அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகளை இழிவாகவும் விலக்கியும் எழுதியது தொடர்பாகப் பதிலளிக்கப்படாத விமர்சனம் ஒன்று நெடுநாட்களாக இங்கிருக்கிறது. இச்சாதிகள் பற்றிய அயோத்திதாசரின் கூற்று வெளிப்படையானது, அவற்றை மறைப்பதற்கோ விளக்குவதற்கோ எதுவுமில்லை. அதேவேளையில் அயோத்திதாசரின் பிற சிந்தனைகள் முக்கியமானதாகவும் இருக்கின்றன. விளிம்புநிலை அரசியல் சொல்லாடல்களில் அவர் சிந்தனைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட விளிம்புநிலைச் சாதி மீதான ஆதிக்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட அயோத்திதாசர், மற்ற விளிம்புநிலைச் சாதிகளை எதிர்மறையாகச் சொல்லியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது? இக்கேள்வியினூடாகவே அவர் மீதான மதிப்பீட்டை முன்வைக்க வேண்டியிருக்கிறது. இதன் பொருள் அயோத்திதாசரைக் காப்பாற்றுவதோ, அவர் அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று சாதிப்பதோ இல்லையெனில், இந்தப் புரிந்துகொள்ளும் முயற்சி இவ்வளவு காலம் நடக்காதது ஏன் என்கிற கேள்வி இங்கெழும். கடந்த 20 ஆண்டுகளாக அயோத்திதாசரைப் பேசியும், எழுதியும் வருகிற என் அளவில் சில காரணங்களைக் கூற முடியும். அயோத்திதாசரின் இந்தக் கூற்றினை வைத்து விமர்சனம் எழுந்த சூழல் ஆவேசமானதாக இருந்தது. அச்சூழலில் எதைச் சொல்லியிருந்தாலும் அடுத்தடுத்த குற்றச்சாட்டிற்கான வாய்ப்பாக மாறிவிடும் அபாயம் இருந்ததால் நிதான சூழ்நிலைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
இருபதாண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அண்மையில் நீலம் இதழில் வெளியாகியிருந்த ‘பௌத்தம்: அயோத்திதாசரும் அம்பேத்கரும்’ என்கிற கட்டுரையில் (அக்டோபர் 2022) இதே விமர்சனத்தை நிதானத் தொனியில் கச்சாமி எழுதியிருப்பதால், பதிலை எழுத முடியும் என்று தோன்றியது.
இதைப் பதில் என்று சொல்லிக்கொள்வதைக் காட்டிலும் புரிந்துகொள்ள முயற்சித்தல் என்றுகூடக் கூறலாம். மேலும் கச்சாமி கட்டுரைக்கான பதில் என்று இதைப் பார்ப்பதை விடவும் நீண்ட நாள்களாக இது தொடர்பாக நடந்துவரும் விவாதங்களைத் தொகுத்துப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும். அயோத்திதாசர் கூற்று, அதையொட்டிய குற்றச்சாட்டு ஆகியவற்றைப் பேச முற்பட்டால் அயோத்திதாசருக்கு வெளியே, அயோத்திதாசருக்கு உள்ளே என்று இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.
I
முதலில் அயோத்திதாசருக்கு வெளியேயிருந்த காரணிகளைத் தொகுத்துக்கொள்ளலாம். அயோத்திதாசர் எழுத்துகள் ஞான.அலாய்சியஸால் தொகுக்கப்பட்டு 1999 செப்டம்பரில் இரண்டு தொகுதிகளாக வெளியாயின. எஞ்சியவை மூன்றாம் தொகுதியாக 2003ஆம் ஆண்டு வெளியானது. பிறகு அதை வைத்து அறிவுலகில் இரண்டு வகையான பேச்சுகள் எழுந்தன. இதுகுறித்து என்னுடைய, ‘அயோத்திதாசர்: வாழும் பௌத்தம்’ (மே 2016) நூலில் விரிவாக எழுதியிருப்பினும் தேவை கருதி இங்கு மீண்டும் சுருக்கமாகக் கூற விழைகிறேன்.
அரசியலிலும் பண்பாட்டிலும் கோலோச்சிய பிராமண ஏகபோகத்தை எதிர்த்தவர் அயோத்திதாசர் என்று தரப்பட்ட அடையாளம் முதலாவதாகும். பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசியவர் என்ற முன்னோடி அடையாளத்தை அயோத்திதாசருக்கு வழங்குவதற்கு இது காரணமானது. மற்றொன்று, பக்தி இலக்கியப் புனைவு தொடங்கி சைவ அடையாளத்தால் உட்செரிக்கப்பட்ட தமிழுக்குப் ‘புறச்சமயமாக்கப்பட்டிருந்த’ பௌத்த உள்ளீட்டைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதாகும்.
இந்த வகையில் 2000 டிசம்பர் 23ஆம் நாளில் மதுரை தலித் ஆதார மையம் நடத்திய அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கு குறிப்பிடத்தக்கது. இக்கருத்தரங்கில் மோகன் லார்பீர், ந.முத்துமோகன், தொ.பரமசிவன், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ஆ.சிவசுப்பிரமணியம், லூர்துநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மேற்கூறப்பட்ட இரண்டு வகையான கருத்துகளும் வெளிப்பட்டன. அதன்படி அயோத்திதாசர் சிந்தனைகள் வரவேற்கப்பட்டன; வியப்போடு நோக்கப்பட்டன. எனினும் இத்தகைய வியப்பைத் தாண்டிக் குறிப்பிடும் படியான ஆய்வுகள் வெளியாகவில்லை. உருவான தொடக்கநிலை உரையாடல்கள் கூட அவரவர் ஏற்கெனவே அரசியல் ரீதியாக நம்பிக்கொண்டிருந்த கருத்துகளுக்கு அனுசரணையாக அயோத்திதாசரை ஆக்கிக்கொள்வதற்கான முனைப்பளவிலேயே இருந்தன. இரண்டாவது காரணம் நடைமுறை சார்ந்தது. அயோத்திதாசரின் மொழிநடையை இங்கு குறிப்பிட வேண்டும். தற்காலத் தமிழ் நடைக்குப் பழகியவர்கள் அயோத்திதாசர் எழுத்துகளுக்குள் பிரவேசிக்க முடியாமல் இருந்தனர். அதேபோல அயோத்திதாசர் ஒன்றைப் புரிந்துகொண்ட விதமும் – விளக்கிய விதமும், நவீனக் கல்விப் புல ஆய்வுச் சட்டகத்தினாலும் நவீன அரசியல் புரிதல்களாலும் வழிநடத்தப்பட்ட நம் காலத்தவர்களுக்குப் புதிதாக இருந்தன. இதனால் நவீனச் சிந்தனைப் போக்குடைய சிலருக்கு அவர் சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாதவராகவும் சில இடங்களில் அதிர்ச்சி தரத்தக்கவராகவும் இருந்தார்.
