அரசியல் நோக்கிய கலை

ஸ்டாலின் ராஜாங்கம்

அஞ்சலி: விஜயகாந்த் (1952 – 2023)

விஜயகாந்த்திற்கு அதிக ரசிகர்களும் மன்றங்களும் இருந்த வட மாவட்டக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் நான். எங்கள் கிராமங்களில் சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. குழந்தை வளரும்போது தெரிந்துகொள்ளும் முதல் விவரமே சினிமா சம்பந்தப்பட்டதாகத்தான் இருந்தது. இதன்படி விவரம் தெரிந்த நாள் முதல் நான் ரஜினி ரசிகன். நடுநிலை வகுப்புக்குச் சென்ற பின்னால் விஜயகாந்த் ரசிகனாக மாறினேன். என்னுடைய கிராமத்தில் பெரும்பான்மையும் திமுகவின் தாக்கம் இருந்தது. கட்சியாக திமுக என்றால், சினிமாவாக விஜயகாந்த். எந்தக் காரணத்தினாலோ இரண்டையும் ஒன்றாகப் புரிந்துகொண்டிருந்தனர். எங்கள் பக்கத்துக் கிராமத்தில் அதிமுகவின் செல்வாக்கு அதிகம். அதற்கேற்ப அங்கு ராமராஜன் ரசிகர்கள் அதிகமிருந்தனர். பொதுவாக ஊடகங்களில் இக்காலத்தின் நட்சத்திர போட்டியாளர்கள் பற்றி எழுதும்போது ரஜினி, கமல் என்றே எழுதிவருகின்றனர். ஆனால், உள்ளூர் அனுபவத்தில் ரஜினி, விஜயகாந்த் என்கிற நட்சத்திர எதிர்மறைதான் இருந்தது. ஒருகட்டத்தில் ரஜினியை விஜயகாந்த் முந்தினார் என்று கூட கூறலாம்.

எங்களூரில் எனக்கு முன்பே நிறைய அண்ணன்களும், என் வயதை ஒத்தவர்களும் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தனர். ரஜினி ரசிகனாக இருந்ததால் அவர்களால் பல வகைகளில் வம்பிழுக்கப்படுவேன். ஆனால், தீவிர திமுக பற்றாளனாய் இருந்த நான், நாளடைவில் விஜயகாந்த் ரசிகனாகவும் மாறினேன். ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்த் என்ற பட்டத்திலுள்ள கலைஞர் என்பது கருணாநிதியைக் குறிக்குமென்று கருதி விஜயகாந்த் திமுக சார்பாளர் என்று பேசிக்கொள்வோம். அவருடைய நண்பர்களான ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், சந்திரசேகர், பாண்டியன், அவரோடு அதிக படங்களில் நடித்துவந்ததோடு அவரைத் திருமணம் செய்யப் போகிறவர் என்று ரசிகர்களிடையே பேசிக்கொள்ளப்பட்ட ராதிகா ஆகியோர் திமுகவில் இருந்தார்கள் அல்லது திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதும் விஜயகாந்த்தைத் திமுகவாக நினைப்பதற்கான காரணமாக இருந்தது. ஒரு நடிகரின் படத்தைப் பார்ப்பதற்கும், ரசிகராக இருப்பதற்கும் படம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. படத்திற்கு வெளியே உலவும் அவர் பற்றிய தகவல்களும் காரணிகளாகக் கூடும். அதன்படி விஜயகாந்த் நிறைய பேருக்கு உதவக்கூடியவர் என்ற தகவல் அவரின் ரசிகராக இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக எங்களிடையே புழங்கியது. அதாவது, அவரின் ரசிகராய் இருப்பதற்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் தொடர்பிருந்தது. அவரின் படங்களும் அவ்வாறிருந்தன.

