நவதாராளவாதத்தின் இருட்டைப் பாடுதல்

நிஷாந்த்

ருண்ட காலங்களில் பாடுவது இருக்குமா?
ஆம் இருண்ட காலங்களைப் பற்றிப் பாடுவது இருக்கும்
– பெர்டோல்ட் பிரக்ட்

சதீஷ்குமார் சீனிவாசனின் ‘பாதி நன்மைகள்’ தொகுப்பில் உள்ள சில கவிதைகளைக் கீழே இணைத்துள்ளேன். அக்கவிதைகளை வாசித்த பின்பு கட்டுரையை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

ஒடுக்குமுறையின் பரிமாணங்களைப் பொருத்தே உடல்களை ஒடுக்கும் முறைமைகள் கட்டமைகின்றன. உடல்களும் அவற்றின் செயல்பாடுகளும் ஒரேவகையில் ஒடுக்கப்படுவதில்லை. மண்ட்டோவின் கதையுலகில் உள்ள உடல்களும் தாஹர் பென் ஜீலோவ்னின் நாவல்களில் உள்ள உடல்களும் ஒரேவகையில் வதைக்கப்படுவதில்லை. அதிகாரத்தின் குணநலன்களுக்கும் தன்மைகளுக்கேற்பவும் அவை மாறுபடுகின்றன. அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் உடல்களை ஒரே மாதிரியான சட்டகத்திலோ வார்ப்படத்திலோ பொருத்துவதில்லை. ஒவ்வொன்றின் உலகப் பார்வையையொட்டி அச்சட்டகம் மாறுபடுகிறது.

அடிமை முறையில் இலட்சக்கணக்கான உடல்கள் வலுக்கட்டாயமாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவர்களின் உழைப்புச் சக்தி ஏகாதிபத்திய அரசுகளின் அதிகாரத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தியது. வெள்ளையினத் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தி அவர்களுக்குச் சொந்தமானது. எனவே, அவர்கள் அடிமை முறையிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்கிற கண்ணோட்டத்தின் அடிப்படையில் பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷ் அரசானது வெள்ளை இனத் தொழிலாளர்களை அடிமையாகப் பயன்படுத்துவதற்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்தது. கறுப்பின மக்கள் அல்லது இந்தியர்களாக வகைப்படுத்தப்பட்டோரை அடிமைகளாக வைத்துக் கொள்வதற்கு அனுமதியிருந்தது. அரசியல் உரிமைகளைக் கோருவதற்கும், குடும்பங்கள் அமைப்பதற்கும், நீதிமன்றங்களை அணுகுவதற்கும் சட்டரீதியான தடைகள் கொண்டுவரப்பட்டன. அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்திய பிறகு, அடிமைமுறைக்கு மாற்றாக உழைப்புச் சக்தி தேவையாக இருந்தது – குறிப்பாக, காலனிய அரசின் பொருளாதார வளத்தை உறுதிப்படுத்திய தோட்டத் தொழில்களில் (Plantation Works) அடிமை முறைக்குப் பதிலீடு அவசியமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசானது அடிமை முறையின் இடத்தில் ஒப்பந்தக்கூலி முறையை அறிமுகப்படுத்தியது. அடிமை உடல்களை ஏற்றிய அதே கப்பல்கள் ஒப்பந்தக் கூலிகளை ஏற்றின. ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவதாலேயே ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுடைய உழைப்புச் சக்தியின் சுதந்திரம் உறுதி செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உழைப்புச் சார் உறவுகளில் ஒப்பந்தம் என்பது வலியுறுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒப்பந்தக்கூலி முறை ஒழிக்கப்பட்டபோது அந்த இடத்தைப் புலம்பெயர் தொழிலாளர்கள் நிரப்பினர். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிற்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களே நிலையற்ற முறைசாராப் பணிகளைச் செய்துவருகின்றனர். ஐரோப்பியப் பெண்கள் தம் வீடுகளில் செய்துவந்த பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளை ஆசியா – ஆப்பிரிக்கா – அரபு நாடுகளிலிருந்து மேற்கு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த பெண்களே இப்போது செய்கின்றனர். அதுதான், மேற்கு ஐரோப்பியப் பெண்கள் பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களிலும் வேலை பார்ப்பதற்கான உழைப்பு நேரத்தை வழங்கியது.

பாட்டாளி வர்க்கமானது மையநீரோட்ட இடதுசாரிகள் சொல்வதுபோல ஒற்றைத் தன்மையிலானது கிடையாது. உழைப்புச் சக்தி சுரண்டப்படுவதாலேயே அனைவரையும் ஒரே குடையின் கீழ் வைக்கலாகாது. இங்கு அரசியல் உரிமைகளுக்குப் பாத்தியமான, இறையாண்மையும் உடைய தேசிய உழைப்பாளர்கள், எவ்வித உரிமைகளும் இறையாண்மையும் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் என்று உழைப்பாளர்களை இரு சாராராக நாம் அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வது முதலீட்டியத்தில் உள்ளுறைந்திருக்கும் இனவாதத்தை (racial capitalism) அடையாளங்காண்பதாகும். வெள்ளை இனத் தொழிலாளர்களுக்கு நிலையான வீடு இருந்தது, கழிப்பறை இருந்தது, அரசியல் உரிமைகள் இருந்தன. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் மூத்திரம் கழிக்கக்கூட நேரம் கொடுக்கப்படாதவர்களாகவும், குறைந்தபட்ச உரிமைகள் அற்றவர்களாகவும் உள்ளனர். ஐரோப்பிய தேசிய அரசினுள் அரசியல் அதிகாரமும் இறையாண்மையும் அற்ற புலம்பெயர் உடல்களே இன்றுள்ள தொழில் நகரங்களை இயக்குகின்றன. அவர்களே இன்றைய reserve army of labor.

