இவ்வாறு கற்பனை செய்துகொள்ளுங்கள், இருவேறு உலகத்தில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள். அப்போது இரு உலகங்களிலும் பேரழிவு ஏற்படுகிறது.
(அ) ஓருலகில் அனைவரும் தங்களின் உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
(ஆ) மற்றோர் உலகில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.
இதில் நீங்கள் எந்த உலகில் வசிக்கிறீர்கள் எனக் கேட்டால் உங்களின் பதில் என்னவாக இருக்கும். பல்கலைக்கழக மாணவர்களிடம் இக்கேள்வி கேட்கப்பட்டபோது பெரும்பாலோர் முதல் உலகத்தில் வசிப்பதாகப் பதில் அளித்தனர். அவர்களின் எதிர்மறையான பதிலுக்கு என்ன காரணம்? மனிதர்களை நாம் ஏன் எதிர்மறையாகச் சிந்தித்து வைத்துள்ளோம்? இவர்களின் கூற்று சரியானதா? நீங்கள் மனிதர்களை எவ்வாறு புரிந்துவைத்துள்ளீர்கள்? ஒருவேளை உங்களுக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை குறைவு என்றால், அதற்கு உயிரியல் – வரலாறு – உளவியல் ரீதியாகப் பதிலளிக்க முயன்றிருக்கும் புத்தகம்தான் ‘மனித குலம்: ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு’.
நமது மனம் குகை மனிதன் காலத்தில் விலங்குகளிடமிருந்தோ, இயற்கைப் பேரிடர்களிலிருந்தோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ளளும் வகையில் தகவமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நமது நவீன மனம் எப்படிப் பண்பட்டிருக்கிறது என்றால், முதலாளித்துவ அமைப்பும் காலனித்துவக் கல்வி முறையும் மனிதர்கள்தான் மனிதகுலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவர்கள், மனிதனிடம் இருந்துதான் மனிதன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எதிர்மறையான எண்ணங்களை நிலைபெறச் செய்துவிட்டன என்பதை ஒவ்வொரு கட்டுரையாக விவரிக்கிறார் ருட்கர் பிரக்மென். அதை நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ‘நவீனம்’தான் மனிதனைச் சுயநலம் மிக்கவனாய் மாற்றியிருக்கிறது என்ற ரூசோவின் கோட்பாட்டினைச் சுட்டிக்காட்டும் ருட்கர், நவீனம்தான் மனித குலத்திற்கு எதிரியா என்ற கேள்வியைத் தொடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். நாடோடிச் சமூகமாக இருந்தவரையில் எந்தப் பாகுபாடும் இல்லாமல் வாழ்ந்த மனிதன், குடிமைச் சமூகத்தில் மட்டும் ஏன் பாகுபாடு உள்ளவனானான்? நிலங்களைச் சொந்தம் கொண்டாடும் குடிமைச் சமூகமே முதலில் தான், தனக்கு என்ற பரிணாமத்தின் அடுத்த கட்டமாகவும், மனிதர்களின் எதிர்மறையான எண்ணங்களின் தொடக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார். அப்படியெனில் நாடோடிச் சமூகமாக இருந்தவர்களிடம் எந்தப் பாகுபாடும் இல்லையா என்றால் அது வேறொரு கேள்விக்கு இட்டுச்செல்லும். எப்படித் தற்கால மனிதர்களாகிய ஹோமோ சேப்பியன்ஸ் [நாம்] பூமியை ஆக்கிரமிக்கும் உயிரினமாகப் பரிணமித்தார்கள் என்பதுதான் அது. நம்முடைய ‘பங்காளி’களான நியாண்டர்தால் மனிதர்களால் ஏன் நம்மைப்போலப் பரிணமிக்க முடியவில்லை? அதற்கான பதில், நியாண்டர்தால்களிடம் இல்லாத பண்பு நம்மிடம் இருந்தது. அது எந்த உயிரினமிடமும் இல்லாத சமூகக் கற்றல்தான் என்கிறார் ருட்கர். நியாண்டர்தால்களோடு ஒப்பிடும்போது, குழுவாக வாழ்தல் – அறிவும், மற்றவர்களை நகல் எடுக்கும் தன்மை – அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் பண்பு ஆகியவை இருந்ததால்தான் இவ்வளவு வளர்ச்சியை அடைந்துள்ளோம். சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய தோழமை உணர்வுதான் காரணம் என்கிறார். இப்படிப்பட்ட கருத்துகள்தாம் வாசகரை மேலும் படிக்கத் தூண்டும் இடங்களாக இப்புத்தகத்தில் பார்க்கிறேன்.
டிமித்ரி பில்யயெவ் என்ற உயிரியல் ஆய்வாளர் 1958இல் ரஷ்யாவில் காட்டு நரிகளிடம் மேற்கொண்ட ஆய்வு இன்னும் சுவாரசியமானது. காட்டில் ஆக்ரோஷமாக வளரும் நரிகளைக் கூண்டில் அடைத்து வைத்து, அவை வாழ்வதற்கான சூழலை எளிமைப்படுத்தி, அவற்றுடன் தினமும் தொடர்பில் இருந்தால், 20 வருடங்களுக்குப் பிறகு பிறக்கிற குட்டிகளிடம் உருவ அமைப்பிலும் குணாதிசியத்திலும் மாற்றம் ஏற்படுவதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதன்படி குழுவாக வாழ்ந்ததால் ஏற்பட்ட சமூகப் பலம், இறப்பு விகிதத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல் நியாண்டர்தால்களிடமிருந்து வேறுபட்ட உருவமைப்பையும் தற்கால மனிதர்கள் இப்படித்தான் பெற்றனர் என்பது அவரின் கருத்தாக இருக்கிறது. உயிரியல் ரீதியாக நாம் மதிப்புமிக்க உயிரினமாகப் பரிணமித்திருக்கிறோம் என்பதைத் தொடர் ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைக்கும் ருட்கர், நம் அனைவரிடமும் குகை மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் என்னவாக இருக்கிறது என்பதையும், அவர்களை எப்படி நமது கல்விமுறையும் ஊடகங்களும் கற்பித்திருக்கின்றன என்றும் சாடுகிறார்.
இரண்டாம் உலகப்போரை முன்வைத்து இதில் நிறைய பக்கங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய நாடான ஜெர்மனி எப்படிக் கூட்டமைப்பு நாடுகளை மூர்க்கமாக எதிர்த்தது? நாஜி வீரர்கள் அவ்வளவு இனவெறியுடன் இருந்தார்களா? நாஜி வீரர்களை உடனே போர்க்களத்திற்கு அனுப்ப மாட்டார்களாம். அவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்குள் சகோதர பிணைப்பை உருவாக்கிய பின்னரே போர்க்களத்திற்கு அனுப்புவார்களாம். தங்கள் சகோதரரைப் போல பழகிய சகமனிதரைக் காப்பாற்றும் வேட்கையும் வெறியும்தான் நாஜிக்களை அவ்வளவு மூர்க்கமாகப் போரிட வைத்தது என்பதைப் படிக்கும்போது உண்மையிலேயே வியப்புதான். அமெரிக்கர்கள் தங்களின் தேசப்பற்றைக் காப்பாற்றவோ, நாஜிக்கள் இனவெறியைக் காப்பாற்றவோ போரிடவில்லை. மாறாக, அவர்கள் போரிட்டது தோழமையின் விளைவால்தான் எனும்போது போர் மீதான ஒட்டுமொத்தக் கண்ணோட்டமும் மாறுகிறது. ஒரு கட்டுரையில் அதிகாரம் எப்படி மனிதனைச் சீரழிக்கிறது என்பதைக் குறிப்பிட்டிருப்பார். அதில், ஒரு போட்டியில் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவனுக்குக் கிடைக்கும் சலுகைகளால் எப்படி அவனின் குணாதிசியங்கள் மாறுபடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கியிருப்பார். அதிகாரமும் மனிதர்களின் எதிர்மறையான எண்ணங்களுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறது என்பது மனிதப் பரிணாமத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. உளவியல் ரீதியான சான்றுகளில் ருட்கர் குறிப்பிட்ட இரண்டு முக்கியமானவை. ஒன்று, சிறையில் அடைபடும் கைதிகளை உலகம் கையாளும் விதம். மற்றொன்று, குழந்தைகளின் காலனித்துவக் கல்விமுறை. குற்றம் செய்தவர் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது எவ்வளவு சரியோ, அதே அளவு அவர்கள் விடுதலை அடைந்த பின்பான வாழ்க்கை நேர்மறையானதாக இருக்க வேண்டும் என்பதும். அதற்கான சிறந்த உதாரணம் ஹல்டேன், பஸ்டாய் சிறைச்சாலைகள். அவை கைதிகளைக் கையாளும் விதத்தை ருட்கர் விவரிக்கும்போது இப்படியோர் இடமிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் எண்ணினேன். ஆனால், அப்படிப்பட்ட சிறைச்சாலையும் கல்விக்கூடமும் இருக்கின்றன என்பதை வலைதளங்களில் தெரிந்துகொண்டேன். அச்சிறைச்சாலைகளில் காவலர்கள் கைதிகளுடன் பழக நேரங்களை ஒதுக்க வேண்டும், அன்றாடப் பணிகளை அவர்கள் இணைந்துதான் செய்ய வேண்டும், அவர்கள் ஒருவருக்கொருவர் சக மனிதனாக உணரச் செய்வதே அவ்விரு சிறைச்சாலைகளின் பணி. இவைதான் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான சிறந்த வழி என்கிறது நார்வே. ஏனெனில், இச்சிறைச்சாலைகளிலிருந்து வெளியே சென்று குற்றமிழைப்பவர்களின் எண்ணிக்கை, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளதாம். எனவேதான் குற்ற சதவிகிதம் இந்நாட்டில் குறைவாக உள்ளதாகக் கூறுகிறார் ருட்கர்.
நெதர்லாந்தில் இருக்கும் அகொரா என்ற கல்வி நிலையத்தில் குழந்தைகளைச் சுய விருப்பம் உடையவர்களாகவும், தம் மீதும் தம் எண்ணங்களின் மீதும் நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும் கல்விமுறை இருக்கிறது. உதாரணத்திற்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை, விருப்பப்பட்டால் தமிழைக் கற்றுக்கொள்ளலாம். அதற்கு அக்கல்வி நிறுவனம் துணைபுரியும். இது அனைத்துச் செயல்பாட்டிற்கும் பொருந்தும். பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருக்கும் காலனித்துவ கல்விமுறை இங்கு இல்லை. குழந்தைகளின் விளையாட்டு நேரத்தைக் கல்விமுறை என்று அபகரித்துக்கொண்டதோ அன்றிலிருந்துதான் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு குழந்தை நான்கு சுவர்களுக்குள் செலவிடும் நேரம் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. தற்சாற்பு உள்ள மனிதராக ஒரு குழந்தையை மாற்ற நமது கல்விமுறை எந்த அளவிலும் உதவவில்லை. பெரும்பாலான குழந்தைகளுக்குக் கல்வி ஒரு சுமையாகத்தான் இருக்கிறது. கல்வி, வேலை, திருமணம், குழந்தை, அக்குழந்தைக்கான கல்வி என்று இயந்திர நிலைக்குத் தள்ளப்படும் ஒருவர் மற்றவர்களை எதிர்மறையானவர்களாக நம்பினால்தான் இங்கு உயிர் பிழைக்க முடியும் என்ற சூழலை இந்தக் காலனித்துவக் கல்வி முறை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிருந்துதான் மனிதர்களை நாம் எதிர்மறையாகச் சிந்திப்பதற்குத் தள்ளப்படுகிறோம். அவர்களை நேர்மறையானவர்களாக மாற்ற நமக்கு இருக்கும் இருபெரும் வழி சிறைச்சாலையிலும் கல்விக்கூடங்களிலும் கவனம் செலுத்துவதுதான்.
முதல் பாதியில் மனிதர்களைப் பற்றி புத்தகங்களும் அப்போதைய பத்திரிகைகளும் கூறிய விடயங்களுக்கு நேர் எதிராக மனிதர்கள், இக்கட்டான சூழ்நிலைகளில் மிகவும் நம்பிக்கையுடனும் தோழமையாகவும்தான் செயல்படுகிறார்கள் என்பதை நிறைய உண்மைச் சம்பவங்களை முன்வைத்துக் கூறுகிறார். புத்தகத்தின் இறுதி கட்டத்தில் சூழ்நிலையின் அடிப்படையில் மனிதன் முடிவெடுத்ததெல்லாம் நாடோடி இனக்குழுவுடன் முடிந்துவிட்டது. குடிமைச் சமூகத்தில் தனிமனிதரின் புறம்/அகம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்குச் சூழ்நிலை எவ்வகையிலும் இல்லை என்பது, இன்றைய ‘முதலாளித்துவ’ அரசு மக்களுக்குத் தாங்கள் நல்லவர்கள் என்றும், மக்கள்தான் மக்களுக்கு எதிரானவர்கள் என்றும் தனது அதிகார பலத்தின் மூலம் நம்ப வைத்திருப்பதிலிருந்து தெரிகிறது.
