சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்கள் சார்ந்து தமிழ் இலக்கியத்தில் உண்டாகியிருக்கும் தாக்கங்கள் முக்கியமானவை. அத்தாக்கத்தை ஏற்படுத்தியதில் தலித் எழுத்துகளுக்குப் பிரதானமான இடமுண்டு. அந்த வகையில் தலித் அடையாளத்தோடு தமிழில் வந்த ஆரம்பப் படைப்புகளில் ஒன்றாக பாமா எழுதிய கருக்கு நாவலைக் (1992) குறிப்பிடலாம். அந்நாவலுக்கு முன்பே முன்னோடி படைப்புகள் வெளிவந்துவிட்டிருந்தன என்றாலும் தலித் என்னும் தீர்மானகரமான சொல்லாடலோடு வெளியானது கருக்கு நாவல்தான். நெடிய தமிழிலக்கிய மரபில் கருக்கு உண்டாக்கிய இடையீடு பாரதூரமானது. அதேபோலத் தமிழில் தலித் படைப்புக்கான உதாரணமாக அமைந்த இந்நாவல் ஆங்கிலத்திலும் இவ்வாறே அறிமுகமாகிப் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
கருக்கைத் தொடர்ந்து சங்கதி, வன்மம், மனுஷி என மொத்தம் நான்கு நாவல்களும், ஒரு தாத்தாவும் எருமைமாடும், தவுட்டுக் குருவி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 2000-ஆம் ஆண்டில் கிராஸ்வேர்ட் புக் விருதை பெற்றிருக்கும் பாமா பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை நீலம் பத்திரிகையின் முதல் இதழுக்காக சந்திக்க அணுகினோம். கொரோனா அச்சம் சூழ்ந்த பேரிடர் காலத்தில் மனம் உவந்து நேரிலேயே அழைத்து உரையாடலுக்கு இசைந்தார்.
கேள்வி: பெண்கள் பொதுவாகவே ஒடுக்கப்படுகிறவர்களாக இருக்கிற போது, தலித் பெண்ணியம் என்றொரு வகைமையை உருவாக்க வேண்டிய அவசியம்தான் என்ன? பெண்ணியச் சட்டகத்திற்குள் தலித் பெண்களின் வாழ்வை அடக்கிவிட முடியும்தானே?
பாமா: பொதுவாகவே பெண்களுக்குப் பிரச்சினை இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இந்த ஆணாதிக்கச் சமூகத்தால் பெண்கள் அவதிப்படுகின்றனர் . உலகத்திலுள்ள பெண்களுக்குப் பொதுவான பிரச்சினை என்னென்ன இருக்கிறதோ அத்தனையும் தலித் பெண்களுக்கும் உண்டு. ஆனால் தலித் பெண்களுக்குக் கூடுதலான சவால்கள் நம் சமூகத்தில் இருக்கின்றன. வர்க்கச் சுரண்டலும் பாலின ஒடுக்குமுறையும் பெண்களின் பொதுப் பிரச்சினை, இவற்றிலிருந்து தலித் பெண்களுக்குக் கூடுதலாகச் சாதியும் சேர்ந்துகொள்வதால் மூன்று விதமான நெருக்கடிக்கு தலித் பெண்கள் ஆளாகிறார்கள். மற்ற ஒடுக்குமுறையை விட சாதியானது வக்கிரமான. உக்கிரமான ஒடுக்குமுறையை நிகழ்த்துகிறது. அதனால்தான் தலித் பெண்ணியம் என்று தனியாகப் பேசவேண்டிய கட்டாயம் எழுகிறது. தலித் பெண்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் வேறானது. தலித் ஆண்களின் ஆணாதிக்கத்தை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் பிற சாதிப் பெண்கள் தலித் பெண்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். தலித் ஆணுக்குப் பொதுச் சமூகத்தில் நிகழும் ஒடுக்குமுறையால் ஏற்படும் மனஅழுத்தத்தால் அதே ஒடுக்குமுறையை வீட்டிற்குள் நிகழ்த்திக் காட்டுகிறான். உடலுழைப்பால் ஏற்படும் வலி, சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட மன அழுத்தம் போன்றவற்றைப் போக்கிக்கொள்வதற்காக ஆண் குடியை நாடிப் போகிறான். குடியினால் குடும்பச் சூழலுக்குள் பிரச்சினை உண்டாகிறது. முதலாளிகளையும் நில உடமையாளர்களையும் எதிர்க்க முடியாமல் வீட்டிலிருக்கும் பெண்களிடம் தன் சக்தியைக் காட்டுகிறான் இதனால் அவன் அழிவது மட்டுமன்றி பெண்ணும் குடும்பமும் சேர்ந்து அழிகிறது . இத்தகையப் பின்னணியுடன் அணுகிப் பார்க்கும்போது ‘தலித் பெண்ணியம்’ என்கிற அடிக்கோடிடிடுதல் எவ்வளவு முக்கியமென்று தெரியும்.
