“விளிம்புநிலைத் தமிழர்களின் வாழ்வியல் அடையாளங்களில் இருக்கிறது தமிழ் அழகியல்”

- ஸ்டாலின் ராஜாங்கம் | இந்திரன்

விஞர் என்பது முதன்மை அடையாளமாக இருப்பினும் ஓவியர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர் என்று பல்வேறு செயற்பாடுகளையும் கொண்ட தமிழ் ஆளுமை இந்திரன்.

தமிழ் மரபிலக்கியத்திடமிருந்தும் மரபிலக்கிய ஆளுமைகளிடமிருந்தும் உருவாகி தமிழ் நவீன இலக்கியம் நோக்கியும் உலக இலக்கியம் நோக்கியும் விரிந்தவர். அந்நியன், முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் தற்கால கலை : அகமும் புறமும் உள்ளிட்ட கலை விமர்சன நூல்களும் இவருடையவை. தமிழ் அழகியல் என்னும் கருத்தாக்கம் இவருடைய கலை விமர்சனப் பார்வையின் கொடையாகும். கவிதை, கவிதை வாசிப்பு சார்ந்து உலகலாவியப் பயணங்கள், உரையாடல்கள், நூல் தொகுப்புகள் ஆகியவற்றை மேற்கொண்டிருக்கிறார். 2011-ஆம் ஆண்டில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெற்றிருக்கிறார்.

ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்கர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து 1982-ஆம் ஆண்டு `அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ என்ற பெயரில் வெளியிட்டார். அதுவரை தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்புகளிலிருந்து மாறுபட்டு இத்தொகுப்பு உண்டாக்கிய தாக்கம் கணிசமானது. இதேபோல தலித் இலக்கியம் பற்றிய மொழிபெயர்ப்பாக வந்த `பிணத்தை எரித்தே வெளிச்சம்’ (1995) நூலும், `காற்றுக்கு திசை இல்லை’, `கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்’ போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் முக்கியமானவை.

இந்திரனுடைய இதுவரையிலான நேர்காணல்களிலிருந்து மாறுபட்டு புதிய அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறது இந்நேர்காணல்.

இந்திரன் எனும் புனைபெயரைத் தேர்ந்தெடுத்தது எப்போது, ஏன்?

1980-ஆம் ஆண்டு ஓவியம் பற்றிய `TANTRA HIS IDIOM’ என்ற தலைப்பிலான என் முதல் ஆங்கிலக் கட்டுரையை `THE ECONOMIC TIMES’ ஆங்கில நாளேடு வெளியிட்டது. அந்தக் கட்டுரைக்காகத்தான் இந்திரன் எனும் பெயரை நான் பயன்படுத்தினேன். முப்பது வயதுடைய நான் அப்போது மும்பையில் வாழ்ந்துகொண்டிருந்தேன். உயர்வு நவிற்சியான புனைபெயர்களை வைத்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. எனவே இந்திரன் எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். அதாவது இராஜேந்திரன் எனும் எனது இயற்பெயரின் சுருக்கம்தான் இந்திரன்.

எண்பதுகளில்தான் இந்திரன் எனும் பெயரில் எழுதினீர்கள் என்றால் அதற்கு முன் எந்தப் பெயரில் எழுதி வந்தீர்கள்?

இன்று யோசித்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. பாம்பு தனது சட்டையை உரிப்பது போல எனது புனைபெயர்களை நான் அடிக்கடி மாற்றிக்கொண்டே வந்திருக்கிறேன். காரணம் சுயவிமர்சனம்தான். 18 வயதிருக்கும் போது `தமிழ்க்கூத்தன்’ என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் மெல்லிசை நிகழ்ச்சிக்கான இசைப் பாடல்கள் எழுதி வந்தேன். அப்போது பாரதி, பாரதிதாசனார், சுத்தானந்த பாரதியார், மதுரகவி முருகேச பாகவதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் நான் கவரப்பட்டிருந்தேன். எழுதி என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் சன்மானம் அகில இந்திய வானொலியிடமிருந்து பதினைந்து ரூபாய்தான். அதன் பிறகு 20 வயதிருக்கும் போது என்னைவிட 18 வயது மூத்தவரான என் அத்தை மகன் ஜெகதீஷ்வரின் பாதிப்பினால் தத்துவம் பற்றிய வாசிப்பு தொடங்கியது. தியாசொஃபிகல் சொசைட்டி, திருமந்திரம், சித்தர் பாடல்கள்,ஜே.கிருஷ்ணமூர்த்தி, சின்மயானந்தா, உபநிடதங்கள் என்று ஜெகதீஸ்வர் மாமாவைப் பின் பற்றித் தத்துவத் தேடலில் அலைந்தேன். அப்போது `ஞானம்பாடி’ எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டேன். அது எனக்குப் பிடித்திருந்தது. 24 வயதில் 1972-ஆம் ஆண்டு ஞானம்பாடி எனும் புனைபெயரில் `திருவடி மலர்கள்’ எனும் மரபுக் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டேன். இதுவே நான் எழுதி வெளியிட்ட முதல் புத்தகம்.

ஞானம்பாடி எனும் பெயரில் இருந்தபோதே 17 ஆண்டுகள் ஏராளமான மரபுக் கவிதைகளை எழுதி வந்தேன். பிறகு தனித்தமிழில் `சேரிக்குச் சென்ற சிவன்’ எனும் கதை எழுதினேன். அது `தமிழம்’ எனும் தனித்தமிழ்ச் சிற்றிதழில் வெளிவந்தது. அதேபோல் மும்பை சென்று நாஞ்சில் நாடன், ஞான.ராஜசேகரன் ஆகியோருடன் இருந்தபோது ஞானம்பாடி எனும் பெயரிலேயே நான் எழுதிய சிறுகதையொன்று திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது பெற்றது. தனது சாதி எதுவென்றே அறியாத சிறுவன் ஒருவன், மும்பைத் தாராவியில் ஒரு சாதிக் கலவரத்தில் கொல்லப்படும் சோகத்தைப் பேசும் சிறுகதை அது. ஆ.மாதவன் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தபோது வல்லிக்கண்ணனால் தேர்ந்தெடுக்கப்பட்டு நா.பார்த்தசாரதியின் கரத்தால் அந்த விருதினைப் பெற்றேன். சுமார் 20 ஆண்டுகளாக எல்லோரும் என்னை ஞானம்பாடி என்றுதான் அழைத்து வந்தார்கள்.

1983-ஆம் ஆண்டு சிவகங்கைக்கு மாற்றலான பிறகு கவிஞர் மீராவினால் தமிழில் மீண்டும் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். அப்போது ஞானம்பாடி எனும் எனது புனைபெயர் மீதே எனக்கு விமர்சனம் எழுந்தது. `நாம் என்ன பெரிதாக ஞானத்தைப் பாடி விட்டோம்?’ என்று தோன்றியது. எனவே ஞானம்பாடி எனும் பெயரை மாற்றினேன். இந்திரன் எனும் ஒரே பெயரிலேயே ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதத் தொடங்கினேன். இந்திரன் எனும் பெயரில் `அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ எனும் தலைப்பில் நான் மொழிப்பெயர்த்த நூலை வெளியிட்டேன். அன்று முதல் இன்றுவரை எனது பெயர் இந்திரன்தான்.

1982 – 2020 வரையிலான உங்களின் பதினோறு கவிதைத் தொகுதிகளைத் தொகுத்து `பிரம்மைகளின் மாளிகை’ எனும் கவிதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டு இருக்கிறீர்கள். உங்களது 50 ஆண்டுக்காலக் கவிதைப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

1982-இல் கவிஞர் மீரா அன்னம் வெளியீடாக நவகவிதை வரிசை என்ற தலைப்பில் கவிதைத் தொகுதிகளை வெளியிடத் தொடங்கினார். அதில் கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், கோ.ராஜாராம், வண்ணநிலவன் போன்றவர்களின் முதல் கவிதைத் தொகுதிகளுடன் எனது `அந்நியன்’ எனும் நவீன கவிதைத் தொகுதியையும் வெளியிட்டார். 17 ஆண்டுகளாக மரபுக் கவிதைகள் எழுதி வந்த நான் எளிமையும் மரபுடைத்த சுதந்திர வெளியையும் இக்கவிதைகளில் கையாண்டேன். இதற்கு முன்னரே ஆங்கிலத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பை 1982-ஆம் ஆண்டு ‘SYLLABLES OF SILENCE’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். இக்கவிதைகள் கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பாகி எனக்கு உலக அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன.

