அம்பேத்கரியத்தின் வீர ஒலி ‘சமத்துவ சங்கு’

ஜெ.பாலசுப்பிரமணியம்

மத்துவ சங்கு எனும் வார இதழ் தீவிர அம்பேத்கரியரான பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியால் 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா எனும் கிராமத்தில் 01.06.1916 அன்று முருகன், சின்னத்தாய் இணையருக்கு மகனாகப் பிறந்தார். சாதிக் கொடுமைகளுக்கு எதிராக மக்களை எழுச்சி பெறச் செய்வதற்காக ‘ஆதிதிராவிடர் இளைஞர் சங்க’த்தைத் தொடங்கினார். இரட்டைமலை சீனிவாசன் 1938இல் தொடங்கிய ‘மெட்ராஸ் மாகாணப் பட்டியலினக் கூட்டமைப்’பின் (Madras Provincial Scheduled Caste Federation) இதழாக உதயசூரியன் தொடங்கப்பட்டது. இவ்விதழின் துணை ஆசிரியராகப் பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி பணியாற்றினார்.

அம்பேத்கரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, அம்பேத்கரால் நிறுவப்பட்ட அகில இந்திய பட்டியலினக் கூட்டமைப்பின் (All India Scheduled Castes Federation) சென்னை மாகாணத்தின் முதல் பொதுச்செயலாளரானார். 1942இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். 1952இல் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார். அம்பேத்கர் தலைமையிலான அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த இவர் 30.09.1973இல் மறைந்தார். அம்பேத்கரிய அரசியலைத் தமிழகத்தில் பரப்பியதால் ‘தென்னாட்டு அம்பேத்கர்’ என்று அழைக்கப்பட்டார் (ப.கி. மனோகரன், ‘தளபதி – அண்ணா தென்னாட்டு அம்பேத்கர், எம். கிருஷ்ணசாமி’). பள்ளிகொண்டை தாமரை குளம் வீதியில் கிருஷ்ணா ஸ்டோர் என்ற ஜவுளி கடை ஒன்றையும் சி.முனிசாமி என்பவருடன் இணைந்து நடத்திவந்துள்ளார்.

எட்டுப் பக்கங்களில் வெளியான சமத்துவ சங்கு இதழின் விலை 2 அணா, இது வேலூரிலுள்ள டி.எஸ்.வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. பட்டியலினக் கூட்டமைப்பின் மாகாணச் செயலாளர் பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி ஆசிரியராகவும், ஆர்.சுப்பிரமணியன் வெளியீட்டாளராகவும் கடமையாற்றினர். எல்லா மக்களும் பிறப்பால் ஒன்றே. செய்யும் தொழிலால் பெருமை, சிறுமை வருவதில்லை என்ற பொருளையும் இச்செயலை நம்மால் செய்ய முடியாது என்று தளர்ச்சி கொள்ளாமல், இடைவிடாது முயற்சி செய்தால் அதுவே அதை முடிக்கும் வலிமையைத் தரும் என்ற பொருளையும் தரக்கூடிய,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டாம்
பெருமை முயற்சி தரும்.

ஆகிய குறள்களை ஒவ்வொரு இதழிலும் முகப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். இதழின் நோக்கமாக “நம் இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம், அதற்கே நாம் அரசியலை துணைகொள்கிறோம். அதன் பொருட்டே அரசியலில் நாம் பணியாற்றுகிறோம். எந்தத் தமிழர் அன்று இமயம் முதல் குமரிவரை ஆண்டனரோ வீரத்தோடு, நீதியோடு, நடுநிலை தவறாது செங்கோலோச்சினரோ அந்த இனம் அரசிழந்து, ஆண்மையிழந்து, அறிவுக்குழம்பி கிடக்கின்றனரே! அந்த இனத்தை மீண்டும் அரியாசனமேற்றி அறிவிற்கும், ஆண்மைக்கும் உயரிய இடமளித்து தக்கதோர் நிலையை உண்டாக்க வேண்டுமென்பதே நமது ‘சமத்துவ சங்கின்’ நோக்கம்” என்று தெளிவுபடுத்தியுள்ளனர். இதழ் எத்தனை ஆண்டு காலம் வெளியானது என்ற தகவல் கிடைக்கப் பெறவில்லை. நமக்குக் கிடைத்த நவம்பர் 1947 முதல் பிப்ரவரி 1948 வரை வெளியான பத்து வெளியீடுகளைக் கொண்டு இவ்விதழ் குறித்தும் அதன் சமூக அரசியல் பணி குறித்தும் ஆராய்கிறோம்.

