சத்திரிய விரும்பிகளும் அரசின் அங்கீகாரமும்

ஞா.குருசாமி

காலனிய காலத்தில் சாதிக் கதைகள் எழுதப்பட்டபோது தம்மைப் பூர்வகுடியாக வரைந்துகொள்வதில் எல்லோருக்குள்ளும் பெருவிருப்பு இருந்திருக்கிறது. உழைப்பு, கல்வி, ஆராய்ச்சி, பண்பாடு, மொழி என்னும் பல்வேறு பிரிவுகளில் என்னவிதமான தேடல்கள் இருந்தாலும் அவற்றைச் சாதியோடு இணைத்துப் பார்ப்பதும் புரிந்துகொள்வதும் வழக்கமான பாணியாக இருந்திருப்பது தெரிகிறது. சாதிக் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே திராவிட மொழிகள் குறித்த ஆராய்ச்சிகளும் துவங்கியிருந்தன. சாதியின் பெருமையை நிலைநாட்ட அதை மிகத் தொன்மையானதாகவும் புனிதமானதாகவும் காட்டுவதற்கான வேலைகள் நடந்ததைப் போலவே மொழியின் பெருமையை நிலைநாட்ட அதன் தொன்மையும் புனிதமும் நிறுவப்பட்டுக்கொண்டிருந்தது.

அந்த வகையில் மொழியின் தொன்மையை நிறுவுவதற்காகச் செய்யப்பட்ட சொல்லாராய்ச்சிகள் ஒருகட்டத்தில் சாதிக் கதைகளில் சாதியின் பூர்விகத்தை நிறுவுவதற்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றன. ஒரு சொல்லின் வேரை ஆராய்ந்து, அதன் காலத்தை வரையறுத்து மொழியின், தொன்மையை நிறுவி அது வெகுமக்களின் ஏற்பினைப் பெற்ற பிறகு அந்த ஏற்பு உருவாக்கியிருக்கும் பெருமிதத்தின் வெளிகளில் சாதிக் கதைகளை எழுதி உலவவிட்டனர். அவ்வாறு செய்யும்போது மொழியின் தொன்மையைச் சாதியின் தொன்மைக்கு மடைமாற்றிவிடும் போக்கு இயல்பாக நடந்திருக்கிறது.

பெருமிதத்தால் உருவான வெளிகளின் வாயிலாக எல்லோருக்குமான பொது அடையாளத்தை நிறுவும் முயற்சியினூடே அவற்றைச் செய்துகொண்டிருந்தவர்களே, சாதி சார்ந்த அடையாளத்தைப் பூர்விகமாக்கும் தொழிற்பாட்டையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார்கள். சுற்றி வேலியடைத்துக்கொண்டு தமக்கான பயிருக்கு உரமூட்டி வளர்ப்பதைப்போல சொல்லாராய்ச்சியை அனைவருக்குமான வேலியைப் போலச் செய்து தம்மைப் பூர்விகமாக்குவதற்குச் சாதிக்கதையின் வழி பயன்கொண்டிருக்கிறார்கள். சான்றாக அரசுத் தரப்புக்கும் சாதிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சில செயல்பாடுகளைப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் அரசின் அறிக்கைகள் சாதியை வகைப்படுத்தி ஒவ்வொரு சாதிக்குமான தொழில்களைக் குறிப்பிட்டு வெளியானபோது சாதிப் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஒன்றுக்கு மேற்பட்ட சாதிகள் ஒரே அடையாளத்தைத் தமக்கான உரிமையாகக் கோரும்போது அவர்களுக்கிடையே பூசல்கள் வெடித்தன.

இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் சென்னை, தண்டையார்பேட்டையில் வாழ்ந்தவரான த.விஜயதுரைச்சாமியின் படைப்புகள் சொல்லாராய்ச்சி குறித்தும் அதன்வழியாக நிறுவ விரும்பும் தமது சாதிக்கான இடம் குறித்தும் தொழிற்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு அக்காலத்தியத் தமிழ்ச் சமூகத்துப் பொது மனநிலையின் ஒரு பகுதியைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். காலந்தோறும் சாதிய ஓர்மையில் தமிழ்ச் சமூகம் கவனம் செலுத்திவந்திருந்தாலும் காலனிய காலத்து ஓர்மை முந்தையவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது.