ஒரு காலகட்டத்தில் ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிசக் கவிதைகளைப் படித்து வந்ததின் விளைவாக முழுக்க முழுக்க நகர அனுபவங்களை முன்வைத்து நிறைய கவிதைகள் எழுதினேன். இவ்வாறு நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 1991- ஆம் ஆண்டு `முப்பட்டை நகரம்’ என்னும் தலைப்பில் யாளி வெளியீடாக வெளியிட்டேன். இது சுஜாதா ஞானக்கூத்தன் இன்குலாப் சுகுமாரன் போன்றவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்திரன் கவிதைகள் தமிழுக்கு ஒரு புதிய பரிமாண விஸ்தீரணம் என்று கணையாழியில் சுஜாதா பாராட்டி எழுதியிருந்தார். தமிழ்க் கவிதைப் பரப்பில் எனக்கான இடம் உறுதிப்பட்டது. இதன்பிறகு மூன்றாம் உலகிலிருந்து ஒரு தமிழ்க் குரலாகச் சமூக விமர்சனங்களுடன் கூடிய ஒரு நெடுங்கவிதையை 1994-ஆம் ஆண்டு `சாம்பல் வார்த்தைகள்’ என்று வெளியிட்டேன். சர்ரியலிச படிமங்கள் கொண்ட ஒரு பரிசோதனை முயற்சியாக இது இருந்தது. 2003-ஆம் ஆண்டு `மின்துகள் பரப்பு’ எனும் அதிநவீனக் கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டேன். தமிழ் கவிதைகள் இயந்திர அழகியல் என்பதையும் காட்சி ரீதியான கவிதைகள் என்பவற்றையும் இதில் நான் எழுதி இருந்தேன். இதன் அட்டைப்படமாக கார் ஒன்றை வெளியிட்டு இயந்திர அழகியல் என்பதை முன் வைத்தேன். முதல் பக்கத்திலேயே “கலை இன்னமும் அழகுக்கு சேவை செய்யாது” என்று அறிவித்தேன். இன்றுவரை அத்தகைய ஒரு பரிசோதனை முயற்சி தமிழில் யாரும் செய்யவில்லை. அது ஏதோ ஒரு விளையாட்டு முயற்சி என்று தமிழுலகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.

பகடி என்பது எத்தகைய வலிமையான ஆயுதம் என்பதை இன்றுவரை தமிழ்க் கவிதையுலகம் கண்டுகொள்ளவில்லை. இதன் பிறகு பிரெஞ்சு கரீபியன் தீவான கோதுலுப் எனும் தீவுக்குப் போனேன். அப்போது அத்தீவில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 2014 ஆம் ஆண்டு `மிக அருகில் கடல்’ என்கிற ஒரு தொகுதியைக் கொண்டு வந்தேன். பிறகு அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பானது. காலப்போக்கில் என் கவிதைகள் மிகவும் எளிய மொழியில் பேசத் தொடங்கிவிட்டன. நான் சிலிநாட்டு எதிர்- கவிதைப் பிதாமகன் நிக்கனோர் பர்ராவின் கவிதைகளால் கவரப்பட்டேன். பிறகு தமிழின் முதல் எதிர் – கவிதைத் தொகுப்பான `மேசைமேல் செத்த பூனை’ எனும் எனது கவிதைத் தொகுதியை 2018-ஆம் ஆண்டு வெளியிட்டேன். அதன் பிறகு `பிரபஞ்சத்தின் சமையல் குறிப்பு புத்தகம்’ எனும் டிஜிட்டல் யுகத்திற்கான கவிதைகளை ஒரு தொகுப்பாகக்கொண்டு வந்தேன். அந்தக் கவிதைகளின் காப்பிரைட் உரிமைகளைப் புறக்கணித்தேன். யார் வேண்டுமானாலும் அவற்றை என் முன் அனுமதியின்றி எடுத்துப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டேன்.

திருக்குறளும் ஆத்திச்சூடி போன்றவை வெறும் வாய்மொழி வழக்காகவே உலவி வந்த நம்முடைய மண்ணில் அறிவை இலவசமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எனது கருத்தை முன்வைத்தேன். இதன் பிறகு `உலகிலேயே சிறந்த புத்தகம்’ என்கிற ஒரு நூலை வெளிக்கொண்டு வந்தேன். அதில் `புத்தகக் கலை’ என்பதைக் கடந்து `கலைப் புத்தகம்’ என்கிற ஒன்றைத் தமிழில் பரிசோதனை முயற்சியாகச் செய்தேன். அந்த மொத்தப் புத்தகத்திலும் அட்டை முன்னுரை எல்லாமே இருக்கும். ஆனால், புத்தகத்தைத் திறந்தால் எல்லாப் பக்கங்களும் வெற்றுப் பக்கங்களாக இருக்கும். “உலகிலேயே சிறந்த புத்தகம்” என்பது இதுவரையிலும் எழுதப்படாத புத்தகம்தான். அந்தப் புத்தகத்தை நீங்கள் எழுதுங்கள் என்று ஓர் அறிவிப்பை நான் கொடுத்தேன். இது பெரிய வரவேற்பைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வெளியிட்டவுடன் 300 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது டிஸ்கவரி புக்ஸ் வேடியப்பன் எனது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். அதன் தலைப்புதான் பிரம்மைகளின் மாளிகை. என்னுடைய கவிதை காலந்தோறும் உருமாறிக்கொண்டே வருகிறது. தற்போது டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்க் கவிதை ஒன்றை உருவாக்குவதில் நான் முனைந்திருக்கிறேன்.

ஓவியத்துக்கும் உங்களுக்கும் எப்படித் தொடர்பு வந்தது?

எல்லாம் புத்தரிலிருந்துதான் தொடக்கம். எனக்கு 7-8 வயது இருக்கலாம். படுக்கை அறையில் அப்பாவுடன் நான், தூக்கக் கலக்கத்தில் கிடப்பேன். எங்களின் படுக்கை அறைச் சுவரில் அப்பா தீட்டிய ஓர் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருப்பேன். நீலமும் கருமையும் கலந்து புரளும் ஓவியத்தில் இருக்கும் அடர்ந்த இருட்டுக்குள்ளிருந்து தீர்க்கமான ஒரு முகம் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும். அம்முகத்தின் புருவ மத்தியிலிருந்து மிருதுவான ஒளி தோன்றி மெல்லப் பரவுவதாக அந்த ஓவியத்தில் காட்டப்பட்டிருந்தது. இருட்டில் ஏனோ அந்த ஓவியம் ஓர் இனம் தெரியாத பயத்தை உருவாக்கியது. “என்னப்பா இது?” என்று அப்பாவிடம் கேட்பேன். அப்பா “புத்தர் ஞானோதயம்டா” என்று சொல்லுவார். அவர் சொல்வது எனக்குப் புரிந்ததே இல்லை. ஆனால் புரிந்தது போல நான் தூங்கிப் போவேன்.

சென்னை ஓவியக் கல்லூரியில் ராய் சௌத்ரி காலத்தில் நீர்வண்ண ஓவியத்தில் மதராஸ் ராஜதானியிலேயே முதல் பரிசு பெற்றவர்தான் எனது அப்பா ஏ.பி.கஜேந்திரன். அவர் தீட்டிய புத்தர் ஓவியம் என்னுடைய ஆழ் மனதில் புதைந்தது எப்படி என்ற கேள்விக்கு இன்று வரையிலும் பதில் கிடைக்கவில்லை. அப்பா தத்ரூபமாக வரைந்த பிரமானந்தம் தாத்தா, கோகிலா அத்தை ஆகியோரின் உருவப் படங்கள் பூசை மாடத்தில் இன்றைக்கும் தொங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் புத்தரின் ஞானோதயம் ஓவியம் மட்டும் என் நினைவுப் பாதையில் இன்றைக்கும் வழி மறிக்கிறது. ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க்கிறபோதும் அதற்குள் மறைந்திருப்பது என்ன என்பதைத் தேடப் போய்தான் பின்னாளில் நானும் ஒரு கலை விமர்சகனாக மாறினேன். அதுவரை ஒரு ஓவியனாக ஏராளமான படங்களை வரைந்து வந்தேன். அப்பா இல்லாதபோது அவரது வண்ணங்களைத் திருடி, நிறைய ஓவியங்கள் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் “நீ என்னவாகப் போகிறாய்” என்று கேட்டால் ஆர்ட்டிஸ்ட் என்றுதான் சொல்லுவேன்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக வாழ ஆசைப்பட்ட நீங்கள் இலக்கியவாதியாக மலர்வதற்கு உங்களது குடும்பச் சூழல் எவ்வாறு வழி தந்தது?

