அம்பேத்கரிய விளக்கு ‘தொண்டு’ இதழ் – தமிழத்தில் அம்பேத்கரிய இதழ்கள்

ஜெ.பாலசுப்பிரமணியம்

டாக்டர் அம்பேத்கரின் வருகைக்குப் பின்புதான் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதுவரை வெறும் அரசியல் விடுதலை மட்டுமே பேசப்பட்டுவந்த நிலை மாறி சமூக விடுதலையைப் பேச முனைந்தனர். அம்பேத்கரின் எழுத்தும் பேச்சும் செயல்பாடுமே தேசியவாதிகளுக்கு இந்த நெருக்கடியைக் கொடுத்தது. இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வருகை இந்தியாவில் வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய தலித்துகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் தீண்டாமைக்கு எதிராக, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகத் தலைவர்கள் தோன்றினார்கள். இது வட்டார அளவிலும், மொழி எல்லைக்கு உட்பட்டுமே இருந்தது. பாபாசாகேப் அம்பேத்கரின் வருகையினால் இந்திய அளவிலான தலித் அரசியல் எழுச்சி உருவானது. அம்பேத்கர் 1936இல் தொடங்கிய சுதந்திர தொழிலாளர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் கிளை இருந்ததாக அறிய முடியவில்லை. ஆனால், அவர் 1942இல் தொடங்கிய ‘செட்யூல்ட் காஸ்ட் பெடரேஷன்’ அமைப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெடரேஷனின் அகில இந்தியத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த தந்தை என்.சிவராஜ் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் செயலாளராக கே.எம்.சாமியும், தலைவராக வ.வீராசாமியும் செயல்பட்டுவந்தனர். தமிழ்நாட்டில் பெடரேஷனுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருந்தது. இவ்வமைப்பு தேர்தலில் பங்கெடுத்து, தமிழகத்திலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியக் குடியரசுக் கட்சியும் தமிழகத்தில் அம்பேத்கரியர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியது.

பெடரேஷனின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான வ.வீராசாமி 1952 முதல் 1957 வரை மாயவரம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அம்பேத்கரின் கொள்கைகளைப் பரப்ப தொண்டு எனும் மாதமிருமுறை இதழைத் தொடங்கினார். இவ்விதழ் அம்பேத்கரின் அறிக்கைகள், பெடரேஷன் செய்திகள் போன்றவற்றைத் தாங்கி வெளிவந்தது. தமிழில் வெளியான அம்பேத்கரிய இதழ்களில் தொண்டு இதழுக்கு முக்கிய இடம் உண்டு. 01.01.1951 அன்று தொடங்கப்பட்ட இவ்விதழ் சித்தார்த்தர் நிலையம், தில்லை நகர், திருச்சி எனும் முகவரியிலிருந்து வெளியானது. எண் 56, கிலேதார் தெரு, திருச்சி எனும் முகவரியில் செயல்பட்டுவந்த தியோடர் பிரிண்டிங்க் அண்டு லித்தோ ஒர்க்ஸ் எனும் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. ஆசிரியர், வெளியீட்டாளர் வ.வீராசாமி. 12 பக்கங்களைக் கொண்ட இவ்விதழில், முழுக்க முழுக்க பெடரேஷன் கூட்டப் பதிவுகள், அம்பேத்கரின் அறிக்கைகள், வீராசாமியின் நாடாளுமன்ற உரைகள், சமூகச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

06.12.1956இல் பாபாசாகேப் அம்பேத்கரின் மறைவையொட்டிப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தொண்டு இதழில் (15.12.56) வெளியான பாபாசாகேப் அம்பேத்கரின் மறைவுச் செய்திகளின் தொகுப்பு பாபாசாகேப்பின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. பாபாசாகேப்பின் மறைவுக்குப் பின்பு 01.02.1957 இதழிலிருந்து அவரது வாழ்க்கை வரலாறு தொடராக வெளியிடப்பட்டுள்ளது.

m m m

டாக்டர் B.R. அம்பேத்கார் மறைந்து விட்டார்.

டாக்டர் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெருந்தலைவர்.

படிப்பில் பல பட்டங்கள் பெற்றவர்

உலகப் பேரறிஞர்களில் ஒருவர்

சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர்

அரசியல் மேதை

சமுதாயப் புரட்சி வீரர்

இந்திய உபகண்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் கல்வி, அரசியல் துறைகளில் மாபெரும் மேதையும், சமுதாயப் புரட்சியின் முன்னணித் தலைவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தலைவரும், அவர்களுடைய இன்றைய விடுதலைக்கு முக்கிய முதன்மையான காரணஸ்தரும், இந்திய அரசியலின் சிற்பியும், புத்தமார்க்க மறுமலர்ச்சி இயக்கத் தந்தையும் ஆகிய டாக்டர் B.R அம்பேத்கார் 6-12-56 காலை 6 மணிக்கு டில்லியில் மரணம் அடைந்துவிட்டார். இந்தச் செய்தி இந்தியாவுக்கே பேரதிர்ச்சியைத் தந்துள்ளது; தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பேரிடியாகும்; இந்தியாவுக்கு மாபெரும் நஷ்டம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈடு செய்ய முடியாத நஷ்டம்.

மேற்படி 6ஆம் தேதி காலை வழக்கம்போல் டாக்டர் அம்பேத்காருக்குத் தேநீர் கொடுக்கச் சென்ற வேலையாள் டாக்டர் மீளா தூக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.

பிரதமர் நேருவின் மரியாதை

டாக்டரின் மரணம் வெகுவிரைவில் நகரெங்கும் பரவி விட்டது. இந்திய பிரதம மந்திரி நேருவுக்குத் தெரிந்ததும் திடுக்கிட்டார். இந்திய பாராளுமன்றத் துணைத் தலைவர் சர்தார் ஹுக்கும் சிங் அவர்களுடன் டாக்டர் பங்களாவுக்குச் சென்று மலர்மாலை வைத்து தனது கடைசி மரியாதையைச் செலுத்தினார்.

பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் துயரம்

4-12-56 செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய பாராளுமன்றத்திற்கு வந்து தமது சக அங்கத்தினர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கார் 6ஆம் தேதி மறைந்தார் என்ற செய்தி அங்கத்தினர்களைத் திடுக்கிட வைத்தது; பலர் டாக்டர் பங்களாவுக்கு விரைந்து சென்று கடைசி வணக்கம் செய்தனர், அந்த மாபெரும் தலைவருக்கு.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

 இந்திய அரசியலை வகுத்த அண்ணல் அம்பேத்கார் மறைவுக்கு இந்திய பாராளுமன்றம் 6ஆம் தேதி துக்கம் தெரிவித்து அவருக்கு மரியாதை அறிவிப்பாகச் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பிரதமர் பண்டிட் நேருவும், பல கட்சித் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் மக்கள் சபைத் தலைவர், மேல் சபை துணைத் தலைவர் ஆகியோர் டாக்டரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து, அவரது திறமையைப் பாராட்டினர். அதன்பின் இரு சபைகளும் எழுந்து இரு நிமிடங்கள் மௌனமாக நின்று அண்ணல் அம்பேத்காருக்கு மரியாதை செய்து கலைந்தன.

உயர்ந்த குணாளர்; கல்வி கேள்விகளில் நிபுணர்;

கொள்கை உறுதியுடையவர்; செயல்வீரர்

தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைக்குப்

 புரட்சி மனப்பான்மையுடன் பாடுபட்டவர்;

இந்திய அரசியலின் சிற்பி

இந்திய பாராளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்காருக்கு பிரதமர் நேருவின் புகழ் மாலை

– புதுடில்லி டிசம்பர் 6.

இன்று டாக்டர் B.R அம்பேத்கார் மறைந்த துக்க செய்தியை இந்திய பாராளுமன்ற மக்கள் சபையில் துயரமுடன் அறிவித்து பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு டாக்டரை பாராட்டி புகழைக் கூறினார்.

பண்டிட் நேரு சொன்னதாவது : டாக்டர் அம்பேத்கார் இந்து சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய புரட்சியின் சின்னம் என்று என்றென்றும் நினைவுக்குரியவர். இந்திய அரசியலை வகுப்பதில் அவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. பின் அரசியல் நிர்ணயச் சபையில் கூட்டத்தை நிர்ணயிக்கும் வேலையில் தீவிரமாக வேலை செய்தவர். இந்து சட்டத்தை மாற்றி அமைக்க அவர் செய்த மகத்தான பணிக்காகவும் அவரை இந்நாடு என்றும் மறக்காது. மேலும், டாக்டர் அம்பேத்கார் தனது வாழ்விலேயே இந்து சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டதைக் கண்டுவிட்டார் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்தான் டாக்டர் அம்பேத்கார் அவர் அங்கத்தினராக இருந்த ராஜ்ஜிய சபையில் அமர்ந்திருந்ததைக் கண்டேன்; அவர் இன்று இறந்துவிட்டார் என்ற செய்தி எல்லோரையும் திடுக்கிட வைத்துவிட்டது, என்று வருந்தினார் பண்டிட் நேரு.