கேள்வி: இந்த பதிலின் நீட்சியாக சங்கதி நாவலை முன்வைத்துக் கேட்கிறேன் . தலித் பெண்கள் இத்தனை ஒடுக்குமுறையை அனுபவித்தாலும் அவர்களிடம் ஒரு மூர்க்கம் வெளிப்படுவதை அந்நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களினூடாக அனுமானிக்க முடிந்தது. ஒருபக்கம் ஒடுக்குமுறை. இன்னொருபக்கம் முரட்டுத்தனம். இந்த முரணையும் உள்ளடக்கியதுதான் தலித் பெண்ணியம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
பாமா: நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கையின் மீதிருக்கும் தீராத வேட்கையால் விதிக்கப்பட்ட இந்த வாழ்வை அவர்கள் வாழ்ந்தாகத்தான் வேண்டும். தலித் பெண்கள் அதிகமாய்க் கெட்ட வார்த்தைகள் பேசுவதாகச் சொல்லுகிறார்கள் , அதிகாரத்தை எதிர்ப்பதற்கு மொழியை விட வேறு ஆயுதம் அவர்களிடம் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட சங்கதி நாவலிலேயே சொல்லி இருப்பேன், தலித் அல்லாதோர் குடும்பத்தில் பெண்கள் வீட்டிற்குள் அடி உதை வாங்கிய பின் வெளியில் வரும்போது அமைதியாக வருவார்கள். அதுதான் பாவனை. இன்னொரு-முறை சொல்கிறேன் நவீனப் பெண்ணியப் பார்வையில் இருந்து நாம் தனியாக தலித் பெண்ணியத்தை அணுகவேண்டும். மேலும் ஒரு தலித் பெண்ணாக நான் இத்தனை ஆண்டுகாலம் தனியாக இருப்பதற்கு உத்வேகம் கொடுப்பதும், ஊக்கம் கொடுப்பதும் தலித் பெண்களின் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும்தான்.
கேள்வி: உங்களுடைய வன்மம் நாவலில் இரண்டு சமூகங்களின் பிரச்சினைகளை உள்ளூர் யதார்த்தத்தோடு பதிவு செய்திருக்கிறீர்கள். அவ்வாறே பயணிக்கும் நாவலின் இறுதிப் பகுதி மட்டும் யதார்த்தத்தில் இருந்து விலகி ஒரு லட்சியவாத முடிவை நோக்கி நகர்ந்து அவ்விதமாகவேமுடிந்தது. அது படைப்பாளரின் விருப்பமா அல்லது கள யதார்த்தமா?
பாமா: அந்த நாவல் கற்பனையானதல்ல. அது முழுக்க நிஜத்தில் நிகழ்ந்தது. பல பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படை-யிலானது. நாவலில் குறிப்பிடப்பட்டது போலவே மிக உக்கிரமாக இரண்டு தரப்பிலும் வெட்டிச் சாய்த்துக்கொண்டனர். சமகாலப் பிரச்சினை என்பதால் அதை யாரும் துணிந்து எழுதவில்லை. ஆனால் நான் எழுதினேன். அத்தனை பிரச்சினைக்கிடையே பஞ்சாயத்து தேர்தல் வந்தபோது ஒரு சமரசம் உருவானது, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நாயுடுகள்தான் வெற்றி பெற்று வந்தனர், அதுவும் பள்ளர் பறையர் சமூகங்களின் ஆதரவோடு. இதை ஏன் நாம் நாயுடுகளுக்கு விட்டுத்தர வேண்டுமென்று பள்ளர்களும் பறையர்களும் கூட்டாகச் சேர்த்து தீர்மானமாக ஒரு முடிவெடுத்து அந்தத் தேர்தலில் பள்ளர் ஒருவரை நிற்க வைத்து வெற்றியும் பெற்றார்கள். இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பது என் விருப்பமானாலும் நாவலில் சொல்லப்பட்டவை நிஜத்தில் நடந்தது, அது லட்சியவாதமல்ல. அதில் சொல்லப்பட்டது கொஞ்சம்தான். வாழ்வைத் தொலைத்தவர்களும் ஊரிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்களுமெனச் சொல்லப் படாதவை ஏராளம்.