எனக்கு அருமையான சூழல் அமைந்தது. குடும்பச் சூழலினால்தான் எழுத்தாளனாக மாறினேன். ஒரு பக்கம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த என் தாய் சிவசங்கரி அம்மாளின் குடும்பம் வழியாக நான் பிரெஞ்சுக் கலாசாரப் பாதிப்பை அடைந்தேன். பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றிருந்த அவர் குடும்பத்தினருக்கு ழொபேன் எனும் ஒரு பிரெஞ்சுக் குடும்பப் பெயர் இருந்தது. எனது தாய்வழி குடும்பத்தால் நான் என்னை உலக மனிதனாக உணர்ந்தேன். என் அம்மா ஸ்ரீஅரவிந்தரைப் பார்த்திருந்தார். சுத்தானந்த பாரதியார் மௌன விரதம் இருந்தபடி எப்படி எழுதிக்கொண்டே இருப்பார் என்றெல்லாம் சொல்லுவார். இன்னொரு பக்கம் சென்னைக்காரரும் ஓவியருமான எனது தந்தை ஏ.பி.கஜேந்திரன் மற்றும் அவரது தங்கை மகன்களின் வழியாக நான் இலக்கியம், ஓவியம், இசை, நடனம் குறித்த பாதிப்புகளை அடைந்தேன். ஒரு தமிழனாக உலகைப் பார்த்தேன்.

உங்களுக்குள் தாக்கம் செலுத்திய பாண்டிச்சேரியில் அமைந்த பால்யகாலம் பற்றிச் சொல்லுங்கள்?

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாண்டிச்சேரியில் 1948-இல் கடலுக்கு அருகாமையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் குழந்தையாகப் பிறந்தபோது என் காதில் விழுந்த முதல் ஓசை கடல் ஓசைதான் என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார். இதனால்தான் பிரபஞ்சன் கதைகளில் அடிக்கடி வரும் அப்பா போல, என் கவிதைகளில் கடல் அடிக்கடி வரும். என் கவிதைகள் அனைத்துமே கடலிடம் யாசித்த கவிதைகள்தான். பாண்டிச்சேரியில் ஒயிட் டவுன் என்று அழைக்கப்படும் பகுதியில் அரவிந்தர் ஆசிரமத்துக்கும், பாரதி வாழ்ந்த வீட்டுக்கும் இரண்டு தெரு தள்ளி இருந்த பெல்கோம் வீதியில் 12-ஆம் இலக்கமுள்ள வீட்டில்தான் என் தாயின் குடும்பம் வசித்தது. பாரதியாரால் பூணூல் போடப்பட்ட பாரதி சீடர் ரா.கனகலிங்கம் மற்றும் அவரது மனைவி அரசாம்பாள் ஆகியோர் எனது பாட்டி ஆதில‌ஷ்மி அம்மையார் வீட்டில்தான் தங்கி இருந்தார்கள். பாரதியின் சீடர் என்பதற்காக என் பாட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்க இடம் கொடுத்துக் கவனித்து வந்தார்கள். பாரதி சீடர் ரா.கனகலிங்கம் அவர்களுக்கு நிதியுதவி செய்யுமாறு பாரதிதாசனார் தனது `குயில்’ இதழில் ஒரு வேண்டுகோள் வெளியிட்டார். அதில் ரா.கனகலிங்கம் அவர்களின் முகவரியாக எங்கள் வீட்டு 12, பெல்கோம் வீதி முகவரியைத்தான் கொடுத்திருந்தார். பாரதிதாசனாரின் குயில் பத்திரிகையில் இன்றைக்கும் அது காணப்படுவதைப் பாரதி ஆய்வாளர் டாக்டர் ய.மணிகண்டன் எனக்குக் காண்பித்தார்.

எனக்கு 15 வயது ஆனபோதே நான் எழுதிய `கர்வம்’ எனும் ஓர் உருவகக் கதை `அவ்வையார்’ எனும் இலக்கிய இதழில் வெளிவந்தது. என் வீட்டிலிருந்துதான் இந்த அவ்வையார் இதழை எனது அத்தை மகன் ப.இராஜேஸ்வரன், நெல்லை அருள்மணி என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார். புதுவையில் வாழ்ந்த எனது சொந்தக்காரச் சிறுவர்கள் அனைவரும் பிரெஞ்சு படித்துக்கொண்டும் பிரெஞ்சில் பேசிக்கொண்டும் இருந்த காலகட்டம் அது. சிறுவர்கள் ஒருவரை ஒருவர் “கொஷோன்” (பிரெஞ்சில் பன்றி என்று அர்த்தம்) என்று வைது தங்களைப் பிரெஞ்சுக்கார்களாகப் பாவித்து சந்தோஷப்படுவது வழக்கமாயிருந்தது. அந்தக் காலகட்டத்து பாண்டிச்சேரியின் ஆண் பிள்ளைகள் எல்லோரின் இறுதி லட்சியம் பிரெஞ்சுப்படையில் `சொல்தா’ வாக (சிப்பாய் என்பதின் பிரெஞ்சுச் சொல்) சேர்வதாக இருந்தது. பெண்களின் இறுதி லட்சியம் ஏதெனும் ஒரு சொல்தாவைக் கல்யாணம் செய்துகொண்டு பிரான்சில் சென்று செட்டில் ஆகி `ஷொக்லா’ (சாக்லேட்) சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக இருந்தது.

ஆனால், எனக்கு மட்டும் இவை கவர்ச்சியாகத் தெரியவில்லை. பிரெஞ்சுக் கலாசாரத்தை நேசித்தேன். ஆனால், சொல்தா வாழ்க்கை பற்றி நிறைய விமர்சனங்கள் வைத்திருந்தேன். எங்கள் குடும்பத்துக்கு என்று இருந்த `ழொபேன்’ எனும் பிரெஞ்சு ரெனேசியம் எனும் குடும்பப் பெயரைக்கூட நான் பயன்படுத்த விரும்பவில்லை.

அப்படியானால் உங்களுக்குப் பாண்டிச்சேரி வாழ்க்கையை விட சென்னை வாழ்க்கை கூடுதலாக எப்படிப் பாதித்தது என்று சொல்லலாமா? உங்கள் தந்தை வழி இருப்பிடம் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வந்தது?

சென்னையின் இதயப்பகுதி, இன்று போயஸ் கார்டன் என்று அறியப்படும் பகுதியில்தான் எங்கள் வீடு இருந்தது. இன்றைக்கு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி இருக்கும் இடத்தில்தான் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தோம். ஓவியராக இருந்த என் தந்தையாரின் நண்பர்கள் கலை இலக்கியம் குறித்து நிறைய பேசுபவர்களாக இருந்தனர். சிறுவனாக இருந்து இவற்றையெல்லாம் கேட்டுதான் நான் வளர்ந்தேன். அப்போது பிரபல கவிஞராக இருந்த கவிஞர் கம்பதாசன் என் அப்பாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் தன்னை சோஷலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வார். பணத்தை மதிக்கவே மாட்டார். மதுப்பிரியர். நான் பார்த்த கவிஞர்களிலேயே கம்பதாசன்தான் பேரழகன். பணத்தில் கொழித்த கம்பதாசன் வறுமையில் வாடியதைப் பார்த்தது, எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. என் அப்பாவைத்தேடி பாரதி சீடர் ரா.கனகலிங்கம் தாத்தா, பாரதி புதையல் பத்மனாபன் ஆகியோரெல்லாம் வருவார்கள். மதுரகவி முருகேச பாகவதர், அகழ்வாராய்ச்சித் துறையில் இருந்த ஓவியரான அன்பு பொன்னோவியம் போன்றவர்கள் அயோத்திதாசப் பண்டிதரின் கருத்துகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். அன்பு பொன்னோவியம் ஒல்லியாக வெறும் வெள்ளை உடை மட்டுமே அணிவார். தீவிர முருக பக்தராக இருந்த என் தந்தையாரிடம் தமிழ்ப் பௌத்தத்தைப் பற்றி நிறைய பேசுவார். நான் 1976-ஆம் ஆண்டு வங்கி அதிகாரியாக மகாராஷ்டிரா மாநிலத்து அவுரங்காபாத்துக்குச் சென்று அங்கே டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய நூலகத்தில் மாதக் கணக்காகப் படித்து, பிறகுதான் பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

இளமையில் ஓர் ஓவியனாக வேண்டும் என நினைத்த நீங்கள் ஓர் எழுத்தாளனாக மாறுவதற்குக் காரணம் என்ன?

