யதார்த்தவாதச் சிறுகதைகளின் காலக் குறுக்கீடு

சப்னாஸ் ஹாசிம்

மிழிலக்கியப் பெரும்பரப்பில் சிறுகதைகளுக்குத் தேக்கமோ மரணமோ இருக்கப் போவதே இல்லை என்பதைச் சமகால எழுத்தாளர்கள் நமக்குச் சம்மட்டி அடியாக ஒவ்வொரு கதைகளின் மூலமும் அவற்றின் கூறுமுறை, மொழிப்பாவனை, கதையின் மையக்கோடு, கதாபாத்திரங்களின் மன அழுத்தங்களின் வழியாகவும் நமக்குத் தந்தவண்ணமிருக்கின்றனர். அப்படியொரு பெரும் வரிசை இருந்தாலும் சமகாலத்தில் கே.என்.செந்தில், தூயன், பாலசுப்ரமணியம் பொன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, சித்துராஜ் பொன்ராஜ், கார்த்திகைப் பாண்டியன் என்கிற வரிசையில் மயிலன் ஜி சின்னப்பனும் வருகிறார். அடுத்தடுத்து பேசுபொருளாகும், அவ்வப்போது வெளிவரும் அவரது கதைகளைப் படித்தபோது அவருக்கிருக்கிற கதை முறையின் பிடிமானத்தின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமெழுந்தது. மயிலன் தன் கதைகள் வழியே சித்திரிக்க நாடுவதும் மயிலனின் மனிதர்கள் நம்மிடையே அவர்களது அகப் புரிதல்களை, ஐமிச்சங்களை, ஊடாடுகின்ற சரிநிலைகளை, அவற்றின் பரந்துபட்ட பல்திசை எல்லைகளைப் புரிய வைப்பதன் வழியேயும் அவர் மேற்சொன்ன வரிசையிலிருந்து ரொம்பவே தனித்துத் தெரிகிறார். ஒரு மருத்துவராக, நரம்பியல் நிபுணராகக் கதைகளிலே உளவியலை ஏனோ விடாப்பிடியாகத் தடிக்க விடுபவரல்ல மயிலன். ஒரு விசயத்தில் நிபுணத்துவம் இருந்தால் தன் திறமையைக் காட்டுகிறேன் எனக் கதைகளின் நடுவே துருத்துவது போல கடித்து வைக்கிற எழுத்தாளர்கள் நடுவே மயிலன் கதாமாந்தர்களை, அவர்களுக்குத் தகுந்த அளவுகோல்களோடு அகவிசாரணைகளை மட்டிறுத்துகிறார். அது எழுத்தாளராக ஒரு நிபுணருக்கிருக்கிற அதியுச்ச முதிர்ச்சி எனச் சொல்ல முடியும். ‘நிரபராதம்’ கதையில் குற்றவுணர்ச்சியோடு வாழ்நாள் முழுக்க இடர்படுகிற ஒரு வைத்தியரையும், ‘நெஞ்சொடு புலத்தல்’ கதையில் வருகிற சம்சாரியையும் உளவியல் ஊடாட்டங்களின் வழியே வேறுபடுத்திப் புனைவுத்தருக்கத்தில் பரிபூரண வேற்றுமையைக் கையாள்கிறார். ‘நெஞ்சொடு புலத்த’லில் அலுவலகத்தில் வேலை செய்கிற ஆண், பெண் இருவருக்கிடையிலான திருமணம் தாண்டிய உறவின் அப்பாலைகளை, அந்த உறவுக்கேயுரிய அறத்தின் கூக்குரலை, கதை சொல்லியின் நேர், மறை பண்புநலன்களினூடான அகநெருக்கடியை ஆழமாக விசாரித்திருப்பார்.

ஓரிரவுப் பேச்சு எங்களின் தொடக்க நாட்களை மையமிட்டது. அம்முகம் அப்போது எப்படியிருந்தது என்பதையே நான் மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளில் எப்படியெப்படியோ மாறிவிட்டாள் – தாடை சற்று அகண்டு… வேறு மாதிரி. அணியில் எல்லாருமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பினாள் – முன்பு பார்த்திடாத படம். சிவப்புநிற மேக்ஸியில் அப்புகைப்படத்தில் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நிற்கிறாள். அந்தக் கண்களில் வாஞ்சை தெரிவதைக் குறிப்பிட்டேன். அதற்காகத்தான் இத்தனை நாளும் காட்டியதில்லையெனச் சிரித்தாள். அவளைப் பார்க்கவில்லையேயொழிய அதே பூரிப்புடன்தான் நானும் அப்படத்தில் நிற்கிறேன். “அங்கிருந்து எங்கெங்கோ வந்துவிட்டோம்” என்றேன். “என்ன உயிரோடப் புடிச்சு வெச்சிருக்கீங்க…” என்றாள். அவள் அடிக்கடி சொல்லுவதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் பொருட்படுத்திச் சொல்லுவதைப் போலத்தான் இருக்கும். “கிஸ்ஸஸ்” என்று அனுப்பினேன். முறுவலைப் பதிலாக அனுப்பினாள். பேச்சை இன்னும் நெருக்கினேன். இப்போதைய புதிய சூழலில் அவளே ஆரம்பிப்பது சிரமம். நானே தொடர்ந்தேன். மறுத்தாலும் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்று நினைப்பதற்குள், “வேணாம்…” என்று அனுப்பியிருந்தாள். தயாராக இருந்தாலுமே உள்ளுக்குள் அடைத்தது. “பரவால்லஞ்” என தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே, “எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு…” என்ற செய்தி வந்தது. மேற்கொண்டு எதுவுமே அவ்விரவுப் பேசிக்கொள்ளவில்லை.

இரு கதாபாத்திரங்களின் மனவெழுச்சியைக் கதைசொல்லியான ஆணினது உளச்சார்பிலிருந்தும் அவனது இயல்பூக்கத்திலிருந்தும் பேச விழைந்திருக்கிற இரண்டாம் வரிசை (second order) கதையாடல்தான் மயிலனை நுண்மையான எழுத்தாளர் என்கிற மதிப்பீட்டின் பால் வாசகனையோ விமர்சகனையோ கொண்டுபோய் நிறுத்துகிறதென நினைக்கிறேன். அப்படி உணர்ச்சி நிலைகளின் தீவிரப் புள்ளிகளைக் கதையோடு சரிவர நிறுத்திப் பரிகரிக்க விடுவதனாலேயே மயிலனின் கதைவெளி அகப்புலம் சார்ந்த எல்லைகளை இவ்வளவு வீரியத்தோடு பரீட்சித்துப் பார்க்கிறது. தமிழினியில் வந்த ‘ஆகுதி’ கதையில் மோகனா கதாபாத்திரமோ கதைக்களமோ மயிலனுக்குப் பரிட்சயமான ஒன்றாகவிருக்கக் கூடும். ஹவுஸ் சர்ஜனாக வருகிற மோகனாவிடத்தில் அந்த எரிந்த பெண் கதாபாத்திரத்திடம் சொல்வதற்கோர் ஆவலாதியிருக்கும். ஏறத்தாழ இறந்து மிச்சமிருக்கிற ஆன்மத்துடி இடி போன்ற பேரதிர்ச்சியொன்றை இறக்கி வைப்பதாகக் கதை நிகழ்வு ஓரிடத்தில் உச்சம் பெறும். அந்த இடத்திலேயே கதை சிறுகதை வடிவமாக விரிவு பெற்று ஊன்றி நிற்கும். பழக்கமான கதைக்களமென்றாலும் புனைவுக்குத் தேவையான தருக்கங்களோடும் இடைவெளிகளோடும் கதையாக நிறுத்தத் தகுந்த மொழியும் அதனோடிணைந்த உச்சகட்ட முடிச்சுமாக அந்தக் கதையை முடித்திருப்பார். மயிலனின் கதைகளில் வாசகப் பங்கேற்பை யாரும் மட்டுப்படுத்த முடியுமென்றே கருதுகிறேன். அதற்குரிய எண்ண வெளியை அவருடைய கதைகள் கொஞ்சம் இழிவளவாக்குவதாகத் தெரிகிறது. அதுவே சரளப்படுத்துதலுக்கு ஏதுவாகி அக்கதைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை, வேறுபட்ட புரிதல் இடைவெளிகளைக் குறைக்கிறதோ எனத் தோன்றுகிறது. இந்த இயல்பை ஆதவனிடத்திலும் அசோகமித்திரனிடத்திலும் காண முடியுமென்பதுவும் அவர்களே மயிலனின் ஆதர்சங்கள் என்பதுவும் இணைபில் வைத்து நோக்கப்பட வேண்டியவை.