த.விஜயதுரைச்சாமி க்ஷத்திரிய மித்திரன் பத்திரிகை நடத்தியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர். ‘ஆரிய க்ஷத்திரிய குல விளக்கம்’ (1910), ‘நமது குலத்தொழில் யாது?’ (1922), ‘நாடார் என்னும் சொல்விளக்க ஆராய்ச்சி’ (1927) முதலிய நூல்களை எழுதியிருக்கிறார். அவருடைய அனைத்து நூல்களையும் எழுத்துகளையும் வாசிப்பதற்குப் பதிலாக ‘நமது குலத்தொழில் யாது?’ மட்டும் வாசித்தால் போதுமானது. ஏனெனில், அது அவரது ஒட்டுமொத்த எழுத்தின், அரசியல் நிலைப்பாட்டின் சாரமாகவே அமைந்திருக்கிறது. ஒரு சாதியைச் சத்திரியராக வரையறுப்பதற்கும் தொழில்சார்ந்து அடையாளப்படுத்துவதில் இருக்கும் தீவிர முனைப்புக்கும் ‘நமது குலத்தொழில் யாது?’ ஒரு சான்று. 1922 ஏப்ரல் 24 அன்று கமுதி வித்தியாபிவிர்த்தி சங்கத்தின் 5, 6ஆவது வருட நிறைவு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் அந்நூல். அதே ஆண்டு ஜூன் 29ஆம் நாள் சிவகாசியில் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் கள் இறக்கும் தொழிலைச் செய்யக் கூடாது, ஏலம் எடுக்கக் கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்துப் பேசும்போதும் கமுதியில் பேசியதைத்தான் பேசியிருக்கிறார்.

தொழில் அடைப்படையில் சாதி தோற்றம் பெற்றது என்று சொல்லப்படுவதுண்டு. இதுகுறித்து நேர், எதிர் ஆராய்ச்சிகள் நிறைய வந்துவிட்டன. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரே தொழிலைச் செய்ய வேண்டிய கட்டாயம் இன்றில்லை. எண்ணப்போக்கின்படி தொழிலை மாற்றிக்கொள்வதற்கு ஒருவருக்கு முழு உரிமையும் வாய்ப்பும் இருக்கின்றன. தொழில்தான் ஒருவரது சாதியைத் தீர்மானிக்கிறது என்றால் ஒருவர் தமது தொழிலை மாற்றிக்கொள்ளும்போது ஏன் அவரது சாதி மாறுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.

விஜயதுரைச்சாமி “வாய்ப்புகள் கிடைக்கும்போது தொழிலை மாற்றிக்கொண்ட வரலாறுகள் இருக்கின்றன. அப்படி மாற்றிக்கொண்டவர்கள் சத்திரியர்களாகத்தான் இருக்க முடியும்” என்பதாகத் தமது கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆட்சியில் இருந்த அரசர்கள் வீழ்ச்சியுறும்போது அவர்கள் வாழ்வதற்காகத் தேர்ந்துகொள்ளும் வேலையை ‘ஆபத்துத் தருமம்’ எனக் குறிப்பிடுபவர், அதை நிறுவ மனுவில் இருந்து சான்று காட்டுகிறார். ‘ஆபத்துத் தருமம்’ மேற்கொள்ள அரசர்களுக்கு அனுமதி இருந்தது என்பது அவரது வாதம். வங்காளத்தில் போர் செய்வோராக இருந்தவர்கள் தற்போது வணிகராக மாறியிருக்கிறார்கள் என்கிற ஷ்.ஷ்.ஹண்டரின் கூற்றை மேற்கோள் காட்டி, தம்முடைய சாதி வணிகம், கள் இறக்கும் தொழிலில் ஈடுபடுவதால் அவர்களின் பூர்விகம் அப்படித்தான் இருந்தது என்பது பொருளாகாது. அவர்கள் வீழ்த்தப்பட்டவர்கள், அரச குலத்தவர்கள் என்கிறார் வி.து.