இந்நிலையில்தான் திராவிட இயக்கம் மற்றும் பெரியார் மீது தலித் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ரவிக்குமார் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தார். அவர் தன்னுடைய விமர்சன நிலைப்பாட்டின் மைய விசையாக அயோத்திதாசரை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த விமர்சனத்தை அறிவார்ந்த தளம் சார்ந்ததாக மட்டும் பாராமல் அவர் ஏற்கெனவே இணைந்து செயல்பட்டுப் பிரிந்திருந்த அ.மார்க்ஸ் குழுவினரோடு ஏற்பட்டிருந்த சுயமுரண், கருத்தியல் முரண் என்று இரண்டும் கலந்த நிலையில் முன்வைத்து வந்தார். (இதற்கும் சற்று முன்பே அ.மார்க்ஸ் பெரியாரை முன்வைத்துப் பேசத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) அதோடு அப்போது உருவாகி வந்த புதிய தலைமுறை தலித் அரசியல் குழுக்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருந்த ரவிக்குமார் அத்தொடர்பில் வைத்து பெரியார் விமர்சனத்தை முன்னெடுத்திருந்தமை கூடுதல் பதற்றத்தை உருவாக்கியது. பிற தலைமைகளில் இருந்து விடுபட்டுத் தனித்து உருவாகி வந்த தலித் அரசியல் இயக்கங்களுக்கென்று சிந்தனையாளர்களைக் கண்டெடுக்க வேண்டிய தேவையும் அப்போது இருந்தது. தலித் மக்களை, தலித் அரசியல் தலைமையை நோக்கி அணிதிரட்ட இந்த நோக்கு அவசியமாயிற்று. எனவே தலித்துகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் திராவிட இயக்க எண்ணங்கள் மற்றும் ஆளுமைகள் சார்ந்த போதாமையைக் கூறி அதற்கு மாற்றாக தலித் கருத்தியல் மற்றும் பிம்பங்களை முன்வைப்பது என்பதாக அந்த விமர்சனங்கள் விரிந்தன.
இவ்வாறு அயோத்திதாசரை அரசியல் தளத்தில் ரவிக்குமார் கையெடுத்திருந்த சமகாலத்திலேயே தற்செயல் ஒற்றுமையாக டி.தருமராஜின் ‘நான் பூர்வ பௌத்தன்’ என்ற நூல் வெளியானது. அந்த நூலின் கடைசி அத்தியாயம் `பெரியார் அயோத்திதாசரை மறைத்தாரா?’ என்று விவாதித்திருந்தது. இவையெல்லாம் சேர்ந்துதான் அயோத்திதாசர் விவாதப் பொருளானார். அவர் மீது இன்றுவரையிலும் நீடிக்கும் விமர்சனத்தைப் புரிந்துகொள்ள இந்தப் பின்புலம் அவசியமாகும். இவ்வாறு அயோத்திதாசரையும் பெரியாரையும் எதிரும்புதிருமாக வைத்து விமர்சனங்கள் எழுதப்பட்டதால் அதுவரை அயோத்திதாசரைப் பெரியாரின் முன்னோடியாகவும், பிராமணர் அல்லாதோர் அரசியலின் குரலாகவும் கணித்துவந்த கணிப்புகளில் சிக்கல்கள் ஏற்பட்டன. அயோத்திதாசர் ஜ் பெரியார் எதிர்மறையை, தலித்துகள் ஜ் பிற்படுத்தப்பட்டோர் என்ற எதிர்மறையாக ரவிக்குமார் காட்ட முற்பட்டார் என்பதால் எதிர்த்தரப்பு அறிவுஜீவிகளும் அவ்வாறே எதிர்கொண்டார்கள். அயோத்திதாசர் மீது அதுவரை பிராமணரல்லாத அல்லது பிராமணரல்லாதார் அரசியலுக்குப் பாதகம் இல்லாத வகையில் சார்பை வெளிப்படுத்திவந்த அறிவுஜீவிகள், இந்தச் சிக்கலான சூழலை எதிர்கொள்ள வேண்டியவர்களானார்கள். அதன்படி இச்சூழலை அவர்கள் இரண்டு வழிகளில் எதிர்கொண்டனர். ஒன்று, அயோத்திதாசரின் சிந்தனைகளை எதிர்மறையான விமர்சனத்திற்கு உட்படுத்தினர்.
அயோத்திதாசரிடம் விமர்சனப்பூர்வமாக நிராகரிக்க வேண்டிய பிற விளிம்புநிலைச் சாதிகளை வெறுக்கும் அல்லது பொருட்படுத்தாத அம்சங்கள் முதல்முறையாக பெரியார் மீதான விமர்சனத்திற்குப் பிறகு முன்வைக்கப்பட்டன. அதாவது, ரவிக்குமார் பறையர் சாதியைச் சேர்ந்தவராக இருப்பதால் அயோத்திதாசர் என்ற பறையர் சாதி அறிவுஜீவியை முன்வைக்கிறார். இதன்படி அயோத்திதாசரின் அருந்ததியர் வெறுப்பு பார்வைதான் ரவிக்குமாருக்கும் இருக்கிறது. பெரியார் மற்றும் திராவிட இயக்கம் தொடர்பான ரவிக்குமார் விமர்சனமும் – அயோத்திதாசர் ஆதரவு பேச்சும் பறையர் சாதி நலன் தொடர்பானதே தவிர ஒட்டுமொத்த தலித் சாதிகளின் பார்வையாக இருக்க முடியாது என்று இந்த விமர்சனம் விரிக்கப்பட்டது.
இவ்விடத்தில் அருந்ததியர் அமைப்புகள் மற்றும் அறிவுஜீவிகளின் பெரியார் பற்று என்கிற துணைச் செய்தியையும் கூற வேண்டும். மேலும் 1980களின் இறுதியில் உருவான தமிழ்த் தேசிய கருத்தாளர்களால், ‘இங்கு தமிழ்த் தேசிய இன ஓர்மை உருவாகாமல் போனமைக்குத் ‘திராவிடம்‘ பேசப்பட்டதே காரணம்; ஏனெனில் திராவிடம் பேசியவர்கள் தெலுங்கர்களாக இருந்தனர்; எனவே தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டுமானால் தெலுங்கர்கள் வெளியேற வேண்டும் அல்லது ஆளும் அதிகாரத்தில் இருக்கக் கூடாது’ என்று கூறப்பட்டன. இந்தத் தெலுங்கர் என்கிற வகைமைக்குள் ஆதிக்கத்தில் இருக்கும் நாயக்கர் சாதியினரும், விளிம்புநிலையிலிருக்கும் அருந்ததியர் சாதியினரும் ஒன்றாக அடக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களாகக் கூறப்பட்டனர். இந்நிலையில் தெலுங்கர்கள் அனைவரையும் பொத்தம் பொதுவான எதிராளிகளாகப் பாவிப்பதில் நியாயமில்லை என்று கூறித் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரியார் போன்றவர்கள் ஆற்றிய பணிகள் நினைவுகூரப்பட்டன. இவ்வாறு உருப்பெற்ற தமிழ் பாசிசச் சொல்லாடலை எதிர்கொள்ள பெரியார் ஒரு தடையரணாக நிறுத்தப்பட்டார். இதில் (ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்த காரணத்தால்) ஏற்கெனவே பெரியாரை ஏற்றிருந்த அருந்ததியர் அமைப்பினர், இச்சூழலுக்குப் பிறகு பெரியாரை அழுந்தத் தழுவி நின்றனர். சாதியம், இனவாதம் ஆகிய இரண்டு சூழல் சார்ந்தும் பெரியாரை ஆதரவாகக் கொள்வது அவசியப்பட்டது. தமக்குள் இருந்த முரண்பாடு காரணமாக தலித் அமைப்புகள் (தேவேந்திரர், ஆதி திராவிடர், அருந்ததியர்) தனித்தனியாகவே இருந்தன.
அசாதாரணச் சூழல் தவிர்த்த நேரங்களில் அவை தனித்தே இயங்கின. இந்த நிலையில்தான் தலித் சாதிகளில் ஒன்றான பறையர்களைப் பெருமளவு திரட்டியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பின்புலத்திலிருந்து பெரியார் மீதான இந்த விமர்சனம் வைக்கப்பட்டது. அதேவேளையில் அந்த விமர்சனம் முந்தைய இனவாத தொனி கொண்டவை என்று சொல்லுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மாறாக, தலித்துகள் பற்றிய பெரியாரின் அணுகுமுறை தொடர்பான விமர்சனமாகவே அது இருந்தது.