ஊரில் மார்கழி ஒன்றாம் தேதி முதல் தைப்பொங்கல் முடிய காலையிலும் மாலையிலும் ரேடியோ ஒலிக்கும். ஒலிபெருக்கியில் கதை – வசனம் ஒலிபரப்புவார்கள். அதற்கென்றே சில படங்கள் உண்டு. திரும்பத் திரும்ப அவற்றையே போடுவார்கள். ஒலிபெருக்கி சத்தத்தால் 4, 5 மணிக்கே விழிப்பு வந்துவிடும். ஆனால், விடியும் வரை ரேடியோவில் ஒலிக்கும் கதை – வசனங்களைக் கேட்டுக்கொண்டே படுத்துக்கிடப்போம். பள்ளிக்குப் போகும்போதும் – வரும்போதும் அந்தக் கதை வசனத்தைத் திரும்பச் சொல்லுவதில் எங்களுக்குள் போட்டி நடக்கும். அப்படித்தான் ‘கேப்டன் பிரபாகரன்’ படம் வெளியாகி வசனங்கள் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. வசனத்தை மட்டுமில்லாமல் இடையில் ஓடும் பின்னணி இசையையும் வாயாலேயே ஒலிக்கிற அளவுக்கு அப்பட வசனத்தின் தாக்கம் இருந்தது. 1980களின் இறுதியிலிருந்து எங்கள் பகுதிகளில் நல்லது கெட்டதிற்கு நிகழ்த்தப்பட்டுவந்த தெருக்கூத்து குறைந்து ‘வீடியோ ஓட்டுவது’ அதிகரித்தது. பெரியவர்கள் முணுமுணுத்தாலும் சிறுவர்களான எங்களுக்கு வீடியோவே அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். தியேட்டரில் பார்க்க முடியாத படங்களை இங்கு பார்ப்போம். ஓரிரவு முழுவதும் ஓடும் வீடியோவில் 4 படங்கள் போடுவார்கள். அதில் ஒன்றோ, இரண்டோ விஜயகாந்த் படமாக இருந்துவிடும். அவர் படத்தை விழித்திருந்து பார்த்துவிடுவதும், அப்படத்தின் கதையை மறுநாள் போட்டிப் போட்டுக்கொண்டு திரும்பச் சொல்வதும் எங்களிடையே பெரும் சாகசம். அப்போது விஜயகாந்த்தை அடியொற்றி உச்சி வகிடெடுத்துத் தலை சீவுவது பிரபலமாகிவந்தது. உச்சி வகிடோடு ஒருவர் வந்தால் அவர் விஜயகாந்த் ரசிகர் என்று சொல்லிவிடலாம். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் பலரும் விஜயகாந்த் படத்தை விரும்பிப் பார்த்தார்கள்.

விஜயகாந்த்தின் நல்ல குரல் வளம், கோவக்கார இளைஞனாக – அதிகாரிகளின் தவறுகளைச் சாடுபவராக – ஊழலைக் கண்டிப்பவராக நீண்ட வசனம் பேசி நடித்தபோது ரசிக்கப்பட்டது. விஜயகாந்த்தின் மற்றோர் அடையாளம் சண்டைக் காட்சிகள். குறிப்பாக, அவர் காலைப் பின்பக்கமாக உதைத்துச் செய்யும் சண்டைகள். இளைஞர்களுக்கு அவரின் சண்டைக் காட்சிகள் பிடிக்கும் என்றால், பெரியவர்களுக்குச் சண்டைக் காட்சிகளோடு வசனங்களும் பிடிக்கும். இவ்வாறு சண்டைக்கான விஜயகாந்த்தைப் பார்த்துவிட்டு, சண்டை இல்லாத ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தை வீடியோவில் பார்த்தபோது எங்களுக்குப் பிடிக்கவே இல்லை. இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம் 1980களில் தமிழ்நாட்டுக் கிராமப்பகுதிகளில் திரைப்படம் சார்ந்து உருவாகியிருந்த பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும், அதில் விஜயகாந்த் வெகுமக்களிடையே பெற்றிருந்த இடத்தைப் புரிந்துகொள்ளவும்தான்.

இதற்கிடையில் தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் எனக்கு உருவாகியிருந்தது. அதில் விஜயகாந்த் செய்யும் உதவிகள் பற்றி – அவர் படம் பற்றி வரும் செய்திகளைப் படிப்பதும், அதை நண்பர்களிடம் பரப்புவதும் எனக்கு ஒரு சிறப்பு தகுதியைத் தந்துவந்தது. எங்களூரில் பதிவு எண்ணோடு ரசிகர் மன்றம் திறக்கப்பட்டது விஜயகாந்த்திற்குத் தான். அதில் என் வயது ஒத்தவர்களில் இடம்பெற்றிருந்தது நான் மட்டும்தான். விஜயகாந்த்தின் அடையாளமாகியிருந்த ‘உதவி’ என்பதற்கேற்ப நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ரசிகர் மன்றம் திறந்தோம்.

