புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தைத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடிகள் நல ஆணையம் என்ற பெயரில் நியமனம் செய்து அறிவித்திருக்கிறது. இந்தப் புதிய அரசு பதவியேற்றதிலிருந்து தலித் நோக்கில் உருவாக்கியிருக்கும் முக்கியமான முன்னெடுப்பு என்று இதனைக் கூறலாம். இந்த ஆணையம் ஏற்கெனவே இங்கு இயல்பாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த அரசாங்கங்கள் செய்யத் தவறியதை இந்த அரசு செய்திருக்கிறது. இது அரசமைப்பு ரீதியான அமைப்புச் சட்டத்திற்கு உட்படும் பிரச்சினைகளை இனங்கண்டு சட்ட ரீதியாகத் தீர்க்க வழிவகை செய்யும் அமைப்பாகும். இந்தியாவில் ஏற்கெனவே 11 மாநிலங்களில் இத்தகைய ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் பட்டியல் வகுப்பினருக்குத் தனியாகவும் பழங்குடியினருக்குத் தனியாகவும் என்று இரண்டு ஆணையங்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் சட்டரீதியாகச் செய்திருக்க வேண்டியதைத்தான் இப்போது இந்த அரசு செய்திருக்கிறது என்றாலும் இதனைச் செய்ய முன்வந்தமை என்பது பாராட்டத்தக்கதாகும்.
இத்தகைய ஆணையம் உருவாகியிருப்பதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது தலித் மக்களின் விழிப்புணர்வு. குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில் தலித் அமைப்புகளும் தலித் செயற்பாட்டாளர்களும் வெவ்வேறு தருணங்களில் இதனைச் சுட்டிக் காட்டி வந்துள்ளனர். கடந்த சில வருடங்களில் சமூக வலைதளங்களில் படர்ந்திருக்கும் தலித் தரப்பு குரல்களுக்கும் இவற்றில் பங்குயிருக்கின்றன. இத்தகைய பின்னணியில் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக தங்கள் மீதான பல்வேறு தரப்பினரின் கடந்தகால விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துச் சரிசெய்ய முனையும் போது தலித் தரப்புக்குச் செய்யும் சலுகையாக இதனை உருவாக்கியிருக்கிறது.
பிற சமூகக் குழுகளுக்குப் புதிதாக உருவாக்கும் அரசாங்கம், தலித் தரப்புக்கு என்று வரும்போது ஏற்கெனவே செய்யத் தவறியதைச் செய்துவிட்டுக் கணக்குக் காட்ட முற்படுகிறது என்கிற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கெதிரான அவதூறு பரப்பப்பட்டு வரும் இச்சூழலில் சட்டப்படியான ஆணையம் என்பது ஆறுதலளிக்கிறது என்பதும் உண்மையே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வன்கொடுமை தடுப்புக்கான (புதிய) சட்டத்தின் படி முதலமைச்சர் தலைமையில் கூட வேண்டிய கண்காணிப்புக் குழுவில் முதலமைச்சர் பங்கெடுத்தார். அதன் பிறகே மாநில அரசு அவசரச் சட்டத்தின் அடிப்படையில் இந்த ஆணையத்தை நிறுவியுள்ளது.
இந்த ஆணையத்தின் அர்த்தம் அறிவிப்பில் இல்லை, இனிவரும் காலங்களில் ஆணையம் எவ்வாறு செயல்படப் போகிறது என்பதில்தான் அதன் அர்த்தமே அடங்கியிருக்கிறது. அதனை இனிமேல்தான் பார்க்கப் போகிறோம். ஆணையத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன என்றாலும் உறுப்பினர்கள் வெவ்வேறு துறைகளில் புலமை பெற்றவர்கள் என்ற முறையில் முற்றிலும் எதிர்மறையாகவும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆணையத்திற்கு முதலில் தேவையானது முழுச் சுதந்திரம். மேலும் உறுப்பினர்களின் அதிகாரத்தின் மீது அரசு உள்ளிட்ட எவரின் தலையீடும் இல்லாதவாறு வழிவகை செய்ய வேண்டும். முதலாவதாக ஆணையத்திற்கெனத் தனி அலுவல் மையமும் நிதியும் ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்ந்து புலப்படும் பிரச்சினைகள் மட்டுமல்லாது புலப்படாதவையும் ஏராளம் உள்ளன. இங்கு புலப்படும் பிரச்சனைகளுக்கே சட்ட மதிப்பு தரப்படுகின்றன என்றாலும் இவையாவது முழுமையாகக் கவனிக்கப்பட வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் நிரப்பப்படாத இடங்கள், நிறைவேற்றப்படாத திட்டங்கள், திருப்பப்படும் அல்லது செலவளிக்கப்படாத நிதி போன்றவை உடனடியாகக் கவனத்தில் கொணரப்பட வேண்டும். பள்ளி-கல்லூரிகளின் கட்டடங்கள், விடுதிகள் மேம்படுத்தல் போன்றவை பற்றித் தமிழக அளவில் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். துப்புரவு பணியின் சிக்கல்கள், ஆணவக் கொலைகள், கந்துவட்டிக்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதேபோல நிலம் உள்ளிட்ட வள ஆதாரங்கள் மீதான சட்டப்படியான தலையீடும் அவசியமாகிறது. ஆணையத்தை வரவேற்பது என்பது அது சட்டரீதியான வழிமுறைகளைக் கையிலெடுக்கும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துவதேயாகும்.