மேலும் பேசும்போது, டாக்டர் அம்பேத்கார் இந்தச் சபையில் அங்கத்தினராக இருந்தவர் இந்திய அரசியலை வகுத்தவர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்திய அரசியலை வகுப்பதில் டாக்டர் அம்பேத்காரை விட அதிக பிரயாசையும், கவலையும் எடுத்துக் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை என்று பண்டிட் நேரு குறிப்பிட்டார்.

டாக்டர் அம்பேத்கார் இந்து சட்டத் தொகுப்பு மசோதாவை உருவாக்கினார். அவர் எழுதிய அந்த மாபெரும் மசோதா அப்படியே அந்தச் சமயத்தில் சட்டமாகவில்லை என்றாலும் பிரிவு, பிரிவாக நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சிக்குரியது என்று சொன்னார் நேரு.

மக்கள் சபைத் தலைவர் கனம் வி.அனந்தசயனம் ஐயங்கார், திருமதி ரேணுசக்கரவர்த்தி, ப்ராங்க் அந்தோணி, காட்கில், கஜ்ரோல்கார் ஆகியோர் டாக்டர் மறைவு குறித்து வருந்தி பாராட்டுக் கூறினர்.

ராஜ்யசபையில் பிரதமர் நேருவும், சபையின் துணைத் தலைவர் கணம் S.V.கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களும் டாக்டர் அம்பேத்கார் சேவையையும், அவரது அறிவு திறமையையும், பாராட்டிப் பேசினார்.

அநேக காரியங்களில் முற்பங்குகொண்டு தொண்டாற்றிய டாக்டர் அம்பேத்கார் மரணம் அடைந்த செய்தியை இந்தச் சபையில் வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் அம்பேத்கார் பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் விவாதத்துக்குரியவராக இருந்தவர். அவரது மகத்தான பண்புகளிலும், கல்வித் திறமையிலும், மனதில் பட்டதைக் கூறுவதில் அவர் மேற்கொண்ட தீவிர போக்கையும் பற்றி யாரும் சந்தேகிக்க முடியாது. சில சமயங்களில் அம்மாதிரி காரியங்களில் அவர் அளவுக்கு மீறிய உணர்ச்சி பலத்துடன் போராடியது நேரிடையான எதிர்ப்பை விளைவித்தது எனலாம் என்று பிரதமர் கூறினார்.

மேலும் பேசும்போது அவர் சொன்னார், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமை உணர்ச்சிக்கு, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் உணர்ச்சிக்கு டாக்டர் அம்பேத்கார் பெரும் சின்னமாகத் திகழ்ந்தார். இந்திய சமுதாய அமைப்பில் மிகவும் இன்னல் அடைந்தவர்களுடைய விடுதலைக்காகப் பாடுபட்டத் தலைவர் அவர், இந்து சமுதாயம் இழைத்த கொடுமையை நாம் மறக்கக்கூடாது.

சிலர் கூறலாம், டாக்டர் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமை உணர்ச்சியை மிகைப்படுத்தினார் என்று. ஆனால் நான் அப்படி எண்ணவில்லை. அவர் சொன்ன தன்மையிலும் கையாண்ட மொழியிலும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், உண்மை உணர்ச்சியில் யாரும் தவறு காண முடியாது. பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் டாக்டர் அம்பேத்காரைப் பல காரியங்களில் எப்போதும் நினைப்பார்கள் என்றாலும் அவர் இந்திய அரசியலை வகுக்கும் காரியத்தில் ஆற்றிய மகத்தான பணி மற்ற காரியங்களை விட அதிக காலத்துக்கு நினைவுபடத்தக்கதாகும் என்று பிரதமர் புகழைக் கூறி முடித்தார்.

ராஜ்யசபை துணைத் தலைவர் S.V.கிருஷ்ணமூர்த்தி ராவ் “டாக்டர் அம்பேத்கார் இரண்டு நாட்களுக்கு முன்தான் இங்கு வந்து நல்ல மனோநிலையில் பேசிக்கொண்டும் தமது நண்பர்களுடன் தமாசாகப் பேசிக் கொண்டிருந்தார், என்றும் சொல்லி, மேலும் டாக்டர் அம்பேத்காருடன் பலபேர் கருத்து மாறுபாடு கொள்ளலாம். ஆனால் அவர் மிக முக்கியமானவர்களில் ஒருவர்; அவரது பேச்சு அவரது கல்வித் திறமையும், பேச்சு வன்மையையும், ஆழ்ந்த படிப்பையும் எடுத்துக்காட்டிற்று, என்று கிருஷ்ணமூர்த்தி ராவ் சொன்னார்.

(தொண்டு 15.01.1957)

அண்ணல் அம்பேத்கார்

மறைவுப்பற்றி பெரியார் துக்க அறிக்கை

“இந்தியாவின் சிறந்த அறிஞர்களின் முன்னணியில் உள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கார் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்காருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்த விதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயன்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரண தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகதாரரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துகளைச் சின்னாபின்னமாக்கும்படி மக்களிடையே விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதுதான் ஆரிய ஆஸ்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும் அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகவும் பேசியும், எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமானால், காந்தியாரையே ஒரு பத்தாம் பசலி பிற்போக்குவாதி என்றும், அவரால் பிடிவாதமாக படிக்கப்பட்டுவந்த கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகா கொடியவன் என்றும், இராமாயண காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லிப் பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டெரித்து சாம்பலாக்கிக் காட்டினார்.

இந்து மதம் உள்ள வரையிலும் தீண்டாமையும், ஜாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்று ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துகள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அநேக காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும் சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கார் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியா பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்காரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கார் மரணத்துக்கும் இருக்கக்கூடும் என்பதே ஆகும்.

– ஈ.வெ.ரா

நமக்குப் புத்தாண்டு மலர் வேறா!

 ‘தொண்டு’வின் 7ஆவது பிறந்த நாளை முன்னிட்டுப் பொங்கல் நாளை முன்னிட்டு 1-1-57இல் மலர் வெளியிடயிருந்தோம். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை. நம் தலையில் இடி விழுந்தது தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகத் தலைவர் மறைவால்.

– ஆசிரியர்.

 பம்பாய்க்கு வீராசாமி

 திருச்சி, டிசம்பர் 11

தோழர் வ.வீராசாமி அவர்கள் அரியலூர் அருகில் இரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து, விவரம் தெரிந்து சொல்ல இம்மாதம் 3ஆம் தேதி காலை அரியலூருக்கு டில்லியில் இருந்து வந்து சேர்ந்தார். பார்த்து விவரம் அறிந்து திருச்சிக்கு வந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பிரயாணிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். 7ஆம் தேதி டெல்லிக்குப் புறப்பட இருந்தார். ஆனால், டாக்டர் மறைவால் டில்லிக்குப் போவதையும், தேசிய இரயில்வே உபயோகிப்போர் ஆலோசனை கவுன்சில் அங்கத்தினர் என்ற தன்மையில் 10 நாட்களுக்குத் தென்பகுதி இரயில்வே தொழிற்சாலைகளையும் ஏற்றுமதி, இறக்குமதி இடங்களையும், பிரயாணிகளுக்கு உள்ள வசதிகளையும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்து இரயில்வே போர்டு, மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கு எழுதிவிட்டார். பத்தாம் தேதி திருச்சியில் இருந்து அண்ணல் அம்பேத்கார் அஸ்திகளுக்கு மரியாதை செலுத்த பம்பாய்க்குப் பயணமானார். பம்பாயில் செட்யூல்டு வகுப்பு பெடரேஷன் தலைவர்களைக் கண்டு ஃபெடரேஷன் வளர்ச்சி சம்பந்தமாகவும் புத்த மார்க்கத்தை நாடு முழுவதும் பரப்புவது, பழங்குடி மக்களைப் புத்த மார்க்கத்தைத் தழுவும்படி செய்வது சம்பந்தமாகவும் பேசுவார்.

டாக்டர் அம்பேத்கார் மரணச் செய்தி

பத்திரிகையாளர்களின் வருத்தமான அறிவிப்புகள்

7ஆம் தேதி “இந்தியன் எக்ஸ்பிரஸில் 6ஆம் தேதியிட்டு அம்பேத்கர் மரணம்; பார்லிமெண்ட் சபைகள் ஒத்திவைக்கப்படுகின்றன” என்ற தலைப்புகளுடன் “முன்னணி யூனியன் சட்ட அமைச்சரும், இந்திய அரசியலை வகுத்தவர்களில் ஒருவருமாகிய டாக்டர் B.R. அம்பேத்கார் இன்று காலை மரணமானார்” என்றும் 63 வயது உள்ள இந்த மாபெரும் புகழ்பெற்ற ஸ்கெட்யூல் வகுப்புத் தலைவர் இந்திய அரசியலை வகுப்பதில் மகத்தான பணியாற்றியதில் “நவ இந்திய மனு” என்று அழைக்கப்படும் டாக்டர் பீமாராவ் ராம்ஜி சமீபத்தில்தான் புத்த மார்க்கத்தைத் தழுவினார்” என்றும் செய்தியை முன் பக்கத்தில் மத்தியில் படத்துடன் பிரசுகரித்துள்ளது.

