நெட்ஃப்ளிக்ஸில் ஒரு வெப் சீரீஸ் ஒளிபரப்பாகியுள்ளது. அந்தத் தொடர் தொடர்ந்து ஆறு வாரங்கள் முதலிடத்தைத் தக்க வைத்திருந்தது. The Queen of Charlotte என்பது தொடரின் பெயர். பிரிட்டிஷ் நாட்டின் இளவரசருக்கு அரசி மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார். அந்தத் திருமணத்தின் விளைவுகள்தான் தொடரின் மையம். மணப்பெண்ணை ஜெர்மனியிலிருந்து வரவழைத்திருப்பார் அரசி. மணப்பெண்ணைப் பார்த்ததும் அவையில் இருக்கும் மற்றவர்கள் சற்று முகம் சுளிப்பார்கள். காரணம், அவர் கறுப்பினத்தவர். அரசியோ இவர்தான் இங்கிலாந்தின் வருங்கால அரசி என்பதில் உறுதியாக இருப்பார். திருமணமான சில நாட்கள் கழித்து இளவரசரையும் அவரது மனைவியையும் ஓவியம் தீட்ட வேண்டும் என ஓவியர் வரவழைக்கப்பட்டிருப்பார். அரசி அந்த ஓவியரிடம், “ஓவியத்தில் இளவரசியின் நிறத்தை வெள்ளையாக மாற்றிவிடுங்கள்” என்பார். இளவரசிக்குக் கடுமையான கோபம் ஏற்படும். “அதெல்லாம் தேவையில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே வரையுங்கள்” என்று சொல்லிவிடுவார்.
இதே தொடரில் கறுப்பினத்தவர்கள் எத்தனை பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் அரச விழாக்களுக்கு அழைக்கப்படாமல் இருப்பதும், ‘லார்ட்’ என்கிற பட்டத்தினை அரச குடும்பம் அவர்களுக்குத் தர மறுப்பதும், அவர்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு அரச குடும்பத்தினர் செல்லாமல் இருப்பதுமான நிலையைக் காட்டியிருப்பார்கள். அரசியல் நிகழ்வுகள், நகர்வுகளைச் சரியாகக் கையாளத் தெரிந்த இளவரசியின் கறுப்பினத் தோழி தங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வார்.
தொடரின் இப்பகுதிகள் அதிகம் பேசப்பட்டன. ஆனால், எவரும் ஆச்சரியமாகப் பேசவில்லை. ஷாண்டா ரைம்ஸ் (Shonda Rhimes) தான் தொடரின் தயாரிப்பாளர், கிரியேட்டிவ் பிரிவுக்கான தலைவர் என்றதும் தொடர் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எதிர்பார்ப்புக்கு எந்த அளவிலும் குறையாமல் தொடரின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார் ஷாண்டா.
முப்பதாண்டுகளாக அமெரிக்கர்களின் குடும்ப அட்டையில் சேர்த்துக்கொள்ளப்படாத குடும்பம் ஷாண்டாவினுடையது. அடுத்த ஷாண்டா யார் என்பதுதான் அடிக்கடி அவரிடம் கேட்கப்படும் கேள்வி. “எனக்கு அடுத்து என்று யாரும் இருக்க வேண்டியதில்லை. என்னைக் கடந்து ஒவ்வொருவரும் செல்ல வேண்டும். எல்லோரிடமும் தனித்திறன் உண்டு” என்பது ஷாண்டா திரும்பத் திரும்பச் சொல்வது. ஆனால், அவரைக் கடந்து போவது அத்தனை எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவரின் உழைப்பும் சாதனைகளும் அத்தகையவை.
அடிப்படையில் ஷாண்டா திரைக்கதை ஆசிரியர். The Princess Dairy, Scandal, Grey’s Anatomy எனத் திரைப்படங்களுக்கும் தொடர்களுக்கும் எழுதியவர். சிறந்த திரைக்கதையாசிரியர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். இவரது திரைக்கதையில் எந்தத் தொடரும் இதுவரை தோல்வி கண்டதில்லை. ஷாண்டாலான்ட் (Shondaland) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அது இன்று அமெரிக்காவின் வீட்டுப் பெயர் போல மாறியிருக்கிறது.