கேள்வி: பாமாவின் படைப்புகளில் கழிவிரக்கம் மிகுந்திருப்பதாகச் சில விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாமா: இறகுகள் வெட்டப்பட்ட பறவையைப் போல இருக்கிறேன். பறக்க ஆசைப்படுகிறேன் ஆனால் முடியவில்லை என்று கருக்கு நாவலில் எழுதியிருப்பேன். அந்நேரத்தில் வாழ்க்கையைக் குறித்த நிச்சயமற்ற தன்மை என்னை வதைத்தது. வாழத் தெரியாத ஒரு நிலைமை . என்ன செய்வது என்று தெரியாத காலம். அதனால் கருக்கு நாவலில் அப்படி வந்திருக்கலாம். நான் இயல்பில் முடங்கிக் கிடப்பவள் அல்ல, ஆகையால் அது திட்டமிட்ட கழிவிரக்கமல்ல. அதிகாரத்திற்கெதிராகக் குரல் கொடுக்கும் சண்டைக்காரியாகத்தான் இருக்கிறேன். சொல்லப்போனால் கருக்கைத் தவிர்த்த மற்ற படைப்புகளில் நீங்கள் குறிப்பிடும் கழிவிரக்கம் இருக்காது. கருக்கு நூலக வெளியிடும் திட்டத்தோடு எழுதப்பட்டதல்ல ஆனால், சங்கதி உள்ளிட்ட பிற படைப்புகள் நூலாக்கவேண்டும் என்கிற திட்டத்தோடுதான் எழுதப்பட்டது. அதுதான் இப்படியொரு வேறுபாடு அமையக் காரணமாக இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
கேள்வி: உங்கள் படைப்புகளின் மொழிவடிவம் பெரும்பாலும் கதைகூறலாக இருக்கிறது, அதை நீங்கள் திட்டமிட்டு தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?
பாமா: கருக்கு நாவலை மக்கள் மொழியிலேயே எழுதிப் பார்த்தேன். பேச்சு மொழிதான் பல்வேறு உணர்வுகளைக் கடத்தக் கூடியதாக இருந்தது. என் எழுத்துகளைக் கொச்சையான மொழி, பச்சையான மொழி, இலக்கியத் தரமற்றது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன . அது குறித்து எனக்குக் கவலையில்லை. அந்த மொழிதான் எனக்கு நெருக்கமாக இருந்தது. இதயத்திலிருந்து வந்த மொழி என்றும் பலர் சொல்லியிருக்கிறார்கள். செவ்வியல் மொழி அல்லது இலக்கிய மொழி என்று சொல்லப்படுகின்ற வடிவத்தில் நாடகத்தன்மை இருப்பதாக உணர்கிறேன். அதற்காகச் செவ்வியல் மொழியில் எழுதவே எனக்கு வராது என்பதல்ல, சில சிறுகதைகளை உரை நடையில் எழுதிப் பார்த்திருக்கிறேன். காலங்காலமாக இலக்கியம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற வரைறையை முன்வைக்கும் போது அதை மீறிப் பார்க்கத் தோன்றியது. இலக்கியம் என்பதற்கான பழைய வரையறைகளை உடைத்து மீற வேண்டும். அதுதான் இலக்கியம் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டிருப்பதற்கான வழியும் கூட.
கேள்வி: தலித் புனைவுகளில் யதார்த்தக் கதைகளை வட்டார மொழியில் எழுதும்போது வாசகனுக்குக் கற்பனைக்கான சாத்தியம் குறைந்துபோகிறது. யதார்த்த வாழ்வை எழுதும் போதும் கதைகள் ஆவணத் தன்மை கொண்டதாக மாறக்கூடிய சாத்தியம் இருக்கிறது அல்லவா?
பாமா: வாய்ப்புகள் இருக்கிறது அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் எல்லாக் கதைகளிலும் அப்படி வரப்போவதில்லை. படைப்பை எழுதுகிறவனின் சு+ழலைப் பொறுத்துதான் அது அமையும். ஒரு பொதுவான சட்டகத்தை வைத்துக்கொண்டு அதிலிருந்தே எல்லோரும் எழுதுகிறார்கள். அத்துமீறல் நிகழவேண்டும். என்னுடைய கிசும்புக்காரன் கதையில் வேலை முடித்து கூலியைப் பெறுவதற்காக முதலாளி வீட்டிற்குச் சென்ற தலித்தை முதலாளி பலவாக வேலை வாங்குவார். கடைசியாக முதலாளி உனக்கு என்ன வேண்டுமென்று கேட்க அதற்கு அவன் ‘உங்க பொண்டாட்டிய கூட்டிகிட்டு வாங்க மாறி மாறி பழகுவோம்‘ என்பான். இதுதான் அவனுடைய எதிர்வினை. என் கதையைப் படித்த பெண்கள் என்னிடம் கேட்டார்கள். பெண்ணாய் இருந்துகொண்டு பெண்ணியம் பேசிக்கொண்டு இப்படி எழுதலாமா என்றனர். உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் கனலில் இப்படியான மொழியமைப்பைத்தான் உருவாக்க முடியும். இதை இலக்கிய நயத்தோடெல்லாம் எழுத முடியாது. பதிப்பகத்தார் அந்தக் கதையைத் திருத்தம் செய்திருந்தது என் அண்ணன் ராஜ்கௌதமன் சொல்லித்தான் எனக்குத் தெரியும், அவர்தான் முன்னுரை எழுதியிருந்தார். பிறகு அடுத்த பதிப்பில் சரி செய்தோம். உருவாக்கிய சட்டகத்திற்குள்ளிருந்தெல்லாம் எழுத முடியாது. வலிக்கும் வாழ்க்கைச் சு+ழலுக்கு வாய்க்கும் மொழியில்தான் என் போன்றவர்கள் எழுத முடியும். “பாதையில பரட்டச் செடி பதப் போல பூக்கும் செடி” என்கிற நாட்டுப்புறப் பாடல் எங்கள் ஊரில் உண்டு. பரட்டச் செடி என்கிற சொல்லை இலக்கிய விவரிப்புகளுக்காக “இலைகளைப் பரப்பிக்கொண்டிருக்கும்” – என்று எழுதுவர். பரட்டச் செடி என்கிற சொல்லுக்கான அழகியலும் அந்தச் செடியின் வடிவம் பற்றியான விளக்கமும் அதிலேயே அடங்கிவிடுகிறது, வேறு எப்படி எழுதிப் பார்த்தாலும் வராது. பகட்டுத் தனம் என்பது தலித் இலக்கியத்தில் இல்லை.