சமத்துவ சங்கின் சாதி, தீண்டாமைக் குறித்தப் புரிதல்கள்

இந்த இதழ் வெளியான சமூக அரசியல் சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக அரசை வலுப்படுத்தும் திட்டத்தில் நடைபோட்டுக்கொண்டிருந்தது. தேசத்திற்கான சட்டங்களை இயற்றும் அவைகளான நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவ உரிமை கிடைத்தது. இந்த உறுப்பினர்கள் தலித்துகளின் பிரச்சினைகளை அவைகளில் முன்வைத்தனர். சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்யத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி தீண்டாமை, சாதி விசயங்களுக்கு முகங் கொடுத்தது. சாதியின் பெயரால் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளின் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். இதில் ஸநாதன சாதி அமைப்பிற்கு எந்தவித குந்தகமும் நடந்துவிடக்கூடாது என்ற அடிப்படைவாதிகள், சாதி அமைப்பைத் தக்கவைத்துத் தீண்டாமையை ஒழிக்க முற்பட்ட சீர்திருத்தவாதிகள், சாதி ஒழிந்த சமத்துவ இந்தியாவைக் காண முயன்ற அம்பேத்கரியர்கள் என்ற மூன்று தரப்பினர் இந்திய சமூக, அரசியல், பண்பாட்டு வெளியில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

சமத்துவ சங்கு இதழில் இந்தச் சமூக, அரசியல் பின்னணி தாக்கம் செலுத்திவந்தது. சாதி தீண்டாமைக்கு எதிரான கட்டுரைகள், கடிதங்கள் நிரம்பியுள்ளன. தலித்துகள் மீதான வன்கொடுமை, தலித் குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகள், கல்வி போன்ற கோரிக்கைகளும் தொடர்ச்சியாக வெளியிடப் பட்டுள்ளன.

இந்திரஜித் என்பவர் ‘நாட்டிலே ஒரு நச்சு’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் தீண்டாமையை விஷத்துடன் ஒப்பிடுகிறார். தீண்டப்படாதவர்கள் விஷம் உள்ள மக்களாகவும் அவர்கள் பிற சாதியினரைத் தீண்டிவிட்டால் அந்த விஷம் அவர்கள் உடலில் ஏறிவிடுகிறது. விஷம் ஏதும் செய்யாவிட்டாலும் தீண்டப்பட்டவர்கள் ஓடுகிறார்கள், வசைமாரி பொழிகிறார்கள், நீரில் மூழ்குகிறார்கள், பலவிதமாகப் பிதற்றுகிறார்கள். “இந்நச்சால் உடலுக்கு வேதனையுமில்லை, உயிருக்கு ஊனமுமில்லை. ஆனால், அந்நச்சு ஏறியவர்கள் இதையே பெரிய நச்சாக நினைக்கிறார்கள்” என்று தீண்டாமைக் கடைபிடிக்கப்படுவதைக் கண்டிக்கிறார். அதே போல சாதி அமைப்பையும் “இந்துமதம் என்னும் நிலத்தில், வர்ணாசிரமம் எனும் வரப்புக்குள், ஆரியம் என்னும் நீரால், வைதீகம் என்னும் உரத்தால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பாங்குடன் வளர்ந்து பழங்குடி மக்களை பற்றியது” என்று சாதியின் தோற்றத்திற்கு இந்து மதம் அடிப்படை, அதை இன்றளவும் உயிர்ப்புடன் வைத்திருப்பது ஆரியம், அதற்கான கருத்தியல் நியாயங்களை வழங்குவது வைதீகம் என்று சாதியின் முழுப் பரிமாணத்தையும் சில வரிகளில் விளக்கிவிடுகிறது.

அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதிவந்தனர். அம்பேத்கரியர்களுக்குக் காங்கிரஸ் மீதான விமர்சனத்திற்குப் பல நியாயங்கள் இருந்தன. அவை புனா ஒப்பந்தம், அம்பேத்கரின் காந்தி – காங்கிரஸ் குறித்த நிலைப்பாடு போன்றவைதான். அம்பேத்கரின் வருகைக்குப் பின்பு காங்கிரஸுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சாதி, தீண்டாமை விசயங்களில் காங்கிரஸ் தனித்த அக்கறை எடுத்துக்கொண்டது. புனா ஒப்பந்தத்திற்குப் பின்பு காந்தி தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை நாடு முழுவதும் பரப்பிவந்தார். ஹரிஜனங்களின் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு போன்றவற்றிற்குப் பிறர் பாடுபட வேண்டும் என்ற நோக்கில் ஹரிஜன் சேவா சங்கத்தை உருவாக்கினார்.

