முகம்மது அலி : எனது சண்டை அமெரிக்காவுக்காக அல்ல, அமெரிக்காவுக்கு எதிராக!

ஜி.ஏ.கௌதம்

குத்துச்சண்டை வரலாற்றில், முகம்மது அலி அளவுக்கு அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் வெகுசிலரே. ‘தி கிரேட்டஸ்ட்’ என்றழைக்கப்படும் அலியின் புகழ் குத்துச்சண்டை வளையத்தைத் தாண்டியும் போராட்டங்கள், வெற்றிகள், சர்ச்சைகள், நீதிக்கான இடைவிடாத தேடல் என்று அவரது வாழ்க்கை முழுதும் நீண்டிருந்தது.

இன ரீதியாகப் பிரிக்கப்பட்ட அமெரிக்காவில் துவங்கியது அலியின் வாழ்க்கை. ‘காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர்’ என்ற பெயரில் ஜனவரி 17, 1942 அன்று கென்டக்கி மாநிலத்தின் லூயிஸ்வில் நகரில் பிறந்தார். கறுப்பு – வெள்ளை இன மக்களிடையேயான பாகுபாடு பரவலாக இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் அவர் வளர்ந்தார். மேலும், விளையாட்டு உள்ளிட்ட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் அமைப்பு ரீதியான இனவெறியை ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் எதிர்கொண்ட சமயம் அது. அந்தச் சூழலில்தான் பன்னிரண்டு வயதாக இருந்த கிளேவின் சைக்கிள் திருடப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர், ஜோ மார்டின் என்ற காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். “திருடியவன் இந்நேரம் என் கையில் சிக்கியிருந்தால் ஒரே அடியில் அவனை நாக்கவுட் செய்திருப்பேன்” என்ற கிளேவின் பேச்சில் இருந்த அனலையும், கண்ணில் தெரிந்த கோபத்தையும் காவல்துறை அதிகாரி புரிந்துகொண்டார். “அவனை நீ அடிக்க விரும்பினால் அதை வளையத்திற்குள் செய். ஆனால், அதற்கு நீ உன்னைத் தயார் செய்துகொள். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு அதை எவ்வாறு போராட்டத்தின் வழியே அடைய வேண்டும் என்பதை முதலில் நீ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கிளேவிடம் பரிந்துரைத்தார். ஜோ மார்டின் குத்துச்சண்டை பயிற்சியாளரும் கூட. அதைத் தொடர்ந்து, இளம் கிளே உள்ளூர் ஜிம்மில் தனது பயிற்சியைத் துவங்கினார்.

தன் பேச்சில் இருந்த கோபத்தையும் வேகத்தையும் வளையத்தில் திறமையாக உருமாற்றியதன் வழியே பயிற்சியாளர் ஜோ மார்ட்டினின் மிகப்பிடித்த மாணவனாக மாறிப்போனார் கிளே. அவரது வழிகாட்டுதலின் கீழ், தனது குறிப்பிடத்தக்க வேகம், சுறுசுறுப்பு மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி விரைவாகத் தரவரிசையில் உயர்ந்தார்.

ஆறு ‘கென்டக்கி கோல்டன் கிளவ்ஸ்’ பட்டங்களை வென்று போராளியாகத் தனது திறமையை நிரூபித்தார். அவரது முரட்டுத்தனமான – கவித்துவமான – நகைச்சுவையான (பெரும்பாலும்) – நம்பிக்கையான ஆளுமை மீதான பரவலான கவர்ச்சி அவருக்குப் பெரும் ஊடகப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பின்னர் அதுவே அவரை விமர்சனத்திற்கும் இலக்காக்கியது. இருப்பினும், அவரது திறமை அவருக்கு மேலும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.