சினிமா:

விஜயகாந்த்திற்கு அரசியல்வாதி, உதவி செய்யக்கூடியவர் என்று பல அடையாளங்கள் உருவாகியிருந்தாலும் சினிமா பிரபலம் இல்லையென்றால் இத்தனையும் இல்லை. அதன்படி அவர் சினிமாவிற்கு என்ன செய்தார், அல்லது சினிமாவில் என்ன செய்தார் என்பதும் முக்கியமாகிறது. நண்பர்களோடு சினிமாத்துறைக்குள் நுழைந்து கஷ்டப்பட்டு முன்னேறியதைப் பற்றிச் சொல்லப்படும் அளவிற்கு, அவர்கள் சினிமாவைப் புரிந்துகொண்டதைப் பற்றி எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சினிமா என்பது சினிமா மட்டுமே. ஊரில் சினிமாக்களை ரசிக மனப்பான்மையில் பார்த்துவிட்டு, தாங்களும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலரையும் போல வந்தவர்களே அவர்கள். அதன்படி அவர்களுக்கு சினிமா என்பது வெகுஜன சினிமாவே. அவர்களுக்கு முன்பிருந்தது எம்ஜிஆர் என்னும் நாயக பிம்பம்தான். சினிமாவில் இடம் கிடைத்தபோது அவர்கள் ஏற்றதும், எதிர்பார்த்ததும் எம்ஜிஆர்த்தனமான நாயக அம்ச படங்களையே. விஜயகாந்திற்கான கதைகளைத் தேர்வு செய்த, கதைகளை உருவாக்கிய அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தர்தான், விஜயகாந்த்தின் அடையாளமாக நிலைபெற்றிருக்கும் உதவும் கரங்கள் என்ற பிம்பத்தையும் உருவாக்கினார். அது திட்டமிட்டு உருவாக்கியதுதான் என்றாலும் அதனை உண்மையாகவே நம்பிச் செய்திருக்கின்றனர். எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைத்தார்களோ இல்லையோ அவர்களின் சிந்தனையில் சினிமாவும் அரசியலும் ஒன்றுக்கொன்று மாற்றீடாகவே பதிந்திருந்தது என்றே சொல்ல வேண்டும். சினிமாவில் நாயகனாக சாகசம் புரிவதை – உதவி புரிவதை சினிமாவிற்கு வெளியிலும் பின்பற்றினார் விஜயகாந்த். நல்ல மனிதர் என்று இன்றைக்கு அவருக்குத் தரப்படும் அடையாளம் சினிமாவால் அல்லாமல் இப்பண்புகளால்தான் உருவாகியிருக்கிறது.

சம்பாதிப்பதற்கான இடம், பிரபலம் என்பவற்றைத் தாண்டி சினிமாவைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சினிமாவில் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மெனக்கிட்டதைவிட தயாரிப்பாளர், சினிமாவில் பணிபுரிவோர் நலன் பற்றி அதிகம் மெனக்கிட்டிருக்கிறார். பல இயக்குநர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் என்றாலும் அவர்களில் காலத்தை விஞ்சிய படத்தைத் தந்தவர்களென்று எவருமிலர். அதேவேளையில் ஒரே வகையான உணவு, மதிப்பு என்கிற வகையில் சினிமாவின் பல்வேறு மட்டங்களில் விளிம்பில் இருந்தோருக்கான நிவாரணமாக அவர் இருந்தார். அதே போல அவருடைய சினிமா நண்பர்களிலும் (ராதாரவி, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன், தியாகு, சந்திரசேகர்) சினிமாவைக் கலையாகக் கருதி மெனக்கிட்டவர்கள் அதிகமில்லை. ஊரிலிருந்து கிளம்பிவந்து அதே பண்போடு இருந்தவர்களே அவரின் நண்பர்களாய் இருந்தனர். பெரிய இயக்குநர்கள், பெரிய தயாரிப்பாளர்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் வாய்ப்பு, உழைப்பு என்று போராடியவர்கள் அவர்கள். எலைட் தன்மை இல்லாத சிறுகுழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் அரசியல் புரிதலும் திமுக, அதிமுக என்ற எல்லையிலேயே இருந்தன. பின்னாளில் ஓர் அரசியல் கட்சியையே தொடங்கப் போகிறோம் என்பதாலோ என்னவோ அவர் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. ஊழல் எதிர்ப்பு, மக்களின் நல்வாழ்வு என்று வெகுஜன மயமான கனவையே அவரும் அரசியலாக முன்வைத்தார் என்பதைப் பார்த்தோம்.