கேள்வி: வட்டார வழக்கைக் கொண்டு எழுதப்பட்ட உங்கள் படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான எழுத்துக்களை மொழிபெயர்-க்கும்போது மூல மொழியிலுள்ள ஆன்மா சிதையாமல் காப்பாற்றப்படுமா?
பாமா: என் படைப்புகளை மொழிபெயர்ப்பது கடினம்தான். கருக்கு நாவலை லட்சுமி ஹோம்ஸ்டாம் என்பவர் மொழிபெயர்த்தார். நல்ல மொழிபெயர்ப்பாளர். வட்டார வழக்கு மிகுந்திருக்கும் படைப்புகளை மொழி பெயர்க்கும்போது தமிழிலுள்ள ஆன்மா குறையாதவாறு மொழிபெயர்க்க முடியாது. ஆனால் என் மொழிப்பெயர்ப்பாளர் லட்சுமி அவர்கள் அதில் தொன்னூறு விழுக்காடு வெற்றி அடைந்திருக்கிறார் என்பதில் எனக்கு மன நிறைவுண்டு. என்னுடைய சிறுகதையை மாலினி என்பவர் மொழிபெயர்த்தார். ஆங்கிலம் எனக்குப் பரிச்சயமானதால் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.
கேள்வி: தொன்னூறுகளுக்கு முன்பே தலித்துகள் எழுதியிருந்தாலும் தலித் என்கிற அடையாளத்தோடு எழுத வந்தது அப்போதுதான். உங்களுக்குப் பிறகு எழுத வந்த தலித் எழுத்தாளர்கள் சிலர் தலித் இலக்கியம் என்று வகைமைபடுத்தக் கூடாதென்று சொல்லி வருகிறார்கள், அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாமா: நாம் எழுதுவது இலக்கியம் மட்டும்தான். ஆனால் பொதுச் சமூகம்தான் தலித் இலக்கியமென்று வகைமைப்படுத்துகிறது. பெண்ணிய இலக்கியம், குழந்தை இலக்கியம் கறுப்பிலக்கியம் என்று பல வகைமைகள் உண்டு. தலித் இலக்கியமென்று அடையாளப்-படுத்தப்படுவதால் மட்டுமே இங்கு நாம் தனிமைப்படுத்தப்படுவதில்லை, தனிமைப்-படுத்த தலித் என்கிற காரணமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. தலித்தென்று சொல்வதிலோ தலித் இலக்கியம் என வகைமைப்படுத்துவதிலோ எனக்குத் தனிப்பட்ட சிக்கல் எதுவும் கிடையாது. அதே போலப் பொது நீரோட்டத்திற்குள் செல்லவும் நான் முயன்றதில்லை. எனினும் என்னை ஓரத்திற்குத் தள்ளவும் முடியாது. என் இடத்தை நானே முடிவு செய்வேன். ஒரு தலித் பெண்ணாக இருந்து நான் எழுதுவதை முன் முடிவோடு அணுகுகிறவர்களின் பிரச்சினை குறித்து நான் கவலைப்படுவதில்லை.
கேள்வி: இலக்கிய வாசிப்பு உங்களுக்கு எவ்வாறு அறிமுகமானது. எழுத வேண்டுமென்கிற உந்துதல் உருவாகக் காரணம்?