எனது வீடு ஒரு கலைக்குடும்பமாக இருந்தது. எனது அத்தை மகனான ஜெகதீஷ்வரன் பரத நாட்டியம் கற்றுக்கொண்டிருந்தார். செக்கச் செவேலெனப் பேரழகனாக இருந்த அவர் அன்றைய வங்காள நாட்டிய மேதை உதயஷங்கர் போல நடனங்கள் ஆடுவார். அவர் வயலின், சிதார் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருந்தார். அவரைத்தேடி வீட்டுக்கு வரும் சிங்கராயர் எனும் வயலின் வாத்தியார் எனக்குப் படம் வரைய கற்றுக்கொடுப்பார். அனில் மல்லிக் எனும் ஒரு வங்காளி எங்கள் வீட்டுக்கு வந்து ஜெகன்மாமாவுக்குச் சிதார் கற்றுக்கொடுப்பார். அண்மையில் மறைந்து போன பாரதி ஆய்வாளர் பெ.சு.மணி 20 வயது இளைஞராக உள்ளவரைக்கும் எங்கள் வீட்டில்தான் பெரும்பாலும் இருத்திருக்கிறார். எனது இன்னொரு அத்தை மகனான கவிஞர் ப.இராஜேஸ்வரன் முற்றிலும் வேறுபட்டவர். பெரியார் வழி நடப்பவர். தீவிர பக்திமானாக இருந்த எனது அப்பா இவரை “கருப்புச் சட்டைக்காரன்” என்றுதான் அழைப்பார். கவிஞர் ப.இராஜேஸ்வரன் மூலமாகத்தான் புத்தகப் படிப்பில் எனக்கு ஆர்வம் வந்தது. இவரைத்தேடி கவிஞர் சுரதா அடிக்கடி வீட்டுக்கு வருவார். பல கீர்த்தனைகளை எழுதிய மதுரகவி முருகேச பாகவதர் வீட்டுக்கு இராஜேஸ் மாமாவுடன் போய் வருவேன். ஒரு கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் `வானவில்’ எனும் கையெழுத்து பத்திரிகை தயாரித்தேன். முதலில் நிறையப் படிக்க வேண்டும். பிறகுதான் எழுத்து என்பது ராஜேஸ்வரன் எனக்குப் போட்ட கட்டளை. இதை நான் ரகசியமாக மீறினேன். இந்தக் கையெழுத்துப் பத்திரிகையை இன்னமும் நான் வைத்திருக்கிறேன். நான் எழுத்தாளனாக மலர்வதற்குக் கவிஞர் ப.இராஜேஸ்வரன்தான் முழுக் காரணம்.

இளமையில் தொடங்கி இன்றுவரை உலக இலக்கியங்களைத் தேடிப் படித்துவரும் தீவிர வாசகரான உங்களை இளமையில் எந்தெந்த எழுத்தாளர்கள் பாதித்தார்கள்? வாசிப்பு குறித்து இன்றைய வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

படிப்பின் ரத்த ருசியை எனக்குக் காட்டிய ப.இராஜேஸ்வரன் எனக்கு வாசிப்பு குறித்து ஒன்றைக் கற்றுக்கொடுத்தார். அதைத்தான் இன்றைய வாசகர்களுக்கு ஒரு செய்தியாகவும் சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்தைப் படித்தோம் என்றால் அதற்கு அடுத்து அந்தப் புத்தகத்துக்கு எதிர்க்கருத்துச் சொல்லும் ஒரு புத்தகம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்துப் படிக்க வேண்டும்.

அப்போதுதான் ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களும் நன்கு புலப்படும் என்று அவர் சொல்லிக்கொடுத்தார்.

அறிஞர் அண்ணாவின் `கம்பரசம்’ எனும் கம்பனை விமர்சிக்கும் ஒரு புத்தகம் படிக்கக் கொடுப்பார். அதற்கு அடுத்து அதை எதிர்த்து கு.பாலசுந்தரம் எழுதிய `கம்பரச ஆராய்ச்சி’ எனும் புத்தகத்தையும் கொடுத்துப் படிக்கச் சொல்வார். இப்படித்தான் என் வாசிப்பை வளப்படுத்தினார். “படிப்பில்லாத சிந்தனை குறையுடையது. அதே நேரத்தில் சிந்தனையில்லாப் படிப்பு தள்ளாட்டத்தைத் தரும்” எனும் கன்பூசியசின் வார்த்தைகளை அடிக்கடி என்னிடம் சொல்லுவார். நான் இன்றைய வாசகனுக்குச் சொல்வதெல்லாம் இதுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அத்துடன் சண்டை போட்டுக்கொண்டே படியுங்கள்.

கவிஞர் ப.இராஜேஸ்வரனின் அடுத்த கட்டளை என்னவென்றால் முதலில் எழுதவே கூடாது. நூல்களை முதலில் தேடித்தேடி படிக்க வேண்டும். போதுமான அளவுக்குப் படித்து விட்டோம் எனும் நிறைவு வந்த பிறகுதான் எழுத வேண்டும். இன்றைக்கு என்னை வந்து சந்திக்கும் பல இளைஞர்கள் படிக்காமலேயே எழுத்தாளர்களாக ஆகிவிட ஆசைப்படுவதைப் பார்க்கிறேன். மாணவப் பருவத்தில் என் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வந்த Elite Literary Club என்ற இலக்கியச் சந்திப்புகளில் கூட்டு வாசிப்புகளைச் செய்து வந்தோம். நூல் விமர்சனக் கட்டுரைகளை எழுதி வாசித்து வந்தோம். எங்கள் நிகழ்வுகளின் செய்திகளை அப்போதைய `தி மெயில்’ எனும் ஆங்கில நாளேடு வெளியிடும். இதில் நான் தனிநாயகம் அடிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க, கா.அப்பாதுரையாரின் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள், ம.பொ.சி, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்று பலரைப் படிப்பவனாக இருந்தேன். படித்தேன் என்பதைவிட மனப்பாடம் செய்தேன் என்பதுதான் சரி. கவிஞர் ப.ராஜேஸ்வரன் வைத்திருந்த டிரங்கு பெட்டி நிறைய இருந்த தமிழ்ப் புத்தகங்களை எல்லாம் வெறியோடு படித்து முடித்தேன். அவற்றில் அறிஞர் அண்ணாவின் ஒரணா புத்தகங்கள் பலவற்றைப் படித்தேன். என் பள்ளி நண்பன் எஸ்.தியாகராஜனுடன் பொது நூலகத்துக்கு தினமும் தவறாமல் சென்று ஒவ்வொரு புத்தகமாய் வாங்கி வந்து மொத்தப் புத்தகங்களையும் மனப்பாடம் செய்து விட்டுத்தான் திருப்பிக் கொடுப்பேன். எட்டாம் வகுப்பில் நான் படித்த எமர்சன் எழுதிய `விதியும் தன்னம்பிக்கையும்’ எனும் நூல் கூச்சமும், தயக்கமும் நிறைந்த என்னை மாற்றியது.

`அவ்வையார்’ எனும் இலக்கியச் சிறுபத்திரிகையை இராஜேஸ்வரனும் திரைப்படப் பாடலாசிரியர் நெல்லை அருண்மணி என்பவரும் சேர்ந்து எங்கள் வீட்டிலிருந்து நடத்தி வந்தார்கள். இந்த இதழில்தான் எனது முதல் கதையான `கர்வம்’ என்பது வெளிவந்தது. பிறகு நாங்கள் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்த பிறகு ப.இராஜேஸ்வரனின் நண்பராக இருந்த புலவர் த.கோவேந்தன் எனது குருவாக அமைந்தார். இவர் மூலமாக கவிஞர் புதுவை தாகூர் கல்லூரிப் பேராசிரியர் ம.லெ.தங்கப்பா எனக்குப் பழக்கமானார். தங்கப்பாவின் மூலம் ஆங்கிலத்தில் எழுதுவதில் நான் ஊக்கப்படுத்தப்பட்டேன். புலவர் த.கோவேந்தனின் மூலமாக ஜெயகாந்தன், அவ்வை நடராஜன், ஜஸ்டிஸ் மகராஜன் என்று பல இலக்கிய ஆளுமைகளை நேரில் சந்தித்துப் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது த.கோவேந்தனால் ஊக்கப்படுத்தப்பட்ட இன்றைய வரலாற்றாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி எனக்கு நெருங்கிய நண்பரானார். இன்றைக்கும் கடவுள் என்முன் தோன்றி எழுத்தாளன், வாசகன் ஆகிய இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் நீ தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டால் நான் வாசகனாக இருப்பதைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த அளவுக்கு நான் வாசிப்பை நேசிக்கிறேன்..