ஹரிஜன தொண்டர்களுக்கு விடுத்த கடிதம்

K.ஜெகதீசன், மாணவன்

அன்புக்குரிய காங்கிரஸ் ஹரிஜன தொண்டர்களே வணக்கம்!

சேரியிலே சாதித் திமிரால் ஒதுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு, மக்கள் மாக்களாக்கப்பட்டுக் கிடக்கின்ற வீர ஆதிதிராவிடனாகிய ஹரிஜனங்களுக்குச் செய்யும் தொண்டு என்ன அன்பர்களே? இந்த நாட்டுப் பழங்குடி மக்களாகிய எங்களுக்குத் தலைக்கும் கையிக்கும் ஆரியம் என்கின்ற சங்கிலி பிணைக்கப்பட்டிட்ருக்கிறது. காலுக்கும் கழுத்துக்கும் ஜாதி இந்துக்களாகிய காங்கிரஸ் என்னும், புனா ஒப்பந்தத்தில் ஏமாற்றிய குள்ளநரிக்கூட்டம் குடிகொண்டு இருக்கும் கோட்டையை விட்டு அகல வேண்டுமென்றும், மேலே எழுதியிருக்கும் இரண்டு சங்கிலிகளையும் துண்டுத் துண்டாக்கப்பட வேண்டுமென்றும் தன் தனி உரிமையை அடைவதற்கு ரத்தம் சிந்தினாலும் போராடத் தயாராக இருக்கின்றோம் என்று வீரிட்டு எழுகின்ற இக்காலத்திலே, ஆலய பிரவேச ஹரிஜன சேவா சங்கம் என்கின்றீர்களே! எரிகின்ற தீயில் எண்ணையை விட்டதுபோல தானே இருக்கின்றது?

ஆலயப் பிரவேசத்தால் ஹரிஜனங்களுக்கு என்ன பயன்?

மழையானாலும் சரி வெயிலானாலும் சரி வயலிலே அல்லல்படுவது ஆதிதிராவிடன்; காட்டிலும் மேட்டிலும் உழைப்பவன் ஆதிதிராவிடன்; கனவிலும் புனவிலும் வருந்துவது ஆதிதிராவிடன். கல்லிலும் முள்ளிலும் கஷ்டப்பட்டு கலங்குவது ஆதிதிராவிடப்பெண்; நிலத்திலும் கழனியிலும் வியர்வை கசியப் பாடுபடுவது ஆதிதிராவிடன்; உழுது விதை விதைப்பவன் ஆதிதிராவிடன். விளைந்த இடங்களிலே ஆதிதிராவிட மக்களின் வளைந்த முதுகுகளைக் கொண்டு அறுவடை செய்து நெல்லாகக் குவிக்கின்றான் குன்றைப்போல். நெல் மூட்டை வடிவமாக வளைந்த முதுகில் தாங்கிக்கொண்டு ஜாதி இந்துக்களாகிய முதலாளி வீட்டின் கதவு அருகில் போடுகின்ற பொழுது ‘எட்டி நில்’ என்கின்ற மடையர்களின் மனக்கோயில் திறக்காமல் இருப்பதைத் திருத்தாமல், கோயிலுக்கு அழைக்கின்றீர்களே! பயன் என்ன? இது ஹரிஜன தொண்டாகுமா?

எப்படித் தொண்டாற்றினால் தொண்டாகும்? ஜாதி இந்துக்களையும், ஜாதி, மத, பேதம் காட்டும் திமிராளிகளையும் ஆதிதிராவிட வீதியில் குடும்பத்தோடு குடி இருக்கச் செய்தல், ஜாதி இந்துக்களின் வீதிகளிலும், பிராமண வீதிகளிலும் இந்த நாட்டுப் பழங்குடி மக்களைக் குடி இருக்கச் செய்தல், கலப்பு மணம் செய்வித்தல், ஆதிதிராவிடன் செய்யும் தொழில்களை மேல் ஜாதிகளைச் செய்யும்படி செய்தல் முதலியவைகளைச் செயலிலே செய்தால்தான் ஹரிஜனத் தொண்டாகும். வணக்கம் (சமத்துவ சங்கு, 10.12.1947).