பாமா: எனக்கு உந்துததலாக என் அண்ணனும் எழுத்தாளருமான ராஜ்கௌதமனைத்தான் சொல்லவேண்டும். அவர்தான் எங்களுக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார். அவர் நூலகத்தில் இருந்து எடுத்துவரும் நூலைத்தான் நாங்களும் படிப்போம். ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றோரை அவர் வழியாகவே வாசித்திருக்கிறேன். அண்ணனே எழுதக்கூடியவர்தான், அவர் எழுதுவதை எங்களிடம் வாசிக்கக் கொடுப்பார். நான் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதுவேன். கல்லூரி படித்த காலத்தில் என் படைப்புகள் கல்லூரி மலரில் பிரசுரமாயின . நான் எழுதிய கவிதைகள் என் நண்பர்களின் பெயரிலும் பிரசுரமாகின. முதல் நூலாக வெளிவந்தது கருக்குதான், அதையும் நூலாக வெளியிட வேண்டுமென்கிற திட்டத்தோடு எழுதவில்லை, எப்பொழுதெல்லாம் மனம் தொந்தரவுக்குள்ளானதோ அப்போதெல்லாம் எழுதுகிற பழக்கம் என்னிடம் உண்டு. எழுதுவதும் எழுதியதைக் கிழிப்பதுமாக இருந்திருக்கிறேன். என்னுடைய துயரங்களைக் குறித்து ஃபாதர் மாற்கு ஸ்டீபனிடம் சொல்லும்போது அவர் அப்படியே அதை எழுதச் சொன்னார். ஆறுமாத காலம் எழுதினேன். எழுதியதைப் படித்துப் பார்க்கும்போது எனக்கே விசித்திரமாக இருந்தது. அவர்தான் கருக்கை நூலாக்க முயற்சி எடுத்தார் . நான் வேண்டாமென மறுத்தேன். ஃபாதர் மாற்கு ஒரு எழுத்தாளரும் கூட. அவர் திருச்சியிலுள்ள பேராசிரியரிடம் நான் எழுதியதைக் காட்டினார். அந்தப் பேராசிரியர் குப்பைகளையெல்லாம் புத்தகமாக்கப் போகிறீர்களா எனத் தூக்கி எறிந்தார். மதுரை ஏசு சபை ஃபாதர்களின் சமூகச் சேவை நிறுவனமான ஐடியாஸ் கருக்கு நாவலை வெளியிட்டது . அப்போது அதன் விலை 12 ரூபாய் .வெளியிட்ட பத்தாண்டுகள் வரை சிற்சில விமர்சனங்கள் வந்தன. ஆக்ஸ்போர்ட் பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகுதான் கருக்கு நாவல் உலகம் முழுக்க கவனம் பெற்றது . அந்த உந்துதலில் தொடர்ந்து எழுதத் துவங்கினேன்.
கேள்வி: உங்கள் எழுத்துலகத்திற்கு உத்வேகமாக இருந்த உங்கள் அண்ணன் ராஜ் கௌதமனின் படைப்புகளில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பாக எதைச் சொல்வீர்கள்?
பாமா: வாழ்வின் வலிகளை தன் படைப்புகளினூடாக பகடியால் கடந்து போகிறவர் என் அண்ணன். சொல்லப்போனால் பகடி என்பது அவர் எழுத்துக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதல்ல, அது அவரது யதார்த்தம். அவரது கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதையென சொல்வதென்றால் அவர் எழுதி தினமணி கதிரில் வெளிவந்த பாவாடை அவதாரம் என்கிற சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும். நையாண்டியும் பகடியுமான கதை . அக்கதையை ஆங்கிலத்தில் கொண்டு-வரலாமென்று மொழிபெயர்க்கக் கேட்டேன் . இவ்வளவு பகடியான கதையை அதே பகடித் தன்மையோடும் நையாண்டியோடும் மொழியாக்கம் செய்வது கடினமென்று மொழிபெயர்ப்பாளர் சொல்லிவிட்டார் .
கேள்வி: உங்கள் படைப்புகளின் நிலப்பரப்பான புதுப்பட்டியில் இன்றைய சாதிச்சு+ழல் எப்படி இருக்கிறது?