அண்மைக் காலத்தில் `வாசக மைய விமர்சனம்’ எனும் கருத்துருவாக்கத்தை முன்வைத்துப் பேசி வருகிறீர்களே. உங்கள் புரிதலில் வாசக மைய விமர்சனம் என்றால் என்ன?

“நான் இலக்கிய சன்னிதானங்களுக்காக எழுதும் எழுத்தாளன் அல்ல. மாறாக எனக்கு முகம் காட்டாத ஓரத்து வாசகனுக்காக எழுதும் எழுத்தாளன்” என்று என்னைப் பற்றி நான் அடிக்கடி சொல்வது உண்டு. அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எழுத்தாளனும் வாசகனும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். “எழுத்து என்பது முத்தம் போன்றது – அதை யாரும் தனியாகச் செய்ய முடியாது. எழுதுவதற்கு எனக்கு ஒரு வாசகன் தேவை.” என்று ஜான் ச்சீவர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. படைப்பை உருவாக்கிய படைப்பாளியே அது குறித்த தர நிர்ணயங்களை உருவாக்குவதும், அதனடிப்படையில் தன் படைப்புகளைச் சிறந்தவை என்றும், பிறரின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் பித்தலாட்டங்கள் செய்வது தமிழிலக்கியப் பிரதேசத்தில் சர்வசகஜமாக நடைபெற்று வருகின்றன. இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரு கோட்பாடாகத்தான் வாசக மைய விமர்சனம் என்பதை நான் முன் வைக்கிறேன்.

சர்வ வல்லமை உள்ளவனாகக் கருதப்படுகிற படைப்பாளிக்கு நிகராக வாசகனை முன்னிறுத்திப் பேசும் ஒரு கோட்பாடுதான் வாசக மைய விமர்சனம். படைப்பாளி இரண்டு கொம்பு முளைத்த ஒரு வேற்று கிரக வாசியாக தனது அதிகாரத்தைச் செலுத்திவரும் தமிழ்ச்சூழலில் ஒரு கலை இலக்கிய விமர்சகன் என்ற வகையில் எனது முக்கியச் செயல்பாடாக நான் வாசக மைய விமர்சனம் – READER RESPONSE THEORY என்பதை முன் வைக்கிறேன். Water J. Slotoff தனது With respect to readers எனும் நூலில் “வாசகனுக்கு அதன் அர்த்தத்தைத் தன்போக்கில் கிரகித்துக்கொள்ள உரிமை உண்டு” என்று சொன்னார். இதனை நான் பிரதானப்படுத்துகிறேன்.

அதே நேரத்தில் வாசிப்பு என்பது ஒரு சூனியப் பிரதேசத்தில் நடைபெறுவது அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். வாசகனின் மொழியறிவு, அவனது பண்பாட்டு வளர்ப்பு, அவனது அரசியல் தெளிவு, உலக நடப்புகளைப் பற்றிய வாசகனின் விழிப்புணர்வு, உள்ளுணர்வாக இருக்கிற ரசனை உணர்வு, அவன் அந்தப் பிரதியைப் படிக்கும் நாட்டின் பண்பாட்டுச் சூழல் போன்ற பல்வேறு புறக்காரணங்களால் ஒரு வாசகனின் வாசிப்பு நடந்தேறுகிறது.

படைப்பாளி எழுதிய ஒரு பிரதியின் அர்த்த உற்பத்தியை ஏற்றுக்கொள்கிற வாசகன் எப்படிப்பட்டவன் என்பதைப் பொறுத்து அந்தப் பிரதி சிறந்ததா இல்லையா என்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அப்படியானால் வாசக மைய விமர்சனத்தில் மொழி என்பதின் பங்களிப்பு என்ன?

மொழி சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கருவி என்பதை நாம் மறக்கக் கூடாது. இந்தக் கருவியைப் பயன்படுத்தும் படைப்பாளியும் வாசகனும் சமூகத்தின் கைரேகைகளைத் தாங்கியவர்கள்தான். தமிழில் இலக்கியச் சன்னிதானங்கள் அடிக்கடிச் சொல்லி வருவதுபோல இருவருமே முழுச் சுதந்திரம் பெற்றவர்கள் அல்ல. அர்த்தத்துக்கு மையம் கிடையாது. படைப்பாளிக்கு என்று சிறப்பாகப் பேசப்படுகிற தன்னிலை என்பது ஓர் உருவாக்கமே. அர்த்தப் பிறப்பிடமாக அது ஆக முடியாது. எனவே நான் வாசக மைய விமர்சனத்தைப் பெரிதும் முன்வைப்பதற்கு மிக முக்கியமான காரணம் தமிழ்ச்சூழலில் இலக்கியத்தின் பெயரால் ஸ்தாபிக்கப்படும் அதிகாரங்களைக் கேள்வி கேட்பதுதான்.

எழுபதுகளில் பிரபலமாக இருந்த கவியரங்குகளில் பங்குகொண்ட அனுபவங்கள் உண்டா?

மிகக்குறைவாகவே கவியரங்குகளில் பங்கு கொண்டேன். நான் கவியரங்கங்களில் சோபிக்கிறவன் அல்ல. ஆனாலும் கவியரங்குகளில் பெயர் பெற்ற கவிஞர்கள் கண்ணதாசன், மீரா, சிற்பி, அப்துல் ரகுமான், மு.மேத்தா போன்றவர்களின் தலைமையில் சில கவியரங்குகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால், என்னால் மறக்க முடியாத கவியரங்கக் கவிதை வாசிப்பு என்பது 1971-இல் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் சென்னை எல்.எல்.ஏ பில்டிங்கில் வாசித்த அனுபவம்தான். `ஈழம் மீண்டும் எரிகிறது’ என்பது கவியரங்கத் தலைப்பு. எனக்கு 23 வயது. படிப்பு முடித்து இந்தியன் வங்கியில் வேலை செய்து வருகிறேன். அப்போது இலங்கைப் பிரச்சினை என்ற ஒன்றே தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. எங்கள் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் கவிஞர் காசி ஆனந்தன் இலங்கையில் கைது செய்யப்பட்டார் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த செய்தி. உடனே அப்போதைய எங்கள் கல்லூரி மாணவர் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜனார்த்தனம் இந்தக் கவியரங்கத்தை L.L.A BUILDING வளாகத்தில் நடத்தினார். அதில் திரைக்கவிஞர் முத்துலிங்கம், குருவிக்கரம்பை சண்முகம், ப. இராஜேஸ்வரன் ஆகியோருடன் நானும் இலங்கை அரசைக் கண்டித்துக் கவிதை வாசித்தேன். கண்ணதாசன் தலைமையுரை மூலமாகத்தான் இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் புரிகிறது. கூட்டத்தின் நடுவில் ஓர் இலங்கைத் தமிழர் மேடை ஏறி கோபமாக ஏதோ சிங்கள மொழியில் பேசுகிறார். எங்களுக்கு ஏதுமே புரியவில்லை. அவர் தமிழில் சொல்கிறார் சிங்கள சி.ஐ.டிகள் கூட்டத்துக்கு உளவு பார்க்க வந்திருப்பதாக. கண்ணதாசனின் தலைமையுரைதான் இலங்கை நிலவரத்தை முதல் முறையாக எங்களுக்குத் தெரிவிக்கிறது. சந்தனக் கலர் சட்டையில் வந்திருந்த கவிஞரின் கம்பீரமான உரை இன்னமும் காதில் ஒலிக்கிறது.

நீங்கள் உலக நாடுகளில் கவிதை நிகழ்வுகளில் பங்கேற்கிறீர்கள்.
நம்முடைய கவிதை உலகத்தை உலக நாடுகளின் கவிதை உலகத்தோடு ஒப்பிடுங்களேன்?

அரசியல்வாதிகளையும் சினிமாக்காரர்களையும் கொண்டாடுவது எப்படி என்ற கலையைக் கற்றுத்தேர்ந்தவன் தமிழன். ஆண்டிப்பட்டியானாலும் அமெரிக்காவானாலும், கனடாவானாலும், கதிர்காமமானாலும் சென்னையாக இருந்தாலும் சிட்னியாக இருந்தாலும், தமிழன் இதில் யாரிடமும் பின் தங்கி விடமாட்டான். ஆனால் உன்னதமான எழுத்துகளைப் படைத்தளிக்கும் கவிஞனையோ எழுத்தாளனையோ மட்டும் கொண்டாடுவது எப்படி என்று தெரியாது. எழுத்தாளனை எப்படிக் கொண்டாட வேண்டுமென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவன் அயர்லாந்து நாட்டின் தலை நகரமான டப்ளின் நகரத்துக்குப் போயாக வேண்டும்.