கடித வடிவில் எழுதப்பட்ட இக்கட்டுரை எழுதப்பட்ட ஆண்டு 1947. சாதியைத் தோற்றுவித்தவர்கள் பிராமணர்கள். இன்று நடக்கும் சாதிக்கொடுமைகளுக்குப் பிராமணர்கள் மட்டுமே காரணம் எனச் சுட்டிக் கொண்டிருந்த அரசியல் தமிழகத்தில் செல்வாக்கு செலுத்திவந்த காலகட்டத்தில், சாதிப் பேதத்திற்குப் பிராமணர்களை மட்டுமே காரணமாக்காமல் ஜாதி இந்துக்களையும் உள்ளடக்கிப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர் ஆதிதிராவிடர்கள். இது அவர்களின் அரசியல் தனித்தன்மையைக் காட்டுகிறது. தொடக்கத்திலிருந்தே இந்தச் சிந்தனைப் போக்கு இருந்துள்ளதை இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோரின் எழுத்துகளிலிருந்து நாம் அறியலாம். அதாவது, சாதியை உருவாக்கிய ஆரியர், அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் ஜாதி இந்துக்கள் என்ற புரிதலிலேயே ஆதிதிராவிடர்களின் சாதி எதிர்ப்பு அரசியல் இருந்துள்ளதைக் காண முடிகிறது. மேலும் தனிக்குடியிருப்புகள், அகமண முறை போன்றவைதான் சாதியை நிலைநிறுத்துகின்றன. இவற்றைத் தலைகீழாக்கம் செய்யாமல் வெறும் கோயில் நுழைவு பேசுவதில் என்ன பயன் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

அடுத்து அதே கட்டுரையாளர் ‘சுதந்திர நாட்டில் பழங்குடி மக்கள் நிலை’ என்று எழுதிய கட்டுரையில் “வெள்ளையர் வெளியேறியபின் ஜாதி தொல்லையும், உயர்வு தாழ்வும் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் அடிமைபடுத்தியிருப்பதும், அவதிக்குள்ளாவதும் இல்லாமல் போகும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் முதுமொழி. ஆனால், ஜாதி தொல்லைகள் ஒழிந்தனவா? வகுப்பு கலகங்கள் அழிந்தனவா? உயர்வு – தாழ்வு மக்களிடமிருந்து மறைந்தனவா? ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் அடிமை கொண்டிருப்பதும் அடக்கி ஒடுக்கி அவதிக்குள்ளாக்குவதும் ஒழிந்தனவா? என்றால் இல்லை… பழங்குடி மக்களை அடிமையாயிரு என்று ஆணவம் படைப்பது பல இடம். அசுத்தமும் அநாகரீகமும் மனதுக்குச் சம்பந்தமில்லாத செயல்களைச் செய்யத்தான் வேண்டும் என்று நிர்பந்திப்பது வேறு இடங்கள். பறையடிக்க முடியாதென்றால் படாத பாடு படுத்துவது, பல இடங்களில் காலில் செருப்பணிந்து இந்துக்கள் வீதியில் வந்தார்கள் என்று வதைப்பது. இன்னும் சில இடங்கள், சிறிது கல்வி வளர்ச்சியால் சங்கங்களை நிறுவி மக்களைப் பண்படுத்த முயன்றால் சேரிகளைத் தீயிட்டு அழிப்பது, இன்னும் சில இடங்கள் இறந்த கால்நடைகளை எடுத்துப் புசிக்க மாட்டோம் என்றால் கட்டாயம் எடுத்துப் புசிக்க வேண்டும் என்று மண்டையில் அடிப்பது மற்றோர்புறம்” என்று விரிகிறது இக்கட்டுரை. சுதந்திரத்திற்கு முன்பு தலித் தரப்பினர், ‘இப்போதிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியே நீடிக்க வேண்டு’மென்றும் ‘இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கக்கூடாது’ என்றும் எழுதிவந்தன. அதற்குக் காரணமாக ஜாதியைப் பின்பற்றும் இந்தியர்களுக்குத் தங்களை ஆளும் தகுதி இல்லை என்றும் என்றைக்கு ஜாதி ஒழிகிறதோ அன்றைக்குத்தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், ஏற்கெனவே சாதியின் பெயரால் தலித்துகளை ஒடுக்குபவர்களின் கைகளில் அரசியல் அதிகாரமும் கிடைக்குமாயின் அது இன்னும் மோசமான விளைவுகளையே தலித்துகளுக்கு ஏற்படுத்தும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இதனாலேயே காங்கிரஸையும் அதன் தேசியப் போராட்டத்தையும் விமர்சித்துவந்தனர். இரட்டைமலை சீனிவாசனும் பண்டிதர் அயோத்திதாசரும் காங்கிரஸ் எதிர்ப்பு நிலை கொண்டதற்கு இதுவே அடிப்படைக் காரணம்.



சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஹரிஜன நலத்துறையின் விவாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்;

ஸ்ரீ பி.எஸ்.மூர்த்தி பேசுகையில் ஜாதி இந்துக்களின் நடத்தையினால் தற்போது ஹரிஜனங்கள் மிகவும் கஷ்டப்படுவதாயும், நாடு சுதந்திரம் பெற்ற பின்பு கூட பலயிடங்களில் ஹரிஜனங்கள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றும், இருக்க வீடு இன்றி, சாகுபடி செய்ய நிலமின்றி அவர்கள் தவிப்பதாகவும், நெல்லூர் ஜில்லாவில் ஜாதி ஹிந்து ரயத்துகள் ஹரிஜனங்கள் வசித்திருந்த நிலப்பிராந்தியத்தைப் பலவந்தமாக வாங்கிக்கொண்டு ஹரிஜனங்களின் குடிசைகளை நிர்மூலம் செய்திருப்பதாகவும், மேலும் ஆந்திர ஜில்லாக்களில் பலயிடங்களில் ஹரிஜனங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகவும், நாட்டின் நிர்வாகத்திலும் ஹரிஜனங்களுக்குத் தற்போது பங்கு இருப்பதாகவும் அவர்களுடைய உரிமைகளை இனி சர்க்கார் உணராவிடில் மிக்க கலவரம் ஏற்படுவது திண்ணம் என்றும் கூறினார்.

ஆந்திரப் பகுதியில் தலித்துகளுக்கு நடக்கும் வன்கொடுமைகளைப் பற்றி சட்டசபையில் பி.எஸ்.மூர்த்தி பேசியதை 05.11.1947 இதழில் பதிவு செய்த சமத்துவ சங்கு, தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு நடக்கும் வன்கொடுமைகள் தெரியவில்லையோ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினர் வி.ஐ.முனிசாமி பிள்ளையை நோக்கி கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹரிஜன தலைவர் V.I.முனிசாமி பிள்ளை அவர்களுக்கு வணக்கம்.

ஐயா!

தாங்கள் அசெம்பிளியில் ஹரிஜனங்களின் நிலைமைப் பற்றி விவாதித்தபோது மலையாளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை ஜாதி இந்துக்கள் கொடுமைக்கு ஆளாக்கியதை, விளக்கியதைப் பாராட்டுகிறோம். எங்கள் பாராட்டுதலை தோழர் பி.எஸ்.மூர்த்தி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். “தாயார் தன்வீட்டில் தவிட்டிற்கு அழுவது, மகன் தஞ்சாவூரில் கோதானம், பூதானம் செய்தது” போல் இருக்கிறது தங்களின் விளக்கம். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்நாட்டிலே வளர்ந்து தமிழையே தாய்மொழியாகக் கொண்ட தங்களுக்குத் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துன்பம் தெரியவில்லையே என்பதை அறிந்து மிக வருந்துகிறோம். தமிழ்நாட்டிலுள்ள எல்லா கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதற்கும் சுதந்திரம் இல்லை என்பதை மறந்துவிட்டீர்போலும். இக்கொடுமைகளை ஜாதி இந்துக்கள் நம் மக்களுக்குக் கொடுக்கும் தொல்லைகளைப் பற்றியும் எத்தனை மகஜர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது? அவைகளைப் படிக்க நேரமில்லையா? அல்லது மனமில்லையா? படித்தும் சொல்ல உன்மனம் இடந் தரவில்லையா? இதைப்பற்றி விளக்கமாக அறிய வேண்டுமானால் சட்டசபை தலைவர் தோழர் சிவசண்முகம் பிள்ளையை1 தயவு செய்து விசாரிக்கவும். அடுத்து வரும் விவாதத்தின் போதாவது தங்கள் உரிமைக்காகக் கிராமாந்திரங்களில் சங்கம் அமைக்க உரிமை இல்லாமல் ஜாதி இந்துக்களால் அடிபடும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை வெளிபடுத்துவீர் என நம்புகிறேன். நன்றி.



சென்னை மாகாண பெடரேஷன் மகாநாடு

‘சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் மாநாடு’ என்ற தலைப்பில் அம்பேத்கர் வேலூர் வருகைக் குறித்த அறிவிப்பு 12.11.1947 இதழில் வெளியிடப் பட்டுள்ளது. 1946 டிசம்பர் மாதமே இந்த மூன்று நாள் மாநாட்டிற்கான திட்டமிடல் தொடங்கியதாகத் தெரிகிறது. ஆனால், ஒரு வருடம் ஆகியும் இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த போதிய நிதி வசூலாகவில்லை என்று காரியதரிசி குறைபட்டுக்கொள்கிறார். இது குறித்த தொடர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை குறித்துப் பார்க்கலாம்.