1924இல் சத்திரியர் யார் என்பதில் நாடாருக்கும் வன்னியருக்கும் பூசல் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றார்கள். இதையொட்டி வி.து. தனது நூலில் சில முடிவுகளை வைத்தார். துரானியர் என்பதன் மரூஉ திராவிடர் என்பதாகும். மோட்சம் செல்வதற்குச் சமயம் மட்டுமே அல்ல, சாதியும் துணை செய்கிறது. சோழன் ஈழன் வம்சத்தில் உதித்தவர்களே ‘சான்றோர்’ எனப்படும் கிராமணிகள் ஆவர். ஸ்ரீராமர் என்பதே தமிழில் கிராமணி ஆனது. புராணங்கள் முகமதியர் ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டன. மாற்றுகின்ற வேலையைப் பிராமணர்களே செய்தனர். கிருஷ்ணன் மரபில் உதித்த சந்திரகுல அரசர்களே கிராமணிகள். அப்பெயர் தொடக்கக் காலம் தொட்டு இன்றுவரை வழங்கிவருகிறது. பிரம்மனின் இடது தோளில் பிறந்தவர்கள் சந்திரகுல சத்திரியர்கள், வலது தோளில் பிறந்தவர்கள் சூரியகுல சத்திரியர்கள். சோழர்களும் ஈழ ராஜாக்களும் கிராமணிகள் ஆவர். பார்ப்பனர்களுக்குப் பணியாத அரசர்கள் சூத்திரராக்கப்பட்டனர். இழிதொழில் புரிந்தாலும் கிராமணிகள் சத்திரியரே தவிர, தாழ்ந்த குலத்தவர் ஆகார் என்பன கிராமணி சாதியார் குறித்து விஜய துரைச்சாமி கூறுவனவாகும்.

கள் குடித்தல் இழிவாகப் பார்க்கப்பட்ட காரணத்தினால் அத்தொழிலைச் செய்தவர்களும் இழிவாகப் பார்க்கப்பட்டனர். இன்றைக்குக் குறிப்பிட்ட தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள் நெடுங்காலத்திற்கு முன்பும் அதே தொழிலைத்தான் செய்தார்கள் என்று இல்லை. தொழிலை மாற்றிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. கிராமணிகள் இன்று கள் இறக்கும் தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆண்டாண்டு காலமாக கள் இறக்கியவர்கள் என்று பொருளாகாது. அவர்கள் அரசாட்சி செய்த சத்திரியர் என்பது வி.து.வின் உள்ளக்கிடக்கையாக இருந்திருப்பதை அவர்தம் எழுத்துகள் தெரிவிக்கின்றன.

பாண்டிய வம்சமே நாடார்கள். பிறமொழி பேசுகிறவர்களை நீக்கிவிட்டு பூர்வத் தமிழர்களை நான்கு வருணமாகப் பிரித்தோமானால் நாடார்களே சத்திரியர்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும். சாதிப் பெயர்கள் எதிர்மறைப் பொருளைக் கொள்ளாது. அந்த வகையில் தட்டான், கரையான் என்பன சாதிப் பெயரல்ல. பட்டப் பெயர்களே ஆகும். அது போலவே நாடான், நாடார் என்பதும் பட்டப்பெயரே. சந்திர குலத்தவர் நாடார், சூரிய குலத்தவர் கிராமணி. ஐயர் என்பது பிராமணருக்குரிய பட்டப்பெயர். நாடார் என்பது சான்றார் குலத்தவர்களுக்கு வழங்கிவரும் பட்டப்பெயராகும். குலம், குணம், கொடை, பதினெட்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி, அறிவு, கல்வி ஆகியவற்றால் நிகரற்று விளங்கியதால் சான்றோர், சான்றார் என்னும் கௌரவப் பட்டப்பெயர் நாடாருக்குக் கிடைத்தது என்கிறார் வி.து. இந்தச் செய்திகள் அனைத்தும் அவரது ‘சான்றோர் புராணம்’ நூலில் இடம்பெற்றுள்ளன. அந்நூல் வெளியானது 1914ஆம் ஆண்டில். ஆனால், அதன் முன்னுரை 260 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அகத்தீஸ்வரத்திலிருந்து பிறையாறு வந்து குடியிருந்த ஸ்ரீகுமாரசாமி ஞானியார் மகன் ஸ்ரீகும்பலிங்க நாடார் தனது மகள் வயிற்றுப் பேரனுக்கு இந்நூலைக் கொடுத்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இவற்றின் வழியாக ‘நூற்றாண்டுகள் பழைமையுடையது’ என்னும் தகுதியைச் சான்றோர் புராணத்திற்கு நிறுவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது சான்றோர் புராணத்திற்கு மட்டுமல்ல, பல சாதிக் கதைகளுக்கான தொன்மை இப்படித்தான் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