அயர்லாந்தில் ரெனிலா கலைவிழாவில் சர்வதேசக் கவிதை வாசித்தல் நிகழ்வில் கலந்துகொண்டேன். அங்கு முதலில் ஆச்சரியபபட்ட விஷயம் என்னவென்றால், கவிதையை ரசிக்க வரும் பார்வையாளர்கள் குறைந்தது ஐந்து ஈரோ பணத்தைக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே வந்தார்கள். அந்த நுழைவுச்சீட்டுக்கு ஒரு கப் ஒயின் கொடுத்தார்கள். அடுத்ததாக கவிதை வாசிப்பு அரங்கத்தில் நுழைந்தவுடன் மொத்த அரங்கமும் இருட்டாக இருந்தது. மேடையில் மட்டுமே வெளிச்சம் போடப்பட்டிருந்தது. யார் கவிதையை வாசிக்கப் போகிறாரோ அவருக்கு மட்டுமே மேடையில் ஒரு தனி நாற்காலி போடப்பட்டு அவர் மட்டுமே அந்த வெளிச்சத்தில் போய் அமர்ந்து கவிதை வாசிக்கிறார். அந்தக் கவிதை வாசிப்பின் தலைவராக இருந்து ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியவரும் கூட மேடைக்குப் பக்கத்தில் இருட்டில்தான் உட்கார்ந்திருக்கிறார். அங்கேயும் கற்றுக்குட்டி கவிஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களது சிபாரிசின் காரணமாக மேடையில் இடம் பிடிப்பது இல்லை.

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கு கவிதை நூல்களின் விற்பனை எப்படி? முழுநேரக் கவிஞர்கள் வளமுடன் வாழ்கிறார்களா?

டப்ளின் என்பது சர்வதேச இலக்கிய நகரம் என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நகரத்திலும் கவிதை நூல்கள் சூடான கேக்குகள் போல விற்பனையாவது இல்லை. புனைவுகள்தான் அதிகமாக விற்பனையாகின்றன . இங்கும்கூட பெரும்பாலானவர்கள் கவிதை எழுதுவதை ஒரு தொழிலாக மேற்கொள்வதில்லை. பேராசிரியராகவும் பயிர்த் தொழில் செய்யக்கூடியவராகவும் மருத்துவர், வழக்கறிஞர், கணிப்பொறியாளர் என்று துணைக்கு ஒரு தொழில் செய்து அதில் பணம் சம்பாதித்துக் கொண்டேதான் கவிதை எழுதுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். மிகப்பிரபலமான சிலரைத் தவிர மற்றவர்களுக்குக் கவிதை எழுதுவதில் மூலமாக கிடைக்கும் ராயல்டி தொகையிலேயே வாழ்ந்து விட முடிவதில்லை. ஆனால் தமிழகத்தைப் போல் இருப்பதில்லை. ராயல்ட்டி தொகை ஒழுங்காகக் கொடுக்கப்படுகிறது. கவிதை குறித்து அரசாங்கத்தின் பங்களிப்பும் இருக்கிறது. நமது நாட்டில் பாரதியாரும் கூட பத்திரிகை ஒன்றில் இருந்து கொண்டுதான் கவிதைகளை எழுதுவதற்கு முயன்றிருக்கிறார். கவிதை அறிவுக்குச் சோறு போடும். வயிற்றுக்குச் சோறு போடாது. சில விதிவிலக்குகளைத் தவிர உலகின் எந்தக் கோடியிலும் இதுதான் உண்மை.

இங்கு இவ்வளவு கோயில்கள், கலைகள், சிலைகள், சிற்பங்கள் இருந்தும் அவற்றில் விளங்கிக்கொள்வதற்கான வெவ்வேறு பார்வையிலான நூல்கள் இல்லாதது ஏன்? இவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

இதற்கு முதல் காரணம் மக்கள் கோயில் சிற்பங்களை வழிபடக்கூடிய கடவுள் வடிவங்கள் என்று மட்டுமே கருதுவதுதான். அவை கலைப் படைப்புகளாகக் கருதப்படுவது இல்லை. கலைப் பொக்கிஷங்களான கற்சிற்பங்களையும் செப்புத் திருமேனிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறவர்கள்கூட சிற்பியின் கலை நேர்த்தியை ரசிக்கத் தவறி விடுகிறார்கள். அவற்றின்மீது ஆடை ஆபரணங்கள், மலர் மாலைகள், சந்தனக்காப்பு ,விபூதி அபிஷேகம் போன்றவற்றை வைத்து அவற்றின் கலை அழகை ரசிக்க முடியாமல் செய்து விடுகிறார்கள். இதனைத்தான் புதுமைப்பித்தன் தன்னுடைய `சிற்பியின் நரகம்’ எனும் சிறுகதையில் சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்தாக ஒரு கணிதத்தைப் போடுவது எப்படி என்று கற்றுக் கொடுப்பது மாதிரி ஒரு கலைப் படைப்பை ரசிப்பது எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்கத் தவறி விடுகிறோம். கலையை ரசிப்பது எப்படி என்பது பற்றிய Art appreciation என்று சொல்லப்படக்கூடிய துறையில் போதுமான நூல்கள் தமிழில் எழுதப்படவில்லை. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழ் என்று பிரித்த தமிழர்கள் ஓவியத் தமிழ் என்ற ஒன்றை ஏன் உருவாக்கவில்லை? ஓவியத்தைப் பற்றி விமர்சிக்கத் தேவையான கலைச் சொற்களைக் கூட நாம் உருவாக்கவில்லை. எனது 40 ஆண்டுக்கால கலைவிமர்சனப் பணியில் நான் உருவாக்கிய ஓவியம், சிற்பம் குறித்த கலைச் சொற்களுக்காக உழைத்ததும், போராடியதும் அதிகம். இந்த வகையில் எனது பங்களிப்பைப் புரிந்துகொள்வதற்குக்கூட இங்கு யாரும் இல்லை. கலை விமர்சகர்களுக்கு என்று தமிழ்நாட்டு அரசாங்கம் ஒரு விருதைக்கூட உருவாக்கவில்லை.

குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் சிற்பங்கள் ஓவியங்கள் ஆகியவற்றை ரசிப்பது எப்படி என்பது பற்றிய பாடங்கள் இடம் பெற வேண்டும். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 11-ஆம் வகுப்புக்கான தமிழ்ப் பாடநூலைப் பிரித்தால் முதல் பாடமாக எனது `கவிதையின் அரசியல்’ நூலிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. `பேச்சு மொழியும் எழுத்து மொழியும்’ என்று நான் எழுதிய மொழி பற்றிய கட்டுரை இடம் பெற்றிருப்பது போல மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் கலை பற்றி எழுதியவையும் இடம்பெற வேண்டும். நான் ஒருமுறை லண்டன் போயிருந்தபோது விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து ஓவியங்களின் முன் அமரச் செய்து ஆசிரியர் அவற்றை ரசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

மதமும் சடங்குகளும் வளர்ச்சிக்குத் தடை என்ற கருத்திற்கு இப்போது வந்தடைந்து இருக்கிறோம். எனவே, அவற்றை விலக்க வேண்டும் என்று முற்போக்காளர்கள் கருதுகின்றனர். ஆனால் கலை, பண்பாடு என்று வரும் போது அவற்றை விலக்கி விடவும் முடியாது. இந்நிலையில் நவீன விமர்சகரான நீங்கள் வலியுறுத்தும் தமிழ் அழகியல் என்பதில் மதம், சடங்குகள் ஆகியவற்றின் இடம் என்ன?