ஆனால், பெரியாருக்கு வரக்கூடிய பாதகம் தங்களை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கும் என்கிற அச்சம் அருந்ததியர் அமைப்பினரிடம் இருந்தது. அடிப்படையில் அயோத்திதாசர் – பெரியார் என்ற எதிரும் புதிருமான விமர்சனங்கள் அறிவுஜீவிகளுக்கு இடையிலானதாக இருந்தபோதிலும் அருந்ததியர் அமைப்புகளின் பிரதான அக்கறையாக மாறிவிட்டது என்று கூற முடியாது. ஆனால், அ.மார்க்ஸோடு தொடர்புடைய அருந்ததியர் – பிற்படுத்தப்பட்ட சாதி அறிவுஜீவிகள் இதைக் கவனித்து வந்தனர். ரவிக்குமாரால் முன்வைக்கப்பட்ட அயோத்திதாசரை, பெரியாரை முன்வைத்து எதிர்கொண்டனர். இவ்வாறு அயோத்திதாசர் பற்றிய, பெரியார் பற்றிய பேச்சுகள் ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகிய இருவருடைய முரணைத் தாண்டிப் பார்க்க முடியாமலானது. இந்த இடத்தில்தான் பெரியார் மறுப்பு, அயோத்திதாசரின் அருந்ததியர் விலக்கம் ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தன.
இவ்வாறு தலித் தரப்பால் விமர்சிக்கப்பட்ட பெரியாரைப் பாதுகாக்கத் தலித் சாதிகளிலேயே ஒரு வகுப்பினர் முற்படுவது அயோத்திதாசரை முன்வைத்துத் திட்டமிடப்பட்ட தலித் கருத்தியல் உருவாக்க முயற்சிக்கு முட்டுக்கட்டையானது. அயோத்திதாசரிடம் வெகு சில வரிகளில் வெளிப்பட்ட அருந்ததியர் வெறுப்புக்காக ரவிக்குமார் உள்ளிட்டவரால் அவர் பேசப்படவில்லை. மொத்தத்தில் திராவிட இயக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில் பேசப்பட்ட அயோத்திதாசர் அடையாளம், அதை முன்னெடுத்தவரின் சுய முரண், பிராமணர் அல்லாத அறிவாளிகளின் தன்முனைப்பு, தலித் அரசியலின் சிக்கலான எதிர்காலம் என்கிற முட்டுச் சந்தில் வந்து நின்றுவிட்டது. இவ்விடத்தில் தலித் அல்லாத அறிவுஜீவிகள் பலர் அயோத்திதாசர் குறித்து எடுத்த நிலைப்பாடுகள் கவனிக்கத்தக்கவை. பெரியாருக்கு எதிராக அயோத்திதாசர் முன்னெடுக்கப்பட்டதால் பதற்றம் அடைந்தவர்களில் பலர், அதுவரை பிராமணர் அல்லாதோர் அரசியலின் அங்கமாக அயோத்திதாசரைக் கூறிவந்ததை நிறுத்திவிட்டு முதன்முறையாக எதிர்த்தனர். வேறு சிலர் அவரைப் பற்றிப் பேசுவதையே நிறுத்திக்கொண்டனர்.
பெரியார் பற்றிய தன்னுடைய விமர்சனத்தில் அவரது இரண்டு கூற்றுகளை ரவிக்குமார் மையமாக எடுத்துக் காட்டினார். பிராமணர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் (நம்மில் கீழ்த்தர மக்கள்) ஆகியோரை மற்றமையாக நிறுத்தி பெரியார் தன்னைச் சூத்திர மையமாகக் கருதினார் என்பது ஒன்று. பள்ளு, பறையர் மீதான பெரியாரின் எதிர்மறைப் பேச்சு மற்றொன்று. இரண்டாவது அம்சத்திற்கு மட்டும் அ.மார்க்ஸ் அப்போதே வல்லினம் இதழில் பதிலெழுதினார். அதாவது, அப்போதைய தேர்தலில் (1962) தலித்துகள் திமுகவிற்கு வாக்களித்திருந்த காரணத்தினால் அவர்கள் மீதான கோபத்தில் பெரியார் விலக்கிக் குறிப்பிட்டார் என்று எழுதினார். அந்த விமர்சனத்தை எதிர்கொள்ளும் அவசரத்தில் எழுதப்பட்ட பதில் இது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பெரியார், எதிர்மறையாகக் கூறியதை “எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டுமென்றால்” என்று நியாயப்படுத்தி எழுதியவர்கள்தாம், இப்போது அயோத்திதாசரை அருந்ததியர் மறுப்புக் கூற்றுகளுக்காக மறுத்து எழுதிவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசரின் குறைபாடுகள், பெரியாரோடு அவரை முரணாக வைத்துப் பேசாதவரைச் சுட்டிக்காட்டப்படவில்லை.
தங்களுடைய கருத்துக்கு உடன்பட்ட அல்லது கீழ்ப்படிந்த பிம்பமாகவோ, கருத்தியலாகவோ இருந்தால் அவர்களிடம் முரண்கள் இருந்தால் கூடச் சொல்ல மாட்டோம். மாறாக, உடன்படாவிட்டால் முரண்களைச் சொல்லுவோம் என்கிற அர்த்தம் இப்போக்கில் வெளிப்பட்டன. இந்நிலையில்தான் எழுத்தாளர் ம.மதிவண்ணன் ‘அயோத்திதாசரின் பார்ப்பனியச் சிந்தனைகள்’ என்ற கட்டுரையை எழுதினார். அருந்ததியர் தரப்பிலிருந்து அயோத்திதாசர் மீது எதிர்மறை விமர்சனம் வந்த பின்னால் அயோத்திதாசரைப் பற்றிப் பேச நேரும் எல்லா இடங்களிலும் அவரின் அருந்ததியர் மறுப்பு மேற்கோள்களை மட்டும் காட்டிவிட்டு அவரின் பிற சாதகமான அம்சங்கள் எதையும் பேசாமல் முடக்கினார்கள்.
அயோத்திதாசரை விமர்சிக்கிற இக்கட்டுரையை ம.மதிவண்ணன் இப்படித்தான் ஆரம்பித்திருந்தார்: “தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியமும் தலித் அரசியலும் ஓரளவு வேரூன்றி விட்ட நிலையில் சமீப காலமாக தலித் அரசியலில் ஒரு புதிய மாற்றம் மிகத் தீவிரமாக முன் வைக்கப்படுவதை வாசகர்கள் அவதானிக்கலாம். தலித் அரசியலின் அறிமுக நிலையில் முன்வைக்கப்பட்ட அம்பேத்கரிய, பெரியாரியச் சித்தாந்தங்களில், பெரியாரைக் காலி செய்துவிட்டு அவ்வெற்றிடத்தில் அயோத்திதாசப் பண்டிதரை முன்னிறுத்துவதுதான் அந்த மாற்றம். பெரியார் சிந்தனைகளில் தலித் அரசியலுக்குப் பங்களிப்புச் செய்ய ஒன்றுமில்லையா? ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய பேச்சை மட்டுமே வைத்து பெரியாரைத் தலித்துகளுக்கு எதிராக நிறுத்திவிட முடியுமா என்பது போன்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, தோழர்கள் முன்னிறுத்தும் அயோத்திதாசர் அந்த இடத்துக்குத் தகுதியானவர்தானா என்பதைப் பார்ப்பதும் அவசியமாகிறது…”
பெரியாரை விமர்சனம் செய்த காரணத்தால்தான் அயோத்திதாசரை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிறது என்கிற அறிவிப்பு இதில் இருப்பதைக் கவனிக்கலாம். கட்டுரையின் நோக்கத்தை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். அப்போதைய அ.மார்க்ஸ் ஜ் ரவிக்குமார் முரண் இந்தக் கட்டுரையின் மீது எந்த அளவிற்குத் தாக்கம் செலுத்தியிருந்தது என்பதையும் புரிந்துகொள்ளலாம். பெரியாரிடம் காட்டப்பட்ட குறைகளுக்குப் பதிலாக அயோத்திதாசரிடம் இருக்கக்கூடிய குறைகளைக் கண்டெடுத்து வைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது. இதற்குப் பிறகு அயோத்திதாசர் பற்றிப் பேசக்கூடிய யாரும் அவருடைய எழுத்துகளில் இந்தப் பக்கத்தை – இந்த வரிகளை மட்டும் படித்ததைப் போல இந்த வரிகளை மட்டும் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டினர்.