Illustration : Audrey Weber

பட்டப் பெயரோடும் சாதிப் பெயரோடும் பொருந்தி நின்ற தொழிலையே குலத்தொழில் என்பர். வேதம் ஓதுவதால் பிராமணர் என்னும் பெயரும் யாகம் செய்வதால் வேதியன் என்னும் பெயரும் அத்தொழிலைச் செய்பவர்களுக்குச் சாதிப் பெயர்களாக நிற்கின்றன. குலத்தொழில் என்பது, சாதிப்பெயரோடு நிற்கும் தொழில் எதுவோ அதுவே ஆகும். ‘சான்றார்’ என்னும் சாதிப் பெயரும் ‘கிராமணி’, ‘நாடான்’ என்னும் பட்டப்பெயரும் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. ‘சான்றான்’ என்பது சூரிய குலத்தவன், அரசன், அறிவோன் என்னும் பொருள் தரும் சொல்லாகும். தமிழ்நாட்டில் இச்சொல் கிராமணி, நாடாருக்கன்றி வேறு யாருக்கும் வழங்குவதில்லை என்பது வி.து.வின் வாதம்.

‘நாடார்’ சொல் பற்றிய ஆராய்ச்சியில் விரிவான விளக்கத்தைத் தந்துவிட்டு நாடார் என்பது நாட்டை உடையவர், தேசத்தை உடையவர் என்னும் பொருள்களைத் தருவதாலும் நாடுடைமையும் நாடோம்பலும் அரசர்க்கு உடைமையின் அவர்க்கு ‘நாடார்’ எனும் பெயர் அமைந்தது என்க (ப.8) என்று முடிக்கிறார். தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் விளக்கும் அவர், சங்க இலக்கியத்தில் அரசனை முன்னிலைச் சுட்டாக வைத்தே ‘நாட’, ‘நாடா’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சொல்லி, எட்கர் தர்ஸ்டனின் நூல்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை ஆகியவற்றிலிருந்து சான்று காட்டி ‘நாடார்’ என்போர் ‘நாடாளுவோர்’ என்கிறார் வி.து.

1871 பிப்ரவரியில் பிரிட்டிஷ் அரசு “சென்னை மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சாதியாரும் தங்களது பூர்விக வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காதவர்கள் தங்களது சாதி மேன்மையை இழந்து போவார்கள்” என்றும் உத்தரவிட்டது. அதையொட்டித்தான் சாதிக் கதைகள் எழுதிக் குவிக்கப்பட்டன. 1871 முதல் 1902 வரையிலான காலத்தில் மட்டும் நாடார்கள் தம்மைச் சத்திரியராகக் கோரி ‘சாதி ஏற்பாட்டுக் கோரிக்கை’, ‘சான்றோர் மரபு’, ‘சான்றார் குலமாலை என்னும் அரசகுல மாலை’, ‘சான்றோர் மரபு காத்தல்’, ‘சான்றோர் குல பூர்வோத்திரம்’, ‘சான்றோர் குல தீபம்’, ‘தமிழ்ச் சத்திரியர்’, ‘பாண்டிய குல விளக்கம்’, ‘பிஷப் கால்டுவெலும் திருநெல்வேலி சான்றாரும்’, ‘தூத்துக்குடி விஞ்ஞாபன கண்டனம்’, ‘சத்திரியப் பிரசண்ட மாருதப் பவனாசனம்’, ‘சான்றார் சத்திரியர்’, ‘சூரிய சந்திர பரம்பரைச் சரித்திரம்’, ‘சண்ட பானு’, ‘க்ஷத்திரிய குல விளக்கம்’ ஆகிய 15 நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நூல்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டும் மற்ற புராணங்கள் சிலவற்றைச் சான்று காட்டியும் 1902இல் கண்ணாயிர நாடார் என்பவரால் ‘தமிழ்ச் சத்திரிய குல விளக்க வினா விடை’ என்ற நூல் எழுதப்பட்டது. இதிலும் நாடான், சான்றோன் என்னும் சொல் குறித்து ஆராயப்பட்டிருக்கிறது.