அம்பேத்கார் வேலூர் வருகை

சென்னை மாகாண கூட்டு காரியதரிசி தோழர் R.T.S.மூர்த்தி அவர்கள் தாழ்த்தப்பட்டோர் தனிப்பெருந் தலைவர் ஆனரபிள் டாக்டர் அம்பேத்கார் அவர்களைப் பேட்டிக் கண்டு வடாற்காடு ஜில்லாவில் வேலூரில் நடைபெறவிருக்கும் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டுக்கு வரும்படியும் நம் சம்மேளன நிலைமையைப் பற்றி தெரிவித்துக் கேட்டுகொண்டார். தற்போது தலைவர் அவர்கட்கு உடல்நிலை சரியாக இல்லையாதலால் வருகிற 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் கட்டாயம் வருவதாக ஒப்புக்கொண்டு உறுதி கூறியுள்ளார் (24.12.1947).

என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து அம்பேத்கரின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகளை, நிதி திரட்டுதல் போன்ற வேலைகளை, பெடரேஷன் தோழர்கள் ஆரம்பித்தனர்.

டாக்டர் அம்பேத்கார் வேலூர் வருகை

சென்னை மாகாண

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷன் மாநாடு

1948 பிப்ரவரி இறுதியில் நடைபெறும்

என்.சிவராஜ்

ஆர்.என்.ராஜ்போஜ்

ஜே.என். மண்டேல்

திரு. கெய்க்வாட்

மற்றும் பலர் விஜயம் செய்வார்கள்

குறிப்பு: மகாநாட்டு நிதி வசூலிக்க ரசீது புத்தகம் பெற்றுக்கொண்டு போன தோழர்கள் உடனே நிதி வசூலித்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

கே.எம்.சாமி, காரியதரிசி

(24.12.1947).

திட்டமிட்டபடி அம்பேத்கரின் வருகை நடைபெறவில்லை என்பதைப் பிந்தைய இதழ்களில் வெளியான செய்தியால் அறிகிறோம். இம்மாநாட்டிற்கான போதிய நிதி திரட்ட முடியாததும், அம்பேத்கரின் உடல்நலிவும் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், அடுத்த இரண்டு மாதங்களிலேயே 04.01.1948 இதழில் மாநாட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெடரேஷனின் அகில இந்தியத் தலைவர் N.சிவராஜ் B.A,B.L. தலைமையில் வேலமாநகர் கோட்டை மைதானத்தில் பிப்ரவரி மாதம் 28, 29 தேதிகளில் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாநாட்டில் அகில இந்திய பொது காரியதரிசி தோழர் P.N.ராஜ்போஜ் அவர்களும், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் J.N.மண்டேல் அவர்களும் தவறாமல் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் வேலூருக்கு வரவில்லை என்றே தெரிகிறது. பிற தலைவர்களைக் கொண்டு மாநாடு நடந்ததா என்பது குறித்து அறிந்துகொள்வதற்கான ஆதாரங்கள் கிட்டவில்லை.



ஜெய்பீம் காலண்டர்

அம்பேத்கர் மற்றும் பெடரேஷன் தலைவர்கள் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களின் விற்பனை விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. விளம்பர வாசகங்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.

ஜெய்பீம் பிக்சர் காலண்டர் 1948

உயர்ந்த கார்ட் போர்டு அட்டையில் அழகிய கலர்களினால் B.R.அம்பேத்கார் (நின்றுகொண்டிருக்கும் உருவம்), திரு.சிவராஜ், திருமதி.மீனாம்பாள் சிவராஜ், ராஜ்போஜ், மண்டல் ஆகியோருடைய படங்களமைந்த காலண்டர் தயாராகிவிட்டது. விலை 0-6-0 அணா. வியாபாரிகட்கு 12% கமிஷன் கொடுக்கப்படும். தனி காப்பி வேண்டுவோர் 0-7-0 விலை, தபால் பில்லை அனுப்பவும். விபரங்களுக்கு S.K.பங்காரு பாவலர், தோட்டப்பாளையம், மக்கான் அருகில், வேலூர்.

