர்பிரியனின் நூல்கள் பெரும்பாலும் அறிமுக நோக்கிலானவை. எளிய வாக்கியங்களில் அமைந்தவை; முதல்முறையாக அறிய விரும்புவோருக்கு உதவுவதாக இருந்தன; படித்தவராக இருந்தாலும் கல்விப் புலத்திலிருப்பது போல் எழுதாமல் மக்களிடையே பணியாற்றிய அம்பேத்கரிய இயக்கப் பின்புலத்திலிருந்து வந்தவராகவே எழுதினார். அதேவேளையில் தொடக்க காலத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக இருந்ததால் பொத்தாம் பொதுவாக எழுதுவதிலிருந்தும் விலகிச் சான்றுகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தன்னுடைய மொழியில் எழுதக்கூடியவராக இருந்தார். தேவைப்படும் இடங்களில் மேற்கோள்களையும் உதாரணங்களையும் உறுத்தாத வகையில் சேர்த்தார். வாசிப்பவர்களுக்கு ஊக்கத்தைத் தரும் வகையிலும் எழுதினார். இத்தகைய வரலாறும் சொல்லல் முறையும் எல்லாக் காலத்திலும் இருக்கும்; அவையும் தேவை. இன்னும் சொல்லப்போனால் அவையே அடித்தளத்தில் வினையாற்றக் கூடியவையாக இருக்கின்றன. வரலாற்றுக் களங்களில் இவ்வாறு எழுதக்கூடிய – செயல்படக்கூடியவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இதுபோன்ற நூலாசிரியர்களின் நூல்களெழுதிய அனுபவங்கள் திரட்டப்பட்டதில்லை. அவை பொருட்படுத்தப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். இந்த நூல்களை எழுதுவதற்கான செய்திகளை எவ்வாறு சேகரித்தார், எவ்வாறு தெரிந்துகொண்டார் என்பதை அவரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டுமென்பது என் ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை.
சென்னையில் எம்.சி.ராஜா விடுதியில் மாணவராகத் தங்கிப் பயின்றபோது மாவீரன் ஆரியசங்காரன் மூலம் அம்பேத்கர் பற்றித் தெரிந்துகொண்ட இவர் தலித் வரலாறு பற்றிய ஓர்மை கொண்டிருந்த மெயில் முனுசாமி அவர்களோடு பிற்காலத்தில் தொடர்பில் இருந்திருக்கிறார். இவருடைய நூல்களெழுதும் போக்கில் இவை தாக்கம் செலுத்தியிருக்கலாம்.
அம்பேத்கர் பிரியனின் வாழ்க்கையே முதல் தலைமுறை தலித்தின் போராட்ட வாழ்க்கைக்கான உதாரணமாக இருந்திருக்கிறது. வந்தவாசி அருகில் உள்ள கீழ்கொடுங்காலூர் என்ற ஊரில் வறுமைமிக்கக் குடும்பம் ஒன்றில் 1952ஆம் ஆண்டு பிறந்த சுப்பிரமணி என்பவரே பிற்காலத்தில் அம்பேத்கர்பிரியனாக மாறினார். கையை ஊன்றிக் கரணம் அடித்து எழுந்தவர். சென்னை, சேலம் கல்லூரிகளில் முறையே வரலாறு பாடத்தில் பி.ஏ, எம்.ஏ பட்டங்களைப் பெற்ற இவர் சிறிது காலம் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்துவிட்டு, வங்கிப் பணியாளராக இருந்து ஓய்வுபெற்றார். ஆரியசங்கரன் சொற்பொழிவுகள் மூலம் அம்பேத்கரை அறிந்தவர் அதற்குப் பிறகு ஊரில் இரவு பாடசாலை, அரிஜன காலனி என்கிற பெயரை அம்பேத்கர் நகர் என்று மாற்றுவதற்காகச் செயற்பட்டார்.
80களின் தொடக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் சம உரிமை மாமன்றம் என்கிற அமைப்பின் மூலம் பொதுவாழ்க்கைக்கு அறிமுகமாகியிருக்கிறார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அதன் கிளைகள் பரவலாக இருந்திருக்கின்றன. பிறகு தேசிய ஜனநாயகக் கட்சி என்கிற ஒரு கட்சியையும் உருவாக்கிச் சிறிது காலம் செயல்பட்டிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியின் கவாய் பிரிவிலும் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட விபத்தையட்டி மன்றப் பணிகள் தொய்வடைந்திருக்கின்றன. அவர் தொடங்கிய – இருந்த அமைப்புகளின் சார்பில் பல்வேறு விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக ‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படம் வந்தபோது அப்படத்திற்குத் தலித் அமைப்புகளிடமிருந்து பரவலாக எதிர்ப்பு வந்தது. அந்த வகையில் அப்படத்தைத் தடை செய்ய வேண்டுமெனப் போராட்டம் நடத்தியதில் இவர் நடத்திய மன்றத்திற்கு முக்கியமான பங்கு இருந்தது. அதேபோல் 1989ஆம் ஆண்டு ஆம்பூரில் வடஆற்காடு மாவட்டத்திற்கு அம்பேத்கர் மாவட்டம் என்று பெயர் வைக்கக் கோரி போராட்டம் நடத்தினார். தமிழ்நாட்டில் பல ஊர்களில் இன்றளவும் உள்ள அம்பேத்கர் சிலைகள் பலவற்றையும் திறந்து வைத்தவராக இவர் இருந்திருக்கிறார்.
மாநாடுகள், கோரிக்கைகள், இதழ்கள், சந்திப்புகள் என்று பல்வேறு பணிகள் அவரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாவற்றையும் சேர்த்தே அவரை நினைவுகொள்ள வேண்டும். அவரை இனிச் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் எழுதிய நூல்களை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நினைவில்கொள்வோம்.
தகவல் உதவி:
பேராசிரியர் பெ.விஜயகுமார்,
அருள் முத்துக்குமரன்.