இந்தக் கட்டுரை புதிய தடம் (ஜூலை செப்டம்பர் 2003) இதழில்தான் முதலில் வெளியானது. இதழை நடத்தியவர், ஆசிரியர் குழுவில் பங்கு பெற்றிருந்தவர்களில் பெரும்பான்மையினர் அ.மார்க்ஸின் கருத்தியல் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தவர்கள் என்பதும், கட்டுரையை எழுதிய ம.மதிவண்ணனும் அப்போது அ.மார்க்ஸ் அணியோடு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய தடம் இதழ் யாக்கனுடைய முல்லை அச்சகத்தில் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அப்போது ரவிக்குமாருக்கு எதிராக பெரியார் ஆதரவாக எழுதிவந்த புனித பாண்டியன், அயோத்திதாசர் பற்றிய இந்தக் கட்டுரையின் அருந்ததியர் விலக்கல் வாதங்களை எடுத்துத் தன் கட்டுரையில் சேர்த்துக்கொண்டார். இந்த வகையில் மதிவண்ணனின் கட்டுரையை ஒரு தொடக்கம் எனலாம். பிறகு கட்டுரைக்கு வெளியே மேற்கோள்கள் மட்டும் பரவ ஆரம்பித்தன.
தலித்துகளை விலக்கி பெரியார் பேசியிருந்ததைக் காட்டியபோது ஓரிரு வரிகளை வைத்துக்கொண்டு முடிவெடுக்கக் கூடாது என்று கூறியவர்கள், அயோத்திதாசரின் அருந்ததியர் விலக்க விஷயத்தில் மட்டும் அதைப் பொருத்தாமல் போனார்கள். அவருடைய எழுத்தில் சிதறிக் கிடக்கும் விமர்சனத்திற்குரிய பகுதிகளைக் கணக்கெடுத்து மொத்தமாக மதிப்பிடுவதற்குப் பதில் ஓரிரு மேற்கோள்களைக் காட்டி நிராகரித்தனர். மொத்தத்தில் அயோத்திதாசர் பற்றிய ஒட்டுமொத்த வாசிப்பிலிருந்து உருவான விமர்சனப்பூர்வமான மதிப்பீடாக இவை அமையவில்லை.
அதேவேளை ஒரு பிரச்சனை அல்லது விமர்சனம் எழுகிறதென்றால் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்ட தளத்திற்கு வெளியே மட்டும் தேடுவது பிரச்சனையிலிருந்து தப்பவும், திசை திருப்பவும் மட்டுமே உதவும். குறிப்பிட்ட விமர்சனத்திற்கான காரணம் அத்தளத்திற்குள்ளும் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். அந்த வகையில் அயோத்திதாசர் பற்றிய சம்பந்தப்பட்ட விமர்சனத்திற்கான வெளிக் காரணங்களை இதுவரைப் பார்த்த நாம் அயோத்திதாசரிடம் இதற்கான இடம் இருக்கிறதா என்பதையும் பார்ப்பதே சரியாக இருக்கும். அவ்வாறு பார்த்தால் இத்தகைய விமர்சனம் வைப்பதற்கான வேர் அயோத்திதாசர் எழுத்தில் இருக்கிறது என்பது உண்மை. அதை நாம் மறுத்துவிட முடியாது. எனில் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? அவரின் இக்கூற்றுகளை நியாயப்படுத்தாத அதேவேளையில் அவர் இவ்வாறு கூறியிருப்பதற்கான காரணங்கள் எவையாக இருக்கின்றன என்பதைப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.
II
அயோத்திதாசர் காலத்தில் நம் காலத்தைப் போல குறிப்பிட்ட காரணங்கள் அடிப்படையில் சாதிகளைக் குறிப்பிட்ட தொகுப்பிற்குள் (ஷிசி, ஙிசி, விஙிசி போல) அடக்கி விளக்கும் யோசனை உருவாகவில்லை. எனவே, இன்றைய அட்டவணைப்படுத்தப்பட்ட (ஷிசி) சாதி தொகுப்புகளைக் கணக்கில் வைத்துக்கொண்டு, அன்றைக்கு அயோத்திதாசர் எல்லாப் பட்டியல் சாதிகளையும் உள்ளடக்கிப் பேசியிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. எந்த ஒருவரையும் அவர் வாழ்ந்த காலத்தில் வைத்துப் பார்ப்பதும், அவற்றிலிருந்து சமகாலத்திற்குத் தேவையான விசயங்கள் எவை என்று வளர்த்தெடுப்பதும் என்கிற இரண்டு அணுகுமுறைகள் தேவை. அயோத்திதாசர் அவர் கால நவீன அரசியல் தேவைகளின் தாக்கத்தைக் கொண்டிருந்தார் என்றாலும், அவருடைய அணுகுமுறை முதன்மையாகப் பண்பாட்டு நோக்கிலானது. அரசியல், பண்பாடு என்ற இரண்டு அணுகுமுறைகளை எதிரெதிராக வைத்து அவற்றில் ஏதோவொன்றைக் குறிப்பாகப் பண்பாட்டை முற்றிலும் எதிர்மறையாகப் பார்க்கக்கூடிய அணுகுமுறையே இன்று அதிகமிருக்கிறது. ஆனால், அவ்வாறு எதிர்மறைகளிலிருந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. வெறெந்தத் தமிழகச் சிந்தனையாளரையும் விட பண்பாட்டுத் தளத்தின் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்தவராக அயோத்திதாசர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எது அவருடைய பலமாக இருந்ததோ அதுவே இன்றைய அரசியல் தளத்திற்கு வரும்போது பலவீனமானதாக மாறிவிடுகிறது. ஏனெனில் நம்முடைய அரசியல் புரிதல் என்பது முற்றிலும் நவீனக் காலச் சிந்தனா முறையால் உருவானதாகும்.
வெவ்வேறு அடையாளங்களுக்கிடையிலான பொதுமைக்கூறுகளைத் தொகுத்து ஒரே அரசியலாகக் கட்டுவது நவீன அரசியலின் அடிப்படையாகும். அவ்வாறு தொகுக்கும்போது அரசியல் நோக்கம் முதன்மை பெற்றுப் பண்பாட்டு அம்சங்கள் பின்னுக்குப் போகும். பண்பாட்டு ரீதியாகப் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட சாதிகளைக் குறிப்பிட்ட பொதுத்தன்மைகளின் கீழ் தொகுக்கக்கூடிய முறை இருபதாம் நூற்றாண்டு அரசியலில் உருவானது. இத்தகைய நவீனக் கால அரசியலுக்கு முந்தையவர் அயோத்திதாசர். சாதிகளை அவற்றின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் புரிந்து செயல்பட்டவராக இருந்தார். இதை அவருடைய பிழை என்று சொல்ல முடியாது. இன்றைய அரசியல் புரிதல்களானது சாதிகளுக்கிடையிலான பொதுக் கூறுகளை எடுத்துக்கொண்டு பண்பாட்டுத் தளத்தை முற்றிலும் புறமொதுக்கி உருவானதாகும். எனவே பண்பாட்டு நோக்கின் பலம், பலவீனம் இரண்டையும் நாம் அயோத்திதாசரிடம் பார்க்க முடியும். அவரை அக்காலகட்டத்தோடு இணைத்தே புரிந்துகொள்ள முடியும்.
