‘இனி கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்’
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு கண்ணகி முருகேசன் என்கிற இருவர் சாதி மீறி காதலித்தனர் என்கிற காரணத்திற்காக ஆணவக்கொலை செய்யப்பட்டனர். முருகேசன் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். கண்ணகி பிற்படுத்தப்பட்ட வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் திருமண வயதை எட்டியிருந்தார்கள். முருகேசன் பொறியியல் படிப்பை முடித்துப் பணியாற்றி வந்தார். கண்ணகி இளநிலை படிப்பை முடிக்கும் தறுவாயில் இருந்தார். இவர்கள் இருவரையும் ஊரார் ஒப்புதலோடு வாய், மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை ஊற்றி துள்ளத் துடிக்க கொன்று முடித்த பின்னரும் தனித்தனியே தீ வைத்து எரித்திருக்கின்றனர் சாதிவெறி கயவர்கள். எண்ணிக்கை அளவிலும் சமூக அதிகார அளவிலும் குறைந்த ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ஊரைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலையிருந்தது. ஒரு வாரத்திற்குப் பின்னால்தான் நக்கீரன் இதழ் மூலம் விஷயம் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தது.
பிறகு இயக்கங்களும் செயற்பாட்டாளர்களும் பிரச்சினையைக் கையிலெடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக தலித் இயக்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டன. இதன் பின்புதான் சட்டரீதியான வேலைகள் துரிதமாக நடைபெற்றன.
இப்போதுதான் இந்தச் சட்டரீதியான போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கவனித்துச் செயற்பட்டு வந்ததன் பின்னணியில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்குத் தூக்குத் தண்டனையும் தந்தை துரைசாமி உள்ளிட்ட 12 பேருக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அபராதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வழக்குப் பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டோர் மீதே பொய் வழக்குப் போட்ட விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்திருக்கின்றனர். கடலூர் எஸ்.சி – எஸ்.டி வழக்குகளை நடத்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராஜ் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இது சாதி அடிப்படையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலை என்றும் ஆணவப் படுகொலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளைக் குறிப்பிட்டும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதோடு பொய் வழக்கு புனையப்பட்டு – கைது செய்யப்பட்ட முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது உறவினர்கள் கண்ணதாசன், இளையபெருமாள் (மறைவு) ஆகியோருக்குத் தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பின் முடிவில் “இனி கண்ணகி எரித்ததாக இருக்கட்டும்” என்று குறிப்பிட்டு முடித்திருக்கிறார்.
இந்த வழக்கும் தீர்ப்பும் பலவகைகளிலும் முன்னுதாரணமானதாகும். ஆனால் இவ்விஷயம் ஊடகங்களால் போதுமான அளவு எடுத்துச் சொல்லப்படவில்லை. இந்த வழக்கின் தன்மை குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த வழக்கு பலவகைகளில் தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது.
முழுமையான அளவில் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு கொணரப்பட்டு அச்சட்டத்தின் படியான நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சாதியக் குற்றங்களைத் தடுப்பதில் இச்சட்டத்தின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள இவ்வழக்குதான் முதலாவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் மிக வெளிப்படையாகச் சாதியக் காரணங்களினால் நிகழ்த்தப்பட்ட சென்னகரம்பட்டி, மேலவளவு போன்ற வன்முறைகளுக்குக் கூட இந்தச் சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்பட்டதில்லை. அதேபோல சிவில் வழக்கில் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்- பட்டிருப்பதும் புதிதே. பொதுவாக சாதிய வன்முறை தொடர்பான வழக்குகளில் அதைக் காவல்துறையினர் எந்த மாதிரியாக எழுதுகின்றனர் என்பதிலிருந்தே அதற்கான தீர்வும் அமைந்திருக்கிறது. எனவே அதிகார மட்டத்தினர் பற்றிய விழிப்புணர்வும் தேவை என்பதையே இதுவரையிலான நம்முடைய அனுபவங்கள் கூறுகின்றன. அந்த வகையில் அதிகார மட்டத்தினர் சாதி உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய வழக்குகளில் திட்டமிட்டுச் செய்யும் குளறுபடிகளுக்கு இந்த வழக்கு தகுந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு இணையாகப் பேசப்பட வேண்டிய மற்றொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக குற்றம் நடந்தது என்பது தெரிந்தாலும் அதை வைத்து மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டு விடுவதில்லை. வழக்காகப் பதிதல், நீதிமன்றம் செல்லல், சாட்சிகளைத் தக்க வைத்தல், பயணம், செலவு, உழைப்பு, அச்சுறுத்தல், இயலாமை, மன உளைச்சல் என்று எத்தனையோ விஷயங்கள் இடையில் எழும். அதிலும் ஒடுக்கப்பட்டோர் விஷயம் என்றால் சமூகத்தில் தொடங்கி அதிகார மட்டங்கள் வரையிலும் எத்தகைய தடைகள் எழும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இதுபோன்ற பிரச்சினையில் வழக்கைவிட, அதில் அஞ்சாமலும் மனம் தளராமலும் தொடர்ச்சியைப் பேணுவதே முக்கியமானது; சவாலானது. அந்த வகையில் இந்த வழக்கை எந்தப் பெரிய பின்புலமும் இல்லாமல் கொண்டு சென்ற வழக்கறிஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் பாராட்டவேண்டியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டதைப் போல இவ்வழக்கு சார்ந்த விசயங்கள் மர்ம நாவலுக்கு இணையானவையாக இருக்கின்றன. எனவே இதில் இடைவிடாது உழைத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம், வழக்கறிஞர் குழுவினர், மனித உரிமை ஆர்வலர்கள், கடலூர் வழக்கறிஞர்கள் ஆகிய அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். வழக்கு மேல் முறையீடுக்குச் செல்லுமானால் தமிழக அரசு உறுதியான தலையீட்டையும் செய்ய வேண்டும். இதை முன்னுதாரணமாகக்கொண்டு பிற பிரச்சினைகளுக்கான சட்டப் போராட்டங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.