புத்தர் சாவத்தியில் உள்ள ஜெதவனா மடத்தில் தங்கியிருந்தபோது, அவரைப் பின்பற்றும் அனாதபிண்டிகா புத்தரைப் பார்க்க வந்திருந்தார். புத்தரைப் பற்றி அறிந்திராத 500 நபர்களைத் தம்முடன் அழைத்து வந்தார். அவர்கள் தேவதத்தா என்பவரின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். புத்தரின் அறநெறிக் கருத்துகளைக் கேட்டுத் தெளிவுற அனாதபிண்டிகா அழைத்துவந்திருந்தார். புத்தரும் அவர்களுக்குத் தம்மம் போதித்தார்.
புத்தர் சாவத்தியிலிருந்து சென்ற பிறகு அந்த 500 பேரும் தங்களது பழைய சித்தாந்தத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். புத்தர் திரும்பி வந்தபோது அனாதபிண்டிகா அவரிடம் முறையிடுகிறார், “நீங்கள் சென்ற பிறகு நான் அழைத்து வந்தவர்கள் நீங்கள் போதித்த அறநெறியைக் கைவிட்டுவிட்டுத் தங்களது பழைய சித்தாந்தத்தைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, நீங்கள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.”
அதற்குப் புத்தர் “நான் கூறிய பஞ்ச சீலங்களான ஐந்து நல்லொழுக்கங்களைப் பின்பற்ற முடியாதவர்களே மீண்டும் தங்களது பழைய சித்தாந்தத்திற்குத் திரும்பிவிடுகிறார்கள். இது பாலைவனத் திருடர்களிடம் மாட்டிக்கொண்ட வணிகர்களின் கதையைப் போன்றது” என்கிறார்.
அனாதபிண்டிகரோ “அந்தக் கதை என்னவென்று கூற முடியுமா” என்று புத்தரிடம் கேட்கிறார். புத்தரும் கதையைக் கூறுகிறார்,
ஒருகாலத்தில் இரண்டு வணிகர்கள் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் தங்களது வியாபாரப் பயணத்திற்காகத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஒன்றாகப் பயணிக்கலாம் என்ற முடிவையும் எடுத்திருந்தனர். அவர்களிடம் சுமார் ஆயிரக்கணக்கான காளை வண்டிகள் இருந்தன. நாம் மொத்தமாகச் சென்றால் நெரிசல் ஏற்படும், எனவே ஒரு வணிகர் குழுவும் அவர் போன பிறகு மற்றொரு குழுவும் வருவதாகத் தங்களுக்குள் உடன்படிக்கை செய்துகொண்டனர்.
முதலில் செல்லும் வணிகர், ‘நமது வண்டியை ஓட்டிச் செல்லும் காளைகள் சிறந்த புற்களைத் தேர்வு செய்து சாப்பிடும், நாம் உண்பதற்கும் சிறந்த பழங்களை அறிமுகப்படுத்தும். பின்னே வருபவர்களுக்கு அவை சிறந்ததாக இல்லாமல் போகும், அத்தோடு நாம் முன்னே சென்று நமது பொருட்களை விற்றுத் தீர்த்துவிட முடியும்’ என்றும் தன் முடிவு குறித்துச் சிறந்த தலைமை என்ற கர்வத்துடனும் இருந்தார்.
ஆனால், முதலில் சென்ற குழுவிற்குச் சில சிக்கல்கள் இருந்தன. இத்திசையில் பயணித்தால் அவர்கள் தண்ணீரற்ற பாலைவனத்தில் சிக்கிக்கொள்வார்கள் எனவும் அங்கே திருடர்கள் உலவுவதாகவும் உள்ளூர் மக்கள் எச்சரித்தனர். அதையும் மீறி முதலாவது வணிகர் பயணப்பட்டார்.
அவர் பயணத்தில் எதிரே ஒரு குழுவைச் சந்திக்கிறார், அவர்களது காளை வண்டிகள் முழுவதிலும் மண்ணும் சகதியும் ஒட்டியிருந்தன, அவர்களது வண்டியில் ஆங்காங்கே தாமரை அல்லிச் செடிகள் ஒட்டியும் தண்ணீரும் சொட்டிக்கொண்டிருந்தது.