7ஆம் தேதி “சுதேசமித்திரன்” இச்செய்தியைச் சாதாரணமாக முகப்பு பக்கத்தில் 7, 8 பத்திகளில் கீழே வெளியிட்டுள்ளது. டாக்டர் போட்டோ கூட போடவில்லை.

7ஆம் தேதி “தமிழ்நாடு” பத்திரிகை இச்செய்தியை 4, 5ஆவது பத்திகளில் நடுவில் சாதாரணமாகப் படத்துடன் வெளியிட்டுள்ளது.

6ஆம் தேதி மாலை வெளியான மெயிலில் டாக்டரின் போட்டோவுடன் முதற் பக்கத்தில் இரண்டு பத்தி அகலத்தில் இந்தத் துக்க செய்தியை வெளியிட்டு “இந்திய அரசியலை வகுத்தவரும் சமுதாயத்தில் நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய வீரரும்” என்று புகழுரையுடன் டாக்டரின் மரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. டாக்டர் இறந்த அன்றே ‘மெயில்’ பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது.

6ஆம் தேதி ‘நவ இந்தியா’, ‘விடுதலை’, ‘தினமணி’ பத்திரிகைகளும் 7ஆம் தேதி ‘நம் நாடு’, ‘தினத்தந்தி’ பத்திரிகையிலும் முழுப்பக்க அகலத்திற்குப் பெரிய தலைப்புகளுடன் தாழ்த்தப்பட்ட மக்களால் தாங்க முடியாத செய்தியை வெளியிட்டுள்ளன.

‘செய்தி கேட்டுப் பலர் திடுக்கிட்டனர்’, ‘பம்பாயில் ஹர்த்தால்’, ‘தொழிலாளர்கள் வெளியேறினர்’ என்ற தலைப்புகளோடு “சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட மந்திரியாகப் பணியாற்றிய டாக்டர் அம்பேத்கார் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் தீவிர பங்கு எடுத்துக் கொண்டார். அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டிக்கும் அவரே தலைவர். அவரைப் புதிய அரசியலை உருவாக்கிய சிற்பி என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானதாகும். இந்து சட்ட சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வந்த பெருமையும் டாக்டர் அம்பேத்காருக்கு உரியது” என்று டாக்டருக்குப் புகழ் மாலை சூட்டி உள்ளது ‘நவ இந்தியா’.

‘உலக மேதை டாக்டர் அம்பேத்கார் உயிர் நீத்தார்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களின் தந்தை’, ‘சீர்திருத்த செந்நெறியாளர்’, ‘இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி’, ‘புத்த நெறிக்குப் புத்துயிரூட்டியவர் பெரியாரின் உற்ற நண்பர்’ – இந்தத் தலைப்புகளுடன், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கழகத் தலைவரும், இந்தியாவின் தலைசிறந்த அறிஞரும், சீர்திருத்தவாதியுமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் இன்று காலையில் புதுடெல்லியில் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அடக்க முடியாத துயரத்துடன் வெளியிடுகிறோம்” என்றும், “ஐந்து கோடி ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் மாபெரும் தலைவரான டாக்டர் அம்பேத்கார் அவர்கள் கடந்த கால் நூற்றாண்டு காலமாக, சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் ஆற்றியப் பணிகள் அளவிடற்கரியது” என்றும், “இவர் ஆரம்பகால முதற்கொண்டே இந்து மதத்தைக் கண்டித்து ஆரிய மத வைரியாக திகழ்ந்தார்” என்றும், “டாக்டர் அவர்கள் உலக மேதைகளில் ஒருவர்; ஒப்பற்ற அறிஞர்; மக்கள் தொண்டர்; செந்நெறியாளர்; சுயமரியாதைக்காரர்; தந்தை பெரியார் அவர்களின் உற்ற நண்பர்” என்று புகழ்ந்து பாராட்டி “விடுதலை”யும், டாக்டர் மறைந்த அன்றே, “ஹரிஜன தலைவர் டாக்டர் அம்பேத்கார் காலமானார்” என்று “தினமணியும்”, “அம்பேத்கார் திடீர் மரணம்”, “ஹரிஜனங்களின் தலைவர்” என்று தினத்தந்தியும், காந்தியார் பழங்குடி மக்களை “ஹரிஜன்” என்ற வார்த்தையை குறிப்பிட்டு ஆரம்பித்தாரோ அன்று முதல் அம்பேத்காரை வன்மையாகக் கண்டித்து, தீவிரமாக எதிர்த்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தன்மான தலைவரையும், அந்தப் பேரை ஏற்றுக்கொள்ளாத, நாவினால் கூட உச்சரிக்க மறுக்கும் பழங்குடி மக்களையும் இழிவுபடுத்தும் தன்மையில் தலைப்புகள் கொடுத்து மரணச் செய்தியை வெளியிட்டுள்ளன.

“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு”, “இந்தியாவெங்கும் சோக இருள்”, என்ற தலைப்புகளுடன் “இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் என்ற இழிநிலையைப் போக்குவதற்கு அயராது உழைத்த உத்தம தலைசிறந்த பகுத்தறிவாதி, அரசியல் பேரறிஞர், சட்ட நிபுணர், இந்திய அரசியல் சட்ட கர்த்தாக்களில் முதன்மையானவர் – டாக்டர் ஙி.ஸி. அம்பேத்கார் நேற்று காலை 6:00 மணி அளவில் புதுடில்லியில் இயற்கை எய்தினார் என்ற செய்தி நம்மை எல்லாம் திடுக்கிட வைத்துவிட்டது” என்று பாராட்டும், வருத்தமும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது “நம் நாடு” தின இதழ் சென்னை 7-12-56 தேதியில்.

ஐயோ! நம் தலைவர் மறைந்துவிட்டார்

ஐயோ! இவ்வளவு விரைவிலேயே இம்மாதிரி தலையங்கம் எழுத நேர்ந்ததே. எத்தனையோ தலையங்கங்களிலும், மலர்களிலும், சாதாரண இதழ்களிலும் உயிரோடு இருக்கும்போதே அந்த மாபெரும் தலைவர் பற்றி எழுதி இறுமாந்து, பெருமிதம் அடைந்து, பெருமை அடைவோம் என்று எண்ணிய எண்ணத்தில் மண் விழுந்து விட்டதே! நம் தலையில் பேரிடி விழுந்து விட்டது இவ்வளவு திடீரென்று விழுமா?

மறைந்த செய்தி கேட்ட நிமிடத்தில் இருந்து அழுது அழுது நம் கண்ணீர் ஆறாகப் பெறுகிறதே. 8 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏங்கி ஏங்கித் தேம்பித் தேம்பிக் கதறி அழுகிறார்களே! இந்தக் கோரச் செய்தி – தாங்க முடியாத துயரச் செய்தி இதற்குள்ளாகவா காதில் விழவேண்டும்; இதற்குள்ளாகவா

இயற்கை நம் தலைவரை சிறிதும் இரக்கமில்லாமல் பறித்துக் கொண்டு செல்ல வேண்டும் நம்மை பதற விட்டு, நம்மை அனாதைகளாக ஆக்கி என்று ஆதிகுடி மக்கள் அலறி துடிக்கிறார்களே.

தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப் பெருந்தலைவர், இரட்சகர் (saviour) என்று பேச்சுக்காக, ஒப்புக்காக, மரியாதைக்காக, மிகைப்படுத்திக் கூறுவதல்லவே, உலகத்தில் உள்ள அத்தனை அறிஞர்களும், உலகமே இந்தியாவே ஒப்புக்கொள்ளும் உண்மையாயிற்றே – நூற்றுக்கு நூறு உண்மையாயிற்றே! தாழ்த்தப்பட்ட மக்கள் சரித்திரத்தில் தனி சகாப்தம் (Era) அவர் பிறப்பால் ஏற்படும் நிலைக்கு உயர்ந்த உத்தம தலைவர் ஆயிற்றே; விடுதலை வீரர் (Liberator) ஆயிற்றே, டாக்டர் அண்ணல் அம்பேத்கார்.

தாழ்த்தப்பட்ட சமூக மக்களே! பாலகனாகப் படிக்கும்போதே தாழ்த்தப்பட்ட தம் இனத்தின் கீழ்நிலை இழிநிலை கண்டு கண்ணீர் விட்ட நம் தலைவர் மறைந்துவிட்டார்!

உலகில் பல பிரபல பல்கலைக்கழகங்களில் படித்து அறிஞர் உலகமே வியக்கும் வண்ணம் மாபெரும் பட்டங்கள் பெற்ற நம் தலைவர் மறைந்து விட்டார்!

நீதிமன்றங்களில் நேர்மைக்கும் நீதிக்கும் வாதாடி வழக்கறிஞர் உலகத்தின் பாராட்டை பெற்றவரும் சட்டக் கல்லூரித் தலைமை பேராசிரியராக இருந்தவரும் ஆகிய சட்ட விற்பன்னர் நம் தலைவர் அண்ணல் அம்பேத்கார் மறைந்து விட்டார்!

