புல்டோசர்
நான் வரமாட்டேன்
வழிகாட்டிப் பலகையும்
விளக்கும் பொருத்தப்பட்ட
எந்த வீதிக்கும்
நான் வரமாட்டேன்
நான் வருவேன்
விளக்கணைந்து
வழி தெரியாமல்
பாதசாரிகள்
சுடுகற்களால்
தீ மூட்டும்போது
நான் வருவேன்
நரகத்திற்குச் செல்லும்
பாதையைத் தகர்க்க
நரகத்தின் கடைசிவரை
நான் வருவேன்.
காதலன்
குழப்பத்தில்
கண்களை
விரிக்கின்றான்
மடிக்கின்றான்
அவன்
உறங்கவுமில்லை
விழித்திருக்கவுமில்லை
அவன்
தன்னைவிட்டு
விரண்டோடிக்கொண்டிருக்கிறான்
பாதையோ
அவனைக் கண்டு
மிரண்டோடிக்கொண்டிருக்கிறது.
ஏக்கம்
பாட்டுப்பாடி
பாடி, பாடி, பாடி
வாழ்க்கைக்காக
தொழுது ஏங்கிய
கேனரிப் பறவை
ஏக்கத்தைத் துறந்து
இறப்பின்பால்
பறந்து
இறந்தது.
திரைச்சீலை
இருளைத்
திரைச்சீலையாய் நெய்து
நம்மீது
தொங்கவிட்டவன் யார்?
இனிவரும் காலங்களில்
என் பெயரை உச்சரிக்கவோ
அல்லது சுமக்கவோ
உரிமை இல்லாமல் போகலாம்
எனக்கு.
கவிதை
எதிர்வரும் காலங்களில்
விசாரிக்கவும்
விசாரிக்கப்படவும்
அங்கே
எவரும் இல்லாமல் போகலாம்
கவிதையைத் தவிர.
அமைதி
கவலையிலிருந்து தப்பிக்க
உனக்கு
வழி தெரியவில்லையென்றால்
எப்போதும்
ரோஜாப் பூங்கொத்தை
எடுத்துச் செல் என
உன் கவலையிடம் கூறு.
முதுமை
ஆனாலும்
ஒருமுறை மட்டுமே
முதுமை வரும் என்பதை
அறிந்துகொண்டேன்
மரணக்குழியில்
அதன் இதமான
அரவணைப்பின் பள்ளத்தாக்கில்
வேத வெளிப்பாட்டைப்போல
முதுமை
வந்திறங்கும்போது
அறிந்துகொள்வேன்
என் இதயத்தை.
இரு பாதிகள்
வானம்
பூமிக்கு
உணவளிக்கத் தொடங்கியபோது
இப்பாவியின் முகம்
இரண்டாகப் பிளந்தது:
தவறுக்கு ஒரு பாதி
மன்னிப்புக்கு மற்றொரு பாதி.
Illustration : judybowman
சுற்றுலாப் பயணி
திடீரென
எனக்கும்
இயற்கைக்குமிடையில்
மொழி உறவும்
கடித உறவும் ஏற்பட்டது
காற்று
படிக்கட்டாய் மாறியது,
என் கண்களுக்கும்
ஆகாயத்திற்குமிடையில்
இயற்கை ஆடையில்
நடக்கத் தொடங்கினேன்
சுற்றுலாப் பயணியாய்.
பார்வையாளர்
மருத்துவர்களே
அத்தர் வியாபாரிகளே
மந்திரவாதிகளே
சோதிடர்களே
மறைவானவற்றின் வாசகர்களே
இதோ நானும்
உங்கள் ரகசியங்களைப் பழகி
கொல்லும் படிகக் கற்களை
ஜீரணித்துக்கொள்கிறேன்.
உடல்
கரையில் தங்காமல்
கரையை விட்டுப் பிரியாமல்
கரையை எதிர்த்துப் போரிடும்
அலையைப் போல
புரட்சி செய்யும்
அமைதிகாக்கும்
மறுக்கும்
ஏற்கும்
உடல்.
கற்பனை
கை
அது கைதான்
முகம்
அது முகம்தான் என
கற்பனைசெய்து கொண்டேன்
மணல்மீதுள்ள அனுதாபத்தில்.
இடையிடையில்
கழுவப்பட்ட கால்களுக்கிடையில்
நிலா
காதலுக்கு வழிகாட்டிய பாதையில்
நிலா
காலடித்தடத்தில்
நிலா
இடையிடையில்
நிலா
அதோனிஸ் (Adonis)
94 வயதான சமகால அரபுலகின் முக்கிய இலக்கிய ஆளுமை அதோனிஸ். அரபு இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காகப் பலமுறை பரிந்துரைக்கப்பட்டவர். இவரது இயற்பெயர் அலி அஹ்மத் சயீத் இஸ்பர். ஜனவரி 1, 1930இல் சிரியாவிலுள்ள கஸ்ஸாபீன் எனும் சிறிய கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
1948இல் ஒரு பத்திரிகையில் ‘அதோனிஸ்’ எனும் கதையை வாசித்து அக்கதையால் ஈர்க்கப்பட்டு அன்று முதல் அதோனிஸ் எனும் கிரேக்கக் கடவுளின் பெயரைத் தனது புனைபெயராக ஆக்கிக்கொண்டார்.
‘காற்றில் இலைகள்’, ‘அல்கிதாப்’ (புத்தகம்), ‘ஒரு பெண்ணின் உடலில் கிழிந்துபோகும் வரலாறு’, ‘முதல் உடல் கடைசிக் கடல்’, ‘டமாஸ்கஸ் மிஹ்யாரின் பாடல்கள்’, ‘அதோனிஸின் இரத்தம்’ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ‘அதோனிஸ் கவிதைகள்’ என்ற பெயரிலேயே பல தொகுப்புகள் வந்துள்ளன. இதைத் தவிர கட்டுரைகள், திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
ஜெர்மெனியின் கோதே விருதுபெற்ற முதல் அரபு எழுத்தாளர். உலகின் தலைசிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படும் “தங்கமாலை” விருதை 2011 இல் பெற்றுள்ளார். இந்தியாவின் கவிதைக்கான குமாரன் ஆசான் சர்வதேச விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 25க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.