ஷாண்டா சிகாகோவில் பிறந்தவர். கதைகள் கேட்பதும், சொல்வதும் அவருக்குப் பிடித்தமானது. வீட்டினருகில் உள்ள மருத்துவமனையில் பகுதி நேர கதைசொல்லியாகச் சென்றுகொண்டிருந்தார். அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள், நோயாளிகளுக்குக் கதை சொல்வார். கதைகள் வலியையும் துயரத்தையும் மறக்க வைக்கக்கூடியவை என்பதில் அவருக்கு இருந்த நம்பிக்கை இன்னும் உறுதியானது. மருத்துவர்களுடன் உரையாடுவது என அங்குள்ள சூழல் எல்லாமே ஷாண்டாவுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. பொழுதுபோக்கிற்காக அவர் பார்க்கும் காணொலிகள் யாவும் அறுவை சிகிச்சைகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன என்பதாகவே இருந்தன. இவையெல்லாம் சேர்ந்துதான் புகழ்பெற்ற GREY’S Anatomy தொடருக்கு அவரை எழுத வைத்தது. ஒரு மருத்துவமனையையும், அங்குள்ள நோயாளிகளையும் பற்றிச் சொல்கிற தொடர் அது. அதனதன் இயல்புகளோடு சொல்லப்பட்டதாலேயே 2005 தொடங்கி இப்போதுவரை அந்தத் தொடர் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
பள்ளிப் படிப்பினை முடித்ததும் திரைக்கதைக்கான பயிற்சியினைக் கல்லூரியில் சேர்ந்து கற்றுக்கொண்டார். தங்கப் பதக்கத்தையும் பெற்றிருந்தார். திரைக்கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஆனால், வாய்ப்பு?
அவர் வாய்ப்புகளைத் தேடிப் போனார். எதுவும் அமையவில்லை. பகல் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்தார். வேலைவாய்ப்புப் பெற்றுத்தரும் நிறுவனத்தில் ஒரு வேலை, அது முடிந்ததும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை தருதல் எனப் பகல் நேரப் பணிகள். இரவில் தன் கற்பனையில் உதித்த கதைகளை எழுதுதல் என ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருந்தன. படைப்புகளை உருவாக்குவதுதான் எதிர்காலத் திட்டமெனில் எதற்கு வெவ்வேறு வேலைகளைச் செய்ய வேண்டும். ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துவிட்டால், கதை பேசக்கூடிய சூழலில் வேலை செய்யலாம் என்கிற எண்ணம் வர, அதற்கான தேடலில் இறங்கினார். ஆப்பிரிக்க அமெரிக்கரான தயாரிப்பாளர் சேஸ் என்பவரின் நிறுவனத்தில் சேர்ந்தார். சேஸ் ஷாண்டாவின் வழிகாட்டியானார். ஸ்டூடியோக்களும் படத் தயாரிப்பு நிறுவனங்களும் அப்போது வெள்ளையின மக்கள் மட்டுமே தலைமையேற்கும் இடமாக இருந்தன. இவர்களுக்கு நடுவில் சேஸ் போன்றவர்கள் முதல் அடியை எடுத்து வைத்துப் போராடியதை அருகில் இருந்து பார்த்தார். அங்கிருந்து நடிகர் டென்ஸல் வாஷிங்டனின் தயாரிப்பு நிறுவத்துக்கு மாறினார்.
இந்நேரத்தில் அவருக்குச் சில வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆவணப்படங்களுக்கு எழுதுவது, மற்றோர் எழுத்தாளரோடு இணைந்து திரைக்கதை எழுதுவது என அடுத்தடுத்த முன்னேற்றங்கள்.
இவரது சில திரைக்கதைகள் தொடராக எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகாமல் முடங்கவும் செய்திருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனக்கான பயிற்சியாக மட்டுமே எடுத்துக்கொண்டார். டிஸ்னி நிறுவனத்தின் The Princess Dairies 2 இவருடைய திறமையை வெளிக்காட்டியது.