தாழ்த்தப்பட்ட நம் மக்கள் சமூகத்தில் விடுதலையடைய, முன்னேற, உரிமையுடன், வளமுடன் வாழ 40 ஆண்டுகள் அல்லும் பகலும் ஆரியருடனும் அவர்தம் தாசர்கள் ஆகிய ஜாதி இந்துக்களுடனும் சளைக்காது போராடிய நம் தலைவர் மறைந்து விட்டார்!

வட்டமேசை மாநாட்டில் இந்தியாவுக்கே – குறிப்பாக இந்துக்கள் அனைவரும் ஏகத் தலைவராகப் பிரசாரம் செய்யப்பட்ட, இன்று உலகத் தலைவர் என்று கருதப்படுகின்ற காந்தியடிகளை எதிர்த்து, “தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பிரதிநிதி – தலைவன் நான்; எம் இனத்தை அடிமையாக்கி, கொடுமை செய்து வரும் காட்டுமிராண்டி இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாகிய நீர் எம் இனத்திற்கும் பிரதிநிதி என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது?” என்று சிங்கமெனக் கர்ஜித்து காந்தியாரையும் பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் தனி இனம் என ஒப்புக்கொள்ளும்படி செய்த நம் ஒப்பற்ற ஒரே தலைவர் மறைந்து விட்டார்!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மன்னர் சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித்தொகுதி முறையை எதிர்த்து எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியடிகளுக்கு உயிர்ப் பிச்சை அளிக்கும்படி கண்ணீர் விட்டுக் கேட்ட காங்கிரஸ்காரர்களுக்கு இணங்கி பொதுத்தொகுதி முறை ஒப்பந்தமாகிய பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த உத்தமர், நம் தலைவர் மறைந்துவிட்டார் நம்மைத் தவிக்கவிட்டு!

சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராகி, அரசியல் சட்டக் குழுவின் தலைவராக இருந்து குடியரசு இந்திய அரசியல் வகுத்த அந்தச் சிற்பி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேண்டிய உரிமைகள் அத்தனையும் அரசியலில் இடம் பெறும்படி செய்த நம் மாபெரும் தலைவர் நம்மை அலற விட்டு மறைந்துவிட்டார்! புத்த மார்க்கம் இந்நாட்டில் பரவ – அதற்குத் தனி மதிப்பு ஏற்பட தகுந்த வழி இந்திய அரசாங்கமே பௌத்த மார்க்கத்தை மதிக்கும்படி செய்ய வேண்டும் என்று யோசித்துப் பௌத்த சின்னங்களை இந்திய அரசியல் சின்னங்களாகச் செய்த பௌத்த மார்க்க மறுமலர்ச்சி தந்தை – நம் தலைவர் மறைந்துவிட்டார்!

இந்து சமுதாய பெண்களின் இழி நிலைக்கண்டு இறங்கி அந்த இழிநிலையை ஒழிக்க வழி கண்டு, இந்து சட்டச் சீர்திருத்த மசோதாவைத் தீட்டி, அந்த மசோதா தம் கண் முன்னாலேயே இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இந்துச் சமூகப் பெண்கள் சம உரிமை பெற்றதைக் கண்டு மகிழ அந்தச் சீர்திருத்த செம்மல் – நம் தலைவர் மறைந்து விட்டார்!

இந்து மதம் திருந்தாது; இந்துக்கள் திருந்த மாட்டார்கள்; ஆகையால் தம் மக்களுடைய இழிவுகள் ஒழியாது; தம் மக்கள் சமத்துவ நிலையை அடைய முடியாது என்று உணர்ந்து, “நான் இந்துவாக சாகமாட்டேன்” என்று சூளுரைத்த அந்த மகான் – புனித பகுத்தறிவு மார்க்கமாம் பௌத்த மார்க்கத்தை இலட்சக்கணக்கான தம் இன மக்களுடன் தழுவி தம் இனத்திற்குப் பிரகாசமான வழியைக் காட்டியுள்ள அந்தப் புனிதர் பகுத்தறிவாளர் – நம் இனத்தின் ஈடு இணையற்ற தலைவர் மறைந்துவிட்டார் நம்மையெல்லாம் சோகக்கடலில் ஆழ்த்திவிட்டு!

இதே மாதம் 16ஆம் தேதி பம்பாயில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பௌத்த மார்க்கத்தில் சேர்க்கவிருந்த அந்தச் செயல் வீரர் – நம் தலைவர் மறைந்து விட்டார்!

 புத்த மார்க்கம் பரவ பொற்களஞ்சியமாக – ஆராய்ச்சி நிலையமாக – கருவூலமாக உதவக்கூடிய நூல்களை எழுதி முடித்து அச்சில் இருக்கும் இந்தச் சமயம் அதற்கு முகவுரை எழுதி முடித்த இரவு அந்த இலட்சிய புருஷர் – நம் ஏகத் தலைவர் மறைந்து விட்டார் நம்மை அழுதுகொண்டே இருக்கவிட்டு!

தாழ்த்தப்பட்ட இன படித்த சகோதரர்களே! நம் தலைவர் இந்த உலகில் தோன்றிய எந்த மகானோடும் ஒப்பிடத் தகுதியுள்ளவர்! அஞ்சாநெஞ்சர் நம் இன மக்களின் உரிமைக்காகப் போராடி உழைத்து உரிமை பெற்றுத் தந்தவர்! அதனாலேயே உடல் நலம் குன்றி உருமாறியவர், கல்வியின் கரை கண்டவர், ஆராய்ச்சி களஞ்சியம், பகுத்தறிவு மேதை, அண்ணல் அம்பேத்கார்! அவரால் நம் இனம் பெற்றுள்ள பெருமைக்கு அளவில்லை.

நம் தலைவர் நமக்கு வாங்கித் தந்துள்ள உரிமைகளை அனுபவித்துக்கொண்டு, சுயநல வாழ்வு வாழப் போகிறோமா? அல்லது அவரது திருவடிகளைப் பின்பற்றி அவர் கொடுத்துள்ள உணர்ச்சி, ஊக்கத்துடன் முடிந்த அளவாவது தன்னலமற்ற சேவையின் மூலம் நம் இனத்தாரை ஈடேற்ற முழு விடுதலை அடையச் செய்யப் போகிறோமா? அவரது புனிதக் கொள்கைகளை நம் மக்களிடம் எடுத்துக்கூறி, இழிதன்மைகளே ஒன்று திரண்ட இந்து மதத்தைவிட்டு வெளியேறி பௌத்தர்களாகப் போகிறோமா? அல்லது மான ஈனமில்லாமல் வயிறு கழுவினால் போதும் என்று காலத்தைக் கழிக்கப் போகிறோமா?

முன்னவைதான் நம் இலட்சியம் எனக் கொண்ட நம் சமூகக் காளைகள், வீரர்கள், தொண்டர்கள் இலட்சக்கணக்கில் உண்டு என்பதே நமது நம்பிக்கை.

நம் தலைவர் கோரிக்கையை நிறைவேற்ற எத்தனை பேர் புத்த மார்க்கத்தில் சேரத் தயார் என்று பம்பாய் ராஜ்ய ஷெடியூல்ட் வகுப்பு சம்மேளனத் தலைவர் திரு.கெயிக்வாட் கேட்டதும் 50,000 மக்கள் கைத் தூக்கி, பின் டாக்டரின் சடலம் எரியூட்டப்பட்டதும் அதே இடத்தில் புத்த மார்க்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் என்றால், நாம் மேலே கூறியிருப்பது போல அண்ணலின் அடிச்சுவட்டைப் பின்பற்ற எண்ணற்ற நம் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

தாழ்த்தப்பட்ட சமூக தன்மான சகோதரர்களே! நீங்கள் ஓர் உண்மையை என்றும் மறக்கக்கூடாது. அது என்ன? இந்த நாட்டில் சாதிகள் உள்ளவரையில் நம் இனத்திற்குத் தனிக்கட்சி. நாம் விடுதலைப் பெற, முன்னேற தனிக் கிளர்ச்சிகள் தேவை என்பதுதான் அந்தக் கட்சி ஷெட்யூல்ட் வகுப்பு பெடரேஷன் என்பதுதான்; இதைத் ‘தொண்டு’ ஆரம்ப நாள் முதற்கொண்டு கூறிவந்துள்ளது.

ஆகையால், அண்ணல் அம்பேத்கார் இலட்சியம் நிறைவேற ஷெட்யூல்ட் வகுப்பு சம்மேளனத்தைப் பலப்படுத்துங்கள்; புத்தர் கொள்கையை நம் இனத்தார் வீடு தோறும் கூறுங்கள்; பௌத்த மார்க்கத்தில் நம் சமூக மக்கள் இலட்சக்கணக்கில் சேரத்தக்க முயற்சியை இன்றே மேற்கொள்ளுங்கள். என்பதே நமது துக்கத்தில் தோய்ந்த வேண்டுகோள்.

டாக்டர் வீட்டாருக்கு நம் இனத்தாரோ, நாமோ அனுதாபம் கூற வேண்டுமா? அனாதையாக அழுது தவிக்கும் நமக்கல்லவோ அவர்கள் ஆறுதல் கூற வேண்டும்.