1948-ம் வருஷம் பாக்கிட் காலாண்டர்

இந்திய படத்தில் டாக்டர் B.R.அம்பேத்கார் நின்றுகொண்டிருக்கும் உருவ படம் அழகிய ஆர்ட் பேப்பரில் பாக்கிட் காலண்டர் வெளிவந்துவிட்டது. ஏஜெண்டுகளுக்கு 20% கமிஷன் கொடுக்கப்படும். தனி பிரதி வேண்டுவோர் 1 அணா 9 பைசா ஸ்டாம்பு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும்.

P.வாசுதேவன், ஜெய்பீம் பதிப்பகம், சேண்பாக்கம், வேலூர்.

ஜெய்பீம் என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை பி.வாசுதேவன் சேண்பாக்கம், வேலூரில் நடத்தி வந்துள்ளார். இவர் தொடர்ந்து சமத்துவ சங்கு இதழில் அறிவிப்புகள், கட்டுரைகள், விளம்பரங்கள் போன்ற பங்களிப்புகளைச் செய்துள்ளார். பட்டியலினக் கூட்டமைப்பிலும் தீவிரமாகச் செயல்பட்டுவந்த இவர், அம்பேத்கரின் தமிழக வருகை குறித்து 08.02.1948 இதழில் ஓர் அறிவிப்புச் செய்துள்ளார். அதில்; டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வேலூர் வருகையை ஒட்டி செஞ்சட்டை அணிவகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அணிவகுப்பு குறித்த பிரச்சாரப் பயணம் ஒன்றைப் பட்டியலினக் கூட்டமைப்பின் சார்பில் பி.வாசுதேவன் தலைமையில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரப் பயணம் எந்தெந்தத் தேதிகளில் எந்தெந்தப் பகுதிகளுக்குச் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி; 26.01.48 கொணவட்டம், 01.02.48 அப்துல்லாவரம், 04.02.48 கீழ்மணவூர், 08.02.48 கரும்பத்தூர், 11.02.48 கிருஷ்ணாவரம், 15.02.48 வாஞ்சூர், 18.02.48 அக்ராவரம், 22.02.48 அலுமேல் ரங்காவரம், 25.02.48 சேண்பாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பெடரேஷன் செய்திகள்

பாபாசாகேப் அம்பேத்கர் தோற்றுவித்த செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷனின் பதிவுகள் ஒவ்வோர் இதழிலும் வெளியிடப்பட்டது. பெடரேஷனின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பி.என்.ராஜ்போஜ் அவர்களின் விடுதலை குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுக்காரியதரிசி P.N.ராஜ்போஜ் விடுதலை

ஜபல்பூர் மத்திய சிறையில் பொது அமைதி பராமரிப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இந்திய ஷெட்யுல்டு வகுப்பு சம்மேளனத்தின் பொதுக்காரியதரிசி P.N.ராஜ்போஜ் அவர்கள் டிசம்பர் 6-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

அகில இந்திய தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக எங்கள் சிறைக்கஞ்சா சிங்கம் P.N.ராஜ்போஜ் அவர்கள் கடந்த அக்டோபர் 22-ம் தேதி நாகப்பூரில் சாத்வீக முறையில் சொற்பொழிவாற்றியதற்காக, பேச்சுரிமைக்குப் போராடி பல தியாகங்களும், பலமுறை சிறை சென்று சுதந்திரம் பெற்ற காங்கிரஸ் கட்சியை மெஜாரிட்டியாகக் கொண்ட மத்திய மாகாண சர்க்காரால் சிறைபிடிக்கப் பட்டார். அவரை டிசம்பர் 6-ம் தேதி விடுதலை செய்த காருண்ய மத்திய மாகாண சர்க்காருக்கு ஷெட்யூல்ட் வகுப்பாரின் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



பொதுக் கூட்டம் P.N.ராஜ்போஜ் செட்யூல்ட் கழகம் அணைக்கட்டு

26-11-47 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு கழகத் தலைவர் G.மார்க்கபந்து தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதுசமயம் கோலார் தங்கவயல் உரிகம் E.T.பிளாக் அயோத்திதாஸ் ஷெட்யூல்டு கழகத் தலைவர் திரு. A.M.தங்கராஜ் அவர்கள் சங்கமென்றால் என்ன? அதன் கட்டுப்பாடு நம் தலைவர் யார்? அவருடைய சேவை என்ன? நமக்கு அவசியம் கல்வி வேண்டும். சோர்ந்திருக்கும் நம் மக்களைத் தட்டியெழுப்ப உதித்திருக்கும் நம் ‘சமத்துவ சங்கு’, ’உதய சூரியன்’ இப்பத்திரிகைகளைக் கட்டாயம் வாசிக்க வேண்டுமென்று தெளிவாக மக்கட்கு உணர்ச்சியூட்டும்படியாகப் பேசினார். 2வது P.M.மணி அவர் சமுதாயம் பிற்போக்கடைந்திருப்பதைப் பற்றி ஆர்வத்தோடு பேசினார். கடைசியாக 8 மணிக்குக் கூட்டம் காரியதரிசியால் வந்தன உபச்சாரம் கூறி முடிவு பெற்றது.                      

