(காலப்பொருத்தம் கருதியும் இதழியல் துறையில் வெளிப்பட்ட மாற்றுக் குரல்களை ஆவணப்படுத்தும் தேவை கருதியும் ஏற்கெனவே சிற்றிதழ்களில் வெளியான படைப்புகளை அவ்வப்போது மறுபிரசுரம் செய்துவருகிறோம். அந்த வகையில் நிறப்பிரிகை (மே 1998 – இலக்கிய இணைப்பு 4) இதழில் வெளியான கவிதைகள் உங்கள் வாசிப்புக்கு…)
ஒரு பழுப்புப் பெண்ணுக்காக – ஜ்வென்டொலின் பென்னெட்
உனது பழுப்பு நிறத்திற்காக
உனது முலைகள் கருத்த வட்டமாக விழும் அழகிற்காக
நான் உன்னைக் காதலிக்கிறேன்.
உடைந்த உன் குரலில் தொனிக்கும் சோகத்திற்காக
உனது சிறிய இமைகள் தங்குமிடத்தில் விழும் நிழல்
தரும் தன்மைக்காக
நான் உன்னைக் காதலிக்கிறேன்.
உன் தளர்ந்த நடையில்
நினைவுகளில் மங்கிக் கரைந்துபோன
அந்தப் பழங்காலத்து அரசிகளை நினைவூட்டும்
ஏதோவொன்று
தொக்கி விழுகிறது.
உன் பேச்சின் அதிர்வுகளில்
தேய்ந்த விலங்குகள் பூட்டிய அடிமையின் தேம்பல்கள்
வடிகிறது.
ஓ, சிறிய பழுப்புப் பெண்ணே
துன்பத்திற்குப் பிறந்தவளே
அரசிகளின் தளிர் அழகு, கம்பீரம் எதையும் இழந்துவிடாமல்
ஒரு காலத்தில் அடிமையாக இருந்தாய் என்பதை மறந்து
உன் தடித்த இதழ்களை விரித்து
விதியின் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்த்துவிடு.
Illustration : Thandiwe Muriu
ஊதாப்பூ – ரீடா டோவ்
என் மகள் கால்களை விரித்துக் குனிந்து
மயிர்களற்றிருக்கும்
தன் யோனியைப் பார்க்கிறாள்
எப்போதும் முகத்தைச் சுளிக்க வைக்கும்
இந்தத் துணுக்கு
அவளுடைய வீறிடல் இல்லாமல்
அந்நியர் எவரும் தொட்டுவிட முடியாத ஒன்று.
அவள் என்னுடையதைப் பார்க்கக் கேட்கிறாள்
சிதறிக் கிடக்கிற பொம்மைகளுக்கு நடுவே
ஒரு நொடி நேரம்
நாங்கள் அருகருகே எதிரெதிரே
இரட்டை நட்சத்திரங்கள் போல நிற்கிறோம்
மழித்துச் செதுக்கிய
அவளுடைய முத்து மணிக்கு முன்னால்
பெருத்த எனது வரிச்சோழி
இருந்தும் அதே பளிங்குப் புழை, வரித்த மடிப்புகள்
மூன்று வயது அவளுக்கு, அவளுடைய அறியாமையைச்
சொல்லும் அது
உணர்வுகளின் உச்சத்தில் நாங்கள்!
சிறு ஊதா மொட்டுக்களாக
அவள் வீறிட்டுப் பின்னால் நகர்ந்து போகிறாள்.
ஒவ்வொரு மாதமும் அது எனக்கு எங்கே நோகிறது
என் கால்களுக்கிடையில் அது என்ன சுருக்கம்விழுந்த கயிறு
என்று கேட்கிறாள்
இது நல்ல இரத்தம் நான் சொல்கிறேன்
ஆனால் அதுவும் சரியில்லை, முழு உண்மையில்லை
என்ன செய்ய
நான் கறுப்புத் தாயாகவும் அவள் பழுப்புக் குழந்தையாகவும்
நாங்கள் ஊதாவுக்குள்ளும்
ஊதா எமக்குள்ளும்
இருப்பது எல்லாம் இதனால்தான்
என்பதை அவளுக்கு எப்படிச் சொல்ல?
l
ஜ்வென்டொலின் பென்னெட் (1902 – 1981)
ஹார்லெம் எழுத்தாளர்களிலேயே மிக அதிகமான இன உணர்வு உடையவராக அறியப்பட்டவர். கவிதைகளுக்காகவே பெயர் பெற்றவர். இவருடைய கவிதைகள் உணர்ச்சிகளின் நுட்பங்களை வெளிக்கொண்டுவந்ததும் கறுப்பு உடலைக் கொண்டாடியதும் அன்று எவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்ட ஒன்று.
ரீடா டோவ் (1952)
அமெரிக்க அரசின் அரசவைக் கவிஞராக (1993 – 95) அறிவிக்கப்பட்ட முதல் ஆப்ரோ அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர். ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். இவரது Thomas and Beulah (1986) என்ற கவிதைத் தொகுதி புலிட்சர் பரிசு (1987) வென்றது. 60களின் கறுப்பு அழகியல் இயக்கத்தின் குறுகிய வரையறைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக, ஒரு சாராம்சவாத கறுப்பு அடையாளத்தை நிராகரிப்பதாக அறிவித்துக்கொள்பவர்.
நன்றி: நிறப்பிரிகை