ஷெ.வ. உத்தியோகஸ்தர்களின் அனுதாபக் கூட்டம்

9ந்-தேதி டாக்டர் அம்பேத்கார் மாணவர் இல்லத்தில் தோழர் வ.வீராசாமி வி.றி தலைமையில், தம் இன மக்களின் தனிப்பெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கார் பிரிவால் வேதனையுற்ற ஷெ.வ. உத்தியோகஸ்தர்கள் கூடினர். திருச்சி மாவட்டக் கல்வி அதிகாரி திரு. நி.வேதகன், தோழர்கள் C.P.தங்கராஜ், பொன்னுசாமி, D.T.ராஜன் ஆகியோர் டாக்டரின் அளவிடற்கரிய அரும்பணிபற்றிப் பேசினர். திரு R.வரதப்பன் அவர்கள் அனுதாபத் தீர்மானத்தை வாசித்து, டாக்டரின் சேவையைப் பாராட்டி தகுந்த நினைவுச் சின்னம் நிறுவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார், எல்லோரும் ஆமோதித்து எழுந்து நின்று அண்ணல் அம்பேத்காருக்கு அஞ்சலி செய்தனர்.

ஆதி மக்களின் அறிவு விளக்கு அணைந்தது

டாக்டர் B.R. அம்பேத்கார் அவர்கள் பிரிவுக்கு 15 தினங்கள் துக்க நாளாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுசரிக்க வேண்டும்.

தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் பொதுச் செயலாளர் வேண்டுகோள்

ஆம்பூர் 7, தலம் -56.

 அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத் தலைவர், அறிவின் ஜோதியான அண்ணல் அம்பேத்கார் அவர்களின் அகால மரணத்தைப் பற்றி தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச்செயலாளர் திரு K.M.சாமி அவர்கள் கீழ்கண்ட அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ளார்.

இந்தியாவிலுள்ள 10 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவர் ஆருயிர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களை இழந்து விட்டோம், மக்கள் யாவரும் தந்தை

இல்லா பிள்ளையாகி விட்டனர். அவர் மரணத்தைக் கேட்டு உலகமே திடுக்கிட்டுவிட்டது. அவர் இந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், என்றும் சுதந்திரமாக வாழ அரசியல் திட்டத்தை வகுத்துக் கொடுத்ததையும், பூனா ஒப்பந்தத்தின் போது மகாத்மா காந்தியாரின் உயிரைக் காப்பாற்றிய பெருந்தகைமையையும், இந்நாடு என்றும் மறவாது. அவர் பிரிவு தாழ்த்தப்பட்டோரின் ஏமாற்றமாகும், ஒரு காலத்தில் நந்தனாரையும் ஒரு காலத்தில் திருவள்ளுவரையும் இந்நாடு இச்சமூகத்தில் உதிக்கும்படி செய்தது. இவ்விருவதாம் நூற்றாண்டில் அறிவின் சிகரம் அம்பேத்காரை தந்திருந்தது, இதன் பின்னால் யாரை தருமோ? அறிவின் விளக்கு அணைந்து விட்டது.

அண்ணாரின் குடும்பத்தாருக்கும், அவர் பிரிவால் வாடும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும், என் துக்கமான அனுபவத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மறைவுக்காக 15 தினங்களை துக்கத் தினமாகத் தமிழ்நாட்டில் உள்ள எல்லா சம்மேளனமும் சமூக மக்களும் கட்சி கொடியைத் தாழ்த்திவிட்டு 15-1-57ஆம் தேதி வரை அனுஷ்டிக்க வேண்டிக் கொள்கிறேன்.

பெரியார் பயிற்சிப்பள்ளி மூடப்பட்டன

அண்ணல் அம்பேத்கார் மறைவு குறித்துத் துக்கம் தெரிவிக்கும் பொருட்டு திருச்சியில் நடந்து வரும் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி 7ஆம் தேதி மூடப்பட்டது.

அண்ணல் மறைவுக்கு

திருச்சியில் துக்க ஊர்வலமும் பொதுக்கூட்டமும்

7ஆம் தேதி மாலை 5:45 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து திரு. T.P.வேதாச்சலம் அவர்கள் தலைமையில், மௌன ஊர்வலம் புறப்பட்டுப் பெரிய கடை வீதி வழியே வந்து நகர்மன்ற மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் அண்ணல் அம்பேத்கார் படம் மாலையால் அலங்கரிக்கப்பட்டுத் தொண்டர்கள் ஏந்தி வந்தனர். ஷெடியூல்டு வகுப்பு பெடரேசன் தோழர்களும், திராவிடக் கழக தோழர்களும், டாக்டர் அம்பேத்கர் மாணவர் இல்ல மாணவர்களும், நிர்வாகிகளும், பழங்குடிப் பெண்களும் கலந்து கொண்டனர். கருப்புக்கொடியும், திராவிடர் கழகக் கொடியும் பிடித்து வரப்பட்டன. கடைத்தெருவே துக்கமயமாக இருந்தது.

அண்ணலின் மறைவுக்குத் துக்கம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திரு V.P.பிச்சை அவர்கள் தலைமையில் நடந்தது திரு. T.V.P. அவர்கள் மறைந்த தலைவர் டாக்டரின் பேரறிவு செயலாற்றும் திறன், தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமை பெற அவர் செய்த கிளர்ச்சி முதலியன பற்றி குறிப்பிட்டு டாக்டரின் மகத்தான சேவைகளைப் பாராட்டி, அவர் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டம் எனக் கூறினார். பின் திருவாசகர் சிற்றம்பலம் M.L.A, சிங்காரம், ராமச்சந்திரன், D.T.ராஜன், வீராசாமி M.P. ஆகியோர் பேசிய பின்பு தோழர் பிரான்ஸிஸ் துக்கம் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்ததும் மக்கள் எழுந்து மௌனமாக நின்று வருத்தமுடன் கலைந்து சென்றனர்.

அந்தோ மறைந்தார்

(திருமழபாடி – திருமுகம்)

ஒரே ஒரு தலைவர் இருந்தார் – அவரும்
உருக வைத்தே அந்தோ மறைந்தார் – நமக்கு (ஒ)
வரார் இனி அந்தோ பிறந்தார் – பம்பாய்
வாரிதியின் கரையினிலே எரிந்தார் – நமக்கு (ஒ)
இராப்பகல் எக்காலம் உழைத்தார் பல
எதிர்ப்புகளிலும் தப்பி பிழைத்தார்
பிரான் புத்தர் சமயத்தை புரிந்தார் அண்ணல்
பி.ஆர். அம்பேத்காரே எரிந்தார் நமக்கு (ஒ)
பெறோம் அந்தத் தலைவரைப் போல அப்படிப்
பிறப்பவர்கள் யார் புவி மேலே?
சிறார் தேம்பி அழுவதைப் போலே – நாம்
செயல் மறந்தே அயற விட்டாரே – நமக்கு (ஒ)

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – தம்பி
எப்படி பொறுக்கவல்லோம் மனம் வெதும்பி?
பாடுபடும் தொழிலாளர் குரல் எழுப்பி இந்தப்
பாரதத்தின் கண்திறந்தார் நிறம்முழக்கி
பட்டணத்தில் வாழ்வோரும் பதவியிலிருப்போரும்
பழங்குடிமக்கள் நலன் பாராரே யானாலும்
கெட்டழிந்தோர் வாழ்வு பெற கிளர்ச்சிகள் பலசெய்து
எட்டுத் திசையும் முரசு கொட்டும் அண்ணல் இறந்தது.

அண்ணல் அம்பேத்கார் மறைந்த செய்தி கேட்டு

பம்பாய் மக்கள் துயரம்; பழங்குடி மக்கள் பதறினர்;

 தொழிலாளர்கள் வெளியேறினர்

40 ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு உணர்ச்சியூட்டி கேந்திர ஸ்தானமாக விளங்கிய பம்பாய் நகரமே துக்கத்தில் ஆழ்ந்தது அந்த உரிமைப் போராட்டத்தின் புரட்சித்தலைவர் டாக்டர் அம்பேத்கார் டெல்லியில் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும் பம்பாய் வாழ் பழங்குடி மக்கள் அழுதனர்; கண்ணீர் விட்டனர்; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தனர்.

இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொழிற் கட்சியை ஆரம்பித்தவர் டாக்டர் அம்பேத்கார். தொழிலாளர் நலனுக்காக அரும்பாடு பட்டவர்; தான் மத்திய சர்க்கார் தொழில் அமைச்சராக இருந்தபோது தொழிலாளர் நலன்களுக்காக, நல வாழ்வு முன்னேற்றத்திற்குப் பல சட்டங்களை இயற்றியவர்,

பல திட்டங்களை நிறைவேற்றியவர். ஆகையால் பம்பாய் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் – குறிப்பாக பழங்குடி தொழிலாளர்கள் செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டனர்; ஸ்தம்பித்து நின்றனர் வேலை செய்வதை நிறுத்தி தங்கள் தலைவர் மறைவை தாங்காமல் கண்ணீர் விட்டு கதி கலங்கியவராய், கைகளைப் பிசைந்து கொண்டு வெளியேறினார்.