அயோத்திதாசர் காலத்திற்கு முன்பும் அவர் காலத்திலும் நடந்தவை தனித்தனிச் சாதிகளின் எழுச்சிகளே. சாதி ரீதியான மாநாடுகள், கோரிக்கைகள், நூல்கள் அமைந்தன. ஆங்கிலேயர்களால் ஏற்கப்பட்ட நால்வர்ணச் சட்டகத்தில் தங்கள் சாதியை எவ்வாறு / எங்கு பொருத்த வேண்டும் என்பது குறித்த விவாதங்களைச் சாதி அமைப்புகள் நடத்திவந்தன. இப்பின்னணியில் பார்த்தால் அயோத்திதாசர் ஒட்டுமொத்த அட்டவணைச் சாதிகளுக்கான அரசியலைப் பேசியிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய யோசனை வரம்பிற்குள் அது வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இன்றைய சூழலில் இருந்து அவரைப் பார்க்க முடியாது. இது முதலாவது புரிதல். ஆனால், அவர் சார்ந்து செயல்பட்ட பறையர் வகுப்பினரை நால்வர்ணச் சட்டத்திற்குள்ளோ இந்து மதத்திற்குள்ளோ இருத்த அவர் உரிமை கோரவில்லை. இது மிக முக்கியமான விடயம். ஆதித்தமிழர், பூர்வ பௌத்தர், சாதி பேதமற்ற திராவிடர் போன்ற அடையாளங்களையே அவர் வலியுறுத்திச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பட்டியல் உருவாகாத காலமாக இருப்பினும் விளிம்புநிலையிலுள்ள மற்ற சாதிகளை இழிவாகக் கூறுவது நியாயமாகுமா என்ற கேள்வியெழுவது தவிர்க்க இயலாததாகிறது.
அயோத்திதாசர் பறையர் வகுப்பில் பிறந்து அவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளுக்கு எதிராகப் போராடினார். அவர்கள் மீது பரப்பப்பட்டிருந்த இழிவான கதையாடல்களை மறுத்து மாற்றுக் கதையாடல்களைக் கட்டியெழுப்பினார். இன்றைக்குப் பட்டியல் பிரிவில் அடங்கியுள்ள ஏதேனும் ஒரு சாதிக்காக ஒருவர் போராடியிருந்தாலும் அதையும் சாதியெதிர்ப்புப் போராட்டமாகவே நாம் கணக்கில் எடுக்க வேண்டும் / கணக்கில் எடுத்துவருகிறோம். அவ்வாறு போராடும்போது தங்கள் சாதி மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவை மறுத்துக் கூறுவது – அதற்கு எதிரான சொல்லாடல்களைக் கட்டமைப்பது – அதன்படி மக்களைத் திரட்டுவது போன்ற செயல்பாடுகள் நடக்கும். அதில் குறிப்பிட்ட சாதியின் பெருமை, எதிரில் இருக்கும் சாதி மீதான சாடல் போன்றவையும் இருக்கும். ஓர் ஒடுக்கப்பட்ட சாதி தன்னை எப்படிச் சொல்லிக்கொள்ள வேண்டும் என்பது, ஒடுக்கும் சாதி தன்னை எப்படிக் குறிப்பிடுகிறதோ அதைப் பொறுத்துத்தான் அமையும்.
பறையர் என்போர் மீது நிகழ்த்தப்படும் புறக்கணிப்புகளை அயோத்திதாசர் விரிவாகக் கண்ணுற்றார். அப்புறக்கணிப்பு அரசியல் ரீதியானதாக மட்டும் இல்லாமல் பண்பாட்டு ரீதியாகவும் இருந்தது. அவ்வாறு சுமத்திய இழிவைத் தொடர்ந்து வெவ்வேறு வகைகளில் நினைவுப்படுத்துவதன் மூலம் இந்தச் சமூகத்தில் அவர்கள் மீது உளவியல் ரீதியான ஒவ்வாமை உருவாக்கப்படுகிறது என்று கருதினார். சமகால நடைமுறைகள் மட்டுமல்லாமல் வரலாறு, புராணம், பாடல், நாடகம் என எல்லாவற்றிலும் இச்சமூகத்தின் மீது கடும் ஒவ்வாமை கற்பிக்கப்பட்டன.
இந்த இழிவுகள் இயல்பானதல்ல, பொய்யானது, திட்டமிட்டது என்பதைப் புரிந்துகொண்டு அதனை எதிர்கொள்ள அத்தளத்திலேயே செயல்பட்டார். குறிப்பாக, பறையர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே வழக்காறுகளிலும் கதைகளிலும் நிறுவப்பட்டிருக்கக்கூடிய எதிர்மறைகளுக்கான காரணம் என்னவென்று தேடினார். இன்றைய சாதிய நடைமுறை, உளவியல் ரீதியான கற்பிதத்திலும் இருப்பதைக் கண்டு அதனை எதிர்கொள்ள முற்பட்டார். ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளங்கள் மட்டும் (பிராமணர்) எப்போதும் பெருமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதற்கு இணையாக, மற்றொரு சாதி (பறையர்) பற்றிய அடையாளங்களெல்லாம் இழிவானதாகவே சொல்லப்படுகிறது. இங்கு பல்வேறு சாதிகள் படிநிலையாக அமைக்கப்பட்டிருந்தாலும் இவ்விரண்டு சாதிகளுக்கிடையில் மட்டும் இத்தகைய எதிர்மறை திட்டமிட்டு, கட்டமைக்கப்பட்டுப் பரப்பப்பட்டிருந்தது. இச்சூழலை எதிர்கொள்வது அவருடைய பணியாக இருந்தது. இதனை மறுக்கப் பல்வேறு தளங்களிலான ஆதாரங்களைத் தேடி திரட்டி எழுதிவந்தார். பறையர்கள் மீதான இழிவுகளுக்கு மாறாக வரலாற்றில் அவர்கள் வெவ்வேறு நிலைகளில் இருந்தனர் என்ற வரலாற்றைத் தேடி எழுதினார்.
சமகாலத்திலும் அத்தகைய இழிவுகள் நினைவுப்படுத்தப்படுகிறதென்று கருதி அவற்றையும் எதிர்கொண்டார். சாதி அபிமானம் உள்ளவர்கள் மட்டுமல்ல எதிர்ப்பவர்களும் கூட ஏதோவொரு வகையில் இத்தகைய இழிவுகளை நம்பியே அதன்பேரில் உதவ வருவதை அவர் பார்த்தார். இச்செயலால் மக்களுக்கு அரசியல் ரீதியாக உரிமை கிடைத்துவிட்டாலும், சமூக உளவியலில் அவர்கள் இழிவானவர்களாகவே இருத்தப்படுகிறார்கள் என்று கருதினார். இதில் பிராமணர்களே மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபட வருவதில் சூது இருப்பதாகக் கருதினார். இவ்வாறு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது அவருடைய முயற்சிகளை முறியடிக்கக் கூடியவையாக எவற்றைக் கண்டாரோ, சந்தேகப்பட்டாரோ அவை சிறிதளவானதாக இருந்தாலும் அவற்றை மிகக் கடுமையாக எதிர்கொண்டார். இதை அவருடைய ஆவேசமான நிலைப்பாடு என்று சொல்லலாம். இவற்றை வைத்து அருந்ததியர் குறித்த அவரின் விலக்கத்தை நியாயப்படுத்த முடியாதென்றாலும், அவரின் ஆவேசத்திற்கான காரணத்தை இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காகக் கூறப்படுகிறது.
