நாவலின் வடிவம், எடுத்துரைப்பியல் குறித்தெல்லாம் பெரிதாக எந்தப் புரிதலும் ஏற்படாதிருந்த பத்தொன்பதாவது வயதில் எழுதத் தொடங்கிய இமையம், தன் முதல் நாவலிலேயே தமிழிலக்கியச் சூழலில் பெருவெடிப்பை நிகழ்த்திக் காட்டினார். நள்ளிரவில் தன் தெருவோரம் அழுதுகொண்டிருந்த பெண்ணின் வலியையும் அந்த கண்ணீர்த் துளிகளில் மறைந்திருந்த அவளின் கடலளவு துயர வாழ்க்கையையும் சுமக்க முடியாத அந்த இளைஞரின் மனம் அச்சுமையைக் ‘கோவேறு கழுதைகள்’ மீது இறக்கி வைத்தது. நாவல் வெளிவந்தபோது ‘மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிரிவுகளின் சகலக் கீழ்மைகளையும் மனந்திறந்து, கலைபூர்வமாக முன்வைத்து மனிதத் துக்கத்தை இந்த அளவுக்குத் தேக்கியதிலும் சரி, அதன் அனுபவப் பரிமாற்றத்தில் பெற்ற வெற்றியிலும் சரி இதற்கு இணையாகச் சொல்ல தமிழில் மற்றொரு நாவல் இல்லை’ என்ற பாராட்டு ஒருபுறமும் தலித்துகளின் உள்முரண்களைப் பேசுவதன் மூலம் இது தலித்தியத்திற்கு எதிரான நாவல் என்கிற எதிர்மறை விமர்சனங்கள் மறுபுறமும் எழ இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பின்னும் விற்பனையில் முன்னணியில் இருப்பதுடன் தொடர்ந்து வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. ‘கோவேறு கழுதைகள்’ தொடங்கி ஆறு நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்களை எழுதியிருக்கும் இமையம், இயல்விருது, சாகித்திய அகாதமி விருதுகளோடு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ தேசிய விருதைப் பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்கிற சிறப்புக்கும் உரியவராகத் திகழ்கிறார்.
யதார்த்தத்தின் வலிமையும் கூர்மையான உரையாடலும் கச்சிதமான எடுத்துரைப்பியலும் அனுபவங்களின் உண்மைத்தன்மையைப் புனைவில் கலக்கும்போது ஏற்படும் ரசவாதமும் எனப் பல்வேறு கூறுகளால் செழுமை பெறும் இமையத்தின் படைப்புகளைச் சமகாலத்தின் மீதான விசாரணைகள் என்று மதிப்பிடலாம். எதற்காக எழுதுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நான் வாழும் காலத்தில் இத்தமிழ்ச் சமூகம் எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்வதற்காகவே எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலையல்ல; என் சொற்களின் வழியே நிலவியலுக்கும் காலத்திற்கும் சமூக நடவடிக்கைகளுக்கும் உயிர் கொடுக்கிறேன்… என் கதைகள் அனைத்தும் சமூகம் எழுதிய கதைகளே’ என்று பதிலுரைக்கும் இமையத்தைக் காலத்தைக் கலைவடிவில் ஆவணப்படுத்தும் கலைஞன் எனலாம். இந்த ஆவணமாக்கலிலும் இமையத்தின் பார்வை நுட்பமானது. ஒருபுறம் நாம் இயல்பாகக் கடந்து செல்லக்கூடிய நிகழ்வுகளும் செய்திகளும் அவர் எழுத்துகளில் கூர்மையும் கனமும் பெற்று நம்மை உற்றுப்பார்க்க வைக்கின்றன. மறுபுறம் வெளிச்சம்படாத மனிதர்களை, அவர்களின் வாழ்வியலைக் கண்முன் நிறுத்திச் சமூக உரையாடலைத் தொடங்கி வைக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்துப் புதிரை வண்ணார்களைக் குறித்து அம்பேத்கர், ‘பார்த்தாலே தீட்டு தொற்றிக்கொள்ளும் என்று இம்மக்கள் ஒதுக்கப்படுவதால் தங்கள் வேலைகளை இரவு நேரத்திலேயே முடித்துவிட்டுப் பகல் பொழுதில் வெளியே வராமல் பார்த்துக்கொள்வர். பாவப்பட்ட இம்மக்கள் இரவுகாலப் பழக்கங்கள் மேற்கொள்வது தவிர வேறு வழி அறியாதவர்கள்’ என்று எழுதியுள்ளார். இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சாதிக் கட்டுமானத்தில் அடித்தளத்தில் இருப்பவர்களுக்கும் கீழான நிலையில் வாழும் இம்மக்களின் அவஸ்தைகளும் அழுகையும் அதற்குக் காரணமான ஒடுக்குமுறைகளும்தாம் கோவேறு கழுதை. ‘சாமி வண்ணாத்தி மவ வந்திருக்கேன் சாமி சோறு எடுக்க’ என்று இரவுகளில் சென்று ஒவ்வொரு வீட்டிலும் இரக்கும் ஆரோக்கியம் என்னும் பெண்ணின் வழியாக நகரும் இக்கதை பறையர் இனத்திற்குத் துணி வெளுப்பது, குழந்தை பிரசவிக்கும் மருத்துவச்சியாக இருப்பது, பிறந்த குழந்தைகளின் மூத்திரத் துணியையும் குழந்தை பெற்றவர்களின் தீட்டுத் துணியையும் துவைப்பது, வயது வந்த பெண்களுக்கு அவர்கள் சடங்கு முடியும்வரை நாள்தோறும் தீட்டுத் துணிகளைத் துவைப்பது, யார் செத்தாலும் இழவு சொல்லப் போவது, வாய்க்கரிசி தூக்கப் போவது, பாடைகட்டுவது, அறுவடைக் காலத்தில் களம் தூற்றச் செல்வது என்று தாழ்த்தப்பட்ட காலனிப்பகுதி மக்களுக்காக இரவுப் பகலாக உழைக்கும் புதிரைவண்ணார் குடும்பத்தின் துயரங்களை முதன்முதலாக வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது கோவேறு கழுதை.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then