வெள்ளாளர்களுக்கும் நாடார்களுக்குமான பூசல் குறித்து கண்ணாயிர நாடார் பல சான்றுகளுடன் விவரிக்கிறார். 1858இல் தொல்காப்பிய நன்னூல் என்னும் நூலைச் செய்த சாமுவேல் பிள்ளை, பொருளியலில் ‘பொருளிடம் காலம்ஞ்’ எனத் தொடங்கும் 5ஆவது சூத்திரத்திற்குச் சான்று காட்டும்போது ‘சான்றான் அல்லது சாணான்’ என்று குறிப்பிடுவதைக் குறிப்பிடும் க.நா., “சான்றானும் சாணானும் வேறு. இரண்டையும் ஒன்றாகக் குறிப்பிடுவது தவறு. சான்றான் என்பதன் மரூஉவாக சாணான் வராது. ஆகவே, சான்றானுக்கு வசைப்பேர் சொல்லித் தம் பகையை வெளிப்படுத்தியிருக்கிறார் சாமுவேல் பிள்ளை” என்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒட்டி வெள்ளாளர்கள் தம்மைச் சற்சூத்திரராகவும் வைசியராகவும் நிறுவிக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதைக் குறிப்பிடும் க.நா., அதற்காக கனகசபா பிள்ளை, சிதம்பரம் பிள்ளை ஆகியோரால் யாழ்ப்பாணத் தமிழ் அகராதியில் திரிக்கப்பட்ட பகுதியை ஆதாரங்களாக எடுத்துக்காட்டுகிறார். அவர்கள் சூத்திரர்களே எனவும் நிறுவுகிறார். அதே சமயம் தம் சாதியினரைச் சத்திரியராகச் சித்திரிப்பதில் தீவிரம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

1901ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் செய்யப்பட்டபோது வழக்கம்போல ஒவ்வொரு சாதியும் தங்களைப் பதிவுசெய்யும் முறை குறித்து விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. மதுரை, திருநெல்வேலி நாடார்கள் தங்களைத் தமிழ் சத்திரிய குலம் என்று பதிவு செய்யக் கோரி விண்ணப்பம் வழங்கினார்கள். ஆனால், அரசு 1901 பிப்ரவரி 17 அன்று சான்றோர் குலத்தவர் என்று கணக்கெடுப்பில் பதிந்துகொள்ள அனுமதி வழங்கியது. ‘சத்திரியர்’ அடையாளம் வழங்கவில்லை. சான்றோர் குலம் என்பதே சத்திரியர்தான் என்று கண்ணாயிர நாடார் உள்ளிட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

இவ்வளவு மெனக்கெடல் ஆராய்ச்சிகள் யாவும் நாடார் சாதியை ‘சத்திரியர்’ வகைமையில் சேர்ப்பதற்கே ஆகும். சத்திரியர் அடையாளம் கோரி நாடார்கள் காய் நகர்த்திக்கொண்டிருந்த காலத்தில் பல சாதியினரும் சத்திரியர் அடையாளத்திற்கு உரிமை கொண்டாடினர். சான்றாக இரண்டு சாதியினர் செய்த வேலைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

அத்திரி மகரிஷிக்கு சனகரிஷி சொல்வதாக அமைந்த ‘வன்னியர் புராண’த்தை (1917) சைவ.கி.வீரப்பிள்ளை எழுதியிருக்கிறார். காமதேனுவின் நெய்யினால் வளர்க்கப்பட்ட யாகத்தில் அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது. பங்குனி உத்திர நட்சத்திரத்தில் சிவன் தனது நெற்றியிலிருந்து வழிந்த வியர்வையைக் கையால் வழித்து யாகத்தில் போட அதிலிருந்து அக்னிக்குத் திரையில் அமர்ந்தபடி வன்னியராசன் தோன்றினான். தகுந்த வயது வந்தவுடன் மந்திரமாலையைத் திருமணம் செய்தான். இவர்களின் சந்ததியினரே, சாதியினரே வன்னியர் என்ற முடிவிற்கு வீரப்பிள்ளை வருகிறார்.

