இந்திய உயர்கல்வியில் தொடரும் ஜாதிய நோய்

லீலாதரன்

ரோஹித் வெமுலா சாதிய ஆதிக்க இந்தியக் கல்வியாளர்களின் ஆட்சியாளர்களால் உண்மையிலேயே அவருக்குரிய மரியாதையுடன் நடத்தப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். வலிகள், வேதனைகள், வெறுமைகள் அற்ற ஒரு வாழ்வைத் துவங்கவே அவர் விரும்பினார். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி மாதத்தில், ரோஹித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கல்விக்கான உதவித்தொகை மறுக்கப்பட்டு, கல்லூரியின் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் உம்மா அண்ணா என்பவரின் அறையில் தூக்கிட்டு மரணித்த ரோஹித் எழுதிய ‘நிழல்களிலிருந்து நட்சத்திரங்கள் வரை’ என்றறியப்படும் கடிதத்தில், “சாதி என்ற பூதம் தலித்துகளின் விரைவான அடையாளங்களையும், மிக நெருக்கமான சாத்தியத்தியங்களையும் குறைத்துவிட்டது” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

அவரது மரணம் சுதந்திர இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மிகப்பெரிய எழுச்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் நடந்த சாதியப் படுகொலைகளுக்கு மீண்டும் மெதுவான வெளிச்சம் கிடைத்தது. ஆனால், சமத்துவ வெளிப்பரப்பில் அவரது தேடல் நிறைவேறியதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

ரோஹித்தின் மரணத்திற்குப் பிறகு, சாதி பாகுபாடு மற்றும் சமூக உள்ளடக்கம் பற்றிய விவாதங்களில் கல்வி உலகம் பெரும் எழுச்சியைக் கண்டிருக்கிறது. ஆனால், மெல்ல மெல்ல பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல முயல்கிறது. இந்தியக் கல்வி நிறுவனங்களின் கூட்டு சாதிய மனசாட்சி சாதிய அடிப்படையிலான பாகுபாட்டை மிகுந்த அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறது.

வகுப்பறைகளிலும் வளாகங்களுக்குள்ளும் அன்றாடம் நிகழும் சாதி அடிப்படையிலான அவமானங்கள் மரணத்தின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டிய அளவுக்கு இயல்பாக்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்பு தீண்டாமை நடைமுறையை ஒழித்தபோதிலும், காலனியச் சிந்தனை கொண்ட இந்தியக் கல்வியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கல்வித்துறையில் விளிம்புநிலை மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் மீது தீண்டாமையைச் செயல்படுத்த புதிய வடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக, உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி வேலை ஆர்வலர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்குப் பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் முன்மொழிந்த வரைவு வழிகாட்டுதல்களை எடுத்துக்கொள்வோம். பொருத்தமான நபர்கள் கிடைக்காததால் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், இந்தக் காலியிடங்களைப் பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும் முன்மொழிவைக் கொண்டு வாதிட்டது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இவ்விஷயத்தில் தலையிட்டு, முன்னர் குறிப்பிட்டது போல எந்தவோர் இடமும் அப்படியாக ஒதுக்கப்படாது என்றும், இடஒதுக்கீடு குறித்த தெளிவின்மைக்கு இங்கே துளியும் இடமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது இப்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், விளிம்புநிலை சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் முதன்மை நிறுவனங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் ஏன் கையேந்திக்கொண்டிருக்கின்றன என்பதை இன்னமும் கவனிக்கவில்லை.

ரோஹித்தின் அமைப்பான ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் மாணவர் சங்கம் (ஏ.எஸ்.ஏ, யு.ஓ.ஹெச்), கடந்த ஆண்டு வெளியிட்ட ஏழு பக்க அறிக்கையில், பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி நேர்காணல்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களை அடையாளப்படுத்துவதில் கடுமையான பாகுபாடு இருப்பதை அம்பலப்படுத்தியது.

“தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்த பிறகுதான் அதிலிருந்த பொதுவான ஒரு வடிவமைப்பைக் (pattern) கண்டோம். அதில், நுழைவுத் தேர்வில் ஒரே மாதிரியான மதிப்பெண்களைப் பெற்றிருந்தபோதிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் நேர்காணல்களில் மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களை விட மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். பொதுப்பிரிவு இடங்களில் மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெரும்பான்மைக்காக வேண்டுமென்றே நேர்காணல்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இலக்காக்கப்பட்டனர்” என்று அறிக்கை கூறியுள்ளது.