பறையர்கள் மீது நுட்பமான முறையில் தொடர்ந்து இழிவுகள் சுமத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறபோது இவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த விசயத்தில் சிறிய பதிவு என்றாலும் குறிப்பாக ‘உயர்’ வகுப்பினர் என்றால் உடனே எதிர்வினையாற்றினார். அப்படித்தான் பாரதி தம்முடைய கவிதை ஒன்றில் ‘ஈனப்பறையர்களேனும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியபோது தன்னுடைய தமிழன் இதழில் மறுத்து எழுதினார். பாரதி பறையர்களை இழிவுப்படுத்த அச்சொல்லைக் கையாண்டிருக்கவில்லை என்றாலும் அவர்கள் மீதான இழிவு எதிர்மறையான தொனியிலேயும் நினைவுப்படுத்துகிறது என்பதால் எதிர்த்தார். இந்தப் பின்னணியில்தான் அருந்ததியர் பற்றிய அவரின் நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அயோத்திதாசர் அருந்ததியர் பற்றி எதிர்மறையாகக் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான இடங்களைக் கவனிக்கும்போது ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். விளிம்புநிலைச் சாதிகளைச் சீர்திருத்தப் போகிறோம் என்று பிராமணர்கள் / தேசிய இயக்கத்தினர் அறிவித்தபோது அயோத்திதாசர் விமர்சித்து எழுதியிருக்கிறார். பறையர்கள் மீது பிராமணர்கள் சுமத்திவரும் இழிவை மாற்ற வேண்டும் என்று அவர் இயங்கிவந்த தருணத்தில், பறையர்களோடு அருந்ததியர், குறவர் உள்ளிட்ட பிற சாதிகளை இணைப்பதன் மூலம் அந்த இழிவிலிருந்து அவர்களை விலக்குவதைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று கருதினார். இச்சாதிகளை விலக்கி அவர் எழுதியிருக்கக்கூடிய எல்லா இடங்களும் இதுபோன்று எதிரிலிருப்போர் காரணமாகவே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (பல வேளைகளில் இவ்வகுப்பினரும் அந்த இழிவு காரணமாக இவர்களைப் புறக்கணித்தனர் அல்லது தொடுவதில்லை என்றும் அவர் எழுதியிருக்கிறார்.) இந்த இடத்தில் அச்சாதிகளைத் தங்களோடு சேர்க்கக் கூடாது என்பதை விடவும் அச்சாதியினரைச் சேர்ப்பவர்களின் நோக்கம் குறித்து எழக்கூடிய சந்தேகமே அவருக்கு முதன்மையாக இருந்திருக்கிறது. இதன்படி முதன்மைக் காரணம் அருந்ததியர்கள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சாதிகள் அல்ல, மாறாக பிராமணர்கள்.
அருந்ததியர்கள், குறவர்கள் உள்ளிட்ட சாதிகளைக் கீழாகப் பார்க்கக்கூடிய பார்வை அன்றைக்கு வேறு பலரிடமும் இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே அயோத்திதாசரிடமும் வெளிப்பட்டிருக்கிறது என்று யூகிக்க முடிகிறது. குறிப்பாக, சென்னை லௌகீகச் சங்கத்தின் தத்துவ விவேசினி இதழிலும் பிறகு அயோத்திதாசரின் தமிழன் இதழிலும் எழுதிய சுயமரியாதை இயக்கத்தினராலும் எடுத்தாளப்பட்ட எழுத்தாளரான ம.மாசிலாமணி முதலியார் எழுதிய தீவிர பிராமண எதிர்ப்பு நூலான ‘வருண வேத விளக்க’த்தில் இதே போன்ற பார்வை படிந்திருப்பதைப் பார்க்கிறோம். இந்நாட்டவர் என்றாலும் “நாடோடிகளாக இருக்கும் அநாகரிகர்களாகிய குறவர், தொம்ப(ரவ)ர், மறவர் மட்டும் இன்னமும் முன்போலவே பலவகைப் பிராணிகளுடைய மாமிசங்களையும் புசித்துவருகின்றனர்” என்று எழுதியுள்ளார் (ப.611, தொகுதி – 1, வீ.அரசு (ப.ஆ) தத்துவவிவேசினி) இப்பார்வை இந்த முன்னோடிகளுக்கு எப்படி, ஏன் வந்தது என்று தெரியவில்லை. இவை ஆராயப்பட வேண்டும். இதற்கு வேறு ஏதேனும் மூலங்கள் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது அல்லது காலனிய கால எழுதுமுறையில் இருந்து உள்ளூர்க்காரர்களுக்கும் பரவியதா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைக் கீழாகப் பார்ப்பது அயோத்திதாசருடைய பார்வை மட்டுமே என்று சொல்ல முடியாது.
இவ்வாறு எவ்வளவுதான் எழுதினாலும் இன்றைய அடிப்படை – சொல்லப்படாத பிரச்சனை தமிழக தலித் கருத்தியல் களத்தில் அயோத்திதாசர் மேலெழுகிறார் என்பதுதான். அது பறையர் மேலாதிக்கமாக இருந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதற்கு அயோத்திதாசர் பொறுப்பேற்க முடியாது. இதனை நேரடியாக மறுக்க முடியாமல் அம்பேத்கர் பௌத்தத்தின் மூலம் எதிர்கொள்ள முனைகிறார்கள் எனலாம். (பௌத்தம் தொடர்பாக அயோத்திதாசருக்கும் அம்பேத்கருக்கும் உள்ள வேறுபாட்டை வாய்ப்பு இருந்தால் வேறொரு தனிக் கட்டுரையில் காணலாம்.)
III
பட்டியல் சாதிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லையென்பது அடிப்படையில் ஓர் அரசியல் பிரச்சனை. அரசியல் ரீதியாகப் புரிந்து, அரசியல் ரீதியாகத் தீர்க்கக் கூடியது. மற்ற தளங்களும் இம்முயற்சிக்கு உதவியாக அமையலாம். தலித் சாதிகளுக்கிடையே ஒற்றுமை வேண்டும் என்று விரும்பும், போராடும் நபர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். கசப்பான அனுபவங்களிலிருந்து விலகிக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். எனவே இன்றைய தலித் சாதிகளுக்கிடையிலே ஒருங்கிணைவு எனும்போது முதலில் அரசியல் தளம் சார்ந்து யோசிக்க வேண்டும். அதற்கான மொத்தக் காரணிகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். ஆனால் அது இங்கு பேசப்படுவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அயோத்திதாசர் போன்ற சிந்தனையாளர்கள்தாம் காரணம் என்பதுபோல பேசப்படுகிறது. அயோத்திதாசர்தான் காரணம் என்றால் அவர் சிந்தனையோடு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறும் கோரிக்கையை வைப்பது ஏன்? ஞான.அலாய்சியஸின் அயோத்திதாசர் சிந்தனைகள் நூல் தொகுப்பு வருவதற்கு முன்பே அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரர் ஆகிய சாதிகளுக்கிடையே முரண்பாடுகளும் தனித் தனி அரசியல் அமைப்புகளும் உருவாகிவிட்டன. ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்தந்தச் சாதிகள் தனித்தனி அமைப்புகளாக இயங்குவதற்கான நியாயங்களும் கண்டுபிடித்துக்கொள்ளப்பட்டன.