அவரது குத்துச்சண்டை வாழ்க்கை நம்ப முடியாத உச்சங்களாலும் சவாலான வீழ்ச்சிகளாலும் நிறைந்தது. அவர் வளையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இனரீதியான பாரபட்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக, 1960ஆம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ரோம் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு கிளேவும் அவரது நண்பர் ஜிம்மி எல்லிஸும் தங்களது சொந்த ஊரில் உள்ள ஓர் உணவகத்திற்குச் சென்றனர். கறுப்பினத்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு இருவரும் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் கிளேவை மிகவும் கோபப்படுத்தியதுடன், விரக்தியடையச் செய்தது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்தாலும் இந்த உலகம் தனது நிறத்தையும் இனத்தையும்தான் பார்க்கிறது என்ற வேதனையில் தனது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை ஓஹியோ ஆற்றில் வீசியெறிந்தார்.

காட்டமாகப் பேசும் விதத்தை வைத்து அவரது சக போட்டியாளரான சோனி லிஸ்டன், பத்திரிகையாளர்களிடம் கிளேயை ‘லூயிஸ்வில் லிப்’ என்று குறிப்பிட்டார். ஜோ பிரேசியர், ஜார்ஜ் போர்மேன், கென் நார்டன் போன்ற வலுவான போட்டியாளர்களை கிளே எதிர்கொண்டாலும், பெரும்பாலான போட்டியாளர்கள் மலினமான வார்த்தைகளால் அவர் மீது இனரீதியான கேலிகள், அவமதிப்புகளில் ஈடுபட்டனர். அவரது உடல் – மன சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கிளே தனக்கே உரிய கண்ணியத்துடனும், கூர்மையான புத்திசாலித்தனத்துடனும் அவர்களை எதிர்கொண்டார். குறிப்பாக அவரது தனித்துவமான சண்டையிடும் பாணி, வேகமான நடை, இடைவிடாத மின்னல் வேக குத்து, எதிரிகளின் நகர்வுகளைக் கணிக்கும் அசாதாரண திறன் ஆகியவற்றைக் கொண்டு அத்தனை கேலி கிண்டல்களுக்கும் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்தார்.

1964ஆம் ஆண்டில், முன்னாள் ஹெவிவெயிட் சாம்பியன் சோனி லிஸ்டனைத் தோற்கடித்து உலகின் ஹெவிவெயிட் சாம்பியனாக மாறிய காலகட்டத்தில், அடிமைக்கான பெயராகப் பொருள்படும் ‘காசியஸ் கிளே’ என்ற தனது பெயரைத் துறந்து, முகம்மது அலி என்று மாற்றிக்கொண்டது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. ஒருபக்கம் இது அமெரிக்க அரசுக்கு எரிச்சலைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் குடியுரிமைகள், அவரது மத நம்பிக்கைகள் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியதால் அமெரிக்க அரசுடனான அலியின் உறவில் இன்னமும் விரிசல் விழத் துவங்கியது.

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக, 1966ஆம் ஆண்டில் வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க இராணுவத்தில் சேர்வதற்கு அலி அழைக்கப்பட்டார். மத நம்பிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான தனது நிலைப்பாட்டைக் காரணம் காட்டி அவர் மறுக்க, அனைத்துத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். அவர் இராணுவத்தில் சேர மறுத்தது, வியட்நாம் போர் மீதான எதிர்ப்பின் அடையாளமாக மாறியது. உள்நாட்டில் பாகுபாட்டை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடுவதாகக் காட்டிக்கொள்ளும் இரட்டை முகம் கொண்ட அமெரிக்காவின் பாசாங்குத்தனத்தைப் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். போருக்கு எதிரான அவரது கொள்கை ரீதியான நிலைப்பாடு அவருக்குப் பாராட்டையும் கண்டனத்தையும் ஒருசேர பெற்றுத் தந்தது. சிலர் அவரை ஹீரோவாகவும் மற்றவர்கள் துரோகியாகவும் பார்க்கத் துவங்கினார்கள்.