ஐரோப்பிய, அமெரிக்கச் சூழலில் முதலீட்டியம் இனவாதத் தன்மையோடு செயல்படுகிறதெனில் இந்தியாவில் நவதாராளவாத முதலீட்டிய அமைப்பும் பின்காலனிய வளர்ச்சிவாதமும் சாதிமையப்பட்டதாக உள்ளது. “நிதி நிறுவனங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள் தொடர்பான தொழில்கள் போன்றவற்றைப் பல்வேறு ஆதிக்கச் சாதிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. மரபான வேளாண்மை, கைவினைத் தொழில்கள், துப்புரவுத் தொழில், எடுபிடி வேலைகள் போன்றவை மட்டுமே தலித் மக்களுக்கும் பிற சாதியினரைச் சேர்ந்த நலிந்த பிரிவினருக்கும் விட்டுவைக்கப்படும். அதாவது, வருண தர்ம ஏற்பாடு புதிய வடிவில் உருவாகிவருகிறது.”1

“சமுதாயத்தின் பிற அனைத்துப் பிரிவினரையும் பார்க்கப் புதிய பொருளாதாரக் கொள்கையால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தலித்துகள்தாம். அவர்களில் பெரும்பான்மை மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இதில் 86 சதவீதத்தினர் நிலமற்றவர்கள். ஒரு தலித் தொழிலாளி சராசரியாகப் பெறுகிற தினக்கூலி பிற தொழிலாளிகள் பெறுவதை விட ரூ.23 குறைவானது.”2 இவற்றைக் கருத்தில் கொண்டுதான் நாம் இந்தியாவின் தொழில்நகரங்களையும் வளர்ச்சித் திட்டங்களின் பலன்களையும் நோக்க வேண்டியுள்ளது.

m

இப்படியான நவதாராளவாத உற்பத்தி நிகழ்முறையில் சிக்குண்டுள்ள உடல்களே சதீஷ்குமார் சீனிவாசனுடைய கவிதைகளின் பேசுபொருளாக உள்ளன. அவருடைய கவிதையுலகு திருப்பூர் எனும் தொழில் நகரத்தில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகளைத் தயாரிக்கும் உடல்களின் உணர்வாக்கத்தை முதன்மையாகக் கொண்டுள்ளன. பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த புலம்பெயர் உடல்களின் பதிவு செய்யப்படாத உணர்வுகளும் இதனுள் அடக்கம். அவ்வுடல்களுக்கு நிரந்திரமான நிலமில்லை, நிலையான வீட்டு முகவரியுமில்லை. நிலமும் அதிகாரமும் அற்ற உதிரி உடல்களே திருப்பூரைத் தொழில் நகரமாக்கின; அவ்வுடல்களின் உயிர்சக்தியை உறிஞ்சியே திருப்பூரில் உள்ள வெள்ளாளக் கவுண்டர்கள் தங்கள் பொருளாதார இலாபத்தை ஈட்டுகின்றனர். “தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 56% சதவீத உறுப்பினர்கள் கவுண்டர்களே. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கவுண்டர் சாதியினர்தான். திருப்பூர் கவுண்டர்கள் மத்தியில் சாதியானது மூலதனமாகப் பரிணமிக்கிறது.”3 கவுண்டர்களின் விவசாய நிலங்களே பின்னலாடை, ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான மூலதனமாகின. நிலமாக இருந்த பொருளாதார அதிகாரம் தொழிற்சாலைகளாக உருமாற்றமடைந்தது. திருப்பூர் என்பது வெறும் தொழில் நகரமல்ல; அது பின்காலனிய அரசு வளர்ச்சித் திட்டங்களின் ஊடாகப் பயன்பெற்ற இடைநிலைச் சாதியினரின் அடையாளமாகவே திகழ்கிறது. சதீஷின் கவிதைகளில் வரும் உடல்களுக்கு இந்த வளர்ச்சித் திட்டங்களோ சுதந்திரமோ எதுவுமே விடுதலையாக இல்லை. ஏனெனில், அவ்வுடல்களின் நோக்கில் சுதந்திரம் என்பது உடல்களையும் உழைப்பையும் சந்தையில் விற்பதற்கான சுதந்திரம் மட்டுமே. இதையே கார்ல் மார்க்ஸ் Reserve army of labor என்று குறிப்பிடுகிறார்: முழுமையாகச் சுரண்டிய பிறகு எப்போது வேண்டுமானாலும் தூக்கியெறியப்படக்கூடிய உடல்கள்.