பாபாசாகேப் இறந்த செய்தியை பம்பாயில் வதியும் பழங்குடி தொண்டர்கள் நகரெங்கும் ஒலிபரப்பி மூலம் தெரிவித்தனர். டாக்டர் ஸ்தாபித்த சித்தார்த்தர் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் டாக்டர் அம்பேத்காருக்கு மரியாதை செலுத்தும் முறையில் கல்லூரியை மூடினார்கள்.

டாக்டர் அம்பேத்காரின் மரணச் செய்தி பம்பாய் வாசிகளைத் திடுக்கிட செய்தது. ஆயிரக்கணக்கில் மில் தொழிலாளர்கள் வேலையை நிறுத்தி அனுதாபம் தெரிவித்தனர். “பாபாசாஹிப்” என்று அவர்களால் பிரியமாய் அழைக்கப்பட்டு வந்த அம்பேத்காரின் மறைவு செய்தி பம்பாய்வாசிகளை ஆழ்ந்த துக்கத்திலாழ்த்தியது,

கல்லூரிகள் மூடப்பட்டன

டாக்டர் அம்பேத்கார் துவக்கி வைத்த சித்தார்த்தர் கல்லூரியும் நேற்று மூடப்பட்டது.

பம்பாய் கார்ப்பரேஷன் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு அம்பேத்கார் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தது.

நாகபுரியில் துக்கம்

நாகபுரி நகரசபை ஒத்திவைக்கப்பட்டது. ஆபீஸ்கள், பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மூடப்பட்டன.

புத்த சீடர்கள்

அண்மையில் டாக்டர் அம்பேத்காருடன் புத்தநெறியை இரண்டு இலட்சம் பேர் தழுவியது நினைவிருக்கலாம்.

பஞ்சாலைத் தொழிலாளர்களான அவர்கள் ஆயிரக்கணக்கில் மௌனமாக ஊர்வலம் வந்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் திரு.பரமேசுவரன்

தமிழ் நெறி அமைச்சர் திரு.பி.பரமேசுவரன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு டாக்டர் அம்பேத்கார் செய்த சேவை உலகறிந்த தொன்றாகும் என்று சொல்லி தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

தலைவர்கள் துக்கம்

டாக்டர் அம்பேத்கார் மறைவு குறித்துத் துக்கம் தெரிவித்து அனுதாபச் செய்திகள் அனுப்பியுள்ள ஸ்தாபனங்களும் தலைவர்களும்:-

புதுதில்லி கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டி, தமிழ்நாடு செட்டியூல்டு வகுப்பு சம்மேளனம், இமாச்சலப் பிரதேச லெப்ட்னெண்ட் கவர்னர் பஜ்ரங்க பகதூர் சிங், இந்து மகா சபைத்தலைவர் என்.சி.சட்டர்ஜி எம்பி, திரு.பி.ஜி.கேர், திரு.வி.டி.சாவர்க்கர், திரு.படாஸ்கர், பேராசிரியர் டி.ஆர்.மே.கதில்கார், பம்பாய் கவர்னர் திரு.எம்.சி.சாக்ளா ஆகியோர் அனுதாபச் செய்தி அனுப்பியுள்ளனர்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத்

அண்ணல் அம்பேத்கார் மறைவுக்கு அனுதாபம்

இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் கீழ்க்கண்ட அனுதாபச் செய்தியை டாக்டர் அம்பேத்கார் மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

டாக்டர் அம்பேத்காருடைய திடீர் மரணம் இந்திய பொதுவாழ்வில் இருந்து ஒரு மாபெரும் மனிதரை அப்புறப்படுத்திவிடுகிறது. நமது அரசியல் சட்டத்தின் சிற்பி அவர். பொதுத் தொண்டுகள் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் பட்டபாடுகள் அளவிடற்கரியவை. அன்புடன் என்னுடைய மிகுந்த உண்மையான அனுதாபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். தங்களுடைய வருத்தம் எண்ணற்ற நம் நாட்டு மக்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று நான் சொல்வதைத் தயவு செய்து நம்புங்கள்.

டாக்டர் அம்பேத்கார் மறைவுக்கு

தோழர் இரா.நெடுஞ்செழியன் அனுதாபம்

தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கும் நலத்திற்கும் அயராது அரும்பாடுபட்டு அரிய நன்மைகள் பல ஆற்றி வந்த மாபெரும் தலைவரும், இந்திய துணைக் கண்டத்தில் உள்ள முக்கியமான சில அரசியல் பேரறிஞரில் ஒருவரும், சிறந்த பகுத்தறிவாதியுமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்கள் திடீரென இயற்கை எய்திய செய்தி கேட்டுத் திடுக்குற்றேன். அவரது ஈடு செய்ய முடியாத இழப்பு, ஆறா துயரத்தையும் தருகிறது. அவரைப் பிரிந்து வருந்தும் உற்றார், உறவினர், நண்பர் ஆகியோருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– இரா.நெடுஞ்செழியன்
பொதுச்செயலாளர் தி.மு. கழகம்

அறிவகத்தில்

டாக்டர் அம்பேத்காரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையமான ‘அறிவக’த்தில் கொடி தாழப் பறக்கவிடப்பட்டது.

டாக்டர் அம்பேத்கார் மாணவர் இல்லம் துயரத்தில் ஆழ்ந்தது

திருச்சி டி.ச.6

இன்று பிற்பகல் அகில இந்திய ரேடியோ அண்ணல் அம்பேத்கார் மரணச் செய்தியை அறிவித்ததும் திருச்சியில் கடந்த 12 ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக நடந்து வரும் டாக்டர் அம்பேத்கார் மாணவர் இல்லம் துக்கமயமாக மாறியது. மாணவர்கள், இல்லச் செயலாளர் V.வீராசாமி, வார்டன் M.தங்கவேலு, சமையல்காரர்கள் யாவரும் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு துக்கத்தில் ஆழ்ந்தனர். மாணவர்கள் கண்ட கண்ட இடத்தில் கண்ணீரும், கம்பலையுமாக அசைவற்று நின்றனர். பலர் தரையில் விழுந்து தம் தலைவர் மறைந்த செய்தியைத் தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர் பெருகி தாரைதாரையாக வடித்திருந்தனர். மற்றும் சிலர் தலைகளைக் குப்புறப்போட்டு உட்கார்ந்து கண்ணீர் வடிய இருந்தனர்.

மாலை 6:00 மணிக்கு மாணவர்கள் அண்ணல் அம்பேத்கார் மறைவுக்குத் துக்கம் தெரிவிக்கக்கூடினர். செயலாளர் வீராசாமி அடக்க முடியாத அழுகையுடன், “தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப் பெருந்தலைவர் அண்ணல் அம்பேத்கார் இந்த நாட்டில், தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்திராவிட்டால் நாம் விடுதலை அடைந்திருக்க மாட்டோம். நம் விடுதலைக்காக 40 ஆண்டுகள் போராடி வெற்றிகண்ட அந்த மாபெரும் தலைவர் மறைந்து விட்டார். எழுந்து நின்று துக்கம் தெரிவியுங்கள்” என்று கூறியதும் மாணவர்கள் கோவென்று கதறி விட்டனர். பின் எழுந்து மௌனமாக நின்று மறைந்த தலைவர் அம்பேத்காருக்கு மரியாதை செய்தனர். எல்லா மாணவர்களும் மற்றவர்களும் துக்க அறிகுறியாகக் கருப்பு துணி அணிந்திருந்தனர். மணி அடிப்பது பெயரெடுப்பது நிறுத்தப்பட்டது.

டாக்டர் மறைந்த செய்தி திராவிடக் கழகத் தோழர்களுக்குத் திடுக்கிடும் செய்தியாக இருந்தது. பலர் சோகமே உருவாகக் காணப்பட்டனர். திராவிடர் கழகத் தலைவர் திரு T. P.வேதாச்சலம் 7ஆம் தேதி மாலை மௌன ஊர்வலத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் உடனே ஏற்பாடு செய்தார். தோழர் பிரான்ஸிஸ் தம் இனத் தலைவர் இறந்த செய்தியைத் தாங்க மாட்டாமல் கண் கலங்கியவராய் மௌன ஊர்வலம் கூட்டம் நடத்த வேண்டிய காரியங்களைச் செய்தார்.

