மெய் மறத்தல்: அழகியல் மெய்யாதல்

கார்த்திக் ராமச்சந்திரன்

ருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ‘The Body’ குறித்தான ஆய்வுகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலிருந்து ‘உடல்’ என்ற பதம் கலைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘உடல்’ என்ற சொல் சடத்தன்மையை மட்டுமே குறிப்பதாய் உள்ளது. இதைத் தத்துவார்த்த ஆய்வாக வளர்த்தெடுப்பதற்கான சாத்தியத்தை ‘உடல்’ என்ற கலைச்சொல் போதாமையாக இருக்கிறது. மேலும், தமிழ் மொழிவழி நின்று ஆய்வு செய்வதற்குப் போதிய தரவுகளை இந்தக் கலைச்சொல் கொடுப்பதில்லை. ஒரு கலைச்சொல் அம்மொழியின் சிந்தனைத் தளத்திலிருந்து உருவாக வேண்டுமேயொழிய மொழிபெயர்ப்பாக அல்ல.

அதனால் ‘Body’ குறித்த ஆய்வுகளைத் தமிழ் மொழிவழி நின்று சிந்திப்பதற்கு ‘உடல்’ என்ற கலைச்சொல்லிற்கு மாற்றாக ‘மெய்’ என்னும் கலைச்சொல்லைப் பயன்படுத்த இந்த ஆய்வு முன்மொழிகிறது. ‘மெய்’ என்ற சொல்லானது உடல், உண்மை, பதினெண் ஒற்றெழுத்து என்ற அர்த்தங்களைத் தருகிறது. ‘மெய்’ என்னும் சொல் திராவிட மொழிகளில் இன்னும் புழங்கப்படும் சொல்லாக உள்ளது. மெய் என்ற சொல்லின் திரிபாக ‘மை’ பயன்படுத்தப்படுகிறது (மயிலை. சீனி.வேங்கடசாமி 1960:36). மெய் என்ற சொல்லானது வார்த்தைக்கு முன்னொட்டாக வரும்போது உடம்பு, உண்மை ஆகிய அர்த்தங்களையும் (மெய்பாடு, மெய்க்காப்பாளர், மெய்ப்பொருள்), வார்த்தைக்குப் பின்னொட்டாக ‘மை’ விகுதியாகும்போது பண்புகளைக் குறிப்பதாகவும் வருகிறது (கருமை, செம்மை).

இந்தியத் தத்துவ விசாரணைகளும் தமிழ் மெய்ப்பொருளியல் தளமும்:

தமிழில் ‘மெய்’ என்ற சொல் உண்மையை, உடலைக் குறிப்பது போல், வடமொழியில் தத்துவம் என்ற வார்த்தைக்கு நிகரான ‘தரிசனம்’ என்ற சொல்லின் மூலச்சொல்லான ‘த்ருஷ்’ புலனுணர்வைக் குறிக்கிறது (தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, 2007:60). ஆக, தொன்மையான இவ்விரு இந்திய மொழிகளில் உண்மைப் பற்றிய சிந்தனைக்கு நெருக்கமான அடித்தளமாக உடல் பற்றிய யோசனையும் உள்ளது.

நியாயா – வைஷேசிக வகைப்படுத்தலானது உடலை உள்ளார்ந்த தன்மை கொண்டதாகப் பார்க்கிறது. இதிலிருந்து புலன் உறுப்புகள் விலக்கப்பட்டுள்ளன. உடலே ‘புலன் உறுப்புகள் மையம் கொள்ளும்’ உறுப்பாகப் பார்க்கப்படுகிறது. உடல் என்பது சுயத்தால் உருவாக்கப்படும் இயங்குவதற்கான (அந்த உடலுக்குள்ளாக) நிலையிடமாகிறது. மேலும், உறுப்புகளோடு தொடர்புடைய வலி, மகிழ்ச்சி போன்றவைகூட உடலில்தான் அனுபவிக்கப்படுகின்றனவே ஒழிய புலன்களில் அல்ல. (சுந்தர் சருக்கை, 2020:202)

மெய் தொடர்பாக விவாதித்த நியாய – வைஷேசிகம் மெய் வேறு உறுப்புகள் வேறு என்று விவாதித்துள்ளது, பிரெஞ்சு தத்துவ அறிஞர்களான டெல்யூஸ் – கத்தாரி இருபதாம் நூற்றாண்டில் விவாதிக்கும் ‘Body without Organs’ என்பதற்கு நெருக்கமாக உள்ளது.

சாங்கியம் மற்றும் அத்வைத வேதாந்தம் உடலை ஸ்தூலமான உடல் என்றும், சூட்சுமமான உடல் என்றும் விவரிக்கின்றன…

ஆயுர்வேதத்தில் புலன் உறுப்புகள்வழமையான காது, மூக்கு, கண், நாக்கு, தோல் போன்ற புலன் உறுப்புகள் – ‘புறவயமான இணைப்பாகவேபார்க்கப்படுகின்றன. மேலும், இவைஉறுப்புகளின் இருப்பிடமாக இருக்கின்றனவே தவிர இவையே சூட்சுமமான உறுப்புகளாவதில்லை. (சுந்தர் சருக்கை, 2020:205)

புத்தரைப் பொறுத்தமட்டில் இந்த உடல்தான் உலகம். இந்த உடலுக்கு உள்ளாகத்தான் இந்த உலகம் எழுகிறது, அடங்குகிறது. (சுந்தர் சருக்கை, 2020:210)

தந்திரா உடலை வாழும் கோவிலாக பார்க்கிறது. நூற்றாண்டுகளாக, மேற்குலக சிந்தனை சதையும் ஆன்மாவும் ஒன்றிற்கொன்று வேறுபட்டதாகப் பார்க்கிறது. தந்திரா இவ்விரண்டிற்கும் இடையில் எல்லைகள் இல்லாத அளவிற்கு உள்ளார்ந்த பிணைப்பைக் கொண்டதாகப் பார்க்கிறதுதந்திரா, சிதறலான எல்லைகள் அல்லது மங்கலான எல்லைகள் என்கிறது. எல்லைகள் என்பவை மனதில் உள்ளதாகவே பார்க்கிறது. உணர் உறுப்புகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஏனைய பௌதீகப் பொருட்களுக்கும் உடலுக்கும் தெளிவான எல்லை என்பது கிடையாது. (ஆன்ரே வான் லிசேபெத், 2011:8)