மயிலன், கதைக்குள் வாசகனை அழைத்துச் செல்கிற விதமும் அதன் விவரணைப் பாங்கும் சித்திரிப்பும் மெருகு நிறைந்தவை. ‘ஈடறவு’ கதையில் காவல் நிலையத்தையும் அதன் மனிதர்களையும் புழங்கு சித்திரத்தையும் படிமங்களைக் கொண்டு விவரித்திருப்பார். காவல் நிலையத்தைத் தாண்டும்போதெல்லாம் அப்பா கையை இறுக்கமாகப் பிடிப்பதாகப் படிமமொன்று கதையில் வரும். இறுதியில் வருகிற இன்னொரு முகத்திற்காக அப்பாவின் கை மணிக்கட்டை இறுக்குவதாக வருவதை ஒரு விமரிசனப் படிமமாகச் சொல்ல முடியும். கதையின் சூழலுக்கேற்ப, கதை நகரும் சூழமைவுக்கேற்ப இப்படி விவரணைப் படிமங்களை மீளழைத்துக்கொள்கிற உத்தி மயிலனுக்குக் கூடியிருக்கிறது. ‘சன்னதம்’ கதையில் வருகிற கதைக்களத்தை அதன் காலப் பின்னணியை மயிலன் விரித்தெழுதுவதற்கு அவருடைய மொழியின் கூர்மை உதவுகிறதென்பேன். யதார்த்தவாதச் சிறுகதை என்கிற வரையில் அதன் காலக்குறுக்கீட்டை மயிலன் கிளைமொழியிலும் வட்டார வழக்கிலும் ஏற்றியிருக்கிறாரெனத் தோன்றுகிறது. ஆனால், எழுதப்பட்ட காலத்திற்கப்பாலும் ‘சன்னதம்’ மாதிரியான சிறுகதைகள் நிலைத்து நிற்க அம்மொழிப் பிரயோகம் ஏதுவாகவிருக்கிறது. ‘புத்துயிர்ப்பு’ நாவலுக்கு மதிப்புரை எழுதவிருந்த சமயத்தில் நாவலின் முக்கியத் தருணத்தை விரிவாக்கியே ‘நூறு ரூபிள்கள்’ கதை பிறந்ததாகச் சொல்கிறார் மயிலன். ருஷிய பேரிலக்கியப் பரப்பிலிருந்து பிறமொழி இலக்கியக்காரர்களுக்கு நாவல் விசயத்தில் மனித வாழ்வின் முழுமையோடு நாவல் எழுதப்படலாமென்கிற அழுத்தமான செய்தி சொல்லப்பட்டிருந்தது. எளிமைப்பட்டதாக, ஒரு திசைப்பட்டதாக நாவல் இருக்கக் கூடாதென்ற விசயம் புலப்பட்டது. ஆனால், சிறுகதை ஓர் உச்சக்கட்ட முடிச்சை நோக்கிப் போக முடியும் என்கிற பாதையைத் தமிழின் வளமான சிறுகதை மரபு எப்போதோ தேர்ந்தெடுத்துவிட்டது. ஆனால், காலக்குறுக்கீடற்ற, காலமற்ற காலத்தையுடைய பன்நிலைகளை நோக்கி கதையாகப் பின்னியிருக்கிற நாவலின் ஒரு நிகழ்ச்சியோடு ஓர் ஊடுகதை பிறந்து காலக்குறுக்கீடோடு வடிவத்திலும் தருக்கத்திலும் கதை முடிவிற்குப் பிறகான மௌனத்தைச் சரிவர பண்ணமுடிகிற சிறுகதையாக ‘நூறு ரூபிள்கள்’ பிறந்திருப்பது மயிலன் என்கிற எழுத்தாளரின் மொழித்வனியைச் சொல்ல போதுமாயிருக்கிறது. விலை மாது, வாடிக்கையாளர் இருவருக்குமான உரையாடல் என்ற கதை மாதிரி கொண்ட சிறுகதைகள் நிறையப் படித்திருக்கிறோம். தி.ஜாவையோ மண்ட்டோவையோ சட்டென ஞாபகப்படுத்தியும் கொள்கிறோம். ஆனால், இந்தக் கதையில் தொனிக்கும் காலமும் சூழமைவும் பின்னணியும் பிரத்தியேக வாசிப்பை, வாசிப்பு மனதைக் கோருவன. எல்லோருக்குமான பலகாரமாக இந்தக் கதையைச் சொல்ல முடியாது. ஆனால், அதன் விகசிப்பும் கதை ஆதாரமும் நிலைக்களனும் வியப்பைத் தராமலில்லை. மயிலன் யதார்த்தவாதத்தின் தருக்கத்தைக் கதைகளிலடைவதற்கு அவருடைய பாத்திர வடிவமைப்பும் அவற்றின் ஊடாட்டங்களும் குறிப்பமைவுகளும் காரணங்களென்பேன். அவருடைய சில கதைகளில் தென்படுகிற நாடகீயத் தன்மையோ, நாடகங்களில் இயக்குநருக்கு வெளியே அசைய முடியாத வாயிற்காற்போன் போல திடமற்ற பாத்திர வடிவமைப்போ, பல கதைகளில் இல்லை. சில கதாபாத்திரங்களுக்கு மையக்கதாபாத்திரத்தோடு சரிவரப் பெரிய கதை நகர்வோ ஒட்டுதலோ இல்லாதபோதும் கதைக்குத் தகுந்த அழுத்தங்களோடு (முற்றுப்பெற்ற அல்லது Dead end உள்ள கதாபாத்திரமாக இருந்தும் கூட, கதையிலிருந்து மைய ஓட்டத்திலிருந்து விலகியிருந்தும் கூட) கதைக்குத் தேவையான வீச்சை கொடுக்கக்கூடிய கதைகளே பேசப்பட்டுமிருக்கின்றன. கனலியில் வெளிவந்த ‘ஏதேன் காட்டின் துர்க்கந்தம்’ கதை அக ஊடாட்டங்களோடு சிறு எல்லைக்குள்ளேயே அதிக வீச்சோடு மானுடப் பண்பை, அதன் இயலாமையைக் கதாபாத்திரங்கள் வழியே ஊடாடவிட்டது எனலாம். அந்தக் கதையின் பாத்திரச் சித்திரிப்பில் எளிமையானதோர் நறுவிசு இருக்கும். ஆண் கதாபாத்திரம் தன்னை அறிமுகப்படுத்த முனையும்போது அந்த நறுவிசை மயிலன் வெளிப்படுத்தியிருப்பார். அப்படிச் சிக்கனமான பாத்திரச் சித்திரிப்பிலிருந்தும் கூட நல்ல கதைகளை எழுத முடியும் என்று இக்கதை மூலம் மயிலன் காட்டிவிடுகிறார். கதையில் வருகிற அகப் பிரக்ஞையும் ஒரு தளத்திற்கு மேலேயான அதன் சிறிய நிலைமாறலுமே வாசகக் குறுக்கீடிற்கும் காலக் குறுக்கீடிற்கும் எதிரே அக்கதையைத் தாங்கிக்கொண்டு செல்கிறது. அதிலும் கதையில் ஒரு மென்மை இழையோடும். குபராவிடமும் ஆதவனிடமும் அசோகமித்திரனிடமும் தென்படுகிற அதே இழைதான். இது புதுமைப்பித்தனிடம் தென்படுகிற கடுமைக்கு நேரெதிரானது. மௌனியிடமிருக்கிற ஆழ்ந்த இருண்மைக்கு விலக்கமானது. அதிக வாசகர்களைக் கவர்வது (மற்றைய இரண்டும் அதிக வாசகக் குறுக்கீட்டையும் பங்கேற்பையும் கோருவன).