இங்கு அயோத்திதாசர் மீது குற்றச்சாட்டு வைப்பதற்காக இல்லாத ஒன்றை இருப்பது போன்ற தோற்றம் தரப்படுகிறது. அதாவது பௌத்தம் இங்கு செல்வாக்கோடு இருந்தது / இருக்கிறது போலவும் அதை அயோத்திதாசர் காலி செய்துவிட்டார் அல்லது அதை ஒற்றைச் சாதிக்கானதாக மாற்றிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. இன்னும் சொல்லப்போனால் பண்டிதருடைய வருகைதான் பௌத்தத்தை இன்றைக்கு உயிர்ப்பித்திருக்கிறது. அரசியல் தளத்தில் உருவாகிவிட்ட முரண்பாடு காரணமாக மூன்று சாதிகளும் இன்றைக்கு ஒருங்கிணைவதில்லை. பட்டியல் சாதி அமைப்புகளில் தனியாகவோ கூட்டாகவோ இவற்றை நடத்துவதே இல்லை.
அதேபோல அயோத்திதாசரைப் பற்றி இன்று பேசுபவர்கள் எல்லோரும் அருந்ததியர் குறித்த அவரது எதிர்மறைப் பார்வையை ஏற்றுக்கொண்டவர்கள் என்று கருத வேண்டியதில்லை. அயோத்திதாசரை ஏற்றுக்கொண்டவர் சாதி ஆதரவாளர், ஏற்றுக்கொள்ளாதவர் சாதி கடந்தவர் என்று கறுப்பு வெள்ளையாகவும் பார்க்கத் தேவையில்லை. தீவிர பறையர் அரசியல் பேசுவோரில் சிலர் அயோத்திதாசர் பௌத்தம் பேசினார் என்பதாலேயே எடுத்துக்கொள்வதில்லை என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
அயோத்திதாசரைப் பற்றி விரிவாக எழுதியவர்களில் மூவரை இங்கு குறிப்பிட வேண்டும். ஒருவர் ஞான. அலாய்சியஸ், இரண்டாமவர் ராஜ் கௌதமன், மூன்றாமவர் டி.தருமராஜ். இதில் ஞான.அலாய்சியஸ் அயோத்திதாசரை முழுமையாக வாசித்து அதிலிருந்து ஒரு பார்வையை உருவாக்கி முன்வைக்கிறார். குறிப்பாக அயோத்திதாசரைத் தமிழ்நாட்டுப் பிராமண எதிர்ப்பு அரசியலின் முன்னோடியாக – பெரியாருக்கு முன்னோடியாகக் கொள்கிறார். ஆனால், அவர் எந்த இடத்திலும் அயோத்திதாசருடைய மேற்கண்ட கூற்றுப் பற்றிச் சொல்லவோ விமர்சிக்கவோ இல்லை. ராஜ் கௌதமன் அயோத்திதாசர் பற்றியான முழு நூலை எழுதியிருந்தபோதிலும் அயோத்திதாசரைச் சற்றே விமர்சனப்பூர்வமாகவும், நவீன அறிவியல் சார்பு பௌத்தம் காரணமாக லட்சுமண நரசுவை விதந்தோதுபவராகவும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. அயோத்திதாசரை நவீனக் கோட்பாட்டு வாசிப்பின் பின்னணியில் பொருத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றவர் டி.தருமராஜ். அயோத்திதாசருடைய பரப்பை மதிப்பிட்ட டி.தருமராஜ், அவரது வரையறை என்ன என்பதையும் எழுதியிருக்கிறார். இந்தச் சிந்தனையாளர்களின் சாதியைக் குறிப்பிடுவது நியாயமல்ல என்றாலும், அயோத்திதாசர் மீதான குற்றச்சாட்டைப் புரிந்துகொள்வதற்கான காரணம் கருதி மட்டும் இங்கு குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. அயோத்திதாசரை விமர்சனப்பூர்வமாகப் பார்த்த ராஜ் கௌதமன் மட்டுமே அயோத்திதாசரின் சாதியைச் சேர்ந்தவர். எனவே அயோத்திதாசர் வாசிப்பாளர்கள் அனைவரையும் சுயசாதியினர் என்றடக்குவது முழுமையான பார்வையல்ல.
அயோத்திதாசரை வாசித்தவனாகவும் அவரைத் தொடர்ந்து தமிழில் எழுதி – பேசி வரக்கூடியவன் என்ற முறையிலும் அயோத்திதாசரின் இடம் என்ன என்பது பற்றி நான் சிலவற்றைச் சொல்ல முடியும். நவீன அரசியலை ஏற்றவர்களிடம் ஒரு பொதுவான பார்வை இருக்கிறது. மரபை எதிரானதாகவும் நவீனத்தைச் சார்பாகவும் பார்க்கக்கூடிய பார்வையே அது. ஆனால், நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய இதுவரையிலான அனுபவங்களிலிருந்து பார்க்கும்போது இதுபோன்ற பார்வைகளை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. முற்றிலும் எதிரானது என்றோ, முற்றிலும் சரியானது என்றோ ஒன்று இருக்க முடியாது என்பதே இன்றைய புரிதல். எனவே நாம் மரபை முற்றிலும் எதிரானதாகப் பார்க்கிற பார்வையிலிருந்து மாறியாக வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மரபில் இருக்கக்கூடிய செழுமையான கூறுகளைக் கண்டுகொள்வதற்கு – புரிந்து கொள்வதற்கு அயோத்திதாசரின் எழுத்துகள் உதவுகின்றன. மேலும், உள்ளூர்ப் பண்பாட்டு வரலாற்றை அடித்தள மக்கள் நோக்கிலிருந்து எழுதுவதற்குப் பல்வேறு சான்றுகளை அயோத்திதாசர் விட்டுச் சென்றிருக்கிறார். குறிப்பாக, அவருடைய பௌத்தம் தொடர்பான உரிமைக்கோரல்கள் பலவும் கற்பனையானவை என்று நம்பிக்கொண்டிருக்கும் நமக்கு, அவர் சொல்லியிருக்கக்கூடிய விளக்கங்களுக்கு உள்ளூர் மரபிலேயே சான்றுகள் இருக்கின்றன என்பது பெரும்பாலும் தெரியாது.
எல்லாவற்றைக் காட்டிலும் அயோத்திதாசரிடம் வேறொரு விஷயம் இருக்கிறது. ஒரு சிந்தனையாளரை அவர் கூறிச் சென்ற கருத்துகள் அடிப்படையில் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இதுதான் இங்கிருக்கும் பெரும்பான்மை வழக்கம். ஆனால், இன்னொரு விதம் இருக்கிறது. ஒருவர் கூறிய கருத்துகளுக்கு அப்பால், அவருடைய அணுகுமுறைகளும் யோசனா முறைகளும் கூட நமக்கு உதவலாம். அயோத்திதாசர் இந்த இரண்டு விதத்திலும் நமக்குப் பயன்படுகிறார். அயோத்திதாசர் பற்றிய இதுவரையிலான ஏற்பும் மறுப்பும் பெரும்பாலும் முதல் வகை சார்ந்தே அமைந்திருக்கின்றன. என்னளவில் அவருடைய கருத்துகளைப் போலவே அவர் சிந்திக்கும் விதமும் நமக்கு அதிகம் உதவ முடியும் என்று பரிந்துரைக்கிறேன். அவர் குறிப்பிட்ட சாதி சார்ந்து இவற்றையெல்லாம் பேசியிருந்தாலும், அவரின் யோசிக்கும் முறைகளை இந்தியா முழுக்க இருக்கக்கூடிய ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதான ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான பரந்துபட்ட அணுகுமுறையாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை. அயோத்திதாசரை அந்த விதத்தில்தான் நான் அதிகம் பயன்படுத்துகிறேன், பிறருக்கும் பரிந்துரைக்கிறேன்.