கார்ல் மார்க்ஸின் ‘மூலதன’த்தில் உடல் என்பது முக்கியமான கூறாக இடம்பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் அவர் உடல், ஆரோக்கியம் குறித்தும் எழுதியுள்ளார். “உடலின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், ஆரோக்கியமான பராமரிப்புக்கும் உரிய நேரத்தை அது (முதலீட்டியம்) அபகரித்துக்கொள்கிறது. நல்ல காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைப் பெறுவதற்கு அவசியமான நேரத்தைக் களவாடுகிறது. சாப்பாட்டு நேரம் குறித்துத் தகராறு பண்ணுகிறது. கொதிகலனுக்கு நிலக்கரியும், இயந்திர சாதனத்துக்கு மசையும் எண்ணெய்யும் இடுவது போல, ஓர் உற்பத்திச் சாதனமாகவே பாவித்துத் தொழிலாளிக்கு உணவு தரும் விதத்தில், சாத்தியமான இடங்களில் சாப்பாட்டு நேரத்தை உற்பத்தி நிகழ் முறையுடனேயே மூலதனம் இணைத்துவிடுகிறது.”4 என்று மார்க்ஸ் எழுதுகிறார். அதிக விளைச்சலைப் பெறுவதற்காக ஒரு பேராசைக்கார விவசாயி எவ்வாறு நிலத்தின் சத்தைக் கொள்ளையிடுவானோ அதுபோலவே உபரி உற்பத்திக்காக உழைப்பாளர்களின் – உழைப்புச் சக்தியைத் தாங்கிய – உடலைச் சுரண்டுவதாக கார்ல் மார்க்ஸ் எழுதுகிறார். அதன் தொடர்ச்சியாகவே மார்க்ஸியச் சிந்தனை மரபிலும் மார்க்ஸிய அழகியலிலும் உடலானது பிரதானமான புள்ளியாக இருந்துவந்துள்ளது.

உடலுக்கும் அதிகாரத்திற்குமான தொடர்பைப் பற்றி ‘Discipline and Punish’இல் ஃபூக்கோ விரிவாக எழுதியுள்ளார். ஒழுங்குமுறை என்பது குறிப்பாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் உதித்த அதிகாரக் கருவி. அதை உடலினூடாகச் செயல்படும் கருவியாகவும் அடையாளம் காண்கிறார். மேலும், அது உடலைப் பணிவிக்கவும் பயனுள்ளதாகவும் மாற்றும் ஆளுகை முறைகளையும் உடையது. கைதிகள், படை வீரர்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோரது உடல்கள் அபரிமித உற்பத்திக்காகவும் எளிமையாகப் பணிவிப்பதற்காகவும் புதிய ஒழுங்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அவ்வுடல்களின் செயற்பாடுகள், இயக்கங்கள், நகர்வுகள் முதலானவை அதிகப் பயனுள்ளபடிக்கு நெறிப்படுத்தப்பட்டன. உதாரணமாக, ஃபோர்டிஸத்தையும், டெய்லரிச நிர்வாக முறையையும் சொல்லலாம். ஹென்றி ஃபோர்ட்தான் தொகுப்புவரிசை (assembly line) உற்பத்தி முறையைக் கொண்டுவந்தவர். இந்த நிர்வாக முறையின் விளைவாக ஃபோர்ட் நிறுவனத்தால் குறைந்த நேரத்தில் (ஆகையால் குறைந்த விலைக்கு) அதிகக் கார்களை உற்பத்தி செய்ய முடிந்தது. “இது உலகம் முழுக்க உற்பத்தி முறைமையையே மாற்றியமைத்தது. இருபதாம் நூற்றாண்டின் மிகை உற்பத்தி முதலீட்டியத்திற்கான அடித்தளத்தை இட்டது ஃபோர்டிஸம்.”5 டெய்லரிச நிர்வாக முறையானது, உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டி, ஒவ்வொரு வேலையையும் மிக நுணுக்கமாகப் பல்வேறு சிறிய பகுதிகளாகப் பகுத்தளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இத்தகைய நிர்வாக முறைகள் தொழிலாளர்களைக் கட்டுக்கோப்பான ஒழுங்கிற்குள் வைத்தன; தொழிலாளியின் நேரத்தையும் உழைப்புச் சக்தியையும் கேக் ஒன்றைச் சமமான பகுதிகளாக வெட்டியெடுத்துப்பது போன்று எடுத்துக்கொண்டன.

உடல்கள் என்பவை வெறுமனே இயல் உடல்கள் அல்ல என்று கூறும் ஃபூக்கோ, அவற்றை மையமாகக் கொண்டு அதிகாரத்தினதும் சமூக ஒருங்கிணைப்பினதும் வரலாறை எழுதுகிறார். அவ்வகையில் உடல்களின் நோக்கிலிருந்து – உடலையே கண்களாகக் கொண்டு – ஒரு நகரத்தின் சித்திரத்தை அளிக்கின்றன ‘பாதி நன்மைகள்’ தொகுப்பிலுள்ள கவிதைகள். இவற்றில் எதிர்ப்படும் உடல்கள் அனைத்தும் நினைவுகளைச் சுமப்பதில்லை, கனவுகளைச் சுமப்பதில்லை, புலன்கள் மழுங்கடிக்கப்பட்ட சதைகளை மட்டுமே நகரங்களில் சுமந்தலைகின்றன. உடல் மட்டுமேயான உடல்கள் எனலாம். எனினும் அவ்வுடல்கள் கருணைக்காகவோ, பச்சாதாபத்துக்காகவோ ஏங்கிப் பரிதவித்து நிற்கவில்லை.