1994-ஆம் ஆண்டில் `தமிழ் அழகியல்’ எனும் கருத்துவாக்கத்தை நான் முன்வைத்தேன். ஈழத்துத் தமிழ் அறிஞர் டாக்டர் கா.சிவத்தம்பி இந்த நூல் தனது பார்வையையே மாற்றியது என்று பாராட்டினார். இலங்கை பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பாடத்திட்டத்தில் பாடபுத்தகமாக வைத்தார். தமிழ் அழகியலை முன்னெடுக்கும் அடுத்த கட்டமாக பிரான்சில் பாரீஸ் நகரத்தில் ART TAMOUL என்று 20 தமிழ் ஓவியர்களின் படைப்புகள் கொண்ட ஒரு கண்காட்சியை செலக்டிவ் ஆர்ட் காலரி எனும் பிரெஞ்சு காலரியில் நடத்தினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்கூட சாகித்திய அகாதமியின் முன்னெடுப்பில் தமிழ் அழகியல் எனும் கருத்தரங்கத்தைச் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தினேன். இவை எல்லாவற்றிலும் நான் முன்வைக்கும் தமிழ் அழகியல் என்பது இன்றைய டிஜிட்டல் யுகத்தின் வெளிச்சத்தில் தமிழர் வாழ்வியல், மதங்கள், சடங்குகள், தமிழர் மெய்யியல் ஆகியவற்றை விமர்சனப் பூர்வமாக அணுகுவது எப்படி என்பதாகும். இதில் மதம், சடங்குகள் ஆகியவை கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். லெவிஸ்ட்ராஸ் சொன்னது போல இந்த மதங்கள், சடங்குகள் ஆகியவற்றுக்கு உள்ளே தொழிற்படும் தொன்மங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு விமர்சனப் பார்வையுடன் அணுக வேண்டும். மதங்களின் தொன்மங்களை மானிடவியல் ரீதியாகவும், நாட்டுப்புறவியல்ரீதியாகவும் ஊடிழைப் பிரதி வாசிப்பின் ( INTER- TEXTUAL- READING) ஆராய்தல் வேண்டும்.

நீங்கள் முன் வைக்கும் தமிழ் அழகியல் என்பதற்கான முன்னோடிகள் யார்?

எனக்கு முன்னால் ஒரே ஒருவர்தான் TAMIL AESTHETICS என்ற பெயரில் ஆங்கில உரை ஒன்றை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார். அவர் டாக்டர் தெ.போ.மீனாட்சி சுந்தரனார். ஆனால் அவர் சொல்லும் தமிழ் அழகியல் என்பதும் நான் சொல்லும் தமிழ் அழகியல் எனபதும் வேறு வேறு. அவர் சைவ சித்தாந்தத்தில் வரும் சத்தியம்- சிவம் – சுந்தரம் என்பதில் வரும் சுந்தரம் என்பதுதான் தமிழ் அழகியல் என்று பேசுகிறார். இதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் வாழ்வியலோடு பரந்துபட்ட தமிழ் அழகியலை இந்து மத சைவ சித்தாந்தத்தின் ஓர் உட்பிரிவாக மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லை. நான் முன் வைக்கும் தமிழ் அழகியல் என்பது மதங்களைக் கடந்தது. எனது தமிழ் அழகியல் மறைமலை அடிகள், திரு.வி.க, டாக்டர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்கள் கட்டமைத்த தமிழ்ப் பண்பாட்டிலிருந்து முளைப்பது அல்ல. தமிழ்ச் சமூகத்தின் உயர்தட்டு மக்களின் தமிழ் அடையாளங்கள் என்பவை சம்ஸ்கிருத மயப்படுத்தல், மேலை மயப்படுத்தல் போன்ற ஆபத்துகளைக் கொண்டதாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இழிசினர் என்றும், படிக்காத கைநாட்டுப் பேர்வழிகள் என்றும் கருதப்படும் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வியலில் இன்றைக்கும் காணப்படும் சங்க காலத்திலிருந்து சலசலத்து ஓடிவரும் தமிழ்ப் பண்பாட்டுக் கலை வெளிப்பாடுகளைக் கண்டெடுத்து ஆவணப்படுத்துவதுதான் என்னுடைய தமிழ் அழகியல்.

அதேவேளையில் எனக்குத் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை மகத்துவப்படுத்த வேண்டும் எனும் ஒற்றைச் செயல்திட்டம் கிடையாது. மாறாக அது பல்வேறு அடுக்குகள் கொண்டதாகவும், பல்வேறு குரல்கள் ஒலிப்பதாகவும் இருக்கும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை இன்றைய தமிழனின் வாழ்வியலின் ஊடாகக் கண்டெடுத்து அதை விமர்சனரீதியாக ஆராயும் செயல்திட்டம்.

இன்றைய கலை, கோயில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் வைதீக மத சார்ந்த விளக்கங்களே தரப்படுகின்றன? ஆனால், அவற்றில் வைதீகம் சாராத பெளத்தம் சமணத் தொடர்புகளும் இருந்திருக்கின்றன. அவை திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் அழகியல் என்பதில் இவற்றை எவ்வாறு அடையாளப்படுத்துவீர்கள்?

தமிழ் அழகியல், தமிழர் மெய்யியல் என்று சொன்ன உடனேயே நாம் இந்துமதத் தொன்மங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். தமிழ் பௌத்தம், தமிழ் சமணம், ஆசீவகம், லோகாயதம் ஆகிய பல்வேறு மதங்களின் தொன்மங்களும் இங்கிருக்கின்றன. அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் காணப்படும் தமிழர் மெய்யியல் கூறுகளை நாம் ஆராய்ந்து நெறிப்படுத்த வேண்டும். தொல்காப்பியர் முன் வைத்த ஐந்திணைக் கோட்பாட்டை ஓர் அழகியல் கோட்பாக வளர்த்தெடுக்க வேண்டும். அதே நேரத்தில் இன்றைய விளிம்பு நிலைத் தமிழர்களின் வாழ்வியலில் காணக்கிடைக்கும் பாமர மக்களின் நிகழ்கலை, இசைக்கலை, அணிகலன்கள் என்று நீளும் வாழ்வியலின் ஒவ்வொன்றையும் தற்காலக் கலைக் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் ஆராய்தல் வேண்டும்.

மொழி சார்ந்த பொதுமை மட்டும் போதுமானதா? இங்கு சாதிகளாக, பல்வேறு குழுக்களாக இருக்கும் நிலையில் மொழியை மட்டுமே வைத்து தமிழ் அழகியல் என்று எப்படி வரையறுப்பீர்கள்? இந்த வேறுபாடுகளை எங்கனம் கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள்?

தமிழ் அழகியல் என்று நான் சொல்கிறபோதே தமிழ் என்பதை ஒரு மொழி அடையாளமாக மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக தமிழ் எனும் இனத்தின் அடையாளமாக தனித்துவமான ஒரு பண்பாட்டின் குறியீடாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பல்வேறு சாதி அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழ்ச்சமூகத்தில் ஒவ்வொரு சாதி அடையாளத்தோடு அழகியலைக் கட்டமைத்தல் என்பதே முன்னரே இருக்கும் ஓர் அநீதியான கட்டுமானத்தை மேலும் இறுக்கிக் கட்டி விடும் ஒரு செயல்பாடாக முடிந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.

சாதி என்ற பெயரில் இந்துமதம் கட்டி விட்டிருக்கும் கட்டுக்கதைகள் மிக விரைவில் தொழில்நுட்பத்தின் முன்னால் உடைந்து சுக்கல் நூறாகப் போகிறது என்பது எனக்குப் புலப்படுகிறது. நாளை என்பதைப் பற்றி நாம் என்ன கனவு காண்கிறோமோ அதேதான் எதிர்காலத்தில் தோன்றும் என்பது எதிர்காலவியலின் ஓர் அசைக்க முடியாத அடிப்படை கருத்து என்று நோபல் பரிசு பெற்ற மானிடவியலாளர் மார்கிரேட் மீட் சொல்கிறார்.

சாதி அடையாளங்களும் அவற்றின் மீதான அநீதியான கட்டுமானங்களும் இன்றைய காலத்தின் அசைக்க முடியாத யதார்த்தங்கள் என்பது உண்மையே. ஆனால், இதனை தமிழ் அழகியல் எனும் மெய்யியல் விசாரணையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் முடிவு செய்திருக்கிறேன்.