சினிமாவைப் பொறுத்தவரை கிடைத்த வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தாலும் அவருடைய தோற்றம், நிறம் போன்றவை 1980களின் பண்பாக மாறியிருந்த கோபக்கார இளைஞனுக்கான வாய்ப்பை வழங்கின. சட்டத்தை – அதிகாரிகளைக் கேள்வி கேட்பவராக, வேலை இழந்தவராக – உரிமை கோரும் தொழிலாளியாக நடித்தார். இந்த வேடங்களை ஏற்ற அவர்தான் பின்னாட்களில் சட்டத்தைப் பாதுகாக்கும் – தீவிரவாதிகளைப் பிடித்துத் தேசப்பற்றைக் காட்டும் நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடித்தார் என்பது மிகப்பெரிய முரண். இது அவர் ஏற்றுவந்த வேடங்களுக்கும், அதன் அரசியலுக்குமான தொடர்பை எவ்வாறு புரிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது. சினிமாவை அவர் தீர்மானிக்கவில்லை, சினிமா அவரைத் தீர்மானித்துக்கொண்டது என்பதே இதன் பொருள்.

விஜயகாந்த் தோற்றத்திலிருந்த ஒருவகை ‘ஆண் தன்மை’யே இத்தகைய வேடங்களை அவருக்கு அளித்தன. இதற்கு நேர்மாறாக ராமராஜனைக் கூறலாம். விஜயகாந்த் நடித்ததில் தொடக்கக் கால படங்களைத் தவிர மற்ற படங்களில் பெண்களுக்கு வேலையே இருந்ததில்லை. அவருடையது முழுமையாக நாயக மைய படங்கள். ‘குரலெடுக்கும்’ வசனங்கள், சண்டையிட்டு மீசை முறுக்கும் போலீஸ் வேடங்கள் என்று நடிப்பது ஒருபுறமிருந்தாலும், அந்த வேடங்கள் இல்லாத படங்களில் பெண்களால் பாதிக்கப்பட்ட – பெண்களைக் கேலி செய்யும் ஆண் பாவனை அவரிடம் அநேகம். அதற்கு அவர் படத்தில் இடம்பெற்ற பாடல்களையே கூறலாம். ‘பாவம் ஒரு பக்கம்…’, ‘ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…’, ‘வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்…’, ‘எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு பொம்பள உண்டு…’, ‘சாமிகளே சாமிகளே…’, ‘ஏத்தமய்யா ஏத்தம்…’, ‘அடி மானாமதுரையிலே…’, ‘மஸ்து மஸ்து…’ உள்ளிட்ட பாடல்கள் பெண்களைச் சூழும் ஆண் குரல்களாக இருப்பதைக் கூறலாம்.

விஜயகாந்த் தனக்கான இயல்பிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் உருவானவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஒழிய சினிமாவைக் கலைரீதியாக மேம்படுத்துவது அவர் நோக்கமாயிருந்ததில்லை. அவர் மதுரையிலிருந்து நண்பரோடு புறப்பட்டது, திரைப்படத்தில் போராடி ஓரிடத்தை அடைந்தது போன்றவற்றை ஒரு திறமான திரைப்படத்திற்கான திரைக்கதை என்பதைத் தாண்டி சொல்வதற்கு அதிகமில்லை. வேண்டுமானால் சில இனிய பாடல்கள் இடம்பெற்ற படங்கள் வரிசையில் அவர் படங்களும் நினைவுகூரப்படலாம்.