சதீஷின் பிற கவிதைகளோடு ஒப்பிடும்போது உடல் குறித்தான கவிதைகளில் படிமங்கள், மர்மங்கள், உருவெளித் தோற்றங்கள், கவித்துவ உவமைகள், விகாரக் கனவுகள், குறியீடுகள் முதலானவை வெளிப்படவில்லை. உரைநடையைப் பிளந்து சிதறடித்துக் கவிதையாக்கியது போல தோன்றச் செய்யும் நேரடித்தன்மையோடு உடல் சார்ந்த இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. “ஏகப் பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற காகம் அதுவானேன் கண்ணே ரஹ்மானே…” என்று குணங்குடி மஸ்தான் சாகிபுவின் வரிகளில் உள்ள கவித்துவமான நேரடித்தன்மையை ஒத்தவை இக்கவிதைகள். ‘கே.என்.பி. சுப்பிரமணியன் நகர் திருப்பூர் 641608’ கவிதையின் வரிகளை உதாரணமாகச் சொல்ல முடியும்:

செத்தபிறகு பேயாக தலைகீழாகத் தொங்க
அத்தனை வலுவான கிளைகளுமில்லை
இந்த மலர் மரத்தில்
எத்தனை பத்துவருடங்களாக
எத்தனை உடல்கள்
இப்படி அலையணுமோ

நேரடியாகவும் எளிமையாகவும் இருப்பதாலேயே ஒரு கவிதை பொருட்படுத்தத்தக்கதாக ஆகிவிடுவதில்லை. உதாரணமாக, அரசியல் கவிதைகள் என்கிற பெயரில் எழுதப்படும் வாழ்வின் சாரமே இல்லாத மேம்போக்கான கவிதைகள்; அரசியல் சரிநிலை அல்லது மக்களின் பாடுகளை எளிமையாக முன்வைக்கும் முற்போக்கு முனைப்புகள் மட்டுமேயான கவிதைகள்; பிரச்சார கவிதைகளை விமர்சனம் செய்யும் ‘ப்யூர்’ கவிஞர்கள் ஆகியவை இருத்தலியல் சிக்கலையும் மத்திய தர வர்க்க வாழ்க்கையின் அமைதியைச் சிலாகிக்கும் அல்லது நொந்து கொள்ளும் கவிதைகளையே உற்பத்தி செய்கின்றனர்.

சதீஷின் இக்கவிதைகள் வாழ்வனுபவத்தின் முக்கியக் கூறாகிய புலன்களின்பங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உடல்களின் பரப்பை மொழிய பவமாகத் திரட்டித் தருகின்றன. இப்புள்ளியில்தான், வெறும் எளிமைக்காக அல்லது யதார்த்தக் கூறுகளுக்காக மட்டுமே பாராட்டப்படும் மேம்போக்கான அரசியல் கவிதைகளிலிருந்தும் தட்டையான இருத்தலியல் புலம்பல்களிலிருந்தும் இவை வேறுபடுகின்றன. இருத்தலியல் சிக்கல்களைக் காட்டிலும் மொழி, அதன் அர்த்தங்கள் சார்ந்த விசாரணையே ‘தளும்பும் சொல்’, ‘ஓரோர் எழுத்தும் மூஞ்சை வேறு திருப்பிக்கொள்கிறது’, ‘மொழியின் சங்கதி’, ‘மொழியற்ற பூனைகள்’, ‘வழிவிடும் சொல்’, ‘ஒரு மொழியின்கீழ் அலைந்துகொண்டிருந்தேன்’ உள்ளிட்ட கவிதைகளில் வெளிப்படுகின்றன. உடல் சார்ந்த கவிதைகளுக்கு இணையாக மொழி சார்ந்த கவிதைகளும் இருப்பது தற்செயலானதல்ல. மொழியைக் கொண்டும் அது கையளிக்கும் அர்த்தங்களின் உலகைக் கொண்டும் சிதைக்கப்பட்ட உடலை இடப்படுத்திக்கொள்வதாகும்.

இக்கவிதைகளை வாசிக்கும்போது டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பட்ட Food Factory நிகழ்ச்சியின் உடல்கள் ஞாபகம் வருகின்றன. சீரான உடைகள் அணிந்தபடி வரிசையாக நிரல்படுத்தப்பட்டு, மிகச்சரியாக அதனைச் சொல்ல வேண்டுமெனில், அச்சுறுத்தும் ஒழுங்கில் ஒரே வேலையில் அமிழ்ந்திருப்பர் – அனைத்து உடல்களும் ஓருடலாக. இணைவாக வேறொன்றும் ஞாபகம் வருகிறது. சென்னை சில்க்ஸில் பில் போடுபவர் அக்கடையின் இலச்சினையை மிகத்துரிதமாக ஒவ்வொரு பில்லிலும் பதிய வைப்பதை சிறுவயதில் ஆச்சரியத்தோடு பார்த்ததுண்டு. ஆனால், அது ஆன்மாவைப் பணயம் வைத்தபடி, ‘பீஸ்ரேட் கவிதை’யின் வாழ்க்கையை மீள மீள வாழ்வதென்று அக்கவிதையினூடாகவே உணர்கிறேன்.

டெய்லரிஸம் குறித்து வாசிக்கமாலேயே அதன் விளைவுகளுக்கருகில் கூட்டிச் செல்கிறது. அக்கவிதையின் வடிவமும், இயந்திரத்தனமான உணர்ச்சிகளற்ற மொழியும், இறுதிப்பகுதி முதலிருந்து தொடங்குவதும் அழகியல் உத்தியாக மட்டும் அல்லாமல் அங்குள்ள சிதறுண்ட மனித தன்னிலைகளின் மன இயக்கத்தையும் தன்மையையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது.