எல்லாம் தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருக்கும் கர்வம் நிறைந்த வணிகரிடம் வந்த குழுத் தலைவன், “நீங்கள் ஏன் இவ்வளவு நீரை உங்கள் வண்டிகளில் சுமக்கிறீர்கள்? உங்கள் காளைகள் அவற்றை இழுக்கக் கடினமாக இருக்கிறது பாருங்கள். நீங்கள் போகும் பாதையிலேயே ஒரு சோலைவனம் இருக்கிறது. அங்கே தேவைக்கேற்ப நீர் இருக்கிறது. அதுதான் எங்கள் வண்டிகளில் நீங்கள் காணும் காட்சி. எனவே உங்களது நீரையெல்லாம் கீழே ஊற்றிவிட்டு வண்டிகளை இழுக்கும் காளைகளுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்றார்.
இதை உண்மையென நம்பிய வணிகர் அவ்வாறே செய்தார். ஆனால், உள்ளூர் மக்கள் எச்சரித்தது போலவே நடந்தது. பயணித்த திசையில் எங்குமே நீர் கிடைக்கவில்லை; பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர்; போதிய தண்ணீர் இல்லாததால் காளைகளும் வண்டியை இழுக்க அவதிப்பட்டன. உடன் வந்தவர்களெல்லாம் இவரது தலைமையையும் அவரது முடிவையும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். சோர்ந்திருந்தபோது அவரது வணிகப் பொருட்களையெல்லாம் பாலைவனத் திருடர்கள் அபகரித்துக்கொண்டு, அவர்களையும் கொன்றுவிட்டனர்.
இப்போது இரண்டாவது வணிகர் தனது பயணத்தைத் தொடங்குகிறார். முதலாவது வணிகரை எச்சரித்ததைப் போலவே இவரையும் ஊர் மக்கள் எச்சரிக்கின்றர். வணிகர் அந்தக் கருத்துகளை ஆழமாக உள்வாங்கிக்கொள்கிறார். முதலாவது வணிகரை ஏமாற்றிய குழு வருகிறது. அவர்களது வண்டியில் சேறும் மண்ணும் இருக்கிறது. தாமரை அல்லிச் செடிகள் சூழ்ந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. முதலாவது வணிகருக்குச் சொன்ன ஆலோசனையையே குழுத் தலைவன் சொல்கிறார்.
“எதிரே ஒரு சோலைவனம் இருக்கிறது. ஏன் இவ்வளவு நீரைச் சுமக்கிறீர்கள்? கீழே ஊற்றி விடுங்கள், நீரற்ற வண்டியை இழுக்கக் காளைகளுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்கிறார்.
இதுவோ பாலைவனம், இங்கே வானத்தில் மேகங்களைக் கூட காண முடியவில்லை. மழை பெய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்தக் குழு கானல்நீரைப் பார்த்ததைக் கூட சோலைவனம் என்று நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நமது தண்ணீரைக் கீழே ஊற்ற வேண்டாம், தொடர்ந்து பயணிப்போம் என இரண்டாவது வணிகர் முடிவெடுக்கிறார்.
அவர் நினைத்ததுபோலவே பயணத்தில் எந்தச் சோலைவனமும் இல்லை. மேலும் முன்னே பயணித்த வணிகரின் வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதையும் கொலையுண்டு கிடப்பதையும் அங்கிருந்த எலும்பு துண்டுகள் மூலம் ஊகித்துக்கொள்கிறார்.
தங்களிடம் இருக்கும் உணவையும் நீரையும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் அமைத்த கூடாரத்தைச் சுற்றி ஒரு குழுவை இரவு காவலுக்கு நிற்க வைக்கிறார். திருடர்கள் வந்தபோது அவர்களுடன் சண்டையிட்டுத் தங்களது உயிரையும் வணிகப் பொருட்களையும் காப்பாற்றிக்கொள்கிறார். மீதமிருந்த உணவையும் நீரையும் பருகி பயணத்தை நிறைவுசெய்து வணிகப் பொருட்களை விற்றுப் பாதுகாப்பாக வீடு திரும்புகிறார்.
புத்திசாலித்தனமான அந்த இரண்டாவது வணிகர்தான்தான் என்றும், தவறான முடிவால் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் வணிகர்தான் தேவதத்தாவும் அவரைப் பின்பற்றும் அந்த 500 பேரும் என்று சொல்லி புத்தர் கதையை முடிக்கிறார்.
தந்திரமான பேச்சு, தவறான தோற்றங்களால் ஏமாறாமல் இருக்க ஒருவர் எப்போதும் புத்திசாலித்தனமாகச் சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும்.
(‘Buddhist Tales for Young & Old’ நூலில் இடம்பெற்ற கதையின் மொழிபெயர்ப்பு)