நவீன இலக்கியம், நவீன ஓவியம், நவீன அழகியல் என்பவற்றில் ஒருவித மேட்டிமையான விளக்கமுறைகள் வந்து விடுகின்றன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

நவீனத்துவம் என்பது இந்தியாவுக்குள் நுழைந்தபோது இந்தியாவின் ஒவ்வொரு பிரதேசமும் அதனை ஒவ்வொரு விதமாக வரையறுத்துக்கொண்டது. இதனை வட்டார நவீனத்துவம் (REGIONAL MODERNISM) என்று வரையறுக்கலாம். எனவே, நவீனத்துவம் என்பது அந்தந்த வட்டாரத்தின் மொழி, வாழ்வியல், பண்பாட்டுப் பின்னணிக்கு ஏற்ப புதிய முறையில் வரையறுக்கப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதற்கும் பொதுவானதொரு நவீனத்துவம் என்பது இந்தோ ஆங்கில இலக்கியத்தில் மட்டும்தான் தெரிகிறது. நவீனத்துவம் என்பது தமிழ் இலக்கிய உலகில் நுழைந்த போது `எழுத்து’ இலக்கியவாதிகள் வேதாந்த விசாரங்களையே நவீனக் கோட்பாடாக முன்னிறுத்தினார்கள். அது இன்று தேவதேவன், ஜெயமோகன் என்று நீள்கிறது. இதற்கு வால்ட் விட்மன் துணைக்கு அழைக்கப்பட்டார். பிச்சமூர்த்தி என்கிற கவிஞர் ஒரு கோயில் தர்மகர்த்தாவாக இருந்தவர். இவர் தனது வேதாந்த விசாரங்களையே நவீனக் கவிதையாக வெளிப்படுத்தினார். சி.சு.செல்லப்பா வத்தலகுண்டு பிராமணர் சங்கத்தின் தலைவர் என்பதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார். இவரது இலக்கியக் கோட்பாடுகள் வைதீகத்தின் நவீன அவதாரங்களாக வெளிப்பட்டுள்ளன. மிகப்பெரிய கலைரீதியான எழுத்தாளராக முன்னிறுத்தப்படும் மௌனியின் சநாதன நவீனத்துவத்தை ஜமாலன் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

இயல் விருது அளித்துக் கொண்டாடப்பட்ட விமர்சகர் வெங்கட் சாமிநாதன் தனது இலக்கியக் கோட்பாடாக `உள்வட்டம்’, `வெளிவட்டம்’ என்ற ஒன்றை உருவாக்கினார். கலைத்தரமாக எழுதுவர்கள் என்று கருதுபவர்களை `உள்வட்டம்’ என்றும் அரசியல் ஆகியவற்றை எழுதியவர்கள் `வெளிவட்டம்’ என்றும் வெங்கட் சாமிநாதன் வரையறுத்தார். இது ஒரு நவீன இலக்கியக் கோட்பாடு போலத் தெரியலாம். ஆனால், இது ஒரு இலக்கிய சநாதனம்தான். இது அக்கிரகாரங்கள் என்கிற உள் வட்டங்களையும் சேரிகள் எனும் வெளி வட்டங்களையும் உருவாக்கிய சாதியச் சிந்தனைகளின் இலக்கிய மாறுவேடம் தவிர வேறில்லை. இவற்றைத் தெளிவுபடுத்திப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் `கவிதையின் அரசியல்’ என்கிற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன். திராவிடச் சிந்தனையை அரசியல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்கள் இலக்கியக் களத்தில் நவீனத்துவம் எனும் பெயரால் எதிர் கொண்டார்கள். இந்த மேட்டிமைத்தனத்தைத் தடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு இலக்கியச் செயல்பாட்டையும் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

எழுத்தாளர்கள் தன்னம்பிக்கையுடன் இத்தகையப் போக்குகளைப் புதிய எதிர்- கலாச்சார நடவடிக்கையால் தோல்வியுறச் செய்யலாம். இதனால்தான் `மேசைமேல் செத்த பூனை’ எனும் எதிர் கவிதைகளை நான் எழுதினேன். இப்படி எதிர்- கலாச்சாரக் குரல்களை உலகின் எந்தக் கோடியில் கண்டாலும் அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டு வந்தேன். குஜராத்தி, மராத்தி மொழியின் தலித் படைப்புகளை மொழிபெயர்த்து `பிணத்தை எறித்தே வெளிச்சம்’ எனும் மொழிபெயர்ப்பு நூலையும் கொண்டு வந்தேன். இப்படித்தான் நவீனத்துவத்தின் பெயரால் உள்நுழையும் மேட்டிமைத்தனத்தை ஐம்பது ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

உலக இலக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்? இவை இங்கு மொழிபெயர்க்கப்பட வேண்டிய படைப்பு என்று எவ்வாறு முடிவு செய்வீர்கள்?

மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் வேடிக்கையான விதத்தில் அறிமுகமானது. பள்ளிச் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அமெரிக்கன் நூலகத்திற்குச் சென்று ஆங்கில நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். அவற்றில் என் புரிதலுக்கு மீறிய நூல்களின் ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை. அவற்றை அகராதியின் துணையுடன் தமிழில் மொழிபெயர்த்துப் படித்துப் புரிந்துகொண்டேன். இப்படித்தான் மொழிபெயர்ப்பு எனக்கு வசப்பட்டது. பிறகு அதே அமெரிக்க நூலகத்தில் காணப்பட்ட ஆப்ரோ – அமெரிக்க இலக்கியங்களால் நான் கவரப்பட்டேன். லாங்ஸ்டன் ஹியூக்ஸ், ரால்ஃப் எல்லீசன், அர்ணா பாண்டம்ஸ், மாயா ஏஞ்சலோ,டோனி மோரிசன் ஆகியோரை ஏன் தமிழில் யாருமே மொழி பெயர்ப்பதில்லை என்று நினைத்துப் பார்த்தேன். அந்தக் கருப்பு இலக்கியங்களுக்குப் பக்கத்திலிருந்த எர்னெஸ்ட் ஹெமிங்வே, போன்ற பல வெள்ளை எழுத்தாளர்களை மொழிபெயர்த்து கசடதபற போன்ற இதழ்கள் வெளியிட்டன. ஆனால் மிகச் சிறப்பாகக் காணப்பட்ட கருப்பு இலக்கியங்களை ஏன் யாரும் மொழிபெயர்ப்பது இல்லை என்று எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. அப்போதுதான் எனக்குப் பிடித்த கவிதைகளையும் சிறுகதைகளையும் நான் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டேன். ஒன்றை மொழிபெயர்த்தவுடன் அந்தப் பிரதி எனக்குச் சொந்தமாகி விட்டது போன்ற ஓர் உணர்வு. ஒரு காலகட்டத்தில் 1983-இல் கவிஞர் மீரா அவர்கள் இப்படி அடிக்கடி ஆப்பிரிக்க இலக்கியம் பற்றிப் பேசுகிறீர்களே அவற்றை மொழிபெயர்த்து எங்களுக்குக் கொடுக்கக் கூடாதா? என்று கேட்டார். அப்போதுதான் நான் அவற்றையெல்லாம் தொகுத்து அவற்றில் சிறந்தவர்கள் எழுதியவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக மாற்றினேன்.

நான் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தபோது அவை நமது தமிழ்ச் சூழலில் தமிழர்களின் சுண்டுவிரலையாவது சுரண்ட வேண்டும் என்கிற ஒரு கருத்தை வைத்திருந்தேன். ஒரு எழுத்தை நாம் மொழிபெயர்க்கிறோம் என்று சொன்னால் அது தமிழ்ச் சூழலில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அத்தகைய எழுத்தைத்தான் நாம் மொழிபெயர்க்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்திருந்தேன். எனவேதான் அப்படி இல்லாத இலக்கியங்களை அவை பிற மொழி இலக்கியங்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே மொழிபெயர்ப்பது எனக்குச் சம்மதமாக இல்லை.

மிகப் புதுமையான எழுத்து முறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய படைப்புகளையும் நான் மொழி பெயர்த்துத் தமிழுக்குக் கொண்டு வந்தேன். ஆப்பிரிக்க இலக்கியத்துக்குப் பிறகு மூன்றாம் உலக இலக்கியங்களின் மொழிபெயர்ப்புத் தொடங்கினேன். அதன் பிறகு உலக இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது இந்திய இலக்கியங்களிலேயே பல எதிர்ப்பு இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தவில்லையே என்று ஒரு யோசனை தோன்றியது. எனவே செரபண்டராஜூ போன்றோரின் எதிர்ப்பு இலக்கியங்களையும், ஞானபீடம் போன்ற விருது பெற்ற எழுத்துக்களையும் ஒருசேர மொழிபெயர்த்து `காற்றுக்குத் திசை இல்லை’ எனும் தொகுப்பாகக் கொண்டு வந்தேன். எனவே, மொழிபெயர்ப்பு என்பது தமிழில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் ஒரு செயல்பாடு என்று நான் நம்புகிறேன். அதுமட்டுமல்ல வெவ்வேறு பண்பாடுகள் உள்ள மனிதர்களை அன்பினால் அரவணைக்கும் ஒரு செயல்தான் மொழிபெயர்ப்பு என்று இன்றைக்கும் நம்புகிறேன். இதனாலேயே தினந்தோறும் மொழிபெயர்ப்புகளை எனது முகநூலில் வெளியிடுகிறேன்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!