சாதியமைப்பானது குறிப்பிட்ட சில உடற் தொகுதிகளைப் பிழிந்தும் அவர்களுக்கான எல்லைக் கோடுகளையும் (தீண்டாமை உள்ளிட்டவை மூலம்) வரைந்து உடல்களைச் சமூக வெளிகளிலிருந்து வெளியேற்றுகிறது. பிரேம் ரமேஷின் ‘தலித் நிலப்பரப்பில் கலகங்களின் சாத்தியப்பாடுகள்’ கட்டுரை, சாதியமைப்பின் உடல் அரசியலைப் பேசுகிறது; தலித் அரசியலிற்குள் புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும், இந்திய சாதிய அமைப்புப் படிநிலையில் கீழே வைக்கப்படும் உடல்களின் வேட்கை வெளியையும் புலன்களையும் ஒடுக்கும் விதங்களை எடுத்துரைக்கிறது. தலித் உடல்களின் புலன்கள் குறித்தும் வேட்கை குறித்தும் கோட்பாட்டு ரீதியான அக்கறை கொள்கிறது. புலன்களை வற்றலாக்கும் செயல்பாடாகவும் தீண்டாமையை அடையாளப்படுத்துகிறது. அக்கட்டுரையின் தர்க்கத்தைச் சிறிய மாற்றங்களோடு நீட்டிப் பார்த்தால், புலன்களின் பன்முகச் செயல்பாடுகளும் உறுப்பின்பங்களும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மார்க்ஸ் கூறும் முறையே உற்பத்திச் சாதனமாக மட்டுமே பாவிக்கப்பட்ட உடலொன்றின் கவிதையாகிறது ‘62 கிலோ உடல்தான் மிச்சமிருக்கிறது’. அவ்வுடலில் அன்பில்லை, கனவில்லை, நேசமோ, காதலோ எதுவுமில்லை. ஆகையால்தான் தாராளவாதம் முன்வைக்கும் சுதந்திரத்தைத் திருப்பூர் தொழிலாளர்களின் தரப்பில் நின்று ‘நினைக்க எதுவுமில்லாத சுதந்திரம்’ என்கிறது அவருடைய கவிதை. “நவதாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர், உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதுபோல வேலைக்கு அமர்த்தும் முறைகளில் பெரும் மாற்றம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளதைக் காண்கிறோம். பெருநிறுவனங்களில் நிரந்தர வேலைகள் என்பன மிகவும் குறைக்கப்பட்டுள்ளன அல்லது அவை இல்லாமலேயே செய்யப்படுகின்றன. ஆலைகளுக்குள் செய்யப்பட்டுவந்த வேலைகள் தற்போது ஒப்பந்தங்கள், துணை ஒப்பந்தங்கள், பீஸ்-ரேட் ஆகியவற்றின் மூலம் ஆலைக்கு வெளியே செய்யப்படுகின்றன.”6 நவதாராளவாத கொள்கையினால் உற்பத்தி நிகழ்முறையில் ஏற்பட்ட மாற்றங்களின் நீட்சியாக இன்று குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட உறுதி செய்யாத முறைசாரா தொழிற்துறைகளைக் காண்கிறோம். தாராளவாதத்தின் சாரமான சுதந்திர கருதுகோள் உடல்களை ஆழமாகச் சுரண்டுவதற்கானதாக மட்டுமே செயல்படுகிறது.

இக்கவிதைகளில் வரும் உடல்கள் அஸெம்ப்ளி லைன் எனும் ஒரு வரையறுக்கப்பட்ட கால வெளியில் இருத்தி வைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுபவை. ஆகையால், அவ்வுடல்கள் உடல்களாக மட்டுமே அறை திரும்பின. சீனாவின் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து மணிக்கணக்கில் அஸெம்ளி லைன்கள், கட்டடத் தொழில்கள் உள்ளிட்ட நிலையற்றத் தொழில்களில் ஈடுபடுவோருள் சிலர் கவிதைகள் எழுதினர். இவற்றை ‘Battler Poetry’ என்று இலக்கிய விமர்சகர்கள் வகைப்படுத்துகின்றனர். அக்கவிதைகளும் நேரடித் தன்மையைப் பொதுவான கூறாகக் கொண்டுள்ளன. உதாரணமாக சூனுலிஷியின் ஒரு கவிதை:

ஓவர்டைம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் இரவு நேரம் ஒன்றில்
ஒரு ஸ்க்ரூ தரையில் விழுகிறது
அது செங்குத்தாக விழுகிறது யாருடைய கவனத்தையும் கோராதபடிக்கு மெதுவாக ஓசை எழுப்பியபடி
சிறிது நாட்களுக்கு முன்பு இதே போன்றொரு இரவில்
ஒரு மனிதன் தரையில் விழுந்ததுபோல…

சதீஷின் உடல்சார்ந்த கவிதைகளும் சீனாவின் Battler poetryயும் ஒரே வகையிலான வடிவத்தையும் மொழி வெளிப்பாட்டையும் கொண்டுள்ளன.

காதல் ஜோடிகளின் சிறிய தொடுகையொன்றே அந்நகரத்தின் உயிர்சக்தியை மீட்கும் ‘ஆகா’வாய் உள்ளது. காதல் என்றுகூட சொல்ல முடியாது அதை, யாரோ இருவர் அந்நியோன்யமாக இருக்கும் தருணம் மட்டுமே. உடல் சலித்துப்போய் பார்வையாளனாக மட்டுமே அனுபவங்கொள்பவனுக்கு அந்த மீச்சிறு தருணமொன்றே அந்நகரத்தை மீட்டும் அசைவாக உள்ளது. ‘அசைவு’ என்கிற வார்த்தையே இக்கவிதைக்குக் கவித்துவத்தையும் அலாதியானதொரு வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கிறது. இக்கவிதையின் உலகினுள் நகரமொன்றின் பல்வகைப்பட்ட இயக்கங்களை அசைவு என்கிற ஒற்றைச் சொல்லே திரட்டித் தருகிறது – ‘ஆகா’ என்றொரு அசைவு. ‘ஆகா என்றொரு அசைவு’ கவிதையானது வேறொரு வடிவில் மெல்லிய கேலியுடனும் உயிர்த்துடிப்பின் தருணமொன்றை மன விலக்கத்தோடு ஆராதிக்கும் ‘விடுமுறைநாளின் குருவிகள்’ கவிதையாகிறது.