பாமா: பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது தலித்துகள் பொருளா-தாரத்தில் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், சாதி இந்துக்களுக்கு அதுதான் உருத்தலாகவே இருக்கிறது. கலவரம் வரும்போது வீட்டைக் கொளுத்தி, உடமைகளை நாசம் செய்து இத்தனை ஆண்டுகாலம் கட்டமைத்து வைத்திருந்த பொருளாதாரத்தைத்தான் அழிக்கிறார்கள். சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட எல்லாக் கலவரத்திலும் அதுதான் நடந்தது. சங்கரலிங்கபுரத்தில் போலீஸே கடப்பாரை கொண்டு மக்களின் பொருட்களை உடைத்திருக்கிறார்கள். எல்லாப் பிள்ளைக-ளுக்கும் ரோஹித் வெமுலாவுக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் போல ஏற்பட்டாலும் படிக்கிறார்கள், விழிப்புணர்வோடு இருக்கி-றார்கள். வர்க்க ரீதியான முன்னேற்றம் ஒப்பீட்டளவில் சாத்தியமாகியிருந்தாலும் கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாகச் சரியான வழி காட்டுதலின்றி இருக்கிறார்கள் இளைஞர்கள். குறிப்பாக தலித்துகளிடை-யிலேயே ஒற்றுமை இல்லை. இது என் ஊரில் மட்டுமில்லை எல்லா ஊர்களிலும் இருக்கிறதென்றே சொல்லுவேன். புதிரை வண்ணார்கள், வண்ணார்கள் உள்ளிட்ட சாதிகள் கடும் அடக்கு முறைக்கு ஆளாகிறார்கள். நான் சிறுமியாக இருக்கும்போது எங்கள் வீட்டுக்குத் துணி எடுக்க வருவார்கள். அவர்களைப் பறையர்கள் தங்கள் வீட்டிற்குள் விடமாட்டார்கள். இதுபற்றி எல்லாம் எனக்கு அப்போது தெரியாது . அவர்கள் தண்ணீர் கேட்டால் மேலிருந்து கீழே ஊற்றுவார்கள். ஒருமுறை நான் அப்படித் தண்ணீர் ஊற்றும்போது என் அண்ணன் பின் மண்டையிலே என்னை அடித்தார். “என்ன பழக்கமிது? தண்ணி கேட்டா சொம்போடு தரவேண்டியதுதானே?” என்று அடித்தார். அந்த அடி இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் நாம்தான் நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். சமத்துவத்தைப் போதிக்கும் கல்வி முறை வேண்டும். தலித் ஆசிரியரிடம் படிக்க மாட்டேனென்று சொன்னவர்கள் உண்டு .பள்ளியில், ஆசிரியர்களிடத்தில் மாற்றங்கள் உருவாகவேண்டும், கூடுதல் பொறுப்போடு அவர்கள் சமூகச் சமநிலை குறித்த மனப்பான்மையுடனும் இயங்க வேண்டும்.
கேள்வி: சாதியின் தூய்மைவாதத்தைக் கட்டமைப்பதில் பெண்களுக்குப் பெரிய பங்குள்ளது. சாதியை ஆண்கள் பெருமையாகவும் பெண்கள் கலாச்சாராக் குறியீடாகவும் பார்க்கிறார்கள் என்கிற பார்வை இருக்கிறது. இது குறித்து உங்கள் கருத்து?
பாமா: சாதியின் தூய்மைவாதத்தை ஆண்களாகிய உங்களைப் போன்றவர்கள்தான் கட்டமைக்கிறார்கள் . சொத்துடைமை சமூகத்தில் அகமண முறையைக் கொண்டு ஆண்தான் சாதியைப் பேணுகிறான். இணையைத் தேர்ந்தெடுக்கிற உரிமை ஆண்களிடம்தான் இருக்கிறது . திருமணத்திற்குப் பெண் பார்க்கிற வழக்கம்தான் உள்ளதே தவிர பெண் போய் மாப்பிள்ளையைப் பார்க்கும் வழக்கம் இல்லை. ஆண்தான் சமூக உரிமை பெற்றவனாகிறான். அவனால்தான் சாதி காப்பாற்றப்படுகிறது . வழக்கமான பெண்ணியப் பார்வையிலான புகாராக நான் இதைக் குறிப்பிடவில்லை, நடப்பியல்பைப் பேசுகிறேன். ஆகையால் பெண்கள் மீது பழியைப்போட்டு தப்பித்துக்-கொள்ள நினைக்ககூடாது.
கேள்வி: தலித் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர் நீங்கள். பணிபுரிந்த இடங்களில் சாதிய ரீதியிலான பாகுபாட்டை நீங்கள் உணர்ந்ததண்டா?
பாமா: நான் 1977 இல் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டேன். என்னுடைய ஆரம்ப காலங்களில் அம்மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஒடுக்கும் ஆசிரியர்களை நான் ஒதுக்கி வைத்தேன். யாரை விடவும் நான் அதிகமாகவே கற்றுத் தேர்ந்திருந்ததால் மாணவர்களிடம் எனக்கு நல்ல பெயருண்டு . நான் மாணவர்களுக்கான ஆசிரியராகத்தான் இருந்தேன் என்பதை என்னால் பெருமைப்பட சொல்ல முடியும் .
கேள்வி: எழுதுவதோடு மட்டுமின்றி களத்திலும் செயல்பட்ட உங்களுடைய களம் பெரும்பாலும் எதன் பின்னணியில் அமைந்திருந்தது.
பாமா: நான் முழுநேரப் பள்ளி ஆசிரியர். பணிநேரம் போக, பள்ளிக்கூடம் இருந்த உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல பெண்கள் கூட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறேன், பல கல்லூரிகளில் பேசி இருக்கிறேன் . கூட்டங்களில் பேசும்போது தலித் பெண்ணியப் பார்வையில்தான் என்னுடைய உரையை வழங்குவேன் . இளம் தலைமுறையினரிடம் உரையாடுவதில் எப்போதும் எனக்கு பேரார்வம் உண்டு. முன்புபோல கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு தற்போதைய சூழல் அனுமதிக்கவில்லை எனினும் மனதில் அதே வேகம் இன்னும் இருக்கிறது.