மற்றொரு சான்று, தெலுங்குச் செட்டியார்கள் சத்திரியர் உரிமை கோரியது. இதற்காக, காறாம்பசுவு அ.இராகவலு செட்டியார் ‘பிருதிவீச்சுர வம்ஸம் யாக க்ஷத்திரிய குலம் 24 மனையார்களாகிய தேசாதிபதி தெலுங்கர்களின் விளக்கம்’ என்ற நூலை 1937இல் எழுதினார். இதில் யாஹ, க்ஷத்திரியர், தேசாதிபதி, 24 மனையார், தெலுங்குச் செட்டி ஆகிய சொற்களைப் புராணங்களோடு இணைத்துப் பழைமையை உருவாக்கிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. சிவனின் விருப்பப்படி பிரம்மனால் இயற்றப்பட்ட யாக நெருப்பில் 24 மனை தெலுங்குச் செட்டியார்களின் ஆதி புருஷன் பிறந்தான். அவனுக்குச் சிவன் ‘பிரிதிவீச்சுரன்’ எனப் பெயரிட்டு யாக நெருப்பில் சுனாபை என்னும் பெண்ணைத் திருமணம் முடித்து வைத்தான். தேசாதிபதி என்பது தெலுங்குச் செட்டியார்களையே குறிக்கும். இவர்கள் ஆந்திராவில் அரசர்களாக இருந்தவர்கள். காலச் சூழலில் அரசை இழந்து சிக்கனமாக (செட்டு) வாழ்ந்ததால் செட்டியார் என அழைக்கப்பட்டார்கள். 24 மனையார் என வழங்குவது 24 கோத்திரங்களை உடையவர் என்பது பொருள் என்பதான செய்திகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அக்னியில் பிறந்து அரசு புரிந்த சத்திரியர்தான் 24 மனைச் செட்டியார்கள் என்பது இந்நூலின் முடிவு.

நான்கு வருணத்தில் உரிமை கோரலுக்கானதாக இரண்டாம் வருணமெனச் சொல்லப்பட்ட சத்திரியரே இருந்திருக்கிறது. பிராமணர் என்னும் உரிமையைப் பறையர், கம்மாளர் உள்ளிட்ட மிகச் சில சாதியினரே கோரியிருக்கிறார்கள். தமிழ்ச் சாதியமைப்பில் தம்மை முன்னொரு காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களாகக் காட்டிக்கொள்வது சமகால அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கும், அதிகாரத்தை நீட்டித்துக்கொள்வதற்கும் பயன்பட்டிருக்கிறது. வைசிகர், சூத்திரர் என்னும் வகைமையில் இருக்கும் பல சாதிகள் தம்முடைய பூர்விகத்தைச் சத்திரியராகவே கட்டமைத்திருக்கின்றன. அரசர்கள், தாம் அதிகாரமிழந்தபோது பிழைப்புக்காக வணிகமும் வேளாண்மையும் செய்தார்கள். அவர்களே பின்னாளில் வைசியராகவும் சூத்திரராகவும் கருதப்பட்டனர் என்கிற செய்தியைத்தான் மேற்சொன்ன மூன்று சாதியரின் கதைகள் தெரிவிக்கின்றன.

புராணங்களாக இருக்கும் சாதிக் கதைகள் கடவுள்களின் ராஜ்ஜியம் பற்றியே பேசுகின்றன. அந்த ராஜ்ஜியத்தில் சாதி உருவானதாகவும் சித்திரிக்கின்றன. அதன் வழி புனிதமான ராஜ்ஜியத்தின் உரிமையாளர்கள் என்கிற பிம்பத்தை அக்கதைகள் உருவாக்கியிருக்கின்றன. அரசுக்கு விண்ணப்பங்களும் சாதிக் கதைகளும் கத்தை கத்தையாக அனுப்பப்பட்டாலும் யாரைச் சத்திரியராக அங்கீகரிக்க வேண்டுமென்பதில் அரசுக்கு முன்திட்டம் இருந்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் இருந்த பிராமணர்களைக் கொண்டு விண்ணப்பங்களையும் சாதிக் கதைகளையும் பரிசீலனை செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கியது. ஆதலால், சத்திரியராக உரிமை கோரிய அனைவருக்கும் அந்த உரிமையை அரசு வழங்கவில்லை.

சத்திரிய அடையாளத்தைக் கோரிய சாதியான வன்னியர் சாதி பிரதிநிதிகளுக்கும் குறிப்பாக அர்த்தநாரிசுவர வர்மாக்கும் வி.து.வுக்கும் எழுத்துப்போர்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இரண்டையும் கவனித்துக்கொண்டிருந்த அரசு, 1929ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வன்னியர்களைச் சத்திரியராக அறிவித்தது (ஆணை எண். 271/1929).

ஏன் சத்திரியராகக் காட்டிக்கொள்ள வேண்டும்?