யாருக்காகப் பேசுகிறோமோ அவர்களின் முகவாண்மையையே மறுக்கும்விதமாக அவர்களை முட்டாள்களாக, அறிவிலிகளாக, அப்பாவிகளாக இடப்படுத்தும் அறிவுஜீவிகளை நக்கலாகச் சாடுகிறது ‘முட்டாள் பட்டாம்பூச்சிகள்’ கவிதை. ‘இலை நடுங்கும் பனி’, ‘முட்டாள் பட்டாம்பூச்சிகள்’ ஆகிய கவிதைகள் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. இரத்தமும் சதையுமாக இருக்கும் வாழ்க்கையையும் அதற்கு வெளியே நிகழும் வாழ்க்கைப் பற்றிய அறிவுஜீவித்தனமான விசாரணைகளையும் தராசில் நிறுத்தற்போட்டு எது கனமானதென்று பார்க்கச் சொல்கிறது. இது இடதுசாரி கவிதைகளில் பொதுவாக வெளிப்படும் கருத்து என்கிற அடிப்படையில் கிளிஷேதான். இவ்விரு கவிதைகளிலும் உருவகங்கள் அநாயசமாக வெளிப்படுக்கின்றன; அதன் ஊடாகக் காட்சிகளாக நம்முள் விரிகின்றன.

அவனது தெய்வங்கள் பார்த்தால் மனமுடைந்து நம்பிக்கையிழந்து போய்விடுகிற மாதிரி
சரியும் மாலை வெயிலில்
தன் கரங்களாலேயே தன்னைத் தாங்கியிருந்தான்

என்று புலம்பெயர் வாழ்க்கையின் ஒட்டுமொத்த சாரத்தையும் ஓவியத்திற்கு ஒப்பான காட்சியொன்றில் அளிக்கிறது ‘அவனது தெய்வங்கள்’ கவிதை. புலம்பெயர்வென்பது நமது பிரார்த்தனைகளைக் கேட்கும் தூரத்தில் இருக்கும் தெய்வங்களிடமிருந்து பிரிவது; சாய நிலமில்லாது கைகள் அன்றி வேறு பற்றுதலற்று இருக்கும் இருப்பே அது.

இந்த உடல் மட்டும்தான்
இந்த நகரத்தில் எங்களுக்குள்ளது
அவை கனவுகளைவிட மூத்திரத்தையும் மலத்தையும்தான்
அதிகம் சுமந்தலைந்தன கடவுளே

ஒடுக்கப்படும் உடல்களின் மெய்மையே இங்கு கவிதையாகிறது. இதை வாசிக்கும்போது அது சட்டென்று நம்மை ஒரே சமயத்தில் கடந்த காலம் நோக்கியும் சமகாலத்தின் உடல்களை நோக்கியும் எடுத்துச் செல்கிறது. ஓர் ஒட்டுமொத்தத்தைச் சொல்ல எத்தனிக்கிறது. இங்கே ஒரு செய்தியையும் திரைப்படத்தின் காட்சியையும் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். 2023ஆம் ஆண்டு அமெசான் நிறுவனத்திற்கு எதிராக அங்கு பணிசெய்த ஓட்டுநர்கள் வழக்குத் தொடர்ந்தனர். சிறுநீர் கழிக்கக் கூட அனுமதியளிக்கப்படாததால் அவர்கள் தண்ணீர் பாட்டில்களில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். டெலிவரிக்கான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கும் மையங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் சிறுநீர் கழிக்கப்பட்ட பாட்டில்கள் நிரம்பி வழியும் அளவு நிலமை மோசமாக இருந்தது. துரிதமாகப் பொருட்களை டெலிவரி செய்யும் நோக்கத்தில் ஓய்வு நேரங்களில் கூட தம் ஓட்டுநர்களை வேலை வாங்கியது அமெசான் நிறுவனம். இவ்வாறான சுரண்டல்களுக்கு எதிராகவே அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதே பிரச்சினையைச் சுட்டிக்காட்டி 2021ஆம் ஆண்டிலிருந்தே அமெசான் நிறுவனத்தின் மீது வழக்குகள் வரத்தொடங்கின. 2019ஆம் ஆண்டு வெளியான கென் லோச்சின் திரைப்படத்தில் Parcels Delivered Fast! எனும் டெலிவரி நிறுவனம் அங்கு வேலை பார்க்கும் கதாநாயகனிடம் காலியான பாட்டிலொன்றைக் கொடுத்து அவசரமாகச் சிறுநீர் கழிக்க வேண்டுமெனில் அதைப் பயன்படுத்திக் கொள்ளும்படிச் சொல்கிறது. மேற்சொன்ன சதீஷின் வரிகள் இத்தகைய உடல்களின் மெய்மையைத்தான் சுட்டுகின்றன; உடல்களை மட்டுமே கையிருப்பாகக் கொண்டவர்களின் மெய்மையே அவருடைய இக்கவிதைகளின் பொதுவான கூறாக அமைகிறது.