அதன் பிறகு வந்த நிஸிணிசீ’ஷி கிழிகிஜிளிவிசீ தொடர் அவரை மேலும் பிரபலமாக்கியது. இத்தொடரை எழுதவும் தயாரிக்கவும் செய்தார் ஷாண்டா. தொடரின் முதல் காட்சி அதுவரை தொலைகாட்சித் தொடரில் இடம்பெறாத ஒன்றாக இருந்தது.
முதல் காட்சியை வாசித்ததும் ஷாண்டா சேனலுக்கு வரவழைக்கப்பட்டார். அந்த அறையில் வயதான ஆண் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். “அவர்கள் என் முகத்துக்கு நேராகவே, ‘இப்படி எழுதினால் சீரீஸ் தோல்வியடையும்’ என்றார்கள். எனக்குப் புரியவில்லை, ‘எப்படி எழுதினால்?’ என்று கேட்டேன்.
‘முதல் காட்சியிலேயே ஒரு பெண் அறிமுகமல்லாத ஆடவனுடன் இரவினைக் கழிக்கிறாள். மறுநாள் மருத்துவராகப் பணியில் சேர்கிறாள். ஒரு மருத்துவரை இப்படிப் பார்க்க மக்கள் விரும்ப மாட்டார்கள்’
‘மருத்துவரையா? பெண் மருத்துவரையா?’ என்று ஷாண்டா கேள்வி கேட்க விவாதம் வலுத்தது. காட்சியை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் ஷாண்டா. “இவர்கள் நான் உருவாக்கிய கதாபாத்திரங்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யத் தேவையில்லை என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு” என்கிற ஷாண்டாவின் உறுதி இன்றுவரை அசைக்க முடியாத இயல்பாக இருக்கிறது.
ஷாண்டா எழுதியபடிதான் Greys Anatomy தொடர் ஒளிபரப்பானது. அமெரிக்கர்கள் கொண்டாடினார்கள். பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூடினார்கள். இயல்பான கதாபாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள், எதிலும் புனிதத்தை ஏற்றாமல் இருப்பது என ஷாண்டாவின் கதைகளும் கதாபாத்திரங்களும் அத்தனை சுவாரஸ்யமாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருக்கும். இதனை இவர் உருவாக்கிய Bridgerton series வரைப் பார்க்கலாம்.
சாரட் வண்டியில், இங்கிலாந்தை நோக்கி வரும் இளவரசி பொம்மை போல் அமர்ந்திருப்பாள். அவளது அண்ணன் கேட்பான், “எதற்கு இப்படி அமர்ந்திருக்கிறாய்? கொஞ்சம் அசைந்துதான் உட்காரேன்.”
“அசையலாம்… ஆனால் இந்த உடையில் அங்கங்கு குத்தப்பட்டிருக்கும் ஊசிகளைப் பற்றி உனக்குத் தெரியுமா? தலையைக்கூட திருப்ப முடியாமல் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கூந்தலைப் பற்றி உனக்குத் தெரியாது. உனக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல் மட்டுமே… என்னைப் பலி கொடுத்து நீ பெற்றுக்கொள்ளும் ஆதாயம் மட்டுமே” இப்படிப் போகும் உரையாடல்.
அரசியான ஒரு பெண்ணின் கதை என்று இத்தொடரைச் சொல்லலாம். ஆரஞ்சு பழத்தைப் பறிப்பதற்குக் கையைத் தூக்கினால் பணியாளர்கள் பதறி ஓடிவந்து பறித்துத் தருகையில் “எனக்கு மூச்சு முட்டுகிறது. எனக்குத் தேவையான ஆரஞ்சு பழத்தைக் கூட நான் பறிக்கக்கூடாது என்றால், நான் எப்படி அதிகாரம் கொண்ட அரசியாக இருப்பேன். அப்படியென்றால் அதிகாரம் என்றால்தான் என்ன?” என்று கேள்வி கேட்கிற ஒரு பெண்.