டாக்டர் அம்பேத்காரின் மறைவு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய சிற்பியான டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். மூன்று நாட்களுக்கு முன்பு வரை பாராளுமன்றத்தின் கூட்டங்களில் கலந்துகொண்டு நாட்டின் சட்டம் இயற்றும் அலுவல்களில் முக்கிய பங்கு கொண்ட இவர் திடீரென்று காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் அம்பேத்கார் ஒரு பெரும் அறிஞர். இவர் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் ஆகிய நாடுகளில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுப் பலப்பட்டங்களைப் பெற்றவர், தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த இவர் எந்த வகுப்பில் பிறந்தவரும் உயர்ந்த கல்வியை அடையலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

இவர் ஒரு சிறந்த அறிஞர் மட்டுமின்றிப் புகழ்வாய்ந்த சட்ட மேதையுமாவார். பல உயர்ந்த பதவிகளை வகித்து இந்த நாட்டிற்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு கவர்னர் – செனரலின் நிருவாகக் குழுவின் தொழிலாளர் துறை அமைச்சராகவும் இந்தியா விடுதலை அடைந்த பின்பு சட்ட சபை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு கொண்டு பெரும் புகழடைந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினரை உயர்நிலைக்குக் கொண்டுவர பெரும்பாடுபட்டார். பொதுவாக, சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க இவர் பெரும் முயற்சி செய்தார். இந்தியாவின் பல முக்கிய சட்டங்களை இயற்றுவதற்கு இவர் உறுதுணையாக இருந்தார். இந்துச் சட்டத்தின் சீர்திருத்தத்திற்கும் இவர் பெரும் பாடுபட்டார்.

நாட்டில் மக்களாட்சி நன்முறையில் நடைபெறுவதற்கு இவரைப் போன்று தம் கருத்தைத் துணிவுடன் எடுத்துக் கூறுபவர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஆளும் கட்சி தக்க முறையில் நிருவாகத்தை நடத்துவதற்கு இன்றியமையாத தேவையான வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கு டாக்டர் அம்பேத்காரைப் போன்ற அறிஞர்கள் பலர் இருப்பது மிகவும் வேண்டற்பாலது.

இத்தகைய ஒரு பெரியாரின் மறைவு நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்துக்கே ஒரு பெரும் இழப்பாகும்.

– தொண்டு, 15.4.1957

 அம்பேத்கார் மரணம் நாடெங்கும் அனுதாபம்

தொழிற்சாலைகள் ஹர்த்தால் நகர சபைகள் ஒத்திவைப்பு

செய்தி கேட்ட இளைஞர்கள் மூர்ச்சையற்று விழுந்தனர்

பம்பாய், டிசம்பர் 7

புதுடில்லியில் நேற்றுக் காலமானார் டாக்டர் அம்பேத்கார். உடல் பிரத்தியேக விமான மூலம் இன்று காலை டில்லியில் இருந்து பம்பாய்க்குக் கொண்டுவரப்பட்டது.

சாந்தா குருஸ் விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கிய போது, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குழுமியிருந்தனர். திருமதி அம்பேத்காரும் உடன் வந்திருந்தார்.

வட பம்பாய் தாதரிலிருக்கும் டாக்டர் அம்பேத்காரின் வீட்டிற்கு அவரது உடல் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காரில் எடுத்துச் செல்லப்பட்டது.

பம்பாய் பிரதேச தாழ்த்தப்பட்டோர் வகுப்பு சம்மேளனத்தின் தலைவர் திரு ஆர்.டி.பாண்டே, பாரதிய புதிய சமாஜத்தின் செயலாளர் திரு பி.எஸ்.கெக்வாட், பம்பாய் சட்டசபை அங்கத்தினர் திரு. எம்.வி.டாண்டி, பம்பாய் சட்டசபை அங்கத்தினர் திரு. பி.சி.காம்பில் மற்றும் சித்தார்த்தர் கல்லூரியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் முதலானோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

படுக்கப்போகும்போது சுகமாக இருந்தார்

நேற்று காலை மறைவுற்ற டாக்டர் பீமராவ் ராம்ஜீ அம்பேத்கருக்கு வயது 63. சிறிது காலமாகவே உடல் நலக்குறைவுற்றிருந்தார். ராஜ்யசபை அங்கத்தினரான இவர் செவ்வாய்க்கிழமை கூட்டத்திற்கு வந்திருந்தார். நள்ளிரவில் படுக்கப் போகும்போது அவரது உடல்நிலையில் எவ்வித கோளாறும் தென்படவில்லை. ஆனால். நேற்று அதிகாலை வழக்கப்படி தேநீர் கொண்டு சென்ற போது இவர் இறந்துவிட்டது தெரிந்தது.

மந்திரிகள் மரியாதை

காலம் சென்ற பிரமுகர் டாக்டர் அம்பேத்காருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பிரதமர் நேரு நேற்று பிற்பகல் அலிப்பூர் சாலையில் உள்ள அம்பேத்காரின் இல்லத்திற்குச் சென்றிருந்தார். தபால் தந்தி மந்திரி ஜகஜீவன் ராமும், மற்ற மந்திரிகளும் ராஜ்ய சபை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் உட்பட பிரமுகர்கள் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். இவரது இறப்புச் செய்தியறிந்ததும் ராஜ்யசபை, மக்கள் சபை ஆகிய இரண்டும் இந்திய அரசியல் தொகுப்பிற்கு முக்கிய பொறுப்பாளியான டாக்டர் அம்பேத்காருக்கு மரியாதை செய்யும் வகையில் ஒத்திவைக்கப்பட்டன.

சபையின் உறுப்பினர் யாராவது காலமானால் சபையின் விதிகளின்படி சபைக் கூட்டத்தைச் சிறிது நேரமே ஒத்திவைக்க உரிமை இருக்கிறது. ஆனால், இவர் ஒப்பற்ற அரசியல் மேதை என்பதற்காக இரு சபைகளின் நேற்றைய கூட்ட நடவடிக்கைகள் பலவும் நிறுத்தப்பட்டு நேற்றைய கூட்டத்தையும் அத்துடன் முடித்துக் கொண்டு சபையை ஒத்தி வைத்தனர்.

இளைஞர்கள் மூர்ச்சை அடைந்தனர்

டாக்டர் அம்பேத்காரின் மரணச் செய்தி வெகு விரைவில் நகரம் பூராவும் பரவிற்று. உடனே கடைகளும் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. ஷோலாப்பூர் பத்திரிகை அலுவலகத்திற்குச் செய்தி விசாரிக்கச் சென்ற ஹரிஜன இளைஞர் சிலர் அலுவலகத்திற்கு முன் மயங்கி விழுந்தனர். சுமார் 1500 பேர் ஊர்வலமாக நகரின் பல பாகங்களின் வழியாகச் சென்றனர். ஊர்வலத்தில் தொழிலாளர்கள், மாதர்கள், சிறுவர்கள், முதலியோர் சேர்ந்து கொண்டனர். ஊர்வலத்திற்குப் பின் நடந்த பொதுக்கூட்டத்தில் எல்லாக் கட்சித் தலைவர்களும் டாக்டர் அம்பேத்காரின் சேவையை வெகுவாகப் பாராட்டினர்.

ஆமதாபாத்தில் 40 மில்கள் முடக்கம்

ஆமதாபாத் டிச 6

அம்பேத்காரின் மரணச் செய்தி கேட்டு ஹரிஜன மில் தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறினர். அதன் காரணமாய் 66 மில்களில் 40 மில்கள் மூடப்பட்டன. முதல் ஷிப்டில் வேலை செய்து கொண்டிருந்த அரிஜனத் தொழிலாளர்கள் செய்தி கேட்டவுடன் வேலையை விட்டு வெளியேறினர் என்றும் இரண்டாவது ஷிப்ட் செல்ல வேண்டியவர்கள் செல்லவில்லையென்றும் ஆமதாபாத் மில் தொழிலாளர் சங்க அறிக்கை ஒன்று கூறுகிறது. நகரில் உள்ள ஆலைகள் சுமார் 25 ஆயிரம் ஹரிஜனங்கள் வேலை செய்வதாக தெரிகிறது.

தானாவில் ஹர்த்தால்

தானா, டிச 6

 அம்பேத்காரின் மரணச் செய்தி கேட்டு உல்லன் மில் தொழிலாளர் வேலையை விட்டு வெளியேறினர். இன்று மாலையில் சில பள்ளிகள் மூடப்பட்டன. தானா முனிசிபல் சுகாதாரத் தொழிலாளர்கள் தங்களுடைய தினசரி அலுவல்களை ரத்து செய்து விட்டனர். அதன் பின் நடந்த பொதுக் கூட்டத்தில் அம்பேத்கார் சேவையைப் பாராட்டியும் அவரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர்

பம்பாய் நகர சபை கூட்டம் ஒத்திவைப்பு

பம்பாய் டிச 6

இன்று நடந்த கார்ப்பரேஷன் கூட்டத்தில் எல்லாக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்களும் அம்பேத்காரின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்தனர். அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றும் பொழுது அங்கத்தினர்கள் எழுந்து சிறிது நேரம் மௌனமாய் நின்றனர். டாக்டர் அம்பேத்கார் தன்னுடைய வாழ்க்கையை பம்பாயில் ஆரம்பித்தார் என்று மேயர் சொன்னார். அம்பேத்காரின் மரணத்தினால் நாடு திறமைசாலியையும் நிர்வாகத்தில் வல்லவருமான ஒருவரை இழந்துவிட்டது என்று அவர் கூறினார். அதன் பின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நாகபுரியில் ஹர்த்தால்

நாகபுரி டிச 6

நாகபுரி ஜவுளி மில்கள் பீடி தொழிற்சாலைகள், பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல கடைகள் டாக்டர் பி.ஆர். அம்பேத்காரின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கும் பொருட்டு மூடப்பட்டன.