 

உலகம் முழுக்கவுள்ள இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் அனைவருக்குமான பிரார்த்தனையாக சதீஷின் கவிதை கடவுளிடம் (நக்கலாக) வேண்டுகிறது:

இந்தத் தாழ்ப்பாளில்லாத கதவுள்ள கழிப்பறையில்
நான் குண்டி கழுவ
மூன்றாம் கை தா.

அந்தப் பிரார்த்தனையில் அவர்கள் கருணையை வேண்டவில்லை, அன்பை வேண்டவில்லை, பரிதாபத்தை வேண்டவில்லை. மாறாக, இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழிலாளர்கள் கடவுளிடம்,

பிற பிரச்சினைகளை நானே தீர்த்துக்கொள்கிறேன்
இந்த மூத்திரத்தைக் கண்ட நேரத்தில்
கண்ட இடத்தில் வர வைக்காதே

என்று வேண்டுகின்றனர்.

சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகள் இரக்கப்படுங்கள் என்றோ காப்பாற்றுங்கள் என்றோ வேண்டுவதில்லை. மொழியின் ஊடாக உடல்களுக்கு அருகில் நம்மை எடுத்துச் செல்கின்றன. அந்த அனுபவமே நம்மை உடல்களைப் பற்றியும் அவை சுரண்டப்படுவதன் அரசியல், வரலாறு குறித்து உணர்வுப்பூர்வமான முறையில் சிந்திக்கத் தூண்டுகின்றன. அவருடைய உடல் சார்ந்த கவிதைகளின் அழகியல் வெற்றியென்பது சுரண்டப்படும் உடல்களைச் சட்டகமாகக் கொண்டு ஒரு நகரத்தின் அசைவை கவனிக்கச் செய்வதுதான்.

m

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதைச் சொல்லணும் எனில்
ஆகா என்றுதான் சொல்ல முடியும்
இந்தப் பத்து வருடத்தில்
திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவுபோல இருந்தது
அது
வளர்மதி ஸ்டாப்
பாலம் கடக்கும்போது
சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்
மீனை நீர் தொடுவதுமாதிரி
ஒரு கணம் திரும்பி
தலையை இருகைகளாலும் தாங்கி அதிசயித்தாள்
இந்த நகரத்தில்
இப்போதைக்கு அவள்தான் அழகு என மலர்ந்தாள்
எனக்கு அதைக் கண்டதும்
‘ஆகா’ என்றிருந்தது
இந்த ஆகா இல்லாமல்தானே
இதெல்லாம் சீரழிந்தது. இந்த ஆகாவுக்காகத்தானே
கனவுகள் துடித்தன
இந்த ஆகா இல்லாமல்தானே
உடல்கள் உடல்களாக மட்டுமே
அறை திரும்பின
தனித்திருந்தன
அவர்களுக்குள் என்ன என்று கூட
எனக்குத் தெரியாது
இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்
ஆனால்,
அவளுடைய இன்றைய அற்புதம் அவன்தான்
இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ‘ஆகா’தான்.

m

அவனது தெய்வங்கள்

நகரம் ஓடிக்கொண்டிருந்தது
வளர்மதி ஸ்டாப் எம்.ஜி.ஆர். சிலைக்கு எதிரிலுள்ள
பாலத்தில்
மாலையின் வெயில் பொழிய
சத்தத்தோடு சத்தமாக
சின்னதொரு தள்ளுவண்டியில் பானிபூரி
விற்றுக்கொண்டிருந்தான்
அந்தப் பதினைந்து வயதுக்காரன்
ஏதோ இந்த மண்ணில் தலைசாய்க்க இடமில்லாதது மாதிரி
வாடிக்கையாளர்கள் இல்லாத சமயத்தில்
தன் கரங்களிலேயே தலையைத் தாங்கியபடி
அமர்ந்திருந்தான்
அவனெங்கோ வடக்கிலிருந்து
எதுவோ வீசி ஏறிய
விரட்டித்துரத்த
இங்கு வந்திருக்கிறான்
தன் நிலத்தைப் பிரிந்துவிட்டான்
தன் பிரார்த்தனைகள் தூரமிருக்கும்
தனது தெய்வங்களுக்குக் கேட்குமா என அமர்ந்திருந்தான்
அவன் எல்லாச் சிறுவர்களையும் போல இருக்க
விரும்புவதுபோலத்தான் இருந்தது
ஆனால்,
அவனது தெய்வங்கள் பார்த்தால் மனமுடைந்து
நம்பிக்கையிழந்து போய்விடுகிற மாதிரி
சரியும் மாலை வெயிலில்
தன் கரங்களாலேயே தன்னைத் தாங்கியிருந்தான்.