கேள்வி: தலித் அரசியல் கட்சிகளிடமிருந்து நீங்கள் எதிர் பார்ப்பது என்ன ? கட்சிகளின் அரசியல் செயல்பாட்டை நீங்கள் கவனிக்கிறீர்களா?
பாமா: கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன், அழைப்பு விடுக்கப்படும் சில அரசியல் மேடைகளில் பேசியும் இருக்கிறேன். தலித்துகளெல்லாம் ஒரே கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கனவு. அந்த ஒற்றுமையைக் கண்டு மற்றவர்கள் அச்சப்பட வேண்டும்.
கேள்வி: தலித்துகள் அண்மைக் காலமாக பௌத்தத்தை இன்னும் அதிகமாக நெருங்கி வருகின்றனர். பார்ப்பனியத்திற்கெதிரான மானுட சமத்துவத்தைப் பௌத்தம் பேசுகிறதன் அடிப்படையில்தான் அம்பேத்கரும் பௌத்தம் ஏற்றார் . தலித்துகளின் பௌத்த உரையாடலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாமா: அது அவரவர்களின் தனிநபர் விருப்பம் சார்ந்தது. தொடக்க காலத்தில் கிருத்துவத்திற்குள் மாறினார்கள் . கோதுமை பால் பவுடருக்காக மதம் மாறினார்கள் என்று திரித்துச் சொன்னார்கள், அப்படிக் கிடையாது. வாந ளவயச ழக வாந நயளவ என்கிற புத்தகத்தில் முன்னூறு சீடர்களைக் கொண்ட படித்த பறையர் ஒருவர் ஏசு சபை சாமியார் ஒருவரின் துணையோடு கிருத்துவத்தைப் பற்றிப் படித்து அறிந்துகொண்டு மதம் மாறினார் என்பதே வரலாறு. அவரோடு சேர்ந்து அவரின் சீடர்களும் கிருத்துவத்திற்கு மாறினார்கள். மதம் மாறியதால் இந்துக்கள் அவரைக் கொடுமை படுத்தியுள்ளனர். மத மாற்றம் என்பதே கருத்தியல் அடிப்படையில்தான் நிகழ்ந்தது. சாதிய அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டுவிட மாட்டோமா என்கிற நோக்கத்தில் மதம் மாற்றம் அதுவும் பறையர்களிடம் அதிகமாக நிகழ்ந்தது. கோயிலுக்குள்ளே போகமுடியாத சு+ழலில் சர்ச்சிக்குள் எல்லோரையும் சமமாகப் பாவித்தது, மனிதனை மனிதனாகப் பார்த்தது கிருத்துவம். அண்ணல் அம்பேத்கரும் உணர்ச்சி வேகத்தில் மதம் மாறியவரல்ல, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என இம்மூன்றையும் பௌத்தம் போதித்ததால்தான் அம்பேத்கர் பௌத்தம் தழுவினார். பொதுவாகவே தலித்துகளு-க்குத்தான் விடுதலை வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது, அதனால் தான் அவர்கள் தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்கிறார்கள்.
கேள்வி: நீங்கள் கிராமியச் சு+ழலில் வளர்ந்தவர். குடும்ப வாழ்க்கையைத் துறந்து ஆன்மீகம் நோக்கிப் போகக் காரணம் என்ன. உங்கள் வீட்டை எப்படி எதிர்கொண்டீர்கள் ?
பாமா: எல்லோருமே வேண்டாம் என்றுதான் சொன்னார்கள். அண்ணன் நிறைய சொல்லிப் பார்த்தார். நான் ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது அங்குள்ள தலித் பெண்களை கன்னியாஸ்திரிகள் நிறைய வேலை வாங்குவார்கள். அதைக்கண்டு நான் வருந்தினேன். கன்னியாஸ்திரி என்பது அதிகாரமாக எனக்குப் பட்டது, நாமும் கன்னியாஸ்திரியாக மாறினால் தலித் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கலாமென்று கனவு கண்டேன் ஆனால் அது வெறுங்கனவாக மாறியது. நான் நினைத்ததைப் போலச் செயல்பட முடியவில்லை. கன்னியாஸ்திரி வாழ்க்கை பணக்காரத்தனமும் பகட்டுத்தனமும் நிறைந்த வாழ்கையாகத்தான் இருந்தது. வெறுமனே பள்ளியில் பாடமெடுக்கிற ஒருத்தியாக மட்டுமே வைத்திருந்தார்கள் . ஏழு வருடம் இருந்தேன். முதல் நான்கு வருடம் பயிற்சி. பயிற்சி முடிந்து ஜம்மு காஷ்மீர் அனுப்பினார்கள். பணக்காரப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர மட்டுமே முடிந்தது ஆகவே அதிலிருந்து விலகி வந்தேன். வெளியேறிய பிறகு வேலை கிடைக்கவில்லை ,பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். என் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லையென்றாலும் அப்பகுதி மிகவும் பின் தங்கிய கிராமமாக இருந்தது. முதல் தலைமுறையாகப் படிக்க வந்த பிள்ளைகள் இருந்ததால் அங்கேயே பணிபுரிவதென்று முடிவு செய்தேன். தலித் பிள்ளைகள் வாழ்வில் மாற்றம் வர வேண்டி மட்டுமே போனேன். நான் திருமணம் செய்து கொண்டால் என் குடும்பம் , என் பிள்ளைகள் என்று இருந்துவிடுவோமோ என்கிற எண்ணம்தான் மேலோங்கியிருந்ததே ஒழிய என் நோக்கம் இறைப்பணி செய்வதல்ல.