அரசி என்பவள் சராசரியாகக் கூட பேசவோ, நடக்கவோ முடியாது எல்லாவற்றிலும் கிரீடம் சுமக்க வேண்டும் என்பதை வெறுக்கிற கதாபாத்திரம், தன்னிடம் ஆட்சி அதிகாரம் வந்ததும் எப்படி நடந்துகொள்கிறார் என்பது ஒரு கதை; கணவனுக்குத் தனி உலகம் இருக்கிறதென்பதைப் புரிந்துகொண்டு அது அரசியலில் குழப்பம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கிற புத்திசாலித்தனத்தோடு ஒரு கதை என இந்தத் தொடர் வெற்றி பெற்றதற்கு ஷாண்டாவின் எழுத்தே முக்கியக் காரணமாக அமைந்தது. ஒரு நூற்றாண்டு இங்கிலாந்தைக் கண் முன்னால் கொண்டுவந்ததற்காகத் தயாரிப்பாளர் ஷாண்டாவையும், அவருக்குள் இருந்த எழுத்தாளரையும் மக்கள் கொண்டாடினார்கள்.
இப்படியான பார்வையை ஷாண்டா தொடர்ந்து தன்னுடைய எழுத்துகளில் வெளிப்படுத்திவருகிறார். இவருடைய கதாபாத்திரங்கள் அச்சடித்தது போல எப்போதும் இருந்ததில்லை.
ஷாண்டா லாண்ட் (SHONDA LAND) என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கும்போது அது அத்தனை சுலபமாக இல்லை. தன்னை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டியிருந்தது. திரைக்கதை எழுத்தாளராகத் தன்னை நிரூபித்துக்கொண்டே தயாரிப்பாளராகவும் இருக்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இவர் நிறுவனத்தைத் தொடங்கியபோது கூடவே ஒரு வரலாறும் எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் தொடங்கிய ஒரு தயாரிப்பு நிறுவனம் மில்லியன் கணக்கில் இலாபம் பார்த்தது இதுதான் முதன்முறை. ‘டைம்ஸ்’ இதழ், உலகின் எண்ணத்தை மாற்றும் நூறு நபர்களில் ஒருவராக ஷாண்டாவைத் தேர்ந்தெடுத்தார்கள். ஷாண்டா, உலகின் அதிக சம்பளம் பெறும் ஊடக நிறுவனர் ஆனார்.
அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் இவர் எழுதிய அல்லது தயாரித்த தொடர்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. இவருடைய பெயருக்காகவே மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். தொலைக்காட்சியிலிருந்து அடுத்த கட்டமாக ஓடிடி தளங்கள் வெளிவரத் தொடங்கியதும் நெட்ஃப்ளிக்ஸ், ஷாண்டாலாண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்காக ஷாண்டா தொடர்கள் தயாரிக்கிறார்.
உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் என்றாலும் சிறு வயதிலிருந்தே தனித்து வாழப் பழகியிருந்தார் ஷாண்டா. அவருடைய கதையுலகமும் அவரும் தனித்தே பயணப்பட்டனர். யாரிடமும் அதிகம் பேசாமல், வாய்ப்புக் கேட்டுப் போகுமிடங்களில் எல்லாம் தயங்கி நின்ற இவர் இன்று சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுகிறார். இந்த நல்ல மாற்றத்திற்கான காரணமாக இருந்ததைத் தன்னுடைய புத்தகமான A YEAR OF YES என்பதில் விளக்கி
யிருக்கிறார். பொது நிகழ்ச்சிக்கென யார் அழைத்தாலும் முடியாது என்று சொல்லிப் பழக்கப்பட்டிருந்தார் ஷாண்டா. இவரது சகோதரி ஒருநாள் இவரை அழைத்து, “எதற்குமே நீ முடியும், ஆமாம் என்று சொல்வதில்லையே ஏன்?” என்று கேட்க அதுதான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த நொடி என்கிறார். “ஆமாம், நான் எதற்கு எல்லாவற்றையும் மறுக்கிறேன்? இனி ஒரு வருடக் காலத்துக்கு எல்லாமே yes மட்டுமே” என்று முடிவெடுத்திருந்தார். இந்தச் சமயத்தில் அவர் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்திருந்தார். அவருக்குத் திருமண உறவின் மீது நம்பிக்கையில்லை. வேலையின் பின்னே அலைந்துகொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு நேரம் செலவழிக்க முடியவில்லை என்பது நிரந்தர குற்றவுணர்வாக இருந்திருக்கிறது. அதன் பின்தான் யோசித்திருக்கிறார். நேரம் இருக்கும்போது கூட அவர்களிடமும் நான் முடியாது என்றே சொல்லியிருக்கிறேன்.