m

பீஸ்ரேட் கவிதை

சரியாக 9.30 க்கு வேலை தொடங்கும்
நேற்று அருந்திய
தமிழக மதுவின் மிச்சம்
தலைவலியாக மீந்திருக்கும்
பாய்லர்களின் விசைகள் போடப்பட்டன
நீராவிக் கப்பலென
ஸ்ட்ரீம் அயர்ன் பாக்ஸுகளில்
ஆவி பறக்கிறது
ராட்சசன் மூச்சுவிடுவது மாதிரி
புஸ்…புஸ்…
டொமஸ்டிக் பனியன்களுக்கு
இவ்வளவுதான் ரேட் தரமுடியுமென்ற
ஒப்பந்தக்காரனிடம்
பரஸ்பரம் ஒரு விலை முடிவுசெய்யப்பட்டது
பெடலை மிதித்ததும்
vacuum இழுத்துப் பிடிக்க
உதறி விரிக்கப்படுகிறது
பனியன் துணிகள்
வெட்டப்பட்ட பாதி உடல் மாதிரியான துணிகள்
சுருக்கம் இல்லாமல்
பருவ உடல்மாதிரி
தேய்க்கப்பட்டன அவை
வேகம் கூடுகிறது
நிமிடத்திற்கு இரண்டு பனியன்கள்
மணிக்கு 120 பனியன்கள்
பனியன் ஒன்றிற்கு 60 பைசா
ஒருமணி நேரத்தின் விலை 72 ரூபாய்
விட்டு விட்டு முழுதாகப் பத்துமணிநேர
பருவ உடல் தேய்ப்புகள்
கைகளை முன் நீட்டி
இடதும் வலதும் திரும்பி
பெடல் மிதித்து
பைசா பைசாவாகக் கணக்கிட்டு
பனியன் பனியனாக எண்ணி
பொழுது சாய்ந்தது தெரியவில்லை
இரவு 8.30க்கு
டீ காசு வாங்கக் காத்திருந்தோம்
வாரத்தின் முதல்நாள்
தலைக்கு இருநூறு
தமிழக மது 145 ரூபாய்
இருபது ரூபாய் சைடிஸ்ஸிற்கும்
மிச்சக் காசு சிகரெட்டிற்கும் ஒதுக்கப்பட்டது காலை விடியும்
இது உதிரித் தொழிலாளி ஒருவனின்
மணிக்கு 72 ரூபாய்க்கு உடலை விற்கும்
ஒரு தொழிலாளியின் சித்திரம்தான்
எனக்கு 60 வயதாகப் போகிறது
முன்னைவிட வெகுவாகக் குறைந்துவிட்டது உடல்வேகம்
அரசு பாதுகாக்காத
நிறுவனங்கள் பாதுகாக்காத
எந்த நீதியுணர்ச்சியும் பாதுகாக்காத
எந்தக் கோட்பாடாலும் பாதுகாக்க முடியாமல்போன
இந்த உடலின் வேகம் அழிந்துவிட்டிருந்தது
மற்றபடி
திரும்பவும்
மேலிருந்து படியுங்கள்
சாவதற்கு முதல்நாள் வரை
இதுதான் கதை
இதே பீஸ்ரேட்
அறுபது வயதில்
மணிக்கு 90 பனியன்கள்
பனியன் ஒன்றிற்கு 80பைசா
ஒருமணி நேரத்தின் விலை ரூபாய் 72

m

விடுமுறைநாளின் குருவிகள்

மழை நனைந்த குருவிகள்போல
இரு காதலர்கள் செல்கிறார்கள் வாகனத்தில்
கடவுளர்களே
அவர்களை அப்படியே விடுங்கள்
ஈரம் காயாது
கனவின் ஒருநுனியும் உடையாது
சிட்டுகள்போல
மழைக்கு மழை
தேனிலிருந்து தேனுக்கு
நாளையின் யோசனைகளின்றி
அவர்களை நனையவை
விடுமுறை நாளெனும் ஒரே ஒரு
அதிர்ஷ்டத்தையாவது தந்த உனக்கு எவ்வளவு பெரிய மனது
தேனிலிருந்து தேனில்
பருகி நகருங்கள்
காதலர்களே
மழையிலிருந்து மழையில்
நனையுங்கள்
விடுமுறைநாளின் பறவைகளே

m

62 கிலோ உடல்தான் மிச்சமிருக்கிறது

மதியம் சாப்பாட்டு நேரம்
சாப்பிட்டேன்
கொஞ்சம் தூங்கினேன்
சாப்பாட்டு நேரம் முடிந்துவிட்டது
எழுந்ததும் அழலாம் போல இருந்தது
இந்த வாழ்க்கை இன்னும் கொஞ்ச நேரம்
தூங்க அனுமதித்திருக்கலாம்
மது குடித்தால் துக்கம் கொஞ்சம் அமிழும்
இப்போது அதற்கு நேரமில்லை
இன்னும் ஏழு மணிநேரம் வேலை செய்தாக வேண்டும்
கழிப்பறையில் வால்யூம் இல்லாமல்
நீலப்படம் பார்த்தபடி கரமைதுனம் செய்தேன்
வேறெப்படி இந்தத் துயரங்களை
எதிர்கொள்வது என்பதும் தெரியவில்லை
உடல் நினைவற்றுக் கிடந்தது
அன்பில்லை
கனவில்லை
நேசமோ காதலோ எதுவுமில்லை
மிச்சமிருப்பதெல்லாம்
இந்த 62 கிலோ உடல் மட்டுமே
சாப்பாட்டு நேரம் முடிந்து
பத்து நிமிடம் ஆகிவிட்டது

 l

குறிப்புகள்

  1. எஸ்.வி.ராஜதுரை, தலித்தியமும் உலக முதலாளியமும், ப.152.
  2. எஸ்.வி.ராஜதுரை, தலித்தியமும் உலக முதலாளியமும், ப.137.
  3. Vijayabaskar & A.Kalaiyarasan, Caste as Social Capital – The Tiruppur Story.
  4. கார்ல் மார்க்ஸ், மூலதனம் பகுதி -1, மொழிபெயர்ப்பு: தியாகு, நியூ செஞ்சுரி வெளியீடு, ப.360.
  5. Shoshanna Zuboff, The Age of Surveillance Capitalism, p.29.
  6. எஸ்.வி.ராஜதுரை, தலித்தியமும் உலக முதலாளியமும், ப.137.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!