அம்பேத்காருடன் சமீப காலத்தில் புத்த மதத்தில் சேர்ந்த அவருடைய தோழர்கள் கருப்பு சின்னம் அணிந்து துக்கப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஒரு ரிக்ஷாவில் அம்பேத்காரின் ஒரு உருவப் படத்தை வைத்து நாகபுரியுன் பிரதான வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.

கஸ்தூரிப் பூங்காவில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. பல கட்சிகளின் தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கு எடுத்துக்கொண்டு மறைந்த பெருந்தலைவரின் லட்சியத்திற்காக பாடுபட உறுதியளித்தனர்.

லிதர்பா சாகித்ய சங்கத்தின் சார்பில் நடத்தப்படவிருந்த நாடகக்கலை விழா இன்று ஒத்திவைக்கப்பட்டது. சங்கத்தில் அம்பேத்காரின் மறைவு குறித்து வருத்தம் தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகபுரி நகராண்மை கழகம் இன்று இரண்டு நிமிடம் மௌனம் சாதித்ததுடன் கலைக்கப்பட்டது.

அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் பொது காரியத்தரிசி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டாக்டர் அம்பேத்காரின் மறைவு இந்நாட்டுக்கே ஒரு பெரும் நஷ்டம் ஆகும் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அம்பேத்கார் விட்டுச்சென்ற வேலையாகிய சமுதாயத்தால் நசுக்கப்படுபவர்களுக்காக உழைப்பதில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

– நவ இந்தியா

டாக்டர் அம்பேத்காருக்கு இறுதி மரியாதை

சவ ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்

பம்பாயில் மில்கள் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டன

(விடுதலையில் வெளிவந்த விபரம்)

பம்பாய் டிச. 8

டாக்டர் அம்பேத்காரின் சடலத்துக்கு இறுதி மரியாதை நேற்று பம்பாய் வாசிகளால் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் உடன் சென்றனர்.

தொழில் நிலையங்கள் யாவும் மூடப்பட்டன தொழிலாளர்கள் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கல்வி நிலையங்கள் எல்லாம் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூடப்பட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

அறிஞர் அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் மறைவால் எங்கு நோக்கினும் துக்கத்தில் ஆழ்ந்த மக்களே காணப்பட்டார்கள். அவர் இறந்த ஏக்கத்தால் சிலர் விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் மயங்கி விழுந்தனர்.

தாராவி

தாராவி தாழ்த்தப்பட்டோர் பெடரேஷன் சமூக நல சேவா சங்கம்.

தெ.இ.ஆதி திராவிட மகாஜன சங்கம் ஆகிய ஸ்தாபனங்கள் சார்பில் மாபெரும் ஊர்வலம் 1-30 மணிக்கு புறப்பட்டு சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டது.

ஊர்வலம்

வடக்கு பம்பாயில் உள்ள அம்பேத்கார் இல்லமான ராஜ கிருகத்திலிருந்து பிற்பகல் 2 மணிக்கு சவ ஊர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறந்த காரில் சடலம் குங்கும நிறத்துணியில் போர்த்தப்பட்டு இருந்தது. புத்தர் சிலையொன்றும் அருகில் வைக்கப்பட்டிருந்தது. துக்கத்திலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடிவிட்டனர். பரேல் பகுதியில் வந்ததும் பல லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டனர்.

வாய்விட்டு அழுதனர்

மயானம் வரை 5 மைல் தொலைவிற்கும் இரு மருங்கிலும் மக்கள் திரண்டு நின்று தங்கள் தலைவருக்கு இறுதி வணக்கம் தெரிவித்தனர். பூமாரி பொழிந்தனர், மலர் குவியலை அடிக்கடி நீக்க வேண்டியிருந்தது, அனேகர் வாய்விட்டுக் கதறி அழுதனர்.

கருப்புச் சின்னங்கள்

வண்டிக்குப் பின்னால் புத்த பிச்சுகள் வாசனை தூப கலயங்களை ஏந்திச் சென்றனர். அம்பேத்காரின் மனைவியும் மகன் யசுவந்தராவும் உடன் சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருப்புச் சின்னம் அணிந்து கொண்டு அமைதியாகச் சென்றனர்.

”பாபாசாஹிபின் பரிநிர்வாணம்” என்று பொறிக்கப்பட்ட படுதாக்களைப் பலர் ஏந்திச் சென்றனர்.

பிரேத அடக்கம்

மூன்று மணிக்கு மாபெரும் ஊர்வலம் லால்பாக், பரேல், வொர்லி வழியாகச் சென்று ஐந்து மணிக்கு தாதர் சிவாஜி பார்க் சமீபம் உள்ள மயானத்தில் சடலம் எரியூட்டப்பட்டது.

கூட்டத்தில் லட்சோப லட்சம் மக்கள் கலந்து கொண்டனர் நகரின் எல்லைக்கு அப்பால் கல்யாண், பொரிவிவி, வீரார், கர்ஜத்கஜரா, பூனா முதலிய பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. மயானத்தில் பெரிய மணல்மேடு அமைத்து அதன் மீது சந்தன கட்டைகள் அடுக்கி சடலத்தைக் கிடத்தி சுமார் 7 மணிக்கு எரியூட்டப்பெற்றது.

புத்தநெறி தவழ உறுதி

அங்கு கூடியிருந்த மக்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புத்தநெறியைத் தவழ உறுதி எடுத்துக் கொண்டனர்.

இரவெல்லாம் துயரம்

முன்னாள் இரவு 2 மணிக்கு சடலம் டில்லியிலிருந்து விமானம் மூலமாக பம்பாய் வந்து சேர்ந்ததும் ராஜ கிருகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விமான நிலையத்திற்கும் அம்பேத்கார் இல்லத்திற்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இரவெல்லாம் கண் விழித்து நின்று காத்திருந்து துயரப்பட்டனர். தலைவர் உடலைக் கண்டு வணங்கி இறுதி மரியாதை தெரிவித்தனர்.

அதிகாரிகள் மரியாதை

பம்பாய் கவர்னர் முதல் அமைச்சர்கள் உட்பட அநேக பிரமுகர்கள் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டன. அநேக அரசியல் கட்சித் தலைவர்களும் தொழில் சங்க பிரமுகர்களும் இல்லத்துக்கு வந்து துக்கம் தெரிவித்தனர்.

அமைச்சர் ஜெகஜீவன் ராம்

மத்திய அமைச்சர் திரு. ஜெகஜீவன் ராம் டாக்டர் அம்பேத்கார் மரணச் செய்தி கேட்டுத் திடுக்கிட்டுக் கூறியதாவது:-

ஷெட்யூல்டு வகுப்பினர் பிரச்சினையில் நாங்கள் ஒருமித்த கருத்துடையவர்கள் ஆயிருந்தோம். அவர் பிரிவு அதிதுக்கத்தை அளிக்கிறது. ஒரு சிறந்த அறிஞரை இழந்து விட்டோம் என்றார்.

பம்பாய் முதலமைச்சர்

பம்பாய் முதலமைச்சர் திரு. சவால் அனுதாபம் கூறுகையில் தாழ்த்தப்பட்டவர் நலன் காணப் போராடிய மாவீரரை இழந்து விட்டோம் சிறந்த மேதையை, இந்திய அரசியல் சிற்பியை, பம்பாயின் தலைசிறந்த புதல்வரை இழந்தது பெரும் நஷ்டம் என்றார்.

திரு.கக்கன் துயரம்

தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் திரு. கக்கன் தீண்டாமையை ஒழித்த மேதையை இழந்து விட்டோமே என்று துயரப்பட்டார்.

திருமதி. மீனாம்பாள் சிவராஜ்

தாழ்த்தப்பட்ட 6 கோடி மக்களுக்கும் ஓயாது போராடிய சிறந்த தலைவர் மறைந்தாரே என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கம் ஒளி மங்கியதே என்றும் சொன்னார்.

உலகம் போற்றும் அறிஞரின் மறைவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றித் திராவிட மக்களுக்கும் பெரும் கஷ்டமாகும் என பொ.தொல்காப்பியம் வருத்தம் தெரிவித்தார்.

m m m

தொண்டு (1.1.1957) இதழில் அம்பேத்கரின் தொண்டர்களுக்கு ஓர் அறிக்கை விடப்பட்டது அதில் “டாக்டர் அம்பேத்கர் பெயரை சாதாரணமாகக் குறிப்பிடும்போது பழங்குடித்தோழர்கள் பாபாசாஹிப் என்ற அடைமொழி சேர்த்து பாபாசாஹிப் அம்பேத்கார் என்று வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பாபாசாஹிப் என்றாலே போதும். அண்ணல் அம்பேத்காரை பின்பற்றும் தோழர்கள் கடிதம் எழுதும்போது கடிதத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெய்பீம் (வாழ்க அம்பேத்கர்) என்று எழுதும்படியும் கேட்டுக்கொள்கிறோம்” இது பாபாசாஹிப்பின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றுக்கும் மரியாதைக்கும் ஒரு சான்று.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!