வியட்நாம் போரில் ஈடுபட மறுத்ததால் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்டு குத்துச்சண்டையிலிருந்து தடை செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுச் சிறை தண்டனையும், பத்தாயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டன. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், சிறை செல்வதை மட்டும் அவரால் தவிர்க்க முடிந்தது. இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வழக்குகளின் விளைவால் அலியின் நிதி ஆதாரங்களும் சரியத் துவங்கின. வியட்நாம் போர் மீதான தனது நிலைப்பாட்டின் காரணமாக அவர் பொதுமக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தனது சொந்தக் கறுப்பின மக்களின் எதிர்ப்பையுமே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1971ஆம் ஆண்டில், அலியின் வரைவு செயல்முறையில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி அவரது தண்டனையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒருமனதாக ரத்து செய்தபோது அவர் ஏற்கெனவே மூன்று ஆண்டுகளை இழந்துவிட்டிருந்தார். ஆனாலும், விளையாட்டின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க மறுபிரவேசங்களில் ஒன்றாக இருந்தது அலியின் ஆட்டம். இது 1971ஆம் ஆண்டில் ஜோ பிரேசியர்க்கு எதிரான புகழ்பெற்ற ‘நூற்றாண்டின் சண்டை’ என்று குறிப்பிடும் அளவுக்கு உச்சக்கட்டத்தை அடைந்தது. தோற்கடிக்கப்படாத சாம்பியன்களான இரு வீரர்களும் மோதிக்கொள்வதால், நியூயார்க் நகரில் நடந்த இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. சண்டைக்கு முன்பான தீவிர பரபரப்பும் எதிர்பார்ப்புக்கும் இடையே பிரேஸியரை ‘அங்கிள் டாம்’, ‘வெள்ளைக்காரரின் சாம்பியன்’ என்று முத்திரை குத்தினார் அலி. ஜோ பிரேசியர் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், இத்தனை நாளாக அலி வளையத்தில் இல்லாத சூழலில் பட்டங்களை வென்றிருந்ததால், அவரிடம் தான் ஒரு கோழை அல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டிய சூழல். அலி தனது வேகம், சுறுசுறுப்பு, சுழலும் கால்களின் நடை ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். அதே நேரத்தில் பிரேசியர் தனது இடைவிடாத ஆக்கிரமிப்பு, சக்திவாய்ந்த இடது கை குத்திற்குப் பெயர் பெற்றவர். முதல் சில சுற்றுகளில் அலி தனது வேகத்தைப் பயன்படுத்தி பிரேசியரின் வரம்பிலிருந்து விலகினாலும், பிரேசியரின் இடைவிடாத குத்துகள் அலிக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கின. அலியின் முகத்தில் வீக்கமும், சிராய்ப்பு அறிகுறிகளும் தென்படத் தொடங்கின. இறுதிச் சுற்றில், பிரேசியரின் ஒரு தீர்க்கமான அடியால் நிலைகுலைந்தார் அலி. முடிவில் அலி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட குத்துச்சண்டை வீரருக்கு இது எதிர்பாராத தோல்வி.