– காரியதரிசி C.கண்ணன்.

(17.12.1947)



இதேபோல வடஆற்காடு பெடரேஷன் கமிட்டி கூட்டம், வடஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை மருத்துவாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற பெடரேஷன் பொதுக்கூட்டம், மைசூர் சமஸ்தான ஷெட்யூல்ட் காஸ்ட் மாணவர் பெடரேஷன் கூட்டம் (22.10.47), 15.12.47 அன்று அகில இந்திய பெடரேஷன் தலைவர் N.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மாணவர் பெடரேஷன் கூட்டம், சம்மேளனத்தின் சார்பில் வடஆற்காடு ஜில்லா முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுக் கூட்டம், அசோகாபுரம் பொதுக்கூட்டம், 02.11.47 அன்று சதுப்பேரியில் நடந்த பொதுக்கூட்டம், 09.11.47, 16.11.47 ஆகிய நாட்களில் சிறையிலிருந்து விடுதலை பெற்ற தங்கவயல் சம்மேளனத் தோழர்களுக்காக நடந்த பாராட்டுக் கூட்டங்கள், 06.11.47 அன்று எம்.வேலாயுதம் நடத்திய வாணியம்பாடி பொதுக்கூட்டம், 11.11.47 அன்று தங்கவயல் நந்தி துர்க்கம் ஓரியண்டல் லைனில் தங்கவயல் கூட்டுக் கமிட்டி தலைவர் திரு. முத்து MBA அவர்கள் தலைமையில் நடந்த பொதுகூட்டம், 23.12.47 அன்று கோலார் தங்கவயல் உரிகம் E.T.பிளாக் க.அயோத்திதாஸ் ஷெட்யூல்ட் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம், 24.12.47 அன்று தங்கவயலில் நடந்த பெடரேஷனின் வருடாந்திரக் கூட்டம், 28.12.47 அன்று நடைபெற்ற ஆத்தூர் வீரையன் வாலிபர் சம்மேளனத்தின் கூட்டம், 28.12.47 அன்று திரு. T.ஞானதாஸ் அவர்கள் தலைமையில் கோலார் தங்கவயல் உரிகம் ஸ்டாலின் நகரில் நடந்த கூட்டம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக

இதழ் முழுமையாக அம்பேத்கரிய இயக்கச் செயல்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. எவ்வளவு பிரதிகள் விற்பனையாகின, எந்த ஆண்டுவரை வெளியாகியது போன்ற தகவல்களைத் தேட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 1930களுக்குப் பின்பு தலித்துகள் மத்தியில் பற்றிக்கொண்ட அம்பேத்கரிய அரசியலை பறைசாற்றுகிறது சமத்துவ சங்கு.

சமத்துவ சங்கு இதழுக்கான வாழ்த்துரையை அரக்கோணம் இச்சிபுத்தூர் பெடரேஷனின் செயலாளர் ஜெ.ஜெயராஜ் எழுதியுள்ளார். அவ்வாழ்த்துரையில்;

பலன்காணாத பாட்டாளி மக்களின் சார்பில் உரிமை முழக்கமிடும் ஒப்புயர்வற்ற “சமத்துவ சங்கே” நின் வரவு நல்வரவாகுக!

தன்னிகரற்ற தனிப்பெருந்தலைவன் அண்ணல் அம்பேத்காரின் தலைமையில் புரட்சிப்போருக்கு அணிவகுத்து நிற்கும் தாழ்த்தப்பட்டோரின் வெற்றிச் சின்னமாக உன்நாதம் முழங்கட்டும். திக்கெட்டும் பரவட்டும் “சமத்துவ சங்கின்” வீரஒலி.

குறிப்பு

  1. இவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்த பிரபலமான தலித் தலைவராவார். 1938இல் சென்னை மாநகர மேயராகவும், 1951 முதல் 1955 வரை சட்டமன்ற சபாநாயகராகவும் செயல்பட்டவர். எம்.சி.ராஜாவின் செயல்பாடுகளை ஆங்கிலத்தில் The Life, Select Writings and Speeches of Rao Bahadur M. C. Raja என்ற நூலாக எழுதியவர்.

(தொடரும்)

[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger