சினிமா எனும் பேராயுதம்

மா.பிரகாஷ்ராஜ்

ப்பொழுதும் என் மனதில் வியாபித்திருக்கும் ஒரு கேள்வி, எப்படி மனிதன் வேற்றுமையைக் கண்டுகொண்டான் என்பது. எழுபதாயிரம் ஆண்டுகால மனித பரிணாமத்தில் எங்கு, எப்பொழுது சக மனிதனை இன ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக காண ஆரம்பித்தான் என்பது. இவ்வகை பிரிவினைகள் ஒரு குழுவாக முடிவெடுக்கப்பட்டதா அல்லது தனிமனித விருப்பு வெறுப்புக்கேற்றவாறு அமையப்பெற்றதா என்றால், நிச்சயமாக ஒரு தனிமனிதனின் சிந்தனையும் தேவையும்தான் இப்படியோர் இழிவான சிந்தனையை மனித குலத்திற்கு வித்திட்டிருக்கும் எனக் கருதுகிறேன். இங்கு ஒரு தனிமனிதனின் தேவை என்னவாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. உணவு, இருப்பிடம், குடும்பம், பொருளாதாரம் இவற்றையெல்லாம் தாண்டி மனிதன் சுய பெருமைப் பேசுபவனாகவோ அல்லது புகழ் விரும்பியாகவோ இருக்கிறான். இம்மாதிரியான அடக்குமுறைகளையும் அடிமைத்தனத்தையும் நெடுங்காலமாக அனுபவித்துவரும் நாடு இந்தியா. அதுபோல இந்திய மக்களுக்கு நிகராக ஒத்து இருப்பவர்கள் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள். அவர்களின் எதிர்ப்புணர்வும் கலைரீதியான அரசியலும் இன்றைய இந்திய தலித்துகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்துவருகிறது. என்னதான் சட்டரீதியாக அவர்கள் அமெரிக்கர்கள் என்று அழைக்கப்பட்டாலும், கறுப்பின மக்களை வெள்ளையின மக்கள் ஒரு சமூகமாக பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்கள். இதை 2019இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமான The Best of Enemies வெளிக்காட்டியிருக்கிறது. இது 1971இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

தாராஜி ஹென்ஸன் (Taraji p henson), சாம் ராக்வெல் (sam rockwell), பாபௌ சீசே (Babou Ceesay) ஆகியோர் நடிப்பில் ராபின் பிஸ்ஸெல் (Robin Bissel) இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் வெள்ளையின மக்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் இடையில் உள்ள இன வேறுபாடுகளை முகச் சுழிப்பின்றிச் சொல்ல விழைகிறது.

சமூக ஆர்வலராக இருக்கும் ஆன் அட்வாதர் (Ann Atwater) கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளுக்கெதிரான குரலாய் இருக்கிறார். அவர்கள் வசிக்கும் கிழக்கு டர்ஹாம் பகுதியில் அதிகப்படியான வீட்டு வாடகை, நிரந்தர தண்ணீர் இல்லாமை – மின்சார வசதியின்மை என்ற சூழலில், தங்களின் கோரிக்கையை நகர சபைக்குக் கொண்டு செல்லும்போது, சபையில் அமர்வதற்கு இருக்கைகள் கூட இல்லாமல்தான் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. காரணம், அவர்கள் கறுப்பினர்கள். உண்மையில் ஆன் அட்வாதர் கதாபாத்திரம், முகத்தில் அனலைக் கக்கும் ட்ராகனாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தாராஜி ஹென்ஸனின் நடிப்பும் உச்சரிப்பும், குறிப்பாக வெள்ளையர்கள் அதிகார தோரணையில் பேசும்போது அவர்களுக்குப் பதிலளிக்கையில் நரம்பு புடைக்க அவர் பேசும் வசனம் மனதில் நின்றபடியே உள்ளது. கறுப்பின மக்களின் சூழலே அங்கிருக்கும் வெள்ளையர்களின் இசைவுக்கு ஏற்றாற்போலதான் இயங்க வேண்டும் என்ற கட்டமைப்பில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அத்தகையதொரு சூழலில் கறுப்பின மக்களின் பள்ளி தீப்பற்றுகிறது. பாதுகாப்பற்ற வளாகத்தில் எங்கள் குழந்தைகள் படிக்க முடியாது என்றும் அவர்களுக்குப் புதியப் பள்ளி அல்லது வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். வெள்ளையர்களோ அதை அறவே வெறுக்கின்றனர். இந்நிலைமையைச் சரி செய்ய பில் ரிட்டிக் என்ற கறுப்பினத்தவரை அரசு தேர்ந்தெடுக்கிறது. இரு தரப்புகளுக்கு இடையில் உள்ள ஒவ்வாமையை விளக்கி, அவர்களிடையே நட்புறவை வளர்ப்பதே அவரது பணி. ஏற்கெனவே வடக்கு டர்ஹாம் பகுதிகளில் இத்தகைய பணியை அவர் சிறப்பாகச் செய்ததுதான் அவரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம். அவர் எவ்வாறு இரு மக்களிடையே பிணைப்பை ஏற்படுத்துகிறார், இறுதியில் கறுப்பின மக்களின் கோரிக்கை என்ன ஆனது, வெள்ளையின மக்களின் வெறுப்புணர்வு மாறியதா என்பவை மீதிக் கதை.

ஆன் அட்வாதருக்கு அடுத்த முக்கிய கதாபாத்திரம், கிளைபோர்ன் பால் (Claiborne Paul). தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்திவரும் இவர், வெள்ளையர்களுக்கு மட்டுமே எரிவாயு நிரப்ப அனுமதி என்ற கொள்கையுடன் இருப்பவர். இதற்குக் காரணம் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கு கிளக்ஸ் கிளான் (Ku Klux Klan) என்ற இனவாத அமைப்பு. இந்த அமைப்பின் வேலையே கறுப்பின மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதும், கறுப்பினத்தவரிடமிருந்து வெள்ளையின மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று போதிப்பதும்தான். கிட்டத்தட்ட சாதியச் சங்கங்கள் போல. இட ரீதியாக வேறுபட்டிருந்தாலும் அமைப்பு ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் வெள்ளையின அமைப்புகளும் சாதியச் சங்கங்களும் ஒரே கருத்தாக்கத்துடன்தான் செயல்படுகின்றன என்பதை அனுமானிக்க முடியும். தமக்குச் சாதகமான விஷயங்களை முடித்துக்கொள்வதற்கு கிளைபோர்ன் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய, பொருளாதார நெருக்கடியில் உள்ள மனிதர்களை மிகக் கச்சிதமாகத் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக, அவர்களின் பதின் பருவத்தில் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த வயதில்தான் அவர்களுக்கும் ஓர் அடையாளம் தேவைப்படுகிறது. அதை இந்தச் சாதிய, இனவாத சங்கங்கள் பயன்படுத்தி, ‘நீ மேலானவன்’ என்றும் ‘மற்றவன் கீழானவன்’ என்றும் தற்பெருமையை அவர்களுக்குள் விதைக்கிறார்கள். இந்த யுக்தியை அவர்கள் புரிந்துகொள்ள கூடாது என்பதற்காக அவர்களுக்கான கல்வியறிவைத் தடுக்கிறார்கள். இந்த அபாய சூழலில் மாட்டிக்கொள்வது கிளைபோர்ன் போன்ற மனிதர்கள்தான் என்பதை இப்படம் நாசூக்காகச் சொல்கிறது. அப்படியான ஒரு காட்சி: கிளைபோர்னுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருப்பான். அவனைத் தனியார் மனநல காப்பகத்தில் வைத்திருப்பார். போதிய பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால் அவரது மகனை வேறோர் அறைக்கு மாற்றிவிடுவார்கள். அதை அந்தச் சிறுவானால் தாங்கிக்கொள்ள முடியாது. அதைக் கண்டு கிளைபோர்ன் மனம் உடைந்திருக்கும் தருவாயில், ஓர் இசை அவரை கவனம்கொள்ளச் செய்யும். அது கறுப்பின மக்களின் கூட்டு இசை. பாடிக்கொண்டும் பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகளைத் தாளமிட்டும் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அந்த இசையும் அவர்களின் சந்தோஷமான முகத்தோற்றமும் கிளைபோர்ன் மனதிற்குத் தேவையான ஒன்றாக இருக்கும். அதைப் பார்க்கும்போது, அனைத்தும் நிராகரிக்கப்பட்டும் அனைத்துவிதமான துன்பங்களிலும் இவர்களால் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது என்று கிளைபோர்ன் யோசித்திருக்கலாம். இந்த மாதிரியான மனநிலையை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள்? மண்ணோடும் மரங்களோடும் இயற்கையோடும் பின்னிப்பிணைந்திருந்த தமது மூதாதையரிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்களோ? இசையும் நடனமும் பாடலும் அவர்களின் ரத்தத்தில் மறைந்திருக்கும் நட்சத்திரங்கள் என்று கூட சிந்தித்திருக்கலாம்.

இன்னொரு காட்சியையும் சொல்ல வேண்டும். ‘உங்களுடன் வசிக்கும் நாங்கள் எவ்வாறான துன்பங்களை அனுபவிக்கிறோம், அது எங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது’ என்று கறுப்பின மக்கள் வெள்ளையர்களிடம் விவரிக்கும் காட்சி. கறுப்பின குழந்தைகளுக்குப் பேருந்து வசதி கிடையாது, வெள்ளையர்களின் குழந்தைகள் வந்தால் வழிவிட வேண்டும், அவர்கள் அமர்ந்திருக்க இவர்கள் நிற்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் வளரும் அவர்களின் நிலையை எடுத்துணர்த்தும் காட்சி. அதில் எந்தவொரு கழிவிரக்கமும் இல்லாமல் காட்சிப்படுத்தியிருந்தது பாராட்டத்தக்கது. இத்திரைப்படத்தின் தனிச் சிறப்பு, வெள்ளை இனவாதச் சங்கங்களின் தன்மையை அம்பலப்படுத்தியிருப்பதுதான். ஆனால், வெள்ளையர்கள் ஏதோ ஒரு புள்ளியில் கறுப்பர்களின் குரலைக் கேட்கவும், அவர்கள் பக்கம் நிற்கவும் தொடங்கினர். இந்தியச் சூழலில் இது சாத்தியமா? இங்குதான் இனவாத அரசியலுக்கும், மத / சாதி ரீதியான அரசியலுக்கும் உள்ள வேறுபாடு தென்படுகிறது.

இந்தச் சாதியக் கட்டமைப்பால் ஒவ்வொரு தனிமனிதனும் பிளவுண்டிருப்பது எவ்வளவு பெரிய அபத்தம். நாம் பார்த்த பெரும்பாலான வேற்றுமொழி படங்கள் வெள்ளையினத்தவரால் நடிக்கப்பட்டதாகவோ இயக்கப்பட்டதாகவோ இருக்கும். கறுப்பின மக்களின் படங்களை யாரும் ரசிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக மக்கள் மனதில் விதைத்தது யார், அதுவும் பொருளாதாரா சந்தை என்று அழைக்கப்படும் இந்திய நாட்டில்? சினிமா என்ற ஊடகம், உலகம் முழுக்க மக்களின் சமூகப் பண்பாட்டுக் கலாச்சாரத்தைக் கட்டமைக்க வல்லது. அதை இந்திய பார்ப்பனியச் சமூகமும் சாதி இந்துக்களும் இந்தியாவில் இன்றளவும் சாத்தியமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்குதான் சமூக மாற்றம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர வேண்டியதாய் உள்ளது. பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வது போல, “சமூக மாற்றம் கொள்ளாத எந்தவொரு சமூகமும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது.” ஒரு சமூகமாக, சகோதரத்துவத்துடன் தன் சக மனிதனிடம் உறவாடினால் மட்டும்தான் அவர்களால் ஒரு குழுவாகவோ அமைப்பாகவோ அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு இங்கு சினிமா மாபெரும் கருவியாகப் பயன்படுகிறது. ஏனெனில் இங்கு இனவாதமும், மதவாதமும், சாதியவாதமும் மக்கள் மனதில் உளவியலாகப் புகுத்தப்பட்டுள்ளது. கருப்பு என்றால் அசிங்கம், தலித்துகள் என்றால் குற்றம் புரிபவர்கள், சுத்தமற்றவர்கள், வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் போன்ற இயல்பிற்குப் பொருந்தாத சங்கதிகளை சினிமாக்கள் மூலம் நம்பவைத்திருகின்றனர். இங்குதான் நாம் மாற்று சினிமாக்களின் அவசியங்களையும் தேவைகளையும் உணர வேண்டியுள்ளது.

விளிம்புநிலை மக்களின் உரிமைகளைக் கோருகிற, அவர்களின் சிரிப்பை, அழகை, காதலை, வெற்றியைக் காண்பிக்கிற படமாகவும் அதேவேளை மற்ற மதங்களையோ, பாலினத்தையோ, சமூகத்தையோ பாதிக்காத, தவறான கருத்துகளைத் திணிக்காத சினிமாக்கள்தான் இனிவரும் காலங்களில் அனைத்துச் சமூகங்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். நாம் நம் எதிரிகளுக்குச் செய்ய வேண்டிய ஆகச்சிறந்த செயல், போராட்டமும் தொடர் விவாதமும்தான் என்பதை இப்படம் கூறுகிறது. இந்திய சாதிய சமூகம் எனும் கதண்டுக் கூட்டில் கருத்தியல் ரீதியான சிறுசிறு கற்களை எறியத் தொடங்கிவிட்டோம். தலித் சினிமா என்னும் புகைபோக்கியால் கதண்டுகள் இன்று கலவரம் அடைந்துள்ளன. நமது அரசியல் கோட்பாடுகளை உளவியல் ரீதியாக மக்களிடம் கொண்டு செல்வதற்கு சினிமா ஒரு பேராயுதம் ஆகும்.

l[email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!