நேர்காணல்களில் சாதியம் குறித்த உறைய வைக்கும் ஆதாரங்களை அந்த அறிக்கை மேலும் கண்டறிந்தது. மெட்டீரியல் இன்ஜினியரிங் துறையில் பிஎச்.டி.க்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நான்கு பட்டியலின மாணவர்களுக்கு 30க்கு 0.3, 1.9, 2.1, 8.4 என்று மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. எட்டுப் பேர் கொண்ட குழுவில் ஏழு பேராசிரியர்கள் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவருக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை அளித்திருக்கிறார்கள். வேறு பிரிவுகளைச் சேர்ந்த எந்த ஒரு மாணவருக்கும் இதுபோன்ற நிகழ்வு நடக்காத நிலையில், ஒரு குறிப்பிட்ட மாணவரை மட்டும் முற்றிலும் தகுதியற்றவர் என்று எதன் அடிப்படையில் ஏழு பேராசிரியர்களும் ஒரு மதிப்பெண் கூட அளிக்க மறுக்கிறார்கள்?

“நாங்கள் மேலே வழங்கிய தரவுகள், உயர்கல்வி நிறுவனங்களில் சாதி இன்னும் பல்வேறு வடிவங்களில் உயிருடன் உள்ளது என்பதை அபரிமிதமாகத் தெளிவுபடுத்துகிறது” என்று ஏ.எஸ்.ஏ, யு.ஓ.எச் அறிக்கையை முடிக்கிறது.

மாநில, மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.எஸ்.இ.ஆர், மருத்துவ நிறுவனங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், என்.ஐ.டி., என்று இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய மனப்பான்மையை நிறுவனமயமாக்கி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விலக்கி வைக்கும் ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளை இயல்பாக்கியுள்ளது. இதன் விளைவாக, இத்தகைய கட்டமைப்புகள் வரலாற்று ரீதியாக விளிம்புநிலை மாணவர்கள் – அறிஞர்கள் – பேராசிரியர்களுக்கு எதிரான சாதிய ஆக்கிரமிப்புகளை உருவாக்குவதற்கு வலுப்படுத்துகின்றன.

illustration : David Plunkert

சாதி ரீதியாக வசதி படைத்த கல்வி நிறுவனங்கள் கூறுவதென்னவென்றால் “பெரும்பாலும் முந்தைய கல்வி வளாகங்களில் யாருக்கும் இவ்வளவு தீங்கு நிகழ்ந்ததில்லை. வகுப்பறைகள் அமைதியாக இருந்தன, உதவிப்பேராசிரியர்கள் மூத்த பேராசிரியர்களை மதித்தனர்” என்பதே. ஆனால், இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், வர்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்களின் முறைகளில் ஒடுக்கப்பட்டவனின் குரல் மேலும் நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான். சாதி மேலாதிக்கத்திற்கு எதிராகக் கல்வி நிறுவனங்கள் பெரிதாகச் சட்டையே செய்யவில்லை.

உண்மையில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணித) நிறுவனங்கள் பாரம்பரியமாக விலக்கிவைக்கும் நோக்கிலேயே பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், அறிஞர்கள், பேராசிரியர்களிடம் செயல்படுகின்றன.

ஐ.ஐ.டி பம்பாயில் ஆசிரிய ஆட்சேர்ப்பு மற்றும் பி.எச்.டி தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கட்டாய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யத் தவறியதற்காக ‘இந்திய உயர்சாதியினரின் நிறுவனம்’ என்று பிரபல மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்க்கிள் (ஏ.பி.பி.எஸ்.சி) அடிக்கடி விமர்சித்துள்ளது.

2022ஆம் ஆண்டில், ஒன்பது ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களிடமிருந்து ஏ.பி.பி.எஸ்.சி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தரவுகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் எழுத்து வடிவ நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவர்களுக்கான தகுதியான இடங்கள் எவ்வாறு மறுக்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்தியது. 2022ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் எவ்வாறு பொய் சொல்கிறது – பொய்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறது என்பது பற்றி ஏ.பி.பி.எஸ்.சி ட்விட்டரில் பதிவிட்டது.

2022ஆம் ஆண்டில் ஐந்து ஐ.ஐ.எம்கள் அதிக எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் இருந்தபோதிலும் ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனைக்கூட அனுமதிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தபோதிலும் எட்டு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் பி.எச்.டி படிப்பில் ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவரைக் கூட அனுமதிக்கவில்லை. மேலும் ஐ.ஐ.டி பம்பாய் 2021 – 2022 கல்வியாண்டிற்கான பிஎச்.டி சேர்க்கையில் இடஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பல்வேறு வழிமுறைகளில் மீறியுள்ளது.

உண்மையில், சமீபத்திய சர்ச்சைக்குரிய யு.ஜி.சி வரைவானது 2023ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இடஒதுக்கீடு விதிமுறைகளில் வளர்ந்துவரும் மீறல் அலட்சியத்தை நிவர்த்தி செய்ய அதே சாதி வழிகாட்டுதல்களை முன்வைத்துள்ளது.

இடஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றாததற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., என காலியாக உள்ள இடங்களைத் துடைத்தெடுக்க யுஜிசி வரைவு புத்திசாலித்தனமாக வழிவகை செய்துள்ளது. ஆசிரியர் நியமனங்கள் மற்றும் பி.எச்.டி தேர்வுகளில் இடஒதுக்கீட்டு விதிமுறைகளில் தடுமாறும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இதில் எந்தத் திட்டமும் இல்லை.

உயர்கல்வி நிறுவனங்களில் உயர்சாதி மேலாதிக்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் முறையை ஒழிப்பதற்குப் பதிலாக யு.ஜி.சி வரைவு இடஒதுக்கீட்டைக் குறைக்கும் கொள்கைகளை மூர்க்கத்தனமாக ஊக்குவித்துள்ளது.

இடஒதுக்கீட்டு விதிமுறைகளை மீறும் தனிப்பட்ட பேராசிரியர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்தித் துன்புறுத்தும் பேராசிரியர்களுக்கும் கடுமையான தண்டனை முறையைக் கொண்டுவர வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவதை மேற்பார்வையிட யு.ஜி.சி ஒரு பிரத்யேக பிரிவை உருவாக்க வேண்டும், ஒவ்வோர் உயர்கல்வி நிறுவனத்திலும் அனைத்து மட்டங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மத்திய அரசு பிரத்யேக அதிகாரம் பெற்ற தேசிய அமைப்பை உருவாக்க வேண்டும்.

முதலாவதாக, இந்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்து சாதியினரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியின் பெயரால் நிகழும் இதுபோன்ற பிற்போக்குத்தனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். ஏனெனில் பட்டியலின (எஸ்.சி), பழங்குடியின (எஸ்.டி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி) மீதான இடஒதுக்கீட்டுக்கு எதிரான வெறுப்பு, பல்கலைக்கழகங்களில் சாதிய பார்ப்பனிய மேன்மையாக மாறி, ஒடுக்கப்பட்ட சாதியினரின் கல்வியில் நிகழும் பாதிப்புகளை மூடிமறைக்கிறது. வழக்கமாகக் கல்வித்துறையில் பிராமண சாதியை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது மிரட்டல், குற்றவுணர்வுக்கு ஆளாக்குதல் மற்றும் நுண்ணிய மறைமுக ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

ஒருபுறம், அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன அடிப்படையிலான கல்லூரி சேர்க்கைகளை ரத்து செய்தது. மறுபுறம், பாஜக தலைமையிலான மத்திய அரசு உயர் சாதியினருக்காகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்’ (ஈ.டபிள்யூ.எஸ்) என்பதைக் கொண்டுவந்தது. மேலும், பட்டியல் சாதியினரைப் போன்ற தீண்டாமை ஒடுக்குமுறையை உயர் சாதியினர் ஒருபோதும் கடந்து செல்லாதபோதும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினரைத் திட்டவட்டமாக விலக்கியது.

ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், பாத்திமா லத்தீப், அனிகேத் அம்போர், ஆயுஷ் ஆஷ்னா, அனில் குமார், உத்தம் மார்டி, தர்ஷன் சோலங்கி ஆகியோரின் சாதி, மத கொலைகளுக்குப் பிறகும், உயர்கல்வி நிர்வாகிகளும் கல்வியாளர்களும் நுழைவு நிலை அறிமுக சாதி எதிர்ப்புப் பாடத்திட்டங்களை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

  • கல்வி நிறுவனங்களின் ஆதரவு இல்லாத நிலையில் வளாகத்தில் சாதியத்தை எதிர்க்க ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்கள் உணர்வுபூர்வமாகச் சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லாத நாள் எப்போது வரும்?
  • விளிம்புநிலை – பிற்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட சாதி மேற்பார்வையாளர்களின் ஒத்துழைப்பு எப்போது கிடைக்கும்?
  • பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் குறுஞ்செய்திகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் பதில் அளிக்காதது, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களின் இறுதி சமர்ப்பிப்பில் இடைவிடாத தாமதம் ஆகியவை எப்போது நிற்கும்?
  • பிற்படுத்தப்பட்ட ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவுசார் ஆராய்ச்சி அனுபவத்திற்காக அதே சமூக மேற்பார்வையாளர்களைத் தீவிரமாக நாட வேண்டிய அவசியம் எப்போது இல்லாமல் போகும்?
  • விளிம்புநிலை சாதி மாணவர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள் இன்னும் எவ்வளவு காலம் சாதியின் மனச்சுமையை வளாகத்தில் சுமக்க வேண்டும்?
  • பிற்படுத்தப்பட்ட மக்கள், சாதி எதிர்ப்பு அரசியல், இடஒதுக்கீடு பற்றிய பிம்பங்களை அகற்றும் அன்றாட போராட்டத்தில் உயர்த்தப்பட்ட சாதி மாணவர்களும், அறிஞர்களும், பேராசிரியர்களும் எப்போது இணைவார்கள்?

இப்போது நம்மிடமிருப்பது கேள்விகள் மட்டுமே.

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!