இந்தியச் சிந்தனைகளில் வீடு, கோயில் என்பன மனித உடலுக்கு இணையாக அர்த்தப்படுத்தப்பட்டன. மனித உடல் வீடு என்பதற்கு இணையாக உபநிடதங்களில் பார்க்கப்பட்டது என்றால், பக்தி மரபில் கோயிலுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது. (ராமாநுஜம், 2016:182)

மத்தியகாலப் படைப்பான நாரதபரிவ்ராஜகா, உடலை அசுத்தங்களால் நிறைந்திருக்கும் வீடாகப் பார்க்கின்றதுபௌத்தமும் உடல், வீடு இரண்டையும் ஒன்றுபோல் அர்த்தப்படுத்துகிறது. (ராமாநுஜம், 2016:165)

மெய் என்பதை ஸ்தூலமானதாகவும் (Physical Body) சூட்சுமமானதாகவும் (Abstract Body) வகைப்படுத்தியிருக்கும் சாங்கியம், அத்வைத வேதாந்தம் ஆகியவற்றின் யோசனைகள் இந்தியத் தத்துவம், மெய் பற்றிய ஆய்வுகளில் தீவிரமாக விவாதித்ததைக் காட்டுகிறது. புலனுறுப்புகளின் கூட்டுத்தொகையை மெய் என்று இந்தியத் தத்துவம் கூறவில்லை. ஏனெனில், மெய் என்பதை பௌதீக பொருளாக மட்டுமே கருதவில்லை. துவக்கக் கால இந்தியச் சிந்தனைகள் மெய் பன்முகப்பட்டதாக, எல்லைகளற்றதாக வரையறுத்திருந்திருக்கிறது. பின்னர் மெய் வீடாக, கோயிலாக, உலகமாகப் பார்க்கப்பட்டதன் வழியே ‘மெய்’ என்பதே முதல் நிறுவனமயமான கருத்தாக்கமாக இந்தியத் தத்துவங்களில் காண முடிகிறது. இந்தியத் தத்துவங்கள் தொடர்ந்து விவாதித்ததனால் மெய் தொடர்பான கருத்தாக்க வளர்ச்சியை ஒவ்வொரு கட்டமாக நம்மால் காண முடிகிறது.

ஒரு சொல் பல பொருள்:

‘மெய்’ பற்றிய விவாதத்தைத் தமிழ் மொழி உண்மை பற்றிய விவாதத்துடன் இணைத்தே அணுகியிருக்கிறது.

ஒரு மொழியில் ஒரே சொல் பல பொருள்களைத் தருவதற்குள் ஒரு தர்க்கப்பூர்வமான ஒற்றுமை உள்ளது. உதாரணமாக, ‘கோ’ என்ற சொல் ‘பெரிய’, ‘குயவன்’, ‘தலைவன்’, ‘பசு’, ‘எருது’, ‘அரசன்’, ‘கண்’, ‘நீர்’, ‘இறை’, ‘ஒளி’ எனப் பல பொருள் கொண்டது. குயவன், தலைவன், அரசன், இறை ஆகிய காரணிகள் சமூகத்தின் அதிகாரம் பெற்றிருந்த வேளையில் ‘கோ’ என்ற சொல்லாக அறியப்பட்டிருக்கிறது. மனித சமூகத்திற்கு நீர் அடிப்படையான உயிர்த் தேவை. பண்டைய சமூகத்தில் நீரைச் சேமிப்பதற்கான – கொண்டு செல்வதற்கான தொழிற்நுட்பமாக மண்பாண்டங்கள் இருந்திருக்கின்றன. அத்தொழிற்நுட்பமறிந்த குயவன் சமூக அதிகாரம் பெற்ற நிலையில் இருந்திருக்கிறான். இதன் காரணமாக நீர், குயவன் என்ற அர்த்தம் தொனிக்கும் சொல்லாகப் பண்டையக் காலத்தில் கோ இருந்திருக்கிறது.

மேய்ச்சல் நிலச் சமூகத்தில் கால்நடைகளே பிரதான செல்வம். பசு, எருது இரண்டையும் அர்த்தப்படுத்தும் சொல்லாக ‘கோ’ மேய்ச்சல் சமூக அமைப்பில் புழங்கியிருக்கிறது. நிலவுடைமைக்கு முந்தைய சமூக அமைப்பில் குழுத் தலைவனே சமூக முக்கியத்துவம் கொண்டவன். நிலவுடைமைச் சமூகத்தில் வேந்தர்கள் அதிகாரம் பெற்றவர்களாகின்றனர். அதனால் தலைவன், அரசன் என்ற பொருள் தரும் பதமாக ‘கோ’ இக்காலகட்டங்களில் விளங்கியிருக்கிறது. வேந்தர்களின் காலத்திற்குப் பின்னர் சமய நிறுவனங்கள் அதிகாரம் பெற்ற அமைப்பாகின்றன. வேந்தனை விட இறை சமூகப் பண்பாட்டில் முக்கியத்துவம் கொண்ட காரணியாவதால், ‘கோ’ என்ற சொல் இறை என்ற அர்த்தத்தையும் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது. ஒரு மொழி வரலாற்றுப்பூர்வமானதாக இருப்பதுடன் சமகாலத் தன்மையையும் கொண்டிருக்கிறது. ‘கோ’ என்ற சொல் வரலாறெங்கிலும் ‘அதிகாரம்’, ‘உயர்ந்த’ ஆகிய அர்த்தங்களுடன் புழங்கப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் எந்தக் கருத்தாக்கம் அதிகாரத்தைப் பெறுகிறதோ அதனை அர்த்தப்படுத்த ‘கோ’ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வகையான சொல்லின் பொருள் மாற்றத்தை மொழியியலாளர்கள் ‘Semantic Drift’ அல்லது ‘Semantic Change’ என்று அழைக்கின்றனர். அதாவது, ஒரு சொல் வேறொரு அர்த்தம் பெறுவது என்பதற்குச் சமூகப் பொருளியல் காரணங்கள், மொழி பயன்பாடு, தற்செயல் விளைவு என வெவ்வேறு காரணங்கள் இருக்க இயலும். இங்கு ‘கோ’ என்ற சொல்லைச் சமூகப் பொருளியல் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது நமக்கு மேற்கண்ட சித்திரங்கள் கிடைக்கின்றன.