1974ஆம் ஆண்டில் ஜார்ஜ் போர்மேன்க்கு எதிரான ‘ரம்பிள் இன் தி ஜங்கிள்’, அலியின் குத்துச்சண்டை வரலாற்றிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். சென்ற சண்டையில் பின்தங்கிய அலி, இப்போது பிரபலமான ‘ரோப் – ஏ – டோப்’ உத்தியைப் பயன்படுத்தினார். இதில், குத்துச்சண்டை வீரர் கயிற்றில் சாய்ந்துகொண்டு, எதிராளி தன்னைத் தாக்க அனுமதிப்பார். பின்னர், தனது உடலின் அசைவுகளைப் பயன்படுத்தி, குத்துகளைத் தவிர்த்து அல்லது தடுத்து நிறுத்துவார். எதிராளியைச் சோர்வடையச் செய்யக்கூடிய இந்த உத்தி, மிகவும் ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில், இந்த உத்தியைப் பயன்படுத்தும்போது, எதிராளியின் குத்துகளுக்கு ஆளாகும் வாய்ப்பு மிக அதிகம். ஆனால், எட்டாவது சுற்றில் நாக்அவுட் முறையில் குத்துவதற்கு முன்பு அவர் இந்த உத்தியைப் பயன்படுத்தினார். போர்மேனின் அடிகளை உள்வாங்கி அவரைக் களைப்படையச் செய்து, அவரை நாக்கவுட்டில் வென்று, தான் இழந்த ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்தை மீண்டும் பெற்றதன் மூலம் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸின் கியூசன் நகரில் நடந்த தன் வாழ்விலே மறக்க முடியாத ‘த்ரில்லா இன் மணிலா’ என்று அழைக்கக்கூடிய முக்கியமான போட்டியில், ஏற்கெனவே இரண்டு புகழ்பெற்ற போட்டிகளில் மோதியுள்ள ஜோ பிரேசியரை மீண்டும் எதிர்கொண்டார். ஏற்கெனவே 1971இல் பிரேசியருடன் தோல்வி கண்ட கோபத்தினால், முன்பு இருந்த சாந்தம் மாறி இப்போது சிம்ம ரூபத்தில் முற்றிலும் வேறு ஒருவராக மாறிப் போயிருந்தார் அலி. சண்டையை மேலும் பெரிதுபடுத்துவதற்கு மற்றவர்கள் பயன்படுத்திய அதே ஆத்திரமூட்டும் மொழியை இவரும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு முன்பு தன்னைக் கேலி செய்திருந்த பிரேசியரை “கொரில்லா” என்று குறிப்பிட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் நிகழ்ந்த போட்டி இருவருக்கும் உடல் மற்றும் மன சவால்களை அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்த ஆட்டம் 14 சுற்றுகள் வரை நீடித்தது. 14ஆவது சுற்றில் இரு வீரர்களும் சோர்வடைந்து கிடந்தார்கள். இதற்குமேலும் பிரேசியரால் தொடர முடியாது என்பதை உணர்ந்த அவரது பயிற்சியாளர் எடி புட்ச், சண்டையை நிறுத்தும் கடினமான முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. டெக்னிக்கல் நாக் அவுட் மூலம் அலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டு காத்திருப்பின் பிறகான தோல்விக்கு அலி இப்படியாகப் பழி தீர்த்தார். அலியுமே “இது மரணத்திற்கு மிக நெருக்கமான சண்டை” என்று குறிப்பிட்டிருக்கிறார். இருவரும் மிக மோசமான உடல் சேதத்தைக் கொண்டிருந்தார்கள். கடுமையான போட்டி மற்றும் பகைமைக்குப் பிறகும், அலியும் பிரேஸியரும் இறுதியில் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, பிந்தைய ஆண்டுகளில் நல்ல நண்பர்களானார்கள். ஆனால், அலியின் இந்த முரட்டுத்தனம் மக்களிடையே ‘வெறியன்’ என்ற அபிமானத்தை உருவாக்கத் துவங்கியது.

என்னதான் மக்கள் தன் மீது கலவையான விமர்சனம் வைத்திருந்தாலும் தனது மக்களை நேசிக்க அலி என்றுமே தவறியதில்லை. 1990 நவம்பரில், குவைத் மீதான ஈராக்கின் படையெடுப்பிற்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட பதினைந்து அமெரிக்கப் பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் நவம்பர் 25, 1990 அன்று ஈராக் அதிபர் சதாம் உசேனைச் சந்திக்க அலி சென்றார். சிலர் அவரை ஈராக் அரசின் பகடைக் காய் என்று குற்றம் சாட்டினர். இருப்பினும், பிணைக் கைதிகளுக்கு உதவ தனது ‘பிரபல’ அந்தஸ்தைப் பயன்படுத்துவதில் அலி உறுதியாக இருந்தார். அதன் விளைவாக, நவம்பர் 29, 1990 அன்று பிணைக் கைதிகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் விளைவாக, அலி அமெரிக்கா திரும்பியபோது நாயகனைப் போல் வரவேற்கப்பட்டார். உண்மையில் அலியின் ஈராக் பயணம் ஒரு தைரியமான செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காக தனது சொந்தப் பாதுகாப்பையே அலி பணயம் வைத்தார். அதுதான், குத்துச்சண்டை வளையத்தைத் தாண்டியும் அவர் உண்மையான சாம்பியன் என்பதை உலகிற்குக் காட்டியது.

1978ஆம் ஆண்டு நெவாடா மாநிலத்தின் லாஸ் வேகாஸ் நகரில் லியோன் ஸ்பின்க்ஸ்க்கு எதிரான போட்டியில் அலி நிகழ்த்தியது ஒரு வரலாற்றுச் சாதனை. “நியூ ஓர்லியன்ஸ் சண்டை” என்றழைக்கப்படும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் அலி சேலஞ்சராகவும், ஸ்பின்க்ஸ் நடப்புச் சாம்பியனாகவும் ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் களமிறங்கினார்கள். இளம் ஸ்பின்க்ஸ்ஸை வெல்ல தனது முந்தைய அனுபவம் மற்றும் சுழலும் கால்களின் ஃபுட்வொர்க்கை உத்தியாக அலி பயன்படுத்தினார். அதனுடன் விடாமுயற்சியுடன் செய்த பயிற்சியும் இப்போது அவருக்கு உதவியது. அலியின் ஆளுமை ஒவ்வொரு சுற்றிலும் கூடிக்கொண்டே இருந்தது. இந்தச் சண்டை 15 சுற்றுகள் வரை நீடித்தது. நடுவர்களின் ஒருமித்தத் தீர்ப்பால் முகம்மது அலி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், வரலாற்றில் மூன்றுமுறை ஹெவி வெயிட் பட்டத்தை வென்ற முதல் குத்துச்சண்டை வீரர் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டினார் அலி. மொத்தம் 61 போட்டிகளில் பங்கேற்று, அதில் 56 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் கண்டிருக்கிறார். 56 வெற்றிகளில் 37 ‘நாக்அவுட்’ முறையில் மட்டும் வெற்றி பெற்றவை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிறிதுகாலம் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்ற அவரது கடைசிப் போட்டி அக்டோபர் 2, 1980 அன்று லாரி ஹோம்ஸ்க்கு எதிராக நடந்தது. இது அலியின் வாழ்க்கையில் ஒரு சோகமான – கடினமான தருணமாக அமைந்தது. பல ஆண்டுகளாக நீடித்த குத்துச்சண்டையின் உடல் பிரச்சினைகள், பார்கின்சன் நோயின் விளைவுகள் ஆகியவை அவரது உடல்நிலையை மிகவும் பாதித்திருந்தன. இருந்தபோதிலும், அலி தனது மறுபிரவேசத்தை அறிவித்தார். மேலும், அந்த நேரத்தில் நடப்பு ஹெவி வெயிட் சாம்பியனான லாரி ஹோம்ஸுக்குச் சவால் விட விரும்பினார். ஹோம்ஸ் முன்பு அலியின் நண்பர் என்றாலும், அலியை ஆழமாக நேசித்த மனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளம் வீரரான லாரி ஹோம்ஸ் போட்டியில் தனது வேகம், துல்லியமான தாக்குதல்கள் மூலம் அலியைச் சோர்வடையச் செய்தார். அடுத்தடுத்த சுற்றுகள் முன்னேறும்போது, ஹோம்ஸ்ஸைக் கையாள அலிக்கு உடற்தகுதி இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட பயிற்சியாளர் ஏஞ்சலோ டண்டீ, 11ஆவது சுற்றில் சண்டையை நிறுத்த வேண்டியதாயிற்று. 1974ஆம் ஆண்டில் ஜோ பிரேசியருக்கு எதிராக அலி நிகழ்த்தியது, இப்போது அவருக்கே நிகழ்ந்தது. உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி இதயத்தை உருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.

அதைத் தொடர்ந்து, குத்துச்சண்டையிலிருந்து அலி ஓய்வு பெற்றார். பார்கின்சன் நோய் காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது (முகமது அலியின் இறுதிக் காலங்களில் அவர் அளித்திருந்த பேட்டிகளிலும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விழாக்களிலும் நடுங்கும் கரங்களைக் கனத்த மனதுடன் நீங்கள் காணலாம்). தன்னைப் போலவே பார்கின்சன் நோயுடன் போராடுபவர்களுக்கு உதவுவதற்காக முகம்மது அலி ‘பார்கின்சன் மையம்’ ஒன்றை நிறுவினார். அதுமட்டுமின்றி மக்கள் நலன் தொடர்பான பல்வேறு சமூகச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

கூரியர் – ஜர்னல் பத்திரிகையின் மூத்த புகைப்படக் கலைஞராக இருந்த கீத் வில்லியம்ஸ், அலியை அடிக்கடி புகைப்படம் எடுப்பதற்காகச் சந்திக்க நேர்ந்தது. “அப்போது அவர் தனது நேரத்தை எனக்காக மிகவும் தாராளமாக வைத்திருந்தார்” என்று நினைவுகூர்கிறார். மேலும், “அவர் மிகவும் வெளிப்படையானவர். அவரைச் சுற்றி மிகவும் வெளிப்படையான, அன்பான மக்கள் இருந்தனர்” என்று நெகிழ்கிறார்.

“தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு நல்ல, அமைதியான மனிதராகவே இருந்தார். மக்களிடம் அன்பாகவே நடந்துகொண்டார்” என்று கூரியர் – ஜர்னல் பத்திரிகையின் மற்றுமொரு புகைப்படக் கலைஞர் ஹார்டின் நினைவுகூர்கிறார். “அவர் எப்போதும் தனது ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிவைத்திருந்தார். அவர் தனது ஊழியர்களை அன்பாக நடத்தினார். சமூகத்தில் ஒரு பெரிய நபராக இருந்தபோதிலும், அவர் சாதாரண மக்களையும் மரியாதையுடன் நடத்தினார். அவரது அமைதியான தருணங்களில் இதுபோன்று பலமுறை நிகழ்வதை நான் கண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

1960ஆம் ஆண்டு தன்னை உணவகத்திற்குள் அனுமதிக்காத விரக்தியில் ஒலிம்பிக் பதக்கத்தைத் தூக்கி வீசிய அதே வீரனை, 1996ஆம் ஆண்டு அட்லாண்டாவில் ஒலிம்பிக் கோப்பைக்கான தீச்சுடரை ஏற்ற வைத்ததன் மூலம் ஒலிம்பிக் தனது பெருமையைத் தக்கவைத்துக்கொண்டது. இது உலக அரங்கில் அவரது நீடித்த தாக்கத்திற்கு மிகப்பெரும் சான்றாகும். உண்மையான மகத்துவம் என்பது வெறும் தடகளத் திறனைப் பற்றியது மட்டுமல்ல, சமூகத்தில் ஒருவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றியது என்பதை முகம்மது அலியின் பயணம் நமக்கு நினைவூட்டுகிறது.

 “சாத்தியமற்றது என்பது சிறிய மனிதர்களால் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை. அவர்கள் அதை மாற்றுவதற்கான சக்தியைத் தேடுவதைவிட, தங்களுக்கு வழங்கப்பட்ட உலகில் வாழ்வதை எளிதாகக் காண்கிறார்கள். சாத்தியமற்றது என்பது உண்மையல்ல. அது ஒரு கருத்து. தற்காலிகமானது. சாத்தியமற்றது என்று ஒன்றுமில்லை.”

முகம்மது அலி.

l  [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!