அவரின் அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டு சமகாலத் தரவுகளைக் கையாண்டு நாம் புதிய யோசனை முறையைச் சமைக்க முடியும். இப்படி உலகில் பல சிந்தனையாளர்கள் உண்டு. அவ்வாறு பார்க்கும்போது அயோத்திதாசர் என்னும் தனிமனிதரிலிருந்து நாம் விலகிவிடுகிறோம். அவரைச் சிந்தனையாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக, சாதி அமைப்பு பரவிய விதத்தை, அது நிலைபெற்ற விதத்தை மேற்கத்திய அளவுகோள்களின்படி புரிந்துகொண்டிருக்கிறோம். அதே வேளையில், சாதி அமைப்பு உருவான உள்ளூரில் பிறந்த ஒருவரின் புரிதலிலிருந்து விளக்குவதன் அனுகூலத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல இங்கிருக்கக்கூடிய பண்பாட்டு விஷயங்களை உள்ளூர் மரபிலிருந்து வாசிப்பதற்கான ஒரு முறைமையையும் அயோத்திதாசரிடம் காண்கிறோம். இந்த இரண்டையும் கையாளும்போது, அங்கு அயோத்திதாசர் என்கிற பெயர் கூட அவசியமில்லை, வேறு சில அணுகுமுறைகளில் கிடைக்காத புரிதல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. அவற்றை நாம் இன்னும் போதுமான அளவுக்குப் பயன்படுத்தவில்லை. பயன்படுத்துகிறபோது அதன் அளவு விரியும் என்று நினைக்கிறேன்.
குறைகளற்ற – எல்லாக் காலத்திற்கும் முற்றும் பொருத்தமான சிந்தனையாளர் என்று யாரும் இருக்க முடியாது. பெரியாரின் சில தலித் விலக்கக் கூற்றுகள் இருந்தாலும் மொத்தப் பணிகள், விளைவுகள், கூற்றுகள் சார்ந்து அவரின் இடத்தை மதிப்பிடுவதைப் போல அயோத்திதாசரை மதிப்பிடும் போக்கு இங்கு வளரவில்லை. ‘அம்பேத்கருக்கு முன்னாலேயே பௌத்தம் பேசியவர்’, ‘பெரியாருக்கு முன்னாலேயே திராவிடம் பேசியவர்’ என்கிற சலுகைகளைத் தாண்டியவை அவரது சிந்தனைகள். இவ்வகை பேச்சுகளுக்கு அவ்வப்போதைய கவன ஈர்ப்பு என்பதைத் தாண்டி அதிக ஆயுள் கிடையாது. அயோத்திதாசர் பற்றிய இன்றைய புரிதல் அவரைப் பற்றி எழுதிய ஆய்வாளர்களை வைத்து உருவாகியிருக்கிறது. அயோத்திதாசரை நேரடியாக வாசிக்க வேண்டும். தலித் ஒருவரின் சிந்தனா முறை தலைமையானதாகவோ – முதன்மையானதாகவோ இருப்பது குறித்த பதற்றம் அவரின் குறைகளில் போய் இடம் தேடிக்கொண்டுவிட்டது. அயோத்திதாசரை வாசிப்பதிலிருந்து தப்புவதற்கு – அவரை எதிர்கொள்வதிலிருந்து மறைவதற்கு அவரின் குறைகள் சாக்காக மாறிவிட்டன. நூறாண்டுகளாக ‘மறைக்கப்பட்டிருந்து’ மீண்ட ஒருவரை வாசிப்பிலிருந்து அகற்ற மீண்டுமொரு தடையரண் எழுப்பப்பட்டிருக்கிறது. வழமையான சிந்தனா முறைக்கு மாற்றாக அவரைப் புரிந்துகொள்ளும் பலமில்லை என்பதை மறைக்க இம்முறை ஒடுக்கப்பட்ட சாதிகள் பற்றிய அவரின் குறைபாடுள்ள பார்வை காரணமாக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அயோத்திதாசர் பற்றிய பேச்சென்றால் அவரை அம்பேத்கரோடும் பெரியாரோடும் ஒப்பிடுவது இங்கிருக்கும் வழமையான அரசியல் பார்வையால் விளைகிறது. அத்தகைய ஒப்பீடு அவரை நிராகரிப்பதற்காகத்தான் என்றாகியும் விட்டது. ஆளுமைகளைவிட மாற்றம்தான் முக்கியம். அயோத்திதாசர் வேறு புலங்களோடும் ஒப்பிடப்பட வேண்டியவர். அதேபோல அவரைப் பற்றிய மதிப்பீடு அரசியல் பார்வை சார்ந்துதான் இருக்க வேண்டுமென்பதில்லை. அயோத்திதாசர் பற்றிய டி.தருமராஜின் எழுத்துகளை இவ்வாறு மட்டும் பார்த்ததால்தான் பல நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்கிறோம். சாதி பற்றி நிறைய அணுகுமுறைகள் இங்கிருந்துள்ளன. அவற்றையெல்லாம் தொகுப்பதும் கணக்கெடுப்பதும் அவசியம். ஒரு விஷயத்திற்கு ஒரு சிந்தனையாளர் மட்டும் போதும் அல்லது சரி என்பது குறுகிய அரசியல் பார்வை. ஒரு சிந்தனையாளரைப் பேசுவதாலேயே வேறொரு சிந்தனையாளரைத் தள்ளி வைக்கிறோம் என்பது அர்த்தமல்ல. ஆனால், இங்கு பெரும்பாலும் அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது..
இங்கு வாசிப்பு மீதான அர்த்தம் யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே உருவாகிறது. அயோத்திதாசர் பற்றிய தமிழ்ச் சூழலின் இன்றைய அர்த்தம் இதன்படிதான் உருவானது. நீண்டதாக எழுதிவிட்டாலும் இக்கட்டுரை மீதான வாசிப்பு எவ்வாறு அமையும் என்பது தெரியாமலில்லை. இதே தகவல்கள் என்னுடைய பெயரல்லாமல் வேறு பெயரில் எழுதப்பட்டிருந்தால் வேறு மாதிரி வாசிக்கப்பட்டிருக்கும். எனவே இங்கு தரவுகளை விட, தர்க்கங்களை விட பெயர்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. குறிப்பிட்ட பெயர் என்றால் படிப்பதற்கு முன்பே அவர் பற்றிக் கொண்டிருக்கும் நிலைபாட்டிற்கேற்ப ஓர் அர்த்தம் உருவாகிவிடுகிறது. வேறு பெயர் என்றால் வேறொரு நிலைப்பாடு.
இக்கட்டுரையில் அயோத்திதாசரின் கூற்றுகளுக்கு மட்டும் விளக்கம் தந்து ஒதுங்கியிருக்க முடியும். மாறாக, அயோத்திதாசர் வாசிப்பின் மீது அன்றைய அரசியல் சூழல் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது, பிறகு அது அயோத்திதாசர் பிம்பத்திற்கான பௌதீகச் சக்தியாக மாறியவிதம் என்ன என்பதைச் சொல்லவே இவ்வாறு எழுத வேண்டியிருந்தது. எனவே, இது அயோத்திதாசர் பற்றிய கட்டுரை மட்டுமல்ல, வாசிப்பு குறித்த கட்டுரையும் கூட. வாசிப்பைச் சார்ந்து சார்பு அல்லது எதிர்ப்பு உருவாவதைவிட நிலைப்பாடுகளே வாசிப்பை முடிவு செய்கின்றன என்பதுதான் இங்கிருக்கும் சிக்கல்.