எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டும்
கவலை எனும் அஞ்சல்காரர்
கருப்பு உறையில் முகவரியில்லை
கையெழுத்துப் புலப்படவில்லை
முகங்களில் காட்டாமல்
முகம் சுளிக்கிறார்கள் வீட்டுக்காரர்கள்
பனி மலையோர மரங்களுக்குப்
பாடும் உரிமையை விற்ற
வசந்தகாலப் பறவைகள்
கடந்த கால ஊர்வனவற்றைத் தவிர
எதுவுமற்ற நகர வீதிகள்
அஞ்சல்தலையோ கட்டணமோ
தேவைப்படாததோர் அஞ்சல்
பார்வையற்ற முரட்டுக் காற்று
அதன் விருப்ப வாகனம்
கருப்பு உதடுகளின் வெறுமை முத்தம்
அதன் நேர்த்தியான அச்சு
கைவிடப்பட்ட அண்டைவீட்டுப் பெண்ணின் தலைமுடி
அதன் கருப்புக் கோட்டின் கழுத்துப்பட்டை
கடும் குளிரில் இறுகும்
இருண்ட பளிங்குக் கற்கள்
சிறு மலையின் தொடையில் உறங்கும்
வெள்ளை மேகங்கள்
சைப்ரஸ் மரம்
ஒவ்வொருமுறை காற்றுடன் கிசுகிசுக்கும்போதும்
விழித்துக்கொள்ளும் நதி
அஞ்சல் வந்தடையுமுன்
ஆழ்ந்து துயில்கொள்கிறேன் நான்
தும்முகிறது என் ஆன்மா.

அஞ்சல்காரர்
அரபியில்: முஸ்அப் அபூ தூஹா | தமிழில்: அ.ஜாகிர் ஹுசைன்