சாதிக் கதைகள் எழுதப்பட்டதன் நோக்கமே தம்மைச் சத்திரியராக அங்கீகரிக்க வேண்டும் என்பதே ஆகும். ஒரு குறிப்பிட்ட சாதியினர் தம்மைச் சத்திரியராக ஏன் காட்டிக்கொள்ள வேண்டும்? பிரிட்டிஷ் அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் செய்துகொண்டிருந்தபோது மன்னர் குடும்பம் என்று அடையாளம் காணப்பட்ட சில குடும்பங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. மன்னர் வாரிசுகள் என்று சொல்லி சிலர் ஜமீன்தாராக அமைத்துக்கொண்டனர். அப்போது உருவாகிவந்த நவீன தொழில்முறையில் முதலாளி – தொழிலாளி என்கிற புதிய வர்க்கம் தோற்றம் பெற்றது. அந்த நவீன முதலாளிகளைப் பிரிட்டிஷ் அரசு ஆதரித்தது. புதிய தொழில் தொடங்குவதற்கு மானியம் அளித்து ஊக்குவித்தது. இந்தச் சூழலில் முதலாளி என்கிற வகைமையில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காகவும் சில சாதிகள் தம்மைச் சத்திரியராக அடையாளப்படுத்திக்கொண்டன. அது, தொழிலாளி வர்க்கமாகத் தம்மை அரசு கருதுவதிலிருந்து விலக்கி வைத்துக்கொள்ளவும் முதலாளி என்பதற்காகக் கிடைக்கும் நவீன தொழில்முறைமையின் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவியது. இதனால்தான் பிரிட்டிஷ் அரசின் வணிகச் சூழலைப் பயன்படுத்தித் தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அக்காலத்திய வணிகச் சாதிகள் தம்மைச் சத்திரியராகச் சொல்லிக்கொண்டு கதைகளை எழுதின.

சாதி பல்வேறு காலகட்டங்களில் அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் மையப்படுத்தப்பட்டிருக்கிறது. வரலாறு முழுமையும் அரசியல் இலாபங்களுக்குத்தான் சாதி பயன்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நிருவாக முறை, நிகழ்வுகளை ஆவணமாக்கல், தொழிலுக்கு ஏற்ப மனித வளங்களை உற்பத்தி செய்து வகைப்படுத்துதல் முதலிய நடவடிக்கைகள் அக்கால சாதியோடும் முகம் கொடுக்க வேண்டியிருந்ததன் விளைவாக பிரிட்டிஷ் அரசு சாதியை முக்கியமானதாகக் கருதியது. அவர்களின் நிருவாக முறை கெட்டித்தன்மை அடையுந்தோறும் உள்ளூர்வாதிகளால் சாதியும் கெட்டிப்பட்டது. பிரிட்டிஷ் அரசு நிருவாகத் துருப்புகளை இந்தியாவிலிருந்து விலக்கிக்கொண்டாலும் உள்ளூர்வாதிகள் சாதியின் கெட்டித்தன்மையை விலக்கிக்கொள்ளவில்லை. மாறாக, சாதியைத் தேவைப்படும்போதெல்லாம் கூர்தீட்டிக் கொண்டார்கள். அதற்குச் சாதிக் கதைகள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

துணை நூல்கள்

  1. கண்ணாயிர நாடார், தமிழ்ச் சத்திரிய குல விளக்க வினா விடை, சின்னைய நாடார் அச்சுக் கூடம், சென்னை, 1902.
  2. ராகவலு செட்டியார், அ.தேசாபதி தெலுங்கர்களின் விளக்கம், அமெரிக்கன் டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1937.
  3. விஜய துரைச்சாமி, ஆரிய க்ஷத்திரிய குல விளக்கம், புரோகிரஸிவ் அச்சு இயந்திரசாலை, சென்னை, 1910.
  4. வீரப்பிள்ளை.சைவ.கி., வன்னியர் புராணம், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1917.
  5. விஜய துரைச்சாமி, நமது குலத்தொழில் யாது?, க்ஷத்திரிய மித்திரன் பிரஸ், சென்னை, 1922.
  6. விஜய துரைச்சாமி, நாடார் என்னுஞ் சொல் ஆராய்ச்சி, க்ஷத்திரிய மித்திரன் பிரஸ், சென்னை, 1927.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!