கேள்வி: படைப்புகள் எழுதுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தியிருக்கிறீர்கள். போதுமென்று நிறைவடைந்து விட்டீர்களா?
பாமா: நிறைவடையவில்லை. சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில நெருக்கடிகளும் இழப்புகளும் என்னை பாதித்தன. அதனால்தான் என்னவோ எழுதுவதில் தேக்கம் அடைந்துவிட்டேன். வலுக்கட்டாயமாக என்னை நானே எழுதவைக்க முயற்சி செய்யாமல் எழுத வேண்டுமென்று தோன்றினால் எழுதலாம் என இருந்து விட்டேன். ஆனால், நீண்டநாட்களாக எழுத வேண்டுமென நான் நினைத்து எனக்குள் ஆழக் கிடந்த சம்பவம் ஒன்று என்னை அரிக்கத் துவங்கவே சமீபமாக அதை ஒரு நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.
கேள்வி: தனிமையான ஒரு வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொண்ட நீங்கள் சோர்வடையும் தருணங்களென ஏதேனும் இருப்பின் அதை எவ்வாறு கடக்குறீர்கள்?
பாமா: நண்பர்கள்தான். ஒருவர் பாஃதர் மாற்கு மற்றும் பாஃதர் ஜான். பாஃதர் மாற்கு ஒரு எழுத்தாளர் மற்றும் என் அண்ணனின் நண்பர். பாஃதர் ஜான் ஒரு ஆலோசகர். அவரிடம் ஆலோசனை கேட்பேன். எழுத்து , மனச்சிக்கல் எதுவாயினும் இருவரிடமும் பகிர்ந்து-கொள்வேன். என் நம்பிக்கைக்கு உரியவர்கள். வாழ்க்கையில் முக்கியமானது யாரையும் நாம் காயப்படுத்தக்கூடாது நாமும் காயப்படக்கூடாது. மனிதம்தான் எல்லாவற்றையும் விடப் பெரியது.
கேள்வி: இந்தியாவில் இந்துத்துவ அரசியல் மூர்க்கமாக வளர்த்தெடுக்கப்படுகிறது. சாதியின் பெயரால் நிகழும் கொடுமைகளோடு சேர்த்து மத அரசியல் கூர்மையாவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாமா: இந்தப் போக்கு கொடுமையாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. மதம் மட்டுமல்ல ஜாதியும் கூர்மையாகிக்கொண்டு வருகிறது. கட்டிடங்களைத்தான் நாம் நவீனம் என்கிறோம். மனித மனம் இன்னும் காட்டுமிராண்டித் தனமாகவேத்தான் இருக்கிறது. மனிதனை மனிதனே ஜாதியின் பெயரால் கொல்லும்போது நவீனம் எங்கிருக்கிறது. கொரனாவைக் காரணமாக வைத்து மக்களுக்கு எதிரான பல செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகிறது. இந்தப் பேரிடர் சு+ழலில் போராடக்கூட வழி இல்லை.
கேள்வி: டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் தரப்பில் நடந்த மாற்றங்கள் நிகழ்ந்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த நெடிய பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாமா: நிறைய விழிப்புணர்வு உருவாகி-யிருக்கிறது. அம்பேத்கர் இல்லையென்றால் இங்கு எதுவும் நிகழ்ந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியும் . அம்பேத்கர் பற்றியான வாசிப்புகள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. அம்பேத்கர் சிலை வைப்பதற்காக நடந்த சண்டைகளும் போராட்டங்களும் அதிகம். அம்பேத்கர் நூற்றாண்டு பின்னணியில்தான் நிறைய தலித் எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். தலித்துகளை நிராகரித்துவிட்டு அரசியல் நடத்த முடியாதென்கிற நிலையும் உருவாகியிருக்கிறது. ஆங்காங்கு சில தொய்வுகள் இருந்தாலும் அவர் இழுத்த சமூகத் தேரை நாம் முன்னோக்கியே இழுத்து வந்துள்ளோம்.