அரசியல்:

அரசியல் கட்சி தொடங்கும் வாய்ப்பிலிருந்து ரஜினி விலகிவிட்டிருந்த நிலையில் 2000த்தில் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக அரசியல் கட்சி கவனம் பெற்றது. தமிழ் நடிகர்களின் அரசியல் கனவிற்கு முன்னூக்கி எம்ஜிஆர். விஜயகாந்த் நடிகராக இருந்தது மட்டுமல்லாமல், எம்ஜிஆரின் தொன்மமாக மாறிவிட்டிருந்த வள்ளல் பிம்பத்தையும் பெற்றிருந்தார் என்பது அவரின் பலமானது (கருப்பு எம்ஜிஆர்). கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயிரோடு இருந்த நிலையில் இரண்டு திராவிடக் கட்சியும் அல்லாத நிலைப்பாட்டையும் அவர் எடுத்திருந்தார். இரண்டு ஜனமயக்கு அரசியலுக்கு மாற்றாக மற்றொரு ஜனமயக்கு அரசியலே இங்கு வர முடிந்தது. விஜயகாந்த்தை ஏன் இவ்வளவு விரிவாகப் பார்க்கிறோமென்றால் மக்களைப் பற்றும் அரசியல் எவ்வாறெல்லாம் திட்டமிடப்படுகிறது, மக்கள் எவ்வாறு அதனுள் வருகிறார்கள் என்பவற்றைப் புரிந்துகொள்ளத்தான். விஜயகாந்த் பற்றி அவருடைய நண்பர் இப்ராகிம் ராவுத்தர் காலத்திலிருந்து திட்டமிடப்பட்டதன் விளைச்சல்தான் அவருடைய அரசியல். மக்கள் மய அரசியலில் நாம் விரும்பாத நபர்களால் சில மாற்றங்களும் விரும்பும் அரசியலால் சில குழப்பங்களும் நேர்ந்துவிடுவதுண்டு.

அந்த வகையில் விஜயகாந்த் கட்சி வேறு விதத்தில் என் கவனத்தை ஈர்த்தது. எங்கள் பகுதியில் சாதி வித்தியாசம் கருதாது அவருக்கு ரசிகர்கள் இருந்தார்கள். விஜயகாந்த்தும் சாதி உள்ளிட்ட குறிப்பான அடையாளத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டதில்லை. அப்படிப்பட்ட விஜயகாந்த்திற்கும் பாமகவிற்கும் அரசியலில் மோதல் உண்டானது. அவர் தனித்துச் சந்தித்த முதல் தேர்தலிலேயே வன்னியர்கள் அதிகமிருந்த விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திரைப்படங்களிலும் நேரிலும் காட்டிவந்த துணிச்சலைத் தேர்தல் களத்திலும் வரித்தார். அவர் கொள்கைகள் கருத்தியல் சார்ந்ததல்ல என்பது உண்மை. ஆனால், அவர் அரசியல் என்று நம்பிய விசயத்திற்கு உண்மையாக இருக்க முயன்றார். கொள்கைப் பேசிய கட்சிகளை விட அவர் காட்டிய துணிச்சல் முக்கியமாக இருந்தது. இதெல்லாம் சேர்ந்ததுதான் நம்முடைய வரலாறு.

இரண்டு திராவிட மற்றும் தேசியக் கட்சிகளால் பால் ஊற்றி வளர்க்கப்பட்டுவந்த பாமகவின் பேர வலிமையை உடைத்தார் விஜயகாந்த். ஒரு சாதிக்கென்று ஒரு கட்சி இருக்க முடியாது என்பதை விஜயகாந்த் அனுபவம்தான் உணர்த்தியது. அவரின் ‘திரைப்படக் கவர்ச்சி’ வன்னியர் ஓட்டுகளையும் தலித் ஓட்டுகளையும் திரட்டிக்கொண்டது. ஆனால், இச்சூழலைப் பாமக வேறு வகையில் எதிர்கொள்ள முயன்றது. சிறுவயதில் விஜயகாந்த் பற்றிப் படித்த செய்திகளில் முக்கியமானது அவர் தமிழ்ப் பற்றாளர் என்பது. அதாவது அப்போது நடந்துவந்த ஈழத்தமிழர் பிரச்சினையையொட்டி அவரின் தலையீடுகள் எங்களுக்கு அப்பிரச்சினை மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் நடத்தினார். ஈழத்தமிழர் பிரச்சினை தீரும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்தார். அகதிகளுக்கு உதவிகள் வழங்கினார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நினைவாக ‘கேப்டன் பிரபாகரன்’ என்று படம் எடுத்திருந்த அவர், தன் முதல் மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டினார். ‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற வரிகளைத் தன் வசனங்களில் பொருத்திக்கொண்டார். ஆனால், அவரின் அரசியல் வருகையின்போது தமிழுக்கு மற்றமையாக உருவகிக்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது.

விஜயகாந்த்தின் அரசியல் வருகையையொட்டித் தமிழ்நாட்டு அரசியலில் நடந்த சில விஷயங்கள் முக்கியமானவை. முதல் விசயம் தமிழ்நாட்டுத் தலித் களத்தோடு தொடர்புடையது. ராமதாஸ், திருமாவளவன் மற்றும் சிலர் இணைந்து ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அவற்றை உருவாக்கியதில் பெரும்பான்மையும் தமிழ்நாட்டிலிருந்த ஈழ ஆதரவாளர்கள் முன்னின்றனர். ஏறக்குறைய அதே தருணத்தில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் முக்கியமானவராக அறியப்பட்ட தங்கர் பச்சான் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்கிற படத்தில் நடித்தபோது அதன் நாயகி நவ்யா நாயரிடம் மதிப்புக் குறைவாக நடந்ததாகப் புகார் எழுந்தது. அந்த விசயத்தில் நவ்யாவுக்கு ஆதரவாக குஷ்பூ முன்னின்றார். அதையொட்டி நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் ஏற்பாட்டில் தங்கர் பச்சான் நவ்யா நாயரிடம் மன்னிப்புக் கோரினார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தோற்றுவிப்பாளர்களோடு தங்கர் பச்சானுக்குத் தொடர்பு இருந்தது. தமிழ் உணர்வாளர் மீது தமிழர் அல்லாதோர் செய்த சீண்டலாக அது புரிந்துகொள்ளப்பட்டது.

இதையடுத்து குஷ்பூ தெரிவித்த ஒரு கருத்து தமிழ்ப் பெண்களின் கற்பை அவமதித்ததாகத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திலிருந்த பாமகவும் விசிகவும் போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தத் தருணத்தில்தான் விஜயகாந்தின் அரசியல் வருகையும் நிகழ்ந்திருந்தது. விஜயகாந்தின் செல்வாக்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்ததையொட்டி பாமகவுக்கு அது கடும் நெருக்கடியாக மாறியது. விஜயகாந்த்தை எதிர்ப்பதற்குத் தமிழ் ஓர் அடையாளமாக முன்வைக்கப்பட்டது. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழ் சாதிகளின் கூட்டமைப்புப் போல கருதப்பட்டு, விஜயகாந்தைத் தெலுங்கராக நிறுத்தினர். ஆனால், சினிமா கவர்ச்சி எதிர்ப்பு என்ற பேரில் அது பேசப்பட்டது.

பின்னாட்களில் நடந்ததோ வேறு. சினிமா கவர்ச்சிக்கு மாற்றாகக் கூறப்பட்ட கொள்கைக் கட்சியான பாமக, தர்மபுரி வன்முறை மூலம் சாதி அரசியலுக்குத் திரும்பியது. தேர்தல் கட்சி என்ற முறையில் ஒருமுறை விசிகவும் மற்றொருமுறை பாமகவும் தேமுதிகவோடு கூட்டணி சேர்ந்ததுதான் வரலாறு. அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து திமுகவைவிட அதிக இடங்கள் பெற்று எதிர்க்கட்சியானது (2011) தேமுதிக. பிறகு விஜயகாந்த்தின் உடல்நிலை, அரசியல் முடிவுகள் ஆகியவற்றால் அக்கட்சி சரிவை எட்டிவிட்டது. சினிமாவிலும் அரசியலிலும் அவர் காட்டிய அசாத்தியமான துணிச்சல் அவருக்கு இரண்டாமிடத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், தொடர்ந்து பயணிக்க அது மட்டுமே போதாது என்பதையே அவரின் அனுபவங்கள் காட்டியிருக்கின்றன.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!