இவ்வளவு பெரிய விளக்கங்களைப் படித்து முடித்த பின்பும் சில கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை. சமத்துவம் என்ற சொல்லை நிறைய இடங்களில் பயன்படுத்தியிருப்பது பிடித்திருந்தாலும், இந்தியச் சமூகத்தில் அச்சொல் மிகவும் அரசியல் மயமாக்கப்பட்ட ஒன்று. ருட்கர் சொல்லும் ஐரோப்பிய நிலங்களிலும் வேற்றுமைகள் இருந்தாலும், அது இந்திய சாதிய வேற்றுமைகளுக்கு அருகில் கூட நிற்க முடியாது. நான் சொல்வது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவதாக இருக்கலாம். ஆனால், இந்திய நிலப்பரப்பு மனித மனங்களைப் பிளவுபடுத்தியுள்ளது. காதலித்ததற்காக, வண்டி ஓட்டியதற்காக, விளையாட்டில் வென்றதற்காக தாக்க / கொல்லப்படுகிறவர்களிடம் இப்புத்தகத்தை எப்படிப் பரிந்துரைப்பது. எதுவெல்லாம் மற்ற நிலப்பரப்பில் இயல்பான ஒன்றோ அது இந்தியாவில் அரசியல்பட்டது. மனிதரைச் சகமனிதராகப் பார்ப்பதும் இந்நிலப்பரப்பில் அரசியல்தன்மையுடன்தான் இருக்கிறது. இந்தியச் சமூகத்தில் ஒரு தலித்திடம் ஒட்டுமொத்தமாக “மனிதர்களை நம்புங்கள், தோழமையுடன் அணுகுங்கள்” என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை என்று பாவம் ருட்கருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருகட்டத்தில் மனித நல்மனங்களைக் காண வேண்டும் என்றால் அடிக்கடி பேரிடர் நடந்தால்தான் முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ருட்கரின் கூற்றுப்படி மனிதர்களை நேர்மறையானவர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு அரசுக்குதான் இருக்கிறது. அப்படியென்றால் பிரிவினையில் பிழைப்பு நடத்தும் இந்திய (இந்து) முதலாளித்துவ அரசு அதற்கு எவ்விதத்தில் துணைபுரியும். இப்புத்தகத்திற்கு நேர் எதிரான வர்ணாசிரமப் படிநிலைகளைக் கொள்கையாய்க் கொண்டிருக்கும் அரசு, எப்படிச் சக மனிதரை நேசிப்பதற்கான வழிகளை மேற்கொள்ளும். பிற்போக்குத்தனங்களும் மூடநம்பிக்கைகளும் நிரம்பிய இந்நாட்டில் இப்புத்தகம் வகிக்கும் இடம்தான் என்ன என்பது நான் வாசிக்கும்போது ஊடாடிய கேள்விகள்.
மனிதர்களை நேர்மறையானவர்களாக மாற்றுவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்புத்தகம் என்றாலும், ஒட்டுமொத்த மனிதகுலம் ருட்கருக்கு வெறும் ஐரோப்பிய – அமெரிக்க – தென்னமெரிக்க நாடுகளாக மட்டுமே தெரிந்ததுதான் இப்புத்தகத்தை என்னால் மற்றவருக்குப் பரிந்துரைக்க முடியாமல் போவதற்கான காரணம். சகமனிதரை எப்படி அணுக வேண்டும் என்றவகையில் ருட்கர் தன்னளவில் நேர்மறையாக முயன்றிருக்கிறார். அந்தவகையில் சகமனிதரை நேசிக்கத் தயங்கும் எவரொருவரும் இப்புத்தகத்தை வாசிக்கத் தகுதியுடையவர்கள்தாம்.