மயிலன் இதுவரையில் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ என்கிற நாவலையும், ‘நூறு ரூபிள்கள்’, ‘அநாமேதயக் கதைகள்’, ‘சிருங்காரம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். அவருடைய கதைகளில் தொடர்ந்து வெளிப்படக்கூடிய யதார்த்தத்தையும் அதைச் சுற்றிய பிரபஞ்ச உண்மையையும் தத்துவக் கால்கோள்களையும் இன்னும் இன்னும் நாம் எதிர்பார்க்கலாம். அவரே சொல்வதைப்போல,

“எதார்த்தக் கதைகளின் எல்லா சாத்தியங்களும் எழுதி முடிக்கப்பட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். மனிதனின் மன அலைவுகளில் மட்டும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கான கதைகள் மிச்சமிருக்கின்றன. அதில் ஒரு துரும்பையாவது நான் கிள்ளிப்போட வேண்டும், அவ்வளவுதான்.”

அப்படி மன அலைவுகளின் நீட்சியை, அதன் வரைவை இன்னும் விரிந்த தளங்களில் சிறுகதைகளில் பங்களிக்கவும் அதிமானுடக் கற்பனைகளின் வழியேவும் வேறு பாதைகளிலும் பரிசோதனைகளை இலக்கியக் கரு விசயத்திலும் உத்திகளிலும் முயன்று பார்க்கவும் மயிலனால் முடியுமெனத் திடமாக நம்புகிறேன். கநாசு சொல்வதைப் போல எந்த இலக்கிய வடிவத்திலும் ஆசிரியனின் தனித்துவமென்பது அதில் பொதிந்திருக்கும் பெர்ஸனாலிடிதான். அது மயிலனிடம் ரொம்பவே இருக்கிறது.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!