இதேபோல் பண்டைய இலத்தீன் மொழியில் ‘pecus’ என்ற சொல் கால்நடையைக் (cattle) குறிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இந்தச் சொல்லே செல்வம், பணம் ஆகியவற்றைக் குறிக்கும் ‘Pecunia’ என்ற சொல்லானதாக மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இலத்தீன் மொழியில் ஆடுவளர்ப்பு என்பதையே ‘pecus’ என்ற சொல் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட மேய்ச்சலைப் பிரதானமாகக் கொண்ட சமூக வாழ்வில் கால்நடை வளர்ப்பே மூலதனமாகவும் செல்வமாகவும் இருந்த வழக்கமே பின்னர் சமூக பரிமாற்ற வளர்ச்சியில் உருவான பணம், தனியுடைமை ஆகியவற்றைக் குறிக்கும் ‘pecunia, peculium’ என்ற சொற்களாக மாறியுள்ளது.

‘கோ’ பற்றி மேல் குறிப்பிட்டது போல ‘மெய்’ என்ற சொல்லானது பொருண்மை மாற்றத்தை (Semantic Change) பெறவில்லை; மாறாக ‘ஒரு சொல் பல பொருளாக’ (Polysemy) மாற்றம் பெற்றுள்ளது. ஒரு சொல்லில் புழக்கத்தில் உள்ள ஒரு அர்த்தத்துடன் புதியதாக ஒரு அர்த்தத்தை மொழி அமைப்பு தன்னுள் அனுமதிக்கிறது. இதனையே ‘ஒரு சொல் பல பொருள்’ (Polysemy) என்கிறோம். பொருண்மை மாற்றத்தில் ஒரு சொல் தன் பழைய அர்த்தத்தை இழந்து புதிய அர்த்தத்தை பெறுகிறது. ‘கோ’ என்ற சொல் முன்னர் சமூக பண்பாட்டுச் சூழலில் வெவ்வேறு அர்த்தங்களை கடந்து தற்போது ‘இறை’ (கோ + இல்= கோயில்) என்ற அர்த்தத்திலேயே புழங்கப்படுகிறது. ஆனால், ‘மெய்’ என்ற சொல் தன்னுள் அர்த்த இழப்பின்றி ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களை இயங்க அனுமதிக்கிறது.

மெய் என்ற பதம் உண்மை, உடல், பதினென் எழுத்துகள் ஆகிய அர்த்தங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. மெய் என்ற ஒரு சொல்லின் பல பொருள் வந்தடைந்தது தற்செயலானது என்ற போதிலும் இந்த அர்த்தங்களுக்கிடையில் தர்க்கவொழுங்கு உள்ளது. அதனை கண்டறிவது உண்மைக்கும் உடலுக்கும் இடையிலான உறவு பற்றிய தமிழ்ச் சிந்தனையைக் கண்டறிவதாகும்.

மெய் என்ற சொல்லை டி.தருமராஜின் ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் வழியாக அணுகும்போது மேலும் பல திறப்புகள் கிடைக்கின்றன. உடல் என்ற சொல்லின் போதாமையிலிருந்து மெய் என்ற சொல்லிற்கு நகர்வதற்கு தருமராஜின் ஆய்வுகள் உதவியாக உள்ளன.

தருமராஜின் சிந்தனைகளில் இருந்து மெய் பற்றிய கருத்தாக்கத்தை வரிசைப்படுத்தும்போது மெய் என்பது சப்தமற்ற எழுத்துகள்; தமிழ் மரபின் முடிவிலி (Infinity) பற்றிய எண்ணியல் அறிவு; பன்மை; குறிப்பான் கொண்டவை ஆனால் குறிப்பீடு இல்லை (காலிக் குறிப்பான்); வாசனை என்ற முந்தைய மொழியின் ஞாபகத்தைக் கொண்டது. மேலும், மெய்யின் தன்மை என்பது திக்கல், திணறுதல், வாசனை என்கிறார்.

சமூகப் பண்பாட்டில் ‘உயர்ந்த’ அந்தஸ்தைப் பெற்ற காரணிகளுடன் தொடர்பு கொண்ட ‘கோ’ என்ற சொல் சமூகப் பொருளியல் மாற்றங்களுக்கு ஏற்ப தன் பழைய அர்த்தத்தை இழந்து சமூக பரிமாற்ற வளர்ச்சிக்கேற்ப புதிய அர்த்தத்தைப் பெற்றது. ஆனால், ‘மெய்’ என்ற சொல்லின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளவை பௌதீக வடிவாகக் காட்சி தரும் அபௌதீகத் காரணிகளாக (Non-Physical entities appears like Physical Forms) சமூகப் பண்பாட்டில் அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன. இங்கு பதினெண் ஒற்றெழுத்துகள், உடம்பு, உண்மை ஆகியவை புறப்பொருட்கள் வழி வெளிப்படுத்திக்கொள்ளும் தன்மைக் கொண்டவை.

‘மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்பதில் மெய்ப்பொருள் ஆராய்ந்து கண்டறிய வேண்டியது; உண்மை என்பது அந்தரார்த்தம். அதாவது புறவடிவங்களான சப்தம், காட்சி வழியாக வெளிப்பட்டாலும் உண்மை என்பது புறவடிவங்களை கடந்தது. அதே போல் பதினென் ஒற்றெழுத்துகள் சப்தம் கொண்டவையல்ல; அவை அந்தரங்கமான சப்தமெழுப்பக் கூடியவை. மெய் எழுத்துகளுக்கு ‘ஆணகம்’ என்றொரு பொருள் உண்டு. ஆணகம் என்றால் காதின் உட்சவ்வு எனப் பொருள். காதின் உட்சவ்வு வரை கேட்கும் ஒலிகளே மெய்யொலிகள்; அதேபோல் மெய் (The Body) என்பது பிற பொருட்களை போல பௌதீகப் புற வடிவம் கொண்டிருப்பினும் அது மட்டுமே அல்ல. அது தன்னளவில் வேறாக உள்ளது.

மெய் (The Body):

பிறந்த குழந்தை முதல் ஆறுமாதம் அழுகை, அசைவுகள் வழியாக வலி, தூக்கம், பசி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்தத் துவக்கக் காலக்கட்ட மெய்யை ‘உயிர் மெய்’ (Biological Body) என்றழைக்கலாம்.

குழந்தை பிறந்து ஆறுமாதம் முதல் பதினெட்டு மாதம் வரையுள்ள காலக்கட்டத்தை ‘பிம்ப நிலை’ (Imaginary Stage) என பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் ழாக் லெக்கான் வரையறுக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில்தான் குழந்தை தன் உறுப்புகள் பற்றி அறிந்துகொள்கிறது; தன்னிலை வளர்ச்சியடையத் துவங்குகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பிறரை அறிந்துகொள்ளவும் துவங்குகிறது.

மேலும், லெக்கான் பதினெட்டு மாதம் முதல் நான்கு வருடக்காலம் வரை உள்ள குழந்தை வளர்ச்சிக் காலக்கட்டத்தை ‘குறியீட்டு நிலை’ (Symbolic Stage) என்கிறார். இந்தக் காலக்கட்டத்தில்தான் மொழிக்குள் குழந்தை நுழையத் துவங்குகிறது. மொழியாலும் பண்பாட்டாலும் ஆன மற்றமைகளின் உலகத்தில் மெய் நுழையும்போது பால், பாலினம் போன்றவற்றுடன் சமூக விதிகளைக் கற்றுக்கொள்ளத் துவங்குகிறது. லெக்கானைப் பொறுத்தளவில் யதார்த்தம் என்பது குறியீடுகளாலும் அர்த்தப்படுபவைகளாலும் ஆனது. அதனால் யதார்த்தம் என்பதை நாம் குறியீட்டு நிலையைச் சார்ந்தது என்றே வரையறுக்க இயலும்.

மெய் நிலை (The Real): மெய் நிலை என்பது சமூகக் குறியீட்டியல் உலகத்தின் எல்லையில் இருக்கக் கூடியது. இதுவே நம் சமூக யதார்த்தத்திற்கு உதவக்கூடியது. உலகமானது மெய்நிலை இன்றி இருக்க இயலாது. மேலும், அது சமூக யதார்த்தத்திற்குள்ளார்ந்து இயங்கக்கூடியது. ஆனால், மெய்நிலையானது, பிம்பநிலை கருத்தாக்கத்திற்குப் புறத்தில் இருப்பதாக யோசிக்கப்படுகிறது. மெய்நிலை என்பதே கருத்தாக்க உலகத்திற்கும் புறஉலகத்திற்கும் அப்பால் உள்ளது. அதனால் குறியீட்டுநிலை, கருத்தாக்கநிலை இவ்விரண்டிற்கும் அப்பால் இயங்கக்கூடியது.

மெய்நிலையானது புலன் சார்ந்தவற்றுடன் நெருக்கமாக இணைந்துள்ளது. மெய்நிலையே தேவைகளை இயக்கக்கூடியது. ஆனால், பொருட்கள் அதற்கு நிறைவைத் தருவதில்லை. உதாரணமாக, ஒரு குழந்தை பசியை உணரும்போது, அந்தப் பசியைத் தற்காலிகமாகத் தாயின் முலையோ அல்லது பால்புட்டியோ நிவர்த்தி செய்யலாம். லெக்கானைப் பொறுத்தளவில் அந்த முலையும் பால்புட்டியும் கருத்தாக்க ரீதியிலான பொருட்கள். அவற்றால் குழந்தையின் தேவையை முழுக்க நிவர்த்தி செய்ய இயலாது. கருத்தாக்க நிலைக்கு முந்தைய நிலையாகவும் மெய்நிலை உள்ளது. மெய்யைக் (The Body) குறியீட்டாக்கத்திற்கு அனுமதிப்பதே சமூக யதார்த்தத்தை உற்பத்திச் செய்கிறது. மெய்யை முழுவதுமாகக் குறியீட்டாக்கமாக மாற்ற இயலாது. குறியீட்டாக்கத்தை மறுக்கும் வேலையை மெய் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும். மெய்யானது ஒரு பௌதீகப் பொருளைப் போல இல்லை. மெய்யின் இருப்பு என்பது சிந்தனையாலும் மொழியாலும் வெளிப்படுகிறது.

மெய்நிலை என்ற கருத்தாக்கத்தை லெக்கான் மனக் கிளேசத்திற்கு (Trauma) இணையாக ஒப்பிட்டு விளக்குகிறார். அதாவது, கோரமான விபத்து பற்றிய செய்தி நம் உளத்தில் ஏற்படுத்தும் விளைவை மனக்கிளேசம் என்கிறோம். உடல்ரீதியான தாக்குதல்கள், பாலியல் சுரண்டல்கள் போன்றவற்றாலும் மனக்கிளேசம் ஏற்படுகிறது. நேரடியாகப் பாதிப்பு ஏற்படாமல் கூட மனக்கிளேசம் வரலாம். ஏனெனில், இது ஒரு மன நிகழ்வு. புறநிலை அழுத்தத்தாலும், தன்னிலையின் இயலாமையாலும், தன்னிலை புறநிலையுடன் வினைபுரிவதாலும் மனக்கிளேசம் ஏற்படுகிறது. மெய்(The Body) எவ்வாறு முழுவதுமாக குறியீடாகவோ சமூக யதார்த்தமாகவோ உள்வாங்க முடிவதில்லையோ அதுபோலவே மனக்கிளேசத்தை முழுவதும் குறியீட்டாக முடியாது. நம் வலியை, துயரத்தை முழுவதுமாக மொழியில் வெளிப்படுத்த இயலாது. ஒவ்வொரு முறை வெளிப்படுத்த முயலும்போதும் இன்னும் சொல்ல வேண்டியவை இருந்துகொண்டே இருக்கும். இந்த ‘இன்னும் சொல்ல வேண்டியதை’, அதாவது முழுவதும் அடைந்துவிட / வெளிப்படுத்தவியலாத உணர்வையே மெய்நிலை என லெக்கான் கூறிகிறார். இந்த மெய்நிலையானது மரணபயம் மற்றும் களிப்பு (Jouissance) ஆகியவையோடு தொடர்புடையது. நம்மால் அடைய இயலாத அளவிற்கு விலகிச் சென்றுகொண்டே இருக்கும் தன்மை உடையதாக மெய்நிலையைக் குறிப்பிட்டு, இந்த இல்லாத பொருளே நம் வாழ்வைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என லெக்கான் கூறுகிறார்.

Photography : Adewale Mayowa Genesis 

பண்பாட்டு மெய்அழகியல் மெய்:

மொழிக்குறிகளின் வழியாக மெய்யின் மீது பாலினம், பால் ஒழுங்கு, விதிகள், பழக்கவழக்கங்கள் போன்றவை ஏற்றப்படுகிறது. அதன் பின் உயிர்மெய்யானது (Biological Body), மொழிக்குறிகளால் காலனியாக்கத்திற்குள்ளாகி ‘பண்பாட்டு மெய்’ (Cultural Body) நிலையை அடைகிறது. மொழிக்குறிகளால் ஆன பண்பாட்டு மெய் தனக்கென பிரத்யேக மொழியைக் கொண்டு மனிதத் தன்னிலை அடைகிறது. அவ்வாறான மனிதமைய தன்னிலை ஏனைய உயிர்களை மற்றவையாக்குகிறது. மொழிக்குறிகளால் ஆன சமூகமே பண்பாட்டு மெய்யைக் கட்டமைக்கிறது. மேரி டக்ளஸின் கருத்தாக்கத்தை ராமாநுஜம் எடுத்தாளுவதும் இதற்குப் பொருந்திப்போகிறது.

கலாச்சார ரீதியாகப் படைக்கப்பட்ட, உள்வாங்கப்பட்ட உடலானது சமூகம் என்ற தொகுப்பின் முதன்மையான குறியீடாகின்றது. உடலின் வெளித் தோற்றம், அசைவுகள், செயல்பாடுகள் எல்லாமே அதாவது, உடையிலிருந்து, தலைமுடி, உணவு, மலம் கழிப்பது, பாலியல் திரவங்கள் வெளியேறுவது, மாதவிடாய் வெளியேற்றம் எல்லாமும் கலாச்சார ரீதியாக, சமூகரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன….

“பௌதீக உடல் எவ்வாறு உள்வாங்கப்பட வேண்டும் என்பதைச் சமூக உடல்தான் கட்டுப்படுத்துகின்றது. பௌதீக உடலின் அனுபவம் எப்போதும் சமூக வகைப்பாடுகளின் ஊடாகத்தான் அதற்கான அர்த்தத்தைப் பெறுகின்றது. அதுவே சமூகம் குறித்த ஒரு குறிப்பிட்ட பார்வையாக உடலை பேணிக்காப்பது, உணவு உண்பது, குணப்படுத்துவது, தூக்கம் மற்றும் உடற்பயிற்சி என்று அதன் தேவைகளை வரையறுப்பது, கடந்து போக வேண்டிய நிலைகள் குறித்து, தாங்கிக்கொள்ள வேண்டிய வலிகள் குறித்து, எவ்வளவு காலம் வாழ்வது என்பது குறித்தும் உள்வாங்கப்படும். கலாச்சார வகைப்பாடுகள் எத்தகைய சமூகத்தைச் சார்ந்துள்ளதோ அத்தகைய சமூகத்தில் காணப்படும் பிற வகைப்பாடுகளோடு ஒத்துப்போக வேண்டியுள்ளது. ஏனெனில் உடல் குறித்த பதப்படுத்தப்பட்ட பார்வைகள் எல்லாமே எத்தகைய கலாச்சார வகைப்பாடுகளைச் சார்ந்துள்ளதோ அவற்றிலிருந்தே பெறப்படுகின்றன.” (ராமாநுஜம், 2016:143)

சீனிவாச ராமாநுஜம் குறிப்பிடும் பௌதீக உடல் என்பதையே இந்த ஆய்வு உயிர்மெய் என அர்த்தப்படுத்துகிறது. அதாவது உயிர்மெய்யின் குணத்தையும் பண்பாட்டு மெய்தான் பொருள் புரிந்துகொள்கிறது.

பண்பாட்டு மெய்யை மீறுதல் என்பது பண்பாடு வரையறுத்துள்ள விதிகளுக்குட்படாத மெய்கள் எனலாம். பிறரின் மெய் எல்லைக்குள் அத்துமீறுதல் குறைவுள்ளதாகவும், ஒழுக்கநெறி தவறியதாகவும், குற்றம் பற்றியதாகவும் கருதப்படுகின்றன. அதனால் மனப்பிறழ்விற்குள்ளானவர்கள், பாலின விதிகளை மீறுபவர்கள், கள்வர்கள் போன்றவர்கள் பண்பாட்டின் விளிம்பிற்குத் தள்ளப்படுகின்றனர். விளிம்பிற்குத் தள்ளப்படும் மெய்களே பண்பாட்டு மெய்க்கு அர்த்தமளிக்கின்றன.

குற்றம் பற்றிய மெய், மனப்பிறழ்வு ஆகியவை சமூகத்தின் புறத்தே வைக்கப்படுவதன் வழியாகப் பண்பாட்டு மெய்யை அர்த்தப்படுத்துகின்றன. இவையன்றி சமூகத்தினுள் இயக்க அனுமதிக்கப்படும் சில காரணிகளும் பண்பாட்டு மெய்க்கு அர்த்தமளிக்கின்றன. சாமியாடிகள் அவ்வாறான தன்மைக் கொண்டவர்கள். தனித்த உடை, உணவுப்பழக்கம், பாலுறவு ஒழுங்கு என சாமி இறங்கியாட (SuperNatural Spirit) தகுதி கொண்ட ‘சடங்கியல் மெய்யை’ (Ritual Body) பண்பாடு தன்னுள் இயங்க அனுமதிக்கிறது. சாமியாடிகள் தன் மெய்யைப் பண்பாட்டு மெய்யிலிருந்து மேம்பட்டதாகக் கருதுவர். அதற்காக சாமியாடிகளிடம் அன்றாட பழக்கவழக்கங்கள் சராசரி பண்பாட்டு மெய்யின் பழக்கவழக்கங்களை விட வேறுபட்டதாகிறது. சாமி இறங்கிச் செல்லும் ஊடகமாக அவர் தொடர்ந்து தன் மெய்யைப் பராமரிப்பார். தன்னுள் கட்டுப்படுத்தக்கூடிய ஆவி இறங்குவது சாமி (Good Spirit) எனவும், கட்டுப்பாடற்ற ஆவி மெய்யினுள் இறங்குவது பேய் (Bad Spirit) என இரண்டு நிலை மரபான சமூகங்களில் காணப்படுகிறது. கட்டுப்பாடற்ற ஆவியை மெய்நீக்கம் செய்யும் தொழிற்நுட்பம் அறிந்தவராக சாமியாடிகள் மரபான சமூகத்தில் செயல்படுகிறார்கள்.

மேரி டக்ளஸ், சமூக அனுபவத்திற்கும் உடல் ரீதியான வெளிப்பாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார். இந்தத் தொடர்பு நேர்நிலையாக மட்டுமல்லாமல் எதிர்நிலையாகவும் சாத்தியப்படுகின்றது. ஆவி புகுதல், மெய்மறந்த பரவசநிலை, உடல் மீதான கட்டுப்பாடுகளற்ற வெளிப்பாடு என்பவை உளவியல் அல்லது பொருளாதாரம் சார்ந்தவை என்பதைக் காட்டிலும், ஒரு பலவீனமான சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட உடலாகப் பார்க்க வேண்டும் என்கிறார் ஒலிவெல். விளிம்பு நிலை என்பது, பௌதீக உடல் மீதான சமூக உடலின் கட்டுப்பாட்டை மட்டுப்படுத்துவதாக இருக்கின்றது. பெரும் கட்டுப்பாடுகள் கொண்ட சமூகங்களிலும் கூட, அத்தகைய சமூகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கோட்பாடுகளிலிருந்து அந்நியப்பட்ட தன்மையில் உப-முறைமைகளாகத் தனிமனிதரும் குழுமங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகைய அந்நியப்பட்ட உப-முறைமைகளும் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையில் உடல் ரீதியான குறிகள் மூலமாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றன. (ராமாநுஜம், 2016:166)

மேரி டக்ளஸ் போன்ற ஆய்வாளர்கள் சடங்கியல் மெய்யானது பண்பாட்டு மெய்யின் அழுத்தத்தால் வெளிப்படுவது என்கின்றனர். மேலும், சாமியாடிகளின் மெய் தொழிற்நுட்பம் குறித்த விரிவான பார்வை அவரிடம் வெளிப்படவில்லை. ‘பண்பாட்டின் அகநிலையிலிருந்து அந்நியப்படுவதன் மூலம்’ சடங்கியல் மெய் பண்பாட்டை இயக்கும் தன்மைக் கொண்ட காரணியாக விளங்குகிறது.

சடங்கியல் மெய்யல்லாது மற்றொரு மெய்யும் பண்பாட்டு மெய்யின் உள்ளிருந்து வேறுபடக்கூடியது. அதாவது கலை மெய் (Artistic Body). சடங்கியல் மெய் ஆவியை அல்லது சாமியை (Super Natural Spirit) தன்னுள் இயங்க அனுமதிக்கிறது. அதற்கென மெய்யாதல் தொழிற்நுட்பத்தைச் சாமியாடிகள் பேணுவது போல கலை மெய்யும் தன்னுள் வேறு தன்னிலைகளை இறக்கிக்கொள்கிறது (கதாபாத்திரமாதல்); அதற்கெனக் கலை மெய் பிரத்யேகத் தொழிற்நுட்பம் கொண்டிருக்கிறது. இவ்விரு மெய்களின் அடிப்படைத் தன்மையாகப் பண்பாட்டு மெய்யை மீற முயற்சித்தல் எனலாம். பண்பாட்டு மெய்யை மீறுவது என்பது, அதற்கு எதிரானது என்ற அர்த்தத்தில் அல்ல; பண்பாட்டு மெய் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இவ்விரண்டையும் சமூகத்தில் இயங்க அனுமதிக்கிறது. அதனால், இவ்விரு மெய்யையும் ‘அழகியல் மெய்’ (Aesthetic Body) என்ற கலைச்சொல்லின் கீழ் வகைப்படுத்தலாம்.

மெய் மறத்தல்:

கலைஞர்களுக்கு மெய்யே தளம் மற்றும் காலத்தைத் தீர்மானிக்கும் கருவி. அவ்வாறிருக்க கலைஞனின் மெய் எவ்வாறு தயாராகிறது; மெய்யை எவ்வாறு புரிந்துவைத்திருக்கிறது என்பது அழகியல் மெய்யாதல் பற்றிய சிந்தனைக்கு மேலும் அதிக திறப்புகளைத் தரும்.

கலை மெய்யாதல் என்பதை மெய்யாதல் கோட்பாடாகக் கலைஞர்கள் பயிற்சித்துக்கொள்கிறார்கள். இது நாடகக் கலைஞர்கள் முதல் ஓவியக் கலைஞர்கள் வரை எல்லோருக்கும் பொருந்தும். கலைஞர்களுக்குப் பண்பாட்டின் வழக்கமான சொல்லாடல்களிலிருந்து வேறொன்று பயிற்றுவிக்கப்படுகிறது. அது இசை கேட்டலாக, சடங்கு பார்வையாளன், சமூகத்தை அந்நியமாகி கவனிப்பவன், வாழ்வைப் பற்றிய மாற்றுப் பார்வையைப் பயின்றவன் எனத் தன்னுள் வெவ்வேறு முறைகளைக் கையாளுகிறது. அவ்வாறு பொதுப் பண்பாட்டின் உரையாடல்களிலிருந்து அந்நியப்படுதலே அழகியல் மெய்யாதலுக்கான முதல் பயிற்சி. அதன்பின் இசை, நாடக, நடனம் போன்ற ஒத்திகையில் கூட்டுநனவிலியாகும் பயிற்சியும் பிரதானமானது. இவ்வாறு கூட்டு நனவிலியுடன் பண்பாட்டு மெய்யை மீறி மொழியின் விளிம்பில் நின்று திக்கும் மெய், கலைமெய்களாகின்றன. அதாவது பண்பாட்டு மெய்யிலிருந்து மீறும் மெய்கள் தன்னளவில் மொழியின் எல்லைகளைக் கடக்க முயல்கின்றன.

கலை மெய்யாதலின்போது, பண்பாட்டு மெய்யின் அடிப்படை பண்புகளை விளிம்பிற்கு நகர்த்த வேண்டும். பண்பாட்டு மெய்யாதலின்போது உயிர்மெய்யின் (Biological Body) அடிப்படைப் பண்புகள் விளிம்பிற்கு நகர்த்தப்பட்டது. புலன்களைக் கட்டுப்படுத்துதல் எனலாம்; அதாவது உயிர்மெய் தன்போக்கில் மலத்தையும் சிறுநீரையும் வெளியேற்றும் தன்மையைப் பெற்றது. மலத்துவாரம், சிறுநீரக உறுப்பு ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி கழிப்பிடப் பழக்கத்தை ஏற்படுத்துவது பண்பாட்டு மெய்யாதலுக்கான வழிமுறைகளாகும். இதனையே குழந்தை பருவ வளர்ச்சி பற்றிப் பேசும் பிராய்ட் ‘Anal Stage’ என்றார். குழந்தையைப் பழக்கப்படுத்துதலின்போது நாம் உயிர்மெய்யின் பண்புகளை மட்டுப்படுத்தி பண்பாட்டு மெய்யின் தன்மைகளைப் பயிற்றுவிக்கிறோம். இதைப் போன்று பண்பாட்டு மெய்யின் பண்புகளை அழகியல் மெய்யானது மட்டுப்படுத்தி விளிம்பிற்கு நகர்த்துகிறது.

பார்வையாளனுக்குள் அதிர்தல்:

நன்கு நரம்பேறிய இரண்டு இசைக்கருவியில் ஒன்றை இசைத்தால் மற்றொன்று தானாகவே அதே சுரத்தில் அதிர்வுறுவதை ‘ஆல்பா ரிதம்’ என்பார்கள். நாடக நிகழ்த்துதல்களின்போது கலைஞனின் மெய்யசைவுகள் விசும்பலுடனும் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களின் நனவிலி இயக்கம் கொள்கிறது. பார்வையாளன் பிறிதொரு இசைக்கருவியைப் போல அதிர்வுறுகிறான்.

நனவோடையில் (Stream of Consciousness) எழுதும் முறை எவ்வாறு யோசனையைப் போல பயணிக்கிறதோ அதுபோல கலை மெய் நீர்மத்தின் தன்மைக் கொண்டிருக்கிறது. அவ்வாறான மெய் இயக்கத்தை ‘நீர்மெய்’ (Stream of Body) எனலாம். நீர்மெய் என்பது இயங்கும் கூட்டு மெய்யின் அசைவுகளும், விசும்பல்களும் நீர்மத்தின் தன்மைகளாகிப் பார்வையாளனின் மெய்யை இயக்குகிறது. அதனால்தான் பார்வையாளன் நன்கு நாண்பூட்டப்பட்ட இசைக்கருவியைப் போல அதிர்வுறுகிறான்.

அழகியல் மெய்யாதல் மனிதத் தன்னிலையையும் கடந்து பல்லுயிர் மெய்யைத் தன்னுள் ஏற்றிக்கொள்ளவதாக மயக்கம் கொள்கிறது. அதாவது கலைஞன் தான் மனிதனற்ற பிற உயிர்களின் வாஞ்சைகளை, அழுகைகளை தன்னிலிருந்து வெளிப்படுத்தும் திறன் கொண்டவனாக காட்டிக்கொள்ளுதல். இந்நிலை மொழிக்குறிகளின் எல்லையைக் கடக்க முயற்சிக்கிறது; இந்த நிலையை ‘மெய் மறத்தல்’ எனலாம். அதாவது பண்பாட்டு மெய்யின் விளிம்பிற்கு வரும் அழகியல் மெய்யானது ஒரு மெய் மறத்தலைச் சாத்தியப்படுத்துகிறது. மனித மைய மொழியின் கொடுங்கோன்மையிலிருந்து தற்காலிகமாக விலக முயன்று அழகியல் மெய் மௌனம், திக்கல், இசை, விசும்பல் வழியாக மெய்மறத்தலை எட்டுகிறது. ஆனால், மொழியின் எல்லைகளை முழுவதுமாகக் கடந்துவிட முடிவதில்லை.

பண்பாட்டு மெய்யின் விளிம்புக்குச் செல்லுதல் என்பது முற்றிலும் வெளியேறுவது என்ற அர்த்தத்தில் அல்ல; மாறாக ஒரு தற்காலிகமான நிலை. பிறரின் மெய் எல்லைகளை மீறுதல் (திருட்டு, பாலியல் வன்முறை), பண்பாட்டு மெய்யைப் பேண இயலாதவர்கள் (மனப்பிறழ்வானவர்கள்) ஆகியோரைச் சமூகம் விலக்கியே வைத்திருக்கும். சராசரியான சமூக மனிதருக்கான அந்தஸ்தை அவர்களால் பெற இயலாது. அவ்வாறாகவே கலைஞர்களின் மெய்யும் சடங்கியல் மெய்யும் பண்பாட்டு மெய்யிலிருந்து தற்காலிக விலகலைப் பெறுபவை. இருப்பினும், பண்பாடு அனுமதிக்கும் விலகலையே இந்த மெய்கள் பெறுகின்றன. சடங்கில் மெய்யான தருணத்தில் சாமியாடி ஒருவர் கொலை செய்வாரே ஆயின், அது கடவுளின் பெயரால் நடந்தது எனச் சொல்லப்பட்டாலும் தனிநபர் காரணங்களைப் பொறுத்தே குற்றம் மதிப்பிடப்படும். பாலியல் ரீதியிலாக மற்றொருவரின் மெய் எல்லையை மீறுதலுக்கு உயிரியல் அடிப்படையிலான காரணங்களே போதுமானது. அதற்கும் கலை மெய் என்பதற்கு நேரடித் தொடர்பில்லை. அதாவது பண்பாட்டு மெய் புலன்களின் எல்லை, அதன் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. நெருக்கமான மக்கள் கூடும் இடங்களில் பண்பாட்டு மெய் தன் கட்டுப்பாட்டை இழந்து உயிரியல் மெய்யின் நிலைக்குச் செல்கிறது. உதாரணமாக, நெருக்கமான பேருந்து பயணத்திலும், திருவிழாக் கூட்டத்திலும் அருகாமை நபரின் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டவும் பாலியல்ரீதியிலான விதிகளை மீறும் சாத்தியங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான நிலை பண்பாட்டு மெய் நிலையைக் கடந்து உயிரியல் மெய் நிலையில் இயங்கக்கூடியது. அவ்வாறான நிலையில் வயது, உறவு என்ற பேதமின்றி பாலியல்ரீதியிலான கிளர்ச்சி நிகழ்வதற்கான சாத்தியங்களை உயிரியல் மெய் பெறும். அதனால் பாலியல் ரீதியான அத்துமீறல் பண்பாட்டு மெய்யின் எதிர்மறையான எல்லைகளில் நிகழ்வது. அதனைக் கலை மெய் என்ற நிலையில் வைத்துப் பார்க்க இயலாது.

கலை மெய்க்கு பண்பாட்டில் விளிம்பில் உள்ளவர்களின் நிலையை மாதிரியாகக் கொள்வது இங்கு சில பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது. மனப்பிறழ்வானவர்கள், குற்றம் புரிந்தவர்கள் ஆகியோர் பண்பாட்டு மெய்யின் எல்லையில் இருப்பவர்கள். பண்பாட்டின் அறவிழுமியங்களால் தண்டிக்கப்பட்டவர்கள், அதற்குக் கட்டுப்படாதவர்கள். இங்கு கலை மெய்யானது சமூக அழுத்தத்தைத் தணிக்கக்கூடியது. அதுவே அறவிழுமியங்களற்ற பண்பாட்டு மெய்க்குப் புறத்தே உள்ள மெய்களை, கலை மெய்யின் பொருட்டு அனுமதிக்குமேயாயின் பண்பாடு அதனைக் கலை மெய்யாக ஏற்றுக்கொள்ளாது. கலை மெய்யும் சடங்கியல் மெய்யும் நேர்மறையான பண்பாட்டு விளிம்பில் செல்லக்கூடியது. ஆனால், குற்றம் பற்றிய மெய் எதிர்மறையான பண்பாட்டு விளிம்பில் இருப்பது. இவை பண்பாட்டு விளிம்பில் இருக்கிறது என்ற பொது தன்மையைக் கொண்டு உறவு கொள்ளுமேயாயின் அது பண்பாட்டு மெய்யால் புறக்கணிக்கப்படும். இங்கு சமூகப் பண்பாட்டில் அறவிழுமியங்களின் பால் நேர்மறையாகத் தாக்கம் செலுத்தக்கூடியதே / அதனை முன்னோக்கிச் செல்ல உதவும் மெய்யே அழகியல் மெய். அறவிழுமியங்களைச் சிதைக்கும் குற்றம்பற்றிய மெய், உயிர்மெய், பண்பாட்டின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட மனப்பிறழ்வு மெய் போன்றவை அழகியல் மெய்யாகக் கருதப்படாது. இவை பண்பாட்டு மெய்யின் தன்மைகளுக்குப் புறம்பானவை. இவற்றால் ஒன்றுக்கொன்று இயங்கியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்த இயலும். ஆனால், அந்தத் தாக்கம் சமூக ஒருங்கிணைவில் சிதைவை ஏற்படுத்துமே அன்றி நீர்மச் சேர்க்கையைப் போல சமூக ஓட்டத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது.

பண்பாட்டு மெய்யிலிருந்து விடுபடுதல் (Disembodying) எவ்வாறென்று பேசும்போது விக்டர் டர்னர் போன்ற மானுடவியலாளார்கள், அது சாத்தியமில்லை என்றனர். டெல்யூஸ் – கத்தாரி பண்பாட்டு மெய்யை மீறுதல் என்பது சாத்தியம் என்றனர். மொழியால் ஆன பண்பாட்டு மெய் என்பது காலனியதிகாரத்தைப் போல உயிர்மெய்யை (Biological Body) கபளீகரம் செய்துவிடுகிறது. பண்பாட்டு மெய்யின் அதிகாரக் கட்டமைப்பினைப் புரிந்துகொள்ளவும் அதிகார நீக்கம் பெறவும் ‘அழகியல் மெய்’ (Aestheic Body) குறித்த சிந்தனையை விரிவுபடுத்துவது நமக்கு அவசியமாகிறது.

தொகுப்பாக, மெய் என்ற அடிப்படைக் காரணி மனித மொழியால் காலனியாக்கப்பட்டு பண்பாட்டு மெய்யாகிறது. பண்பாட்டு மெய்யின் விதிகளை மீறுபவர்கள் மனப்பிறழ்வாக, குற்றம் பற்றியதாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் சமூகத்தினுள் வாழ நாகரிகச் சமூகம் அனுமதிப்பதில்லை. இவையல்லாமல் பண்பாட்டு மெய்யானது, சடங்கியல் மெய், கலை மெய் ஆகியவற்றைத் தன்னுள் இருந்து வேறுபட அனுமதிக்கிறது. இவ்விரண்டையும் அழகியல் மெய் எனலாம். அழகியல் மெய்யின் அடிப்படையான குணம் ‘மெய்மறத்தல்’. மெய்மறத்தலின் வழியாக மொழிக்குறிகளை மீற அழகியல் மெய் முயற்சிக்கிறது.

குறிப்பு:

Jouissance என்ற சொல் பிரெஞ்சில் மொழியை மூலமாகக் கொண்டது. இச்சொல் மகிழ்ச்சி, கொண்டாட்டம், உவகை, களிப்பு, குதூகலம் போன்ற அர்த்தங்களை வழங்கக்கூடியது.

l[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger