அம்ரிதா ஷெர் கில்: இந்திய ஓவியங்களின் கலாச்சார பீடங்களை உடைத்தெறிந்த எரிநட்சத்திரம்

இளவேனில்

பின்காலனிய இந்திய ஓவியங்களின் வரலாறு: 2

முதலாம் உலக யுத்தம் ஐரோப்பிய நிலத்தில் தொடங்குவதற்கான சூழல்கள் புகைந்துகொண்டிருந்த நாட்களில், புடாபெஸ்ட் நகரத்தில் ஹங்கேரிய தாய்க்கும், சீக்கிய தந்தைக்கும் மகளாகப் பிறந்த அந்தக் குழந்தை இந்திய ஓவியக்கலையின் திசையியக்கத்தை மாற்றியவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். ‘இந்தியாவின் ஃபிரிடா காலோ’ என்றழைக்கப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் வாழ்ந்த இரண்டு கலை ஆளுமைகள், பெண்களுக்கு எதிரான அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் கலையிலும் வாழ்விலும் உடைத்தெறிந்த கிளர்ச்சியாளர்கள் என்பதைத் தாண்டி அம்ரிதா ஷெர் கில்லின் வாழ்வும் கலையும் வேறு ஒன்றானது.

தான் வாழ்ந்து மறைந்த குறுகிய 28 ஆண்டுகளில், இந்திய ஓவியங்களில் அம்ரிதா உருவாக்கிய பெண் அடையாளங்கள் இன்றுவரை இந்திய ஓவியக்கலை மட்டுமல்லாது, மற்ற கலைவெளிகளிலும் பிரதிபலிக்கிறது. ஹங்கேரியில் பிறந்து, பாரிஸ் நகரத்தில் கலையைப் பயின்றிருந்தாலும், அவரின் ஓவியங்களை இந்திய ஓவியங்கள் என்று சொல்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில், அவர் ஓவியங்கள் இந்திய நிலத்தின் ஆன்மாவையே பிரதிபலித்தன.

பல புனைசுருட்டுகளையும், பரபரப்புகளையும் தாண்டி அம்ரிதாவின் வாழ்வு இரண்டு அம்ரிதாக்களால் நிரம்பியது. துணிச்சலும், காதல்களும், சர்ச்சைகளும் நிரம்பிய ஒரு வாழ்வையும்; தனிமையும், மனச்சோர்வும், உறவுச் சிக்கல்களும், நோயும் நிறைந்த இன்னொரு வாழ்வையுமே அவர் வாழ்ந்தார். மேலும் அம்ரிதாவின் வாழ்வும் கலையும் இறுதிவரை ஒன்றெனவே கலந்திருந்தன.

ஐரோப்பியத் தாக்கங்கள் நிரம்பிய ஆரம்ப கால ஓவியங்களைப் பின்-உணர்வுப்பதிவிய (Post-Impressionism) ஓவியங்களாக வரையத் தொடங்கினார். அவற்றில் ஹங்கேரிய நிலப்பரப்பும் ஐரோப்பிய மனிதர்களும் சூழ்ந்திருக்கின்றனர். தனது கலையின் ஆரம்ப நாட்களிலேயே புகழை அடைந்திருப்பினும், சுயத்தின் அடையாளங்களைத் தேடிய பயணத்தில் இந்திய நிலத்துக்கு மீண்டும் திரும்பினார்.

1937க்குப் பிறகான அவரின் ஓவியங்கள் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகளாக மாறின. கிடைக்கும் தகவல்களின்படி மொத்தம் 143 ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. அவற்றில் 60க்கும் மேலானவை தன்னோவியங்களாக (self-portrait) இருக்கின்றன. 143 ஓவியங்களில், பின்வரும் சில ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 

  • மூன்று பெண்கள் (Three Girls)
  • மணப்பெண்ணின் குளியலறை (Bride’s Toilet)
  • பெண்களின் வேலிக்குள் (In the ladies enclosure)
  • நிர்வாணம் (Nude)
  • கட்டிலின் மீது படுத்திருக்கும் பெண் (Woman on charpai)
  • ஹங்கேரிய ஜிப்ஸி பெண் (Hungarian Gypsy Girl)
  • மஞ்சள் தொப்பி அணிந்திருக்கும் அம்ரிதா
  • ஆதி கதை சொல்லி (Ancient Story Teller)
  • இந்தியத் தாய் (Mother India)
  • மலைக் காட்சி (Hill Scene)
  • கிராமத்துக் காட்சி (Village Scene)
  • தஹிடியனாக தன்னோவியம் (Self Portrait as Tahitian)

பழுப்பும், சிவப்பும், காவியும், பச்சையும் நிரம்பிய அம்ரிதாவின் கித்தான்கள் இந்திய மனிதர்களாலும், தன் உடலாலும் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, இன்றுவரை அனைவராலும் நினைவுகூரப்படும் ‘மூன்று பெண்கள்’ ஓவியம் இந்த நிறங்களின் அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கும். ‘மணப்பெண்ணின் குளியலறை’ ஓவியமும் இதே வண்ணக் கூறுகளைக் கொண்டிருக்கும்.

வண்ணங்களாக மட்டுமல்லாது இந்த இரண்டு ஓவியங்களும், ‘கட்டிலின் மீதிருக்கும் பெண்’ ஓவியமும், இந்திய நிலத்தின் பெண்ணிய அடையாளங்களை முன்வைப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு இடையேயான சகோதரத்துவத்தைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. இவை அனைத்தையும் தாண்டி, இந்தியப் பெண்களின் புறவுலக இருப்பைப் பிரதிபலிக்கும் ‘in the ladies enclosure’ ஓவியம் அழகியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கிறது.

பெண்களின் அன்றாடப் பொழுதுகளை வெளிப்படுத்தும் அவரின் பெரும்பான்மையான ஓவியங்கள், அதன் வழியாக பெண் உணர்வுகளை, உறவுகளை, ஆனந்தங்களை வெளிப்படுத்துபவையாக இருக்கின்றன.

தனது வாழ்வைப் போலவே தன்னோவியங்களிலும் பெண் உடலையும், உணர்வுகளையும் அணுகிய அம்ரிதாவின் ஆடைகள் களைந்த பெண் உடல்கள், இந்தியக் கலாச்சார வெளிகளில் அதிர்வுகளையும் விமர்சனங்களையும் உண்டாக்கியிருக்கும் என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை. தன்னோவியங்கள் வழியாகப் பெண் உடலின் விடுதலையைத் தேடினார்.

தன்னோவியங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தஹிடியன் (Tahitian) தன்னோவியம், ஓர் ஆணின் கரிய நிழல் மீது வரையப்பட்டிருக்கும் பெண்ணுருவம், ஆண் பார்வையில் வெளிப்படும் சதைப் பண்டமாக இல்லாமல், ஆணாதிக்கம் உருவாக்கும் அத்துமீறல்களை, வன்முறையை, உறவுச் சிக்கல்களை வெளிப்படுத்தும் படைப்பாகவே இருக்கிறது.

அம்ரிதா வரைந்த நிர்வாண மனிதர்களும் உடலியல் நுகர்வு பண்டங்களாக இல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் இரத்தமும் சதையுமான உயிர்களாகவே வெளிப்படுகிறார்கள். இதையே அம்ரிதா குறித்து எழுதிய கட்டுரையில் மஹிமா சர்மா, “அம்ரிதா அசலான நிர்வாண ஓவியர்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘நிர்வாணம்’ எனும் தலைப்பில் அவர் வரைந்த மனித உடல்கள், சமூக அறங்களைத் தகர்க்க விரும்பும் மனித மனதின் வெளிப்பாடுகளாவே இருக்கின்றன.

தன்னோவியங்கள் மட்டுமல்லாது தனது நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என்று அவர் வரைந்த உருவப்படங்கள், அம்மனிதர்கள் உடனான தனது உறவினைப் பிரதிபலிப்பவையாக வெளிப்படுகின்றன.

பின்காலனிய இந்திய ஓவியங்களின் அடையாளமான அபனிந்திரநாத் தாகூரின், ‘இந்தியத் தாய்’க்கு மாற்றான ஓர் இந்தியத் தாயைத் தனது ஓவியங்களில் முன்வைத்த அம்ரிதாவின் ‘இந்தியத் தாய்’ மத, தேசிய ஆடம்பரங்களற்ற பழுப்புத் தோலுடன் பிள்ளைகளை ஏந்தி, ஏக்கமான கண்களுடன் காட்சித் தரும் இந்தியக் கிராமத்துப் பெண்ணாக வெளிப்படுகிறார். அபனிந்திரநாத் தாகூரின் தேசியப் பெருமிதத்துக்கு எதிரான விமர்சனமாகவே அம்ரிதாவின் ‘இந்தியத் தாய்’ ஓவியம் இருக்கிறது.

ஓவியங்களைத் தாண்டிய அம்ரிதாவின் வாழ்வு அவர் மரணிக்கும் வரை சர்ச்சைகள் நிரம்பிய ஒன்றாகவே இருந்தது. தனது உணர்வுகளை, காதலை, காமத்தை என்று அனைத்தையும் பொதுவெளியில் வெளிப்படையாக முன்வைப்பதில் எந்தத் தயக்கமும் இல்லாதவராகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார். அவரது ஓவியங்களைப் போலவே, அவர் வாழ்வும் எந்தச் சமூக அனுசரிப்புகளும் இல்லாத, கலாச்சாரப் பீடங்களை உடைந்தெறிந்த எரிநட்சத்திரமாக மிளிர்ந்து மறைந்தது. அந்த நட்சத்திரத்தின் தாக்கம் இன்றுவரை இந்தியக் கலைகளில் வெளிப்படுகிறது.

நூல் பட்டியல்

  1.  அம்ரிதா ஷெர்-கில்: மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்த இந்திய கலையின் பெருமை, மஹிமா சர்மா
  2.  அம்ரிதா ஷெர்-கில்: தன்னோவியங்கள் மற்றும் கடிதங்கள், விவியன் சுந்தரம்
  3.  அம்ரிதா ஷெர்-கில்: ஒரு வாழ்வு, யசோதரா டால்மியா

(தொடரும்…)

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!