விளையாட வாங்கம்மா
முடியாது
நடைப்பயிற்சிக்குப் போகலாம்
முடியாது
நீச்சலடிக்கலாம்
முடியாது.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்த பிறகு தவறு தன்னிடத்தில்தான் என்பதை உணர்ந்திருக்கிறார். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ததில் உடல் பருமனும் அதிகரித்திருந்தது. இதுதான் எல்லாவற்றிலும் சோர்வாகத் தன்னை மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொண்டு உடல் எடையைக் குறைத்தார். குழந்தைகள் விளையாட அழைத்தால் மறுப்பதில்லை. பொது நிகழ்ச்சிக்குப் போக ஆரம்பித்தார். அங்கு உரையாற்றினார். எதையெல்லாம் சிரமம் என்று நினைத்தாரோ அவை இப்போது உதவி செய்தன. இந்த வேகத்தில்தான் அவர் ஷாண்டா லாண்ட் நிறுவனத்தைத் தொடங்கினார்.
“எல்லோரும் நான் எப்படி ஜெயிக்கிறேன்” என்று கேட்கிறார்கள். ஒரு தயாரிப்பாளராக, திரைக் கதையாசிரியராக வர வேண்டும் என்று விருப்பம் பலருக்கும் இருக்கும். விருப்பம் வேறு, செயல் வேறு. நான் செயலில் இறங்கினேன். இறங்குவதற்கு முன்பு என்னிடம் இருக்கும் குறைகளையும், வாய்ப்பு மறுக்க என்னிடம் இருந்த காரணங்களையும் புறந்தள்ளினேன். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான். ஆனால், இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட துறை. ஒருநாளும் பின்னடையக்கூடாது. அத்தனைக்கும் இனிமேல் YES மட்டுமே” என்கிற முடிவு அவரையும் அவருடன் பணிபுரியும் நூற்றுக் கணக்கானவர்களையும் முன் செலுத்துகிறது.
ஷாண்டா என்கிற பெண்மணி எத்தனை பேருக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்பது கணக்கிலடங்காதது. இவரது வெற்றியை ஒவ்வொருவருமே தங்களுடைய வெற்றியாகப் பார்க்கின்றனர்.
“இன்று நீங்கள் யார்? ஒவ்வொரு முறையும் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து நிற்காது. தைரியமாக இருங்கள். மக்கள் முன்பாக வாருங்கள். அவர்கள் உங்களைப் பார்க்கட்டும். பேசுங்கள். அவர்கள் கேட்கட்டும். வெறும் கனவுகள் அல்ல, உங்கள் செயல்களே இனி எல்லாம்” இதைத்தான் ஷாண்டா கடைபிடிக்கிறார், எல்லோருக்கும் சொல்கிறார்.
‘எதையும் நேரடியாகச் சந்திப்பவர்களுக்கே வாய்ப்புகள் வந்து நிற்கும்’ என்று சொல்ல இவருக்கு முழுத் தகுதியும் உண்டு. ஒரு பெண், நிறத்தால் ஒடுக்கப்பட்டவர், தன்னுள்ளே ஒடுங்கியவர், தன்னை முன்னிறுத்தி எல்லோரையும் தன்னை மீறச் சொல்கிறார். அதனால்தான் ஷாண்டா எல்லோராலும் விரும்பப்படுகிறார்.